Tuesday, April 19, 2016
கிட்டுவின் வார்த்தை வங்கி
எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.
'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'
'ம், சொல்லுங்க'
'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'
'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'
'ச்சேசே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'
'ஓ!!'
'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'
'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'
'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'
ஆவ் என்று எனக்கு வந்தது.
பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.
அடுத்த வாரமே தேடிக்கொண்டுவந்து விசாரிக்கவும் செய்தார்.
'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'
'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'
அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..
'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'
அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.
அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராகவே இருந்தார்.
இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக வெந்துவிட்டதே போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.
'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'
அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து வேறு மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.
சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அஸைன்மெண்டுக்கும் ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.
அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.
மொத்தமாக தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தாவே தேவையில்லை என்றும்கூட தமிழ் சினிமா நினைத்திருக்கலாம்.
நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்களேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!
Friday, April 8, 2016
எட்டாம் எண் செருப்பு
திருமணத்திற்கு முன் மனைவி 'எனக்கு தூசு என்றாலே ஒவ்வாது, டஸ்ட்-அலர்ஜி' என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆஹா, இவர் வீட்டில் ஒரு மயிரிழை அளவுக்கு ஒட்டடை தெரிந்தாலும் பொறுக்காது பாய்ந்து சுத்தம் செய்துவிடுபவர் போல என்று பெருமையாக எண்ணிக்கொள்வேன். தி.பின்தான் தெரிந்தது தூசு என்பது அல்ல அதை சுத்தம் செய்வதுதான் அம்மணியாருக்கு அலர்ஜி என்று. தன் உடலைச் சுற்றி சிலந்தி வலைப் பின்னியிருந்தாலும் அதை தன் சொந்தக் கைகளால் அகற்றமாட்டார் - டஸ்ட் அலர்ஜி!
இதற்கு நேரெதிராக, ஊரில் பெற்றோர்கள் என்ன பண்டிகை வரும் எப்படி வீட்டிற்கு வெள்ளையடிக்கலாம் என்ற கணக்கிலேயே காலண்டரையும் வீட்டின் சுவர்களையும் தடவிக் கொண்டிருப்பார்கள். காலண்டர்கள் இளைக்க இளைக்க வீட்டின் சுவர்கள் சுண்ணாம்புப் பூச்சால் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒருவேளை தங்களின் பலத்தை ஒவ்வொரு வருடமும் சோதித்துக் கொள்ளும் பண்பாக வெள்ளையடித்தல் இருக்குமோ என்னவோ.
சுத்தம் என்பது என்ன?
அழுக்கை அகற்றுதல் - வாழத் தகுதியாக இருப்பிடத்தை பேணிக் கொண்டேயிருத்தல். இப்போது வீட்டில் இருப்பதைவிட இண்டர்நெட்டில் இருப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அங்கும் ஏகப்பட்ட தூசு, குப்பை அப்புறம் தே.இ. ஆணிகள். இன்பாக்ஸில் தேவையில்லாத மின்னஞ்சல்கள் (ஸ்பேம்) ஒட்டடைக் கட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏன் இந்த மெயில் தினம்தினம் நமக்கு வருகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் அடுத்த மெயிலும் வந்துவிடுகிறது. இணைய வேகம்! பொறுப்பாக சென்று இது எனக்கு வேண்டாம் என்று சந்தாவிலக்கம் (unsubscribe) செய்தாலும் அதிலும் ஏதாவது செக்மார்க் வைத்து திரும்பவும் இன்பாக்ஸூக்குள் வந்துவிடுகிறார்கள். இதில் திரும்ப திரும்ப நம் கவனத்தை குவித்து நமக்கு தேவையேப்படாத பொருளை விற்றும் விடுகிறார்கள்.
அப்படி சமீபத்தில் வாங்கிய சப்பாத்து காலணி (shoes) ஒன்று காலைக் கடிக்கிறது. காலை மட்டுமல்ல காசையும். இதில் முதலில் வந்த அளவு பெரிதாக இருந்ததால் திருப்பி அனுப்பி - ஒரு அளவு குறைவாக எட்டு அளவில் வேறு ஜோடி வாங்கினேன். இரண்டே நாளில் அதன் விலையை 200 ரூபாய் கூட்டிவிட்டார்கள். எட்டாம் எண் அளவில் பாதம் வைத்திருப்பதற்கான தண்டனை போலிருக்கிறது!
யாரோ ஒருவருக்கு அல்லது நிறுவனத்துக்கு இத்தனை பலம் இருக்கிறது - தினமும் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப, அதில் உங்கள் கவனத்தைக் கோரும் விதமாக வடிவமைக்க, அயராமல் உங்களைத் தொடர அப்புறம் உங்களை ஒரு பொருள் வாங்க வைக்க என ஒரு பெரும் திட்டமிட்ட அணுகுமுறை இதில் ஒளிந்து இருக்கிறது.
தேர்தல் நெருங்க நெருங்க, இதையேதான் நாம் பிற ஊடகங்களிடமிருந்தும் பெறுகிறோம். தொடர்ச்சியாக நீங்கள் படிக்கும் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி அல்லது வலைத்தளம் எதுவென்று சொல்லுங்கள் - நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஊடகதந்திரங்களால் சூழப்பட்டுக்கிடக்கிறோம். வாக்களிக்கப் போவதற்கு முன் சில ஒட்டடை வேலைகள் நம் உள்மனதுக்குள்ளும் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று இந்த தேர்தல் அவசரம் சொல்கிறது.
எட்டாம் எண் செருப்பு சில தினங்களுக்கு காலை உறுத்தும் - பொறுத்துக் கொள்ளலாம் அப்புறம் பழகிவிடும். ஐந்தாண்டுகளும் உறுத்துகிறமாதிரி நம்மை ஏதும் 'ஆர்டர்' செய்ய வைத்துவிடுவார்களோ என்று ஊடகங்கள் மேல் பயமாகவேயிருக்கிறது.
Monday, April 4, 2016
மூன்று தர்பூசணிகள்
தேவைகள் குறையுமளவுக்குத் தெய்வத்தன்மை பெறுகிறோம். யார் சாக்ரடீஸ் சொல்லியதா? மறந்துவிட்டது.
அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லோரையும் போல என் பங்குக்கு ஒரு கைவைத்தியம் சொல்லி வைத்தேன். காலையில் நெல்லிச்சாறு குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று. வயிற்றுவலிக்காரர் தடக்கென்று நிமிர்ந்து கொண்டார்: 'ஏன் சாறு பிழிய வேண்டும்? அப்படியே கடித்துக் கடித்துத் தின்னவேண்டியதுதானே? தேவையில்லாத மின்விரயம்!' என்றார். அதுவும் சரிதான் - நெல்லியைக் கத்தியால் நறுக்குவது, மிக்ஸியில் அரைப்பது, வடிப்பது அப்புறம் அதன் தோலை உபரியாக்குவது போன்ற கார்பன் காலடிகளைத் (Carbon Footprint) தவிர்த்து விடலாம்தான். வயிற்றுவலியையும் மீறிய நண்பரின் தெய்வத்தன்மை அன்று புலப்பட்டது.
இன்னொருவர் இருக்கிறார். பாசமாக என்னை 'நீ என் நண்பேன்டா' என்று வாரிக்கொண்டாலும். அவர் என்னிலும் மூத்தவர். பணியிலும் இருபடிகள் மேலிருப்பவர் (இதுவே அவரின் தெய்வத்தன்மை எனக்கு உணர்த்த போதுமானதுதான்) அவரின் சிறப்புகளில் ஒன்று: வெறுங்காலில்தான் ஓடுவார் - சாதாரணமாக ஒரு முழு மராத்தான் அளவுக்கு - அதாவது 41 கிலோமீட்டர்கள். காலணிகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருமுறை காலில் உள்ள ஆணிகளை காட்டினார், வெற்று பாதங்களில் ஓடுவதால் ஏற்பட்டனவாம். திருவல்லிகேணியிலிருந்து பெருங்குடியிருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பறக்கும் ரயிலில் பாதச்சோடுகளோடு வருவார் போவார்.
இதன் காரணமாகவே அவரின் கார் பலமாதங்களாக அசையாமல் திருவல்லிகேணியைத் தாண்டாமல் சென்னை மாநகரின் தூய்மைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் பாருங்கள், அதை எப்போதாவது இயக்கும் வேளையில் அதன் மின்கலம் தீர்ந்துபோய் கார் அசைய மறுக்கும். இது அடிக்கடி நடப்பதால் 'ஏம்பா வீட்டிலேயே வச்சுக்கிற மாதிரி ஒரு ஜம்ப் ஸ்டார்ட் பாட்டரி கிடைக்குமா?' என்று கேட்டார். அடடே! காரை அசைக்காமல் வைத்திருப்பதற்கு கூலியாக தனியாக ஒரு மின்கலம் தேடுகிறாரே? இவர் தெய்வத்திண்ட தெய்வம் என்று அன்று புரிந்து கொண்டேன்.
தேவைகளைச் சுருக்குவது என்பது கவனம் கூடிய திட்டமிடப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. சுருக்கிக் கொள்வதின் முதல் அடி என்னவென்றால் உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டும். சரி நமக்கும் கொஞ்சமாவது தெய்வத்தன்மை அல்லது சிறுதெய்வத்தன்மை அதுவும் கூட இல்லாவிட்டால் ஒரு பூசாரித்தன்மையாவது வாய்க்கட்டுமே என்று குறைக்கும் அந்தஸ்துள்ள என் தேவைகளை நோட்டமிட்டேன். கார் பயன்பாடு கட்டுப்படுத்துவது.. ஆனால் தனியாக மின்கலம் வாங்கி மின்னேற்றும் சக்தி கிடையாததால் கார்-பகிர்வு முறையில் (car pooling) அலுவலகம் சென்று வருகிறேன். ஏஸி, மின்விசிறி, சோப்பு, பவுடர் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லீங்கோ என்று ஹீலர் பாஸ்கர் சொன்னதைக் கேட்டு அதையும் முயன்று பார்த்தேன். வீட்டில் என்னை ஒரு காட்டேரி அந்தஸ்துக்கு சுருக்கும் நிலை ஏற்பட்டதால் இந்த பூசாரித்தன்மை வாய்ப்பும் பறிபோனது!
இருந்தும் அவரவர் திறமைக்கேற்ப தன்னை ஒரு சாதாரண எளியனாக்கிக் கொள்ளும் முனைப்புகளைப் பார்த்து வியக்கிறேன். தெய்வத்தன்மையை விடுங்கள் உலகத்துக்கு நாமளிக்கும் கார்பன் சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளும் முனைப்பே இதில் முக்கியம்.
இன்னொரு அலுவலக நண்பர் - வாரக்கடைசியில் விவசாயம் செய்கிறவர். அதுவும் இயற்கைமுறை விவசாயம். வீக்என்ட் விவசாயி என்று சொல்லலாம். இதற்காக அவரும் அவர் நண்பர்களுமாக சென்னையிலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலுள்ள கிராமத்துத் தோட்டத்துக்கு காரில் பயணித்து, அங்கு சென்று தோட்டப்பணிகளை முடித்துவிட்டு திரும்பவும் 100 கிமீட்டர்களில் சென்னை திரும்புவர். சமீபத்தில் பயிரிட்ட தர்பூசணிகளும் முள்ளங்கிகளும் விளைந்து விட்டன. அவை முறையே இயற்கை-தர்பூசணி மற்றும் இயற்கை-முள்ளங்கிகள் என்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப் பட்டன. அதை வாங்குவதற்கான படிவங்களும் கூகிள் Docs மூலம் பிற நண்பர்களுக்கு வாட்ஸ்ஏப் குறுஞ்செய்தியாக வந்துசேர்ந்தது.
இன்னொரு நண்பர் மூன்று தர்பூசணிகளை கொள்முதல் செய்ய விரும்பினார். இந்த பரிவர்த்தனை அனைத்தும் இணைய வாயிலாகவே முடிந்து விட்டது. அட, உணவு விநியோக சங்கிலியில் கார்பன் காலடிகள் எப்படிக் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!
பிறகுதான் தெரிந்து கொண்டேன்: அந்தத் தர்ப்பூசணிகள் கிராமத்து தோட்டத்திலிருந்து முதலில் ஒரு டிரக்கில் சென்னை வந்து இறங்குகின்றன. பிறகு விவசாய-நண்பரின் காரில் 3 தர்பூசணிகள் மட்டும் அலுவலகம் புறப்பட்டுப் போயின. அப்புறமாக வாங்கிய நண்பரின் காரில் ஏறிக்கொண்டு விட்டன. மொத்தமாக தர்பூசணிகள் 150 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டிருக்கின்றன. அதே கிராமத்திலுள்ள வேறொரு விவசாயியின் (ஆயுட்கால விவசாயி) தோட்டத்து தர்பூசணிகள் எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கும்? இவையிரண்டில் எந்த தர்பூசணியின் கார்பன் காலடிகள் குறைவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
தர்பூசணி சாப்பிடும் தேவையைக் குறைத்தாவது தெய்வ அல்லது பூசாரித்தன்மை பெற்றே விடுவது என்று முடிவு செய்துவிட்டேன்!

Subscribe to:
Posts (Atom)