Wednesday, September 2, 2015

காடு அ​டைதல்

அன்று பெளர்ணமி. அது யாத்ரிகர்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற சமயம். இருந்தும் மறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் சிறிய இடைவெளியினூடே மலை ஏற்றத்தை ஆரம்பித்தோம். பலதரப்பட்ட ஆளுமைகள் அடங்கிய அலுவலக நண்பர்கள் குழுவாக அது இருந்தது. அதிகம் பேர் மலையேறிமுடிக்கணும் என்ற பூரணத்துவத்துவையே முதன்மையாக கொண்டு ஏறியதாக தோன்றியது. வேறுசிலருக்கு ஆன்மீகம்-சிவனடைதல் போன்ற எதிர்பார்ப்புகள்.  நானோ இப்பயணத்தை என் உடல்திராணியை அளவிடும் ஒரு செயலாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கோ மலையின் மூர்க்க வசீகரம் என் உடல்திராணி அளவிடும் நோக்கைத்தை நொறுக்கிவிட்டு என்னை கண்டு களித்து முடி என்றது. காட்டின் ஒவ்வொரு சப்தமும் உள்ளுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

நெடுந்துயர்ந்த மூங்கில் புதருள் மோதி அலறும் காற்றின் ஒலி அளவிடமுடியாததாக இருக்கிறது. எல்லா மலைகளும், முகிலுரசும் ஏழாம் மலையுமாக நிலக்காட்சிகள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நம்மை பிய்த்து பிய்த்து எடுக்கிறது.

மலைவிட்டு இறங்கும்போது இருட்டிவிட்டது. பெளர்ணமி வெளிச்சத்தையும் அனுமதிக்காத காட்டு மரங்கள். காடு கண்விழிப்பது எப்போதும் இரவில்தான் போல - தன் ஒவ்வொரு தசையையும் புரட்டிப் போட்டு திமிறி எழுகிறது இரவில். வலுவுள்ள உயிர்கள் அவர்களுக்கு மட்டுமே புலனாகும் வழிகளில் உலாவ தயாராகின்றன. காட்டின் பாதைகள் எப்போதும் கட்புலனால் அடைய முடிவதில்லை; அவை எல்லா புலன்களாலும் அல்லது ஆறாவது புலனால் அடையக்கூடியதாகவே இருக்கிறது. பாதையறிவது என்பது காட்டின் சமிக்ஞைகளை புரிந்துணரும் செயலாகவே உணர்கிறேன்.

பசித்த வேட்டை மிருகம் கூட காட்டின் சமிக்ஞை இல்லாவிட்டால் பக்கத்திலிருக்கும்  உணவு உயிரை திரும்பிக்கூடப் பார்க்காது. அந்த சமிக்ஞை ஒரு சில்வண்டு சப்தமாகவோ தூரத்து நரியின் ஊளையாகவோ அல்லது ஒரு சிலந்தி வலையில் இருந்து சரியும் மழைத்துளியாவோ இருக்கலாம்.  ஒரு வேட்டை முதல் முளைவிடும் தாவரம் வரை, தானே சுரக்கும் ஊற்று அதனனின்று ஓடை பிறகு ஓடை அருவியாதல் வரை அனைத்தும் காட்டின் இயக்கமாவே இருக்கிறது. இவையனைத்தின் ஒருமித்த தொகுப்பாகவே காட்டை உணர்கிறேன்.

காட்டிருட்டில் திரும்பும் போது வழிகாட்டியாக வேறொரு நபர் சேர்ந்து கொண்டார். அடிக்கடி வெள்ளியங்கிரி வருபவர். அவருடன் வந்த சிலர் இரவை இரண்டாம் மலையிலேயே கழிப்பதாகவும் தான் மட்டும் அடிவாரம் சென்று காலை திரும்புவதாக கூறினார்.  அவருடன் வந்தவர்களை நான் கவனித்திருந்தேன். சடை விழுந்த சிகை மற்றும் தாடியுடன் கூடிய காவி ஆசாமிகள். வயது அதிகம் போனால் நாற்பதுக்குள். விட்டேத்தியான எங்கோ வெறிக்கும் கூர் விழிகள். இரவு முழுதும் சிவபானம், கதை, பாட்டு மற்றும் நெருப்பைச் சுற்றி ஆட்டம் என போகுமாம். காட்டு விலங்கு, காற்று-மழை என எதற்கும் அஞ்சாது விடியும் வரை நடக்குமாம். அப்படியொரு இரவை தவிர்த்து விட்டு இறங்குகிறோமே என்ற விசனம் கூட எனக்கிருந்தது. ஏன் இவர்களை காடு அப்படி இழுத்துப் போட்டுக் கொண்டிக்கிறது என்று யோசித்தவாறே நடையைத் தொடர்ந்தேன்...

என்றோ நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த காட்டு-மனிதன் தனக்கான வெளியான காட்டை விட்டு முதலடி எடுத்து வைத்தான். உலகின் மொத்த தசைகளையும் திருப்பி போடுவதாக அது இருந்தது. அதற்கப்புறம் தனக்கான வெளியை அவனே கட்டமைத்துக் கொண்டான். பிறகு காட்டுக்கு அவன் திரும்பவே இல்லை - அல்லது திரும்ப முடியவில்லை. காடு குறுக்கே வந்தால் அதை சிதைத்து தனக்கான வெளியாகவே கட்டமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு அவனுக்கு அந்நியமாகியது. காடு ஒரு ஆழ் நினைவாக அவனுள் மீட்க முடியாத ஆழத்தில் புதைந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு இரவு அல்லது கனவு அல்லது பறவையின் ஒலி காட்டை அவனுள் எழுப்பிவிடுகிறது. எழுந்து கொண்ட மனிதனால் உறங்கமுடிவதில்லை. அவன் நடக்க ஆரம்பிக்கிறான். தனக்கான வெளியைவிட்டு காட்டை நோக்கி முதலடி வைப்பவன் பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அவனை மீண்டும் காடு எடுத்துக் கொண்டு விடுகிறது. காட்டின் ஒரு தசையாக இன்னுமொரு சமிக்ஞை அவனாகிறான்.

இப்படி ஒரு சிந்தை குறுக்கே ஓடியது. இதற்கு முன்தான் சித்த வைத்தியம் பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதையொட்டி ஏன் மலைகள் பொதுவாக சித்தர்களின் கூடாரமாகவே காட்டப் படுகிறது என்றொரு யோசனை. காட்டுச் செடிகள் மற்றும் காட்டு மூலிகைகள்தான் சித்த வைத்தியத்தின் மூலம். பறிக்கிற ஒவ்வொரு காட்டு தாவரமும் காடு-மனிதன் என்ற சங்கிலியமைப்பையே பூடகமாக உணரத்துவதாக இருந்திருக்குமோ? இந்த இணைப்பை,ஆதித்தொடர்பை அதன் சூட்சுமத்தை உணர்ந்தவனே சித்தனாகிறானோ? தனக்கான சரியான, ஆதியான மற்றும் மரபான வெளி காடுதான் என்று கண்டுணர்ந்தவனே காட்டை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறான். அவனே சித்தனாகிறான். அவனால் காட்டை தாண்டி வரமுடிவதில்லை.

இரவு ஒன்பது மணிபோல அடிவாரம் சேர்ந்துவிட்டோம்.. இருந்தும் காட்டின் சில்வண்டின் ரீங்காரம் இறுக்கமாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. மலையை காட்டைத் திரும்பிப் பார்த்தேன். பெளர்ணமி நிலவு மேலெழும்பிவிட்டது. எத்தனையோ கண்களால் காடு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. விடைதெரியாத கேள்விக்கு பின்னான அமைதியாக அது இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தேன் - நகரங்களை நோக்கி. காடு அங்கேயே இன்னும் இருக்கிறது.

நம் எல்லோருக்குள்ளும் ஒரு காடு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கூடவே சமிக்ஞையால் உணரப்படும் காட்டின் வழித்தடமும் நினைவில் எங்கோ ஒளிந்திருக்கலாம்.

Tuesday, August 25, 2015

சித்த வைத்தியம் - சில குறிப்புகள்


சித்த வைத்தியம் - சில குறிப்புகள் (அவசியம் படிக்கணும் அருமை நேயர்களே!)

1. சித்த வைத்தியர்களை இருவகைகளாக பிரிக்கிறார் மேலமலை காட்டுச்செடி சாறுபிழிந்த ஓலைச் சித்தர். முதல்வகை முழுக்க நரைத்த தாடி கொண்ட வகுடுமுனி வகையறாக்கள். மிகவும் பொறுமைசாலிகள். உதாரணமாக வல்லாரைக் கீரையைப் பறித்து லேகியப் பக்குவம் சொல்லி முடிப்பதற்குள் கீரை பொடித்துவிடும். இரண்டாம் வகை வல்லக்கோட்டை பகட முனி வகையறாக்கள். தாடியின் நீளத்தை பொறுத்து பொறுமை குணம் கொண்டவர்கள். சீராக ஆங்கிலமும் பிற மருத்துவ தத்துவங்களும் கூட கைவரும்.

2. உங்களுக்கே தெரியும்: தமிழின் அ​னைத்து முன்னணி ​தொ​லைகாட்சிக​ளெங்கும் வலப்பக்கம் ஒரு தாடியும் இடப்பக்கம் ஒரு லேடியுமாக சித்த மருத்துவம் விளம்பர இடைவெளிகளிடையே காலையில் ஒளிபரப்பாவது. இதில் விசேஷம் என்னவென்றால் நீங்கள் ரசத்திற்கு பூண்டு தட்டுவதை வாயை மூடிக்கொண்டு செய்தால் அது சாதாரண சமையல் ஆகிறது (அதுக்கு டிவியில் வேற டிபார்ட்மெண்ட்டு உண்டு)..அதையே பூண்டின் தாவரவியல், உயிரியல் மற்றும் பொறியியல் பெயர்களை சொல்லிக் கொண்டே கல் குழவியில் பொறுமையாக இடித்தால் அது சித்த மருத்துவமாகிறது.

3. தமிழர்களின் தலைமைப் பண்புகளில் முக்கியமானது ஒன்று: பாட்டி மடியில் போட்டுக் கொண்டு சொன்ன கதையை அப்படியே பாஹுபலி என்ற பெயரில் சினிமாவாகப் பார்த்துவிட்டு 'ச்சே ச்சான்ஸே இல்லப்பா! இங்கிலீஷ்காரன் பிச்சை வாங்கணும்' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதுதான். சித்த வைத்தியத்திற்கும் இது கச்சிதமாகப் பொருந்தும். நாமறிந்த பாட்டி வைத்தியத்தையும் ஒரு தாடிக்காரர் தவணை முறையில் வார்த்தை-வார்த்தையாக தொலைக்காட்சியில் சொன்னால்தான் நாம் கவனித்து குறிப்பெழுதுவோம். நெஞ்சு விடைக்க 'முடக்கத்தான் கீரை ஒரு பார்ஸேல்ல்' என்று கீரைக்காரம்மாவிடம் சொல்லி வைப்போம்.

4. ஒரே சித்த மருந்திற்கு ஒரு வைத்தியக்காரர் சொன்ன அதே பக்குவத்தை பிற வைத்தியரிடம் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. எவ்வளவு ஆத்திரமான சண்டையென்றாலும், கராத்தே வீரர்கள் சண்டைக்கு முன் உன்னோட ஸ்கூல் என்ன? ஸ்டைல் என்ன? என்பனவற்றை விசாரித்துவிட்டுதான் வீடு கட்டவே தொடங்குவார்கள். அது போலவே சித்த சிலபஸும் பல பல வகைகள் உண்டு. கிள்ளி எடுத்தல், வேரோடு பிடுங்குதல் என தாவரக் கொலையிலேயே  வைத்தியருக்கு வைத்தியர் வேறுபாடுகள் உண்டு. எல்லாம் சித்தமயம்.

5. புரிந்து கொள்ளுங்கள் அரு​மை ​நேயர்க​ளே.. நம் உடலின் வாதம் - பித்தம் - கபம் இதை சரியான விகிதத்தில் வைக்கவே வைத்தியர்கள் பெரும்பாடு படுகிறார்கள். பசுநெய்யில் புளிவிடுவது, இஞ்சியை தேனில் உரைப்பது, வெள்ளை வெங்காயத்துடன் மாதுளஞ்சாறு பிழிவது, விளாம்பழத்துடன் வெல்லம்இடிப்பது என இதெல்லாம் நம் வா-பி-க கட்டுப்பாடுக்காக வைத்தியர்கள் தங்கள் உடலையும் ஆன்மாவையும் பரிசோதனையாக்கி நமக்குத் தந்தவையாகும். ஆகவே, எந்த வைத்தியர் என்ன எப்படி எவ்வளவு சாப்பிடச் சொன்னாலும், நம் இன்னபிற நோய்த்தன்மைகளையோ அல்ல பிற மருத்துவ காரணிகளையோ கண்டுகொள்ளாமல் ஒரு விழுது வாய்க்குள் விட்டுக்கொள்ளவும்.

6. சித்த வைத்திய முறையில் சாதிக்க முடியாதது அல்லது குணமாக்க முடியாது என்று ஒன்று இல்லவே இல்லை. எளிமையாக சொல்லவேண்டுமென்றால் கொசகொச கூந்தல் முதல் இந்திரிய நஷ்டத்தை சரிகட்டும் லேகியம் வரை அனைத்தும் இங்குண்டு. நீங்கள் எத்தனை மண்டலங்கள் மருந்து உட்கொண்டும் கொசகொச கூந்தலோ அல்லது இந்திரிய நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை என்றாலும் அகத்தியர் அருளிய சித்தத்தை குறை கூறலாகாது. உங்கள் உடலமைப்பு அல்லது நரம்பு மண்டலம் இந்த வைத்திய முறைக்கு உகந்தாக இல்லையென்று நீங்களே உங்களை சமாதானம் செய்து கொள்ளவேண்டும்.

7. அலோபதியில் தீராத நோய்கள் கூட இங்கு தீர்த்து வைக்கப்படும். எதுவாயினும் உங்களின் மனம் தளராத நம்பிக்கையும் தொடர்ச்சியாக மருத்துவரை சென்று பார்ப்பதுமே முக்கியம். மருத்துவர் அநேகமாக  சிசிஆர்எஸ் அல்லது சிசிஆர்ஐ மூலம் சித்த வைத்தியமும் கூடவே வர்மக்கலை, யுனானி, சேற்று தெரபி அல்லது மாற்று மருத்துவத்தில் டிப்ளமோவும் வாங்கியிருக்கக் கூடும். ஏதோவொரு கலவையான அணுகுமுறையில் ஏதாவது ஒரு சுபதினத்தில் உங்கள் நோய்க்கான சிகிழ்ச்சை​யை அவர் கண்டறியக் கூடும். ஆகவே பொறுத்திருங்கள்; பொறுமைதான் சித்த-நோயாளியின் முக்கிய பண்பாகும்.

Wednesday, July 22, 2015

ஒரு நிலக்காட்சி ​செத்துப்​போனது

Kaladi Jagan

தெண்டபாணி மாமா இறந்து விட்ட தகவல் அப்பாவிடமிருந்து கிடைத்தது. மாமா எனக்கு 5 வருடங்கள் மூத்தவர். இந்த வருட இடைவெளியோடு அவரது மரணத்தை நினைத்துப் பார்க்கும் போது வித்யாசமான துயரம் தாக்குகிறது. கூடவே, குடியால் செத்தவர்கள் நிறைய பேர் நினைவுக்கு வருகிறார்கள்.
மாமா இப்போது இறந்திருக்க வேண்டியதில்லை. மனைவி, 7 மற்றும் 5 வயதுகளில் இரு மகன்கள் என வாழ நிறைய சங்கதிகள் அவருக்காக காத்திருந்தன.

எக்கணமும் தெண்டபாணி செத்துப் போகலாம் என்ற தகவலையே சொந்தங்களும் நண்பர்களும் தெரிவித்தவாறு இருந்தன. அவரிடம் பேசவும் கேட்கவும் என நிறையவுண்டு; நெடிய ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்காலும் என தேங்கி விட்ட நிலக்காட்சிப் போன்ற உரையாடல். தமது உரையாடலை ஒரு நிலக்காட்சியாக நினைவூட்டும் நபர்களில் மாமாவுக்கும் ஒரு இடமுண்டு. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை ஓவியத் தெளிவாகவும் செத்தபிறகு மனதை பிசையும் இசையுமாக ஆகிறார்கள்.

சாவதற்கு சில தினங்கள் முன்பு சென்று பார்த்து விட்டு வந்த அம்மா சொன்னது: அவன் உருவம் ஒரு குழந்தை அளவுக்காக சிதைந்து விட்டிருக்கிறதாம். வெறும் பழச்சாறு மட்டும் உட்செல்கிறதாம். அதுவும் பெரிய பாட்டிலாயிருந்தால் தூக்கிக் குடிக்க முடியாது என சிறு பாட்டில்களாய் வாங்கி கொடுக்கப்படுகிறதாம்.

எப்போதோ மாமா சொன்னது: கிராமத்தில் அரசு மருத்துவ குழாம் ஆரோக்கிய குழந்தைகளுக்காக நடத்திய போட்டியில் பரிசு வென்ற கொழுகொழு கிராமத்துக் குழந்தையாம் அவர். வருடங்களுக்கு முன்பு பார்த்தவரை அதற்கான அடையாளங்கள் கொண்டவராகவே இருந்தார். ஆல்கஹாலில் உருகும் வரை அப்படித்தான் இருந்தார்.

திருமணம் எப்போதும் சில கதவுகளைத் திறக்கவும் பல ஜன்னல்களை மூடவும் வைக்கிறது. மாமாவுக்கு அப்படி மூடிய அல்லது மூடப்பட்ட ஜன்னல்களில் நண்பர்கள் மற்றும் சில சொந்தங்களும் மறைய வேண்டியதாயிற்று. அரசு வேலையும் ஆல்கஹாலுமாக புதுக் கதவுகள் தாமே திறந்து கொண்டன.

குடிப்பார்.. குடிப்பதால் எழும் சிந்தனையூக்கங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்.அதன் பிறது பேசுவதெல்லாம் தத்வார்த்தமாக, தன்னை மீறி கொப்பளிக்கும் பேரறிவு ஆளு​மையாக உருவகித்துக் கொண்டார். அந்த சிந்தனைகளை எழுப்பும் திறன் இத்திரவத்திற்கு மட்டுமே உண்டு என்றும் நம்பத்தொடங்கினார். படிப்படியாக தன் இயல்புகளிலிருந்து கழன்று நிற்கும் தனது குடி-மனிதன்தான் தன்னினும் சிறந்த அறிவாளி என அதை தீவிரப்படுத்த முனைந்தார். ஆனால் அவரே அறியாமல் குடி-அறிவாளி பிம்பத்தை அடித்து நொறுக்கி பிறர் புகழ்ச்சிக்கும் பிறகு இரக்கத்திற்கும் ஏங்கும் குடி-உத்தமன் முன் வந்து நின்றான்.

சுயஇரக்கத்தை விட நேசிப்புக்குரிய புண் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஒரு நோய்த்தன்மையுடன் மாமா தன்னை ஒரு குடி-உத்தமனாக உலகத்தின் முன் நிறுவிக் கொண்டார் எனப்படுகிறது. முழுச்சம்பளத்தையும் டாஸ்மாக்கில் கரைப்பது; தனியாளாக கடைக்குள் சென்று புதுப்புது நண்பர்களை உற்பத்தி செய்து கொள்ளவதும் சாத்தியமாயிற்று. யாருக்கும் சாத்தியப்படாத இரவும் நட்பும் செலவும் அவருக்கு இயல்பாகின.

குடியர்களுக்கு காலை வெளிச்சம் எப்போதும் பதட்டமானது. தான் போதையில் செய்த ஆட்டங்களை பிறர் சொல்ல கேட்க மனம் நொறுங்கிப் போகும். தம் போதை தவறுகளை களைவதற்காகவே சிலர் முழு நேரக் குடிக்கு அடிமையாகிறார்கள். மாமாவை எது ஆட்கொண்டது என தெரியவில்லை.. அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

கடைசியாக அவரிடம் பேசியது நினைவுக்கு வருகிறது:

நான் ஊர் சென்றிருந்த ஒருநாள். காலை 7 மணியளவில், ஒரு ஷட்டர் மூடப்பட்ட கடை வாசலில் அமர்ந்து பேசினோம்.. அப்போதே குடித்திருந்தார். மீதி சரக்கு தன் யமஹா வண்டியில் இருக்கிறது என்றார். கைகளில் கன்னங்களில் சிராய்ப்புகள். புதுக்காயங்கள் போல - ஏறு​வெயிலில் ரத்தம் மினுங்கியது. ஏன் என்று கேட்டதற்கு அதற்கு முந்திய இரவு குடியில் வீடு திரும்பும்போது சறுக்கியிருக்கிறார். அருகிலிருந்த யமஹா உண்மையென்றது.
'நான் சாப்பிடறதே இல்லடா.. காலையிலிலேயே குடிக்க ஆரம்பிச்சிரதுதான்.. என்ன பண்ண?'
'ஏன் இப்படியிருக்கீங்க.. குழந்தைகளை நினைச்சுப்...'
உக்கிரமாக சிகரெட்டை இழுத்தவாறு
'எங்கே? எல்லாம் அவ்வளவுதான்.. என் வேலை அவங்களைக் காப்பாத்திரும்டா.. பதினெட்டு லட்சத்து வீடு கட்டியாச்சு.. அதவிடுடா..'
'ஆபிஸ்ஸாவது போறிங்களா?'
'என்ன எவண்டா கேள்வி கேட்பான்? டியிஓ-விலிருந்து ட்ரெஷ்ஷரி வரைக்கும் நான் சொன்னா எது வேணாலும் செய்வாங்க. தெண்டபாணி பைல் வொர்க் பர்பெக்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆபிஸ் ஒரு மேட்டரேயில்ல'
சட்டென்று எழும்பி வண்டி முன் சீட் கவரிலிருந்த சிறு புட்டியை உருவினார்.
'மாமா.. வேணாம் இப்பவே குடிச்சிருக்கீங்க.. வைங்க'
'ம்.. அப்படிங்கிறியா? ரைட்டு. சரி வா போவோம்'
'ஆமா காலையில எதுவும் சாப்பிடலியா?'
ஒரு மாதிரியாக ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.  அதுதான் மாமாவுடனான க​டைசி உ​ரையாடல் என நி​னைக்கி​றேன்.
அதற்கப்புறம் தெளிந்த நிலைக்கு வரவே கூடாது என்பது போல குடித்துக் கொண்டேயிருந்தார். ஊர் சென்ற போதேல்லாம் அவரைப் பார்க்க முடியவில்லை அல்லது பார்க்க எனக்குப் பதற்றமாயிருந்த​தோ?

எனக்கு வந்து சேர்ந்த செய்திகள் எல்லாவற்றிலும் அவர் குடித்துக் கொண்டேயிருந்தார்.. காயங்கள் சம்பாதித்துக் கொள்பவராக இருந்தார். குடும்ப அமைப்பிலிருந்து விலகியவராக, பணியிலிருந்து நீண்ட விடுப்பு, பணமுடை, குடிக்காக மற்றவரிடம் கையேந்துபவராக இப்படிப்பட்ட மாமாவைத்தான் அனைவரும் முன்வைத்தனர்.

அப்போதெல்லாம் நீண்ட நிழலாக ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்கால் என்ற நிலக்காட்சியை நினைவிலிருத்தப் பாடுபடுவேன். மீண்டும் மாமாவுடனான ஒரு உரையாடல் அதை மீட்டுக் கொடுக்கும் என நம்பினேன்.

அந்த உரையாடல் நடைபெறவேயில்லை.

இப்போது மாமா குடிக்கும் சிந்தனைக்குமான தொடர்பை தப்பர்த்தம் செய்து கொண்டு செத்தவர்கள் பட்டியலில் ஒருவராக சேர்ந்தும் கொண்டார்.