Thursday, July 30, 2009

பச்சப்புள்ள - பார்ட் 3 அல்லது சிமிட்டாத கண்கள்

ஆனா பாருங்க.. இந்த செகண்ட் ஹீரோ மொள்ள மொள்ளமா காமடியனாகி, வில்லனாகி கடைசிலே காணாமலே போயிடுறாரு.
இவரு பேரு அன்பு!

ராசாத்தி மின்னாடி ஹார்ட்வேர்ஸ் ஏஜென்ஸிலே வேல பாத்துக்கிட்டு இருந்தப்ப நம்ம அன்பு, பக்கத்து எலக்ட்ரிகல் கடையில வேலை. ராசாத்தி வேலைக்கு வந்த மக்கா நாளே அன்புத் தலைவர் என்ட்ரி.

"அலோவ் ஈரோ, எப்படியிருக்கீங்க.. வாங்க டீ சாப்பிடலாம்... ​வேலையெல்லாம் எப்படி போகுது, ஏதும் பிரச்சினைன்னா சொல்லுங்க, வுட்டு லேப்பிரலாம்"
இப்பிடி அன்பு, அன்பு மயமாக மாறுனதுக்கு காரணம் ராசாத்திய டாவு கட்ட வர்றதுக்குதான்னு ஈரோவுக்கு லேட்டாதான் பிக்கப் ஆச்சு.
சரி எப்படியோ வேலை ஒழுக்கமா நடந்தா செரி, 1200 ரூபாயிக்கு 8 விரல்லயும் பின்னிப் பெடலெடுக்கிற ஆளு ராசாத்தி.. அப்புறம் என்ன சொல்ல முடியும் ஈரோவால!
பாப்பாத்தி இப்பத்தான் கீபோர்டில நெம்பரு அடிக்கிறதுக்கின்னே தனியா ஒரு பகுதி இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கு. பரவால்லே பிக்கப் ஆயிக்கும்!
அன்பு அடிக்கடி ஆபிஸுக்கு வர்றதும், ஈரோக்கிட்ட அப்பிடி இப்பிடி தெக்கால வடக்காலன்னு ஞாயம் பேசறதும், போறப்ப ராசாத்திட்ட 'வரட்டா' சொல்லிட்டு போறதுமா ரெண்டு மூணு வாரம் ஓடிருச்சு. ராசாத்திக்காக இவன் அக்கப்போர பொறுத்துக்க வேண்டியதுதான்னு கம்முனு இருந்துட்டாரு ஈரோ. இதில அப்பப்ப ஈரோக்கிட்ட, ராசாத்தி எங்கிட்ட முன்ன மாதிரி பேசறதில்ல.. எனக்கு அவ அப்பன தெரியும் ஆத்தாள தெரியும் வீடு தெரியும் ஊரு தெரியும் - சும்மா விட மாட்டேன்னு புலம்பல் வேற.
மனசுக்குள்ள த்தூமாதரிச்சே.. என்ன கருமாந்திர காதல்டா இவனுதுன்னு ஈரோவுக்கு தோணும்.
ராசாத்தி வெளியூரு, ஈரோவும் வெளியூரு.. அதனால ரெண்டு பேரும் எட்டு எட்டரைக்கெல்லாம் முனிஸிபாலிடிக்கு வந்து, மாடியில இருக்கிற கம்ப்யூட்டர் சென்டரை தொறந்து வேலய ஆரம்பிச்சுடுவாங்க. பாப்பாத்தி நெதானமாத்தான் வரும்.
ஒருநா, ஈரோ வர லேட்டாயிடுச்சு. ஈரோவுக்கு முன்னாடியே ராசாத்தி வந்திருக்கும் போல. மாடியில இருந்து அன்பு வேகமா இறங்கி போயிட்டிருந்தார். இவன் எங்கடா இந்நேரத்துக்குன்னு இங்கன்னு நெனச்சுக்கிட்டே ஈரோ மாடிக்குப் போனாரு. அங்க பியூன் காமடியன் நின்னுக்கிட்டிருந்தார். ஈரோவப் பாத்து கோபமா,
"ஈரோ, என்னப்பா இதெல்லாம்..? யாரவன்..??"
"யாரக் கேக்கறீங்க, அன்பையா?"
"அவந்தான். ராசாத்தி தனியா இருக்கும் போது, மேலே வந்திருக்கான். என்னடா இது யாருமில்லாத நேரத்திலன்னு வந்து பாத்தா, அவன் ஏதோ பேசிக்கிட்டிருக்கான், ராசாத்தி அழுதுகிட்டு நிக்குது"
".... இல்லயே, ராசாத்திக்கு தெரிஞ்ச பையந்தானே அன்பு"
"இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல ஈரோ. நான் அவன புடுச்சி நல்லா சத்தம் போட்டு உட்டுட்டேன். இனிமே மாடிப்பக்கம் வர்ற வேலை வச்சுக்காதே. ஈரோட்ட பேசணும் அவரு இருக்கிறப்ப வான்னு சொல்லி விரட்டி உட்டுட்டேன்"
"அப்படியா??"
எச்சரித்துவிட்டு (முனிஸிபாலிடி பியூன்னா சும்மாவா?) அவர் கீழிறங்கிச் ​சென்றுவிட்டார். ஈரோவுக்கு குழப்பமாகி விட்டது. என்னடா இது ஏதும் பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டே கம்ப்யூட்டர் சென்டருக்குள்ள போனாரு.
ராசாத்தி அன்னிக்கு தாவணி கட்டியிருந்துச்சு. கருப்புத்தாவணி. செம்பருத்தி செடி கருப்பு இலையா நின்னா மாதிரி! மூணு கம்ப்யூட்டர் அறையில நடு சீட்டுல உக்காந்திக்கும் ராசாத்தி. ஒருக்கா ஈரோ ஒனக்கு முட்ட கண்ணுன சொன்னது ராசாத்தி, 'எங்க என் கண்ண சிமிட்டாம பாருங்க பாப்பம் முதல்ல கண்ண சிமிட்டினவங்க தோத்தாங்கன்னு' சொல்லிச்சு. ​ஈரோவால ஒரு நிமிசத்துக்கு மேல ராசாத்தி கண்ண சிமிட்டாம பாக்க முடியலே... ராசாத்தி கண்ண சிமிட்டாம பாத்துட்டே இருந்தது..!
ராசாத்தி தாவணி நுனில கண்ணத் தொடச்சுக்கிட்டு இருந்தது. ஈரோ உள்ள ​போனாரு,
"வாங்க"
"என்னாச்சு, டல்லா இருக்கே?"
"இல்லியே"
"அன்பு வந்தாப்டியா?"
தலைய மட்டும் ஆட்டுச்சு ராசாத்தி.
மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது.
"எதாவது பிரச்சினையா?"
"அதெல்லாம் ஒண்ணிமில்லை"
சிமிட்டாத கண்கள் ஏனோ அப்போது தரை நோக்கியிருந்தன. அடர்த்தியாய் காதுகளை நிரப்பியது நிசப்தம். ஈரோ ராசாத்தி பக்கத்திலே போனாரு. ராசாத்தியின் தலை சாய்ந்த முதுகின் மிகுபரப்பில் வெயில் மஞ்சள் கண்கூசியது.
"எங்கிட்ட சொல்லேன்.."
"..."
"அன்பு கூட எதுவும் பிரச்சினையா"
"..."
"எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
தலையை நிமிரவேயில்லை. கீழே அலுவலகம் தொடங்கியிருந்தது. கமிஷனர் கார் வந்த சத்தம் கேட்டது.
"நாங்கேக்கிறது காதுல விழுதா இல்லியா?"
தலை நிமிரவேயில்லை.
"இங்க உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நான்தான் பாத்துக்கணும்."
"...."
"............ ஒரு அண்ணன் மாதிரியாவது நெனச்சு எங்கிட்ட சொல்லக்கூடாதா..?"
படக்கென்று தலையை நிமித்தி, சிமிட்டாத கண்களில் சரசரவென கண்ணீர் ​பொங்க, தாவணியை வாயில் கதக்கித் தேம்ப ஆரம்பித்தாள் ராசாத்தி.
(முற்றும்)
- பச்சப்புள்ள யாருன்னு கேக்க மாட்டீங்கதானே? அதே மாதிரியே ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!

Wednesday, July 29, 2009

பச்சப்புள்ள - பார்ட் 2 அல்லது பால்நுரை படலம்

ஈரோ, ராசாத்தி, பாப்பாத்தி, முனிஸிபாலிட்டி, கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி - அம்புட்டுதான் ரீகேப்பு!

ராசாத்தி-பாப்பாத்தி ரெண்டு பேரும் நல்லா கலகலப்பா பேசி பழகினாங்க. கலகலப்புங்கிறத விட லூட்டின்னுதான் சொல்லோணும். நம்ம ஈரோதான் கொஞ்சம் பயந்தாப்ல திரிஞ்சாரு! ராசாத்தி ஈரோக்கிட்ட,

"உங்கள, இதுக்க மின்னாடியே தெரியும். நான் ஹார்ட்வேர்ஸில இருப்பேன், நீங்க அந்த வழியாத்தான் டெய்லியும் நடந்து போவீங்க"

"அப்படியா, நான் உன்னைப் பாத்ததே இல்லியே?"

"மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே தலைய குனிஞ்சுக்கிட்டே நடந்தா எப்படித் தெரியும்?"

அட நம்மளக் கூட கவனிக்கிறாங்களான்னு ஈரோவுக்கு புல்லரிச்சுப் போச்சு. ஈஈன்னு இளிக்க வேற செஞ்சாரு.

பாப்பாத்தி குறுக்கிட்டு,

"ஆமா, ரோட்டுல நீங்க நடக்கிறப்போ ஏதோ ரொம்ப சோகத்தில அடிபட்டு நடக்கிறவன் மாரி இருக்கும்"

ராசாத்தி, "நாங்கூட பாப்பாத்திட்ட​சொல்லுவேன், பாவமாயிருக்குடி, பால் ஏதும் வாங்கிக் கொடுப்பமான்னு.. ​ஹாஹா"

கொல்லுன்னு சிரிக்குங்க குமரிங்க.. ஈரோவுக்கு வெக்க வெக்கமா வரும்!! இவிங்க ரெண்டு பேரும் பண்ற பன்னாட்டு கொஞ்ச நஞ்சமில்ல! ஈரோ அப்பப்ப ரிலாக்சு பண்ணிக்க வெளிய போயி தம்ம போட்டுட்டு, ஆட்டி ஆட்டி டீக்குடிச்சிட்டு, வாயில ஒரு ஹால்ஸ் மிட்டாய இடுக்கிட்டு மாடிக்கு வந்திடுவாரு.

முதல்ல போனாப் போவுதுன்னு உட்டுட்டாங்க இவிங்க ரெண்டு​பேரும். அப்புறமேட்டுக்கு வரும்போது எங்களுக்கும் பாலும் பப்ஸும் வாங்கிட்டு வரணும்னு கண்டீசனா சொல்லிப் போட்டாங்க!

ஈரோவே பாலும் பப்ஸும் கைகளில் ஏந்தி மாடிப்படியிலே கஷ்டப்பட்டு வந்து ராசாத்திக்கும் பாப்பாத்திக்கும் கொடுப்பாரு. சிலசமயம் பாலு விளிம்பு நிறைய இருக்கும். படியேறரது சிரமமா இருக்கும். அதனால ஈரோ ஒரு​வேலை பண்ணுனாரு.

படியேறதுக்க மின்னாடி, ராசாத்தி பால்ல ஒரு வாயி, பாப்பாத்தி பால்ல ஒரு வாயின்னு குடிச்சுட்டு பத்திரமா பாலை கொண்டு போயி கொடுப்பாரு! என்னடா இது ஒரு ஹீரோ பண்ற வேலையான்னு கேக்கறீங்களா?
இருங்க..இப்ப கதையில ஒரு முக்கியமான ஆளு என்ட்ரி ஆவறாரு... அவரைத்தான் நாம ஏக்சுவலா ஹீரோன்னு சொல்லணும்.

ஏன்னா, அவரு என்ட்ரி ஆகும் போதே,"நாந்தான் ராசாத்தியோட லவ்வரு" அப்படிங்கிறாரு!

(தொடரும்... இன்னும் ஒரே ஒருக்கா...)

Tuesday, July 28, 2009

பச்சப்புள்ள - பார்ட் 1


நம்ம கதையில வர்ர ஹீரோ பேரு.. ம்ம்ம்.. ஈரோன்னே வச்சுருவோம். நம்ம ஈரோ கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சு ஒரு தனியா கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனி ஸ்டார்ட் பண்ண.......... வக்கில்லாததால, சரீன்னுட்டு ஒரு முனிஸிபாலிட்டி ஆபிஸ்ல.... ச்சேச்சே.. குப்பையெல்லாம் அள்ளப் போகலீங்க.. காண்ட்ராக்டில் டேட்டா என்ட்ரி வேலைக்குப் போனாருங்க!

சாதாரணமா ஆரம்பிச்ச டேட்டா என்ட்ரி வேலையில் ஒரு பெரிய திருப்பம் (பழனி ஆண்டவா!) ஒருநாள் முனிஸிபாலிட்டி கமிஷனர் ஈரோவைக் கூப்பிட்டு சொன்னார்,

"ஈரோ, ஈரோ பெருசா ஒரு வேலை வருது.. நகராட்சியின் எல்லா ஆப்ரேஷனையும் கம்ப்யூட்டரைஸ் பண்ணப்​போறோம். நீங்கதான் இந்த காண்ட்ராக்ட்ட எடுத்து, டேட்டா எல்லாத்தயும் கொத்தித் தரணும் - சொல்லிப் போட்டேன்"

நம்ம ஈரோ அசகாய சூரன்தான்; இருந்தாலும் ஒத்த ஆளா 3 கம்ப்யூட்டரில ஒரே சமயத்தில கொத்த முடியாம ஒத்தாசைக்கு ரெண்டு பேர்த்த சேத்த வேண்டியா போச்சு. நிறைய​வேலை குறைஞ்ச சம்பளம்ன்னு ஒவ்வொரு கம்ப்யூட்டர் சென்ட்ரா போயி​தேடுனதில, ஒரு இரக்கப்பட்ட​சென்டர் நிர்வாகி ஈரோவை பார்த்து,

"ஈரோ, நம்ம கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க"
"நொம்ப தாங்க்ஸு சார்"
"பயங்கரமா​டைப் பண்ணுவாங்க. ஆனா சம்பளம் சாஸ்தி"
"எம்புட்ங் சார்?"
"1200 ரூபா மாசத்திக்கு, ஒருத்தருக்கு"

எனக்கு வர்றத அவ்வளவுதானேடா என்று நெஞ்சை நீவிக்கொண்டே​வேறுவழியில்லாமல் ஒப்புத்துக்கிட்டாரு ஈரோ.

ரெண்டு​பேரும்​முனிஸிபாலிட்டி வேலைக்கு வந்தாங்க. ஒருத்தி பேரு ராசாத்தி - பெரிய கண்ணு. இன்னொருத்தி பாப்பாத்தி - பெரிய பல்லு. என்னடா ஒத்தை ஹீரோ, ரெண்டு ஹீரோயின், தெலுங்கு படமா இருக்கும் போலன்னு X பட்டனை அமுத்தப் பாக்கறீங்களா?? அப்பிடியெல்லாம் கிடையாதுங்ணா.. ​தைரியமா வாங்க.

ராசாத்தி ஓரளவுக்கு ஸ்பீடா டைப் பண்ணுச்சு. லெப்ட்ல மூணு விரல்தான் யூஸ் பண்ணும், ரைட்ல அஞ்சு விரலும் பிச்சு உதறும். பாப்பாத்தி டைப் பண்றத பாத்துட்டு ஈரோவுக்கு நெஞ்சு வெடிச்சிருச்சு.. பாப்பாத்தி ஒரே ஒரு விரலை வச்சு கீபோர்ட கொத்து​கொத்துன்னு குத்துச்சு..

"ஏனுங்க பாப்பாத்தி, 1200ரூபா சம்பளத்து எல்லா விரலும் யூஸ் பண்ணலாமுல?" என்று ஈரோ கண்ணீர கட்டுப்படுத்திக்கிட்டு கேட்டத்துக்கு,

"இருங்க, இப்பத்தான் டைப் கிளாஸ் போயிட்டிருக்கேன்.. ​போகப் போக ஸ்பீடு வந்துரும் பாருங்க"

சென்டர் நிர்வாகி​சொன்னது கரெக்டுதான் - பயங்கரமாத்தான் டைப் பண்றாங்க!!!

(தொடரும்...)

பின்குறிப்பு:

லென்த் ஓவராயிருக்குன்னு நம்ம தீஅதீ வாசகர்கள் வேட்டிய மடிச்சு கட்டுவதால் (அடிக்கவா இல்ல ஓடவான்னுதான் தெரீல) இந்த இடுகைய பிச்சுப் போடலாங்கிற முடிவுக்கு வந்திடுச்சு நம்ம காலடியின் காறி(த்துப்பி)ய கமிட்டி (கமிட்டி மெம்பர்கள் லிஸ்ட் - நாளை வெளியிடப்படும்!!!) . இதையும்​ஓவர் லென்த் என்று ஃபீல் பண்ணுபவர்களுக்கு கீழ்கண்ட குறிப்புகள் உதவும்:

1. உங்க மானிட்டர் ஸ்க்ரீன் சைஸ் அட்லீஸ்ட் 10" ஆவாது இருக்கணும். ​செல்போன் ஸ்க்ரீனுக்கு இது செல்லாது, செல்லாது!

2. என்னதான் ஆபிஸில மானேஜர் கண்ணில மண்ணைத் தூவிட்டு ப்ளாக் படிக்கிறதுன்னாலும், விண்டோ சைஸை இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் பெரிசு பண்ணிக்கிட்டீங்கன்னா புண்ணியமா போவும்

3. இருந்தாலும் இன்னும் சுருக்கமா வேணும்னு கேக்கிறவங்க இந்த இடுகைய அப்படியே ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை ஒரு பால் மாதிரி ஆக்கி பின் விரித்துப் படிக்கவும்!