Wednesday, October 14, 2015
புலி எனும் மிகையதார்த்த சினிமா
சிம்புதேவன் அருமையான கார்ட்டூனிஸ்ட். ஆனந்தவிகடனில் வந்த அவரது புலிகேசி சித்திரங்கள் மூலம் அறிவேன். தமிழ்-கார்ட்டூன் எல்லைகளை விரித்துச் செல்லும் வன்மை கொண்டவர்கள் பட்டியலில் சிம்புதேவன் பெயரை நிச்சயம் பதிவு செய்யலாம். கிமுவில் சோமு போன்ற காமிக் (Comic)முயற்சிகள் அவரை தனித்து காட்டுகின்றன. இது போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருக்கின்றன. இதை நான் எப்போதும் சொல்வதுண்டு: சிறுவர்களுக்கான இலக்கிய திறவுகோல் காமிக்ஸ் வசமே இருக்கிறது. ஒரு மொழியின் சித்திரக்கதைகள் குறைந்து போகுமென்றால் அத்தலைமுறையிலிருந்து தாய்மொழி இலக்கிய வாசிப்பு என்ற கதவு அடைக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தமாகிறது. இவ்வகையில் தமிழில் வரும் காமிக் முயற்சிகள் மற்றும் அதன் இலக்கிய சாத்தியங்கள் கவனத்தில் இருத்த வேண்டியவையாகின்றன.
ஓவியனின் சினிமா எப்போதும் பிற-சாதாரண வணிக சினிமாக்களிலிருந்து தனித்து நிற்கும். சத்யஜித் ரே-யிலிருந்து ஷங்கர் வரை உதாரணம் சொல்லலாம். ஒரு விஷுவல் தேடல் கொண்டதாக ஓவியன் கான்வாஸின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் எடுத்துக் கொள்ளும் கவனமாக திரைக்காட்சிகள் நிறைந்திருக்கும். இதை சிம்புதேவனும் நிரூபிக்கிறார். இவர் காமிக்ஸ் சாத்தியங்கள் கொண்ட ஓவியன் என்பதால் இதை எழுதுகிறேன். ஹாலிவுட்டின் ஏறக்குறைய அனைத்து சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸில் இருந்து வந்தவர்களே. டிஸி (DC) மற்றும் மார்வல் (Marvel) காமிக்ஸ்கள் தாரை வார்த்த பாத்திரங்கள்தான் ஹாலிவுட்டின் பெரும்பான்மையான படங்களில் காண்கிறோம். இது தவிர பான்டஸி (Fantasy - கற்பனாவாதம் / மிகையதார்த்தம்) மற்றும் அனிமேஷன் கதைகளுக்கான மூலங்களும் காமிக்குகளே! சித்திரக்கதைகளுக்கு அதீத வரவேற்பு மேற்கு நாடுகளில் எப்போதும் உண்டு. சிறுவர்களுக்காக படைக்கப்பட்ட காமிக்ஸ் பாத்திரங்கள்தான் இப்போதும் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஹாலிவுட் படங்களின் கதாநாயகர்கள். சிம்புத்தேவனின் கிமுவில்-சோமு சித்திரக்கதை கூட இது போன்ற திரையுலக விரிதல் சாத்தியம் கொண்ட ஆக்கம்தான். ஆனால் தமிழ் சினிமாவானது, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்றே புதுமுயற்சிகளுக்கான முனைப்புகள் இன்றி சூம்பிப்போய் கிடக்கிறது.
இன்னமும் சூப்பர்-ஹீரோ அல்லது மாயாஜால கதைகள் என்றால் நமக்கு அது ஹாலிவுட் படங்கள்தான். நம்மூரில் சூப்பர்-ஹீரோ வரக்கூடாது; வரவும்முடியாது - நாம் நிறைய மின்கம்பிகள் கட்டி, ஏராளமாய் சாக்கடைகள் திறந்து வைத்திருக்கிறோம். பறந்து செல்லும் சூப்பர்களுக்கு இவ்விடம் சாத்தியப்படாது.மாயாஜாலம் என்றால் விட்டலாச்சார்யா வகையறாக்கள், அதைவிட்டால் அம்மன்களின் கிராபிக்ஸ் (பி, சி சென்டர்களில் வசூல் அள்ளும் - வேறென்ன வேணும்?) இதுபோன்ற நாமே அறியாமல் வகுத்துவிட்டிருக்கும் சில குறுகிய மனப்பான்மையால்தான் நம் கற்பனைசாத்தியங்கள் சூம்பிபோய் விட்டிருக்கின்றன. கிரிஷ், ரா1, வேலாயுதம், எந்திரன் மற்றும் முகமூடி போன்று சில அபூர்வங்கள் மட்டுமே இந்திய சினிமா வசமுண்டு. முற்றிலும் அரசு அலுவலக குமாஸ்தா ரீதியில் நவீன படைப்பாளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புது வகை கதைசொல்லல் அல்லது ஓவியர்களுடன் இணைந்து கிராபிக்ஸ்-நாவல் போன்ற அம்சங்கள் தமிழில் குறைவு - அல்லது இல்லை என்று கூட சொல்லலாம்.
பான்டஸியில் நம் மரபு சார்ந்த கதைகளையும் கதைக்களங்களையும் இழந்து விட்டு தலைமுறைகளாக மேற்கத்திய கதைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற தளங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கமுடியும். தொலைக்காட்சி கார்ட்டூன்களைப் பார்த்து வளரும் சிறுவர்கள் பிறகு அதன் தாக்கத்தில் வெளிவரும் ஹாலிவுட் படங்களையே விரும்ப முடியும். இது இவ்வாறாகவே புரோகிராம் செய்யபட்டு விடுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே அளவுகோல். இதனாலேயே தாய்மொழி - தாய்நாட்டு படங்களை அந்த அளவுகோலால் சுலபமாக நிராகரித்து விடுகிறார்கள். சூப்பர்ஸ்டார் என்ற நிழலிருந்தும் கோச்சடையான் போன்ற படங்களின் தோல்விக்கு இதுவே காரணமாய் இருக்க முடியும். தொழில் நுட்ப மற்றும் அபரிமித முதலீட்டில் வெளிவரும் மேற்கத்திய படங்களின் உச்சத்தை எட்ட முடியாததால் நம்மொழிப் படங்கள் இன்னமும் அ.மா.அரைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
இந்த அவலம் நீடிக்கின்ற தமிழ் சினிமாவில் சிம்புத்தேவனின் திரைப்படைப்புகள் சிறது ஆசுவாசத்தை அளிக்கின்றன. இம்சை அரசனிலிருந்து புலி வரை படைப்புகளில் மிகையதார்த்தம் மற்றும் மாயாவாதம் தொடர்வதை தேர்ந்த சினிமா விமரிசகர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். புலி போன்ற சிறுவர்-பான்டஸி படத்தில் நடித்த விஜயின் துணிச்சலும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. இருந்தும் சிம்புத்தேவன் தனது இயல்பான மண்வாசனை கொண்ட கதைக்களத்திலின்று கழன்று ஹாலிவுட் தாக்கத்தில் புலி கதையை வடித்திருப்பதன் காரணம் வணிக ரீதியான அழுத்ததமாக இருக்குமோ? இருந்தும் துவளாத சுவாரஸ்யமாய் திரைக்கதையின் போக்கு இருக்கிறது. வான்-ஹெல்ஸிங்கில் (Van Helsing) வரும் டிராகுலா, பான்ஸ் லேபிரின்த் (Pan's Labyrinth) - தவளை மற்றும் ஒற்றைக் கண், மெலிஃபிஷியன்ட் (Maleficent) இன்னும் ஸிலீப்பிங் ப்யூட்டி Sleeping Beauty போன்ற படங்களின் தாக்கம் தெரிகிறது. இதன் காரணமாகவே நமக்கு ஹாலிவுட் அளவுகோல் நம்மையறிமால் வந்துவிடுகிறது. அசல் நம் மண்வாசனை கொண்ட கதையாக இருக்கும் போது கிராபிக்ஸ் ஒப்பீடு இரண்டாம் பட்சமாக போயிருக்க கூடும். கதையவில் புலி கம்பீரமாக இருந்தாலும் காட்சியமைப்பில் அது குன்றிவிட்டது.
சிம்புத்தேவன் படத்தில் வழக்கமாக ஒரு விமர்சன அரசியல் நையாண்டி வரும். இம்சை அரசனில் கோக் கம்பெனிகளை விமர்சித்திருப்பார். அறைஎண்.. கடவுள் படத்தில் ஸாப்ட்வேரில் வேலை செய்பவர்களை. முரட்டுசிங்கத்தில் புதையல் தேடும் போது வரும் குறிப்புகளில். இதில் சிலது கதைப்போக்குடன் ஒவ்வாமல் போவதை கவனித்திருக்கிறேன். அது திரைக்கதையின் வலுவை குறைக்கும் விதமான நையாண்டியாக மாறிவிடுகிறது. அதுபோன்றே புலியிலும் ஒரு இடத்தில் ஆல்பா-பீட்டா-காமா (நியூட்டன், ஐன்ஸ்டீன்) எல்லாம் வருகிறார்கள். இது கதை மீதான நம்பகத்ததன்மை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. இனி வருவது அனைத்தும் நையாண்டிவகை சினிமாதான் என்ற எண்ணத்துக்கு உந்தப்பட்டவர்களாகிறோம். இவை தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
முக்கியமாக பான்டஸி கதை என்பதே ஒவ்வொரு காட்சியிலும் முற்றிலும் மாறுபட்ட கற்பனையை பார்ப்பவர்களின் பிரமிப்பு குறையாமல் நகர்த்திச் செல்வதுதான். இது ஒரு அரைமயக்க ரசனை அனுபவத்தை பார்வையாளனுக்கு கொடுத்து அவர்களின் பால்யத்தை மீட்கும் கவனமான வேலை. அதில் அர்த்தமற்ற நையாண்டி இடைசெருகல்கள் பார்வையாளளின் மயக்கத்தை குலைத்து அவனை ஒரு விமர்சகனான நிமிர்ந்து கொள்ள செய்து விடும். அப்படி விலகியவன் கதையை விமர்சிக்கவே செய்வான்.
கதையோட்டத்திலுள்ள சில தர்க்கரீதியான குறைகளை தவிர்த்து அணுகினால், சிம்புத்தேவனின் புலி தமிழ் சினிமாவில் உள்ள பான்டஸிக்காக வெறுமையை நிரப்பும் முயற்சியாக கொள்ளலாம். இது போன்ற ஆக்கங்கள் திரையுலகிலும் அதனினும் முதன்மையாய் தமிழ் இலக்கியத்திலும் அதிகம் வரவேண்டும். அதுவே வரும் தலைமுறைகளுக்கான தாய்மொழி இலக்கியத்திற்கான வழித்தடம்.
Labels:
காமிக்ஸ்,
கார்ட்டூன்,
சினிமா,
விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment