Tuesday, February 2, 2016
அந்தப் பறவை எந்த தேசம்?
பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு குறு ஆச்சரியம் எனக்கு. சதுப்புநிலத்தை இரண்டாக பிரித்துக்கொண்டு ஓடும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை. சாலையின் ஒருபக்கம் உள்ளூர் போட்ட குப்பை மலை. மறுபக்கம் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம். சாலையால் சதுப்புநிலத்தின் மறுப்பக்கம் காப்பாற்றப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.
சென்னை வந்ததிலிருந்து இவ்வழியாகத்தான் அலுவலகம் போய் வருகிறேன். ஆக்ஸிலேட்டரை மட்டுப்படுத்துமாறு பறவைக்கூட்டம் ஆர்ப்பரிக்கும். அதிகம் பார்த்தறியாத வெளிநாட்டுப் பறவைகள். பருவத்துக்கென ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கின்றன. சீக்கிரம் போ இந்தக் கோடைக்குள் சென்னை சேரணும் என்ற திட்டமாக ஏதோவொரு குளிர்தேசத்திலிருந்து கூட்டமாய் வருகின்றன - போகின்றன.
தலைமுறைகளுக்கு தன் பயணக்குறிப்புகளை கடத்தி ஒரு மரபணு பதிவாக ஆகிறது இந்நிலம்!
ஒரு நல்ல சாயுங்காலத்தில் வீடு திரும்பும் போது காணக்கிடைத்தக் காட்சி - குறைந்தது 400 அல்லது அதற்குமேலாக வாட்டசாட்டடமான பறவைகள் நிரையாக சதுப்புநிலத்தின் மேல் நட்டுவைத்திருந்த டிரான்ஸ்பார்மர் கம்பியில் அமர்ந்திருந்தன. நல்ல கனமான மின் கம்பிதான் இருந்தாலும் அத்தனை பறவைகளும் ஒருசேர எழுந்தால் அதன் அதிர்வில் கம்பியே அறுந்துபோய்விடும் போலிருந்தது.
அந்த பறவைகளின் திரள், அதுகாட்டும் பிரம்மாண்டம், ஒருமித்தம் இயற்கையின் பேரியக்கமாக தோன்றியது அன்று. ஒரு பேராற்றலை தாங்கிக் கொண்டு அமைதியாக தவமிருப்பது போல பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.
சாலையின் மறுப்பக்க குப்பைமலை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேபோகிறது. மலை சரிந்து சரிந்து தூரமாக தெரிந்தது இப்போது சாலையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குப்பையில் சதுப்புநிலம் உறிஞ்சியது போக எஞ்சி நிற்கும் பிளாஸ்டிக் மட்டுமே மலையாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நகரும்-பிளாஸ்டிக்-மலையும் கூட இன்னொரு பிரம்மாண்டம்தான். பிளாஸ்டிக் குப்பை பெருக பெருக குளிர்தேசப் பறவைகள் வரத்து குறைந்து போய்கொண்டேயிருக்கிறது.
என்றோ எங்கோ எவரோ வீசிய சின்ன பாலிதீன் பை எவ்வளவோ தூரத்தில் இருந்து பெரும்பிரயாணம் செய்து வரும் பறவை நிற்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்கொண்டேயும் இருக்கிறது. பள்ளிக்கரணையை தென்சென்னையின் சிறுநீரகம் என்று சொல்கிறார்கள். தரைமட்டத்திற்கு கீழ் கடல்நீரை புகவிடாமல் ஒரு தடுப்பு அரணாக நிற்பதால். ஒரு நிலம் தன் மேற்பகுதியில் கோடி உயிர்களின் சரணலாயமாக இருக்கிறது; கீழே ஒரு ஊருக்கே அரணாகவும் இருக்கிறது.
Labels:
இயற்கை,
சூழியல்,
சென்னை,
பள்ளிக்கரணை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment