என் பதின்மங்களின் காலண்டர் 1992 ஜனவரியில் துவங்கி 1998 ஜனவரி வரை.
1992: வெண்பாவும் ஒரு பெண்பாவும்
எல்லா வகுப்புகளிலும் பெண்கள் முதல் வரிசைப் பெஞ்சுகளில் இருப்பதன் காரணம்... பெண்களுக்குக் கிட்டப்பார்வையாக இருக்க முடியாது.. அவர்கள் குட்டப்பாவைகளாக இருப்பதால் என நினைக்கிறேன். எட்டாம் வகுப்பில் பெண்கள் பெஞ்ச் வரிசை முடிந்த இடத்தில் என் பெஞ்ச் ஆரம்பிக்கும். என் முன்னிருந்த பெஞ்சில் சுசீலா. அவள் ஓரவிழிப் பார்வை தடவும் பனியில் எப்போதும் சில்லிட்டிருந்தது மனசு.
எட்டாம் வகுப்பில் தலைமை ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அலாதி. ஒருநாள் தமிழ் இலக்கண வகுப்பில் 'சோறு தின்னும் வாழ்வே சுகம்' என்று கரும்பலகையில் எழுதி, இப்படி முடியுமாறு ஒரு வெண்பா எழுதுங்கள் என்றார்.
ஏதோ தீர்மானித்தவன் போல இலக்கண இலக்கற்று இலக்கணப் புத்தகத்தின் வெண்பரப்பில் கிறுக்கினேன்.
பேறு பெற நினைத்துப் பெரும் பொய் பேசி
ஊறு பல உரைத்து எங்கும் உண்மை மறைத்து
நாறும் சாக்கடையென வாழினும் - பிச்சைச்
சோறு தின்னும் வாழ்வே சுகம்.
என்று.
சுசீலா கிறுக்கலைக் கவனித்து விட்டாள். ஆசிரியரிடம் படிச்சுக் காட்டேன் என்பதாக சமிக்ஞை செய்தாள். நானோ முகுதுப்பரப்புமேல் கவனம் கொண்டு கம்மென்று இருந்துவிட்டேன். மென்மையாக தலையிலடித்துக் கொண்டாள். சுசீலாக்கள் இப்படித்தான் எளிதில் சித்திரமாகி விடுகிறார்கள்.
1993-94: சவுக்கு மரங்கள்
ஒன்பதும் பத்தும் படித்த காலம்.
Seekக்கு past tense, seeked என்று சொன்னதற்காக மொத்த வகுப்பும் பிரம்படி பட்டது. முதல் அடி எனக்கே எனக்கு.
9ம் வகுப்பிலிருந்து ராதாவோடு ஒரு செல்லச் சினேகம் இயல்பாகியிருந்தது. அப்போதெல்லாம் R. K. ஜெகநாதன் என்றே எழுதி வந்தேன். பத்தாம் வகுப்பு ரிஸல்ட் அன்று அனைவரும் தளும்பியிருந்தோம். அப்பா என்னை அழைத்து வந்திருந்தார். பெண்களைப் பார்த்து நானும் என் எண்களைப் பார்த்து அப்பாவும் சம அளவில் துயர் கொண்டிருந்தோம். நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தோம். சட்டென்று என் முன் ஒரு வளைக்கரம் சாக்லேட்டை நீட்டியது. ராதா!
நண்பர்கள் நமுட்டாய் சிரித்தார்கள். நான் சாக்லேட்டைக் கைப்பற்றாமல் 'எனக்கு மட்டும்தானா? இவங்களுக்கு இல்லியா?' என்றேன். 'உனக்கு மட்டும்தான் எடுத்தாந்தேன்' என்று கையில் திணித்தாள்.
அப்பாவின் சைக்கிளில் வீடு திரும்பினோம். காரியரில் தேமே என்று உட்கார்ந்திருந்தேன். என் எதிர்காலப் பாரத்தையும் சேர்த்து அப்பா அப்போது மிதித்துக் கொண்டிருப்பதாகப் பட்டது. பள்ளி காம்பவுண்ட் அருகே சவுக்கு மரங்கள் இடைவெளியில் ராதா பார்த்துச் சிரித்து கையசைப்பது தெரிந்தது. பயத்தில் மூட்டுக்கள் விலகிய சவுக்கு குச்சியிலை போல கையசைத்தேன்.
1995-97: அடிவாரத்தில் அலையும் கால்கள்
அருள்மிகு பழனியாண்டர் பாலிடெக்னிக் ஃபார் மென்... என்பது பெண்கள் இல்லாத பாழ்வெளியில் பால்டெக்னிக்களை கற்றுக்கொள்வதும் பெற்றுக்கொள்வதும். ஹாஸ்டல் வாசம் இனிதே ராகிங்குடன் துவங்கியது. சீனியர் முதலில் என்னிடம் கேட்டக் கேள்வி: நக்கத் தெரியுமா?
சுரேசு.. முதலாமாண்டு அந்நியமாய் இருந்தான். படிப்பில் கெட்டி. அவனூர் மானூர். பக்கத்து வீட்டுப் பெண் காதலால் சமயங்களில் சொந்த வீட்டில் உணவு மறுக்கப் பட்டான். ஹாஸ்டலில் என் உணவை பங்கிட்டுக் கொள்வான். சாயுங்காலங்களில் பழனிமலை அடிவாரத்துக்கு செல்வோம். மலையேறுவது கிடையாது. அடிவார பக்தைகள் கூட்டங்களில் சுரேசு செய்து காண்பித்த சாகசங்கள் எழுத்திலடங்காது. ஒருமுறை நரிக்குறவப் பெண் எங்களை வள்ளுவர் தியேட்டரிலிருந்து அரை கிமீ வரை துரத்தினாள். சிக்கியிருந்தால் இந்நேரம் நரிப்பல் விற்றுக் கொண்டிருந்திருப்போம்.
மலையடிவாரத்தில் அருள்மிகு பெண்கள் பாலிடெக்னிக்கும் சின்னக்கலையம்புதூர் அருள்மிகு மகளிர் கலைக் கல்லூரியும் மயில்களாய் நிரம்பியிருந்தன. கந்தன் கருணையால் இனிதே திருவிளையாடல்களும் நிகழ்ந்தன. புஷ்பா மகளிர் கலைக்கல்லூரியில் வரலாறு படித்தாள். பஸ் விட்டு பஸ் தாண்டுதல், பாட்டிக்கு சீட், நாய்க்கு பிஸ்கட், வாய்க்கு சிகரெட் என்று விதவிதமாய் முயற்சித்து ஒருவழியாய்.... பானிபட் போரில் தோற்றேன். புஷ்பா என்று சிகரெட்டில் எழுதி புகைத்ததோடு அணைந்தது ஒரு வரலாற்றுக் காதல்.
1998: கோவைக் கால காற்றே..
கோவையில் வேலை. லேத், மில்லிங் மிஷின், கிரைண்டிங் மிஷின், டிரிலிங் மிஷின்களைக் கூவாமல் விற்கும் உத்யோகம். டாக்டர் நஞ்சப்பா ரோட்டுக்கு அருகேயே வாடகை வீட்டில் தங்கியிருந்தேன். ஏற்கனவே அதில் அறிவழகன் ஒருவர் வசித்து வந்தார். 5 ஸ்டார் ஓட்டலில் உத்யோகம். சுவாரஸியமான ஆள். காப்மேயர், உதயமூர்த்தி போன்ற சுயமுன்னேற்ற புத்தக வாசகர். தன்பெயரை ஒரு டயரில் தினமும் 50-100 தடவை எழுதுவார். கேட்டதற்கு பவர் வரும் என்றார். அவருக்கு மரபுசாரா எரிசக்தியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என யூகித்தேன்.
நீள அகலங்களை கணக்கில் கொண்டு.. இதோடு நிறுத்தப்படுகிறுது.
எழுதப் பணித்த மாப்ள 'சிநேகிதன் அக்பரின்' அன்புக்கு நன்றி!