மாட்டுவண்டியின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் புரட்டிப் போடுகிறது.
த.நா.மி.வா (தமிழ் நாடு மின்சார வாரியம்) ஊழியருக்கு அதிகப்படியான அழகான கையெழுத்து அப்பாவுக்கு. தநாமிவா என்பதின் இருப்பு எங்கள் வீட்டில் ஒரு திடப்பொருள் போல உணரமுடிந்திருக்கிறது. இப்போதும் தநாமிவா என்று காதில்விழுவது என்னை அழைப்பது போலவே ஒலிக்கிறது.
அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். மின்பாதை வரைபடங்கள், அலுவல் குறிப்புகள், நழுவல் குறிப்புகள்(லீவ் லெட்டர்) எழுதுவதற்காக மை அவர் பேனாவிலிருந்து ஆவியாகிவிட்டது.
முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கு வருடம் தவறாமல் நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 50 வாழ்த்து அட்டைகளாவது எழுதி அனுப்பிவிடுவார். வாழ்த்து அட்டைப் பரிமாற்றம் காதலர்களுக்கு மட்டும் போதும் என்று அச்சுக்கடவுள் நினைத்துவிட்டார் போல. இப்போது பொங்கல், புத்தாண்டு, தீபாவளி வாழ்த்து அட்டைகள் பார்க்க கிடைப்பதில்லை. செல்போன்களால் வாழ்த்து அட்டைகள் தங்கள் தொடர்பு எல்லைகளை இழந்துவிட்டன. செல்போன் குறுஞ்செய்திகளாக வாழ்த்துகள் பைனரி வடிவத்தில் ஸ்டாம்ப் ஒட்டப்படாமலேயே கிடைக்கிற இந்நிலையில் அப்பா கொஞ்சம் கையறு நிலையில்தான் இருக்கிறார். தற்சமயம் கிடைக்கிற பேப்பர்கள், பத்திரிக்கையில் அரிதாக கிடைக்கிற சில வெண் தீவுப்பரப்புகள், அழைப்பிதழ்களின் பின்னட்டைகள், கோவில் கணக்கு, தகவல் கோரும் விண்ணப்பங்கள் என்று கையெழுத்தைப் பதியம் செய்யவேண்டியதாயிருந்தது.
நான் பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு பார்வர்ட்டாக அனுப்புகிற கடிதங்களின் உறையில் மீண்டும் அப்பா எனக்குக் கிடைக்கிறார். குறைந்தது இரு வர்ண எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது அதில். பெறுநர், அனுப்புநர் முகவரியும் அதற்கு இடையில் சாய்த்து விழுகிற இரட்டைக் கோடுகளையும். இவற்றைத் தவிர வரையவோ எழுதவோ சாத்தியமற்ற கடித உறைகளை அப்பா ஒருகணம் நொந்திருக்கக் கூடும். ஆடிய பாதம் எழுதிய விரல்கள்!
அப்பா திருமண விழாக்களில் உணவுக்குக் கூட செல்லாமல் மெய் வருத்தி மொய் எழுதிக் கொண்டிருப்பது அநேக தடவைகள் பார்த்ததுண்டு. செய்நேர்த்தி கூடிய வைபவமாக மொய் எழுதிக்கொண்டிருக்கும் சமயங்களில் அப்பா எனக்கு வேறு நபராகத் தோன்றுவார். வேகமாகப் பதியப்படும் எழுத்துகள் உறவுச்சங்கிலியின் நிழற்படம் போலவும் தோன்றுகிறது.
அப்பாவின் கையெழுத்து அழகுதான். எத்தனை வேகமாக எழுதினாலும் அதன் சீர் குலைவதில்லை. மொய் மொய்ச்சீர் ஆவது இப்படித்தானோ?
விழா மண்டபத்துக்கு வரும் கடைசிச் சொந்தம் வரைக்கும் காத்திருந்து மொய் எழுதும்பணி கால உத்தேசமற்றதுதான். அப்படியொரு கூட்டம் தளும்பி வழிந்து தீர்ந்த பொழுதில் அப்பா எழுதி முடித்த மொய்ப்பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். பக்கத்தில் நோட்டுகளை எண்ணிக் கொண்டிருந்த சுந்தரம் மாமா அப்பாவிடம்,
"மாமா, பணம் குறைவா இருக்கும் போலிருக்குதே" என்கிறார்.
நோட்டுகளை எண்ணிக்கொண்டே அப்பா,
"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். அப்போது அப்பாவும் அழகாகத் தெரிந்தார்.
34 comments:
நல்ல நடை. பகிர்தலுக்கு நன்றி.
\\அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். \\
அதானே..!
:-)
அழகான பதிவு ...அப்பாக்கள் ஏதொரு வகையில் தர்மத்தை போதித்து கொண்டு தான் இருக்கிறார்கள் .. மொய்யில் தவறவிடாத
பெயர்கள் , பதிவிலே தர்மங்களாக. கைக்காசு , தர்மத்தின் மீது பிடிவாத பிடிப்பு .. அருமை
கசீ சிவக்குமாருக்கு அதிகமா பின்னூட்டம் போடும்போதே நினைச்சேன் :))
கிட்டத்தட்ட அவர் எழுத்தை வாசித்து போலவே இருந்தது
நல்ல நடை
உங்கப்பா கையெழுத்தா அது? கண்ணில ஒத்திக்கலாம்போல இருக்கு..
வாழ்த்துக்கள்... நல்ல பகிர்வு
\\\\அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்.
மின்பாதை வரைபடங்கள்,
அலுவல் குறிப்புகள், நழுவல்
குறிப்புகள் (லீவ் லெட்டர்),
எழுதுவதற்காக
மை அவர் பேனாவிலிருந்து
ஆவியாகிவிட்டது.\\\\\\\ ஆனால்...
அழிவில்லை.
ஆவியாகி..மீண்டும் அது ஆவதென்ன??
“மழை” அது பொழிந்து கொண்டிருக்கிறது...
“அவர்”விந்தில் இருந்து விதையாகி..விருட்சமாய்..
வளர்கிறது..,.. பெயர் சொல்லும் பிள்ளையிடம்!
அவர் தூண்டிவிட்ட “தமிழ்’ திரியில் இருந்துதான்
நீங்கள் இப்போது பிரகாசிக்கின்றீர்கள்!! இந்த
உலகமெல்லாம்..அதில் நானும் உலவுகின்றேன்.
நன்றி ஜெகன்
அச்சில் வார்த்தது போல அழகான கையேழுத்து. மிக அழகு. அப்பாவின் வரிகள் உண்மை. 101 என்பார்கள் ஆனால் ஒரு ரூபாய் இருக்காது. இது மாதிரி பலரும் செய்வதால் எப்படியும் ஒரு இருபது அல்லது முப்பது ரூபாய் குறையும். கையில் இருப்பதைப் போட்டுக் கொடுத்த அனுபவம் எனக்கு இருக்கு. நன்றி
எப்பிடி ஜே....நானும் இன்று அப்பா ஞாபகத்திலதான் ஒரு பதிவு போட்டேன்.அப்பாக்கள் தினமா இன்று !
அருமையான கதை ஜே.
பெரியவர்களைப் பெருசுகள் என்று கிண்டல் பண்ணினாலும் அவர்கள் வழிகாட்டல் அப்பப்போ தேவைப்படுகிறது.
அழகான பதிவு!!
அழகான கையெழுத்து. பதிவும் அருமை
//"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" //
டச். நச்.
உங்க மேல கோபம் கோபமா வருது மாம்ஸ்.இவ்வளவு நல்லா எழுதுற நீங்க அடிக்கடி எழுத மாட்டிங்களேன்னு.
(ஆமா அந்த கையெழுத்து ஏதோ ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கே. அப்பா கையெழுத்து இதை விட நல்லாயிருக்கும் என்று நினைக்கிறேன்)
அன்பு ஜெகனாதன்,
அழகான பகிர்வு... தகப்பனைப் பற்றி பேச யாருக்குமே அலுக்காது என்று நினைக்கிறேன். ரொம்ப அழகான நடை.
தொடர்கிறேன்.
அன்புடன்
ராகவன்
ரொம்ப அற்புதமா வந்துருக்கு!
மேலும் கலக்குங்க. ஐம்பதிற்கு வாழ்த்துகள் தம்பி. இதைக் கொண்டாட உங்க ஸ்பெஷல் இடுகை ஒண்ணு போட காலடியின் தீ.அதி தீ. ரசிகர் சங்கத் தலைவர் (ஸெ. பு.) வேண்டி விரும்பிக் கேட்டுகிறேன்.
அன்பு அகநாழிகை, பெருமையாகவும் மனமகிழ்வாகவும் உணர்கிறேன். மிக்க நன்றி!
அன்பு ராஜு,
அதுதான் மொய்ப்பதிவர் தர்மம். நன்றி!
இனிய பத்மநாபன்,
எதுவும் போதிக்காமலேயே பாடம் நடத்திவிடுகிறார்கள் அப்பாக்கள். எதுவும் ஓதாமலேயே பாடம் பதிந்தும் விடுகிறது வாரிசுகளிடம். அதுதான் படிப்புன்னும் தோணுது.
நன்றிகள்!!
அன்பு சங்கர்,
கணிப்பு கச்சிதம்.
உப்புக்கடலைக் குடிக்கும் பூனை வாசித்த பாதிப்பு :))
@ T.V.ராதாகிருஷ்ணன்
உற்சாகமூட்டியதற்கு ரொம்ப நன்றிங்க!!
@ முகிலன்,
படத்திலிருப்பது அப்பாவின் கையெழுத்தல்ல. ஒரு யுனிகோடு ஃபான்ட். அப்பாவின் கையெழுத்தை படமாக்க முடியவில்லை. மிக்க நன்றி முகில்!
அன்பு அண்ணாமலையானுக்கு நன்றிகள்!
@ கலா,
நல்லா சொல்லியிருக்கீங்க. ஊற்றுக்கண் போல நம்மையும் அறியாமல் அப்பாவின் குணாதிசயங்கள் உருவாகின்றன.
நன்றி!
@ பித்தன்..
உண்மையே. மொய் எழுதுவதில் இந்த பிரச்சினையுண்டு. நானும் சில திருமணங்களில்மொய் எழுதியிருக்கிறேன். பதிவர் தர்மத்தை நினைத்துக் கொண்டு எழுதிவிடுவது.
இதுவரைக்கும் கைக்காசு போட்டுக் கொடுத்ததில்லை. பகிர்வுக்கு நன்றி!
@ ஹேமா,
அப்பாவைக் கொண்டாட தனியாக ஒரு நாள் வேணுமா என்ன? எப்பவும் அப்பாக்கள் அம்மாக்கள் குழந்தைகள் தினம்தான்.
நன்றி!
@ Mrs.Menagasathia
மிக்க நன்றி!!
@ சின்ன அம்மிணி
மிக்க நன்றிங்க!!
@ மாப்ஸ் அக்பர்,
நிச்சயமா! இனி தொடர்ந்து எழுதி எதிர்பார்ப்புகளை (மொக்கை to எலக்கியம்) நிறைவேற்றுகிறேன். நன்றி!
@ ராகவன்,
அன்பு ராகவன்,
மிக்க மகிழ்ச்சி..நெகிழ்ச்சியும் கூட! நன்றிகள்!
@ சங்காண்ணன்,
அன்பு அண்ணா, நீங்க ஒருத்தர்தான் கரெக்டா 50வது பதிவுக்கு 'ட்ரீட்' கேட்டிருக்கீங்க. I guessed it.
நிச்சயம்கொண்டாடுவோம். நன்றிங்ணா!
எள்ளு தாத்தாவின் ஏதாவது ஒரு ஜீன் கூட நமக்கு இருக்கும்போது அப்பாவின் தாக்கம் இருக்கத்தானே செய்யும்.
நெகிழ்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
விஜய்
நடை அழகாக இருக்கிறது.
முடித்த விதம் மிகவும் அருமை.
"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது"//
பிடித்திருந்தது ... அப்பாவின் நேர்மையும்... உங்க பதிவின் நெகிழ்வும்.
மொய் மையமிட்டு கல்யாண்ஜியின் கதை ஒன்று உண்டு . அதையும் எனது ‘ராஜ குமாரியின் ரசிகனையும்’ ஒரு அலாதிப் புள்ளியில் இது இணைக்கிறது. கருப்புசாமி தநாமிவா-வின் கையெழுத்தை ஸ்கேன் செய்து போட்டிருக்கலாம்...பெரிதினும் பெரிது எப்போதும் கேட்கவேண்டியதுதானே...
அழகான கையெழுத்து உங்கள் அப்பாவிற்கு.அழகான பதிவு.இரண்டும் ரசிக்கும் படி இருந்தது.
மாம்ஸ் உங்களை தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.
http://sinekithan.blogspot.com/2010/02/blog-post_27.html
அன்பு விஜய்,
மிக்க நன்றி! நிறைவாய் இருக்கு மனசு!
மாப்ள ஏனாஓனா,
மகிழ்ச்சி! கல்யாண வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?
மிக்க நன்றி கருணாகரசு..
நாம் அடுத்தவருக்கு கொடுக்கும் அழியாதபோட்டோ நம்முடைய நேர்மைதானே? அப்பா ஞாபகமும் அப்படித்தான் இருக்கு என்கிட்ட!
அன்பு சிவாண்ணா,
மிகவும் நெகிழ்ச்சி. உப்புக்கடலைக் குடிக்கும் பூனையின் நகத்தடங்கள் என் எல்லா எழுத்திலும் தற்சமயம் நிரம்பிக் கிடக்கின்றது.
தாக்கம் ஒரு அருகாமையை உணரச்செய்கிறது. நன்றிகள்!
அன்பு மின்னல்,
வருகைக்கு நன்றி! மிக்க நன்றி!
Post a Comment