Wednesday, March 3, 2010

பெண்களுக்குப் பேராபத்து..

டைம்ஸ் ஆப் இந்தியா, பெங்களூர் பதிப்பு, 16 பிப்ரவரி 2010 நாளிதழின் முதல் பக்கத்திலிருந்து..


'கணவர்கள் அல்லது​சொந்தங்களே குற்றங்களுக்கு காரணம்' என்ற தலைப்பில் வந்த இந்த செய்தியைப் படித்த யாவரும் பெங்களூர் பெண்கள் பாவம் என்ற முடிவுக்கு வருவார்கள். செய்தியும் படமும் அதிலிருக்கும் புள்ளிவிபரமும் (தகவல் ஆதாரம் State Crime Records Bureau (SCRB) என்று குறிப்பிடப் பட்டுள்ளது) அப்படி..!

அப்படியா?

மேற்கண்ட படத்தை நீங்களும் உற்றுப்பாருங்கள்.
1. முதலில் உங்கள் கண்ணைக் கவருவது பெல்ட்டால் அடிபடும் பெண் படம்

2. அடுத்து அதன் ப்ளூ ப்ளூ பட்டைகளாத் தெரியும் அட்டவணை (ப்ளூட்டவணை?)

3. இன்னும் கொஞ்சம் 'தம்' கட்டினீர்களேயானால் மேல் வலது மூலையில் இருக்கும் இன்னொரு அட்டவணையையும் காணலாம்.

அட்டவணைப் படுத்தப்பட்ட எண்கள் யாவுமே புள்ளிவிபரங்கள்தான் என்ற ​தெளிவு நம் நாட்டில் உண்டு. நாமும் அதை அப்டியே பின்பற்றுவோமாக.

ஆனால்?

செய்தித்தாள் வெளியிட்ட படத்தில் நிறைய அபத்தங்களும், தகவல் பிழைகளும் நிறைந்திருக்கின்றன. அவை:

1. புள்ளிவிபரம் அழுத்தமான பின்ணணி வண்ணத்தில் (ஊதா) ​கொடுக்கப்பட்டிருப்பதால் எண்களை எளிதில் படிக்க முடியாதது

2. பெல்ட்டால் அடிக்கப்படும் பெண்ணின் படம் அட்டவணை அளவுக்கு​நிறைய இடம் பிடித்துக் கொண்டிருப்பது

3. ப்ளூட்டவணையில் Crime (குற்றம்) என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் வலதுகோடியில் இருக்கும் அட்டவணையில் No. of Cases (குற்றப்பதிவுகள்) என்றிருக்கிறது. குற்றமும் குற்றப்பதிவும் ஒன்றா??

4. வெறும் எண்களால் நிரப்பட்ட நெருக்கமான அட்டவணையை எளிதில் ஒப்பீடுகள் செய்யமுடியாதது

சரி. நாம் அதை ஒப்பீடு பார்த்தால் என்ன? இப்படி:

1. முதலில் ப்ளூட்டவணையின் நீலச்சாயத்தை வெளுப்போம் (டும் டும் டும்). அட்டவணையின் பின்ணணி வண்ணத்தை மென்மையாக்குவோம். இப்போது படிக்க எளிமையாகிறதல்லவா?


இதுபோல் தேவையற்ற வண்ண ஆதிக்கத்தை அட்டவணையில் ஏற்படுத்தியது செய்தித்தாளின் முதல் தவறு.

2. செய்தியில் கொடுக்கப்பட்ட அதே புள்ளிவிபரத்தை வரைபடங்களாக்கினால் (Graphs) புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். ஒவ்வொரு குற்றத்தின் வருடரீதியான ஏற்ற இறக்கங்களை காண்பிப்பதே பின் வரும் வரைபடங்களின் நோக்கம்.

3. வரைபடத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கொடுக்கவில்லை. ஒப்பீடு ​செய்வதற்கு வரைகோடுகள் மட்டும் இருப்பது எளிமையாக இருக்கும் என்பதனால். தெளிவுக்காக இரண்டு க்ராஃப்களாகப் பிரித்திருக்கிறேன்.

5. வரைபடங்களில் அனைத்து குற்றங்களும் ஏறுமுகமாய் இருக்கின்றன, கொத்தடிமைத்தனத்தை (trafficking) தவிர. ஏன்? குற்றங்களைப் பதிவு செய்யும் விழிப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. விழிப்புணர்ச்சி இன்னொரு விளைவாக trafficking வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

7. செய்தித்தாள் இதை HARD TIMES என்று சொல்வது அதீதமாக / அபத்தமாகப் படவில்லையா?

8. இன்னொரு பெருந்தவறு செய்திருக்கிறார்கள். அவர்களே கொடுத்திருக்கும் ப்ளூட்டவணையில் உள்ளதைக் கூட்டிப் பார்த்தால் வரும் கூட்டுத்​தொகைக்கும், வலது மூலையில் கொடுத்துள்ள பட்டியலுக்கும் ஏக வித்யாசம்.

முடிவாக..

  1. செய்தி ஊடகங்கள் சரியான தகவல் காட்சிப்படுத்தலை (data visualization) வடிவமைத்தலைக் கையாள வேண்டும்
  2. பெங்களூர் (இன்னும்) பெண்களூர்தான்!

Friday, February 19, 2010

பதிவர் தர்மம்



மாட்டுவண்டியின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் புரட்டிப் ​போடுகிறது.

த.நா.மி.வா (தமிழ் நாடு மின்சார வாரியம்) ஊழியருக்கு அதிகப்படியான அழகான கையெழுத்து அப்பாவுக்கு. தநாமிவா என்பதின் இருப்பு எங்கள் வீட்டில் ஒரு திடப்​பொருள் ​போல உணரமுடிந்திருக்கிறது. இப்போதும் தநாமிவா என்று காதில்விழுவது என்னை அழைப்பது போலவே ஒலிக்கிறது.

அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். மின்பாதை வரைபடங்கள், அலுவல் குறிப்புகள், நழுவல் குறிப்புகள்(லீவ் ​லெட்டர்) எழுதுவதற்காக மை அவர் பேனாவிலிருந்து ஆவியாகிவிட்டது.

முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கு வருடம் தவறாமல் நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 50 வாழ்த்து அட்டைகளாவது எழுதி அனுப்பிவிடுவார். வாழ்த்து அட்டைப் பரிமாற்றம் காதலர்களுக்கு மட்டும் ​போதும் என்று அச்சுக்கடவுள் நி​னைத்துவிட்டார் போல. இப்போது பொங்கல், புத்தாண்டு, தீபாவளி வாழ்த்து அட்டைகள் பார்க்க கிடைப்பதில்லை. செல்போன்களால் வாழ்த்து அட்டைகள் தங்கள் தொடர்பு எல்லைகளை இழந்துவிட்டன. செல்போன் குறுஞ்செய்திகளாக வாழ்த்துகள் பைனரி வடிவத்தில் ஸ்டாம்ப் ​ஒட்டப்படாமலேயே கிடைக்கிற இந்நிலையில் அப்பா கொஞ்சம் ​கையறு நிலையில்தான் இருக்கிறார். தற்சமயம் கிடைக்கிற ​பேப்பர்கள், பத்திரிக்கையில் அரிதாக கிடைக்கிற சில வெண் தீவுப்பரப்புகள், அழைப்பிதழ்களின் பின்னட்டைகள், கோவில் கணக்கு, தகவல் கோரும் விண்ணப்பங்கள் என்று கையெழுத்தைப் பதியம் செய்ய​வேண்டியதாயிருந்தது.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு பார்வர்ட்டாக அனுப்புகிற கடிதங்களின் உறையில் மீண்டும் அப்பா எனக்குக் கிடைக்கிறார். குறைந்தது இரு வர்ண எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது அதில். ​​பெறுநர், அனுப்புநர் முகவரியும் அதற்கு இடையில் சாய்த்து விழுகிற இரட்டைக் கோடுகளையும். இவற்றைத் தவிர வரையவோ எழுதவோ சாத்தியமற்ற கடித உறைகளை அப்பா ஒருகணம் நொந்திருக்கக் கூடும். ஆடிய பாதம் எழுதிய விரல்கள்!

திருமண, காது குத்து, திரட்டி விழாக்களின் ​மொய் ​நோட்டுக்களில் அப்பா நிரம்பியிருக்கிறார். நிரம்பிக் ​கொண்டிருக்கிறார். ​முடிவுறா மொய்க்கணக்குகள் ​கைங்கர்யத்தில் உறவின் விழுதுகள் எல்லையற்று நீண்டு​கொண்டேயிருக்கின்றன. வந்த அடையாளத்தையும் பந்த அடையாளத்தையும் ​ரூ.51, ரூ.101.. என மெய்ப்பிக்கும் ​பொருட்டில் மொய் நோட்டுகள் ஒரு வங்கிக்கணக்கின் அனுசரணையோடு இருக்கின்றன.
அப்பா திருமண விழாக்களில் உணவுக்குக் கூட ​செல்லாமல் மெய் வருத்தி மொய் எழுதிக் ​கொண்டிருப்பது அநேக தடவைகள் பார்த்ததுண்டு. செய்நேர்த்தி கூடிய வைபவமாக மொய் எழுதிக்​கொண்டிருக்கும் சமயங்களில் அப்பா எனக்கு ​வேறு நபராகத் ​தோன்றுவார். ​வேகமாகப் பதியப்படும் எழுத்துகள் உறவுச்சங்கிலியின் நிழற்படம் போலவும் தோன்றுகிறது. ​​
அப்பாவின் ​கையெழுத்து
அழகுதான். எத்தனை வேகமாக எழுதினாலும் அதன் சீர் குலைவதில்லை.
மொய் மொய்ச்சீர் ஆவது இப்படித்தானோ?

​விழா மண்டபத்துக்கு வரும் கடைசிச் சொந்தம் வரைக்கும் காத்திருந்து மொய் எழுதும்பணி கால உத்தேசமற்றதுதான்.
அப்படியொரு கூட்டம் தளும்பி வழிந்து தீர்ந்த பொழுதில் அப்பா எழுதி முடித்த ​மொய்ப்பணத்தை எண்ணிக் ​கொண்டிருந்தார். பக்கத்தில் நோட்டுகளை எண்ணிக் ​கொண்டிருந்த சுந்தரம் மாமா அப்பாவிடம்,
"
மாமா, பணம் குறைவா இருக்கும் ​போலிருக்குதே" என்கிறார்.
​நோட்டுகளை எண்ணிக்​கொண்டே அப்பா
,

"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட ​போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். அப்போது அப்பாவும் அழகாகத் தெரிந்தார்.

Sunday, February 14, 2010

அம்மிணி அன்போட குப்புனு


To: அம்மிணி@ஜி​மெயில்.காம்

அன்னைக்கு நீ 7அப் கேட்டப்ப நான் போகமுடியாதுன்னு சொன்னேன். நீ திரும்ப திரும்ப கேட்டே. நானும் முடியாதுன்னு சொல்லிட்டு கம்ப்யூட்டரை பாக்க ஆரம்பிச்சிட்டேன். இருந்தாலும் மனசு கேக்கலே. போயி வாங்கிட்டு வந்து கொடுத்துருவோம்னு கெளம்பிட்டேன். அப்ப நான் வெறும் பெர்முடாஸ் மட்டும்தான் ​போட்டிருந்தேன். அது வேற சரியான லூஸு பெர்முடாஸ். தலைக்கு நிறைய எண்ணெய் வச்சு நீதான் மஸாஜ் பண்ணி விட்டிருந்தே. முடியெல்லாம் கோணல் மாணலா தூக்கிட்டு நிக்குது. மூஞ்சில எண்ணெய் வழியல் வேற.


பரவாயில்ல, நைட் நேரந்தானே பக்கத்திலதானேன்னு வாங்க போனேன். நம்ம வீட்டுக் கடை பூட்டியிருந்தது. சரி, ஐஸ்க்ரீம் ஆண்டி கடை பக்கம்தானே, அப்படியே போயி வாங்கிட்டு வந்திருவோம்னு போனா அதுவும் பூட்டிக்கிடக்கு. பேசாம வீட்டுக்கே போயிடலாமான்னு நெனச்சேன். இருந்தும் ஏதோ ஒரு உந்துதல். மெயின் ரோடு ஜுஸ் கடையில கண்டிப்பா இருக்கும், வாங்கிட்டே வந்துடலாம்னு கெளம்பினேன். லூஸ் பெர்முடாஸோட எப்படி போறது? அங்க வேற கூட்டமா இருப்பாங்களேன்னு பலதயும் யோசிச்சுகிட்டு, பெர்முடாஸ் பாக்கெட்ஸ்ல கைய விட்டு லைட்டா தூக்குனாப்ல புடிச்சுக்கிட்டே ஜுஸ் கடைக்கு போயிட்டேன்.


போயி, 7அப் கொடி-ன்னு கேட்டா, அங்க இருக்கிறவன்.. நிதானமா ஜுஸ் போட்டு, வெளியில சேர்ல உக்காந்திருக்கிறவங்களுக்கு கொடுத்துட்டு வந்து... என்ன வேணும்னு கேட்கிறான். பெர்முடாஸ் பாக்கெட்ல இருந்து கைய வெளிய எடுக்காம 7 அப் கொடின்னு திரும்பவும் கேட்டேன். கடையில அப்ப நல்ல கூட்டம். ​பொண்ணுங்க வேற உக்காந்திருக்காங்க. நான் ஒருத்தன் தான் இந்த மாதிரி தலைவிரி கோலமா, எண்ணெய் வழிய, லூஸ் பெர்முடாஸோட நிக்கிறேன்.

அப்புறம் ஏன் இவன் 7அப் வாங்காம வந்தான்னுதானே நினைக்கிறே? சொல்றேன்.

கடைக்காரன் ப்ரிட்ஜ்ல இருந்து அரை லிட்டர் 7அப் எடுத்துக் கொடுத்தான். லைட் கூலிங்தான். கையில 25 ரூபா இருந்தது. பாட்டில் விலை ரூ.20ன்னு போட்டிருந்தது. சரின்னுட்டு 20 ரூபாய அவன்கிட்ட கொடுத்துட்டு பாட்டிலை எடுத்துட்டு திரும்பினேன். கடைக்காரன் என்னைக் கூப்பிட்டு "இன்னு 2 ரூபா கொட்றி" அப்பிடின்னா. நான் பாட்டில் போட்டிருக்கிற ரேட்டைக் காமிச்சு "யாக்கே?" ன்னு கேட்டேன். அவன் ப்ரிட்ஜ், கரெண்ட் சார்ஜ் ​ரேட்டெல்லாம் சேத்து 22ரூபாய்ங்கிறான். எனக்கு கடுப்பாயிடுச்சு. "ஓகே. கூலிங் பேடா. வார்ம் கொடி" ன்னு ​கேட்டேன். அதுக்கு கடைக்காரன் "வார்ம் 7அப் இல்லா" அப்படின்னுட்டான். கடையில ஜுஸ் குடிக்கிறவங்க எல்லாம் என்னையவே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஞாயிற்றுகிழமை, ஏதாவது சண்டை ஏதும் நடக்குமான்னு பாத்திருப்பாங்க போல.

எனக்கு 2 ரூபாய் அநியாயத்துக்கு கொடுக்க பிடிக்கலே. அது ஒரு ஏமாத்து வேலைன்னு தோணுது. சரி விடுன்னுட்டு, திரும்பவும் பெர்முடாஸ் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு, எதுவும் வாங்காம வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பயும் சிவானந்தா சர்க்கிள்ட்ட போயி ஒரு 7அப் வாங்கிட்டு வந்துடலாம்னு ​நெனச்சேன். லூஸ் பெர்முடாஸ விட அலங்கோலமா தூக்கிட்டு நிக்கிற முடிதான் என்னை ​போக வேணாம்னு தடுத்திருச்சு. அதவிட முக்கியமா, அந்தக் கடையிலயும் இந்த மாதிரிதான் 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டு ஏமாத்துவாங்கன்னு தோணிருச்சு. ​

இவ்வளவு தூரம் பெர்முடாஸோட, எண்ணெய் தலையோட வந்து, எதுவும் வாங்காம போறோங்கிற ஏமாற்றமும்...... ஒரு 7அப் ப்ரிட்ஜ்ல வெச்சிருக்கிறதுக்கு, கரண்ட் பில் 2 ரூபாய்ன்னு ​கொள்ளையடிக்கிறாங்களேங்கிற ஆத்திரமும் சேர்ந்துதான்....... நான் அன்னிக்கு உங்கிட்ட எரிஞ்சு விழ ​வேண்டியதா போச்சு. மோசமாவும் நடந்துக்கிட்டேன். அது என் தப்புதான்.

உன்கிட்ட சண்டை போட்டு முடிச்சதும் நான் பண்ணின காரியம் பெப்ஸிகோ (7அப் தயாரிக்கிறவங்க) கம்​பெனிக்கு இப்படி ரெண்டு ரூபாய் எக்ஸ்ட்ராவா வசூல் பண்றாங்கன்னு மெயில் பண்ணிட்டேன்.

உங்கிட்ட அப்பவே சமாதானம் பேசியிருக்கலாம்.. ஆனா சமாதானம் பேசப் போயி அது உன்னை இன்னும் ​டென்ஷனாக்கிடுமோன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டேன்.

சரி.. இந்த கோபத்தை என்னதான் பண்றது? எனக்குத் தெரியலே. போன்னு தூர தள்ளிவிட்டாலும் கூடவே வருது கோபம். கோபம் மேலயும் எனக்குக் கோபமா வருது.

புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே.

என்ன பண்றதுன்னு தெரியலே.

இப்படிக்கு,

குப்புனு@ஜி​மெயில்.காம்


டிஸ்கி:

உண்மையாகவே அம்மிணிக்கு எழுதிய ஒரு ஈமெயில் இதுங்க. சில வரிகளை நீக்கியதைத் தவிர எதுவும் திருத்தம் செய்யாததுங்க. தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை. ​சொல்லாத தாகத்​தைவிட தீராத தாகம்தான் ​ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? வாலன்​டைன்ஸ் ​டே வாழ்த்துங்க!