Wednesday, July 22, 2015

ஒரு நிலக்காட்சி ​செத்துப்​போனது

Kaladi Jagan

தெண்டபாணி மாமா இறந்து விட்ட தகவல் அப்பாவிடமிருந்து கிடைத்தது. மாமா எனக்கு 5 வருடங்கள் மூத்தவர். இந்த வருட இடைவெளியோடு அவரது மரணத்தை நினைத்துப் பார்க்கும் போது வித்யாசமான துயரம் தாக்குகிறது. கூடவே, குடியால் செத்தவர்கள் நிறைய பேர் நினைவுக்கு வருகிறார்கள்.
மாமா இப்போது இறந்திருக்க வேண்டியதில்லை. மனைவி, 7 மற்றும் 5 வயதுகளில் இரு மகன்கள் என வாழ நிறைய சங்கதிகள் அவருக்காக காத்திருந்தன.

எக்கணமும் தெண்டபாணி செத்துப் போகலாம் என்ற தகவலையே சொந்தங்களும் நண்பர்களும் தெரிவித்தவாறு இருந்தன. அவரிடம் பேசவும் கேட்கவும் என நிறையவுண்டு; நெடிய ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்காலும் என தேங்கி விட்ட நிலக்காட்சிப் போன்ற உரையாடல். தமது உரையாடலை ஒரு நிலக்காட்சியாக நினைவூட்டும் நபர்களில் மாமாவுக்கும் ஒரு இடமுண்டு. அவர்கள் உயிருடன் இருக்கும் வரை ஓவியத் தெளிவாகவும் செத்தபிறகு மனதை பிசையும் இசையுமாக ஆகிறார்கள்.

சாவதற்கு சில தினங்கள் முன்பு சென்று பார்த்து விட்டு வந்த அம்மா சொன்னது: அவன் உருவம் ஒரு குழந்தை அளவுக்காக சிதைந்து விட்டிருக்கிறதாம். வெறும் பழச்சாறு மட்டும் உட்செல்கிறதாம். அதுவும் பெரிய பாட்டிலாயிருந்தால் தூக்கிக் குடிக்க முடியாது என சிறு பாட்டில்களாய் வாங்கி கொடுக்கப்படுகிறதாம்.

எப்போதோ மாமா சொன்னது: கிராமத்தில் அரசு மருத்துவ குழாம் ஆரோக்கிய குழந்தைகளுக்காக நடத்திய போட்டியில் பரிசு வென்ற கொழுகொழு கிராமத்துக் குழந்தையாம் அவர். வருடங்களுக்கு முன்பு பார்த்தவரை அதற்கான அடையாளங்கள் கொண்டவராகவே இருந்தார். ஆல்கஹாலில் உருகும் வரை அப்படித்தான் இருந்தார்.

திருமணம் எப்போதும் சில கதவுகளைத் திறக்கவும் பல ஜன்னல்களை மூடவும் வைக்கிறது. மாமாவுக்கு அப்படி மூடிய அல்லது மூடப்பட்ட ஜன்னல்களில் நண்பர்கள் மற்றும் சில சொந்தங்களும் மறைய வேண்டியதாயிற்று. அரசு வேலையும் ஆல்கஹாலுமாக புதுக் கதவுகள் தாமே திறந்து கொண்டன.

குடிப்பார்.. குடிப்பதால் எழும் சிந்தனையூக்கங்களை ஆச்சரியத்துடன் பார்ப்பார்.அதன் பிறது பேசுவதெல்லாம் தத்வார்த்தமாக, தன்னை மீறி கொப்பளிக்கும் பேரறிவு ஆளு​மையாக உருவகித்துக் கொண்டார். அந்த சிந்தனைகளை எழுப்பும் திறன் இத்திரவத்திற்கு மட்டுமே உண்டு என்றும் நம்பத்தொடங்கினார். படிப்படியாக தன் இயல்புகளிலிருந்து கழன்று நிற்கும் தனது குடி-மனிதன்தான் தன்னினும் சிறந்த அறிவாளி என அதை தீவிரப்படுத்த முனைந்தார். ஆனால் அவரே அறியாமல் குடி-அறிவாளி பிம்பத்தை அடித்து நொறுக்கி பிறர் புகழ்ச்சிக்கும் பிறகு இரக்கத்திற்கும் ஏங்கும் குடி-உத்தமன் முன் வந்து நின்றான்.

சுயஇரக்கத்தை விட நேசிப்புக்குரிய புண் வேறு எதுவும் இருக்கமுடியாது. ஒரு நோய்த்தன்மையுடன் மாமா தன்னை ஒரு குடி-உத்தமனாக உலகத்தின் முன் நிறுவிக் கொண்டார் எனப்படுகிறது. முழுச்சம்பளத்தையும் டாஸ்மாக்கில் கரைப்பது; தனியாளாக கடைக்குள் சென்று புதுப்புது நண்பர்களை உற்பத்தி செய்து கொள்ளவதும் சாத்தியமாயிற்று. யாருக்கும் சாத்தியப்படாத இரவும் நட்பும் செலவும் அவருக்கு இயல்பாகின.

குடியர்களுக்கு காலை வெளிச்சம் எப்போதும் பதட்டமானது. தான் போதையில் செய்த ஆட்டங்களை பிறர் சொல்ல கேட்க மனம் நொறுங்கிப் போகும். தம் போதை தவறுகளை களைவதற்காகவே சிலர் முழு நேரக் குடிக்கு அடிமையாகிறார்கள். மாமாவை எது ஆட்கொண்டது என தெரியவில்லை.. அதை தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.

கடைசியாக அவரிடம் பேசியது நினைவுக்கு வருகிறது:

நான் ஊர் சென்றிருந்த ஒருநாள். காலை 7 மணியளவில், ஒரு ஷட்டர் மூடப்பட்ட கடை வாசலில் அமர்ந்து பேசினோம்.. அப்போதே குடித்திருந்தார். மீதி சரக்கு தன் யமஹா வண்டியில் இருக்கிறது என்றார். கைகளில் கன்னங்களில் சிராய்ப்புகள். புதுக்காயங்கள் போல - ஏறு​வெயிலில் ரத்தம் மினுங்கியது. ஏன் என்று கேட்டதற்கு அதற்கு முந்திய இரவு குடியில் வீடு திரும்பும்போது சறுக்கியிருக்கிறார். அருகிலிருந்த யமஹா உண்மையென்றது.
'நான் சாப்பிடறதே இல்லடா.. காலையிலிலேயே குடிக்க ஆரம்பிச்சிரதுதான்.. என்ன பண்ண?'
'ஏன் இப்படியிருக்கீங்க.. குழந்தைகளை நினைச்சுப்...'
உக்கிரமாக சிகரெட்டை இழுத்தவாறு
'எங்கே? எல்லாம் அவ்வளவுதான்.. என் வேலை அவங்களைக் காப்பாத்திரும்டா.. பதினெட்டு லட்சத்து வீடு கட்டியாச்சு.. அதவிடுடா..'
'ஆபிஸ்ஸாவது போறிங்களா?'
'என்ன எவண்டா கேள்வி கேட்பான்? டியிஓ-விலிருந்து ட்ரெஷ்ஷரி வரைக்கும் நான் சொன்னா எது வேணாலும் செய்வாங்க. தெண்டபாணி பைல் வொர்க் பர்பெக்ட்டுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆபிஸ் ஒரு மேட்டரேயில்ல'
சட்டென்று எழும்பி வண்டி முன் சீட் கவரிலிருந்த சிறு புட்டியை உருவினார்.
'மாமா.. வேணாம் இப்பவே குடிச்சிருக்கீங்க.. வைங்க'
'ம்.. அப்படிங்கிறியா? ரைட்டு. சரி வா போவோம்'
'ஆமா காலையில எதுவும் சாப்பிடலியா?'
ஒரு மாதிரியாக ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்.  அதுதான் மாமாவுடனான க​டைசி உ​ரையாடல் என நி​னைக்கி​றேன்.
அதற்கப்புறம் தெளிந்த நிலைக்கு வரவே கூடாது என்பது போல குடித்துக் கொண்டேயிருந்தார். ஊர் சென்ற போதேல்லாம் அவரைப் பார்க்க முடியவில்லை அல்லது பார்க்க எனக்குப் பதற்றமாயிருந்த​தோ?

எனக்கு வந்து சேர்ந்த செய்திகள் எல்லாவற்றிலும் அவர் குடித்துக் கொண்டேயிருந்தார்.. காயங்கள் சம்பாதித்துக் கொள்பவராக இருந்தார். குடும்ப அமைப்பிலிருந்து விலகியவராக, பணியிலிருந்து நீண்ட விடுப்பு, பணமுடை, குடிக்காக மற்றவரிடம் கையேந்துபவராக இப்படிப்பட்ட மாமாவைத்தான் அனைவரும் முன்வைத்தனர்.

அப்போதெல்லாம் நீண்ட நிழலாக ஒற்றையடிப் பாதையும் உடன் வரும் வாய்க்கால் என்ற நிலக்காட்சியை நினைவிலிருத்தப் பாடுபடுவேன். மீண்டும் மாமாவுடனான ஒரு உரையாடல் அதை மீட்டுக் கொடுக்கும் என நம்பினேன்.

அந்த உரையாடல் நடைபெறவேயில்லை.

இப்போது மாமா குடிக்கும் சிந்தனைக்குமான தொடர்பை தப்பர்த்தம் செய்து கொண்டு செத்தவர்கள் பட்டியலில் ஒருவராக சேர்ந்தும் கொண்டார்.