Tuesday, February 25, 2014

ஸென்-னும் கூட இரு ஜென்மங்களும்


முதலில் ஒரு உண்மையான ஸென் (ZEN):

தொழிற்சாலையின் ஒரு முக்கியமான இயந்திரம் இயங்க மறுத்துவிட்டதாம். அதைப் பழுதுபார்க்க ஒரு வல்லுநரை வரவழைக்கப்பட்டார். மேம்பட்ட ஆடைகளும் சிறப்பானதொரு பெட்டியுமாக வந்திறங்கினார் வல்லுநர். ஆலையினுள் உருட்டிவிடப்பட்ட எலுமிச்சம்பழம் போல் சென்றார். ஒரு சிறு சுத்தியை எடுத்துக் கொண்டார். பழுதுப்பட்ட இயந்திரத்தின் மேல் லேசாக ஒரு தட்டுத் தட்டி, 'ம்.. இப்ப இயக்குங்கள்' என ஏவினார். சுவிட்ச் தட்டப்பட்டதும் இயந்திரம் ஜோராக இயங்கித் தொடங்கிவிட்டது. நிறுவனத்தினருக்கு மெத்த மகிழ்ச்சி. வேலை சுலபமாக ஒரே நொடியில் முடிந்து விட்டதே என்று.

வேலைக்கான கட்டணம் எவ்வளவு என்று கேட்டதற்கு.. ஒரு லட்சம் என்றாராம் வல்லுநர். நிர்வாகத்தினருக்கு வயிற்றுக்குள் எலுமிச்சம்பழம் உருட்டிவிட்டது போலாகி விட்டது. 'சுத்தியலை எடுத்து சும்மா ஒரு தட்டு தட்டியதற்கு ஒரு லட்சமா' என்றதற்கு,

அவர் சொன்னது: 'தட்டியதற்கு இல்லை.. எந்த இடத்தில் தட்ட வேண்டுமோ அங்கு தட்டியதற்குதான் ஒரு லட்சம்'

இப்போது ஒரு வெண்மையான ஸென்:

சிவாவுக்கு கார் வாங்க ஆசை வந்தது. பெங்களூரின் அதிமுக்கிய சாலையோரத்தின் ஸிடி கடைக்குச் சொந்தக்காரர். அரைவட்டமாக அமைக்கப்பட்ட ஒரு லிப்ட் போன்ற அமைப்புள்ள மரத்தினாலான சுவருகளுடைய சிறு அறையது. அனைத்து இந்திய மொழிகளும், ஆங்கில மொழியும் அவரது கடையின் அலமாரியில் வட்ட சதுரமாக மினுக்கும். வீட்டில் டிவி-இருப்பதாலும், டிவிடி-கள் அத்தியாவசியமாக இருப்பதாலும் சிவாவும் நம் வாழ்வில் அத்தியாவசியமாகிறார்.

ஸிடிக்களால் பழக்கமாகிவிட்டிருந்த என்னை கார் வாங்க அழைத்துக் கொண்டார். கார் என்றால் பழைய கார் அல்லது ஏற்கனவே பக்குவப்படுத்தப் பட்ட வாகனம்.

என்னிடம் ஓட்டுநர் உரிமம் மட்டுமே உண்டு.. 1998ல் ஸ்டீரிங்-க்கு கீழேயே கியர் மாற்றி உள்ள (column mounted gear shift) அம்பாஸிடரை கடினப்பட்டு இயக்கி உரிமச் சான்றிதழைப் சம்பாதித்திருந்​தேன்.அன்று விட்ட ஸ்டீரிங் அதற்கப்புறம் கைப்பற்றும் வாய்ப்பு வரவேயில்லை. மேற்படி சம்பவம் நடைபெற்றதோ கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து. கியர் மாற்றிகள் வேறு வடிவங்கள் பெற்றுவிட்டன. நானும் கம்ப்யூட்டரில் வீடியோ கேம்களில் மட்டும் கார் ஓட்டுபவனாக உலகையும் மக்களையும் காப்பாற்றிக் கொண்டிருந்தேன். இப்பின்னணியை முழுமையாக சொல்லியும் சிவா நான் உடன் வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

'பாஸ்.. நீங்க சும்மா வாங்க. நானே ஓட்டிக்கிறேன். என்ன? எனக்கு லைஸன்ஸ் கிடையாது.. அதுதான் உங்களது இருக்கே!'

என்னே சாமார்த்தியம்! சிவா காட்டிய அவசரத்தைப் பார்த்தால் நாளை முதல் கார் உற்பத்தியே நின்று விடுவதுபோல இருந்தது. நம்மை நம்பியும் ஒரு மனுஷன் எனத் தெம்பாகவும் இதமாகவும் இருந்தது. மறுநாள் - சனிக்கிழமை. தேர்ந்தெடுத்த நல்ல உடுப்புகளாகப் பார்த்து அணிந்து கொண்டு ஓட்டுநர் உரிமத்தையும் எடுத்துக் கொண்டு ஸிடி கடைக்கு சென்றேன். பின் வாகனம் வாங்குமிடத்திற்கு ஆட்டோவில் சென்று இறங்கினோம்.

அதுவொரு ஊர்திப் பணிமனையாக இருந்தது. பல வண்ணங்களின் பழைய வாகனங்கள் தூய்மையாக நின்று கொண்டிருந்தன. இதில் ஏதோவொன்றில் சிவா என்னை ஏற்றிச் செல்வார் என்ற நம்பிக்கைப் பூண்டேன். சட்டைப் பையிலிருந்த உரிமத்தை ஒருமுறை தடவிப் பார்த்துக் கொண்டேன். வாகன விற்பனையாளர் எங்களை அங்கிருந்த மாருதி ஸென்னிடம் (Maruti ZEN) இட்டுச் சென்றார்.

'இதுதான் சிவா.. உங்களோட கார்'

சிவா முகத்தில் புன்னகை பூத்தது. நான் ஜன்னல் வழியே காரின் ஸ்டீரிங்கை பார்த்தேன் - கியர் மாற்றி கீழே இருந்தது. சிவா சாவியைப் பெற்றுக் கொண்டார்.. பக்கத்தில் நான் அமர சிவா அந்த வெண்மை நிற ஸென்னை இயக்கினார். இயக்கினார் என்றால்.. சாவியால் வாகனத்தை இரண்டு மூன்று முறை இரும வைத்தார் எனலாம். பிறகு ஒரு மாதிரியான நகர்த்தலில் வண்டி சாலைக்கு வந்துவிட்டது. இன்னமும் முதல் கியர்தான் விழுந்திருந்தது. சிவா முகத்தில் வேர்வை கொட்டத் துவங்கியிருந்தது. குளிரூட்டியை இயக்கக் கூட மறந்தவராய் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஸென்னில் இன்னும் மூன்று கியர்கள் இருந்தன. பாவம் எவ்வளவு வேர்க்குமோ?

வண்டியின் இன்ஜின் சத்தம் மாறத்துவங்கியது.

'சிவா.. போதும்! இரண்டாவது கியருக்கு மாத்துங்க'

'ஓ..! அப்படியா... இதோ' என்று இரண்டாவதுக்கு மாற்ற முயற்சித்தார்.. இந்த மாற்றம் நடந்துக் கொண்டிருக்கையில் பாருங்கள், வாகனம் அப்படியே சாலையிலிருந்து நழுவி ஓரமாக செல்லத்துவங்கியது. இப்படி கியர் மாற்றினால் வண்டி சாலையிலிருந்து கீழிறங்குகிறது.. கீழிறக்காமல் நேராக வண்டியை ஓட்டினாலோ வண்டியே நின்று போகிறது. ஆகவே, முடிந்த மட்டும் வாகனத்தை சாலையில் இருக்குமாறு பார்த்துக் கொள்வோம் என்று முடிவெடுத்து இரண்டாவது கியரிலேயே பெங்களூர் சாலையில் ஜென் உருண்டது.

வண்டி இப்படியே உருண்டு கொண்டிருக்க.. இரண்டு இடையூறுகள் எங்களுக்காக காத்திருந்தன.

இடையூறு எண் 1:

சரியாக ஃப்ரேஸர் டவுன் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு முன்னால் அது நிகழ்ந்தது.

அங்கொரு ரயில் பாலம் உண்டு. அதனடியில் இதர வாகனங்கள் கடந்து பின் கொஞ்சம் ஏற்றமான சாலை​​யைக் கடக்க வேண்டும். இதர வாகனவோட்டிகளுக்கு இது குமிழ் உறையின் (bubble wrap) குமிழை உடைப்பது போல எளிதானதுதான்.. சிவாவுக்கு மட்டும் அது சிக்கலாக அமைந்து விட்டது. கார் ஏற்றத்தில் ஏறுவதற்குள் நின்று போனது. நின்றது மட்டுமல்லாமல் பின்னோக்கி ​வேறு சென்றது.. சென்றது மட்டுமில்லாம் பின்னால் வந்த வாகனத்தின் மீது உரசியும்விட்டது. இரண்டு கார்களுக்கும் நடுவில் குமிழ் உறை இருந்திருந்தால் சில குமிழ்கள் உடைப்பட்டு போகுமளவுக்கான மீச்சிறு விபத்து.. அவ்வளவுதான்.

பின்னாலிருந்த வாகனத்திலிருந்து ஓட்டுநர் வேகமாக இறங்கி வந்தார். மீண்டுமொருமுறை ஓட்டுநர் உரிமத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். எதற்கென்றுதான் தெரியவில்லை.

'என்ன மாதிரி வண்டி ஓட்டுகிறீர்கள்'

சிவாவிடம் ஆங்கிலத்தில் கோபமாகக் கேட்டார். அநேகமாக சிவாவின் வியர்த்துக் கொட்டிய பரிதாப முகம் அவர் கோபத்தை மாற்றியிருக்க வேண்டும். எப்படியோ போங்கள் என்று சென்று விட்டார். பிறகு ஒருவாறு ஆசுவாசமாகி வண்டியை இயக்கி அடுத்த இடையூறை நோக்கி உருண்டோம்.

இடையூறு எண் 2:

நெரிசலான போக்குவரத்துள்ள நாற்சந்திப்புச் சாலையின் சமிக்ஞை விளக்குக்கு கொஞ்சம் முன்னே ஸென் திரும்பவும் இயக்கமிழந்து நின்றுபோனது! பலமுறை சாவியால் உசுப்பியும் அதனால் இரும மட்டுமே முடிந்தது. பச்சை விளக்கு வேறு விழுந்துவிட்டது. பின்னாலிருந்த வாகனங்கள் ஒலிப்பானை (horn) அலறவிட்டன. ஏதோ காரில் வேறு எந்த பாகங்களும் இல்லாமல் ஒலிப்பான் மட்டுமே இருப்பது போல் விடாமல் இரைய ஆரம்பித்து விட்டனர். சிவா என்னிடம் திரும்பினார். என் ஓட்டுநர் உரிமத்தை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டேன்.

'பாஸ்...'

'ம்??'

'வண்டியில் பெட்ரோல் இல்ல போலிருக்கு. கொஞ்சம் இறங்கித் தள்ளறீங்களா? தப்பா நெனச்சுக்காதீங்கோ'

எதுவும் பேசாமல் வண்டியிலிருந்து இறங்கி பின்புறம் சென்றேன். இன்னும் பின் வரி​சை வாகனங்கள் ஒலிப்பானை முழக்கிக் கொண்டிருந்தன. சிவப்பு விளக்கு இன்னும் சில நொடிகளில் விழக்கூடும். ஸென் என்று நேர்த்தியாக பொறிக்கப் பட்ட எழுத்துக்கள் வெயிலில் மினுங்கின. அருகாக உள்ளங்கைகளை வைத்து பலம் கொண்ட மட்டும் உந்தித் தள்ளிளேன். வாகனம் உருள ஆரம்பித்தது. சமிக்ஞை விளக்கைப் பார்த்தவாறே வாகனத்தைத் இன்னும் வேகமாகத் தள்ள ஆரம்பித்தேன். சிவா சிறப்பாக ஸ்டீரியங்கைப் பற்றிக் கொள்ள, நான் தள்ள ஒருவாறு வாகனத்தை ஓரங்கட்டினோம்.

'உஸ்ஸ்.. ஸப்பாடா'

வாகனத்திலிருந்து சிவா இறங்கி வியர்வையைத் துடைத்தெறிந்தார். தேர்ந்தெடுத்துப் போட்டுக் கொண்டு வந்து ஆடைகளுக்கும், ஓட்டுநர் உரிமத்துக்கும் ​சொந்தக்காரனான நான் அவரை விட அப்போது வேர்த்திருந்தேன்.

தட்ட வேண்டிய இடம்:

சிவா அருகிலிருந்தது பெட்ரோல் கிடங்குக்குச் சென்று பெட்ரோல் தருவித்துக் கொண்டு வந்தார். இப்போது அப்பெட்ரோலை ஸென்னுக்குள் ஊற்றினால் மட்டும் போதும். வாகனத்துக்குள் அமரும் பாக்கியம் பெற்றவனாக வீடு திரும்பிவிடுவேன். ஆனால் பாருங்கள், இருவருக்கும் ஸென்னின் பெட்ரோல் மூடியை எப்படித் திறப்பது என்று தெரியவில்லை. வாகனத்தின் உள், வெளி, மேல், கீழ் எங்கு தேடியும் பெட்ரோல் மூடியைத் திறப்பதற்கான பொறியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின் சிவா வேறு நண்பருக்கு தொலைபேசியில் அழைத்து விபரம் கேட்க, பொறி சிக்கிவிட்டது - ஓட்டுநர் இருக்கைக்கு கீழே. இலேசாக அதை மேலேத் தட்ட, புத்தகம் போல் அழகாக மூடி திறந்து கொண்டது.

ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதை ஒருபோதும் யாரிடமும் சொல்வதில்லை என்று அன்று சபதமிட்டுக் கொண்டேன்.

Tuesday, February 11, 2014

But Where's My Pumps?

கிரிலோஸ்கர்வாடி. மஹாராஷ்ட்ராவிலுள்ள ஒரு தொழில்நகரம். இதை கிரிலோஸ்கர் பம்புகளின் தாய்வீடு எனலாம். இந்த பிரம்மாண்டமான பம்பு தொழிற்சாலையில் கல்லூரி இறுதியாண்டு பிராஜக்ட் செய்தால் சீறும் சிறப்புமாக இருக்குமே என்ற எண்ணம் முதலில் எனக்கே உதித்தது.

வாரம் முழுதும் சாம்பல் நிற சீருடையில் திரிய விதிக்கப் பட்ட மெக்கானிக்கல் பிரிவு. பிராஜெக்ட் நண்பர்கள் என நாங்கள் நால்வர். கல்லூரியிலிருந்து அவ்வளவு தொலைவு பயணித்து பிராஜெக்ட் செய்த பெருமை பெற்ற குழு எங்களுடையது. யாருக்கும் ஹிந்தி தெரியாது.. தெரிந்திருந்தாலும் பிரயோசனப் பட்டிருக்கிறாது என்றே நினைக்கிறேன். கிரிலோஸ்கர்வாடியில் மேலதிகம் பேசப்பட்டதெல்லாம் மராத்தியும் பான்பீடாவும்தான்.

முன்னேற்பாடாக, நண்பனின் உறவினர் ஒருவர் சிபாரிசு செய்ய சம்மதத்திருந்தார். இருந்தும் சிபாரிசு முழுமையாக கிரிலோஸ்கரை வந்தடையாததால் எங்களை ஒரு சந்தேகத்தோடுதான் உள்ளனுமதித்தார்கள்.

வாடியின் வளாகத்துக்குள் ஓர் ஊரே அடைப்பட்டு இருந்தது. தொழிற்சாலை, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அங்காடி, நீச்சல்குளம், பூங்கா.. இப்படி! அங்கு அருமையாக பேணப்பட்டு வந்த பயணியர் விடுதி ஒன்றிருந்தது. அது தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற கிளைகளிலிருந்து வரும் அலுவலர்கள் போன்றோர் தங்குமிடமாக இருந்தது. கல்லூரி மாணவர்களாயிருந்த எங்களை எப்படி வகைப்படுத்துவது என்ற குழப்பம் கிரிலோஸ்கர் இருந்திருக்கும் போல. போகட்டும் என்று பயணியர் விடுதியில் தங்க அனுமதித்தார்கள்.

விடுதியில் ஒரு உணவகம் உண்டு. இழைத்து இழைத்து பராமரிக்கப்பட்ட உணவகம். உணவின் நுண்கூறுகளும் ஆரோக்கியத்தின் அனைத்து நுணுக்கங்களும் கடைத்தேறிய ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட உணவுகள் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டன. காலையுணவென்றால் ரொட்டியும் வெண்ணையும் அல்லது ஆம்லெட், கூட சுடச்சுட தேநீர். மதியம் உணவு ரொட்டி, சாதம், பலவகை பயறுகள் அடங்கிய சாலட்.. இப்படி! கிரிலோஸ்கர்வாடி-பிராஜெக்ட்டுக்கு யோசனை கூறிய என்னை, இந்த ஒரே காரணத்திற்காக நண்பர்கள் மன்னித்தனர்.

உணவத்தில் சிலசமயங்களில் எங்களுடன் வேறு சிலரும் உணவருந்த வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது உயர் அலுவலர்களாயிருப்பார்கள். அதிகம் போனால் ஒரு நாள் அல்லது கூட சிலநாட்கள் தங்கியிருப்பதுண்டு. நாங்களோ பலவாரங்களாகவே விடுதியின் காலை ரொட்டி முதல் இரவுச் சப்பாத்தி வரை உண்டு ஒரு நிரந்தர வாடிக்கையாளர் தொனியில் உலாவி வந்தோம்.

பிராஜெக்ட் என்ன செய்வது என்று இன்னும் ஒரு பிடி கிடைக்கவில்லை. காலையுணவு ஆனதும் பம்பு தொழிற்சாலையில் இடது வலது என்று வெளிநாட்டுப் பயணிகள் போல சுற்றிவருவோம். சிறிது நேரத்தில் பசிக்கவேறு ஆரம்பித்து விடும். பிறகென்ன.. நேராக உணவுவிடுதிதான். உணவகத்தில் வேலைப் பார்த்த பரிமாறுவோர், சமையல்காரர், காவல்காரர் என அனைவருக்கும் பழகிய முகங்களாயிருந்தோம். சைகையாலேயே இது ரொம்ப நல்லாயிருக்கு.. இன்னொரு ப்ளேட் வேணும் இதுதான் அந்த வீர மராத்தியர்களிடம் நாங்கள் அதிகம் மேற்கொண்ட சம்பாஷணை.

ஒரு இரவு நேரம். உண்டு முடித்திருந்தோம். உணவகத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தை பொழுது போக்காக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தோம். தங்கிய பயணிகள் விடைபெற்றுச் செல்லும் போது விடுதியின் தரத்தைப் பற்றிய கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். ரொட்டி அற்புதம், சாலட் பிரமாதம், சமையல்காரர் கில்லாடி, பரிமாறுவோரின் பாசம் என பலவாறான பாராட்டுகளாய் நிறைந்திருந்தது புத்தகம்.

அப்புத்தகத்தில்தான் வாழ்வின் உன்னதமான ஒரு தத்துவத்தை ஒருவர் எழுதி விட்டுச் சென்றிருந்தார். அவர் அநேகம் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்திருக்கக் கூடும். பம்புகள் வாங்க வந்துவிட்டு அவை தயாரித்து ஒப்படைக்கும் வரை விடுதியில் தங்க நேர்ந்திருக்கக் கூடும். அவர் விருந்தினர் புத்தகத்தில் எழுதியிருந்தது இதுதான்:

'Food is good.. but where is My Pumps???' 

அவர் ஒரு காரியப் புலியாகவும் இருந்திருக்கக் கூடும்! ஒரு வழியாக பிராஜெக்ட் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்பும் போதுதான் தெரிந்தது. நாங்கள் உண்ட காலைரொட்டி முதல் இரவு சப்பாத்தி வரைக்கும் ஒன்று விடாமல் குறித்து ஒரு பில்லை நீட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது அசல் காரியப் புலி யாரென்று!

டிஸ்கி:
இப்பதிவுக்கு தமிழில் தலைப்பிட முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!

Monday, January 27, 2014

ஒள்​ளே உடுகரு..!

பெங்களூரில் சேக்ஷாத்ரிபுரத்தின் முதல் பிரதான வீதியின் ஒரு சிறு அறையில் தனியனாக வாழ்ந்து வந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் கன்னடத்தினர். மேல்மாடியில் அவர்கள் குடியிருப்பு. எனது பிழையான கன்னடத்தை நான் கொடுக்கும் வாடகையின் பொருட்டுப் பொறுத்தருளி வந்தனர். வீட்டுக்காரம்மாளிடம் நல்ல பையன் என்ற பேர் கூட வாங்கியிருந்தேன்
ஒரு சமயம் சொந்தவூர் சென்று திரும்பினேன். இடைப்பட்ட நாளில் வீட்டுக்காரம்மாளின் கணவர் அகால மரணமடைந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். நான் வாடகை கொடுக்கப் போகும் சாக்கில் துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்றத் திட்டத்தோடு மாடிக்கு சென்றேன். வீட்டுக்காரம்மாள், என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
நென் எஜமானரு செத்ததோகிதாரெ...’
என்று வாயில் சேலைத் தலைப்பைக் கதக்கிக் கொண்டு தேம்பினார். திருத்தமான பொட்டோடு இருந்த நெற்றியின் வெறுமையைப் பார்க்க எனக்கும் என்னவோ போலிருந்தது. அதுவரை அச்சுப்பிச்சு வார்த்தைகளை மட்டும் கொண்டு வளர்ந்து (வளர்த்து) வந்த என் கன்னடத்துக்கு ஒரு சோதனை எனலாம். கன்னடத்தில் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலைமை. நினைவிலிருந்த எல்லா கன்னட வார்த்தைகளிலிருந்து நல்லதாகப் பொறுக்கி, அழுது கொண்டிருந்த அம்மாளைத் தேற்றும் பொருட்டு நான் சொன்னது இது:
ப்ச்ச்.. பிடிறி.. ஒள்ளே உடுகரு செத்தோகிப் பிட்டிதாரே..!!’
வாயில் துணியைக் கதக்கி தேம்பிக் கொண்டிருந்தவர் அழுகை சட்டென்று நின்று போனது போலிருந்தது. ஒரு மாதிரி மர்மான புன்னகை குடிவந்தது போலிருந்தது அம்மாளின் முகம். அதற்கு மேலும் துக்கம் விசாரிக்க வேண்டாமென்று அமைதியாக வாடகையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இருந்தும் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நண்பரிடம் நடந்ததைச் சொன்னார். வஞ்சகமில்லாமல் சிரித்துவிட்டு அவர் சொன்னது:
நீங்கள் துக்கம் விசாரித்து எல்லாம் சரிதான்.. ஆனால் நல்ல மனுஷன் என்பதற்கு பதிலாக...... நல்ல பையன் செத்துப் போயிட்டாரே-ன்னு சொல்லியிருக்கிறீர்கள்!’
உண்மையிலேயே எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


Wednesday, January 22, 2014

காமிக்ஸ் இல்லாத தமிழ் இலக்கிய உலகம்..!


37வது சென்னை புத்தக கண்காட்சி.. ஒரு சனிக்கிழமை சென்று 20 புத்தகங்கள் போல அள்ளிவந்தேன். இலக்கியம், எலக்கியம், தீவிர இலக்கியம், பிக்ஷன், நான்-பிக்ஷன், நீயும் பிக்ஷன் என ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் போல.

ஆண்களைவிட பெண்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தது போலிருந்தது. எனக்கு இதுவே முதல் செ.பு.க விஜயம். மொத்தம் 777 கடைகள்... அதைவிடுங்கள்.. இத்தனை புத்தக சங்கமத்தில் ஒரேயொரு தமிழ் காமிக்ஸ் கடை மட்டுமே இருந்தது.. முத்து காமிக்ஸ். பால்யத்தை மீட்கும் செயலாக சில காமிக்ஸ்கள் வாங்கினேன். முன்னை விட அழகான வடிவமைப்பில், பெரிய அளவில் அச்சிடப்பட்ட படக்கதைகள். முத்து-லயன் காமிக்ஸுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. இன்னும் 80களில் வந்த அதே ஹீரோக்கள் இன்றைய மறுபதிப்பிலும். அங்கங்கு கடைகளில் அமர் சித்திர கதா நூல்கள் இருந்தாலும் அவைகள் கதை மற்றும் தொழில்நுட்ப அளவில் ஈர்க்கவில்லை.

மேலும் இன்னும் நம் சித்திரக்கதை உலகம் வெளிநாட்டுகளிலிருந்துதான் சரக்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நமக்கென தனி ஹீரோ, கதை சொல்லும் பாணி, ஓவியம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை எனலாம். அமர் சித்திர கதா இந்த அளவில் நன்கு செயல்பட்டு வருகிறது.. பிரதாப முதலியார் சரிதம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கிய வகைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழ் காமிக் உலகம் மிகவும் பின்தள்ளியிருக்கிறதோ என தோன்றுகிறது.. சிறுவர்களிடம் இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கருவியாக காமிக்ஸ் இருக்கின்றன. காமிக்ஸ்கள் சீரான கதியில் ஒரு வாசகனை தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கு நகர்த்துகிறது.

மார்வல் மற்றும் டிஸி காமிக்குளின் ஆதிக்கம் ஹாலிவுட்டில் மிக அதிகம். காமிக் ஹீரோக்களின் மிகச்சிறந்த இரசிகன் ஹாலிவுட் எனலாம்.சூப்பர் மேன் முதல் பார்ப் வயர் வரை.. தமிழில் பிதிக்கப்படும் காமிக்ஸ்கள் மிகச் சொற்பம். நம் பாடத்திட்டங்களிலும் படக்கதைகளுக்கு இடமில்லை. பத்திரிக்கைளிலோ அல்லது வாராந்திர இதழ்களிலோ மிகக் குறைந்த சதவீதத்தில் தான் - அதுவும் துணுக்குகளாக மட்டுமே - பிரசுரிக்கப் படுகின்றன. சித்திரக்கதைகள் என்ற உலகம் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை மெதுவாக தாய்மொழி இலக்கியத்தை வாசிக்கும் பழக்கத்தை இழக்கிறதோ?

சிறுவர்கள் ஹாலிவுட் படங்களிலும் கார்ட்டூன் சேனல்களில் மட்டுமே தங்கள் சாகஸ ஹீரோக்களை கண்டு ஆறுதலடைகிறார்கள் என தோன்றுகிறது.