Wednesday, December 29, 2010

ஆதாம் கடந்த தோட்டம்!


எனது கண்கள் ஒரு ஆப்பிள் போல
மாறிவிட்டது பாரேன்.

அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம்
அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்!
பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது.

சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல்
ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது.

எல்லா காரியங்களுக்கும் கால்கள் முளைத்துவிட்ட இவ்வேளையில்
எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில்
ஒரு ஆறுதல் உணர்கிறேன்.

தோல் சிவப்பானாலும் ஆப்பிள் வெள்ளைதான் - இன்னும்!

Sunday, October 3, 2010

கடவுளும் நானும்


நான் ஆத்திகவாதியா என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை தேட மட்டும் இதைப் படிக்க முயலாதீர்கள். ஆத்திகம்-நாத்திகம் என்ற பிரிவினை வாதங்களைக் கடந்து ஒரு மானிட கூட்டுநம்பிக்கையை பற்றி எழுதவே இங்கு முயல்கிறேன்.

கடவுளைப் பற்றி எழுதுவது சுய பரிசோதனை. இந்தியாவில் கடவுள் பற்றிய ப்ரக்ஞையற்று இருப்பது இயலாத காரியம். ஏதாவது ஒரு நிலையில் அல்லது வயதில் கடவுள் நம்மில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருப்பார். கடவுள் வசீகரமாயிருக்கிறார். மதம் களிப்பூட்டும் சடங்குகளை நிறுவுகிறது. மதச்சடங்குகளின் பின்புலம் அரசியல் படர்ந்தது. அதை நுணுக்கி அணுகும் போது கடவுளின் வசீகரம் குறைந்து விடுகிறது. மதம், சாதி, சடங்குகள், அதிகாரப் பின்னணிகள் தவிர்த்து தெரியும் கடவுள் எனக்கு உவப்பானது.

எப்போதும் கூடவே வரும் நினைவுகளில் ப்ரபஞ்ச தோற்றம் பற்றியதும் உண்டு. ப்ரபஞ்சம் - பால்வீதி மண்டலம் - சூரியக்குடும்பம் - கிரகங்கள் - பூமி - உயிர் - மனிதன் என்ற சங்கிலியின் ஒவ்வொரு படைப்பும் வித்யாசமான இருப்பைக் கொண்டிருக்கிறது. இவைகளின் இயக்கம் ஆச்சரியமூட்டுகிறது. ஏதாவது ஒரு தத்துவம் அல்லது விஞ்ஞானம் இதற்கு விடை தேடித்தர முயல்கிறது. கிடைத்த விடைகள் சமாதானம் தருவதாக அல்லது தற்காலிக ஆசுவாசமூட்டுவதாக மட்டுமே இருக்கிறது. கடவுளும் விஞ்ஞானமும் என மனம் மாறி மாறி தாவிக்கொண்டிருக்கிறது.

கெப்லர், நியூட்டன், லியனார்ட்ஸ் இயக்க சாத்தியகூறுகள் எந்த ஒரு கணத்திலும் மாறிவிடக்கூடும், திரிந்து விடக்கூடிய நிலையில் இருப்பதாக என் மனம் உணர்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மட்டும் வேறுவிகிதத்தில் கட்புலனுக்கு தெரிவதன் அபத்தங்களை விவரமாக அலசுகிறது.


அறிவியல் என்பது என்ன?

தெளிவான ஒரு நிகழ்வை கால-இட வித்யாசமில்லாமல் செய்து காட்டுவதுதான். அறிவியல் ஒரு கருவி. ஆன்மீகம் ஒரு உணர்வு. உணர்வுக்கு பக்கமாக கருவியை நிறுத்தத் திணறுகிறேன். கண்களுக்கு தெரிகிற பொருட்களின் நீட்சி, நுண்ணோக்கியால் வேறு வடிவம் பெறுகிறது. அணு, மூலக்கூறு, இது சோடியம், அது ஹைட்ரஜன் என்று நமக்குத் தோன்றினாற் போல் பேரிட்டு திருப்தி பட்டுக் கொள்ள முடிகிறது.

இன்னும் கொஞ்சம் பெட்டரான நுண்ணோக்கி இருந்தால் அணுவுக்கு அடுத்து என்ன, எலக்ட்ரான் சுழற்சி எப்படி என்று அறிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பெட்ட்ட்டரான நுண்ணோக்கி இருந்தால் ப்ரபஞ்ச மனம் என்ன என்று கண்டுகொள்ளலாமோ..?

இன்னும் இரண்டாவது நிமிடத்தில் என் முன் இருக்கும் காப்பிக் கோப்பை கீழே கவிழுமா..? எந்திரன் படத்துக்கு ரஜினி எவ்வளவு ஃபீஸ் வாங்கியிருப்பார்..? பெர்முடா முக்கோண ரகசியம் என்ன? காலம் ஒரு அபத்தமா? ஒரு கருவுக்குள் எத்தனை வரிகள் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கும்..? நேசனுக்கு யார் கெமிஸ்ட்ரி புக் இரவல் கொடுத்தது? ஹேமா ஏன் அழுகாச்சி கவிதையா எழுதுகிறார்..? போட்டோக்களில் அசந்தர்ப்பமாக எட்டிப்பார்க்கும் பேய்கள் மர்மம்..? மனம் எப்படியிருக்கும்?ஆவி? யூரி கெல்லர்.. ஈஎஸ்பி.. ஸைக்கான்ஸ்... பாராநார்மல்.. பிரிகாக்னிட்டிவ்.. நோஸ்ட்ராடாமஸ், சிறுமி இல்கா, பலிக்கிற கனவுகள்.. ஏலியன்ஸ்.. பறக்கும் தட்டு... உஸ்ஸப்பாடா...!


டேனியல் டங்க்ளஸ் ஹ்யூம் பற்றி படித்ததுண்டா..? தன் அபூர்வ சக்தியினால் 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்தவர். தொடாமலேயே நாற்காலியை நகர்த்துவது, மேஜையைத் தூக்குவது என விஞ்ஞானத்துக்கு அன்டச்சபிள்-அபூர்வமாக விளங்கினார். ஒரு விஞ்ஞானக் குழுவே ஹ்யூமை சோதிக்க வந்தது. மேஜையைத் தூக்குப் பார்ப்போம் என்றது. ஹ்யூம், இருங்கப்பு நானே என்னைத் தூக்கிக் காட்டறேன் என்று அந்தரத்தில் மிதந்து காட்டினாராம். வி.குழு கடன்வாங்கி முடியைப் பிய்த்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்!

அப்புறம் இன்னும் சில குழப்பங்கள் இல்லது அபத்தங்கள் விஞ்ஞானத்தால் விளக்க முடியாமல் இருக்கிறது. பட்டியல் பெருசுங்க சார்.


ஞானம் - அறிவு - ப்ரக்ஞை - புலன் என்பது கூட ஒரு அடிப்படைத் தவறின் எச்சங்களோ என்று தோன்றுகிறது. இந்தப் பயபுள்ள என்னமா சிந்திக்குது; எலுமிச்சம் வாங்கி தலையில அரைக்கணும் என்று நீங்கள் நியாயமாக சிந்திக்கலாம்தான். இது எல்லாம் ஏற்கனவே பகவத் கீதை கண்டு சொன்னதுதான்.

கீதையின் சில எக்ஸர்ப்பட்டுகள் மட்டுமே அறிந்திருக்கிறேன். அதாவது நுணுக்கி நுணுக்கி நுனிப்புல் மேய்ந்.....! அதுவே ஏகப்பட்ட மாறுதல்களைத் தந்திருக்கிறது. க்ருஷ்ணா என்ற எண்ணம் என்னுள் அமைதியை நிறுவுகிறது.


We cannot approach the Absolute by our poor fund of knowledge, but the
Absolute becomes revealed out of His own mercy by His own appearance.
- A C Bhaktivedanta Swami Prabhupada (ISKCON founder)

நம் புலன்கள் காட்டுகிற எல்லா வடிவங்களும், அதன் மூலம் உதிக்கின்ற எண்ணங்களும் அபத்தமானது. நம் புலன்களால் அறிய முடிகிற உண்மைகள் கீழ்மையானவை. எப்போதும் மாறக்கூடியவை. நிரந்திரமில்லாதது. ஐம்புலன்களுக்கும் தாண்டிய ப்ரக்ஞையால் மட்டும் அணுக முடிகிற பொருளே உண்மையானது. நிரந்தரமானது. சுருக்கமாக, எல்லாம் மாயை.

படித்த அறிவியல், செய்து பார்த்த ஆய்வுகள், தர்க்கரீதியான வாதங்கள், தத்வார்த்தமான அலசல்கள் என எதிலும் கிடைக்காத பதில், ஒரு உண்மை கடவுள் என்ற சமாதானத்தில் வருகிறது. அறிவியலை ஒரு கருவியளவிலேயே பார்க்கமுடிகிறது. இதுவரை கிடைத்த ஆதார அறிவியலைக் கொண்டு, எல்லாவற்றுக்கும் அறிவியலிடம் பதில் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் பாவம். அறிவியல் ஒரு அழகிய ஒரேயொரு உண்மையை கண்டறிய முடியாமல் வேறுதளத்தில் கிடைக்கும் ஆதாரங்களையும் அது பெருக்கும் சாதனங்களையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது. சாதனங்களால் பெறும் செளகர்ய தளர்வால் அறிவியல் உயர்வாகத் தோன்றலாம்.

ஆனால், அறிவியலை ஒரு கருவியாகக் கொண்டு அதன்மூலம் ப்ரபஞ்ச முடிச்சை, ஆழ்ந்த உண்மையை, கடவுளை அறிய முயல்வதே நம் வாழ்வின் அர்த்தமாக இருக்க முடியும். சேஷாத்ரிபுரத்திலிருந்து ஐடிபிஎல்-லில் இருக்கும் அலுவலகத்துக்கு போக 1 மணி நேரம் ஆகிறது. அமைதியாக 37:33 நிமிடங்கள் ஒலிக்கிற வில்வஸ்திர ஸ்தோத்திரம் கேட்டுக்கொண்டே செல்கிறேன். வெளித்தோற்றத்தில்தான் நான் ஒரு ஸைபர்-ஏஜ் அடாவடி. அடித்தளத்தில் எளிமையானவன் - எனது தேடல்கள் முழுமையானதாக இருப்பதைவிட அமைதியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

சிஈஆர்என் - என்ற ஆய்வுமையம் லார்ஜ் ஹாடுரன் கொலைடர் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சோதனையை நடத்திக்கொண்டு வருகிறது. மிகவும் ஆர்வமூட்டும் விஞ்ஞானப் பரிசோதனை. எதற்காம்..?
1. மூலக்கூறுகள் எப்படி உருவாகின
2. புவியீர்ப்பு எப்படிச் சாத்தியமாயிற்று
3. அறிந்த பொருட்கள் போலவே அறியாத பொருட்கள் (dark matters, dark energy, fourth dimension) எப்படியிருக்கும்?
4. ஒரு சோதனையின் மூலம் ஒரு கருப்பொருளை உருவாக்க முடியுமா?
5. உலகம் எப்படி உருவானது?

உங்களைக் குழப்ப விரும்பவில்லை. சுருக்கமாக..
கிட்டத்தட்ட 15 வருடங்களாக உலக விஞ்ஞானிகள் கூடி நிறைய பொருட்செலவில் ஒரு பரிசோதனைக் கூடம் கட்டியிருக்கிறார்கள். அது ப்ரான்ஸ்-சுவிஸ் எல்லைப் பக்கமாக இருக்கிறது. இந்த சோதனை முடிவில் நமக்கு கடவுள் மூலக்கூறுகள் (God's paticles) கிடைக்கும் என்கிறார்கள். நானும் ஆர்வமாக கவனித்து வந்தேன். ப்ச்.. ஏதோவொரு தொழில்நுட்ப தகராறால் இதோ.. இப்ப.. இப்ப என்று பரிசோதனை நொண்டியடிக்கிறது.

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அறிவியலையேப் புரட்டிப்போடும் உண்மைகள் கிடைக்கலாம் என்கிறார்கள். ப்ரபஞ்சத்தில் நம் மண்டலம், நம் மண்டைஎண்ணிக்கை, பிற உயரினங்கள் என நாம் அறிந்தது வெறும் 4 சதவீதம்தான். மீதி 96% பொருட்களை, உண்மையை இந்த விஞ்ஞானப் பரிசோதனை பெற்றுத் தரும் என்கிறார்கள்.

அப்படி இந்த Large Hardon Collider புதிதாக ஒரு உண்மையை கண்டறிந்து சொன்னால், கடவுளை நான் மறுபரிசீலனை செய்யலாம். அதுவரைக்கும் ஹரே க்ருஷ்ணா.. ஹரே ராமாதான்!!

உங்களுக்கு 1 சொல்லிக்கிறேன்: கடவுளை நம்புவது மிகுந்த உழைப்பு வேண்டிய சங்கதியாக இருக்கிறது. நிறையத் தேடல்கள், விழிப்புணர்வு, மெஞ்ஞானம் என்று நிறைய மெனக்கெடல்கள் கொண்டது. இப்பவும் பெரியாரியல் படித்துக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற அப்பா, ஆத்திகமா நாத்திகமா என்று தெரியாது. அவர் ஒரு தேடல்வாதி என்று எண்ணிக் கொள்கிறேன்.ஆத்திகம் - ஒற்றையான ஒரு உண்மையை நோக்கிய பயணம். கடவுள் தேடல்வாதிகள் பெற்றுத் தருகிறார் - எப்பவும்.

- எழுதப் பணித்த பத்மநாபனுக்கு நன்றி! தாமதத்திற்கு வருந்துகி​றேன் ஸார்!

Friday, September 3, 2010

7 நாட்கள் என்ற கவிதை

ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி

- காலடி

பி.கு.:

இக்கவிதையை யாராவது ஆங்கிலத்தில் முழிபெயர்த்து உதவ முடியுமா..?

--

காலடிக்கு ஒரு கார்ட்டூன் போடலாம் என்று எழுதியது.
பாட்டைக் கண்டுக்காதீங்க :))

Wednesday, July 28, 2010

கிளஸ்டர்-நோவா (மாறுதிசை)

2011 ஜுலை - கென்னடி விண்வெளி மையம், ப்ளோரிடா:

பின்னணியில் எழுத்துக்கள் ஓடிக்கொண்டிருக்க, கைகளை விஸ்தாரமாக விரித்தபடி விஞ்ஞானி ராமகிருஷ்ணன் கிளஸ்டர்-நோவா பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். இஸ்ரோவிலிருந்து நாஸாவிற்கு சிறப்பு பரிந்துரையின் பேரில் வந்தவர். அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு ராமகிருஷ்ணனின் கிளஸ்டர்-நோவா திட்டம் ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது.

ஹே, ராம்.. யு நோ.. என்று ஆரம்பித்து 5 நிமிட அடர்த்தியில் கேள்விகளும் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு ராமகிருஷ்ணனின் பதில்கள் அடர்த்தியாகவும் திடமாகவும் இருந்தன. ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், அமெரிக்க ராணுவத் தளபதி ஒருவர் ராமகிருஷ்ணனை தனியாக அழைத்துக் கொண்டுபோனார் - அவசரமாக.

2013 ஜுன் - மார்க்கம்பட்டி, அரசினர் நடுநிலைப்பள்ளி:

புதுவகுப்பில் இருக்கை பிடிக்கும் அவசரத்தில் மாணவர்கள் வகுப்பறைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். அது ஆறாம் வகுப்பு. முன்வரிசையில் எப்போதும் போல் பெண்கள் எடுத்துக்கொண்டார்கள். அமர்ந்த கொஞ்ச நேரத்தில் நிர்மலா ஆசிரியை வந்தார். வணக்க்க்கம்ம்ம் டீச்சர்ர்ர் முடிந்ததும், ஆசிரியை பாடம் நடத்த ஆரம்பித்தார். அறிவியல்.

'எல்லாரும் போன வருஷமே பூகோள திசைமாற்ற இயக்கம் படிக்க ஆரம்பிச்சிருப்பீங்களே..?'

'ஆம்ம்மாம்ம் டீச்சர்ர்ர்'

'யாருக்கெல்லாம் அது புரியலே..?'

'...........'

'சரி.. இந்த வருஷ சிலபஸ்ல நிறைய மாத்தியிருக்காங்க. அறிவியல் முழுதும் பூகோள திசைமாற்றம் பற்றிதான் வரும்'

மாணவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

'சரி இப்ப கொஞ்சம் படித்ததிலிருந்து கேள்வி கேட்கலாமா?'
'...'
'எங்கே.. சிவக்குமார், நீ சொல்லு.. பூமியின் சுற்றுவேகம் குறையத் துவங்கும் நாள் எது?'

'14ந் தேதி ஜுலை 2018'

'வெரிகுட்.. அடுத்து.. கவிதா பூமிச்சுற்றுவேகம் பூஜ்யம் ஆக எத்தனை நாட்களாகும்?'

'108 நாட்கள்'

'சபாஷ்.. எல்லாரும் படிச்சதை மறக்காம வச்சிருக்கீங்க. அடுத்த கேள்வி விண்கப்பல் அடர்தொகுதி என்பது என்ன? இக்பால் நீ விளக்கமா சொல்லு பாப்போம்..?'

'பூமி சுற்றுவேகம் குறையத்துவங்குவதற்கு 7 நாட்கள் முன்பே, மனிதர்களை ஏற்றிச்செல்லும் விமானம்......'

'மனிதர்களை ஏத்திக்கிட்டு மாட்டுச் சந்தைக்கா போறாங்க? சரியா சொல்லுடா'

வகுப்பின் கொல்சிரிப்பும், மற்றவர்கள் எடுத்துக் கொடுக்கும் முதல்வரியுமாக இக்பால் பதில் சொல்கிறான்..

'மனிதர்களை ஏற்றிக் கொண்டு இந்த விமானம்.. இல்லே இல்லே... இந்த விண்கப்பல்கள் பூமியின்...'

என இக்பால் தொடர, புதுவகுப்பு இனி​தே ஆரம்பித்தது!

2018 ஜுலை 14 - திபெத், கோகனார் ஏரிக்கரை அருகாமை புத்த மடாலயம்:

இரவு குளிராக அரும்ப துவங்கிய பொழுது. மரங்களால் அமைந்த அந்த உயர்ந்த மடாலயத்திலிருந்து யாங் உச்சாடனம் மெலிதாக காற்றில் கலந்து கொண்டிருந்தது.

நியங்மா, போதிசத்வர் மரபு சார்ந்த மடாலயம் அது. மடத்திலிருந்து வெளிவந்தார் முதிய புத்த பிஷு சியூடென். தர்மசக்கரங்களை சுற்றியவாறே வானை அண்ணாந்து பார்த்தார். வானம் ரகளையான ஆரஞ்சு நிறக் கீறல்களாய் இருந்தது. முழுநிலா எழும்ப ஆரம்பித்துவிட்டது. தூய மஞ்சளொளி இனி பனிநிலத்தில் ஒளிர ஆரம்பித்துவிடும். அப்போது ஏரிக்கரையை பார்ப்பது அருமையானது. மடத்திற்கு புதிதாக இன்று யாருமே வரவில்லை. கோகனார் மொத்தமுமே அமைதியில் விழுந்து விட்டது போலிருந்தது. சில நாட்கள் முன்பு அந்த இடமே வெகு பதற்றமாக இருந்தது. அப்போது மனிதர்கள் பதைபதைப்போடு மழைக்கால எறும்புகள் போல திரிந்து கொண்டிருந்தார்கள்.

எனக்குத் தேவையானது எல்லாம் ஏற்கனவே போதிக்கப்பட்டு விட்டது. ஆகவே எனக்கு பதற்றமில்லை - என்று சொல்லிக் கொண்டார் பிஷு. ஏரியை நோக்கி மெதுவாக நடக்கத் துவங்கினார் சியூடென்.

2018 ஜுலை 14 - கிளெஸ்டர்-நோவா, Node:58 @ 12th Array:

கண்ணாடி தடுப்புகளால் ஆன பாதை வழியாக மக்கள் நகர்ந்து கொண்டிருந்தார்கள். பாதுகாப்பு ஆட்கள் ஒவ்வொருவரையும் கவனமாக பரிசோதித்து அனுப்பினார்கள். அந்த வெளி முழுவதும் குளிரூட்டப்பட்ட பரிசுத்தமாக விளங்கியது. மெலிதாக ஒரு ரிதம் கூட காற்றில் தவழ்ந்தது. மனிதர்களை நான்கு விதமான சீருடைகளால் பகுத்திருந்தனர். வெள்ளை, சாம்பல், அடர்சாம்பல் மற்றும் கருப்பு. சாதாரணர்கள் - வெள்ளை; காவலர்கள் - கருப்பு சீருடை.

கண்ணாடித் தடுப்பு சுவர் முழுக்க நோடு 58 அமைப்பு, கிளெஸ்டர் நோவா-வின் தன்மை மற்றும் விதிகள் பற்றிய படங்களாக இருந்தன.
வரிசையில் நின்றிருந்தவர்களில் ஒரு வயதான தம்பதியினரும் இருந்தனர்.

'ரோஹிணி.. ரொம்ப நேரம் நிக்கறோமே? கால் வலிக்கலியா உனக்கு?'

அந்த தளர்ந்த வயதான அம்மா கணவரிடம் திரும்பினார்.

'ப்ச்.. பரவால்லேங்க. டாப்லெட் போட்டுட்டுத்தான் வந்தேன்'

'கொஞ்ச நேரம்தான். அப்புறம் நமக்கு ஹவுஸ் அலாட் பண்ணிடுவாங்க'

'உங்களுக்குதான் ரொம்ப சிரமம் இதில.. இல்லியா?'

'சிரமம் என்னயிருக்கு..? தினேஷ் நமக்காக பணம் கட்டியிருக்கான். நாம ஹாயா இங்க வந்துட்டோம்'

'எனக்கு என்னவோ இதெல்லாம் பார்க்க ஒரே உதறலா இருக்குங்க'

'அட போடி.. இதுக்கு முன்னாடி இருந்த அப்பார்ட்மண்டை விட இன்ன்னும் உயரமான வீட்டில வாழப்போறோம்னு நினைச்சுக்கோ. இதெல்லாம் ஸயன்ஸ். எ குட் டெக்னிகல் அட்வான்ஸ்மண்ட். மனுஷனோட எக்ஸிஸ்டன்ஸ் எவ்ளோ முக்கியம்னு காட்டப் போறது. இந்த கிளஸ்டர் நோவாவில...'

'ஐயோ.. போதும் நிறுத்துங்க உங்க நோவா புராணத்தை. கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு'

'உன்கிட்ட சொன்னேன் பாரு' என்றவர் திரும்பி பின்னால் நின்றவரிடம்,

'இன்னும் எவ்ளோ நேரம்தான் க்யூவிலேயே நிக்கறதாம்? க்யூ நகர்றதா என்ன?'

பின்னால் நின்றவர்,

'மைட் பி. பட், கவுண்டர்ல ஏதோ ப்ராப்ளம் போல. அதுதான் க்யூ ஸ்டரக் ஆயிடுச்சு'

வயதான கணவர் அலுத்துக் கொண்டார்.

'இட்ஸ் ரிடிக்குலஸ். எவ்ளோ அட்வான்ஸ்ட்டு டெக்னாலஜி இது. இங்க போயி க்யூ, வெயிட்டிங், பக்ஸ்-ன்னு இருக்கலாமா? ஒவ்வொருத்தனும் எவ்ளோ பாடுபட்டு இங்க இடம் பிடிக்க வேண்டியதா இருக்கு. ஏதோ சீனியர் ஸிட்டிஸன்கிறதால பர்ஸ்ட் ஸ்டேஜ்லயே ஷிப்ல அட்மிஷன் கொடுத்துட்டான்'

'ஆமாமா.. இன்னும் பூமியிலிருந்து 400 கோடி ஜனங்களை ஸ்டேஜ்-பை-ஸ்டேஜாத்தான் நோவாவுக்கு கொண்டு வருவாங்களாம்'

'அதுக்கு இன்னும் 3 மாசம் ஆயிடாது?'

'மைட் பி. என் தம்பி பேமிலிக்கு கூட அடுத்த மாசம்தான் அட்மிஷன் போட்டிருக்காங்க. என் மகள் இங்க வர இன்னும் 47 நாள் இருக்கு'

'கரெக்ட்.. இந்த அலாட்மண்ட்டே ஒரு பெரும் இம்சை. வயசை வச்சு ஸார்ட் பண்றாங்களா இல்லே இடத்தை வச்சான்னு தெரிய மாட்டேங்குது. இருந்தாலும் இட்ஸ் எ நைஸ் இன்னோவேஷன்! இந்த க்ளெஸ்டர்-நோவாங்கிறது...'

ரோஹிணி என்ற அந்த வயதான அம்மாள், கணவரைத் தொட்டு,

'சும்மா தொணதொணன்னு பினாத்தாம அமைதியா வாங்க. அப்புறம் பிரஷர் ஏறிக்கப் போறது'

'சும்மா இருடி. ஐ நோ ஆல்'

என்று மனைவியை அதட்டிவிட்டு பின்னால் நின்றவிடம் பேச்சைத் தொடர ஆரம்பித்தார்..

'ஸார்.. அலாட்மண்ட் கூட வாங்கிடலாம். ஆனா இந்த கம்யூனிகேஷன் இருக்கே அதுதான் பெருந்தொல்லை. பாருங்களேன், வந்து 2 நாளாயிடுச்சு.. இன்னும் பையன்னு ஒரு ஃபோன் போட முடியலே'

'அட சும்மாயிருங்க ஸார்.. போன் கம்யூனிக்கேஷனுக்கு சொல்றீங்களே.. நாங்க நேத்து பூரா ஒரு ஹிந்தி க்ரூப் கூட மாட்டிக்கிட்டேன். ஒரு வழியா கருப்புச் சட்டைக்காரங்களப் பிடிச்சு தமிழ் க்ரூப் மாத்திக்கிட்டு வந்தோம்'

'ஓ.. இந்த ப்ராப்ளம் வேற இருக்கா? நான் லாங்குவேஜ் பாத்துத்தான் மனுஷங்களை பிரிக்கறாங்கன்னு நெனச்சுக்...'

வயதான கணவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே முன்வரிசைக் கூட்டத்தில் சலசலப்புக் கேட்டது. என்ன என்று திரும்பும் முன் சடாரென ஒரு உருவம் இவர்கள் அருகில் வந்து விழுந்தது. வேகமாக ஓடிவந்த கறுப்புச் சீருடை பாதுகாவலர்கள் கீழே விழுந்தவரை எழுப்பி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள்.

இழுத்துச் செல்லப்பட்டவர் அடர்சாம்பல் சீருடை கொண்டிருந்தார். பாதுகாவர்கள் பிடியிலிருந்து திமிறியவராக,

'ஸ்டாப்பிட்.. இடியட்ஸ்.. என்னால இங்க இருக்க முடியாது.. கொலைகாரங்களா.. இது என்ன ஜெயிலா? என்ன மாதிரியான அபத்தம் இது..'

பாதுகாவலர்கள் அவரை இறுக்கமாக பிடித்து இழுக்க முயன்றனர். இன்னொரு பாதுகாவலர் மயக்க மருந்து துப்பாக்கியை அவர் மீது பிரயோகிக்க முயன்றார். பிடியிலிருந்தவர் திமிறிக்கொண்டேயிருந்தார்..


'இடியட்ஸ்... முட்டாள்தனமான டிஸைன் இது. நான் சொன்னது இது இல்லே. இது எல்லாமே தப்பு...'

என்றவராய் கூட்டத்தைப் பார்த்து,

'எதுவும் உங்களுக்குப் புரியலியா? ஏன் இங்க வந்து மாட்டிக்கறீங்க? இது உங்களை காப்பாத்தப் போறதில்ல.. நீங்க பேசாம பூமியிலேயே.....'

அவர் சொல்லி முடிக்கும் முன் கைகளை முதுகு பக்கமாக முறுக்கி எலிபோல தரையில் படுக்க வைத்தனர். ப்ஸக்க்....மயக்க மருந்து பிரயோகிக்கப் பட்டு விட்டது. அவருக்கு கண்கள் சொருக ஆரம்பித்தன.குழறலான குரலில் இங்க வராதீங்க.. தப்பிச்சுப் போயிடுங்க.. ப்ளீஸ்.. என்றவாறே.... பின் சில நொடிகளில் மயங்கிவிட்டார்.

வரிசையில் நின்ற அனைவரும் திக்கித்துப் போயிருந்தனர். வயதான தம்பதியினர் எதுவும் பேசத் தோன்றாமல் உறைந்து போயிருந்தனர். மயங்கிக் கிடந்தவரை லாவகமாக பாதுகாவலர்கள் தூக்கிக் கொண்டுப் போனார்கள்.

வரிசையில் நின்றிருந்தவர்கள் கொஞ்ச நேரம் பரபரப்பாக பேசிக்கொண்டனர். அப்புறம் சிறிது நேரத்திலேயே சகஜமாகிவிட்டார்கள். பின் மொத்த வரிசையும் கெளண்டர் இருக்கும் பக்கமாக திரும்பிக் கொண்டது இயல்பாக. முதிர் தம்பதிகள் ஒருவரையொருவர் கலவரமாகப் பார்த்துக் கொண்டனர்.

மனைவி கணவரிடம் திரும்பி,

'உங்க கால்கிட்ட ஏதோ கிடக்குது பாருங்க..'

கணவர் குனிந்து காலருகே கிடந்த அதை எடுத்தார்.

'ஏதோ பேட்ஜ் போலிருக்குடி! அந்த தள்ளுமுள்ளுல கீழே விழுந்திருக்குமோ??'

பேட்ஜ்தான் அது. அடர்சாம்பல் நிறம் கொண்ட பேட்ஜ். இழுத்துச் ​செல்லப்பட்டவரின் சீருடை நிறம் ​கொண்ட ​பேட்ஜ்.

'என்ன பேரு போட்டிருக்குங்க?' என்றார் மனைவி.

'ராமகிருஷ்ணன்..' என்றார் கணவர்.

க்யூ மெதுவாக நகர ஆரம்பித்தது.

*
(மாறுதி​சை பற்றி ​தொடர்பதிவு எழுதப் பணித்த நண்பர் விஜய்-க்கு (அகசூல்) நன்றி)

Wednesday, June 30, 2010

நல்ல பிளாக்குன்னா...Template change play maniya (TCP Maniya) என்கிற மர்மமான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளேன். மருந்து சொல்லுங்கள்.

என்று ஆதிரன் அறிவித்ததாலும், அதற்கு காலடி பின்னூட்டியதாலும்

ஜகன் இந்த பின்னூட்டம் எல்லாரும் படிக்க வேண்டியது.
என்று
பத்மா பணித்ததாலும்... இது இங்கு இப்படி இடுகையாகிறது:
. . .

டெம்பிளேட்டுகளை மாற்றுங்கள். வியாதி அல்ல விளையாட்டுதான். சில கட்டுப்பாடுகள் எடுத்துக்கொள்ளலாம்.

1. நம் எழுத்துக்கு தக்க டெம்பிளேட் முக்கியம் (நிறைய வலைத்தளங்கள் கருநிறப் பின்னணியில் இருக்கின்றன. கவிதை, புனைவு போன்றவற்று இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் சமையல் குறிப்பு, அனுபவக் கட்டுரை போன்றவற்றுக்கும் இப்படி அடர்வான நிறங்கள் தேவையா? Blog doesn't mean black of course.)

2. நமக்கென்று ஒரு வர்ணம் அல்லது பல வர்ணங்கள் என நிறுவிக்கொள்ளலாம். வர்ணக் கூச்சல் கண்களை மட்டும் குழப்புவதில்லை (காலடியில் நான் பயன்படுத்துவது இரண்டே வண்ணங்கள்தாம் - சாம்பல் மற்றும் ஊதா)

3. நல்ல வலைத்தளத்தின் அடையாளங்கள் சில:
 • குறைந்த எடை (கண்டமேனிக்கு விட்ஜெட்கள் (widgets / gadgets) சேர்த்து லோடிங் டைம்மை அதிகம் செய்யக்கூடாது)
 • எளிதான நடை (easy navigation - வாசகர்கள் பெரிதும் பயன்படுத்தும் லிங்குகள் முதலில் வருவது. மற்றவை கடைசியில்)
 • நம்பகத்தன்மை (நம் காசுக்கோ அல்லது நேரத்துக்கோ இது குந்தகம் தராது என்ற எண்ணம் வாசகர்களிடம் ஏற்படவேண்டும்)
 • தள அமைதி (குறுக்கும் நெடுக்கும் ஓடுகிற வாசகங்கள் அல்லது திடீரென தோன்றுகின்ற பாப்-அப்கள் இல்லாமல் இருப்பது)
4. எழுத்துரு (font) மற்றும் அவற்றின் அளவுகள் (font size) ஒரே தரத்தில் இருப்பது நன்று

5. பின்னணி மென்மையான வண்ணத்தில் இருக்குமானால் எழுத்துக்கள் அடர்வான நிறத்தில் இருத்தல் நலம் (மஞ்சள் நிற பின்னணியில் வெண்ணெழுத்துக்களை வாசிக்க முடியாதல்லவா? அதேபோல் கீழ்க்கண்ட நிறப்பிணைப்புகளைத் தவிர்க்கலாம்
6. வலைப்பூவின் எதிர்பார்ப்புகள், தகுதிகள் மற்றும் சாத்தியங்கள் புரிந்து கொண்டு தளத்தை வடிவமைத்தல் சிறப்பு
 • கம்யூனிஷம் தான் உங்கள் பிரதான நிறுவல் என்றால் சிவப்பு நிற அடிப்படையை தவிர்க்க முடியாது
 • வானம் என்று பெயர் கொண்ட வலைப்பூவுக்கு ரோஜாப் பூ நிறத்தில் பின்னணி அமைப்பதை விட ஊதா நிறம் உகந்தது
 • படிப்பவர்களில் வயதானவர்கள், பார்வை குறைப்பாடுகள் (நிறக்குருடு உட்பட), மற்றும் சிறுதிரையில் பதிவைப் படிப்பவர்கள் (செல்போன் மாதிரி) செளகர்யங்களை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
 • வலைத்தளம் ஒரே வடிவமைப்பில் இருந்தால் அலுத்துப்போக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க அவ்வப்போது சில மாறுதல்கள் கொண்டு வரலாம். சடாரென வானவில் பின்னணியில் இருந்து பீரங்கிகள் அணிவகுப்பு பின்னணிக்கு மாற்றுவது வாடிக்கையான வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்
 • ஒவ்வாமை ஏற்படுத்தும் நிறங்களைத் தவிர்க்கலாம் (மென்சிவப்பு பின்னணி, சிவப்பு பின்னணி போன்றவைகள்)
 • நாம் எழுதுவது மட்டும் கருத்தல்ல; வலைப்பூவின் வடிவமைப்பே ஒரு கருத்துதான்
 • படிப்பவர்கள் வசதி, காலமாற்றம், ஊடக மாற்றங்கள் மற்றும் நடைமுறை கருத்துக்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வடிவமைப்பில் அவ்வப்போது புத்தாக்கம் செய்யவேண்டும்
7. கண்களுக்கு கனிவான வலைத்தளம் என்பது அதன் எளிமையான தோற்றத்தால்தான் சாத்தியமாகிறது என்ற புரிதல் அவசியம்

8. இலவசமாகக் கிடைக்கிற காரணத்தால் டெம்பிளேட்டுகளை அடிக்கடி மாற்றுதல் கருத்தியல் ரீதியான நம் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்

9. முக்கியமாக, இடுகைகளுக்குப் பயன்படுத்துகிற படங்கள் காப்பி ரைட் பிரச்சினையில்லாமல் இருக்கிறதா எனக் கவனித்துப் போடவும்

10. அதிமுக்கியமாக, நம் வலைப்பூவின் வடிவமைப்பு கட்டுப்பாடு மொத்தமும் நம் கைவசம் இருக்கிறதா என்பது முக்கியம் (சிறு மாறுதலுக்குக் கூட அடுத்தவரை நம்புகிற நிலை இல்லாமல் இருக்க வேண்டும்)

Friday, June 18, 2010

கும்மால்டிக்ஸ்ஸா..

அதுக்கென்ன தங்கத்துக்கு!..:

சுருள் முடி, லேசானது முதல் மிதமானது வரை தாடி, மதுரை முகம், அடாவடிப் பேச்சு இதுதான் செந்தாமரைச் செல்வன்.
அருள்மிகு தண்டாயுதபாணி பாலிடெக்னிக் ஃபார் மென் (பழனி) பாலிடெக்னிக்கில் எனக்கு சூப்பர் சீனியர்.
சாப்பிட்டாச்சா சம்பிரதாயக் கேள்வி அல்லது எத்தனை அரியர்ஸ் இருக்கு மச்சி போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் உற்சாகமாய் அதுக்கென்ன தங்கத்துக்கு என்பார்.
இந்த வார்த்தை எல்லாக் கேள்விக்கும் விடையாக கச்சிதமாக பொருந்துகிறதே என்ற வியப்பு எனக்கு! நீங்க கூட சொல்லிப் பாருங்களேன்: அதுக்கென்ன தங்கத்துக்கு.

கருத்தில்லேன்னுட்டாய்ங்க:

என் ப்ரிய பாலிடெக்னிக் சூப்பர் சீனியர் ராஜராஜன். அழகான கையெழுத்து, ஏகப்பட்ட மொக்கை, கிரிக்கெட் சூரப்புலி, அன்பான அண்ணன் இதுதான் ராஜராஜ விலாஸம். அசல் விலாஸம் மதுரை ஆரப்பாளையம்.

கடிதம் எழுதும் போது இப்படிக்கு என்றால் இப் எழுதி அதனுடன் படிக்கட்டு வரைந்து க்கு போட்டு முடிப்பார். மொக்கைராஜன் :)) கடிதத் தேதி 40/40Day என எழுதுவார். கேட்டால் ட்யூஸ்டே-வாம். அவரைப் பொருத்தவரை கடிதம் எந்தக் கிழமையில் எழுதினாலும் அது டியூஸ்டேதான். என்னா கரச்சல்?? பார்த்து 12 வருடங்கள் ஆயிற்று! இவரின் வார்த்தை உபயம்தான் கருத்தில்லேனுட்டாய்ங்க. டாங்க அல்ல டாய்ங்க.

அண்ணா காலேஸ் ஸ்ட்ரைக் எப்ப முடியும்?கருத்தில்லேன்னுட்டாய்ங்க
திருவள்ளுவர்ல என்ன படம்? கருத்தில்லேன்னுட்டாய்ங்க
மெஸ்ல சாப்பாடு ரெடியா? கருத்தி.....ய்ங்க
கோவிலுக்கு ஒரு ரவுண்டு போலாமா? கருத்....ய்ங்க
நீயெல்லாம் மனுஷனா? கரு.....ய்ங்க.....

வார்த்தையின் அர்த்தம் no idea என்பதின் தமிழாக்கமாம். சிலதுகள் மாநாடு இல்லாமலும் நடக்கின்றன :))

கும்மால்டிக்ஸ்:

எஸ்.பி. பாண்டி. பாலிடெக்னிக் வகுப்புத் தோழன். ஆனால் வயதில் சூப்பர் சீனியர். பாண்டியின் ஊர் போடி. எங்கள் பாலிடெக்னிக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஒருமுறை தேர்வு வகுப்பில் அனைவரும் எழுத ஆரம்பித்த சமயம். கல்லூரி முதல்வர் வந்தார். ஹால் டிக்கெட்டில் யாருக்காவது என் கையெழுத்து வேணுமா? என்றார். பாண்டி உற்பட சிலர் எழுந்தார்கள். அவரவர் இருக்கைக்கே வந்து கையெழுத்திட்டார் முதல்வர். என்னே தன்னடக்கம்? அதுதான் சொன்னேன் எங்கள் பாலிடெக்னிக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.

சும்மா கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டுப் போகாமல் பாண்டியிடம், 'இதையெல்லாம் முன்னாடியே வாங்கக் கூடாதா' எனக் கேட்டார்.
'ஸார்.. கல்யாணத்து போயிருந்தேன்'
'ஹால் டிக்கெட் கையெழுத்து கூட வாங்காம அப்படி யார் கல்யாணத்து போனே?'

'எ.. என் கல்யாணந்தான் ஸார்'

முதல்வர் அதற்கப்புறம் யாரிடம் கேள்வியே கேட்கவில்லை.

இப்பாண்டிதான் சீட்டு விளையாடும் போது அடிக்கடி 'கும்மால்டிக்ஸ்' என்பான். கமுக்கமாக ஆங்கில டிக்ஸ்னரியில் கூடத் தேடிப்பார்த்தேன். ம்ஹும்!

சாப்பாடு கும்மால்டிக்ஸா இருந்துச்சு, கும்மால்டிக்ஸ் ஃபிகர்டா, கும்மால்டிக்ஸா ஒரு சாத்து - எல்லாம் கும்மால்டிக்ஸ் மயமாகிப் போனது. வார்த்தையின் அர்த்தங்கள் சிலசமயம் பார்த்துப் புரிந்து கொள்ளணும் போல. கும்மால்டிக்ஸ்ஸை நாம் எப்படி வேணாலும் பயன்படுத்தலாம்; எங்கு வேணாலும். காப்பிரைட் பிரச்சினையில்லை :))

Tuesday, June 1, 2010

தொடர்பு எல்லைக்கு அப்பால்...

நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ணை அழைத்திருக்கிறீர்களா? அழைத்ததும் நீங்கள் 99 சதவீதம் பதில் பெறுவீர்கள்.

இந்த மொபைலுக்கு என்னை அருளியவன் சரவணன். சரவணன் ஒரு எலக்ட்ரீஷியனாக எனக்கு அறிமுகமானான். ஐந்து வருடங்களுக்கு முன் பெங்களூர், சேஷாத்ரிபுரம், முதல் பிரதான வீதியிலுள்ள ஒரு மோட்டார் வீட்டுக்கு நான் குடியேறியபோது சரவணனைச் சந்தித்தேன். ஒருவர் மட்டும் வாழ அனுமதிக்கும் சிறு அறை அது. ட-போன்ற வடிவம் கொண்ட அந்த அறையில் ஒருவர் மட்டும் கால் நீட்டித் தூங்கலாம். விருந்தாளிகள் ட-வை அனுசரித்துப் படுத்துக்கொள்ள அறை அனுமதிக்கும்.

நீங்கள் அழைத்த அலைபேசியிலிருந்து காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி பாடல், மிஷன் இம்பாஸிபிள் தீம் ம்யூஸிக் அல்லது அதட்டும் பெண்குரல் போன்ற எந்தவிதமான ரிங்டோன்களும் கேட்கச் வாய்ப்பிருக்காது.

அறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு எர்த்திங் கொடுக்க வேண்டியிருந்தது. இது தெரியாமல் கம்ப்யூட்டரை இயக்கி CPU-வால் ஒருமுறை தாக்கப்பட்டிருந்தேன். சரவணனை உன்னதராஜ் ஜிம் மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். ஜன்னலைத் திறந்தது போன்ற சிரிப்பைக் கொண்டிருப்பான் சரவணன். ஒல்லியான இறுகிய உடல்வாகு. அதிகம் போனால் அப்போது 24 வயது இருந்திருக்கலாம்.

எனக்கு எந்த செலவும் வைக்காமல் அவனே கம்பிகளைக் கொண்டுவந்து, மெயினை ஆப் செய்து எர்திங் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

'மெயின் ஆப் பண்ணாமலே வேலை செய்வேங்க.'
'வேணாம்.. எதுக்கு ரிஸ்க்?'
'இதுக்கே இப்படீங்கறீங்களே.. நான் கரண்ட் இருக்கிற வயரையேப் பிடிப்பேன். என்னை ஒண்ணும் பண்ணாது.'

அவன் சொன்னால் எதையும் நம்பிக்கொள்ளலாம். சிலரிடம், பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக இலகுவாக இருந்துவிடுகிறோம். வேலை முடிந்தும் சரவணனோடு ஒரு நட்பு உருவாயிருந்தது.

அடுத்த முனையிலிருக்கும் நான், உங்களை கத்திக் கத்திப் பேசச் சொல்லலாம். சிலசமயம் எரிச்சலாகத் தொடர்பை(யே) துண்டித்துவிடலாமே என்று உங்களுக்கு யோசனை வரலாம். அது இயல்பே.

தனியறையில் எலிபோல வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அப்போது யாரோடு வேண்டுமானாலும் நட்பு, மப்பு பாராட்ட முடிந்தது.​சரவணனும் நானும் சிலமுறை அறையில் சரக்கடித்து ட-வாகியிருக்கிறோம். என்ன வற்புறுத்தினாலும் எனக்கு கோடைஸ் ரம்மே போதும் என்று பிடிவாதமாக இருப்பான். வயிறு எரியுமே என்று வருத்தமாக இருக்கும்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணியை அப்படியே கடகட-ன்னு குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டிக்கிட்டு இருந்தாப் போதும். சும்மாக் கலகலன்னு போயிடும். வயிறு ஃப்ரீ ஆயிடும்' என்பான்.

ஒருவனுக்கு வாழ்வில் இதற்கு மேல் உன்னதம் வேறு ஏதும் இருக்கிறதா என்ன?

என்னிடம் இருக்கும் இந்த மொபைலை என் மொபைல் என்று சொல்லமுடியாதவனாயிருக்கிறேன்.

அறைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொண்டுவருவான். அது அநேகமாக ஒரு ஜங்ஷன் பாக்ஸ், கேபிள் அல்லது சதுர செவ்வக வடிவிலான எலக்ட்ரிக் யூனிட்கள்.

'பாஸு இதை இங்க மேல வச்சிடறேன். அப்புறம் வந்து எடுத்துகிறேன்.' என்று உரிமையாக நடந்துகொள்வான்.

மாஸ்டர் ஒருமுறை என்னிடம்,
'அவனெதுக்கு இங்க வந்து இதெல்லாம் வைக்கிறான். வேணாம் ஜெகன். எதுவும் வம்பாயிடும்' என்றார். எனக்கு உதறலாக இருந்தது. உடனே சரவணச் சிரிப்பு நினைவுக்கு வந்து சமாதானம் சொல்லும்.

மிகச்சரியாக வாய்க்கு முன்னால் வைத்துப் பேசினால்தான் நான் இங்கு அலறுவது உங்களுக்குக் கேட்கும்.வாய்க்கும் காதுக்கும் மொபைல் மாறி மாறித் தாவுதைப் பார்த்தால் இது உண்மையிலேயே 'மொபைல்'தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளலாம்.

அப்போது என்னிடம் நோக்கியா 2600 மொபைல் இருந்தது. மோனோக்ரோம் திரை, பட்டாம்பூச்சி போன்ற எண்களும், எப்ஃஎம் வசதியும் கொண்டது. அன்று அறைக்கு சரவணன் ஒரு மொபைலோடு வந்தான். சாம்சங் என்று அறிமுகமான அது வண்ணத்திரைக் கொண்டிருந்தது.

'பாஸ்.. இதை வச்சிக்கிட்டு உங்க செல்லைத் தர்றீங்களா?'

புரியாமல் விழித்தேன்.

'இந்த செல்லுல ரேடியோ இல்லீங்க பாஸ். நான் இப்ப வேலைக்கு தூரமா போவேண்டியிருக்கா.. அதுதான் பாட்டுக் கேட்டுக்கிட்டே போலாம்னு.. கொஞ்ச நாள் தான்' என்றான்.

இலவசமாக ஒரு சிரிப்பும். செல் என்ன ஜீனே தரலாம். என் நோக்கியாவை சரவணிடம் தந்தேன். அப்படியே சார்ஜர்களும். அதற்கப்புறம் எப்போதாவது கண்களில் சிக்குவான். காதுகளில் ஹெட்போனின் வெண்ணிற வயர்கள் சுற்ற அவன் திரிவதைக் கண்டால் அசல் எலக்ட்ரீஷியன்தான் என நம்பலாம்.

இம்மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை வெயிலில் படிக்க முடிவதில்லை. குறுஞ்செய்திகள் பகல்-இரவு வித்யாசம் கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

அவன் கொடுத்த மொபைலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சார்ஜர் மட்டும் பிரச்சினை செய்து கொண்டிருந்தது. ஒருநாள் அறைக்கு வந்த மாஸ்டர் மொபைலைப் பார்த்துவிட்டு விசாரிக்க எல்லாவற்றையும் சொன்னேன்.

'நீங்க ஒரு கேனைங்க..... ஏன் உங்க மொபைலை கொடுத்தீங்க? ஸப்போஸ் இது திருட்டு மொபைலா இருந்தா என்னாகிறது??'

பண்புப்பெயரில் ஆரம்பித்து வினாக்களில் முடியுமாறு அமையும் வாக்கியங்கள் நிம்மதியைக் குலைத்து விடுகின்றன.

'ச்சேசே.. அப்படியெல்லாம் இருக்காதுங்க'

'என்னங்க இப்படி இருக்கீங்க.. டூப்ளிகேட் சார்ஜரைப் பார்த்துமா உங்களுக்குத் தெரியலே?'

அப்படியா? இருக்கலாம். வஸ்துகளைக் கொண்டு மனிதர்களை எடைபோடும் திறன் எனக்கில்லையோ? வயரின் உள்கம்பி போல யார் வேணாலும் பற்களில் கடித்து இழுத்துக் கொள்ளலாமோ?

இது Samsung T-100 மொபைல். எம்பி3, எஃப்எம் என்று எந்த இசையும் கிடையாது. Sam'sung'-ல் உள்ள singன் இறந்த காலம் இதற்கு சாட்சி.

மூன்றாவது ரவுண்டில் சரவணன் முன்பு சொன்னது:

'ஜெகன்.. அம்மாவுக்கு நான் இந்த வேலைக்கு போறதே பிடிக்காது'
'....'
'அப்பா ஈ.பி. லதான் வயர்மேனா இருந்தாரு..'
'....'
'ஒருநாள் டூட்டியில் கரண்ட் அடிச்சி செத்துப் போயிட்டாரு. ஆனா, எனக்கு கரண்ட் வேலைன்னா சின்ன வயசில இருந்தே ரொம்ப பிடிக்கும். கரண்ட் இருக்கிற கம்பியை கையிலயே பிடிப்பேன்.'
'....'
மின்சாரம் மனிதர்களவுக்கு கொடூரம் இல்லை போலிருக்கிறது. சிரிப்புகள் ஒளியும் ஒலியுமாக மின்சாரத் தன்மையோடு இருக்கின்றன. சிரித்த முகங்களாக நினைவுக்கு வருபவர்கள் எப்போதும் மறப்பதில்லை.

12 மணிநேரங்களுக்கு மேல் பேட்டரி சார்ஜ் இருப்பதில்லை. ஆனால் பாருங்கள்.. 24 மணிநேரமும் சார்ஜரில் போட்டுவைத்தாலும் அதுபாட்டுக்கு சார்ஜ் ஏறிக்கொண்டேயிருக்கும்.
நான்காண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் சரவண மொபைல்தான் கைவசம். என்றேனும் எதிர்ப்பட்டு, பாஸ்​மொபைலைத் திருப்பிக் கொடுங்க என்று சரவணன் கேட்க நில-கால-டவர் சாத்தியம் உண்டுதான்.

திருமணம் நிச்சயமானதும் மனைவிக்கு வாங்கித் தந்த மொபைல் கேமரா வசதி கொண்டது. கூடவே அப்பாவுக்கும் ஒரு மொபைல் வாங்கினேன். என் மொபைலில் கேமரா இல்லியா என்றார் தந்தை.

எதிர்படுகிற மனிதர்கள் செல்களால் தங்கள் ஆளுமையை மெய்ப்பிக்கிறார்கள். வஸ்துக்களால் மனிதர்களை மதிப்பிடத் துவங்கிவிட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது. மெல்லிய மாடல்கள் இப்போது மறைந்து விட்டன. ஜியோமென்ட்ரி பாக்ஸ் அல்லது டிபன் பாக்ஸ் அளவுகளில் எடுத்துப் பேசப்படும் மொபைல்கள் உன்னதமானவை. ப்ளூடூத் கடித்தக் காதுகளாக ஹாண்ட்ஸ்-ப்ரீயாக பேசும் நபர்கள் திடுக்கிட வைக்கிறார்கள்.

இந்த மொபைலில் சில பட்டன்களை புல்லாங்குழல் துளைகள் போல தொடவேண்டும், சிலவற்றின் மேல் விரல்கள் குத்தாட்டம் போட வேண்டியிருக்கும்.

சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த அப்பாவிடம் புது மொபைல் இருந்தது. அதில் 3 மெகாபிக்ஸல் கேமாரா கூட உண்டு. நான் வாங்கித் தந்த மொபைல்?

'அது வொர்க் ஆகலடா. அதான் மாத்திட்டேன். நீ இன்னும் அதே மொபைல்தானா? வேணா இதை எடுத்துக்க'

வேண்டாம். பளுவை சுமந்து கொண்டிருப்பதை விட அதை பெற்றுக் கொள்ளும் கணமே வலியானது. அப்பாக்கள் மகன்களின் பரிசுகளை 3ஜி அவரசத்தில் கடாசுதல் இயல்பே. எதுவும் சுலபம்தான். ஒரு பொருளில் சிரிப்பைக் காணும் திறனும் பெற்றுவிட்டேன் போல. உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன?

Monday, May 24, 2010

Cyan நிறத்துப் பூக்கள்

வாகனங்கள் வடிந்த பின்மாலையில்
சவத்தின் கனத்தில் திரிகிறது காற்று

பெளணர்மி தினவில் கரை மோதும்
தூரத்து நீர்ம சுருள்கரங்கள்
எல்லாக் கறைகளையும் கரைக்க வல்லது -
சூரியன்கள், நிலாக்கள், உதிரம் படிந்த மண்துகள்கள்.

கேவல்கள் தராசில் அளந்த கவனம் கொண்டன
இரவுக்குள் நீலம் போல இங்கு
அழுகை கரைந்து கொண்டிருக்கிறது.
தனியாக வரும் கொழுத்த வண்டிகள் பிரேதங்களையும்
அயன்களாக மாறி குருதியுடன் கலக்கும்
cyan நிறத் துகள்கள் மரணத்தையும் தருவிக்கின்றன.

கழுவப்பட்ட வீட்டின் ஈரம் காயும்முன்
அடுத்தடுத்த வீடுகளில் கேவல்கள் அரும்ப
புதைத்தவன் மண்ணில் பூக்கள்
cyan நிறத்திலேயே பூக்கின்றன.

Tuesday, May 11, 2010

குரல்களின் வேட்டை

ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?

உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?

இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.

ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.

முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.

ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?

0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்​வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்கு​வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது ​செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்​செல்லமுடியும். டூர் கிளம்பும்​போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்​கொண்டிருக்கிறோம்..??

சொல்றேன்.

அநன்யா மஹாதேவன் நம்மிடம் பிடித்த பாடகர்கள் ஐவரை எழுதப்பணித்திருக்கிறார். அதுதான் நாம், நம் ஸ்ஸ்டைலில் கிர்ர்ரடித்துக் கொண்டிருக்கிறோம். போதும் வெளாட்டு; ஆளைக் காமி, நாங்க கிளம்பணும் என்பவர்களுக்காக...

எனக்குப் பிடித்த பாடகர்கள்:

1. கீதா தத்:

ஒரு பெங்காலி. இவரது அசாதாரண வாழ்க்கை முறையே என்னை ஈர்த்தது எனலாம். 1930ல் கிழக்கு வங்காளத்தில் பிறந்த கீதா ராய், பம்பாய்க்கு குடிபெயர்ந்து பின் எஸ்.டி.பர்மன் மூலம் இந்தி திரையிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பின்னர் புகழ்பெற்ற இயக்குனர்-நடிகர் குரு தத் படத்தில் (Baazi) பாடும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணமும் ஆனது.

கீதா ராய், கீதா தத் ஆனார்.

கீதா தத் பாடலை நீங்கள் முதலில் கேட்கும்​போது அது உங்களைப் பெரிதும் கவரவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கீதாவின் குரல் கவர்ச்சி மிக்கதாக தோணாது. ஆனால், பாடலுடன் அந்தக் குரல் பயணிக்கும் விதம் நம்மை கொள்ளைக் கொள்ளும். நம் காதுகளுக்கு கீதாவின் பிளாக்-அன்ட்-ஒயிட் குரல் தொன்மையானதாகத் தோன்றும். அதில் ஒரு அமானுட வசீகரம் அக்குரலின் பயணத்தில் சிக்கும். Babuji dheere chalna என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு இப்பாடலில் ஏதாவது வித்யாசம் நிரடினால் உங்களுக்கு கீதாவைப் பிடிக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் Pyaasa படத்தில் வரும் Jane Kya Tune Kahi பாடலைக் கேளுங்கள்.

பொதுவாக 1950-களில் ஹிந்தி சினிமாவில் பிரபலாமான சிஜடி வகைப் படங்களின் Jazzy வகை பாடல்கள் (Ankhon Mein Tum Dil Mein Tum Ho ஒரு உதாரணம்), பஜன்கள், விரகதாபப் பாடல்கள் மற்றும் சோகமயப் பாடல்கள் (விசும்பி விசும்பி அழுது​கொண்டே பாடுவது) இவற்றுக்குப் பொருத்தமாக இருந்தது கீதாவின் குரல்.

லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகு கீதா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். லதா தேர்ந்த சாஸ்திரீய ஞானமும், பலதரப்பட்ட பயிற்சியும் கொண்டவர். சிறுவயதிலிருந்தே பாடகியாக இசைக்காகவே வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் எவ்வித இசைப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்த கீதா 2ம் இடத்துக்கு வந்ததும் நியாயமே. இருந்தும் லதா மங்கேஷ்கருக்கு கீதா மேல் ஒரு பயம் இருந்து​கொண்டே இருந்தது.

கீதாவின் குரலின் இழுவிசை சாஸ்திரீய ஜாலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருந்தும் இசையமைப்பாளர்களால் சோகப்பாடல்கள் பாடுவதற்காக விதிக்கப் பட்ட குரலாக அது மாற்றப்பட்டது. Aayega aanewala பாடல் இவ்வகையே. சோகப்பாடல்கள் கீதாவை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டன எனலாம். ​சோகமயமாக அவரின் இயல்பு வாழ்க்கையும் மாறியது.

கீதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை - வஹீதா ரஹ்மானால். புகழ்பெற்ற ஹிந்தி நடிகை (செங்கல்பட்டுக்காரர்). வஹீதாவுக்கும் குரு தத்-க்கும் காதல் மலர்ந்தது. கீதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் குரு. குருவின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் வஹீதா. பாருங்கள்.. திரையில் வஹீதா வாயசைக்கும் பாடல்களை கீதாவே பின்னணியில் பாட​வேண்டியிருந்தது. காகஸ் கீ பூல் இந்த பின்னணி நாடகத்திற்கு ஒரு உதாரணம்.
இரு பெண்களின் காதல்களுக்கிடையே ஊசலாடிய குருதத் பின் தற்கொலை செய்து கொண்டார். கீதா குடிக்கு அடிமையானார். மீளாப்பயணமாக அது அமைந்தது. பணச்சிக்கல்​பொருட்டு ஒரு பெங்காலிப் படத்தில் கதாநாயகியாகக் கூட நடித்தார். எதுவும் குருதத் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. சிந்து பைரவி சிவக்குமார் மாதிரி மிதமிஞ்சிய குடிபோதையில்​மேடையிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது சரிந்தும் விழுந்திருக்கிறார். தன்னை அழித்துக்​கொள்ளும் முனைப்பு கொண்டவர் போல் குடிக்க ஆரம்பித்தார். ஈரல் பாதிக்கப்பட்டு, 1972 ஜூலை 20 அன்று கீதா தத் மறைந்தார்.


ஷாஜி எழுதிய​சொல்லில் அடங்காத இசை புத்தகம் கீதா தத்தை அறிமுகப்படுத்தியது. காதில் விழும் கீதாவின் குரல் கறுப்பு-வெள்ளைப் பின்னணியில் பழைய காலத்துத் தெரு, பூங்கா, மாதர்கள், மெளனமாக ஊறும் மங்கலான மாலைப் பொழுது என என்னை காலங் கடத்துகிறது.

2. மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்

எம். எஸ். விஸ்வநாதன் படைப்பாற்றல் மிக்க பாடகராக எனக்குத் தோன்றுகிறார். நல்ல பாடகரின் தரம் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் புதிதாக பாடி உருவாக்க வேண்டும். சமரசம் அற்ற தனித்த குரலாக இருக்க வேண்டும். எம்எஸ்வி அப்படித்தான். அவரின் பாடகர் அவதாரம் மிகத்தனித்துவமானது. பிரம்மாண்டமானது.

எனக்கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ) என்ற படப்பாடலில் எஸ். பி. பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடியிருப்பார். ஒரே வரிகளை பாடுவதில் எம்எஸ்விக்கும் பாலாவுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிக்கலாம். இயக்குநர் சரணின் முதல்படமான 'காதல் மன்னனில்' எம்எஸ்வி நடித்திருப்பார். அதில் இதேப் பாடலை அவர் ஒரு காட்சியில் பாடும் போது அசாதாரண மாற்றங்களோடு இருக்கும். ஏனென்றால் எம்எஸ்வி ஒரு படைப்பாளி. ஒரு மெட்டை உருவாக்கும் படைப்பூக்கம் அப்படியே பாடலைப் பாடுவதிலும் கொண்டுவருகிறார்.

பார் மகளே பார் (பார் மகளே பார்), ஜகமே மந்திரம்.. சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்)
யார் அந்த நிலவு (சாந்தி), நீ நினைத்தால் இந்நேரத்திலே (நிலவே நீ சாட்சி), சொல்லத்தான் நினைக்கிறேன் (சொல்லத்தான் நினைக்கிறேன்) , கண்டதைச் சொல்கிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள்) போன்ற பழைய பாடல்களில் அவரின் பாடு-வளமை வேறு யாராலும் தொடரமுடியாத ஒன்று.

டி.எம். செளந்தர்ராஜன் 'யார் அந்த நிலவு' பாடலை எம்எஸ்வி பாடிக்காட்டியபோது பயந்துவிட்டேன் என்றிருக்கிறார்... பி.பி.ஸ்ரீனிவாஸ் - அவர் பாடியதில் பத்து சதவீதத்தை மட்டும் தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது... பி. சுசீலா - எந்த ஒரு பாடகருமே எம்எஸ்வி பாடிக்காட்டிய அளவுக்கு அவருடைய மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை. எம்எஸ்வி பாடிக் காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறார்... வாணி ஜெயராம் - எம்எஸ்வி பாடும்போது வரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது... என்கிறது ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை.

ஆலால கண்டா (சங்கமம் - ஏ. ஆர். ரஹ்மான்) என் விருப்பப் பாடல்களில் ஒன்று. அதன் உச்ச ஸ்தாயி ஆலாபனைகளும் ஜதியும் அம்மெட்டை பிரம்மாண்டமாக ஆக்கிக் காட்டுக்கின்றன.

மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு (காதல் மன்னன் - பரத்வாஜ்), விடைகொடு எங்கள் நாடே கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ. ஆர். ரஹ்மான்) என அவரின் சமீபத்திய பாடல்களும் வேறொருவர் இசையமைத்த பாடல்களையும் தன் சொந்த படைப்பாற்றலால் வேறு பரிமாணத்தில் அளித்திருப்பார் எம்எஸ்வி.

எம். எஸ். வி முடிவில்லாத படைப்பாற்றல் மிக்க பாடகர்.

....
அநன்யா ஐம்பாடகர்களைக் குறிப்பிட வேண்டும் என்றிருக்கிறார். மேற்கத்திய இசையில், நம் மரபிசையில் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமைகள் நிறையபேர் உள்ளனர். ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பட்டியலாகத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் நிலையாக மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அல்லது பாடல் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நித்யஸ்ரீ-யின் செளக்யமா கண்ணே செளக்யமா-வை 4 மணிநேரங்கள் தொடர்ச்சியாகக் கேட்டதுண்டு. ஆனால் அவர் பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது.
இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))

Friday, May 7, 2010

வைரமுத்துவை வாசிக்கும் காலம்


மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
- ​வைரமுத்து.
அன்பு அண்ணன் க.சீ.சிவக்குமார் தன் வலைத்தளமான நள்ளென் யாமத்தில் கசடதபற என்று இடுகையிட்டிருக்கிறார். அதற்கு அண்ணனுக்கு நான் தீட்டிய ப்ப்பின்னூட்டத்தை இங்கு பதிவாக்கியிருக்கிறேன். காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக் கண்மணிகளுக்கும் இது போன்ற சிந்தனாசிந்தனைகள் வந்து சேரவேண்டுமென்பதே நம் அவா.. பேரவா!

அன்பு சிவா,

நர்சிம்-இன்
பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து... பதிவைப் பார்த்தேன்.

நமக்கு வைரமுத்துவை இப்போது பிடிக்காமல் போவதற்கு பொங்கி வளர்ந்த அறிவும் மடை திறந்து பாயும் இலக்கிய பிரவாகமும் காரணமாக இருக்கலாம்.

பால்யம் எப்போதும் தார்ரோட்டில் டயர் உருட்டிவிட்டுக்​கொண்டிருக்கிறது. நாம் வளர்ந்து விட்டாலும், பால்யம் யாரோ ஒரு சிறுவனாக இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

வாழ்வின் பருவங்கள் அப்படித்தான். அலங்கியம் தண்ட்ஸ் மாமாதான் மு.​மேத்தா கவிதைகளை முதலில் அறிமுகப்படுத்தியது. அப்போது அதே போல கவிதைகள் படைக்க​வேண்டும் என்று முனைப்பு இருவருக்கும் இருந்தது. அது ஒரு பருவம். ஞாபங்களை மீட்டெடுக்கும்​போது ஆசுவாசமாக இருக்கிறது.

உங்களின் ஒரு பழைய காதலை, பழகிய தோழனை, நெருக்கமாயிருந்த மரத்தை, வீட்டு சன்னலுக்கு அப்பாலான தேசத்தை, மழை நனைத்த வீட்டுக்கூரையை, ஒரு பூனையின் தூக்கத்தை, காதலியின் நகங்களை என நம் ஆல்பத்தின் ஏதோவொரு புகைப்படம் ​வைரமுத்துவின் கவிதையால் எடுக்கப்பட்டதாய் இருக்கக்கூடும்.

என் பதின்ம வயதுகளில் வைரமுத்து என்னை எடுத்துக்​கொண்டார். வாங்கிப் படிக்காமல் நம்மிடம் சேரும் கவிதைகள் வரிசையில் வைரமுத்துவிற்கும் இடமுண்டு. அலங்கியம் மாமா அல்லது அரிக்காரன்வலசு பாலா அல்லது அப்பா எடுத்து வரும் நூலக நூல் இப்படி.

பிடித்த ஆளுமைகளை வரைந்து விடும் நோய் கொண்டிருந்தேன். கமல், பீட்டில்ஸ், அப்பாசி இண்டியன், இளையராஜா,​வைரமுத்து இப்படி (சமீபமாக வரைந்த ஆளுமையைப் பற்றிச் சொன்னால் நீங்கள் என்னை மொத்தக் கூடும்)

குமுதத்தில் ஒருமுறை பேராசிரியர் (கவிஞர்) பழமலய்,வைரமுத்து காசுக்காக தன் ஆன்மா​விற்றிவிட்டார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு வைரமுத்துவும் பதில் (கவிதைதான்) கோபமாக எழுதியிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். என்னுடைய டைரியில் பப்ளிஷ்ஷும் பண்ணினேன். அச்சமயங்களில் கல்லூரியில் நண்பர்களிடையே கவிஞன் என்றே அடையாளப்பட்டிருந்தேன். வைரமுத்து பாணியில் நான் எழுதும் கவிதைகளுக்கு ஒரு ரசிகக் கூட்டமும் உண்டு. கல்லூரி விடுமுறையில் ஊர் திரும்பிவிட்டாலும், கடிதங்கள் வாயிலாக கவிப்போக்குவரத்து நடந்த காலக்கட்டம்.

அப்புறம் ஒருகணம் வைரமுத்து போரடித்து விட்டார். என் கவிதைகள் வைரமுத்து சாயல் ஒட்டிக்​கொண்டதாக அல்லது தாக்கம் நிறைந்ததாக உணர்ந்த சமயம் அது.

வைரமுத்துவையும் தாண்டிச்​சென்றால் நாம்தான் அறிவாளி.. அட்லீஸ்ட் கல்லூரி நண்பர்கள் மத்தியிலாவது வித்யாசப்பட்டுத் திரியலாம் என்ற தன்மதியில் வேகவேகமாக வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன், வ.ஐ.ச. ஜெயபாலன், பாலா, இன்குலாப், இந்திரன், யூமா.வாஸுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்தது. இருந்தும் வைரமுத்துவின் வரிகள் இப்போது கேட்கும்​போதும் / வாசிக்கும்​போதும் நினைவுகளின் சாலையில் டயர் வண்டியை உருட்டிவிடுகிறது.

கோவை ஞானியை ஒருமுறைப் பார்..... ஸாரி, தொட்டிருக்கிறேன் - உங்களுடன் இருந்ததால். ஞானி அப்போது நம்மிடம் பேசியதா அல்லது கனவு இதழில் படித்ததா என்று ​தெரியவில்லை.

ஞானி வைரமுத்துவின் விஷயஞானம் பற்றி குறிப்பிட்ட நினைவுண்டு. ஒரு சர்ச்சைக்குள்ளான புத்தகம் பற்றி ஞானி கேட்ட​போது அதற்கு வைரமுத்து தெரியாது என்று சொன்னாராம். வைரமுத்து போன்ற தேடலும் உழைப்பும் கொண்ட மனிதர் அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. வைரமுத்து நழுவுகிறார் என்பது ஞானியின் கருத்து.

இப்படி ஒரு வாசிப்பு - புள்ளிவிபரம், பூகோள அறிவு, வரலாற்றுக் குறிப்புகள் இப்படி இருந்தாலும் - கொண்ட வைரமுத்து எளிதாக தன் ஞானத்தை வேறுவகையான படைப்புகள் மூலம் மெய்ப்பிப்பது எளிது. அவரால் யாரையும் தாண்டிவிட முடியும் என்பது என் அனுமானம்.

ஆனால், தனக்கென ஒரு வாசகர்க் கூட்டம் இருப்பதால் அதே தரத்தில் தொடர்ந்து படைக்க வேண்டிய நிலைமையில் இருப்பதாகப் படுகிறது. அதுவே வைரமுத்துவிற்கான அடையாளமும் கூட.

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

வைரமுத்து கவிதைகள் அப்படித்தான்!

Thursday, April 29, 2010

மருதாணி நிலாக்களும் S-ல் ​தொடங்கும் ஒரு ​பெயரும்

'ஏய் என்னடி பண்றே?'
'ச்சூ.. காலை உதறாம இருங்க'
'என்னது.. மருதாணியா? ​எனக்கெதுக்குடி மருதாணி?'
'ம்.. உடம்பில கொஞ்சமாவது சிவப்பு இருக்கட்டுமேன்னுதான்'
'​ஜோக்கு..?? மருதாணி வச்சா ஜல்ப்பு புடுச்சுக்கும்பா எனக்கு'

வினோத்​சொல்வதைக் கேளாமல் அவன் கால்களுக்கு மருதாணி இடத்​தொடங்கினாள் சுஜாதா. நகங்களின் பச்சையம் நாளை சிவப்பாக விடிந்துவிடும் என்றும் நம்பினாள்.

தலைப்பற்ற கவிதையின் மறந்து​போன ஒரு வரியை நினைவூட்டுவது​போலவே இருக்கின்றன அவர்களின்​பொழுதுகள். வினோத் கட்டிடவியல் ​பொறியாளன். ​பெரிய​அடுக்குமாடிக் கட்டிடங்களின் சுவர்களுக்கு கண்ணாடி​பொருத்துவது. ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் என்பான். கத்தார் கம்பெனி அழைப்பின் பேரில் சுஜாதாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சுஜாதாவுக்கு வந்த புதிதில் கத்தார் புதிராக இருந்தது. வேறொரு மண்ணிலிருந்த செடியைப் பிடுங்கிப் பாலையில் நட்டுவிட்டாற்​போன்று இருந்தது. காலை அலாரமாக பாங்கொலி, கறுப்பு புர்கா கண்களாகப் பெண்கள், மஞ்சள்​வெயில், நீண்டநிழல்கள், ஈச்சமரங்கள், ஈச்சம்பழங்கள், ஈச்சம், ஈச்சம், ஈச்.... திணை மாறினாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை தவறவிடுவதில்லை.

பாலை என்பது நிலம் அல்ல.. வாழ்க்கை. ஆரம்ப நாட்களில் ​வினோத்தோடு வெளியே போகும்​போது குழந்தையாக உணர்வாள். எங்கேயாவது-மிஸ்-ஆயிடுவேனோ பயமாக அவனைப் பற்றிக்​கொள்வாள்.

'இந்த பில்டிங்குக்கு நான்தான் ஸ்டரக்சுரல் க்ளேஸீங் டிஸைன் பண்ணினேன்.
அதோ அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதுக்கு கூட. அப்புறம் இது..' என்று கட்டிடங்களை உயிருள்ள மனிதர்கள் போல் அறிமுகப்படுத்துவான்.

அந்தக் கட்டிடங்களின் புறவெளிக் சதுர கண்ணாடிகளில் சுஜாதா தெரிவாள். தானொரு சதுரங்கக் காய்ப் போல நகர்ந்து கொண்டிருப்பதாகப் படும். நான் ராணி.. நீ ராஜா என்று மனதுக்குள் சிரிப்பாள்.

கத்தார் மணி 8 ஏஎம். இப்போது சுஜாதா வீடு ​பெருக்குகிறாள். டிவியில் ஏ நிலவே நிலவே... என்று அஜீத் மழையில் நனைந்து ​கொண்டிருந்தார். பெருக்கி முடித்து குப்பைக் கூடையில் போடும்​போது கவனிக்க முடிந்தது. சிவப்புத் துணுக்குகள் கீழே கிடந்தன. வினோத் நகம் ​​வெட்டிப்​போட்டிருக்கிறான்.

தினங்கள் முன்பு வைத்த மருதாணிச் சிவப்பு ஒட்டிய நகத்துண்டுகள். குப்பையைப் போட்டுவிட்டு நகத்துணுக்குகளை அள்ளிக் கொண்டாள். உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள்... பிறைகள், சிவப்பு பிறைகளாகத் தெரிந்தன.

அப்போது கார்த்திக் நினைவுக்கு வந்தான். கார்த்திக் எட்டாம் வகுப்புத் தோழன். உன் விரல் நகம் கீறு... என் உயிர் தவம் தீரும் என்று முடியுமாறு ரூல்டு பேப்பரில் லவ் லெட்டர் கொடுத்தவன். அதற்கு சுஜாதா முன்னுரை தெளிவுரை முடிவுரை பகுதிகள் உள்ளடக்கியதாக நான்கு பக்க அளவில் பதில் கடிதம் வரைந்து கொடுத்தாள். சுருக்கமாக, படிக்கிற வேலையைப் பாரு.

கார்த்திக் மறுநாள் பள்ளிக்கு வரும்​போது ஒட்டுத்தாடி ஒன்றை ஒட்டிக்​கொண்டு வந்தான். வகுப்பில் யாருக்கும் முதலில் அடையாளம் ​தெரியவில்லை. அப்புறம் புரிந்து​கொண்டு சிரிப்படங்க நிமிடங்களாயிற்று. சுஜாதாவாலும் அடக்க முடியவில்லை.

சாயங்காலம் கார்த்திக்கை தனியே சந்தித்தாள் சுஜாதா.

'ஏன் ரொம்ப அப்ஸெட்டா?'
'ம்' என்று முகத்தைத் தொங்கப்​போட்டுக்​கொண்டான்.
'நான் ஓகே சொல்லாததாலா?'
'நீ ஓகே சொல்லாதது கூட பரவாயில்ல சுஜா.. ஆனா.. ஆனா.. நாலு பக்கத்துக்கு ரிப்ளே எழுதிக் கொடுத்தியே.. அதைப் படி.. படிச்சிட்டு.. என்னால.. என்னா...ல'
என்று நெஞ்சைப் பிடித்துக்​கொண்டு அழுவது​போல நடித்தான்.
சுஜாதா அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.
'சுஜா.. சுஜா.. சிரிக்கறதானே.. என்னைப் பிடிக்கும்தானே.. ஐ லவ் யூ தானே.. ப்ளீஸ் ​சொல்லுப்பா..'

புலிப் பிடியிலிருக்கும் முயலின் நடுக்கம் கொண்டதாக இருந்தது அக்கோரிக்கை.

'போடா லூஸு' என்று எள்ளிவிட்டு சிரிப்பொலி சுடர விலகி ஓடினாள் சுஜாதா.

கையிலிருக்கும் மருதாணி நகத்துணக்குகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.

- 2 -
கனடா. டொரண்டோ. இரவு 12 மணி. கருஊதா புகையாக மாறிவிட்ட வானம். பனி பெருகும் மாலை. கார்த்திக் இரண்டாவது பெக் விஸ்கியை இறக்கிக் கொண்டிருந்தான். அறையின் ஹீட்டர் ரீங்காரத்தைவிட படுக்கையறையிலிருந்து வரும் மனைவி அனுவின் குறட்டை ​போஷக்கான டெஸிபல்களில் இருந்தது.

இப்போது மனைவியும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். தினமும் அலுவகத்திலிருந்து இவனைத் திட்டுவதற்காக புது வார்த்தைகளையும் உபரியாக சம்பாதித்துக் கொண்டு வருகிறாள்.

'இந்த மாதிரியான இடைவெளி எனக்குப் பிடிக்கலே அனு. லெட்ஸ் ஸால்வ் இட்..'


'ஸால்வ் பண்றதா? எப்படி கார்த்தி?'

'ஏதாவது அவுட்டிங், பிக்னிக், இல்லே ட்ரிப் டு இண்டியா அல்லது கவுன்ஸலிங்.. மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல சொல்ற...'

'கட் த க்ராப் கார்த்தி.. நமக்கான ஸொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கப் படலே. அவர் ப்ராப்ளம் ஈஸ் எக்ஸ்க்ளூஸிவ்.. நீயோ நானோ அதைக் கண்டுபிடிச்சாத்தான் உண்டு.'

'Let's find it then....'

'ஓ! இன்ட்ரஸ்டிங். ​ஸொல்யூஷன் - உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை. காலையில் நான் நேரத்திலேயே கிளம்பணும். இப்ப குட்​ நைட்'

'டின்னர்???'

'ஐ ஹேட். நீ ப்ரிஜ்ஜில் ஏதாவது இருக்கான்னு மோப்பம் பிடி. பை'

இப்படி கனடா பனிக்கு கதகதப்பாக இருக்கும் இவர்கள் உரையாடல்.

மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியிருந்தது. இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை பெக் என்றே சொல்வாயானால் நீ குடிப்பது வெறும் தண்ணீர் என்பது கார்த்திக் அனுமானம். அனுவின் குறட்டை இன்னும் பெரிதாக இருந்தது.

எரிச்சல் எரிச்சலாய் வந்தது. தாடையைச் சொரிந்துக் கொண்டான். Marriage postpones suicide. And, suicide postpones marriage என்று நினைத்துக் கொண்டான். தாடியைச் சொரிந்தால் எல்லாரும் அறிவாளிகள்தான். அதனால்தான் பெண்கள் முட்டாள்களாயிருக்கிறார்கள் என்பது கார்த்தியின் உபரித் தத்துவம். இதற்கும் மூன்றாவது ​லார்ஜ்ஜுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!

என்ன சொன்னாலும் சரிக்குசரி நிற்கிறாள். அனுவைப் பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு காஸனோவா. பெண்பித்தன். நம்பிக்கைத் துரோகி.

'கார்த்திக்.. நீ மற்ற பெண்களை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு உன்னை ஒரு இலவச விளையாட்டு மைதானமாக்கி விட்டாய். உன்னுடன் பேசும் பெண்கள் எல்லோரையும் காதலிகளாக்கி விடலாம் என்ற தன்னம்பிக்கை ஆச்சரியமூட்டுகிறது'

'ஏன் இப்படியெல்லாம் பேசறே அனு.. நான் அந்தமாதிரி இல்லே'

'ஹும்.. உன்னை நான் உளவு பார்ப்பேன் என்ற எண்ணமே உனக்குப் புளங்காகிதத்தை தரும் என்று அறிவேன். உனக்கு அந்த சிறு மகிழ்ச்சிக் கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் இப்போ உறுதியா இருக்கேன். ஐ வோன்ட் ஃபோலோ யூ எனி​மோர் டியர்'

'நீ என்னை அலட்சியப்படுத்தறே. இப்பெல்லாம் உன்னைப் பார்த்தாலே பதட்டமாயிடறேன். ​ உண்மையா சொல்றேன்.. நான் உனக்குப் பயப்படறேன் அனு'

'கார்த்திக், மனைவியை அடித்து துவம்சம் செய்யும் மூன்றாந்தரக் கணவர்களைக் கூட நம்பலாம். ஆனால், மனைவிக்குப் பயப்படுகிறேன் என்று புளுகிற கணவர்கள்தான் உலகிலேயே மிகமிக மோசமானவர்கள்'

அதற்கு மேல் பேச வலுவற்றவனாக விலகிவிடுவான்.

கார்த்திக் நான்காவது லார்ஜ்ஜை கிளாஸில் நிரப்பிக்​கொண்டான்.

நான் பெண்பித்தனா, காஸனோவா-ஆ கேள்விகள் அவனைச் சூழ்ந்து​கொள்கின்றன. தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... ​நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.

மது நிரம்பியக் கோப்பையைக் குடிக்காமல் பார்த்துக்​கொண்டு இருக்கிற போதை நிதானமானது. நினைவுகளைப் விசிறிவிடும் உன்னதமான நிலை அது.

அலுவலகத் தோழி ஸெலினா, கனடாவில் வசிக்கும் கல்லூரித் தோழி உஷா, அவ்வப்போது சாட்டுக்கு வரும் சவீதா, பழைய கம்பெனி நண்பி ரேஷ்மா, கல்லூரிக் காதலி பிருந்தா இப்படி ​பலமுகங்கள் விழுந்த குளமாக தளும்புகிறான். எட்டாம் வகுப்பு படிக்கும்​போது ஒருவளிடம் காதல் கடிதம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. மது வாழ்க. ஆனால் கார்த்திக்கு அவள் பெயர் நினைவுக்கு வரவில்லை.

நான்காம் லார்ஜ்ஜை குடித்து முடித்தான். இந்த நிரப்பல் அவள் பெயரை மீட்டுவிடும் என்று நம்பினான். சுனிதா, சுசீலா, சங்கீதா, S-ல் தொடங்கும் ஒரு பெயர் என்ற மட்டில் மது அவனுக்கு உதவியது.

எஸ்ஸில் தொடங்கும் ஏதோவொரு பெயர் என்று நினைத்துக்​கொண்டான். அப்போது கார்த்திக்கு விக்கலெடுத்தது. அடித்த விஸ்கியால் இருக்கும் என்று எண்ணிக்​கொண்டான்.

Tuesday, March 30, 2010

நான் திவ்யா.

வயதான ஆண் என்பதாகவே man-ager இருக்கிறதல்லவா? இருந்து தொலையட்டும். ஆண் என்ற கர்வமும்​மேனேஜர் என்ற திமிரும் ஒன்றாய் கலந்து விட்ட வர்க்கம். மொத்தமாக மானேஜரை வெறுக்கவே விருப்பமாக இருக்கிறது. விருப்பங்களில் தான் ஒரு ஒழுங்கு காணமுடிகிறது. வெறுப்புகள் சுதந்திரமானது. இஷ்டத்துக்கும் திட்டித் தள்ள முடிகிறது.
யு மஃப்டைவர், புட்-புல்லர், டான்டலைஸிங்....... ...... இத்யாதிகள். என் ஆங்கில வொகப்பலரி விருத்திக்காக மட்டும் மேனேஜரைப் பாராட்ட முடிகிறது. யு நோ.. I have a good vocabulary on bad words now!
முதுகுப்பின்னால் இருந்து என் மானிட்டரை வெறித்துப் பார்த்தபடி நகர்வது என் மானேஜர் வழக்கம். அப்போது முதுகுக்குப் பின்னால் பெரிய பள்ளம் வெட்டியிருப்பது போல் தோன்றும். டு யு இமாஜின் தட்?​
என் மானிட்டரில் இருப்பது பற்றி உனக்கென்ன? ஜஸ்ட் ஸீ மை அவுட்புட், புரொடெக்டிவிடி, பர்ஃபார்மன்ஸ்.. அதைப் புள்ளிக்கணக்காகப் போட்டு எனக்கு அப்ரைஸல் கொடு. அது மட்டும்தான் உன் வேலை. நான் கம்ப்யூட்டரில் என்ன கர்மத்தை நோண்டினால் உனக்கென்ன? ஐ வோன்ட் ஸர்ஃப் ஆன் போர்னோ, ஐம் நாட் ஃபிலர்ட்டிங், ஐ​ம் நாட் ட்ரேடிங். ஐ நோ கார்ப்பரேட் கல்ச்சர் பெட்டர் தன் யூ.
உன்னைப் போன்றவர்கள்தான் பாலைவன ஒட்டகம் மாதிரி (இப்படி கற்பனை செய்யும் போது சிரிப்பு வருகிறது) கார்ப்பரேட் எதிக்ஸ், பிஎம்பி வொர்க் ஷாப், வீக்லி ரிப்போர்ட் போன்ற பனையோலைகளை சுகமாக மெல்ல முடிகிறது.
நான் என்னை வாழ்கிறேன். உயரமாக இருப்பதால் கிடைக்கிற ஓலைகளை என்னால் மெல்ல முடியாது. நான் பறவை. ஜொனதன் ஸீகல் மாதிரி.
சுதாகர் அனுப்பிய ஒரு மெயிலில் படித்தது:
கார்ப்பரேட் ஒரு கோழிப்பண்ணை. மேல் அடுக்கு கோழிகள் பார்ப்பது only shit..! கீழுள்ள கோழிகளுக்குத் தெரிவது a.....! நான் கீழடுக்கு​கோழி :(
'திவ்யா. இன்னும் ரெண்டு நிமிடத்தில் ப்ராஜெக்ட் ஓஏ வேணும்'
'பட் ஐ வில் நீட் அட்லீஸ்ட் 10 மினிட்ஸ் ஸார்'
'நோ. 2 மினிட்ஸ் ஒன்லி'

பட் இட்ஸ் நாட் மேகி நூடுல்ஸ் மடையா, எ ரிப்போர்ட்...
என் sarcastic பதில்கள் என்னுள்ளே முடங்கிக் கொள்கின்றன. மானேஜருக்கு என்னால் முடிந்த apple polish: preparing a Maggi report!
முதலில் இவன் என் முதுகு புறத்திலிருந்து மானிட்டரை உளவு பார்ப்பதை நிறுத்த வேண்டும். யாரோ என் முதுகை ஹிப்னடைஸ் செய்வது போல் இருக்கிறது. I'm going crazy!
இதற்கு நீ (மேனேஜர்) என் அருகில் வந்து நின்று என் ஸ்க்ரீனை வெறி. இலவசமாக உனக்குக் கிடைக்கும் cleavages பற்றி I don't care..! ஆனால் முதுகு வழி உளவு பார்க்காதே டியர் கிழட்டு ஷெர்லக் ஹோம்ஸ். என்னால் முடியவில்லை. பயங்கரமாய் முகுது வலிக்கிறது. ஒரே ஒரு புள்ளியில். கழுத்துக்கு கீழே.. நடுமுதுகுக்கும் மேலே. கையை வளைத்துக் கொண்டு போய் அதைத் தொட்டால் வலிப்புள்ளி நகர்ந்து கொள்ளும். ஆனாலும் மையமாய் வலித்துக் கொண்டே இருக்கும். டு யு இமாஜின் தட்?
ஆபிஸில் உட்கார்ந்து முதுகைத் தடவிக் கொண்டிருக்கவும் முடியாது. டாக்டர் மம்தா​சொன்னது நினைவுக்கு வருகிறது.
'ஸீ திவ்யா.. உன் முதுகைக் கிட்டத்தட்ட ஸ்கேனால் பிளந்தே பார்த்தாச்சு. எவ்ரிதிங் இஸ் நார்மல். கொஞ்சம் postures மேல கவனம் வை. டூ ஸம்​யோகா.. டூ ஸம் எக்ஸர்ஸைஸ், டூ ஸம் ஏரோபிக், டூ ஸம்.................'
​யெஸ் டாக்டர். டூ ஸம் அரோகன்ஸ், டூ ஸம் ப்ரோடெஸ்ட்.. டூ ஸுஸைட், அட்லீஸ்ட் எ மர்டர் - எனக்குள் சொல்லிக்​கொண்டேன்.
45 வயது manager, 27 வயது​அஸோஸியேட் பெண். இவர்களை இணைக்கும் புரொஜெக்ட், ஜாவா ஸ்ரட்ஸ், எக்ஸெம்எல், ஓஏ, ப்ரொஜெக்ட் லைப்​சைக்கிள், ரோட்மேப், ரிலீஸ், யுஎடி, இத்யாதி இத்யாதி.. அப்புறம் முகுது வலி வியாதி.
திரும்ப முகுது புள்ளியாய் வலிக்கிறது. அநேகமாக தடியன் வெறிக்கிறான்
என்று நினைக்கிறேன். ​​நல்லவேளை டெவலப்மண்ட் ஸ்க்ரீன்தான் அப்போது ஏக்டிவாக இருந்தது. யாகூ மெஸன்ஜர், கூகிள் ரீடர் எல்லாம் டாஸ்க்பாரில் தூங்கிக்​கொண்டிருந்தன.
எப்போதும் ஸ்க்ரீனில் புரொஜெக்ட் டெவலப்மண்ட் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்.. அதைப் பார்த்து மானேஜர் புல்லரித்துப்​போக​வேண்டும். வேறு ஏதாவது வின்டோக்கள் தெரிந்துவிட்டால் - திவ்யா ஈஸ் நாட் diligent! அடுத்த அப்ரைஸலில் என்னை டிகிரேடு செய்வதற்கு ஏற்றதாக ஒரு நல்ல பாயிண்ட்! யு நோ திவ்யா... ப்ரொடெக்டிவிட்டி ஆல்​வேஸ் கம்ஸ் வித்... ​போன்ற அசட்டு தத்துவங்களைப் பிழிந்து விடுவார்கள். ஸோ பிட்டி!

'திவ்யா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் டீம் ரிவ்யூ மீட்டிங். கம் ஃபார் இட்.'

டீம் ரிவ்யூ மீட்டிங்? ஷிட்! அனதர் gang bang.. nothing else!!
ஒருத்தி 4 பேர் கேள்விகளுக்கு ஒரு மணி​நேரம் பதில் சொல்வதுக்கு பெயர் டீம் ரிவ்யூவா?

மானேஜர்கள் ஆங்கிலம் ஒரு தொடர்ச்சியான Garfield தமாஷ்..!
'திவ்யா.. வென் ஐ கேன் கெட் த அப்டேஷன்?'
'திவ்யா... கெட் மீ ஆல் த டேட்டாஸ் ஃபர்ஸ்ட்'
ஓ​மைகாட்!

தான் எழுத வேண்டிய ரிப்போர்ட்களை நான் எழுதினால் நன்றாயிருக்கும் என்பது தெரியும். தெரிந்தாலும் அதை வெளியே சொல்லுவது இழுக்கல்லவா?
'திவ்யா.. யு ஹேவ் டு ப்ரிப்​பேர் திஸ்'
'யு ஹேவ் டு எக்ஸ்ப்​ளைன் திஸ்'
'யு ஹேவ் டு ப்ரஸன்ட் தட்'
'திவ்யா, யு ஹேவ் டு ஸ்பின் ஸம் யார்ன்ஸ்..!'
ய்யா.. I'm a busy yarn spinning spinster. So, no slot to poke on matrimonials ads.. No slot to poke on my own sl....! No slot.. Nos a lot.!

ஷாதி.காம் அல்லது பாரத்மாட்ரிமோனியல்.காம் இதில் ஏதாவதில் நீங்கள் என் ப்ரொபைலைப் பார்த்து (அதில் வயது 25 என்று இருக்கும்.. அம்மா ​சொல்லித்தந்த marketing strategy அப்படி!) அதற்கு ரெஸ்பான்ஸ் கொடுத்திருக்கிலாம். உடனடியாக என்னால் பதில் கொடுக்க முடியாது. பிஸி. ஆனால் நிச்சயம் என் 28வது வயதிற்குள் கொடுத்துவிடுவேன். சத்தியம்! டோன்ட் இக்னோர் மீ யார்!

இப்போது முகுது வலிக்கிறது. Static electricityயால் ஈர்க்கப்படும் மயிர்கால்கள் போல முதலில் முதுகுமுடிகள் ஜம்மென்று எழுந்து​கொள்ளும். அப்புறம் முகுகின் ஒரு புள்ளியில் ஊசி சொருகினாற் போல் வலிப்பின்ன ஆரம்பி... ம் ஆரம்பித்து விட்டது.

எனக்கு இப்போது தேவை ஒரு சின்ன நடை. இந்த நான்-எர்கோனமிக் ஸீட்டில் இதற்கு மேல் உட்கார முடியாது. சூடு. முட்டை​ வைத்தால் குஞ்சு பொறிக்கலாம். பக்கத்து க்யூபிகள் வினோத்துக்கு ஒரு ஹாய் சொல்லலாம், காபி வென்டிங் மிஷின்​சென்று ஒரு கப்பசினோ எடுக்கலாம், ரெஸ்ட்ரூம் செல்லலாம், அல்லது பச்சை காரிடாரில் ஒரு நடை போகலாம். ஏதோவொன்று என் முதுகு வலி போக​வேண்டும்.

எழுந்தேன். ரெஸ்ட்ரூம் பக்கமாக நடந்தேன். கசங்கலான சுரிதார்.. தளர்வான நடை. ​ஹே.. எனக்கு வயதாகிவிட்டதா?
டாய்லட்டில் இருந்த கண்ணாடியில்​வேறொரு திவ்யா தெரிந்தாள். என்னை நானே மீட்க வேண்டும். என் மானேஜரை எதிர்​கொள்ள வேண்டும். பதில்களை அழுத்தமாகப் பதிய​வைக்க வேண்டும். திவ்யா என்பவள் இப்படித்தான் என்று உணர​வேண்டும். முதுகு வழி யாரும் ஸ்க்ரீனை வெறிக்கக் கூடாது. முதுகு வலி போக வேண்டும்.

எப்படி?

ரெஸ்ட்ரூம் விட்டு வெளியே வந்தேன். தூரத்தில் கலகலப்பாக ஒரு கூட்டம் சிரித்துக் கொண்டிருந்தது. ஸீரோ ஸைஸ் பெண்கள் இருவர் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். எல்லாப் பக்கமும் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. நான்தான் என் டிக்கெட்டைத் தொலைத்துவிட்டேன் போல. சொந்தமாக புருஷனை - குலம், கோத்திர எழவுகள் முக்கியமாம் - இண்டர்நெட்டில் தேடிக்​கொள்ளுவது.. அதை ஆபிஸில் யாருக்கும் தெரியாமல் பதுக்கிச் செய்வது.
. ​யெஸ் ஐ லாஸ்ட் மை டிக்கெட்!!
தூரத்தில் தெரிந்த ஸ்மோகிங் ஸோனில் கூட்டமாய் புகை ஊதிக்​கொண்டிருந்தவர்களில் ஒரு பெண்ணும் இருந்தாள். தனியே புகைத்துக் கொண்டிருந்தாள். ஈஸ் ஷி எ ஃப்ரீக்கி? ஈஸ் ஷி நட்டி? அரோகன்ட்? டபு..?

அவள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனால் அவளுக்கு முதுகு வலி இருக்காது என்று தோன்றியது. நேராக நின்று கோடாகப் புகைவிடுகிறாள்.

யூ நோ கய்ஸ்... அந்த நேரத்தில் நானும் புகைக்க ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றிவிட்டது. தூரத்தில் இருந்து எனக்கான ஸ்பார்க்கை வழங்கிய அந்த பெண்ணுக்கு என் நன்றிகள்!


சில வாரங்களுக்குப் பிறகு...

நான் திவ்யா. இப்போது புகைக்க ஆரம்பித்து விட்டேன். ஹுர்ர்ரே..! அல்ட்ரா லைட்ஸ். முதலில் அறையில் புகைக்க ஆரம்பித்தேன் (practice) அடுத்த வாரத்திலேயே அறைத்தோழி அறையை காலி செய்து ஓடிவிட்டாள். என்னை ஆபிஸ் ஸ்மோக்கிங் ஸோனில் சிகரெட்டும் கையுமாக பார்த்த மானேஜர் அன்று முழுதும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. என் மாட்ரிமோனியல் ப்ரொபைலில் ஸ்மோக்கிங் என்ற கேள்விக்கு
யோசித்துவிட்டு 'NO' என்று போட்டிருக்கிறேன் (my own marketing strategy?) புதிதாக ZIPPO ​லைட்டர் வாங்கியிருக்கிறேன். சிகரெட் மணக்க மணக்க மானேஜரிடம் பேசுகிறேன். நோ Maggi ரிப்போர்ட்ஸ். மானேஜர் பேச்சு இப்போது சுருங்கி விட்டது போலிருக்கிறது. அப்டேஷன்..??

முக்கியமாக இப்போது முதுகில் புள்ளியாய் வலிப்பது நின்று​போய்விட்டது.

டிஸ்கி:
இது ஒரு கார்ப்பரேட் கதை. ஆபிஸில் bullying (browbeat) என்ற உயர்அதிகாரிகளின் ஸைலன்ட் வன்முறையின் - ஸ்கீரினை பின்னாலிருந்து வேவு பார்ப்பது - பாதிப்புகள் பற்றி கேள்வியுற்றதும், என் பெயர் ராமசேஷன் (ஆதவன்) படித்த ஆச்சரியமும் கலந்து இப்படியொரு இடுகை. அத்வைத கலாவின் எழுத்து தாக்கமும் கூட.
இந்த முதுகு வலி ஒரு மருத்துவ உண்மை. உயர்அதிகாரி வேவு பார்த்தலின் கடுமையான பின்-பக்க விளைவு. அதன் மனஅழுத்தம் புகைக்கும் அளவிற்கு தள்ளுகிறது என்பதே இதன் உள்ளீடு. புகைக்கிறவர்கள் கெட்டவர்கள் அல்ல. மற்றபடி புகைத்தல் உடல்நலத்திற்கு தீங்கானது.

Monday, March 22, 2010

தசா மாதுக்கள்


அவள் ஒரு மலையோரச் சிறுமி:
கல்லூரி படிக்கும்​போது குதிரையாறு அணையில் மாணவர்கள் ​சேவை முகாமிட்டிருந்தோம்​. மலையும் காடுகளும் அணைந்த சில்வண்டு வெளி. ஊரின் ஒற்றை டீக்கடை ஓனரம்மாளின் ஒரே மகள். ​பெயர் ஸ்ரீதேவி. மயில் என்ற ​பெயர் கூட அவளுக்குப் ​பொருத்தமாகத்தான் இருக்கும். 10 வயது சிறுமி. ​வியப்பு தடவிய பெரிய விழிகளால் என்​னைப் பார்த்தது இன்றும் நினைவிலுண்டு. ​நெல்லிக்கனி, டீக்கடை ரொட்டி, டீ என்று எனக்களிக்க எப்பவும் கைவசம் ஏதாவதுண்டு அவளுக்கு. 10 நாள் கேம்ப் முடிந்து கல்லூரி வந்தாயிற்று. ஒருவாரம் கழித்து குதிரையாறிலிருந்து கல்லூரிக்கு வரும் நண்பன் என்னிடம் ஒரு கடிதம் நீட்டினான். ஸ்ரீதேவி என்ற மலையோரச் சிறுமி ரூல்டு பேப்பரில் எழுதிய ஒரு கடிதம். அவள் கண்களை ஒத்த குண்டு குண்டான கையெழுத்தில் மலை எல்லைகளைத் தாண்டி வந்திருக்கிறது. அணைகள் தடுப்பதில்லை என்று உணர்த்தினாள் அன்று.

பாம்புகளைப் பின்​தொடருபவள்:
கேட் ஜாக்ஸன் (Kate Jackson) என்ற விலங்கியல் பேராசிரியை Passion for Snakes என்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் படித்தது. கேட்டின் நேர்மையும் தைரியமும் நிரம்பிய ஆப்பிரிக்க பாம்பு வேட்டை அனுபவங்களுக்காக ரொம்ப பிடித்திருந்தது.

அவர் பற்றி அறிய: http://people.whitman.edu/~jacksok/ தற்போது Assistant Professor Department of Biology ஆக Whitman College யில் பணிபுரிகிறார்.

நீங்கள் விரும்பினால் கட்டுரையை தட்டச்சி அனுப்புகிறேன்.


செம்மாம்பழம் போலே..:
பழைய கருப்பு-​வெள்ளைப் பட நாயகிகள் அனைவரும் அலாதி ப்ரியத்துக்குரியவர்கள்தான். மடி மீது தலை​வைத்து விடியும் வரை தூங்குவோம் என்ற பாடலின் இசையும், பொங்கும் நிலா பின்புலமும் தேவிகாவை அமர நாயகியாக்கிவிட்டன. நான் என்ன சொல்லிவிட்டேன் (பலே பாண்டியா) பாட்டில் ஒரு வரி: செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி. தேவிகா கறுப்பு. ஆனால் இந்த வரிகளுக்கான அவரின் அபிநயம்... Fair & Lovely! ​

ஙப் போல் வளை:
நண்பர்கள் எழுதிய பிடித்த 10 ​பெண்களில் சாதாரணமாய் கா​ரைக்கால் அம்மையார், மூவலூர் ராமமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி எல்லாம் பார்க்க முடிகிறது. நமக்கு அந்தளவுக்கு சத்து காணாது. ஆகவே ஒளவை​!

பிடித்த மூதுரை வரிகள்:

அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.


ஆத்திசூடி நீதிக்கதைகள் என்று மீனாமுத்து என்பவர் எழுதிவருகிறார். சீரிய முயற்சி!


கிட்டத்தட்ட ஒண்டிக்கட்டை:

அத்​வைதா கலா (Advaita Kala) இந்திய சிக்-லிட் ப​டைப்பாளி. ஆங்கில எழுத்தாளினி. அவரின் Almost Single நாவலின் துணிச்சலான ந​டை, மிடுக்கான நகைச்சுவை, புத்திசாலித்தனம் நிரம்பிய உ​ரையாடல் மிகப்பிடிக்கும்.


மிக்கி மவுஸ் தேவதை:
பிரார்த்தனா. இவள் ஒரு விளம்பர மாடல். ​சில வருடங்கள் முன்பு சென்னை சில்க்ஸ், லயன் ​டேட்ஸ் இத்யாதி விளம்பரங்களில் கண்ணுக்குச் சிக்கிய ​சென்​னைப் ​பொண்ணு. மிக்கி மவுஸ் காதுகள் ​கொண்ட சிறு ​தேவதை. இப்ப கா​ணோம். தற்சமயம் திவ்யா பர​மேஸ்வர் என்ற விளம்பர ​தேவதை - த்ரீ ​ரோஸஸ், ப்ரீத்தி மிக்ஸி, சாம்ஸங், ஹமாம் ​சோப் இத்யாதி - ​ அந்த இடத்தைப் பிடித்துக் ​கொண்டுள்ளார்.

பாலகுமாரன் எழுத்து அவளுக்குப் பிடிக்கும்:

காயத்ரி. கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் பழக்கம். க்ரீஸ் தடவிய ​வேகத்தில் விழும் ஆங்கிலம். ​பெரிய வசீகரங்கள் இல்​​லை. ஆனால் அவளின் கம்பீரம், ​நடை, கட்​டைக்குரல் ​பேச்சு, ​கர்வம், அறிவு எனக்கு ​ரொம்பப் பிடிக்கும். பாலக்குமாரன் எழுத்து, மம்தா பானர்ஜி, உலக அரசியல், சினிமா என எல்லாவற்றையும் பற்றி தீர்க்கமாக விவாதிப்பவள். 'உன்​னை சிலசமயம் நி​னைத்துக் ​கொள்வதுண்டு. அன்று நீ குளிர்கண்ணாடி (எனக்கு அப்ப ​மெட்ராஸ் ஐ) அணிந்து வந்திருந்தது அழகாயிருந்தது. உன்னை அப்​போது பிடித்திருந்தது. இதனால் நான் உன்​னைக் காதலிக்கி​றேன் என்று எண்ணிவிடா​தே' என்று என் ​கண்களைப் பார்த்துக் கூறியவள். ​பார்த்து 10 வருடங்கள் இருக்கும். அவ​ளைவிட நான் 2 வயது சின்னவன் என்பது இன்று வ​ரை அவளுக்குத் ​தெரியாது.

Tuesday, March 9, 2010

பதின்ம வயதில் பட்டவை


என் பதின்மங்களின் காலண்டர் 1992 ஜனவரியில் துவங்கி 1998 ஜனவரி வரை.

1992: ​​​வெண்பாவும் ஒரு ​பெண்பாவும்

எல்லா வகுப்புகளிலும் ​பெண்கள் முதல் வரிசைப் ​பெஞ்சுகளில் இருப்பதன் காரணம்... ​பெண்களுக்குக் கிட்டப்பார்​வையாக இருக்க முடியாது.. அவர்கள் குட்டப்பா​வைகளாக இருப்பதால் என நினைக்கிறேன். எட்டாம் வகுப்பில் ​பெண்கள் ​பெஞ்ச் வரிசை முடிந்த இடத்தில் என் ​பெஞ்ச் ஆரம்பிக்கும். என் முன்னிருந்த ​பெஞ்சில் சுசீலா. ​அவள் ஓரவிழிப் பார்​​வை தடவும் பனியில் எப்போதும் சில்லிட்டிருந்தது மனசு.

எட்டாம் வகுப்பில் த​லை​மை ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அலாதி. ஒருநாள் தமிழ் இலக்கண வகுப்பில் 'சோறு தின்னும் வாழ்​வே சுகம்' என்று கரும்பல​கையில் எழுதி, இ​ப்படி முடியுமாறு ஒரு ​வெண்பா எழுதுங்கள் என்றார். ​

ஏ​தோ தீர்மானித்தவன் ​போல இலக்கண இலக்கற்று இலக்கணப் புத்தகத்தின் ​வெண்பரப்பில் கிறுக்கினேன்.

​பேறு ​பெற நி​​னைத்துப் ​பெரும் ​பொய்​ ​பேசி
ஊறு பல உ​ரைத்து எங்கும் உண்​மை ம​றைத்து
நாறும் சாக்க​டை​யென வாழினும் - பிச்​சைச்
​சோறு தின்னும் வாழ்​​வே சுகம்.

என்று.

சுசீலா கிறுக்க​லைக் கவனித்து விட்டாள். ஆசிரியரிடம் படிச்சுக் காட்​டேன் என்பதாக சமிக்​ஞை ​செய்தாள். நா​னோ முகுதுப்பரப்பு​​மேல் கவனம் ​கொண்டு கம்​மென்று இருந்துவிட்​டேன். ​மென்மையாக தலையிலடித்துக் ​கொண்டாள். சுசீலாக்கள் இப்படித்தான் எளிதில் சித்திரமாகி விடுகிறார்கள்.

1993-94: சவுக்கு மரங்கள்

ஒன்பதும் பத்தும் படித்த காலம்.

Seekக்கு past tense, seeked என்று ​சொன்னதற்காக ​​மொத்த வகுப்பும் பிரம்படி பட்டது. முதல் அடி எனக்​கே எனக்கு.

9ம் வகுப்பிலிருந்து ராதா​வோடு ஒரு செல்லச் சி​னேகம் இயல்பாகியிருந்தது. அப்​போ​தெல்லாம் R. K. ​ஜெகநாதன் என்​றே எழுதி வந்​தேன். பத்தாம் வகுப்பு ரிஸல்ட் அன்று அ​னைவரும் தளும்பியிருந்​தோம். அப்பா என்​னை ​அ​ழைத்து வந்திருந்தார். ​பெண்க​ளைப் பார்த்து நானும் என் எண்க​ளைப் பார்த்து அப்பாவும் சம அளவில் துயர் ​கொண்டிருந்​தோம். நண்பர்கள் ​பேசிக்​கொண்டிருந்​தோம். சட்​டென்று என் முன் ஒரு வளைக்கரம் சாக்​லேட்​டை நீட்டியது. ராதா!

நண்பர்கள் நமுட்டாய் சிரித்தார்கள். நான் சாக்​லேட்​டைக் ​கைப்பற்றாமல் 'எனக்கு மட்டும்தானா? இவங்களுக்கு இல்லியா?' என்​றேன். 'உனக்கு மட்டும்தான் எடுத்தாந்​தேன்' என்று ​கையில் திணித்தாள்.

அப்பாவின் ​சைக்கிளில் வீடு திரும்பி​​னோம். காரியரில் ​தே​மே என்று உட்கார்ந்திருந்​தேன். என் எதிர்காலப் பாரத்​தையும் ​சேர்த்து அப்பா அப்​போது மிதித்துக் ​கொண்டிருப்பதாகப் பட்டது. பள்ளி காம்பவுண்ட் அரு​கே சவுக்கு மரங்கள் இ​டை​வெளியில் ராதா பார்த்துச் சிரித்து ​கைய​சைப்பது ​தெரிந்தது. ​​பயத்தில் மூட்டுக்கள் விலகிய சவுக்கு குச்சியிலை ​போல ​கையசைத்தேன்.

1995-97: அடிவாரத்தில் அ​லையும் கால்கள்

அருள்மிகு பழனியாண்டர் ​பாலி​டெக்னிக் ஃபார் ​மென்... என்பது ​பெண்கள் இல்லாத பாழ்​வெளியில் பால்​டெக்னிக்க​ளை கற்றுக்​கொள்வதும் ​பெற்றுக்​கொள்வதும். ஹாஸ்டல் வாசம் இனி​தே ராகிங்குடன் துவங்கியது. சீனியர் முதலில் என்னிடம் ​கேட்டக் ​கேள்வி: நக்கத் ​தெரியுமா?

சு​ரேசு.. முதலாமாண்டு அந்நியமாய் இருந்தான். படிப்பில் ​​கெட்டி. அவனூர் மானூர். பக்கத்து வீட்டுப் ​பெண் காதலால் சமயங்களில் ​சொந்த வீட்டில் உணவு மறுக்கப் பட்டான். ஹாஸ்டலில் என் உண​வை பங்கிட்டுக் ​கொள்வான். சாயுங்காலங்களில் பழனிம​லை அடிவாரத்துக்கு ​செல்வோம். மலை​யேறுவது கிடையாது. ​அடிவார பக்தைகள் கூட்டங்களில் சு​ரேசு ​செய்து காண்பித்த சாகசங்கள் எழுத்திலடங்காது. ஒருமு​றை நரிக்குறவப் ​பெண் எங்களை வள்ளுவர் தி​யேட்டரிலிருந்து அ​ரை கி​மீ வ​​ரை துரத்தினாள். சிக்கியிருந்தால் இந்​நேரம் நரிப்பல் விற்றுக் ​கொண்டிருந்திருப்​போம்.

​ம​லையடிவாரத்தில் அருள்மிகு பெண்கள் பாலி​டெக்னிக்கும் சின்னக்கலையம்புதூர் அருள்மிகு மகளிர் க​லைக் கல்லூரியும் மயில்களாய் நிரம்பியிருந்தன. கந்தன் கரு​ணையால் இனி​தே திருவிளையாடல்களும் நிகழ்ந்தன. புஷ்பா மகளிர் கலைக்கல்லூரியில் வரலாறு படித்தாள். பஸ் விட்டு பஸ் தாண்டுதல், ​​​பாட்டிக்கு சீட், நாய்க்கு பிஸ்கட், வாய்க்கு சிக​ரெட் என்று விதவிதமாய் முயற்சித்து ஒருவழியாய்.... பானிபட் ​போரில் ​தோற்றேன். புஷ்பா என்று சிக​ரெட்டில் ​எழுதி புகைத்ததோடு அ​ணைந்தது ஒரு வரலாற்றுக் காதல்.

1998: ​​கோ​வைக் கால காற்​றே..

​கோ​வையில் ​வே​லை. ​லேத், மில்லிங் மிஷின், கி​​ரைண்டிங் மிஷின், டிரிலிங் மிஷின்களைக் கூவாமல் விற்கும் உத்​யோகம். டாக்டர் நஞ்சப்பா ​ரோட்டுக்கு அரு​கே​யே வாட​கை வீட்டில் தங்கியிருந்​தேன். ஏற்கன​வே அதில் அறிவழகன் ஒருவர் வசித்து வந்தார். 5 ஸ்டார் ஓட்டலில் உத்யோகம். சுவாரஸியமான ஆள். காப்​மேயர், உதயமூர்த்தி ​போன்ற சுயமுன்​னேற்ற புத்தக வாசகர். தன்​பெய​ரை ஒரு டயரில் தினமும் 50-100 தட​வை எழுதுவார். ​கேட்டதற்கு பவர் வரும் என்றார். அவருக்கு மரபுசாரா எரிசக்தியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என யூகித்​தேன்.

நீள அகலங்க​ளை கணக்கில் ​கொண்டு.. இ​தோடு நிறுத்தப்படுகிறுது.

எழுதப் பணித்த மாப்ள 'சி​நேகிதன் அக்பரின்' அன்புக்கு நன்றி!