Thursday, April 29, 2010

மருதாணி நிலாக்களும் S-ல் ​தொடங்கும் ஒரு ​பெயரும்

'ஏய் என்னடி பண்றே?'
'ச்சூ.. காலை உதறாம இருங்க'
'என்னது.. மருதாணியா? ​எனக்கெதுக்குடி மருதாணி?'
'ம்.. உடம்பில கொஞ்சமாவது சிவப்பு இருக்கட்டுமேன்னுதான்'
'​ஜோக்கு..?? மருதாணி வச்சா ஜல்ப்பு புடுச்சுக்கும்பா எனக்கு'

வினோத்​சொல்வதைக் கேளாமல் அவன் கால்களுக்கு மருதாணி இடத்​தொடங்கினாள் சுஜாதா. நகங்களின் பச்சையம் நாளை சிவப்பாக விடிந்துவிடும் என்றும் நம்பினாள்.

தலைப்பற்ற கவிதையின் மறந்து​போன ஒரு வரியை நினைவூட்டுவது​போலவே இருக்கின்றன அவர்களின்​பொழுதுகள். வினோத் கட்டிடவியல் ​பொறியாளன். ​பெரிய​அடுக்குமாடிக் கட்டிடங்களின் சுவர்களுக்கு கண்ணாடி​பொருத்துவது. ஸ்ட்ரக்சுரல் க்ளேஸிங் என்பான். கத்தார் கம்பெனி அழைப்பின் பேரில் சுஜாதாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

சுஜாதாவுக்கு வந்த புதிதில் கத்தார் புதிராக இருந்தது. வேறொரு மண்ணிலிருந்த செடியைப் பிடுங்கிப் பாலையில் நட்டுவிட்டாற்​போன்று இருந்தது. காலை அலாரமாக பாங்கொலி, கறுப்பு புர்கா கண்களாகப் பெண்கள், மஞ்சள்​வெயில், நீண்டநிழல்கள், ஈச்சமரங்கள், ஈச்சம்பழங்கள், ஈச்சம், ஈச்சம், ஈச்.... திணை மாறினாலும் தாவரங்கள் ஒளிச்சேர்க்கையை தவறவிடுவதில்லை.

பாலை என்பது நிலம் அல்ல.. வாழ்க்கை. ஆரம்ப நாட்களில் ​வினோத்தோடு வெளியே போகும்​போது குழந்தையாக உணர்வாள். எங்கேயாவது-மிஸ்-ஆயிடுவேனோ பயமாக அவனைப் பற்றிக்​கொள்வாள்.

'இந்த பில்டிங்குக்கு நான்தான் ஸ்டரக்சுரல் க்ளேஸீங் டிஸைன் பண்ணினேன்.
அதோ அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அதுக்கு கூட. அப்புறம் இது..' என்று கட்டிடங்களை உயிருள்ள மனிதர்கள் போல் அறிமுகப்படுத்துவான்.

அந்தக் கட்டிடங்களின் புறவெளிக் சதுர கண்ணாடிகளில் சுஜாதா தெரிவாள். தானொரு சதுரங்கக் காய்ப் போல நகர்ந்து கொண்டிருப்பதாகப் படும். நான் ராணி.. நீ ராஜா என்று மனதுக்குள் சிரிப்பாள்.

கத்தார் மணி 8 ஏஎம். இப்போது சுஜாதா வீடு ​பெருக்குகிறாள். டிவியில் ஏ நிலவே நிலவே... என்று அஜீத் மழையில் நனைந்து ​கொண்டிருந்தார். பெருக்கி முடித்து குப்பைக் கூடையில் போடும்​போது கவனிக்க முடிந்தது. சிவப்புத் துணுக்குகள் கீழே கிடந்தன. வினோத் நகம் ​​வெட்டிப்​போட்டிருக்கிறான்.

தினங்கள் முன்பு வைத்த மருதாணிச் சிவப்பு ஒட்டிய நகத்துண்டுகள். குப்பையைப் போட்டுவிட்டு நகத்துணுக்குகளை அள்ளிக் கொண்டாள். உள்ளங்கையில் வைத்துப் பார்த்தாள்... பிறைகள், சிவப்பு பிறைகளாகத் தெரிந்தன.

அப்போது கார்த்திக் நினைவுக்கு வந்தான். கார்த்திக் எட்டாம் வகுப்புத் தோழன். உன் விரல் நகம் கீறு... என் உயிர் தவம் தீரும் என்று முடியுமாறு ரூல்டு பேப்பரில் லவ் லெட்டர் கொடுத்தவன். அதற்கு சுஜாதா முன்னுரை தெளிவுரை முடிவுரை பகுதிகள் உள்ளடக்கியதாக நான்கு பக்க அளவில் பதில் கடிதம் வரைந்து கொடுத்தாள். சுருக்கமாக, படிக்கிற வேலையைப் பாரு.

கார்த்திக் மறுநாள் பள்ளிக்கு வரும்​போது ஒட்டுத்தாடி ஒன்றை ஒட்டிக்​கொண்டு வந்தான். வகுப்பில் யாருக்கும் முதலில் அடையாளம் ​தெரியவில்லை. அப்புறம் புரிந்து​கொண்டு சிரிப்படங்க நிமிடங்களாயிற்று. சுஜாதாவாலும் அடக்க முடியவில்லை.

சாயங்காலம் கார்த்திக்கை தனியே சந்தித்தாள் சுஜாதா.

'ஏன் ரொம்ப அப்ஸெட்டா?'
'ம்' என்று முகத்தைத் தொங்கப்​போட்டுக்​கொண்டான்.
'நான் ஓகே சொல்லாததாலா?'
'நீ ஓகே சொல்லாதது கூட பரவாயில்ல சுஜா.. ஆனா.. ஆனா.. நாலு பக்கத்துக்கு ரிப்ளே எழுதிக் கொடுத்தியே.. அதைப் படி.. படிச்சிட்டு.. என்னால.. என்னா...ல'
என்று நெஞ்சைப் பிடித்துக்​கொண்டு அழுவது​போல நடித்தான்.
சுஜாதா அடக்க முடியாமல் வெடித்துச் சிரித்தாள்.
'சுஜா.. சுஜா.. சிரிக்கறதானே.. என்னைப் பிடிக்கும்தானே.. ஐ லவ் யூ தானே.. ப்ளீஸ் ​சொல்லுப்பா..'

புலிப் பிடியிலிருக்கும் முயலின் நடுக்கம் கொண்டதாக இருந்தது அக்கோரிக்கை.

'போடா லூஸு' என்று எள்ளிவிட்டு சிரிப்பொலி சுடர விலகி ஓடினாள் சுஜாதா.

கையிலிருக்கும் மருதாணி நகத்துணக்குகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். ஒரு சிறு நகத்துணுக்கு பள்ளித் தோழனை நினைவூட்டப் போதுமானதாக இருக்கிறது. இதழோரம் சிக்கனமாய் ஒரு புன்னகை. சுஜாதாவின் ஒரு பாலைப் பகலை நிரப்ப அது போதுமானது.

- 2 -
கனடா. டொரண்டோ. இரவு 12 மணி. கருஊதா புகையாக மாறிவிட்ட வானம். பனி பெருகும் மாலை. கார்த்திக் இரண்டாவது பெக் விஸ்கியை இறக்கிக் கொண்டிருந்தான். அறையின் ஹீட்டர் ரீங்காரத்தைவிட படுக்கையறையிலிருந்து வரும் மனைவி அனுவின் குறட்டை ​போஷக்கான டெஸிபல்களில் இருந்தது.

இப்போது மனைவியும் வேலைக்குப் போக ஆரம்பித்துவிட்டாள். தினமும் அலுவகத்திலிருந்து இவனைத் திட்டுவதற்காக புது வார்த்தைகளையும் உபரியாக சம்பாதித்துக் கொண்டு வருகிறாள்.

'இந்த மாதிரியான இடைவெளி எனக்குப் பிடிக்கலே அனு. லெட்ஸ் ஸால்வ் இட்..'


'ஸால்வ் பண்றதா? எப்படி கார்த்தி?'

'ஏதாவது அவுட்டிங், பிக்னிக், இல்லே ட்ரிப் டு இண்டியா அல்லது கவுன்ஸலிங்.. மென் ப்ரம் மார்ஸ் வுமன் ப்ரம் வீனஸ்ல சொல்ற...'

'கட் த க்ராப் கார்த்தி.. நமக்கான ஸொல்யூஷன் இன்னும் கண்டுபிடிக்கப் படலே. அவர் ப்ராப்ளம் ஈஸ் எக்ஸ்க்ளூஸிவ்.. நீயோ நானோ அதைக் கண்டுபிடிச்சாத்தான் உண்டு.'

'Let's find it then....'

'ஓ! இன்ட்ரஸ்டிங். ​ஸொல்யூஷன் - உனக்கு கண்டுபிடிக்க வக்கில்லை.. எனக்கு கண்டுபடிக்க இஷ்டமில்லை. காலையில் நான் நேரத்திலேயே கிளம்பணும். இப்ப குட்​ நைட்'

'டின்னர்???'

'ஐ ஹேட். நீ ப்ரிஜ்ஜில் ஏதாவது இருக்கான்னு மோப்பம் பிடி. பை'

இப்படி கனடா பனிக்கு கதகதப்பாக இருக்கும் இவர்கள் உரையாடல்.

மூன்றாவது லார்ஜ் உள்ளே இறங்கியிருந்தது. இரண்டாவது பெக்கிற்கு மேல் நீ குடிக்கும் அளவை பெக் என்றே சொல்வாயானால் நீ குடிப்பது வெறும் தண்ணீர் என்பது கார்த்திக் அனுமானம். அனுவின் குறட்டை இன்னும் பெரிதாக இருந்தது.

எரிச்சல் எரிச்சலாய் வந்தது. தாடையைச் சொரிந்துக் கொண்டான். Marriage postpones suicide. And, suicide postpones marriage என்று நினைத்துக் கொண்டான். தாடியைச் சொரிந்தால் எல்லாரும் அறிவாளிகள்தான். அதனால்தான் பெண்கள் முட்டாள்களாயிருக்கிறார்கள் என்பது கார்த்தியின் உபரித் தத்துவம். இதற்கும் மூன்றாவது ​லார்ஜ்ஜுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாம்!

என்ன சொன்னாலும் சரிக்குசரி நிற்கிறாள். அனுவைப் பொறுத்தவரையில் கார்த்திக் ஒரு காஸனோவா. பெண்பித்தன். நம்பிக்கைத் துரோகி.

'கார்த்திக்.. நீ மற்ற பெண்களை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு உன்னை ஒரு இலவச விளையாட்டு மைதானமாக்கி விட்டாய். உன்னுடன் பேசும் பெண்கள் எல்லோரையும் காதலிகளாக்கி விடலாம் என்ற தன்னம்பிக்கை ஆச்சரியமூட்டுகிறது'

'ஏன் இப்படியெல்லாம் பேசறே அனு.. நான் அந்தமாதிரி இல்லே'

'ஹும்.. உன்னை நான் உளவு பார்ப்பேன் என்ற எண்ணமே உனக்குப் புளங்காகிதத்தை தரும் என்று அறிவேன். உனக்கு அந்த சிறு மகிழ்ச்சிக் கூடக் கிடைக்கக் கூடாது என்பதில் இப்போ உறுதியா இருக்கேன். ஐ வோன்ட் ஃபோலோ யூ எனி​மோர் டியர்'

'நீ என்னை அலட்சியப்படுத்தறே. இப்பெல்லாம் உன்னைப் பார்த்தாலே பதட்டமாயிடறேன். ​ உண்மையா சொல்றேன்.. நான் உனக்குப் பயப்படறேன் அனு'

'கார்த்திக், மனைவியை அடித்து துவம்சம் செய்யும் மூன்றாந்தரக் கணவர்களைக் கூட நம்பலாம். ஆனால், மனைவிக்குப் பயப்படுகிறேன் என்று புளுகிற கணவர்கள்தான் உலகிலேயே மிகமிக மோசமானவர்கள்'

அதற்கு மேல் பேச வலுவற்றவனாக விலகிவிடுவான்.

கார்த்திக் நான்காவது லார்ஜ்ஜை கிளாஸில் நிரப்பிக்​கொண்டான்.

நான் பெண்பித்தனா, காஸனோவா-ஆ கேள்விகள் அவனைச் சூழ்ந்து​கொள்கின்றன. தனிமையின் சுழற்படி மதுவில் மத்தாகிச் சுழல்கிறது... ​நுரைகள் நூதனமானவை. நுண்ணியவை. நுரைகள் எப்போதும் பேசுவதில்லை. நுரைகள் பேசுவதைக் காட்டிலும் வாழ்ந்து விடுகின்றன.

மது நிரம்பியக் கோப்பையைக் குடிக்காமல் பார்த்துக்​கொண்டு இருக்கிற போதை நிதானமானது. நினைவுகளைப் விசிறிவிடும் உன்னதமான நிலை அது.

அலுவலகத் தோழி ஸெலினா, கனடாவில் வசிக்கும் கல்லூரித் தோழி உஷா, அவ்வப்போது சாட்டுக்கு வரும் சவீதா, பழைய கம்பெனி நண்பி ரேஷ்மா, கல்லூரிக் காதலி பிருந்தா இப்படி ​பலமுகங்கள் விழுந்த குளமாக தளும்புகிறான். எட்டாம் வகுப்பு படிக்கும்​போது ஒருவளிடம் காதல் கடிதம் கொடுத்தது நினைவுக்கு வந்தது. மது வாழ்க. ஆனால் கார்த்திக்கு அவள் பெயர் நினைவுக்கு வரவில்லை.

நான்காம் லார்ஜ்ஜை குடித்து முடித்தான். இந்த நிரப்பல் அவள் பெயரை மீட்டுவிடும் என்று நம்பினான். சுனிதா, சுசீலா, சங்கீதா, S-ல் தொடங்கும் ஒரு பெயர் என்ற மட்டில் மது அவனுக்கு உதவியது.

எஸ்ஸில் தொடங்கும் ஏதோவொரு பெயர் என்று நினைத்துக்​கொண்டான். அப்போது கார்த்திக்கு விக்கலெடுத்தது. அடித்த விஸ்கியால் இருக்கும் என்று எண்ணிக்​கொண்டான்.