Friday, February 19, 2010

பதிவர் தர்மம்மாட்டுவண்டியின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் புரட்டிப் ​போடுகிறது.

த.நா.மி.வா (தமிழ் நாடு மின்சார வாரியம்) ஊழியருக்கு அதிகப்படியான அழகான கையெழுத்து அப்பாவுக்கு. தநாமிவா என்பதின் இருப்பு எங்கள் வீட்டில் ஒரு திடப்​பொருள் ​போல உணரமுடிந்திருக்கிறது. இப்போதும் தநாமிவா என்று காதில்விழுவது என்னை அழைப்பது போலவே ஒலிக்கிறது.

அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். மின்பாதை வரைபடங்கள், அலுவல் குறிப்புகள், நழுவல் குறிப்புகள்(லீவ் ​லெட்டர்) எழுதுவதற்காக மை அவர் பேனாவிலிருந்து ஆவியாகிவிட்டது.

முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கு வருடம் தவறாமல் நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 50 வாழ்த்து அட்டைகளாவது எழுதி அனுப்பிவிடுவார். வாழ்த்து அட்டைப் பரிமாற்றம் காதலர்களுக்கு மட்டும் ​போதும் என்று அச்சுக்கடவுள் நி​னைத்துவிட்டார் போல. இப்போது பொங்கல், புத்தாண்டு, தீபாவளி வாழ்த்து அட்டைகள் பார்க்க கிடைப்பதில்லை. செல்போன்களால் வாழ்த்து அட்டைகள் தங்கள் தொடர்பு எல்லைகளை இழந்துவிட்டன. செல்போன் குறுஞ்செய்திகளாக வாழ்த்துகள் பைனரி வடிவத்தில் ஸ்டாம்ப் ​ஒட்டப்படாமலேயே கிடைக்கிற இந்நிலையில் அப்பா கொஞ்சம் ​கையறு நிலையில்தான் இருக்கிறார். தற்சமயம் கிடைக்கிற ​பேப்பர்கள், பத்திரிக்கையில் அரிதாக கிடைக்கிற சில வெண் தீவுப்பரப்புகள், அழைப்பிதழ்களின் பின்னட்டைகள், கோவில் கணக்கு, தகவல் கோரும் விண்ணப்பங்கள் என்று கையெழுத்தைப் பதியம் செய்ய​வேண்டியதாயிருந்தது.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு பார்வர்ட்டாக அனுப்புகிற கடிதங்களின் உறையில் மீண்டும் அப்பா எனக்குக் கிடைக்கிறார். குறைந்தது இரு வர்ண எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது அதில். ​​பெறுநர், அனுப்புநர் முகவரியும் அதற்கு இடையில் சாய்த்து விழுகிற இரட்டைக் கோடுகளையும். இவற்றைத் தவிர வரையவோ எழுதவோ சாத்தியமற்ற கடித உறைகளை அப்பா ஒருகணம் நொந்திருக்கக் கூடும். ஆடிய பாதம் எழுதிய விரல்கள்!

திருமண, காது குத்து, திரட்டி விழாக்களின் ​மொய் ​நோட்டுக்களில் அப்பா நிரம்பியிருக்கிறார். நிரம்பிக் ​கொண்டிருக்கிறார். ​முடிவுறா மொய்க்கணக்குகள் ​கைங்கர்யத்தில் உறவின் விழுதுகள் எல்லையற்று நீண்டு​கொண்டேயிருக்கின்றன. வந்த அடையாளத்தையும் பந்த அடையாளத்தையும் ​ரூ.51, ரூ.101.. என மெய்ப்பிக்கும் ​பொருட்டில் மொய் நோட்டுகள் ஒரு வங்கிக்கணக்கின் அனுசரணையோடு இருக்கின்றன.
அப்பா திருமண விழாக்களில் உணவுக்குக் கூட ​செல்லாமல் மெய் வருத்தி மொய் எழுதிக் ​கொண்டிருப்பது அநேக தடவைகள் பார்த்ததுண்டு. செய்நேர்த்தி கூடிய வைபவமாக மொய் எழுதிக்​கொண்டிருக்கும் சமயங்களில் அப்பா எனக்கு ​வேறு நபராகத் ​தோன்றுவார். ​வேகமாகப் பதியப்படும் எழுத்துகள் உறவுச்சங்கிலியின் நிழற்படம் போலவும் தோன்றுகிறது. ​​
அப்பாவின் ​கையெழுத்து
அழகுதான். எத்தனை வேகமாக எழுதினாலும் அதன் சீர் குலைவதில்லை.
மொய் மொய்ச்சீர் ஆவது இப்படித்தானோ?

​விழா மண்டபத்துக்கு வரும் கடைசிச் சொந்தம் வரைக்கும் காத்திருந்து மொய் எழுதும்பணி கால உத்தேசமற்றதுதான்.
அப்படியொரு கூட்டம் தளும்பி வழிந்து தீர்ந்த பொழுதில் அப்பா எழுதி முடித்த ​மொய்ப்பணத்தை எண்ணிக் ​கொண்டிருந்தார். பக்கத்தில் நோட்டுகளை எண்ணிக் ​கொண்டிருந்த சுந்தரம் மாமா அப்பாவிடம்,
"
மாமா, பணம் குறைவா இருக்கும் ​போலிருக்குதே" என்கிறார்.
​நோட்டுகளை எண்ணிக்​கொண்டே அப்பா
,

"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட ​போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். அப்போது அப்பாவும் அழகாகத் தெரிந்தார்.

Sunday, February 14, 2010

அம்மிணி அன்போட குப்புனு


To: அம்மிணி@ஜி​மெயில்.காம்

அன்னைக்கு நீ 7அப் கேட்டப்ப நான் போகமுடியாதுன்னு சொன்னேன். நீ திரும்ப திரும்ப கேட்டே. நானும் முடியாதுன்னு சொல்லிட்டு கம்ப்யூட்டரை பாக்க ஆரம்பிச்சிட்டேன். இருந்தாலும் மனசு கேக்கலே. போயி வாங்கிட்டு வந்து கொடுத்துருவோம்னு கெளம்பிட்டேன். அப்ப நான் வெறும் பெர்முடாஸ் மட்டும்தான் ​போட்டிருந்தேன். அது வேற சரியான லூஸு பெர்முடாஸ். தலைக்கு நிறைய எண்ணெய் வச்சு நீதான் மஸாஜ் பண்ணி விட்டிருந்தே. முடியெல்லாம் கோணல் மாணலா தூக்கிட்டு நிக்குது. மூஞ்சில எண்ணெய் வழியல் வேற.


பரவாயில்ல, நைட் நேரந்தானே பக்கத்திலதானேன்னு வாங்க போனேன். நம்ம வீட்டுக் கடை பூட்டியிருந்தது. சரி, ஐஸ்க்ரீம் ஆண்டி கடை பக்கம்தானே, அப்படியே போயி வாங்கிட்டு வந்திருவோம்னு போனா அதுவும் பூட்டிக்கிடக்கு. பேசாம வீட்டுக்கே போயிடலாமான்னு நெனச்சேன். இருந்தும் ஏதோ ஒரு உந்துதல். மெயின் ரோடு ஜுஸ் கடையில கண்டிப்பா இருக்கும், வாங்கிட்டே வந்துடலாம்னு கெளம்பினேன். லூஸ் பெர்முடாஸோட எப்படி போறது? அங்க வேற கூட்டமா இருப்பாங்களேன்னு பலதயும் யோசிச்சுகிட்டு, பெர்முடாஸ் பாக்கெட்ஸ்ல கைய விட்டு லைட்டா தூக்குனாப்ல புடிச்சுக்கிட்டே ஜுஸ் கடைக்கு போயிட்டேன்.


போயி, 7அப் கொடி-ன்னு கேட்டா, அங்க இருக்கிறவன்.. நிதானமா ஜுஸ் போட்டு, வெளியில சேர்ல உக்காந்திருக்கிறவங்களுக்கு கொடுத்துட்டு வந்து... என்ன வேணும்னு கேட்கிறான். பெர்முடாஸ் பாக்கெட்ல இருந்து கைய வெளிய எடுக்காம 7 அப் கொடின்னு திரும்பவும் கேட்டேன். கடையில அப்ப நல்ல கூட்டம். ​பொண்ணுங்க வேற உக்காந்திருக்காங்க. நான் ஒருத்தன் தான் இந்த மாதிரி தலைவிரி கோலமா, எண்ணெய் வழிய, லூஸ் பெர்முடாஸோட நிக்கிறேன்.

அப்புறம் ஏன் இவன் 7அப் வாங்காம வந்தான்னுதானே நினைக்கிறே? சொல்றேன்.

கடைக்காரன் ப்ரிட்ஜ்ல இருந்து அரை லிட்டர் 7அப் எடுத்துக் கொடுத்தான். லைட் கூலிங்தான். கையில 25 ரூபா இருந்தது. பாட்டில் விலை ரூ.20ன்னு போட்டிருந்தது. சரின்னுட்டு 20 ரூபாய அவன்கிட்ட கொடுத்துட்டு பாட்டிலை எடுத்துட்டு திரும்பினேன். கடைக்காரன் என்னைக் கூப்பிட்டு "இன்னு 2 ரூபா கொட்றி" அப்பிடின்னா. நான் பாட்டில் போட்டிருக்கிற ரேட்டைக் காமிச்சு "யாக்கே?" ன்னு கேட்டேன். அவன் ப்ரிட்ஜ், கரெண்ட் சார்ஜ் ​ரேட்டெல்லாம் சேத்து 22ரூபாய்ங்கிறான். எனக்கு கடுப்பாயிடுச்சு. "ஓகே. கூலிங் பேடா. வார்ம் கொடி" ன்னு ​கேட்டேன். அதுக்கு கடைக்காரன் "வார்ம் 7அப் இல்லா" அப்படின்னுட்டான். கடையில ஜுஸ் குடிக்கிறவங்க எல்லாம் என்னையவே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஞாயிற்றுகிழமை, ஏதாவது சண்டை ஏதும் நடக்குமான்னு பாத்திருப்பாங்க போல.

எனக்கு 2 ரூபாய் அநியாயத்துக்கு கொடுக்க பிடிக்கலே. அது ஒரு ஏமாத்து வேலைன்னு தோணுது. சரி விடுன்னுட்டு, திரும்பவும் பெர்முடாஸ் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு, எதுவும் வாங்காம வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பயும் சிவானந்தா சர்க்கிள்ட்ட போயி ஒரு 7அப் வாங்கிட்டு வந்துடலாம்னு ​நெனச்சேன். லூஸ் பெர்முடாஸ விட அலங்கோலமா தூக்கிட்டு நிக்கிற முடிதான் என்னை ​போக வேணாம்னு தடுத்திருச்சு. அதவிட முக்கியமா, அந்தக் கடையிலயும் இந்த மாதிரிதான் 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டு ஏமாத்துவாங்கன்னு தோணிருச்சு. ​

இவ்வளவு தூரம் பெர்முடாஸோட, எண்ணெய் தலையோட வந்து, எதுவும் வாங்காம போறோங்கிற ஏமாற்றமும்...... ஒரு 7அப் ப்ரிட்ஜ்ல வெச்சிருக்கிறதுக்கு, கரண்ட் பில் 2 ரூபாய்ன்னு ​கொள்ளையடிக்கிறாங்களேங்கிற ஆத்திரமும் சேர்ந்துதான்....... நான் அன்னிக்கு உங்கிட்ட எரிஞ்சு விழ ​வேண்டியதா போச்சு. மோசமாவும் நடந்துக்கிட்டேன். அது என் தப்புதான்.

உன்கிட்ட சண்டை போட்டு முடிச்சதும் நான் பண்ணின காரியம் பெப்ஸிகோ (7அப் தயாரிக்கிறவங்க) கம்​பெனிக்கு இப்படி ரெண்டு ரூபாய் எக்ஸ்ட்ராவா வசூல் பண்றாங்கன்னு மெயில் பண்ணிட்டேன்.

உங்கிட்ட அப்பவே சமாதானம் பேசியிருக்கலாம்.. ஆனா சமாதானம் பேசப் போயி அது உன்னை இன்னும் ​டென்ஷனாக்கிடுமோன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டேன்.

சரி.. இந்த கோபத்தை என்னதான் பண்றது? எனக்குத் தெரியலே. போன்னு தூர தள்ளிவிட்டாலும் கூடவே வருது கோபம். கோபம் மேலயும் எனக்குக் கோபமா வருது.

புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே.

என்ன பண்றதுன்னு தெரியலே.

இப்படிக்கு,

குப்புனு@ஜி​மெயில்.காம்


டிஸ்கி:

உண்மையாகவே அம்மிணிக்கு எழுதிய ஒரு ஈமெயில் இதுங்க. சில வரிகளை நீக்கியதைத் தவிர எதுவும் திருத்தம் செய்யாததுங்க. தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை. ​சொல்லாத தாகத்​தைவிட தீராத தாகம்தான் ​ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? வாலன்​டைன்ஸ் ​டே வாழ்த்துங்க!

Monday, February 8, 2010

காணாமல் போனவர்கள்

அவள்

​நகப்பூச்சுக்கு தக்க சுரிதாரைக் கண்டடைவதில் களைப்படைய மாட்டாள்

​ஹெல்மட் அணியாமல் கூந்தல் விசிற பறந்த ​பொழுதில்

டிராபிக் ​போலீஸ் தண்டம் வசூலித்த அன்றே மாலையில் அப்பனிடம் கேட்டாள்:

டாட், கார் வாங்கிக் ​கொடு எதுக்கு திடீர்னு என்றவரிடம்

​ஹெல்மட் போடப் பிடிக்கலப்பா என்றாள்


அவன்

காலேஜ் காலங்களில் சலூன்காரரிடம் ஒருவருட பாக்கி வைத்திருந்தான்.
பஸ்ஸில் உரசிய எந்தப்​பெண்ணும் இதுவரை​அடித்ததில்லை.
வேலைக்கு சேர்ந்த முதல்நாளே பக்கத்து சீட்டுக்காரியிடம் ஐ லவ் யூ​சொன்னான்
எனக்கு 2 வயசு குழந்தையிருக்கு என்ற ரிப்ளையில் விநாடியில் சுதாரித்து
hot mama என்று சிரித்தான்.. அடுத்த 2 மாதங்களில் அவனிடம் 9000 கடன் கொடுத்திருந்தாள் hot mama

அவர்கள்

அட்டாட்ச்டு பாத்ரூம் டாய்லட் இருக்கிற வீடா பாக்கலாமே?
பாரு இந்த வீடு?
டாய்லட் அட்டாட்ச்டா இருந்தா நல்லாயிருக்கு​ம்...
சரி இந்த வீடு??

ஆனா டாய்லட் அட்டாட்ச்டா...
அடிங்கொய்யால.. இதுக்கு மேல அட்டாச்ட்டு டாய்லட்டுன்னா pampers-தான்டி கட்டிக்கணும்
ஸ்டுப்ப்ப்பிட்.....


அஃது


விரல் மோதிரம் ->

கடித்துக் கொண்டிருந்த புது செருப்பு ->

தலையணை உறை மாற்றும் லாவகமாய்

மாறிக்​கொண்டிருந்தது ->>


அடுத்தது

குழந்தை வெயிட் 3.49 கிலோ என்றான் அவன்.

3.49 கிலோகிராம்-ஃபோர்ஸ் என்றாள் அவள்

நான் சொல்ற பேர்தான் பெஸ்ட்

காதுலயே நுழைய மாட்டேங்குது

உன் காது பத்தி யாரு கேட்டா

ஒண்ணு வுட்டா உனக்கு காது கேட்காதுடி


அவர்களின் அவன்

6மாத குழந்தையாய் தோட்டைப் பிடித்து இழுத்ததில் ஒரு வாரத்திற்கு
அவளின் காதில் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது
விளம்பர இடைவேளையில் மறைந்து​போன​டோராவின் ​மேலுள்ள ​கோபத்தில் டிவியைத் தள்ளிவிட்டு உடைத்தபோது

அவன் வயது 17மாதங்கள்

இப்​போ...

அவள்.. நடந்தா ஒடம்புக்கு நல்லதுதானே பெட்ரோல் செலவும் மிச்சம் என்று விரைகிறாள்.

அவன்.. கடைசி ஸீட்டிலிருந்து எழுந்து வந்து இடங்​கொடுக்கிறான் - குழந்தையோடு நிற்கும் தாய்க்கு.