Thursday, July 30, 2009

பச்சப்புள்ள - பார்ட் 3 அல்லது சிமிட்டாத கண்கள்

ஆனா பாருங்க.. இந்த செகண்ட் ஹீரோ மொள்ள மொள்ளமா காமடியனாகி, வில்லனாகி கடைசிலே காணாமலே போயிடுறாரு.
இவரு பேரு அன்பு!

ராசாத்தி மின்னாடி ஹார்ட்வேர்ஸ் ஏஜென்ஸிலே வேல பாத்துக்கிட்டு இருந்தப்ப நம்ம அன்பு, பக்கத்து எலக்ட்ரிகல் கடையில வேலை. ராசாத்தி வேலைக்கு வந்த மக்கா நாளே அன்புத் தலைவர் என்ட்ரி.

"அலோவ் ஈரோ, எப்படியிருக்கீங்க.. வாங்க டீ சாப்பிடலாம்... ​வேலையெல்லாம் எப்படி போகுது, ஏதும் பிரச்சினைன்னா சொல்லுங்க, வுட்டு லேப்பிரலாம்"
இப்பிடி அன்பு, அன்பு மயமாக மாறுனதுக்கு காரணம் ராசாத்திய டாவு கட்ட வர்றதுக்குதான்னு ஈரோவுக்கு லேட்டாதான் பிக்கப் ஆச்சு.
சரி எப்படியோ வேலை ஒழுக்கமா நடந்தா செரி, 1200 ரூபாயிக்கு 8 விரல்லயும் பின்னிப் பெடலெடுக்கிற ஆளு ராசாத்தி.. அப்புறம் என்ன சொல்ல முடியும் ஈரோவால!
பாப்பாத்தி இப்பத்தான் கீபோர்டில நெம்பரு அடிக்கிறதுக்கின்னே தனியா ஒரு பகுதி இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கு. பரவால்லே பிக்கப் ஆயிக்கும்!
அன்பு அடிக்கடி ஆபிஸுக்கு வர்றதும், ஈரோக்கிட்ட அப்பிடி இப்பிடி தெக்கால வடக்காலன்னு ஞாயம் பேசறதும், போறப்ப ராசாத்திட்ட 'வரட்டா' சொல்லிட்டு போறதுமா ரெண்டு மூணு வாரம் ஓடிருச்சு. ராசாத்திக்காக இவன் அக்கப்போர பொறுத்துக்க வேண்டியதுதான்னு கம்முனு இருந்துட்டாரு ஈரோ. இதில அப்பப்ப ஈரோக்கிட்ட, ராசாத்தி எங்கிட்ட முன்ன மாதிரி பேசறதில்ல.. எனக்கு அவ அப்பன தெரியும் ஆத்தாள தெரியும் வீடு தெரியும் ஊரு தெரியும் - சும்மா விட மாட்டேன்னு புலம்பல் வேற.
மனசுக்குள்ள த்தூமாதரிச்சே.. என்ன கருமாந்திர காதல்டா இவனுதுன்னு ஈரோவுக்கு தோணும்.
ராசாத்தி வெளியூரு, ஈரோவும் வெளியூரு.. அதனால ரெண்டு பேரும் எட்டு எட்டரைக்கெல்லாம் முனிஸிபாலிடிக்கு வந்து, மாடியில இருக்கிற கம்ப்யூட்டர் சென்டரை தொறந்து வேலய ஆரம்பிச்சுடுவாங்க. பாப்பாத்தி நெதானமாத்தான் வரும்.
ஒருநா, ஈரோ வர லேட்டாயிடுச்சு. ஈரோவுக்கு முன்னாடியே ராசாத்தி வந்திருக்கும் போல. மாடியில இருந்து அன்பு வேகமா இறங்கி போயிட்டிருந்தார். இவன் எங்கடா இந்நேரத்துக்குன்னு இங்கன்னு நெனச்சுக்கிட்டே ஈரோ மாடிக்குப் போனாரு. அங்க பியூன் காமடியன் நின்னுக்கிட்டிருந்தார். ஈரோவப் பாத்து கோபமா,
"ஈரோ, என்னப்பா இதெல்லாம்..? யாரவன்..??"
"யாரக் கேக்கறீங்க, அன்பையா?"
"அவந்தான். ராசாத்தி தனியா இருக்கும் போது, மேலே வந்திருக்கான். என்னடா இது யாருமில்லாத நேரத்திலன்னு வந்து பாத்தா, அவன் ஏதோ பேசிக்கிட்டிருக்கான், ராசாத்தி அழுதுகிட்டு நிக்குது"
".... இல்லயே, ராசாத்திக்கு தெரிஞ்ச பையந்தானே அன்பு"
"இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல ஈரோ. நான் அவன புடுச்சி நல்லா சத்தம் போட்டு உட்டுட்டேன். இனிமே மாடிப்பக்கம் வர்ற வேலை வச்சுக்காதே. ஈரோட்ட பேசணும் அவரு இருக்கிறப்ப வான்னு சொல்லி விரட்டி உட்டுட்டேன்"
"அப்படியா??"
எச்சரித்துவிட்டு (முனிஸிபாலிடி பியூன்னா சும்மாவா?) அவர் கீழிறங்கிச் ​சென்றுவிட்டார். ஈரோவுக்கு குழப்பமாகி விட்டது. என்னடா இது ஏதும் பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டே கம்ப்யூட்டர் சென்டருக்குள்ள போனாரு.
ராசாத்தி அன்னிக்கு தாவணி கட்டியிருந்துச்சு. கருப்புத்தாவணி. செம்பருத்தி செடி கருப்பு இலையா நின்னா மாதிரி! மூணு கம்ப்யூட்டர் அறையில நடு சீட்டுல உக்காந்திக்கும் ராசாத்தி. ஒருக்கா ஈரோ ஒனக்கு முட்ட கண்ணுன சொன்னது ராசாத்தி, 'எங்க என் கண்ண சிமிட்டாம பாருங்க பாப்பம் முதல்ல கண்ண சிமிட்டினவங்க தோத்தாங்கன்னு' சொல்லிச்சு. ​ஈரோவால ஒரு நிமிசத்துக்கு மேல ராசாத்தி கண்ண சிமிட்டாம பாக்க முடியலே... ராசாத்தி கண்ண சிமிட்டாம பாத்துட்டே இருந்தது..!
ராசாத்தி தாவணி நுனில கண்ணத் தொடச்சுக்கிட்டு இருந்தது. ஈரோ உள்ள ​போனாரு,
"வாங்க"
"என்னாச்சு, டல்லா இருக்கே?"
"இல்லியே"
"அன்பு வந்தாப்டியா?"
தலைய மட்டும் ஆட்டுச்சு ராசாத்தி.
மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது.
"எதாவது பிரச்சினையா?"
"அதெல்லாம் ஒண்ணிமில்லை"
சிமிட்டாத கண்கள் ஏனோ அப்போது தரை நோக்கியிருந்தன. அடர்த்தியாய் காதுகளை நிரப்பியது நிசப்தம். ஈரோ ராசாத்தி பக்கத்திலே போனாரு. ராசாத்தியின் தலை சாய்ந்த முதுகின் மிகுபரப்பில் வெயில் மஞ்சள் கண்கூசியது.
"எங்கிட்ட சொல்லேன்.."
"..."
"அன்பு கூட எதுவும் பிரச்சினையா"
"..."
"எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
தலையை நிமிரவேயில்லை. கீழே அலுவலகம் தொடங்கியிருந்தது. கமிஷனர் கார் வந்த சத்தம் கேட்டது.
"நாங்கேக்கிறது காதுல விழுதா இல்லியா?"
தலை நிமிரவேயில்லை.
"இங்க உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நான்தான் பாத்துக்கணும்."
"...."
"............ ஒரு அண்ணன் மாதிரியாவது நெனச்சு எங்கிட்ட சொல்லக்கூடாதா..?"
படக்கென்று தலையை நிமித்தி, சிமிட்டாத கண்களில் சரசரவென கண்ணீர் ​பொங்க, தாவணியை வாயில் கதக்கித் தேம்ப ஆரம்பித்தாள் ராசாத்தி.
(முற்றும்)
- பச்சப்புள்ள யாருன்னு கேக்க மாட்டீங்கதானே? அதே மாதிரியே ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!

Wednesday, July 29, 2009

பச்சப்புள்ள - பார்ட் 2 அல்லது பால்நுரை படலம்

ஈரோ, ராசாத்தி, பாப்பாத்தி, முனிஸிபாலிட்டி, கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி - அம்புட்டுதான் ரீகேப்பு!

ராசாத்தி-பாப்பாத்தி ரெண்டு பேரும் நல்லா கலகலப்பா பேசி பழகினாங்க. கலகலப்புங்கிறத விட லூட்டின்னுதான் சொல்லோணும். நம்ம ஈரோதான் கொஞ்சம் பயந்தாப்ல திரிஞ்சாரு! ராசாத்தி ஈரோக்கிட்ட,

"உங்கள, இதுக்க மின்னாடியே தெரியும். நான் ஹார்ட்வேர்ஸில இருப்பேன், நீங்க அந்த வழியாத்தான் டெய்லியும் நடந்து போவீங்க"

"அப்படியா, நான் உன்னைப் பாத்ததே இல்லியே?"

"மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே தலைய குனிஞ்சுக்கிட்டே நடந்தா எப்படித் தெரியும்?"

அட நம்மளக் கூட கவனிக்கிறாங்களான்னு ஈரோவுக்கு புல்லரிச்சுப் போச்சு. ஈஈன்னு இளிக்க வேற செஞ்சாரு.

பாப்பாத்தி குறுக்கிட்டு,

"ஆமா, ரோட்டுல நீங்க நடக்கிறப்போ ஏதோ ரொம்ப சோகத்தில அடிபட்டு நடக்கிறவன் மாரி இருக்கும்"

ராசாத்தி, "நாங்கூட பாப்பாத்திட்ட​சொல்லுவேன், பாவமாயிருக்குடி, பால் ஏதும் வாங்கிக் கொடுப்பமான்னு.. ​ஹாஹா"

கொல்லுன்னு சிரிக்குங்க குமரிங்க.. ஈரோவுக்கு வெக்க வெக்கமா வரும்!! இவிங்க ரெண்டு பேரும் பண்ற பன்னாட்டு கொஞ்ச நஞ்சமில்ல! ஈரோ அப்பப்ப ரிலாக்சு பண்ணிக்க வெளிய போயி தம்ம போட்டுட்டு, ஆட்டி ஆட்டி டீக்குடிச்சிட்டு, வாயில ஒரு ஹால்ஸ் மிட்டாய இடுக்கிட்டு மாடிக்கு வந்திடுவாரு.

முதல்ல போனாப் போவுதுன்னு உட்டுட்டாங்க இவிங்க ரெண்டு​பேரும். அப்புறமேட்டுக்கு வரும்போது எங்களுக்கும் பாலும் பப்ஸும் வாங்கிட்டு வரணும்னு கண்டீசனா சொல்லிப் போட்டாங்க!

ஈரோவே பாலும் பப்ஸும் கைகளில் ஏந்தி மாடிப்படியிலே கஷ்டப்பட்டு வந்து ராசாத்திக்கும் பாப்பாத்திக்கும் கொடுப்பாரு. சிலசமயம் பாலு விளிம்பு நிறைய இருக்கும். படியேறரது சிரமமா இருக்கும். அதனால ஈரோ ஒரு​வேலை பண்ணுனாரு.

படியேறதுக்க மின்னாடி, ராசாத்தி பால்ல ஒரு வாயி, பாப்பாத்தி பால்ல ஒரு வாயின்னு குடிச்சுட்டு பத்திரமா பாலை கொண்டு போயி கொடுப்பாரு! என்னடா இது ஒரு ஹீரோ பண்ற வேலையான்னு கேக்கறீங்களா?
இருங்க..இப்ப கதையில ஒரு முக்கியமான ஆளு என்ட்ரி ஆவறாரு... அவரைத்தான் நாம ஏக்சுவலா ஹீரோன்னு சொல்லணும்.

ஏன்னா, அவரு என்ட்ரி ஆகும் போதே,"நாந்தான் ராசாத்தியோட லவ்வரு" அப்படிங்கிறாரு!

(தொடரும்... இன்னும் ஒரே ஒருக்கா...)

Tuesday, July 28, 2009

பச்சப்புள்ள - பார்ட் 1


நம்ம கதையில வர்ர ஹீரோ பேரு.. ம்ம்ம்.. ஈரோன்னே வச்சுருவோம். நம்ம ஈரோ கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சு ஒரு தனியா கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனி ஸ்டார்ட் பண்ண.......... வக்கில்லாததால, சரீன்னுட்டு ஒரு முனிஸிபாலிட்டி ஆபிஸ்ல.... ச்சேச்சே.. குப்பையெல்லாம் அள்ளப் போகலீங்க.. காண்ட்ராக்டில் டேட்டா என்ட்ரி வேலைக்குப் போனாருங்க!

சாதாரணமா ஆரம்பிச்ச டேட்டா என்ட்ரி வேலையில் ஒரு பெரிய திருப்பம் (பழனி ஆண்டவா!) ஒருநாள் முனிஸிபாலிட்டி கமிஷனர் ஈரோவைக் கூப்பிட்டு சொன்னார்,

"ஈரோ, ஈரோ பெருசா ஒரு வேலை வருது.. நகராட்சியின் எல்லா ஆப்ரேஷனையும் கம்ப்யூட்டரைஸ் பண்ணப்​போறோம். நீங்கதான் இந்த காண்ட்ராக்ட்ட எடுத்து, டேட்டா எல்லாத்தயும் கொத்தித் தரணும் - சொல்லிப் போட்டேன்"

நம்ம ஈரோ அசகாய சூரன்தான்; இருந்தாலும் ஒத்த ஆளா 3 கம்ப்யூட்டரில ஒரே சமயத்தில கொத்த முடியாம ஒத்தாசைக்கு ரெண்டு பேர்த்த சேத்த வேண்டியா போச்சு. நிறைய​வேலை குறைஞ்ச சம்பளம்ன்னு ஒவ்வொரு கம்ப்யூட்டர் சென்ட்ரா போயி​தேடுனதில, ஒரு இரக்கப்பட்ட​சென்டர் நிர்வாகி ஈரோவை பார்த்து,

"ஈரோ, நம்ம கிட்ட ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க"
"நொம்ப தாங்க்ஸு சார்"
"பயங்கரமா​டைப் பண்ணுவாங்க. ஆனா சம்பளம் சாஸ்தி"
"எம்புட்ங் சார்?"
"1200 ரூபா மாசத்திக்கு, ஒருத்தருக்கு"

எனக்கு வர்றத அவ்வளவுதானேடா என்று நெஞ்சை நீவிக்கொண்டே​வேறுவழியில்லாமல் ஒப்புத்துக்கிட்டாரு ஈரோ.

ரெண்டு​பேரும்​முனிஸிபாலிட்டி வேலைக்கு வந்தாங்க. ஒருத்தி பேரு ராசாத்தி - பெரிய கண்ணு. இன்னொருத்தி பாப்பாத்தி - பெரிய பல்லு. என்னடா ஒத்தை ஹீரோ, ரெண்டு ஹீரோயின், தெலுங்கு படமா இருக்கும் போலன்னு X பட்டனை அமுத்தப் பாக்கறீங்களா?? அப்பிடியெல்லாம் கிடையாதுங்ணா.. ​தைரியமா வாங்க.

ராசாத்தி ஓரளவுக்கு ஸ்பீடா டைப் பண்ணுச்சு. லெப்ட்ல மூணு விரல்தான் யூஸ் பண்ணும், ரைட்ல அஞ்சு விரலும் பிச்சு உதறும். பாப்பாத்தி டைப் பண்றத பாத்துட்டு ஈரோவுக்கு நெஞ்சு வெடிச்சிருச்சு.. பாப்பாத்தி ஒரே ஒரு விரலை வச்சு கீபோர்ட கொத்து​கொத்துன்னு குத்துச்சு..

"ஏனுங்க பாப்பாத்தி, 1200ரூபா சம்பளத்து எல்லா விரலும் யூஸ் பண்ணலாமுல?" என்று ஈரோ கண்ணீர கட்டுப்படுத்திக்கிட்டு கேட்டத்துக்கு,

"இருங்க, இப்பத்தான் டைப் கிளாஸ் போயிட்டிருக்கேன்.. ​போகப் போக ஸ்பீடு வந்துரும் பாருங்க"

சென்டர் நிர்வாகி​சொன்னது கரெக்டுதான் - பயங்கரமாத்தான் டைப் பண்றாங்க!!!

(தொடரும்...)

பின்குறிப்பு:

லென்த் ஓவராயிருக்குன்னு நம்ம தீஅதீ வாசகர்கள் வேட்டிய மடிச்சு கட்டுவதால் (அடிக்கவா இல்ல ஓடவான்னுதான் தெரீல) இந்த இடுகைய பிச்சுப் போடலாங்கிற முடிவுக்கு வந்திடுச்சு நம்ம காலடியின் காறி(த்துப்பி)ய கமிட்டி (கமிட்டி மெம்பர்கள் லிஸ்ட் - நாளை வெளியிடப்படும்!!!) . இதையும்​ஓவர் லென்த் என்று ஃபீல் பண்ணுபவர்களுக்கு கீழ்கண்ட குறிப்புகள் உதவும்:

1. உங்க மானிட்டர் ஸ்க்ரீன் சைஸ் அட்லீஸ்ட் 10" ஆவாது இருக்கணும். ​செல்போன் ஸ்க்ரீனுக்கு இது செல்லாது, செல்லாது!

2. என்னதான் ஆபிஸில மானேஜர் கண்ணில மண்ணைத் தூவிட்டு ப்ளாக் படிக்கிறதுன்னாலும், விண்டோ சைஸை இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் பெரிசு பண்ணிக்கிட்டீங்கன்னா புண்ணியமா போவும்

3. இருந்தாலும் இன்னும் சுருக்கமா வேணும்னு கேக்கிறவங்க இந்த இடுகைய அப்படியே ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை ஒரு பால் மாதிரி ஆக்கி பின் விரித்துப் படிக்கவும்!

Saturday, July 25, 2009

கருப்புச்சாமி காத்த ரகசியம்


மீண்டும் காளிதாஸ்! ஏற்கனவே நமக்கு அறிமுகமான அதே ஒர்க் ஷாப் காளிதான். காளியின் ஆளுமை ஒரு நாவலுக்கு ஒப்பானது. உதாரணத்துக்கு காளியும் பெண்களும். பைக்குகளை சரி செய்யும் அதே லாவகத்ததுடன் பெண்களை அணுகுபவன். வசதியாக காளிதாஸ் ஒர்க் ஷாப் பக்கத்திலேயே நகரின் மகளிர் உயர்நிலைப்பள்ளி.

சைக்கிளில் வரும் குமரிகள், டயர் காற்றடிக்க மகுடி அண்ணன் சைக்கிள் கடையில் நிற்க வேண்டிவரும். உதவி செய்வதாக காளி சிலசமயம் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொடுப்பான். அது என்ன பெரிய வேலை கம்ப்ரசர் அழுத்தித் தேக்கிய காற்றை பைப்பில் இழுத்து வர வேண்டும். அப்புறம் இரண்டு மவுத்துகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மவுத் என்றால், சைக்கிள் சக்கர மவுத்தும், ஏர் பைப்பின் மவுத்தும் மட்டுமே.
குமரிகள் கொள்ளை அழகாயிருப்பதுக்கு காளிதாஸை குறை சொல்ல முடியுமா?அப்படிதான் ஒருமுறை ஒரு பத்தாம்பு படிக்கும் வாலைக்குமரி மகுடி அண்ணன் சைக்கிள் கடை வாயிலில் நின்றாள்.

"ஏனுங், ஏர்.."

மகுடி அண்ணன் அப்போதுதான் ஒரு சைக்கிளுக்கு ஓவர்ஹால் செய்து கொண்டிருந்தார். சற்று தாமதமாகவே பக்கத்து ஒர்க் ஷாபிலிருந்து பாய்ந்து வந்தான் நம்ம காளி.

"இருங்கண்ணா, நான் பாத்துக்கிறேன்"

என்று சைக்கிளில் சாய்ந்து நிற்கும் கிளியைப் பார்த்து சிரித்தவாறே..​சைக்கிளைப் பிடித்தவாறே ஒரு சிற்றிளம்​பெண், அவளை அண்ணாந்து பார்த்தவாறே காற்றுபிடிக்கும் ஒரு பரபர இளைஞன். வானத்தில் ஆரஞ்சு சுளைகளை உறித்து வீசிக்கொண்டே இறங்கும் மாலைச்சூரியன். நினைத்துப்பாருங்கள்.. ஒரு கவிதை மாதிரி இல்லை? காளியும் இப்படி காற்றாக கசிந்து பறந்து கொண்டிருந்தான்.

"டுப்ப்ப்" என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கும் வரை. ஆமாம்.. கொள்ளவுக்கு மீறினால் எதுவும் வெடித்துத்தானே சிதறும்? டயர் வெடித்த அதிர்ச்சியில், சைக்கிளை காளியின் மேலேயே போட்டுவிட்டு கத்த ஆரம்பித்துவிட்டாள்.

"மரியாதயா டயரை நீங்கதான் மாத்திக்கொடுக்கோணும். இதுதான் காத்துப்பிடிக்கிற லட்சணமா?"

காளிதான் அசரமாட்டானே?

"ஏன்.. சத்தம் போடறே, நான் நல்லாத்தான் காத்து பிடிச்சேன், உன் டயரு லட்சணம் அப்படி"

அப்புறம் மகுடி வந்து சமாதானம் செய்து வேறு டயர் மாற்றித் தருவதாக பைசல் பண்ணி​வைத்தார். இது காளி பற்றிய ஒரு சின்ன அறிமுகம்தான். இனி வரப்​போவதுதான் மெயின் பீஸ்.

மெயின் பீஸ்: காட்சி-1

சாயந்திரம் ஏழு அல்ல எட்டு மணி வாக்கில் வீடு அடைவான் காளி. ஒர்க் ஷாப்பில் அனைத்து நண்பர்களும் காலையிலிருந்து மாலை வரை ஒன்றாய் கும்மியடித்திருந்தாலும்.. இரவு வீடு திரும்பியதும், சாப்பிட்டு முடித்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் ஒரு இரவு உலா போவது வழக்கம்.
இந்த உலாவில் கருப்புச்சாமியும் கிருஷ்ணனும் உண்டு. கருப்புச்சாமி ஒரு கொத்தனார். கிருஷ்ணன் கார் டிரைவர். எல்லோரும் ஒரே ஸ்கூலில் ஒன்றாக படித்து, ஒரே தெருவில் வாழும் நண்பர்கள். அப்போதைக்கெல்லாம் அவர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். கிருஷ்ணன் முதலில் காளி வீட்டுக்கு வருவான்.

"சாப்டியா, சரி வா போயி கருப்புசாமிய பாத்துட்டு வரலாம்"

எதுக்குடா இந்நேரம் வெளிய கிளம்பீட்டிங்க என்ற காளியின் அம்மா கேள்விக்கு கருப்புச்சாமிய பாக்கப் போறோம் என்றும், கருப்புச்சாமி அம்மா கேட்கும் இதே கேள்விக்கு காளியப் பாக்கப் போறோம் என்றும் ரெடிமேட் பதில்கள் வரும்.​

"வீட்டுலேயே டீ, காப்பி, மிக்சர், சாப்பாடுன்னா நல்லாதான் கவனிக்கிறாங்க. சிகரெட் ஒண்ணு மட்டும் பத்த வச்சுக் கொடுத்தாங்கன்னா எதுக்கு வெளிய சுத்தப்​போறோம்..?" என்று கிருஷ்ணன் அலுத்துக் கொள்வான்.

கருப்புச்சாமியும் சேர்ந்தவுடன் மூவர் அணி மேற்கிலுள்ள கடைப்பக்கமாக நகரும். கடைப்பக்கமுள்ள திண்டில் உட்கார்ந்து கொண்டு புகைப்பது வழக்கம். சிலசமயம், கருப்புச்சாமி ஒரு உந்துதலால் கேட்பான்,

"டே காளி, ஆயி போயிட்டு வரலாமா?"

"அதெல்லாம் வீட்டிலேயே போயிட்டு வரமாட்டீங்களாடா?" என்று குமுறுவான் கிருஷ்ணன்.

"கிச்சா, வீட்டுலே சுவத்தப் பாத்துக்கிட்டே போறது ஒரு பொழப்பா? இங்க அப்படியே ஓப்பன்ல காத்தோட்டமா போறது எப்படியிருக்கு..?"

என்று நாடோடிக் காற்றின் தத்துவம் பேசுவான் காளி.

"எப்படியோ போய்த் தொலைங்க"

என்று கிருஷ்ணன் அவர்கள் கூடவே போவான்.​கொஞ்சம் தெற்கு பக்கமாய் நகர்ந்தால் லயன்ஸ் கிளப் கல்யாண மண்டபம். அதற்கு முன்பாக இருளடர்ந்த புதர் மண்டிய மைதானம். காளியும், கருப்புச்சாமியும் இன்னொரு தம்மைப் பற்ற வைத்துக்​கொண்டு போய் உட்கார்ந்து கொள்வார்கள்.கிருஷ்ணன் தனியாக புகை ஊதிக் கொண்டிருப்பான். இந்த ராத்திரிக் கச்சேரி இப்படியே இனிதாக போய்க்​கொண்டிந்தது.​

மெயின் பீஸ்: காட்சி-2

ஒரு சமயம் கிருஷ்ணன் ஒரு பழுப்பு நிற அம்பாசிடருக்கு டிரைவராகினான். பொதுவாக அவன் வாடகையெல்லாம் முடித்துக் கொண்டு வீடு திரும்ப இரவு எட்டு எட்டரை ஆகிவிடும். அதனால் கிருஷ்ணன் சிலசமயம் வீடு திரும்பாமல், காரோடு மேற்கிலுள்ள கடைத் திண்டுக்கு வந்துவிடுவான். அவனுக்கு முன்னமே காளியும் கருப்புச்சாமியும் ஆஜராகியிருப்பார்கள்.
ஒரு நாள் கிருஷ்ணன்,

"காளி ரொம்ப பசியாயிருக்குடா, பக்கத்துல புரோட்டா போடறான். போயி சாப்பிடலாமா?" என்று கேட்டான்.

"சரி.. எனக்கு ஒரு கொத்துப் புரோட்டா" என்று தயாரானான் காளி. அன்றிலிருந்து இவர்கள் இருவரும் திண்டில் காத்திருப்பதும், கிருஷ்ணன் பழுப்புநிற காரில் வந்து இறங்குவதும், புரோட்டாக்களும் கொத்துப் புரோட்டாக்களும் தின்பதுமாய் கதை தொடர்ந்தது.

பின்னொரு நாள், கிருஷ்ணனை எதிர்பார்த்து திண்டில் புகைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் காளியும் கருப்புச்சாமியும்.
"கருப்பா, ஆயி" என்று காளியின் உந்துதலில் இருவரும் வேலையை முடித்துக் கொண்டு திரும்ப திண்டு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இரவு ஒன்பது மணி. சோடியம் வேப்பர் வெளிச்சங்கள் பொழுதை பழுப்பாக்கிக் கொண்டிருந்த சமயம். தூரத்தில் ஒரு கார் வந்து​கொண்டிருந்தது.

"கருப்பா, அங்க பாருடா கிச்சா காரு வருது"

"லேய்.. அது வேற காரா இருக்கும்டா"

"இல்லடா மாமா, கிச்சான் வண்டியேதாண்டா, பாரு பிரவுன் கலர்ல இருக்குது"

"சரி, பொறு எப்படியும் இங்கதான வருவான்"

"இல்லடா, நாம முன்னாடி நடந்து போயி பரோட்டா கடை பக்கம் போயிடலாம்"

"என்னடா சொல்ற?"

"ஆமாண்டா லேட்டாயிடுச்சில்ல, கார அப்படியே திருப்பிக்கிட்டு வீட்டுக்கு போயிட்டான்னா?"

"என்ன இப்பிடியே புரோட்டா சாப்பிடப் போலாங்கிறியா?"

"ஆமா மாமா.. "

"லேய்.. ஆயி போயிட்டு, கழுவாமக்கூட"

"யாருக்குடா மாமா தெரியப் போவுது.. நீ எதுவும் கிருஷ்ணன் கிட்ட மூச்சு உட்ராத"

"நீ வேணா தின்னுத்தொலை, நான் வரலடா சாமி"

காளியும் கருப்பனும் வேகவேகமாய் கார் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்குதான் ஒரு ட்விஸ்ட். கார் சடாரென அவர்களையும் கடந்து நில்லாமல் சென்றது. கார் கடந்த பின்னாடிதான் தெரிந்தது அது கிருஷ்ணன் காரில்லை என்று. பெருத்த ஏமாற்றமாக போயிவிட்டது காளிக்கு. அதைவிட கருப்புச்சாமி இந்த கொத்துப் பரோட்டா விஷயத்தை மற்ற நண்பர்களுக்கும் பத்த வைத்து விடுவானோ என்று பயமாகவும் இருந்தது.

"டேய் மாமா, இந்த விஷயத்தை யாருட்டயும் சொல்லிராதடா"

"ச்சேச்சே.. இதப் போயி சொல்லிக்கிட்டு"

கொஞ்சம் சமாதானம் ஆனவனாய் நடந்தான் காளி. கருப்புச்சாமி வீடு வந்ததும் திரும்ப ஒருமுறை உறுதி​செய்து கொள்ள விரும்பினான்.

"மாமா சத்தியமா மேட்டர யார்டயும் சொல்ல மாட்டியே?"

"இவனொருத்தன்.. சொல்லமாட்டேன் போயி படுடா"

"சத்தியமா?"

"சத்தியமா! போதுமா?"

இதுதாங்க கருப்புச்சாமி காத்த ரகசியம்.

டெயில் பீஸ்:

ஒருமுறை நண்பர்கள் அனைவரும், பத்துப்பேராக பொள்ளாச்சி பக்கத்திலுள்ள சிற்றூருக்கு ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார்கள். சரக்கடிக்கலாமென்று, அந்த ஊருக்குச் சற்று ஒதுக்குப்புறமாக காரில் சென்று கச்சேரியை ஆரம்பித்தார்கள். ரெண்டு ரவுண்ட் போனதும் காளிக்கு வயிறு கலக்கிவிட்டது. எக்ஸ்யூஸ் மீ என்று ஒதுங்கிவிட்டு வந்தான். மறுநாள் காலையில் எழுந்து திருமணத்திற்கு செல்ல தயாரானார்கள். அப்போதுதான் வெளிக்குப் போய்விட்டு வந்த கருப்புச்சாமி கேட்டான்.

"காளி.. சுத்து வட்டாரத்துல எங்கியுமே தண்ணியேயில்லாடா, கால் கழுவ எங்கடா போறது?"

"கல்யாண மண்டபத்துக்குதான்"

சரியென்று மண்டபத்தை நோக்கி நடந்தார்கள். திடீரென்று ஏதோ பொறி தட்டியவனாக காளியைக் கேட்டான் கருப்பன்,

"மாப்ள, நீ நைட்டுப் போனியே, எங்கடா கால் கழுவுன??"

தலையை கோதி விட்டவாறே காளி சொன்னான்,

"இருட்டுல தனியா தண்ணிய எங்கனு போயி தேட?? அதான் மிக்ஸிங்கு வச்சிருந்த செவன்அப்பை யூஸ் பண்ணிக்கிட்டேன்"

குறிப்பு:

1. இது புனைவல்ல
2. வரும் பின்னூட்டங்களைப்​பொறுத்து, அம்மாதிரி இடுகைகள் எழுதலாமா வேண்டாமா என முடிவு செய்யப்படும்
3. பின்நவீனத்துவத்திற்கும் இதற்கும் யாதொரு சம்பந்தமும் கிடையவே கிடையாது

Thursday, July 23, 2009

காளிதாஸ் ஒர்க் ஷாப்


காளிதாஸ் அப்பா அவன் பத்தாவது படிக்கும்போதே செத்துவிட்டிருந்தார். அண்ணன் மோகனுடன் சேர்ந்து அவனின் மோகன் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தான். அது ஒரு டூ வீலர் ஒர்க் ஷாப்.

வேலை போக மீதியிருக்கும் நேரங்களில் புகைத்தும் நண்பர்களோடு கதைத்தும் நாட்கள் பறக்கும். பின் சில வருடங்களில் புகைக்கும் நேரத்தில் மீந்ததே வேலை செய்யும் பொழுது எனக் கொள்ளலானான் காளி.

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப் படத்தெரியாது. அடர்ந்து அழுக்கேறிய சுருள் முடி. பெண்கள் (வயது,தோல் வித்தியாசமெல்லாம் கிடையாது) எதிர்பட்டால் தலையின் பக்கவாட்டு கேசத்தை கைகளால் கோதி, முன்னுச்சியை உள்ளங்கையால் அழுத்திவிடுவான். இந்த எளிய ஒப்பனை, பெண்கள் அருகில் இருக்கிறார்கள் என்பதான குறிப்பாக காளியின் நண்பர்களுக்கு பயன்பட்டது.

"மாப்ள தல சைடு கோத ஆரம்பிச்சுட்டான்பா, எங்க பிகரு வருதுன்னு பாருங்கடா"

என்று தேட ஆரம்பிக்கலாம்.

காளியின் வாழ்க்கை டிவிஎஸ்50 போல எளிமையாக இருந்திருக்கலாம்தான். ஆனால் சாலை அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை. சிலசமயம் நம்மோடு வண்டியில் தொற்றிக் கொள்பவர்கள் செளகரியத்திற்கேற்பவும் உருள ஆரம்பித்துவிடுகிறது.

கடை பேரென்னவோ மோகன் ஒர்க் ஷாப்தான். இருந்தாலும் கடை எப்போதும் 5க்குமேல் காளியின் நண்பர்களாலும், கோல்ட் ப்ளேக் சிகரெட் புகையாலும் சூழ்ந்திருக்க, கடை விரைவில் காளிதாஸ் ஒர்க் ஷாப்பாகவே உணரபட்டது.

மோகன் தனியாக கடைதொடங்கியது இப்படிதான்:

"ஏண்டா? எப்ப பாரு சூர்யா பேக்கரி சந்துல நின்னு தம்மடிச்சுக்கிட்டே இருந்தா, கடைய யாரு பாத்துக்கிறது??"

மோகன், ஹான்ஸ் அல்லது கணேஷ் புகையிலையை வாயில் இடுக்கிக் கொண்டு பேசுவதால், ஒரு குழறலாகத்தான் வார்த்தைகள் வரும்.

காளி இதுக்கல்லாம் அசரமாட்டான்.

"மகுடி அண்ணன பாத்துக்க சொல்லிட்டுதான் போனேன். அஞ்சு நிமிசத்துல கடைய யாரு தூக்கிட்டு ​போப்போறா?" என்பான். மகுடி, பக்கத்து சைக்கிள் கடைக்காரர்.

".... குடிச்சுப் போட்டு கடைக்கு வரச்சொல்லுதா? இப்படியே பண்ணிட்டு இருந்தீனா ஒரு நாளைக்கு இல்லேன்னா ஒரு நா நல்லா மிதி வாங்கப்போற"
"நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு இஸ்மாயில் கல்யாணத்தில தண்ணியப் போட்டு கடையிலேயே வாந்தி எடுத்து படுத்துக் கிடந்தயே?"

பிறகு, நீயே இந்தக் கடையைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு சில கி.மீக்கள் தள்ளி மோகன் தன் பழுது நிலையத்தை நிறுவ வேண்டியதாயிற்று!

காளிதாஸ் ஒர்க் ஷாப் உருவான கதை இதுதான்.

டிவிஎஸ், யமஹா, சுசூகி, பஜாஜ் என அனைத்து விதமான இருசக்கர வாகனங்களும் பழுது பார்த்து, குறித்த நேரத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளித் தரப்படும். பெண்கள் என்றால் வீடுவரை வந்து வண்டி டெலிவரி செய்யப்படும். சிலசமயம் கூலியாக வெறும் சிகரெட்டுகளோ அல்லது சரக்கோ, அல்லது பணத்துடன் சரக்குவரியும் சேர்த்து வசூலிக்கப்படும். வண்டி சரி செய்யப்பட்டபின் காளி ட்ரையல் பாத்துவிட்டுதான் கொடுப்பான். 50சிசி வண்டிகளுக்கு ட்ரையல் அவ்வளவாக சிரத்தை எடுக்க மாட்டான். 100சிசி என்றால் ட்ரையல் மணிக்கணக்காகும். சிலசமயம் தென்படும் பெண்களைப்பொறுத்தும் இது அமையும்.

இப்படித்தான் ஒரு சாயங்காலம், எதிர்மாடியிலுள்ள சபரி ஸ்டுடியோஸ், தன் புத்தம்புது யமஹா ஆர்எக்ஸ்ஜியை காளிதாஸ் கடையில் வந்து நிறுத்தினார்.

"தம்பி, ரியர் வியூ மிரரை கொஞ்சம் டைட் பண்ணிக் கொடுப்பா"

"சரிங்ணா. வேலையா இருக்கேன்.. இப்ப வண்டிய விட்டுட்டு போங்க, ரெடி பண்ணிட்டு, நானே கொணாந்து வண்டிய விடறேன்"

என்று சொல்லிவிட்டு, அப்படியே தம், டீக்கு காசும் வாங்கிக் கொண்டான். ரியர் வியூவை சரி செய்தான். புது வண்டியின் வாசம் காளியை வா என்றது. வண்டியை எடுத்து சைக்கிள்கடை மகுடி அண்ணனைப் பார்த்து,

"ஒரு ட்ரையல் பாத்துட்ட வந்துறேண்ணா"

என்று முறுக்கிக் கொண்டு கிளம்பினான்.

சரியாக 10 நிமிடங்கள் கழித்து வந்தான் காளி.. வண்டியை உருட்டிக் கொண்டு.
அப்போதுதான் நண்பர்கள் குழாமும் வந்து சேர்ந்திருந்தது.

"என்னடா காளி, எங்க போயிட்ட? ஏன் வண்டிய உருட்டிகிட்டு வர்ரே?"

அமைதியாக வண்டியை ஸ்டாண்டிட்டு விட்டு, ஒர்க் ஷாப்புக்குள் வந்து உட்கார்ந்தான்.

அப்போதுதான் வண்டியைப் பார்த்த நண்பன் பாபு,

"வண்டி ஆக்சிடண்ட் ஆயிருக்குடா" என்று அலறினான்.

முதலில் வண்டியைப் பார்த்த நண்பர்கள் அதன் நெளிவு சுழிவுகளைப் பார்த்த பின், தங்கள் நண்பனையும் நோக்கினார்கள். அங்கங்கே சிராய்ப்பு. கால்முட்டி பக்கம் பேண்ட் கிழிந்திருந்தது.

"காளி, என்னடா ஆச்சு"

"ட்ரையல் பாக்கலாம்னு போனேன். போலீஸ் ஸ்டேஷன் வளவுல வரும்போது, நல்லா ஒரு கட் போட்டேன்"

காளிதாஸ் வண்டியோட்டும் விதம் அப்படிதான். வளைவுகளை கண்டால் வேகம், அதிவேகம் கொள்வான். சாலை வளைவானாலும் வரி சேலை வளைவானாலும் சரி! சாலை வளைவுகளில் அவன் பிரயாணிக்கும் போது வண்டியை சாய்க்கும் கோணம் அவ்வளவு சுவாரசியமானது.

"கட் நீ எப்பயும் போடறதுதான??"

"இல்லடா மாமா.. வண்டி புதுசாயிருந்துச்சா, நல்ல பிக்கப் வேற, கொஞ்சம் வேகமா கட் போட்டேன். வண்டி ஃபுட் ரெஸ்ட் ரோட்ல பட்டு தூக்கி போட்ருச்சு"

வண்டியின் ஃபுட் ரெஸ்ட் சாலையில் உரசும் அளவுக்கு சாய்த்து என்றால் அது எப்படிப்பட்ட ட்ரையல் என்று நாமே யூகிக்க வேண்டியதுதான்.

வண்டியை சுற்றி என்னடா கூட்டம் என்று பார்க்க வந்த சபரி ஸ்டூடியோக்காரர்.. தன் புது வண்டியைப் பார்த்ததும் அப்படியே தலையில் கைவைத்து,

"ஐயோ" என்றார்.

கண்ணாடி சரி செய்ய வந்த வண்டி, முன்னாடியும் பின்னாடியும் செப்பனிட வேண்டியதாய் பரிதாபமாய் நின்றது.

"ஒண்ணும் பிரச்சனையில்லேங்ணா, நாளைக்கு வண்டிய புதுசு மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்துரேன்"

"புதுசு மாதிரியா?? வண்டியே புதுசுதாண்டா!!!"

என்று நொந்தவராய் அன்று நடந்தே வீட்டுக்கு போனார் ஸ்டூடியோக்காரர்.
காயங்களை ஆற்றவும், துக்கத்தைத் தேற்றவுமாக காளியை சூர்யா பேக்கரி பக்கமாக நகர்த்திச் சென்றனர் நண்பர்கள். டீயும் புகையுமாய் சம்பவத்தைப் பற்றி அலச ஆரம்பித்தனர். விபத்தான வண்டியை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும், முட்டி காயத்துக்கு டாக்டரிடம் போகலாமா இல்லை டாஸ்மாக்கே போதுமா என்று ஆலோசித்தனர்.

பேச்சு வளர்ந்து கொண்டும், சிகரெட்டுகள் தீர்ந்து கொண்டும் இருந்த ஒரு கணத்தில், காளி ஏதோ ஒரு புள்ளியை வெறித்தவனாய், திடீரென வாயில் சிகரெட்டைப் பற்றிக் கொண்டு தலையின் இரு பக்கவாட்டிலும் கோதி, முன்னுச்சி முடியை அழுத்தி விட்டான்.

இந்த ஒப்பனைக் குறிப்பின் அர்த்தம் உணர்ந்த நண்பன் பார்த்தி சொன்னான்,

"முட்டி உடைஞ்சு ரத்தம் கொட்டினாலும், காளிக்கு குட்டிய பாத்தா எல்லாம் பறந்து போயிருதுடா"

Monday, July 20, 2009

வீங்கிய மண்டையும், சில விருதுகளும்

நன்றாக கவனிக்கவும்: இது வழக்கம் போல் போடும் மொக்கையல்ல. சீரியஸ்! அட சிரிக்காதீங்கப்பா! என்னதான் நம்மை மொத்தினாலும் குட்டினாலும் குரல்வளையை கடித்தாலும், கடைசியில்​கைக்குலுக்கி அவார்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கு என்பதுதான் இந்தவார இணையத்தின் முக்கிய விசேஷச் செய்தி!
நெஞ்சை நீவிக்​கொண்டே​மேலும்​தொடர்பவர்களுக்கு நன்றி!
நமக்கு, ஐ மீன் 'காலடி'க்கு The Interesting Blog அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கு!! நம்மை நம்பி அவார்ட் கொடுத்தவர்கள்:

சங்கா (என்னுள்ளே)
SUREஷ் (பழனியிலிருந்து) (கனவுகளே)

ஆமாம். நம் தங்க அண்ணன் சங்காதான் முதலில் காலடி-க்கு அவார்ட் கொடுத்து நம்மை ஆனந்த கடலில் தள்ளிவிட்டவர்!

அதேசமயம், தல SUREஷ் - பழனியிலிருந்து, நம் உள்ளங்கையில் ஊத்தினார் பஞ்சாமிர்தமாய் அதே விருதை!இவர்கள் இருவருக்கும் நம் காலடியின் தீவிர மற்றும் அதி தீவிர வாசக கண்மணிகளின் சார்பில் நன்றிகள்!

இந்த அவார்டின் ஆதிமூலம் ரிஷி மூலம் தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் SUREஷ் (பழனியிலிருந்து) பார்க்கவும்.

இரண்டு கப்புகளையும் - விருதுகளையும் - பெருமையோடு பெற்றுக் ​கொண்ட நம் காலடி பரவசத்தில் தள்ளாடுகிறது!! இது ஒரு தொடர்பதிவு விருதுச் சுற்று. ​விருது பெற்றவர், மேலும் 6 பேருக்கு விருதை வழங்கவேண்டும்.​

இதோ நாம் பெருமையுடன் வழங்கும் - காலடியின் The Interesting Blogs பட்டியல்:

நந்தா: ப்ரியத்திற்குரிய கவிஞன். சரக்கடிக்க வாருங்கள் என்ற ஒரே கவிதையிலேயே பயங்கர நட்பாகி விட்டேன்(டோம்?). இந்தாப்பா உன்கு ஒண்ணு.. குத்திக்கோ வலைப்பூவூலன்னு சொன்னாக்கா, இந்த உஸ்தாது அதெல்லாம் வாணாம்பா, இதுல்லாம் குத்தனாக்கா நம்ம வல்ப்பூ கலீஜா பூடும்னுடுச்சி! :-( சரி விடுங்க.. விருது கொடுப்பது ஒரு நல்ல வலைப்பூ​வை அறிமுகம் செய்யத்தான் என்று நினைத்துக் கொண்டு - இதை ஒரு அறிமுக விருதாக (அடங்கொன்னியா!!) அறிவிக்கிறது!! இதை காலடியின் நொந்த விருது எனக் கொள்க!

டோமி யப்ப்ப்பா... அழுத்தக்கார ஆளுப்பா நம்ம டோமி.. டெய்லியும் ஒரு இடுகை.. இங்கிலீஷ்காரன் விஸ்கி சாப்பிட மாதிரி, எண்ணி மூணே மூணு​வரிதான்! பின்னூட்டத்துக்கு நன்றி, இன்னபிற தகவல்கள் அதுவும் மூ.மூதான். டோமிக்கு அன்பாக இந்த மூணைத் தொட்டவர் விருது!

நேசமித்ரன்: இன்னொரு கவிஞர். ஒவ்வொரு கவிதையும் மாயத்தன்மை கொண்ட படிமங்களைக்​கொண்டது. மயக்கத்தன்மை ஏற்படுத்தும் படிமங்களை - அதாவது கவிக்காட்சிகளை- பாராட்டி நேசனுக்கு லேசர் கவி விருது!

சண்முகம் சேலம்:மொபைல்லயே இடுகை போடுறாரு... புதுசா SMSGupShupன்னு Tamilish மொபைல் அலர்ட் குழு ஆரம்பிச்சு பட்டாசு கெளப்பிட்டிருக்காரு. நாம வச்சிருக்கிறததான் சோப்பு டப்பா ஆச்சே. 3G ​செட்டுக்காரங்க முயற்சி பண்ணிப்பார்க்கலாம். ஆய் அசோசியேஷன்னு ஒரு இடுகை - செமத்தியா பின்னு, பின்னூன்னு பின்னீட்டாங்க பின்னூட்டத்தில. அனேகமா அடுத்த சாரு நிவேதிதாவின் வாரிசா வருவாருன்னு காலடி யூகிக்கிறது. சம்முவத்துக்கு நாம் கொடுக்கும் அவார்ட்: 'ஆயி'ரத்தில் ஒருவன்!

சிந்தனி - தங்கமணி பிரபு: சிந்தனின்னா சிந்திக்கிறவர்ன்னு அர்த்தமாம். தலீவர், சாதாரண ஆளில்லப்பா. காமிரா கண்ணுக்காரர். இப்ப கொஞ்ச நாளா சீரியஸா இடுகைகள போட்டு கும்பல் கும்பலா ஆட்களை பைத்தியமாக்கிட்டிருக்காரு. நானும் சிவனும் – (சிறு)கதை விடுதல் படிச்சிட்டு அசந்துட்டேங்கிற விட, பயந்துட்டேன்னு சொல்லலாம்! இப்ப எக்ஸ்க்யுஸ்மீ ஒரு பதிவு கைமாத்தா
கிடைக்குமா! அப்படின்னு பதிவு போட்டிருக்கார். ஸோ சிந்தனிக்கு கைமாத்தா இந்த விருது (விருது வாங்கினத வச்சு ஒரு பதிவ எழுதி பீதியக் கிளப்புங்கப்பா!)

சமரன் அசத்துற எழுத்து..! சிறுகதை மாதிரி அனுபவங்களை கொட்டுற தீவிரம்.. (கோயம்புத்தூர்காரர் இல்லையாம்) மதுரைக்காரர். போட்டாவ போடுங்கன்னா, பொடனிய படம் புடுச்சி போட்டிருக்கிறாரு வலைப்பூவுல! ஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா?? அப்படின்னு ஒரு இடுகை.. 4 மணி நேரமா ஒண்ணுக்க அடக்கிட்டு (ஆத்தி..) பஸ்ல வர்றத பத்தி. இந்த ஒரு இடுகைக்காகவே நாம் சமரனுக்கு வழங்குவது - 'தொட்டி ​ஜெயா' விருது! பிடிச்சுக்கோங்க சமரன்!!

முரளிகுமார் பத்மநாபன் அன்பே சிவம் சிறுகதை, அனுபவக் கட்டுரைகள்,நூல் விமர்சனம், அரசியல், சினிமா, லொட்டு லொசுக்கு என பயங்கரமா இடுகை போடும் முரளி, திருப்பூர்க்காரர். கிலுகிலுப்பை -II (கதிர்வேலு ஐயா) படித்துவிட்டு, பின்னூட்டம் போட்டு, அப்புறம் பின்னூட்டத்தையே இடுகையாகவும் போட்டு நாம் நம் காலடியில் அக்கப்போர் செய்திருக்கிறோம் ஆசிரியர்களிடம் அன்பு பாராட்டும் அதிசய மாணவர். முரளியை கெளரவிக்கும் விதமாக காலடி அவருக்கு வழங்குவது வாத்யார் வூட்டுப் பிள்ளை விருது! வாங்கிக்கோ வாத்யாரே!

அவ்வளவுதான் விருது. தீந்து போச்சி. ஆனா ஒரு டவுட்டு; சங்கா அண்ணன் கணக்குல 6 அவார்ட், SUREஷ் தல கணக்குல 6 அவார்ட்.. அப்ப நாம 12 பேருக்கு கப்பு கொடுக்கலாமா? ​

காலடியோட தீவிர அதி தீவிர வாசகர்களே கருத்துரைங்க.

இங்கியே வுட்டுக்கலாம் ஜுட்..

இருந்தாலும், நாம ஏன் காலடி எடுத்து வைக்க ஆரம்பிச்சோம், காலடி சுத்துற சந்து​பொந்து, இண்டு இடுக்கு இதையெல்லாம் நாம தெளிவுபடுத்திரது நல்லது. இங்கு காணப்படுகிற வலைப்பூக்கள் மற்றும் இணையதளங்கள் காலடியின் விரிதலுக்கும் திரிதலுக்கும் (வுடுங்க.. வுடுங்க) பெரும் பங்காற்றுகின்றன அல்லது பங்காற்றின.

வாமு கோமு: ஈரோடு மாவட்டம், வாய்ப்பாடி என்னும் சிறறூர் பிறப்பிடம். பல சிறுகதை,பலநாவல்கள் தொகுப்பாக வந்துள்ளன. குறிப்பிடத்தக்கவை அழுவாச்சி வருதுங் சாமி, கள்ளி போன்ற புத்தகங்கள். தோழர் இறந்து விட்ட பின்பும் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது என்ற சிறுகதையில் இருந்து இவரோட பூளவாக்கு என்ன என்று நன்றாக தெரிந்து கொள்ள காணமுடியும்.

ஈரோடு நாகராஜ்: (தவில்காரர் இல்லை) மிருதங்க வித்வான். நுணுக்கமான நகைச்சுவையை இவரது இடுகைகளில் காணலாம். முடியாதவர்கள் தேடலாம். ஆனால் எப்படியும் கிடைக்கும். நான் ரசித்துப் போட்ட பின்னூட்டம் - இந்த கேள்வி-பதில் இடுகைக்குதான்.

ஸ்டார்ஜன்: இவர் வெள்ளிவிழா (25வது வலைப்பதிவு) கொண்டாடிய அமர்க்களத்தில் கலங்கிய கண்கள், இன்னும் தெளியவேயில்லை.. சிறுகதையெல்லாம் எழுதுவார். எல்லாவகையான இடுகைகளையும் இவர் வலைப்பூவில் பார்க்கலாம். பாசக்கார பின்னூட்டக்காரர். அன்பருக்கு ஒரு பாசக்கார விருது கொடுக்கலாம்னு பாத்தா அண்ணன் ஏற்கனவே அவார்ட்டை குத்திக்கிட்டு திரியறாரு!

டவுசர் பாண்டி: நாம காலடியில போட்ட என்னடா பாண்டி என்ன பண்ணப் போற இடுகையப் பாத்து பாண்டிக்கு வாயி கோணிக்கிச்சு.. யாருடா அவன் நம்ம ஏரியாவுல வந்து கொரல் கொடுக்கிறதுன்னு நம்மாண்ட வந்து அப்பால
ஸாரிப்பா.. உம் மேட்டரு நான் நென்ச்ச மாரியில்ல.. மெய்யாலுமே ரொம்ப கலீஜ்ஜாக் கீதுன்னு ஜகா வாங்கிட்டாரு! மெட்ராஸ் பாஷைல பிஎச்டி வாங்கியிருக்காருன்னு சோமாரிக்குப்பத்துல போர்ட் வச்சிருக்காங்கோ!

ஜ்யோவ்ராம் சுந்தர் மொழி விளையாட்டு: தமிழினி மூலமா, கோபிகிருஷ்ணனின் (டேபிள் டென்னிஸ், தூயோன், இடாகினி பேய்களும்..) புத்தகங்களை வாசகர்களுக்கு போய் சேர காரணமா இருந்தவர். இப்ப ஏதோ திருத்தப்படாத புத்தகத்தின் எழுதப்படாத பக்கங்கள்னு (!?) அளப்பற பண்ணிட்டிருக்காரு

தூரன் குணா: கவிஞர். சுவரெங்கும் அலையும் கண்கள் என்ற கவிதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். நன்றாயிருக்கின்றன கவிதைகள். ஆனால் இடுகை எழுதி மாதங்களாச்சு. ஏஞ்சாமி யாரு மேல என்ன கோவம்? ஏனிந்த ரவுசு என்ற கேள்விக்கும் பதிலில்லை. ஆழிச்சுழி போல் கவிதைகள். ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. அதிர்ச்சியாய் இருந்தது. இடுகை எழுதாததற்கு இது காரணமாயிருக்குமோ?

சுப்ரபாரதிமணியன்: கனவு என்ற பத்திரிக்கையை திருப்பூரிலருந்து நடத்தி வருகிறார். இவரது சிறுகதைகளின் ஆகர்ஷணம் ப்ளாக் ஹோலுக்கு இணையானது.

கீரனூர் ஜாகிர்ராஜா: கையில் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி தற்செயலாய் சிக்கியதாக இருந்தது இவரது செம்பருத்தி பூத்த வீடு சிறுகதைத் தொகுப்பு. இவரைப்பற்றி நான் கதறியது இது.

பா.ராஜாராம்: அற்புதமான சிறுகதை லாவகம். அதே ஈர்ப்பு மிக்க சிறுகதைத் தன்மை உள்ளடக்கிய கவிதைகள். காலத்தின் வாசனை படிக்க வேண்டிய சிறுகதை

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம்: க்ராமர் கிருஷ்ணமூர்த்தி போன்ற நகைச்சுவைக்குள் நிறைய விஷயம் வைக்கத் தெரிந்த அனுபவ படைப்பாளி(யாக இருக்கலாமோ?)

திணை இசை சமிக்ஞை நல்லாயிருக்கும்.. ஒரு சில கவிதை, கட்டுரையெல்லாம் கண்ணாமுழி திருகிக்கிறாப்ல இருக்கும்.. இதோட விட்டுரலாம்... இப்பதான் இவர் பேர வச்சு (நாகார்ஜுனன்) ஒரு கும்மியாட்டம் போட்டு ஓய்ஞ்சிருக்காங்க!

aravind:நல்ல மனுசர் பாவம்.. நம்ம காலடியோட தீவிர வாசகரா மாறுவதற்கான அனைத்து சாத்தியகூறுகளும் தெரியுது! கடைசியாக அழுத
ஆறு திரைப்படங்கள்
ன்னு ஏதோ திரியப் பத்த​வெச்சிருக்காப்டி.

RAMYA:​கொங்கு தமிழ்ல பொங்கல் வெக்கிறதில பெரிய கில்லாடிங்கோவ்! ​ போயி ஒரு எட்டு பாத்துப் போட்டு வாங்க.

சந்ரு: நல்ல கட்டுரைகள் எழுதி வருபவர். நமக்கு பின்னூட்டங்களும் எழுதி வருகிறார். கூடிய சீக்கிரம் தீவிர வாசகக் கண்மிணியா ஆயிடுவாருன்னு நம்பறோம்.

வினோத்கெளதம்: ஜுலைக் காத்தில-ங்கிற வலைப்பூவின் அதிபதி. நக்கல் - நையாண்டி - மொக்கை இந்த மாதிரி சமூக சிந்தனையோட செயல்படற ஆத்மா! ஜுலைகாத்தில ஊளையிடற.. அட தென்னங்கீத்து மாதிரி இவரோட ​மொக்கைகள்..

அக்பர்: மரத்தை வெட்டி குளத்தை நட்டு.. அந்த தலைப்பாக்கட்டு ஆளுயில்ல இவுரு. இவரு கம்முனு கதை, கட்டுரை மற்றும் சீரியஸான மொக்கைகள்னு இருக்கிற நம்ம அதி தீவிர ரசிகர்!! அதுக்கே ஒரு ஸ்பெஷல் பாராட்டு ப்ளஸ் கையில ஒரு எலுமிச்சம் பழம்!!!

கோவி.கண்ணன்: தீவிரமான ஈடுபாட்டுடன் இவர் எழுதி வரும் காலம், பதிவர்களால் வெகுவாக கவனிக்கப்பட்டு வரும் பதிவு. பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை என்ற தொடர் இடுகையிலுள்ள சமூக ப்ரக்ஞை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியது. 18பட்டி வலைப்பதிவுக்கும் நாட்டாமை அண்ணன்தான்!! அட ஏதாவது டவுட்னா​கேட்டுக்கங்கப்பா!

சென்ஷி: நம்ம பெரியண்ணன். முனியாண்டி விலாஸ்ன்னு​நவீனத்துவ கதைகள்ல கலக்குபவர். காலடியின் அதி தீவிர ரசிகர்களுக்கு, சூடம் கொளுத்தி, எலுமிச்சம் பழம் கொடுத்து, வேப்பிலை அடிக்கும் தலைப் பூசாரியாக இருக்கிறார்.

சங்கா (என்னுள்ளே): அண்ணனைப் பத்தி​சொல்ல​வேண்டியதில்ல. ஏற்கனவே வந்திருக்கிற பேட்டியின் மூலம் நம் அனைவருக்கும் நன்கு அறிமுகமானவர். நமக்கு விருதும் தந்து உறவை பலப்படுத்தி விட்டார்.

எம்.பி.உதயசூரியன்: குங்குமம் ஆசிரியர். இவரோட சென்னை டயரிக்குறிப்பு கட்டாயம் வாசிக்கப்பட வேண்டியது. வரிக்கு வரி கரச்சல கொடுக்கும் மதுரை சிங்கம்.

வால்பையன்: நம்ம ஊரு தல! இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் உள்ள ஒரே பதிவர்! அதாங்க.. எங்க வேணாலும் யார வேணாலும் ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுபவர்! இப்படியெல்லாம் கூட எழுதலாம்னு இவரோட ஏற்றத்தாழ்வற்ற போதையுலகம்! என்ற இடுகையை அடிச்ச பின்னாடிதான் காலடிக்கு சங்காவுடன் ஒரு​பேட்டி உதயமாச்சு!

பின்வருபவர்களுக்கு காலடி நன்றி தெரிவித்துக் கொள்கிறது:

வண்ணத்துபூச்சியார் திரைப்பட விமர்சனம் என சீரியஸா எழுதிக்கிட்டு வருபவர்.
pukalini நம்மை உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்துக்காரர்.
கடைக்குட்டி யாருமே இல்லாத கடையில யாருக்கு நான் டீ ஆத்துறேன்? அப்பிடிங்கிறாரு!
கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், படங்களாய் இடுகைகள் போட்டு வருபவர்.

காலடியை அறிமுகப்படுத்த உதவியாய் இருந்த திரட்டிகளுக்கு நன்றி! (இங்க போயி நீங்க ஓட்டுக்குத்தணுங்கிற உள்-குத்தெல்லாம் இல்லீங்)
Tamilish
TamilManam
*
முக்கியமா விருது வாங்கினவங்க... ஆறு பேர்த்துக்கு இதை பகிர்ந்துக்கணும்! மறக்காம இந்த படத்தை ​வெட்டி உங்க வலைப்பூவுல ஒட்டிக்குங்க!!
*

Thursday, July 16, 2009

சிலோன் டெய்லர்ஸ்

சீரியஸான இடுகையையோ, இலங்கைத் தமிழர் பற்றிய கட்டுரையையோ அல்ல. தாராபுரம் நகரத்தின் சர்ச் வீதி. அதில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் தையலகத்தின் பெயரே சிலோன் டெய்லர்ஸ். என் தாய்மாமா தெண்டபாணியின் கடை. சிலோன் - இலங்கை அல்லது ஸ்ரீலங்காவின் இன்னொரு பெயர்.

அம்மா வழி தாத்தா சிலோனுக்கு சென்று செட்டிலாகிவிட்டிருந்தார். தாத்தாவுக்கு எட்டு குழந்தைகள். சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே சிலோனிலிருந்து திரும்பி தாராபுரத்தில் செட்டிலாகிவிட்டார்கள். அம்மா சிலோனிலுள்ள இரத்தினபுரி என்ற ஊரின் நினைவை இன்னும் சேமித்து வைத்திருப்பவள். அந்த ஊர், அவர்கள் வீடு, தேயிலை தோட்டம், மலை பழங்கள், பள்ளிக்கூடம், விளையாட்டு என ஞாபகங்களை எனக்கும் தருவாள்.

"நான் மூணாவது படிக்கும் போது, பள்ளிக்கூடம் லீவு விடணும்கிறதுக்காக ​சோணா வாத்தியாரு செத்துப் போயிட்டாருன்னு சொல்லிட்டு திரிவேன்"

"மங்கூஸ் பழம், லாவோஸ் பழம்.. ஒவ்வொண்ணும் எப்படி ருசியாயிருக்கும் தெரியுமா?"

இப்படி சிலோனிலிருந்து வந்த பெரிய குடும்பமாதலால் அவர்களை குறிக்க ஒரு இடப்பெயர் குழூவுக்குறியாகவும், காரணப்பெயராகவும் திரியலாயிற்று எனலாம்.

சிலோன்காரர்கள் என்றழைக்கப்பட்டலாயினர். தாய்மாமன்கள் மூன்று பேர். ​அவர்களைக் குறிப்பிடும் போது சிலோன்னு என்றும் அழைப்பதுண்டு.

"சிலோன் வீட்டுக்கு தெம்பறமா இருக்கு.." என்று வீட்டு அடையாளங்களும்

"சிலோன் சுப்பிரமணி" என்று பெயர்களையும் குறிப்பிடலாயிற்று. இப்படி தன்னோடு ஒட்டிக்​கொண்ட பெயரே தன் தொழிலையும் பெருக்கும் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை - தான் தொடங்கிய தையலகத்திற்கு

"சிலோன் டெய்லர்ஸ்" என்று பெயரிட்டார் மூன்றாவது மாமா தெண்டபாணி. அது அவரது சொந்த கட்டிடம். கீழ்பகுதியில் அவரது தையல் கடை. மேல்பகுதியில் கார்த்திக் ஸ்டுடியோ பிடித்திருந்தது.

மாமாவின் ஆளுமை விசேஷமானது. 5 தையல் இயந்திரங்கள் கொண்ட கடையில் அவரது பணி, எப்போதும் நின்று​கொண்டே துணிகளைக் கத்தரித்து கொடுப்பதுதான். கழுத்தில் அளவு டேப்பும், கையில் கத்தரிக்கோலுமாகவே கடையில் எப்போதும் காணப்படுவார்.

மாமன்காரன் தையல்காரனாயிருந்து விட்டால், மாப்பிள்ளைகளுக்கு துணிக்கடைப் பக்கம் போக வேண்டியிருக்காது.

தீபாவளி, பொங்கல், ஆடி 18 என விசேஷம் ஒன்று தவறாமல் அத்தனை பேருக்கும் புதுத்துணி நிச்சயம். எனக்கும் துணிகள் பெறுவது அவர் கைகளில்தான் - நீண்ட காலமாய்.

மீதமான துணிகளை ஒட்டித் தைக்கும் வேலையெல்லாம் கிடையாது. புதுத்துணி அசல் புதுத்துணிதான். விசேஷம் என்றால் அம்மாயின் வீடு களை கட்டிவிடும். மாமா வீட்டு வாரிசுகள், பெரியம்மா, சித்தி வீட்டு வாரிசுகள் என ஒரே அளவில் 6 அல்லது 7 சிறுவர் கூட்டம் ஆர்ப்பாட்டம் போடும். அத்தனை பேருக்கும் புதுத்துணி மாமாதான்.

வருடம்தோறும் இடுப்பளவு, மார்பளவு, உயரம், அகலம் என என் வளர்ச்சிகளை நோட்டுப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியவராயிருந்தார். என் தலையளவையும் சேர்த்திருந்தால் அது ஒரு அட்டகாசமான மருத்துவ குறிப்பாகவும் மாறியிருக்கக் கூடும். கிட்டத்தட்ட 16, 17 வயது வரை மாமா கடையில் தைக்கப்பட்ட துணிகளே அணிந்தது வாழ்ந்தேன்.

மாமா மகனுக்கும் எனக்கும் ஒருநாள் ஏதோ சண்டை வந்துவிட்டது. நிறைய சண்டை போட்டிருப்பதால் எதற்கு என்று மறந்து போயிற்று. அன்றிலிருந்து இனி கடைப்பக்கம் வந்தன்னா கேளு என்றுவிட்டு, அந்தப்பக்கம் ​போவதையே தவிர்த்துவிட்டேன். நான் பெரிய வைராக்கியக்காரன் வேறு.
என்ன பண்ணித் தொலைய?

வேறுகடை ஏறி துணி தைத்துக் கொள்ளத் தோன்றவில்லை. ​

வைராக்கியத்தின் பேரில் கடையை பகைக்கலாம், துணிகளை பகைக்க முடியாதல்லவா?

அதற்கப்புறம் எப்பவும் ரெடிமேட் ஆடைகள் தான். பிட்டு துணி எடுக்கத் ​தேவையில்லை; சட்டையைத் தூக்கி இடுப்பளவு காட்டத் தேவையில்லை; முக்கியமாக துணிதைத்து வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை.

மாமாவும் பார்ப்பார். எதுவும் சொல்லமாட்டார். 'இவன் நாம என்ன சொல்லி எப்ப கேட்டிருக்கான். என்னவோ பண்ணட்டும்' என்று நினைத்திருப்பாரோ என்னவோ!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது.

துணி எடுக்கக் கடைக்குப் போனோம். மாமாவும் கூட வந்திருந்தார்.
நான் வழக்கம் போல ரெடிமேட்தானே எடுக்கப் போறோம் என்று, அந்தப் பக்கமாய் ஒதுங்கினேன்.

மாமா என்னைக் கூப்பிட்டு,

"செகண்ட் ப்ளோருக்கு போலாம். போயி உனக்கு துணி பாக்கலாம்" என்றார்

"அங்க எதுக்கு? நான் தனியா எடுத்துக்கறேனே"

"அதுக்கில்லடா. தாய்மாமன்கிறதுக்கு நான் உனக்கு துணி எடுக்கணும். இது சம்பிரதாயம்"

"ஓ. அப்படியா?"

மாமா எப்போதும்​போல் பிட்டு துணிகளையே வாங்கினார். அந்தத் துணி எனக்கு ஆடை தந்து என் வைராக்கியத்தை அம்மணமாக்கிவிடும் என்று தோன்றியது.

துணிக்கு காசு கொடுத்துவிட்டு சொன்னார் என் பால்ய காலத்து கிருஷண பரமாத்மா:

"சாயந்திரம் கடைக்கு வந்திரு"

சூரியன் மங்கும் வேளையில், கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து துணி தைத்துக் கொள்வதற்காக​போனேன் சர்ச் வீதியின் கிழக்கு முகமாய் நிற்கும் சிலோன் டெய்லர்ஸ்க்கு.

மாமாவே அளவெடுத்தார்...

அதே சட்டை தூக்கு - இடுப்பளவு, மார்பளவு, கை, கால் உயரங்கள்.

"பேண்ட் இந்த இறக்கம் போதுமா?.. எத்தன பாக்கெட்?.. சட்டை லூஸ் எவ்வளவு?"

என​ரெடிமேட் ஆடைகள் கேட்கத் தெரியாத கேள்விகள்.

அளவுகளைக் குறிக்கத் தொடங்கினார் ஒரு பழைய கனத்த நோட்டுப் புத்தகத்தில்:

P 32; 18; s- 42- 20; L-32; 24....
வேறு யாருக்கும் புரியாத குறிப்புகள்!
அதே குறப்புப் பக்கத்தில் சற்று மேலே காணக்கிடைத்தது இது:
ஜெகன்:
P 26; 16; s-40 - 20; L-30...
என்று ஒரு கணத்தில் தேங்கி விட்ட எனது பழைய அளவுக் குறிப்புகள்.
எனக்கே எனக்காக ஒதுக்கப்பட்ட அளவுக்குறிப்பு பக்கம்.

எந்த நம்பிக்கையில் சேமிக்கப்பட்டன என் அளவுகள், 10 வருடங்களாக..??

சிலோன் டெய்லரின் அளவுக்குறிப்புகள் புரியவில்லைதாம். ஆனால், வேறு என்னவோ புரிந்தாற் போல் இருந்தது. வைராக்கியம் நிர்வாணமாகி எங்கோ காணாமல் போய்விட்டிருந்தது.

சாயுங்காலத்தின் சாம்பல் வர்ணம் கடைக்குள் வரத் துவங்கியது.


முக்கிய செய்தி:

அண்ணன் சங்கா எனக்கு Interesting Blog' அவார்ட் வழங்கியுள்ளார். அண்ணாருக்கு நம் காலடியின் தீவிர மற்றும் அதி தீவிர வாசகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

சென்ஷி-யிடம் இருந்து சங்காண்ணா இதே விருது பெற்றிருக்கிறார்.. அண்ணனுக்கு காலடியின் வாழ்த்துக்கள்!

ஒரு தொடர் அன்பு பாராட்டுதலாக இந்த மழை இங்கும் வந்திருக்கிறது! காலடி பெருமையாக மழையில் நனைகிறது!

குறிப்பு:

அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கதால, ஒரு இடுகையாவது வால சுருட்டிகிட்டு போடணுங்கிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு எழுதுன இடுகை. இனி அடுத்த இடுகையில இருந்து மாமூல் (!?) வேலைக்கு திரும்பிர வேண்டியதுதான்.

Monday, July 13, 2009

சங்காவுடன் ஒரு​பேட்டி


அண்ணன் சங்கா, வெள்ளி இடுகை - அதாங்க 25வது வலைபதிவு இடுகை - போட்டிருக்காப்ல. எல்லாரும் மாதிரி பின்னூட்டம் எழுதி வாழ்த்துனா இந்த தம்பிக்கு நல்லாருக்குமா? அதான் அண்ணனை அப்படியே ஒரு பேட்டி எடுத்து அதையே ஒரு இடுகையா போட்டுடலாம்னு..

என்னடா நேத்து பின்னூட்டமே இடுகைன்னான், இன்னைக்கு பேட்டியை இடுகைன்றான், ஒரே கொடுமைக்காரனா இருப்பான் போலிருக்கு... அப்படியெல்லாம் தப்பா நெனச்சு ஜகா வாங்கிடாதீங்க! ப்ளீஸ் படிங்க.

என் அண்ணன் சங்கா பத்தி தெரிஞ்சுக்கு இது ஒரு புண்ணான வாய்ப்பு. அண்ணன் சங்கா பத்தி சொல்ல தேவையில்லைன்னு சொல்ல ஆசைதான்; இருந்தாலும் கடல் போல் விரிந்திருக்கும் இந்த வலையுலகத்துக்கு அண்ணன் பற்றிய சிறு அறிமுகம் அவசியம்தான்:

அண்ணன் சங்கா பதிவுலகத்து வந்தது ஜுன் 2009லதான். இருந்தாலும் இந்த சமீப காலத்திலேயே நிறைய மொக்கைகளும் மோட்டுவளைச் சிந்தனைகளும் போட்டு, தன்னோட வலைபதிவின் மூலம் நிறைய பேரை சிதைச்சு சின்னாபின்னப் படுத்தி இப்ப 25வது பதிவ தொட்டிருக்கார்.

நான், அண்ணன் வலைபதிவின் நிரந்தர கஸ்டமர் ஆகிவிட்டபடியாலும், ​ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பதாலும் அதை நிவாரணப்படுத்திக் (நிதானமா படிங்கய்யா) கொள்ள வேண்டிய தேவையில் விழைந்ததே இந்த பேட்டி:

சரி ஆரம்பிப்பமா?

அண்ணன் இருக்கிறது அமெரிக்காவுல, அதனால கூகிள்-டாக்ல ஆரம்பமான பேட்டி இது.

இருங்க, அண்ணன் லாக்-இன் ஆவட்டும்.

காலடி (மிரளாதீங்க, இது நம்ம வலைபதிவோட செல்லப் பேரு): அலோ, அலோ, ண்ணா?

சங்கா: (மெஸேஜ் அனுப்புகிறார்)​வெயிட்! கனெக்டிங்..

காலடி: சீக்கிரம்ணா..

சங்கா: அட பொறுங்க தம்பி, ஆங் இதோ கனெக்டட்.​கெட்டிங் மை வாய்ஸ்?

காலடி: க்ளியரா இருக்குங், நான்தான் காலடி பேசறேங்ணா

சங்கா: காலடியா? என்னப்பா இது புதுசாயிருக்கு?

காலடி: இல்லீங்கணா, இதுதான் நம்மோட வலைபதிவு பேரு, அதான் காலடி போட்டோல்லாம் போட்டு, அலை கண்டும் விலகாமல்-ன்னு இருக்குமே..

சங்கா: அட ஆமா, அது காலடியா? நான் ரொம்ப நாளா காவடின்னுல நெனச்சுக்கிட்டு இருந்தேன்? சரி விடு. அதென்னப்பா திடீர்னு பேட்டி, கீட்டின்னுகிட்டு?

காலடி: வெற்றிகரமான 25வது பதிவு, உங்களோட பதிவுலக அனுபவம், இதுங்கள பற்றி அறியவும், ஏனைய பதிவர்களுக்கு தெரியப்படுத்தவும்தான் இந்த பேட்டிங்ணா

சங்கா: கொஞ்சம் ஓவரா தெரியுதே..? இருந்தும் தம்பி கேக்கிறதால பண்ணிட்டா போச்சு. சரி ஆரம்பிப்பா உன்னோட பேட்டிய

காலடி: முதலில் தங்களின் 25வது வலைபதிவுக்கு காலடி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டவர்களாகிறோம்!

சங்கா: இதென்னப்பா நல்லா பேசிட்டிருந்திட்டு, திடீர்னு லேகியம் விக்கறவன் கணக்கா கூவறே? அதான் நமக்கு வரலியே சும்மா சாதாரணமாவே பேசு

காலடி: சரிங்ணா. முதல்ல உங்கள பத்தி சொல்லுங்ணா

சங்கா: பேட்டி எடுக்கிறவன் எதுக்குப்பா அண்ணா நொண்ணாகிட்டு? சங்கான்னு கூப்பிடுப்பா

காலடி: சரிங்ணா.. ஸாரி சங்கா, உங்களப் பத்தி

சங்கா: என்னப் பத்தி என்னப்பா சொல்றது, பிறந்தது ஒரு ஊரு பொழைக்கிறது ஒரு ஊரு. இப்ப இருக்கிறது கலிபோர்னியாவுல. வூட்டுக்காரம்மா பேரு தங்கமணி. ஒரு மகன். இங்க பீச்ல போறது வர்ரது, பார்க்ல ஜீன்ஸ் மாட்டிட்டு திரியறது இப்படி வெள்ளச்சிங்க, கருப்பிங்ன்னு பாகுபாடு இல்லாம சைட் அடிச்சிக்கிட்டு திரியறேன். அதாவது நாம வேலை பாக்குறது இல்ல, பாக்குறதுதான் நம்ம வேலையே! பார்ட் டைமா ஒரு கம்பெனில வேலை பாத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வரவர கம்பெனி கேஃப்டீரியா மெனு ஒண்ணும் சரியில்லாததால, வேற கம்பெனி மாத்தலாமான்னு மோட்டுவளைய பாத்துக்கிட்டிருக்கேன்.

காலடி: ஆங்.. மோட்டுவளைன்னதும் ஞாபகத்துக்கு வருது.. உங்களோட மோட்டுவளை சிந்தனைகள் வலையுலகத்தில ரொம்ப பேமஸ்ங்கிறது..

சங்கா: ரொம்ப சொறியாதடா

காலடி: ஓகே. வாட் ஈஸ் மோட்டுவளை சிந்தனைஸ்?

சங்கா: குட் கொஸைன். இந்த ப்ரபஞ்சத்தில ஒரு விஷயம் இன்னொரு விஷயத்தை உள்ளடக்கியிருக்கு, இல்ல இன்னொரு விஷயத்தோட தொடர்ச்சியா இருக்கு. சில சமயம் ஏற்கனவே நடந்த விஷயத்தோட மீள்பதிவாவும் இருக்கு. ஆக மொத்தம் இந்த விஷயங்களெல்லாம்...

காலடி:ண்ணா.. ண்ணா...

சங்கா: என்ன?????

காலடி: ஒண்ணுக்கு வாரம மாரி இருக்குங், போயிட்டு வந்துர்ரேனுங்

சங்கா: கருமம் பிடிச்சவன்டா, பேட்டிக்கு வாரவன் இதெல்லாம் முடிச்சு தொலச்சிட்டு வரக்கூடாது. போய்ட்டு வா

(காலடி ஒண்ணுக்குப் போவதால் - காலோடு இல்லீங், கா..ல..டி - நீங்களும் உச்சா போயிட்டு, ஜிப்ப​போட்டுட்டு, தண்ணி குடிச்சிட்டு வந்துருங்க, பாப்பம்)

காலடி: ண்ணா, வந்துட்டேன்

சங்கா: ஆங், இப்பதான் பில் காலின்ஸ் பாட்டு ஒண்ணு யூட்யூப்ல கேட்டுகிட்டு இருந்தேன்.. என்ன பேசிட்டு இருந்தோம், மறந்து போச்சு

காலடி: மோட்டுவளை சிந்தனை..

சங்கா: கரெக்ட். விஷயங்கள் எல்லாம் எப்படி பகுக்கப்பட்டிருக்குன்னு புரிஞ்சிருப்பேன்னு நினைக்கிறேன். கரெக்டா? இப்ப ஒவ்வொரு விஷயத்தையும் உள்ள பூந்து, ஸ்ரெயிட்டா போயி அப்படியே லெப்ட், ரைட், யூ டர்ன் எல்லாம் போட்டா, ஒரு விஷயத்தில இருந்து இன்னொரு விஷயத்துக்குப் போயிடலாம்.

காலடி: ஒண்ணும் புரியிலீங்?

சங்கா: அட தம்பி, இப்ப வீட்ல நீ மல்லாந்து படுத்துக் கிடக்கிறப்ப என்ன தெரியும்?

காலடி: ஊட்டுக் கூரை தெரியுங்

சங்கா: குட், அப்படியே கொஞ்சம் போகஸ் பண்ணுனா?

காலடி: ண்ணா, விட்டம் தெரியுதுங்ணா, விட்டத்தில பல்லி கூட இருக்குங்ணா

சங்கா: சரியா சொன்னே! இதுதான் ஆரம்பம்!! இப்ப பல்லியிருக்கே அது எப்படியிருக்கு?

காலடி: பல்லி ஒல்லியாயிருக்குங்

சங்கா: விட்டம் பல்லி, பல்லி ஒல்லி - மோட்டுவளை சிந்தனை அவ்ளோதாண்டா​கோமுட்டி தலயா!

காலடி: அதெப்பிடிங்ணா மோட்டுவளை சிந்தனையாகும்?

சங்கா: அடே.. விட்டம் நம்ம வீட்ல இருக்கு, பல்லி எங்கிருந்து வந்திருக்கு?ஜுராஸிக் ஏஜ்ல இருந்து. ஏன்னா அது டைனோசரோட இனம். இப்ப டைனோசருக்கும் நம்ம வீட்டு விட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?

காலடி: ஒரு சம்பந்தமும் இல்லீங்க

சங்கா: நோ. அதை அப்படியே விட்டுடக் கூடாது. மெல்ல அந்த நூலைப் பிடிச்சு அதோட இணைப்புகளெல்லாம் எங்கெங்க​போகுதுன்னு தேடணும்டா

காலடி: கரெக்ட்டுங்ணா. மோட்டுவளை பக்கமா ஒரு நூல்.. இல்ல இல்ல.. டிவி கேபிள் போகுதுங்ணா அத சொல்றீங்களா?

சங்கா: அதுவும் ஒரு இழைதான். இந்த இழையோடு போனீன்னா வர்றதுதான் இது - கேபிள், டிவி, சீரியல், சினிமா, ஸ்பீல்பர்க், பர்கர், வண்டி ஆச்சு மக்கர், ஊத்து கொஞ்சம் லிக்கர், மாட்டு நீ நிக்கர், இதை​எழுதினா டக்கர்!

காலடி: ஆமாங்ணோ, ஒரு ப்ளோ சிக்கிற மாதிரி இருக்குங்!

சங்கா: இப்ப புரிஞ்சுதா மோட்டுவளை சிந்தனையோட மகிமை?

காலடி: சூப்பருங்ணா. இதை படிக்கிற, அப்புறமா மோட்டுவளை சிந்தனையை ப்ராக்டீஸ் பண்ணப்​போற நம்ம காலடியோட தீவிர, அதி தீவிர வாசக கண்மணிகளுக்கு..

சங்கா: டே.. ​டே.. போதுண்டா உன் அளப்பற! போடறது மாசத்துக்கு 3 இடுகை. அதுக்கு வாரது 4 பின்னூட்டம்.. இதில இந்த பில்ட் அப்பு!

காலடி: ஹிஹி.. சும்மா ஒரு விளம்பரந்தான்!​மோட்டுவளை சிந்தனை செய்யற வாசகர்களுக்கு நீங்க கொடுக்கும் டிப்ஸ்?

சங்கா: மோட்டுவளைதான் சிந்தனையோட மையம். நீங்க படுத்துக்கிட்டு, உக்காந்துகிட்டு ஏன் நின்னுக்கிட்டு கூட சிந்திக்கலாம்.. ஆனா மோட்டுவளைய வெறிக்கறது முக்கியம். எப்படி வெறிக்கணும்னு தெரியாதவங்க, என்னோட அனானிக்கதையை வந்து படிங்க. நாம இப்படி மோட்டுவளையா சிந்திக்கும் போது நிறைய தடங்கல்கள் எல்லாம் வரும்.. உதாரணமா, போன் அடிக்கும், பொண்டாட்டி கூட அடிக்கும், குட்டிப்​பையன் வந்து குமட்டிலயே குத்துவான் எது எப்படினாலும் சிந்தனைய விடக்கூடாது. மோட்டுவளையை ஒரு மோட்ச யுக்தியா கருதி வெறிக்கணும்.. வெறிக்கணும். அன்ட், திஸ் ஈஸ் த பாட்டம் லைன்: மோட்டுவளை சிந்தனை செய்யும்போது பல்லி இல்லாத இடமா பாத்து உக்காருங்க.. ஏன்னா சில டைம் பல்லி ஒண்ணுக்கு போயிடுது

காலடி: நன்றிங்! ரொம்ப உபயோகமான குறிப்பு. அடுத்த கேள்வி..

சங்கா: கேளுப்பா

காலடி: எப்படி உங்களுக்கு பதிவு எழுதணும்னு தோணுச்சு?

சங்கா: நான் ரொம்ப நாளா பதிலகத்த மேயி மேயின்னு மேஞ்சுட்டு, இனிமே இந்த அக்கிரமத்தை பொறுக்க முடியாதுன்னு பொங்கி எழுந்ததுதான் காரணம். இந்த பொங்கல்ல என் மண்டைக்குள்ள மணிச்சத்தமெல்லாம் கேட்டுது. மணிச்சத்தம் தங்கமணி என் மண்டைல குட்டினதால வந்தாதான்னு அபத்தமா எல்லாம் கேக்கக் கூடாது. இதப்பத்தி விபரங்களை முதல் மொக்கை, முற்றும் மொக்கை-ன்னு என்னோட முதல் இடுகைல பாக்கலாம்.

காலடி: என்ன மாதிரி எழுதணும்னு முன்னமே ஒரு முடிவு பண்ணியிருந்தீங்களா?

சங்கா: அப்கோர்ஸ். எழுதறதுன்னா மொக்கை, மற்றும் மொக்கை, மேலும் மொக்கையைத் தவிர வேறெதுவும் கிடையாதுன்னு முதல்யே சங்கல்பம் எடுத்துக்கிட்டேன். மொக்கை போடவும் ஒரு ‘இது’ வேணும்ல! எப்பிடி போடறது? யோசிச்சுப் பார்த்து, எனக்குள் நானே நிகழ்த்தும் பல வித உரையாடல்களைப் பதிஞ்சாலே அது மொக்கைதான்னு முடிவு பண்ணீட்டேன். என்னடா, ஒரு பைத்தியத்துக்கிட்டே மாட்டிக்கிட்டோம்னு நினைக்கிறீயா?

காலடி: ச்சே..ச்சேசேசே

சங்கா: நீ நெனப்படா. இருந்தாலும் கரெக்ட்! நீ ஒரு பைத்தியக்காரன்! நானும் ஒரு பைத்தியக்காரன்! அவ்வளவுதான் மேட்டரு!

காலடி: இத ஒரு தத்துவமா எடுத்துக்கிறேங்ணா. அடுத்த கேள்வி

சங்கா: ம்

காலடி: இதுவரைக்கும் 25 பதிவு போட்டிருக்கீங்க. இந்த பதிவுலகத்தைப் பற்றிய உங்க புரிதல் என்னங்?

சங்கா: ஹும்ம்ம்ம்ம்ம்..

காலடி: ண்ணா, மெதுவா பெருமூச்சு விடுங்க, ஹெட்போன்ல கேக்கறதால.. காதெல்லாம் கூசுதுங்..

சங்கா: யெஸ்.. 25 பதிவுகள்.. 25 மொக்கைகள்.. 234.. பின்னூட்டங்கள். ஆ​வேசமாகவும் ஆறுதலாகவும் ஒரே சமயத்தில உணர்கிறேன். அனுபவம்னு பாத்தீன்னா.. எவ்வளவுதான் மோட்டுவளைய பாத்து சிந்திச்சாலும் சிலசமயம் ஒரு மொக்கை கூட தோணாது. என்ன எழுதறதுன்னே தெரியாம சிலசமயம் பின்நவீனத்துவமா ஏதாவது சிறுகதைய எழுதீடலாமாங்கிற அளவுக்கு ஆபத்தான சிந்தனைகள் கூட வந்திருக்கு. இருந்தாலும் எப்படியோ தம்கட்டி சமாளிச்சு ஒரு நாளைக்கு ஒரு இடுகைன்னு போட்டுருவேன். பதிவு தான் முக்கியம். பின்னூட்டங்கள் இல்லைன்னு தோணினாலும்.. ரெண்டு மூணு பின்னூட்டங்களைப் பாத்தா இதுக்காகவே நாம பின்நவீனத்துவம் பற்றி சிந்திக்கிறத ஒத்திப் போடலாம்னு சமாதானமாயிடுவேன்.

காலடி: நீங்க எப்ப உங்க வலைப்பூவ ஆரம்பிச்சீங்ணா?

சங்கா: கோடையின் முதல் நாளில், தந்தையர் தினத்தில் வலைப்பூ தொடங்கினேன். ஏன்னா அன்னிக்குதான் அமெரிக்காவுல கத்திரி வெய்யில் ஸ்டார்ட். பத்தாததுக்கு தமிழ்மணம், தமிழிஷ் இவைகளில் படிக்கப் படிக்க, ​கத்திரி வெயிலோட உக்கிரத்தில அக்கினிக் குஞ்சாக இருந்தவன் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பிச்சேன். அந்த எரிச்சல்ல ஆரம்பிச்சதுதான் இந்த என்னுள்ளே வலைப்பூ

காலடி:ஒரு பொதுவான கேள்வி. அது ஏங்கணா இந்த மாதிரி கொலவெறியோட இருக்கிறவங்களே வலைப்பூவா தொடங்கிகிட்டு இருக்காங்க?

சங்கா: நல்ல கேள்வி! ​சென்ஷிகிட்ட கேட்டுச் சொல்றேன். அவருதான் ஒத்த வார்த்தைக்குள்ள ஓராயிரம் சிந்தனை வச்சிருப்பாரு!

காலடி: சென்ஷி-னதும் ஞாபகத்துக்கு வருது.. பதிவுலகத்திலயே முதன்முதலா, வலைப்பூவின் ரெகுலர் கஸ்டமர்கள்-ங்கிற மரபை தோற்றுவிச்சது நீங்கதான்னு பரவலா பேசிக்கிறாங்க. இதப்பத்தி கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா?

சங்கா: ஹா.. ஹா..! கரெக்டுதான். நம்ம எழுத்த பாத்து படிக்க வர்றவங்க, ஒண்ணு, முத மொக்கையிலேயே மட்டையாகிடறாங்க இல்ல மிரண்டு ஓடிறாங்க, அதுவுமில்லன்னா சும்மா பேருக்கு ஒரு சிரிப்பான போட்டுட்டு அவங்கவங்க ஜோலியப் பாத்துக்கிட்டு போயிட்டே இருக்காங்க. இத எப்படி சமாளிக்கறதுன்னு யோசிப்ப வந்ததுதான் ரெகுலர் கஸ்டமர் ஐடியா. இந்த திட்டத்தில நீ கூட நம்ம ரெகுலர் கஸ்டமர் ஆயிட்ட. சென்ஷி அதேமாதிரிதான். இது இன்னும் பெருகணும். பெருகும். கூடிய சீக்கிரம் வாய்ஸ் பேஸ்டு கஸ்டமர் கேர் சென்டர் ஒண்ணு தொடங்கலாமான்னு மோட்டுவளையப் பாக்கிறேன்.

காலடி: சூப்பருங்ணா! உங்க இடுகைகளோட லட்சியம் மொக்கை மற்றும் மொக்கைகள்தான்னு தெளிவுபடுத்தீட்டிங்க. இப்ப அத சார்ந்து ஒரு கேள்வி - இடுகைகளுக்கு தலைப்பிடுவது எவ்வளவு முக்கியம்?

சங்கா: இடுகைகளுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கிறமோ சிலசமயம் தலைப்புகளுக்கும் அவ்வளவு நேரம் ஆயிடறது உண்டு. தலைப்புங்கிறது எலிப்பொறிக்குள்ள..

காலடி: ண்ணா, எதா இருந்தாலும் சுருக்கமா சொல்லீருங். ஏன்னா நாம பேசுனது எல்லாத்தயும் நான் தனியா ஒக்காந்து டைப்படிக்கோணும்.

சங்கா: இவன் ஒருத்தன்.. நல்லா ஒரு ப்ளோ வரும் போதுதான் ஒண்ணுக்கடிக்கணும், டைப்படிக்கணும்னு காமடி பண்ணிக்கிட்டு..

காலடி: இல்லீங். நீங்க கன்டினியூ பண்ணுங்

சங்கா: ஆங்.. தலைப்புங்கிறது எலிப்பொறிக்குள்ள நாம வக்கிற ஊசிப்​போன வடைமாதிரி. அந்த வாசத்த வச்சுதான் நாம எலி புடிக்க முடியும். உதாரணத்துக்கு என்னோட இடுகை தலைப்புகளைப் பாத்தீன்னாக்க.. சுசீலாவும் மஞ்சளழகியும் மற்றும் பின் நவீனத்துவமும், உப்புமா பீட்ஸா ஸூஷி மற்றும் கவிதைகள் ரசனைகள், வெளிக்கா வெள்ளரிப் பிஞ்சா - மரத்தடி மாமுனி இந்த ரேஞ்சுக்கு இருக்கும். இதெல்லாம் ஒரு டெக்னிக்கு!

காலடி: இந்த குறிப்பும் நிச்சயம் நம்ம காலடியோட தீவிர மற்றும் அதிதீவிர வாசக...

சங்கா: டே...​டே...​டேய்...

காலடி: சரிங்ணா. மரத்தடி மாமுனியப் பத்தி சொல்லுங்களேன்

சங்கா: மரத்தடி மாமுனி - ஒரு சின்னக் குறியீடு அவ்வளவுதான்

காலடி: சின்னக் குறியீடுன்னா... அந்த மாதிரிங்களா??

சங்கா: புத்தி எங்க போவுது பாரு. வாயக் கழுவுடா. குறியீடுன்னா ஒரு அடையாளம், அர்த்தம் அவ்வளவுதான். மரத்தடி மாமுனிங்கிறது நம்மளோட சிந்தனைகள் மோட்டுவளையத் தாண்டி ஊர் மேயப் போறதுக்கான குறியீடு. முனின்னாலே எல்லாப் பசங்களுக்கும் ஒரு கிலி இருக்கத்தானே செய்யுது? சாதா முனியே அந்த ரேஞ்சுன்னா, நம்முது மாமுனி? எப்படியிருக்கும் எபெக்ட்டு?

காலடி: ண்ணா, திரும்பவும் ஒண்ணுக்குங்ணா...

சங்கா: அடிங்... அமுத்திட்டு அப்படியே ஒக்கார்ர... ரெண்டு இடுகை போட்டிருப்பேன் இந்நேரம். போனா போவுதுன்னு பேட்டி​கொடுத்தா... டார்ச்சர் பண்றான் டார்ச்சர். ​ரேஸ்கல்..

காலடி: .... சரிங்ணா

சங்கா: ஆங், அப்படி சமத்தா அடுத்த கேள்விய ​கேளு பாப்பம்?

காலடி: அடுத்த கேள்விங்.. சில இடுகைகள்ல தீவிரமான சிந்தனையெல்லாம் தலைப்படுதே?

சங்கா: நீ என்ன கேக்கிறன்னு புரியுது. கவிதை, மொழி பற்றிய இடுகைகள் பத்திதானே??

காலடி: சரியா சொன்னீங்ணா! ​ஹைகூ-வை நம்ம பள்ளி பாடத்திட்டத்தில சேர்க்கணும், தமிழ் மொழில ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ இந்த மாதிரி எழுத்துக்களுக்காக மாற்று வரிவடிவத்தை புதுசா சேக்கணும்.. இந்த மாதிரி இடுகைகள் எல்லாம் உங்களுக்கு எப்படி கிடைக்கின்றன?

சங்கா: ஹைகூ ஒரு எளிமையான கவிதை வடிவம். இப்ப இணையத்திலேயே சில பேரு கவிதைங்கிற பேர்ல டார்ச்சர் கொடுக்கிறாய்ங்க.. சரோஜாதேவி புக்கை எடுத்து கங்காரு மாதிரி அங்க இங்க தாவி தாவி நாலு வார்த்தைய எடுத்து பிச்சு பிச்சுப் போட்டா அதை சர்ரியலிச கவிதைங்கிறான்.. நியூஸ் பேப்பரில இருந்து எடுத்து அத மடிச்சு மடிச்சு எழுதினா விமர்சன கவிதைங்கிறான்.. பிட் நோட்டீஸ், சினிமா போஸ்டர், சுவராட்டி, மசால் தோசை மடிச்சிருந்த பேப்பர், சரக்குப் பாட்டில் லேபிள்.. இதில இருந்து திருடி மடிக்கப் பட்ட வார்த்தைகள் தாம் பின்நவீனத்துவ கவிதையாம்.. எல்லாம் வெறும் கிளிஷேக்கள்! என்ன கொடுமை ஜெகநாதன்?

காலடி: ஜெகநாதன்னு சொல்லாதீய, காலடின்னு சொல்லுங்

சங்கா:எழுதும்போது என்ன எழவயோ போட்டு எழுதிக்கோ.. மேட்டருக்கு வருவோம்.. ஸோ கவிதைங்கிற எளிய வடிவம் இப்ப புறக்கணிக்கப்பட்ட வருவதால, நான் ஹைகூ, ஸைக்கோகூ, ககீகூ இப்படி ஒதுங்கீட்டேன். ஹைக்கூ மாதிரி பாடத்திட்டத்திலே கொடுக்கக் கூடாது? பசங்களுக்கும் ஒரு ஆர்வம் வரும், அப்புறம் மெல்ல கொஞ்சம் பெரிய கவிதை, அப்புறம் அப்பிடியே நூல் பிடிச்சு மரபுக்கவிதைன்னு போயிரலாம்.

காலடி: ஐடியா அட்டகாசமா இருக்குங்! அப்புறம் இந்த தமிழ் புது எழுத்துக்கள்..?

சங்கா: அது கொஞ்சம், சீரியஸான மேட்டர் - கம்- இடுகை. எப்படி எனக்குள்ள இது உதிச்சதுன்னு இன்னும் பிரமிப்பாயிருக்கு. இது தேமரதுத் தமிழோசை உலகமெலாம் சரியாகப் பரவும் வகை செய்திடுவோம் என்கிற ஆசையினால விளைஞ்சதுன்னு ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன்.

காலடி:ரொம்பச் சரிங்ணா! நீங்க எதுவும் கவித கிவித இந்த மாதிரி எழுதியிருக்கீங்களா?

சங்கா: கவிதை எழுதவில்லையென்றாலும் கவிதையைப் பற்றி நி​றைய எழுதிவிட்டேன். ஆனாலும் கட்டுப்படுத்த முடியாத சில நேரங்கள்ல சில வரிகள் என்னையும் மீறி வந்துவிடுவதுண்டு; இந்தமாதிரி..
முத்துப் பல்லழகி
மோகனச் சிரிப்பழகி
தெத்துப் பல்லழகி
தெவிட்டாத தேனழகி
குத்திக் கொல்லாதே
கோல மயிலழகி
சித்தம் கலங்குதடி
சீக்கிரம் வாயேண்டி!!!
இன்னும் கூட ரெண்டு மூணு எழுதியிருந்தேன்.. இப்ப ஞாபகத்துக்க வரமாட்டேங்குது

காலடி: சரிதாங்ணா.. நமக்குதான் முந்தைய நிமிஷம் வரைக்கும் தான் சமீபம்னு நீங்களே எழுதியிருக்கீங்களே

சங்கா: சபாஷ்டா தம்பி.. நம்ம ரெகுலர் கஸ்டமர்ங்கிற நிரூபிச்சிட்டே

காலடி: அப்பப்ப வீக்-என்ட் போனஸ், விளம்பரம், சென்யோரித்தா, ஸீரியல் இடுகை என்றெல்லாம் பட்டாசு கிளப்புறீங்களே? அதோட ரகசியத்தை ஏன் நீங்க நம்ம காலடியோட தீவிர, அதி..

சங்கா: ச்சு..! போதுண்டா. இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே... இருந்தாலும் ​கேக்கிறே, சொல்றேன்: நான் இங்க கடையில சாப்பிடறது ஒரு காஞ்சு ​போன வெண்ண ரொட்டிதான். அத கொடுக்கிறது ஒரு காஞ்ச கருவாச்சி. இருந்தாலும் அவளை ஸென்யோரித்தான்னு சொன்னா ஒரு கவர்ச்சி வருதுல்ல. இப்படி ஒரு சவக் சவக் பர்கர் இடுகைல கொஞ்சம் tomato slice, lettuce, mayonnaise, mustard, and other condiments எல்லாம் போட்டு தெளிச்சா இடுகை நல்லா மணமா சுவையா ​பொன்னிறமா வருங்கிறது என்னோட கருத்து.

காலடி: ரொம்ப கரெக்டுங்ணா

சங்கா: வீக் என்ட் போனஸ், ரீமிக்ஸ் பாட்டு, சீரியல் இடுகை​இப்படியெல்லாம் வலைப்பக்கத்தை கவர்ச்சிகரமா வச்சிக்கிட்டாதான், ரெகுலர் கஸ்டமர்களை நம்மபக்கம் வச்சுக்க முடியும்.

காலடி: சரிங்ணா. இந்த 25-வது வலைப்பதிவ எப்படி கொண்டாடினீங்க?

சங்கா: அப்படியொண்ணும் சிறப்பா இல்ல. இங்க எங்காவது பீச் பக்கமா போயி ஏதாவது பீட்ஸா, இல்ல ஸுஷி இதுமாதிரி ஏதாவது திங்கலாமான்னு பாத்தேன். ஏற்கனவே ஆபிஸில எல்லாரும் ஏண்டா எப்ப பாரு முழு போண்டா அப்படியே முழுங்கினவன் மாதிரி இருக்கேன்னு கேக்கிறாங்க.. ​பேசாம இதைக் கொண்டாடதயே ஒரு இடுகையா போட்டுடலாம்னு முடிவு பண்ணிட்டேன்

காலடி: ஏங்கண்ணா, உங்களுக்கு கொண்டாட்டம்னாலே பிடிக்காதா?

சங்கா: பெருசா அப்படியொண்ணும் இல்ல. என் பால்யக் காலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் கிடையாது. பிறந்த நாளைக்கு ஒரு பாட்டில் பட்டை, ​தொட்டுக்க ஊறுகா பட்டை கிடைக்கும். சில டைம் சரக்கடிச்சுட்டு சைட் டிஷ்ஷா சுண்டல் வாங்க கோயிலுக்கு போவேன். ​அம்மா முடிந்தால் என் முதுகில் நாலு வைக்கலாம். அவ்வளவுதான் நம்ம பொறந்த நாளு கொண்டாட்டம்.

காலடி: ரொம்ப நன்றிங்ணா. பேட்டி இனிதே முடிகிறது. எனக்கு ஒண்ணுக்கு வேற முட்டுகிறது.. அதால இப்ப முடிச்சுக்கலாமா?

சங்கா:​சரி சரி... எது எப்படின்னாலும் பேட்டி அசத்தலா வரணும் சொல்லிட்டேன்.. அதென்னமோ பேரு சொன்னியே, காவடியா, காமடியா???

காலடி: ஏனங் காமடி பண்ணிக்கிட்டு, காலடி-ங்ணா

சங்கா: ஆங்.. காலடி! அதில வந்து நாளைக்கு பாக்கிறேன்.இங்க ஜன்னல் வழியா ஒரு காக்கி கலர் ஷார்ட்ஸும், வெள்ளக் கலர் டி-ஷர்ட்டும் போட்ட ஒரு வெள்ள பிகரு தெரியுது..! எனக்கு இதயத்தில இருந்து இரத்தம் அப்படியே கொப்பளிச்சு வாய் வழியா வந்திட்ட மாதிரி இருக்குப்பா! நாம அப்புறம் சந்திப்போம்.. ​பை..​பை!

காலடி: ண்ணா.. ண்ணா.........????? அண்ணன் அவசர வேலை நிமித்தமாக ஜன்னல் வழியே பாய்ந்து விட்டதாலும் காலடிக்கு இந்த பேட்டியின் போதே​காலோரம் கொஞ்சம் ஈரமாகிவிட்டபடியாலும், பேட்டி இனிதே முடிகிறது.

அண்ணன் சங்காவுக்கு (நல்லா நிதானிச்சு படிங்க, சங்கர் இல்ல சங்கா) இந்த 25-வது இடுகைக்கு வாழ்த்துக்கள்! அண்ணன் இன்னும் மெல்ல மெல்ல 50, 250, 250^50, 250^250 என நிறைய மொக்கைகளைப் போட்டு சிறக்க காலடியின் தீவிர அதி தீவிர வாசகக் கண்மணிகள் சார்பில் வாழ்த்துகிறோம்!

டிஸ்கி:
******
- முழுக்க முழுக்க காமடியாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.
- அண்ணன் இதற்காக அமெரிக்காவிலிருந்து ப்ளைட் பிடித்துக்​கொண்டு ​பெங்களூரு வந்தெல்லாம் முதுகில்​மொத்த மாட்டார் என்ற ஊக்கத்தில் எழுதப்பட்டது இது!
******

Saturday, July 11, 2009

பின்னூட்டமே ஒரு இடுகையாய்..

இது ஒரு பின்னூட்டம். எந்த இடுகைக்கு..?
இந்த இடுகைக்கு:கிலுகிலுப்பை-II (கதிர்வேலு ஐயா)நீங்கள் இந்த இடுகையை படித்துவிட்டு வந்து இதை படியுங்கள் என்றெல்லாம் காமடி பண்ணமாட்டேன். ஸ்ட்ரெயிட்டா நீங்கள் இதை படிக்க துவங்கலாம்.

ஆனால் ஒரு முன்குறிப்பு:
மேற்கண்ட இடுகையிட்ட முரளிகுமாருக்கு முதலில் ஒரு பின்னூட்டம் போட்டேன். என் பின்னூட்டங்களெல்லாம் கொஞ்சம் அனுமார் வால் சைஸுக்கு (என்னதான் எடிட் செய்தாலும்) போய்விடுவது உண்டு. கோவி.கண்ணன், சங்கா, SUREஷ், நந்தா, நேசமித்ரன்,டோமி, தங்கமணி பிரபு, ஸ்டார்ஜன், ஈரோடு நாகராஜ் இவங்களுக்கெல்லாம்​தெரியும்னு நினைக்கிறேன்.
என்ன பண்றது? நீங்க என்னைய படிக்காம வேறு யாரு படிப்பாங்க?
(அப்படிங்கிற அசட்டு தைரியம் தான்)

முரளிக்கு நாம கொஞ்சம் புதுசுல.. அதான் அவரோட இடுகை சைஸுக்கு பாதியளவுல ஒரு பின்னூட்டம் போட்டேன். இப்படியே இருக்கிறவன் சுவத்தில பெயிண்ட் அடிச்சிக்கிட்டு இருந்தா உன்​சுவத்தில யாரு ஒண்ணுக்கடிக்கிறது-ன்னு நீங்களெல்லாம் என்னை அன்பாக கடிந்து கொள்வது... என்னது அப்படியெல்லாம் எதுவுமில்லயா.. ??? பரவாஉண்டு - மனசைத் தேத்திக்கிறேன்.

முரளிக்கு நான் போட்ட இடுகையில.. ஸாரி.. பின்னூட்டத்தில ஒரு புத்தகத்தை படிங்கோங்னு நூல்அறிமுகமெல்லாம் கொடுத்து பெரிய ரகளையே பண்ணியிருந்தேன்னு நினைக்கிறேன். இருந்தாலும் முரளி மறுமொழியில அன்பா அந்த புத்தகத்தை பத்தி சொல்லப்பா-ன்னு கேட்டிருக்கிறார்.
மறுமொழி-பின்னூட்டம் அந்த வலைமனையிலேயே போடறது தானே மரபு, சம்பிரதாயம். நானும் அப்படியே நினைச்சு புத்தக அறிமுகம்​பற்றி மறுமொழி அமுத்த ஆரம்பித்தேன்.

புத்தகத்தை மடியில வச்சிக்கிட்டு கம்ப்யூட்டரில் தட்டுனேன் (மடியில வச்சு அமுத்தற கணிணி இப்ப கைவசம் இல்ல). அது தான் நீங்க கீழே பாக்குறது, படிக்கப் போறது.. எழுதி முடிச்சிப் பாக்கும்போது தான் தெரியுது விபரீதத்தின் விஸ்வரூபம் (ச்சும்மா ரைமிங்காக)!
அதாவது சைஸ் கொஞ்சம் பெருசா போய்விட்டது. எனவே, இங்கே ஒரு பின்னூட்டம் இடுகையாகிறது (அல்லது ஆகிவிட்டது)
இதோ அந்த பின்னூட்ட இடுகை:

//.. புத்தகம் பற்றிய விவரங்கள் குறித்து அனுப்புகிறேன்//

புத்தகத்திலிருந்து...

(இது ஒரு ஜப்பானிய பள்ளி பற்றிய நாவல்)

புதிய பள்ளியின் கேட்டைப் பார்த்ததுமே, டோட்டா-சான் நின்றுவிட்டாள். அவள்​போய்க் கொண்டிருந்த பழைய பள்ளியின் கேட்,​பெரிய
எழுத்துகளில் பள்ளியின் பெயர் எழுதப்பட்ட அழகிய தூண்களில் இருந்தது. ஆனால் இந்தப் புதிய பள்ளியின் கேட், இளந்தளிர்களும், இலைகளும் உடைய சிறிய கம்பத்தில் இருந்தது.

"இந்த​கேட் வளர்ந்து கொண்டேயிருக்கும்"

டோட்டா-சான் சொன்னாள்.
"ஒருவேளை இது டெலிபோன் கம்பங்களை விடவும், உயரமாக வளர்ந்து கொண்டே போகும்..."

அந்த இரண்டு 'கேட் கம்பங்களும்' உண்மையில் வேர்களுடன் கூடிய மரங்கள்தான். அவள் அதனருகில் போனதும், தனது தலையை ஒரு
பக்கமாய்ச் சாய்த்து பள்ளியின்​பெயரைப் படிக்க ஆரம்பித்தாள்... ஏனென்றால் காற்றில் பள்ளியின் பெயர்ப் பலகை சிறிது வளைந்து படபடத்தது.

"டோ..மோ.. யி.. ஹா.. கு.. ன்"

டோட்டா-சான் அம்மாவிடம் 'டோமோயி' என்றால் என்ன எனக் கேட்கப்போன நேரத்தில், அவள் ஏதோ ஒன்றின் தெளிவற்ற காட்சியினால்
பீடிக்கப்பட்டாள். அவள் தான் நிச்சயம் கனவுதான் காணவேண்டும் என நினைக்கும்படி அந்தக் காட்சி செய்துவிட்டது.

அவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். புதர்கள் வழியே இன்னும் நன்றாக பார்ப்பதற்காக உற்று நோக்கினாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

"அம்மா, இது உண்மையிலேயே ரயில்தானே? அதோ, ஸ்கூல் மைதானத்தில்..!"

அந்தப் பள்ளி, தனது வகுப்பறைக்காக, ஆறு கைவிடப்பட்ட ரெயில்வே கார்களை உபயோகித்தது. ஒரு​வேளை கனவில் கண்ட ஒன்றாய்தான், அது டோட்டா-சானுக்குத் தெரிந்தது.

ஹய்யா, ரயிலில் ஒரு ஸ்கூல்!

(பக்-8)

டோமோயின் கல்வி முறையில் சில பெற்றோர்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். டோட்டா-சானின் அம்மா, அப்பாவைப் போல் தாங்கள் சரியான பள்ளியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளைச் சேர்த்திருக்கிறோம் என வியப்புடன் பெருமை கொள்ளும் பெற்றோர்களும் உண்டு. திரு.
கோபயாஷியின் (தலைமையாசிரியர்) கல்விமுறை மேம்போக்கானது, ஆழமற்றது, சந்தேகத்திற்குரியது என அவர்கள் பார்த்தவைகளை வைத்து நினைத்த சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை டோமாயில் இருந்து விலக்கி வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்துவிட முயன்றனர்.

ஆனால் அம்மாணவர்கள் யாரும் டோமாயியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. எனவே அழுதனர். அதிர்ஷ்டவசமாக டோட்டா-சானின் வகுப்பிலிருந்து யாரும் வேறு பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால் டோட்டா-சானைவிட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்த ஒரு பையன் அப்பள்ளியை விட்டுச் செல்ல நேர்ந்தபோது தன் மனக்கசப்பை வெளியிட தலைமையாசிரியரின் முதுகில் புளிமூட்டை ஏறிக்கொண்டு கண்களில்
கண்ணீர் வழிய கைகால்களை உதைத்து அடம் பிடித்தான். அவன் சென்று மறையும்வரை கால்கள் தள்ளாடி ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள பள்ளியைப் பிரிய மனமின்றிச் சென்றான். தலைமையாசிரியர் கண்கள் சிவக்க அழுதேவிட்டார். அவன் போனதால், அவர் திரும்பத் திரும்ப, நெடுநேரம் பள்ளியைச் சுற்றி அலைந்து கொண்டே இருந்தார்.
(பக்-106)

டோமாயில் உள்ள குழந்தைகள் மற்றவர்களின் சுவர்களிலோ, சாலையிலோ எழுதுவது கிடையாது. ஏனெனில் அவர்களுக்குப் பள்ளியிலேயே தரையில் கிறுக்குவதற்கான வாய்ப்பு போதிய அளவில் உண்டு.

இசைவகுப்பின்​போது கூட்ட அறையில் தலைமையாசிரியர், சாக்-பீஸ்களை எல்லாக் குழந்தைகளுக்கும் விநியோகிப்பார். அவர்கள் தரையில் எங்கு ​வேண்டுமானாலும், அவர்கள் விருப்பப்படி உட்கார்ந்து கொள்ளலாம், அல்லது படுத்துக் கொள்ளலாம். அவர்கள் அமர்ந்து கொண்டு அல்லது படுத்துக் கொண்டு கையில் சாக்-பீஸுடன் காத்திருப்பார்கள். எல்லோரும் தயாரானதும் தலைமையாசிரியர் பியானோ வாசிக்க ஆரம்பிப்பார். அவர் வாசிக்கும்போது அந்த இசைக் குறிப்புகளை மாணவர்கள் தரையில் எழுத வேண்டும்.(...)

இது தமிழ் மொழிப்பெயர்ப்பில் வந்த நூல் பற்றிய குறிப்புகள்:
ISBN - 81-237-1919-1
Title in Japanese: Totto-chan, the Little Girl at the Window
தமிழில்:டோட்டா-சான், ஜன்னலில் ஒரு சிறுமி
மூல ஆசிரியர்:டெட்சுகோ குரோயாநாகி (Tetsuko Kuroyanagi)
தமிழாக்கம்: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
முதற்பதிப்பு: 1996
விலை: ரூ 34.00
வெளியீடு: இயக்குநர்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, ஏ-5 கிரீன் பார்க், புது தில்லி - 110 016

என்னடா பாண்டி என்ன பண்ண​போற?

நாங்கெல்லாம் சென்னை தொலைக்காட்சில ஞாயித்து கிழமை போடற படத்து பேர கேக்கறதுக்காக, எதிரொலில அந்த அக்கா படிக்கிற அத்தன கடிதங்களயும், அதுக்கு அந்த மாமா சொல்ற பதிலுகளயும் (?) கவனமா, கேவலமா கேட்டுக்கிட்டு ஒக்காந்திருப்போம்.

சில டைம் மாமா படத்து பேரச் சொல்லாமலியே விசுக்குனு எந்திரிச்சு போயிருவாரு.. சின்னப்பசங்க, நாங்கெல்லாம் பயங்கர கடுப்பாயிருவோம். டிவியை அப்படியே எட்டி அப்பலாமான்னு தோணும்.. ம்ம்.. ஓசி டிவி பாக்கறதுக்கு வூட்டுக்குள்ள நம்மள விடறதே சாஸ்தி.. அதில இந்த லொள்ளு வேறயா?

இப்ப பாருங்க... ஒரு நாளைக்கு 8 படம் பாக்கலாம் - கேபிள் டிவில. எதிரொலியாவது எங்கூட்டு எலியாவது..

ம்ம்.. சொல்லியாவுது.

போனவாரந்தான் நம்மூட்டு பெரிய பொட்டிக்கு சின்ன பொட்டி (செட்டாப்) வச்சாங்க.200 சேனல் வருதாம்ல.. எங்வூட்டுக்காரம்மா ஒரு தமிழ் சேனல் உடாது.. வூட்ல நியூஸ் கேக்கிற ஒரே ஆளு அம்மிணிதான்.

நான் ஒருவாட்டி சன்ல நியூஸ் கேட்டுட்டு அப்படியே கைதவறுதலா ஜெயா டிவி அமுத்திப் போட்டேன்.. அங்கியும் நியூஸ்.. அம்முட்டுதான். இது ரண்டயும் கேட்டுட்டு எவனாவது வெளங்கியிருக்கானா? நீங்களே சொல்லுங்.

இன்னிக்கு சாயங்கலாம் ஒரு அஞ்சு மணிக்காட்டம் அம்மிணிட்ட ஒருவா டீத்தண்ணி குடிக்கலாமின்னுட்டு ஒக்காந்திருந்தேன். நம்முதுதான் நோண்டு கையாச்சே.. ரிமோட்ட எடுத்து (அட டிவி ரிமோட்டுங்)

'அது என்னடா 200 சேனலு, ஒரு ஓட்டு ஓட்டித்தான் பாப்பம்' ன்னு திருப்பிக்கிட்டிருந்தேன். ஒக்காளிங்க.. என்னம்மா பெத்து குட்டிங்களா பெருத்திருக்குங்க ஒவ்வொரு சேனலும்.. எல்லாம் நாம கொடுக்கிற இடந்தா..
அப்படியே ஜெயா மேக்ஸ் பக்கம் போனேன்.. ஒரு பாட்டு போட்டிருந்தான். அதில எப்பயும் பாட்டுதேன்னு அம்மிணி சொன்னுச்சு. அட திருவாத்தாங்களா.. ஒரு சினிமா இப்பிடியும் பார்ட் பார்ட்டா வித்து திங்கறாங்களே.

ம்ம்.. ​சொல்லியாவுது.

அப்ப பாருங்க ஒரு பாட்டு வந்திச்சு.பாட்டுல ஒரு திருட்டுப்பய.. நல்ல இளவட்டம்.. அசல் திருட்டு முழிங்க பயலுக்கு.. திருடறான்.. கொண்டு போயி எங்கியோ ஒளிக்கிறான்.. அப்புறமா ஜெயிலுக்கு போறான்..இது அம்புட்டும் பாட்லய ஓடுது.. நம்ம டயிரக்டருங்க எல்லாம் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரியில்ல.. என்னமா யோசிக்குதுங்க!

பாட்டு நல்லா இருக்கேன்னு சவுண்டு சாஸ்தியா வச்சேன்.
அட நம்ம இளயராசா பாடியிருக்காப்ல..பாட்டும் நல்லாதே இருக்கு.. பாட்டு வரி என்னனு உத்து கேட்டேன்

"அச்சடிச்ச காச அவன் புடிச்சு வச்சாண்டா
அவன் புடிச்சு வச்ச காச நான் அடிச்சுப் போட்டேண்டா"

நல்லாத்தேன் இருக்கு!

அம்மிணி காப்பி கொண்டு வந்துச்சு. என்னடா இவன் டீதான கேட்டான், அம்மிணி காப்பி கொண்டு வருதேன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நீங்க வேணா கேக்கலாம். நா அந்த மாதிரி பன்னாட்டு எல்லாம் பண்ண சான்சே இல்லீங்.

காபிய மூடிட்டு குடிக்காம

"அம்ணி, இந்த பாட்டு சோரா இருக்குல்ல"

"இதா...? ம்"

"இது என்ன படம்னு தெரியுதா அம்ணி?"

மின்ன மாதிரி பளிச்சுன்னு படத்தோட பேரெல்லாம் பாட்டு மேல​ போடறதில்ல.. பாக்கிறவங்களுக்குதா மண்ட காஞ்சு போகுது. அம்மிணி எதுவும் யோசிக்காம வெடுக்குனு சொல்லிச்சு..
"என்னடா பாண்டி என்ன பண்ண போற"

"ங்கொக்கமக்கா, இப்படியொரு படமா.. எளயராசா பாடியிருக்காப்ல. நல்லாயிருக்குல்ல"

"ஆமாமா"

"இவனாரு? ஆடு திருடன கொரவனாட்டம்? ஈரோவா?"

"ஆமா.."

"ஆரு புடிச்சது இப்படி ஒரு ஈரோவ"

"இது எளயராசாவே எடுத்த படம்ல, அவரே பிடிச்சிருப்பாரு"

"அட எளயராசா படமா?"

"ஆமாங்கிறேன்ல"

"ம்ம்.. என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.. நல்லாத்தேன் இருக்கு பேரு"

"ஆமாஆமா, நீ மொதல்ல காலி டம்பளர கொடு"

காபி டம்ளரை கொடுத்துப் போட்டு நாமதான் இப்படி இளிச்சவாயனாட்டம் எதுவும் தெரியாம இருக்கோம், அம்மிணி பரவால்லே நல்லா சூதானமாத்தா இருக்குன்னு பெருமயா நெனச்சுக்கிட்டேன்.

திரும்ப ஒருமுறை சொல்லிக்கிட்டேன்

"என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.."

"நீ என்ன சரியான லூஸா?" - அம்மிணிதான்

"....... எலே யாரப்பாத்து என்ன கேக்குற?"

"ஆமா பின்ன.. என்னத்த சொன்னாலும் அப்பிடியே நம்பிக்கிறதா?"

"என்ன புள்ள சொல்ற?"

"ஆங்.. எனக்கு மட்டும் பேரு தெரியவா போவுது.. சொம்மா ஏதொ ஒரு பாட்டு வரிய அடிச்சிவிட்டேன், அத போயி நம்பறதா"

"அப்ப எளயராசா படம்னியே?"

"சும்மனாச்சிக்கு"

"...... கடசில நம்மளயே கேனயனாக்கிட்ட, ஆங்?"

"ஆமா இவுரு பெரிய சீமக்கருவாடு"

ம்ம்.. சொல்லியாவுது!
- ஏனுங் நீங்களாவது சொல்லுங், படத்து பேரு என்னனு.

Thursday, July 9, 2009

கண்ணுக்குத்​தெரியாத கற்கள்

தருமபுரியில் கல்லூரி படித்துக்​கொண்டிருக்கும்போது தான் முதல் கல் கண்டுபிடிக்கப்பட்டது..என் சிறுநீரகத்தில்.

ஒரு கல்லின் பயணம் சிறுநீரகத்தில் ஆரம்பித்து சிறுநீரக குழாய் வழியாக பிளாடர் வந்து சேரும். உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் கல்லின் அளவைப் பொறுத்து அது சிறுநீரோடு கரைந்து வெளியேறிவிடும்.

வயிறு விட்டுவிட்டு வலித்துக் கொண்டிருந்தது. அப்போது அது கல் என்றே தெரியவில்லை எனக்கு. டாக்டருக்கும். நிர்மல் தான் அந்த டாக்டரை அறிமுகம் செய்து வைத்தான்.

டாக்டர் சுறுசுறுப்பானவர். இனிமையாக பழகக்கூடியவர். பேசும் போதே புத்திசாலி என்பதை உணர்த்திவிடுவார். ஆனால் குழந்தைகள் ஸ்பெஷலிஸ்டாக இருந்த அவரிடம், என்னை எதற்கு நிர்மல் இட்டுச் சென்றான் என்றுதான் புரியவில்லை. ஒரு வேளை வயிற்று வலி என்று சொல்லி அடிக்கடி காலேஜுக்கு மட்டம் போடுவதாக நினைத்திருப்பானோ?

பரிசோதித்த பின் டாக்டர் சொன்னது:
"வயிற்று வலி வித் லூஸ்மோஷன் இருக்கிறதால ஸ்டிரிக்ட் டயட் முக்கியம். அனேகமா சீதபேதியா இருக்கலாம்"

பிரட், பழங்கள், தயிர்சாதம், பருப்பு சாதம் இப்படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். தருமபுரியில் எனக்குத்​தெரிந்து ஹோட்டல்களில் இந்த மாதிரி பத்தியச் சாப்பாடு (ஸிக் மீல்ஸ்) கிடைப்பதில்லை. அப்போது கொம்சாம்பட்டியில் (குமாரசாமி பேட்டை) நண்பர்களுடன் அறையில் தங்கியிருந்ததால் கொஞ்சம் போல சமைக்க ஆரம்பித்தோம். இருந்தும் பத்தியம் அசாத்தியமாகவே இருந்தது.

சாத்துக்குடி என்பது ஆரஞ்சு மாதிரி இருந்தாலும், சாத்துக்குடி என்று ​கேட்டால்தான் சாத்துக்குடி கிடைக்கும் என்ற தத்துவம் அப்போதுதான் விளங்கியது. வாழ்க்கையிலேயே அப்போதுதான் முதன்முறையாக ஒரு தத்துவத்தை தோலை உறித்து முழுங்கியது போலிருந்தது.

ஒரு மாதமாகியும் வலி நின்றபாடில்லை. வலி கூடிக்​கொண்டே போனது. திரும்பவும் அதே டாக்டர். அதே கிளினிக். அந்த சிறிய கிளினிக்கில் பச்சிளம் குழந்தைகளும் அவர்கள் அம்மாக்களுமாய் குழுமியிருக்க நானும் நிர்மலும் மட்டும் கறுப்பாடுகள் போல் உட்கார்ந்திருப்போம்.

"அப்பன்காரங்க எல்லாம் கொடுமைக்காரங்களா இருப்பானுவ போல; ஒருத்தனாவது குழந்தைய எடுத்துக்கிட்டு இங்க வந்திருக்கானா பாரு... களவாணி்ப்பயலுக"

என்று கோவில்பட்டி வழக்கில் திட்டுவான் நிர்மல். எனக்கு என்னமோ குழந்​தைகள், அம்மாக்கள், அழகான அம்மாக்கள் என்ற வரிசையில் மூத்த கறுப்பாடுகளை பொருத்திப் பார்க்க முடியவில்லை.

சிலசமயம் நிர்மல் வராமல் நான் மட்டும் ஒற்றை கறுப்பாடாக உக்காந்திருப்பேன். அப்போது குழந்தைகளைக் கூட என் கிட்ட விடமாட்டார்கள் தாய்மார்கள். அட்லீஸ்ட் ஒரு பூச்சாண்டி..? ம்ஹூம்.. ஒருவேளை​மெடிக்கல் ரெப் என்று நினைத்திருப்பார்களோ?

டாக்டர் அறை.

"இப்ப என்ன பிரச்னை?"

"அதே வயித்து வலிதான் டாக்டர்"

"மாத்திரை டயட் எல்லாம் கரெக்டா பாலோ பண்றீங்களா?"

"ஆமா"

"அப்படியா? சரி படுங்க, கால மடிச்சு வச்சுக்கோங்க.... இங்க வலிக்குதா.. இங்க, சரி ஒருக்களிச்சுப் படுங்க.."

திரும்ப அதே சதைத் தடவல்கள். அதே விசாரிப்புகள்.

பிரிஸ்கிரிப்ஷனை எடுத்து படித்தவாறு

"மாத்திரை எல்லாம் கம்ப்ளீட் பண்ணீட்டிங்களா"
"ஸின்கோவிட் 30 எழுதியிருந்தது.. 20தான் சாப்பிட்டேன் டாக்டர்"

"இதோ பாருங்க, மாத்திரைங்க எடுத்துக்கிறது ஒரு கோர்ஸ் மாதிரி. வயித்து வலி நின்னுட்டாலும் கோர்ஸை கன்டினியூ பண்ணணும்"

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து டாக்டரிடம் காய்ச்சல், காயம் இவை தவிர வேறு எதற்கும் போன ஞாபகம் இல்லை. வயிற்று வலி இந்த பாடு படுத்துதே என்று ஒரு கடுப்பும், வாய்க்கு ருசியாக சாப்பிட்டு மாதமாச்சே என்ற வயிற்றுக் கடுப்புமாய்,

"டாக்டர்.."

"என்ன?"

"ஒரு மாசமா வயித்த வலிச்சிட்டே இருக்கு.. டயட்ல ஸ்டிரிக்டா இருந்தாலும்.."

"ஸ்மோக்கிங் உண்டா?"
"ம்ம்"
"டிரிங்க்ஸ்?"

"...அப்பப்ப"
"இதெல்லாம் முதல்ல நிறுத்துங்க"

"......"
"சரி கண்ட்ரோல் பண்ணுங்க"

"ஓகே டாக்டர்"

இப்படியும் மசியவில்லை வயிற்று வலி. அடுத்த வாரமே அலறி அடித்துக் கொண்டு ஓடினேன் டாக்டரிடம்.

அது ஒரு சாயுங்காலம். 5 மணி இருக்கும். கைராசிக்கார டாக்டரிடம் வயிற்று வலிக்கு வைத்தியம் பார்ப்பது எவ்வளவு கொடுமை என்று அனுபவித்துப் பாருங்கள்... ஆட்டோமேட்டிக்கா நீங்களே ஒரு இடுகை எழுதிவிடுவீர்கள்.
டாக்டருக்கு ஒரு கிங்கரி (கிங்கரருக்கு​பெண்பால்). செவிலிப்பெண், டோக்கன் கொடுப்பவள், ரிஷப்பஸனிஸ்ட், டெரரிஸ்ட் இப்படி எல்லா அடைமொழிக்கும் பொருந்தும் ஒரு 20 வயதுப் பெண்.

"கொஞ்சம் அவசரம். டாக்டரைப் பார்க்கணும்"
"ஆங்.. இவ்ளோ கொயந்தயங்க வெயிட் பண்ணிட்டிருக்காங்கல்ல.. அதெப்படி வுடுறது?"
"இல்லைங்க கொஞ்சம் அவசரம்"
"எல்லாம் டோக்கன் வாரப்பதான்"
இதைச் சொல்லும் போது அந்த மினுமினு கருப்பியின் தலை வேறுபக்கமாக திரும்பிக் கொள்ளும். அமுல் பேபிகளுக்கு மத்தியில மருந்து வாசனையில் ​போரடிச்சு போயிருக்கிறவளுக்கு.. கொஞ்சம் இளைப்பாறுதலாக ஒரு காம்ப்ளான் பாய் வந்து போயிட்டிருக்கானேன்னு கூட இரக்கம் வரலீயா என்று கேட்க நினைத்து பேசாமல் திரும்பி வந்து பெஞ்சைத் தேய்க்க ஆரம்பித்தேன். வயிற்று வலி வேறு படுத்த ஆரம்பித்துவிட்டது.
உடம்புக்குள் வலி என்றாலே ஒரு மர்மமும் சேர்ந்து கொண்டுவிடுகிறது. மத்திய பிரதேசம் வேறு ஆயிற்றா, என்னதான் காரணமாக இருக்கும் என்று குழம்ப ஆரம்பித்து விட்டது. அஜீர்ணம், பித்தம், பைல்ஸ், அல்சர், உஷ்ணம், வயிற்றுக்கட்டி என கர்ப்பம் தவிர எல்லா சாத்தியங்களையும் யோசித்துவிட்டிருந்தேன் (அப்போது கூட கிட்னி ஸ்டோன் ஞாபகத்து வராததுக்கு காரணம் கிட்னிக்கும் வயிற்றுக்கும் ரொம்ப தூரம்னு நினைச்சதுதான்).

குழந்தைகள், அம்மாக்கள், ரிஷப்ஸனிஸ்ட் என வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்​தேன். டோக்கன்காரி என்ன நினைத்தாளோ தெரியவில்லை..

"சரி நீங்க போங்க"

யாரோ ஒரு அம்மா செய்த தியாகமா, இல்லை டோக்கன்காரியின் விளிம்பு மீறி கசிந்த இரக்கமா என்று தெரியவில்லை.
"தாங்க்ஸ்"

என்று கஷ்டப்பட்டு சிரித்துவிட்டு டாக்டர் அறையுள் நுழைந்தேன். பார்த்தவுடன் கேட்டுவிட்டார்.

"என்ன இன்னும் வயித்துவலி சரியாகலியா?"

"ஆமாம்"

தாமதிக்காமல் இரண்டு டெஸ்டுகளை எழுதித்தந்தார். ஒன்று மலப்பரிசோதனை. இன்னொன்று ஸ்கேனிங்.
ஸ்கேனிங்கில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என் வயிற்றின் முதல் கல்.
- தொடருவோமா..?