Tuesday, February 9, 2016

கூரை ஓவியம்


இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive compulsive disorder எனும் மனப்பித்து. பெரிய மேதைக்குள்ளும் இப்படி ஒரு பித்து இருக்கத்தானே இருக்கும்!

விருந்துகளின் கரண்டி, முள்கரண்டி திருடுபவர்கள் உண்டு. Fight Club படம் பார்த்ததுண்டா? அதில் பிளவுபட்ட மனஆளுமைகள் (split personality) என்ற மனோவியாதியை சிறப்பாக கையாண்டிருப்பார்கள்.

இப்படி தனித்துவமான குணாதிசயம் கொண்ட மக்கள் நம் நினைவில் நிறுத்துவது ஒருவகையில் நம் மனநலத்துக்கு நல்லதுதான். பழனியில் பாலிடெக்னிக் படித்துக்கும் போது மூத்த மாணவர் ஒருவர். இயந்திரம் போன்ற உடலும் குரலும் கொண்டவர். மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த எங்களை ரேக்கிங் என்ற பெயரில் புதுசு புதுசாக சோதிப்பார்.

முதல்முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டது இப்படிதான். அறைக்கு வந்தார்.. எங்களைப் பார்த்து அலட்சியப் புன்னகை உதிர்த்துவிட்டு, இயந்திரக்குரலில் 'டே.. டூத்பேஸ்ட் இருக்கா?' என்றார். அப்பாடா வெறும் பற்பசையோடு சிக்கல் தீர்ந்தது என்று புதிதாக வாங்கிய கோல்கெட் பற்பசையை எடுத்து பவ்யமாக நீட்டினேன். பாவம், மூத்தவர் சாயுங்காலத்தில் பல்துலக்கும் ஒழுக்கங்கள் கொண்டவர் போல - என்ன சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.

பற்பசையைக் கையில் பெற்றுக் கொண்ட அவர் அடுத்து கேட்டது: 'டே.. தீப்பெட்டி இருக்கா?' பற்பசைக்கும் தீப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அறை நண்பன், ஒரு தீப்பெட்டி எடுத்து நீட்டினான்.

'அண்ணா, கரண்ட் போயிடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தறதுக்காக வச்சிருந்தேணுங்ணா' என்று பவ்யமாக நீட்டினான்.

ஹேஹே என்று சிரித்தவாறே,..

'டே அந்த டேபிளை எடுத்து கட்டில் மேலே போடுங்கடா' என்றார். இப்போது எங்களுக்கே கொஞ்சம் ஆர்வம் லேசாக தொற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணன் ஏதோ வேடிக்கை செய்து காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு மேஜையை கட்டிலுக்கு ஏற்றினோம். கையில் பற்பசையும் தீப்பெட்டியுமாக இயந்திர மனிதர் மேஜையின் மீதேறினார். அறையின் மேற்கூரை இப்போது அவர் கைக்கெட்டும் தூரம். பற்பசையை பிதுக்கி கூரையில் நான்கைந்து பொட்டுகள் போல வைத்தார். நாங்கள் எல்லோரும் கீழிருந்து கூரையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அனைவரது வாயும் பிளந்தபடி இருந்திருக்கும் என்று இப்போது கற்பனை செய்து கொள்கிறேன்.

பிறகு ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் ஒரு தீக்குச்சி என சொருகினார். தீக்குச்சியின் மருந்துப் பகுதி கீழ் நோக்கியிருந்தது.
இப்போது, மற்றொரு தீக்குச்சியைப் பற்றினார். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த தீக்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பற்றவைத்தார். தீ மேல் நோக்கி எரிந்து ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் கரிப்படலமாய் படர்ந்தது.
கீழிலிருந்து பார்க்கும் போது கூரையில் ஓட்டை விழுந்தது போன்ற கரும்பொட்டுகளாக இருந்தன.

அண்ணனார்  மேஜையிலிருந்து குதித்து இறங்கினார். நாங்கள் அவரையே ஒன்றும் புரியமால் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த விஞ்ஞான செய்முறைக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரோ என்று அனைவரும் அமைதி காத்தோம். ஆனால் அண்ணன் எதுவும் சொல்லாமல் அலங்கார விளக்குகள் அமைத்துமுடித்துவிட்டு பார்வையிடுபவர் போல மேற்கூரையை பார்த்துக் கொண்டார். திருப்திகரமாக முடிந்தது என்பது போன்ற புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். விளக்கம் ஏதும் கொடுக்காமல், பற்பசையையும் தீப்பெட்டியையும் மட்டும் கொடுத்துவிட்டு அண்ணன் அறையைவிட்டுச் சென்றார்.

நாங்கள் திருதிருவென்று கருகருவென்றிருந்த மேறகூரைப் பொட்டுக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென்று ஒரு இயந்திரக் குரல்.. அண்ணன்தான்.

'என்னங்கடா மேலேயேப் பார்த்துக்கிட்டிருக்கீங்க? பேஸ்ட் வேஸ்டா போச்சுன்னு வருத்தமா இருக்காடா?'
'........'
'பேசாம பேஸ்ட்டை மேல போயி எடுத்து பல்லு விளக்கிடுங்கடா...'
உபரியாக ஹேஹ்ஹேஹே என்ற அதிரும் இயந்திரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டுச் சென்றார். எல்லா அகல நீளங்களில் யோசித்தாலும் அந்த அண்ணனின் கூரை ஓவிய விந்தை இன்னும் பிடிபட மாட்டேங்கிறது.

Wednesday, February 3, 2016

நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்


மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நினைவிருக்கிறதா? டொய்ங்ங்ங்-ன்னு ஒரு சத்தம் கூட கேட்கும். அப்புறம் சாக்கில் தொங்கப் போட்டு ரூல்ஸ் ராமானுத்தை பேட்பாய்ஸ் குமுறுகுமுறென்று குமுறுவார்கள். சாக்கிலிருந்து சன்னமாக தக்காளி சாஸ் வரும்வரைக்கும் குமுறுவார்கள்.

இந்த மொத்த ஸீனும் எனக்கு அப்பப்ப நினைவுக்கு வரவைப்பதற்கான மந்திரம்தான் - மனைவி சொல்லும் நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்.
சரி, எனக்கும் அம்பியாகிய ரூல்ஸ் ராமானுஜத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்:

1: வீட்டு குடிநீர் தேவைக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் தானியங்கி வடிகட்டி வாங்கினேன். அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (RO Water Purifier) என்பதையே தமிழில் சொல்லுகிறேன் (இப்போது உங்களுக்கு கூட என்னை சாக்குக்குள் தொங்கப் போடலாம் என்று தோணும் - தப்பில்லை)

2: இந்தியாவிலேயே ஏன் இந்த ஆசியாவிலேயே நம்பர் ஒன் என்று சொல்லக் கூடிய பிராண்டாக பார்த்து வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாய் விலை கொடுத்து. அதுவும் நல்ல வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ஒரு குட்டி வெள்ளை பாண்டா கரடி மரத்தை கவ்வியிருப்பது போல சமையலறையின் சுவரில் பொருந்திக் கொண்டது.

3: சென்னை நிலத்தடி நீரை அதன்மூலம் பரிசுத்தமானதாக்கி குடும்பம் மொத்தமும் அருந்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் சில வருடங்கள். நானும் ஆர்ஓ தண்ணீர் குடித்து நல்ல அம்பியாகவே இருந்து வந்தேன்.

4: ஆனால் பாருங்கள் திடீரென்று ஒருநாள் அது உங்களுக்கு உழைத்தது போதும் என்பது போல் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல்  இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்களுக்கெல்லாம் நீர் ஆதாரமாக இருந்த அந்த வெண்ணிறப் பெட்டி இப்படியானது எங்கள் அனைவருக்கும் பெரு வருத்தமே.

5: பெட்டியை பழுது நீக்கும் பொருட்டு கம்பெனியிடம் பேசினோம். அடுத்த நாளே ஒரு தேர்ந்த வல்லுநர் வீட்டுக்கு வந்தார். பாவம் வந்தவருக்கு குடிக்க நீர் கூட பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டியிலிருந்து பெறமுடியவில்லை. 30 ரூபாய் கொடுத்து வாங்கிய பாட்டில் நீரையே மொண்டு கொடுத்தோம். குடித்துமுடித்து வாயைத்துடைத்து விட்டு வல்லுநர் பெட்டியை ஆய்வு புரிந்தார்

5.1: அவரது ஆய்வறிக்கை​யைக் கேட்டபின் எங்களுக்கே இயக்கம் நின்று விட்டது போலிருந்தது - ஏனென்றால் ஆர்ஓ பெட்டியின் 80% பாகங்கள் பழுதுதாகி பயனற்றதாகிவிட்டதாம்.

5.2: இந்த கரடியை நீங்கள் காப்பாற்றுவதற்கு பதில் புதுசே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு கிளம்பினார் கம்பெனியின் வல்லுநர்.

6: ஆறு மனமே ஆறு என்று கூறிக்கொண்டாலும் எங்களுக்கு நீருக்கு தினமும் 100 ரூபாய் மாதிரி செலவாகிக்கொண்டிருந்தது - கூடவே நீர் கேன்களின் தரம் கேள்விக்குறியதாக இருந்தது. மனைவி ஒருசமயம் கேன் நீருக்குள் சமர்த்தாக நீந்திக் கொண்டிருந்த சில க்க்குட்டிப்புழுக்களை மொபைல் காமிராவில் படமாக்கினார். அவர் இந்த கோணத்தில் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் டிஸ்கவரி அல்லது நேட்ஜியோ போன்ற ஏதாவது சேனலில் பணியமர்த்தப்பட்டிருக்க கூடும்.

7: இங்கேதான்.. அம்பி அந்நியனாக எழுந்தேன் என்று தெரிந்து கொள்க..! ஏன் பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டி ஏன் பொசுக்கென்று நின்றுபோனது? ஏன் ஒரு சின்ன அலாரம் கூட அது கொடுக்கவில்லை? நாங்கள் பயன்படுத்திய விதம் தவறா அல்லது பெட்டி தயாரிக்கப்பட்ட விதம் தவறா? போன்ற பல பல கேள்விகள் என்னைச் சுற்றின.

8: அந்நியனாக ஆவதைவிட ரூல்ஸ் ராமானுஜமாக மாறுவதே உசிதமாகப் பட்டது எனக்கு (உசிதமணி.. உசிதமணீ) கம்பெனி பெற்ற தரச்சான்றிதழ்கள், குடிநீருக்கான அரசு நிர்ணயிக்கும் தரக்கட்டுப்பாட்டுகள், ஆர்ஓ பெட்டிக்கு கம்பெனி அளித்திருந்த உத்திரவாதம், பெட்டி இயங்கும்முறை, நான் வாங்கிய பெட்டி பழுதான விதம் இவைகளை அலசி காயப்போட்டு இஸ்திரியும் போட்டு ஒரு ஈமெயிலை கம்பெனிக்கு அனுப்பினேன்.

9: சில நாட்களிலேயே ஒரு மண்டல மேலாளர் தொடர்பு கொண்டார்.. நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோளாறு என்பதில் ராமானுஜமாக நின்றேன். நாட்கள் கழித்து வேறொரு மேலாளர் பேசினார்.. அதையே சொன்னேன்.. கூடவே கோளாறு உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால் எழும் ஆபத்துகளையும் விளக்கினேன் அவருக்கு. அப்படியே அதை ஈமெயிலாக்கியும் அனுப்பினேன்.

10: இன்னும் சில நாட்களில் வேறொரு மேலாளர் பேசினார்.. அம்பி உங்களுக்கு இழப்பீடாக புது ஆர்ஓ பெட்டியே வழங்குகிறோம் என்றார். அதுவும் வந்தது புது பாண்டா கரடி போல சமையலறையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டது. பதினாறாயிரம் மிச்சப்பட்டது அப்புறம் நீர் கேனுக்குள் நெளியும் புழுக்களை படமெடுப்பதிலிருந்து விடுபட்டது போன்றவை மனைவிக்கு ஆறுதலாய் இருந்தாலும் - என்மேல் ஒரு பயம் வந்துவிட்டிருந்தது போல.

11: இதுபோன்று ஏதாவது தரக்குறைப்பாடுகள் சொன்னாலோ தென்பட்டாலோ உடனடியாக செயலூக்கம் பெற்றவனாகி ஈமெயில் புகார்களை சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்புகிறவனாகிவிட்டேன்.

12: இது அப்படியே தொடர்ந்தது - கடையில் வாங்கிய சப்பாத்தி மாவில் இருந்த மண்துகளுக்காக, வீடு பக்கத்தில் கழிவு கொட்டும் வீட்டுக்காரருக்காக, குப்பை எரித்துவிட்டுப் போகும் கார்ப்ரேக்ஷன் ஊழியருக்காக, கட்டணம் வசூலிக்கும் சாலையின் குழிகளுக்காக, குறித்த இடத்திற்கு வந்து கூட்டிச்செல்லாத வாடகைக் காருக்காக என ஈமெயில் அனுப்பிக் கொண்டேயிருந்தேன். பாருங்கள், ரூல்ஸ் ராமானுஜம் என்னுள் முழுதாக இறங்கிவிட்டிருந்தான் போலிருக்கிறது!

என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக மனைவி இந்த நடுவில் மின்கம்பம் இரண்டு ஆட்டோக்கள் சொன்னாலும் ஈமெயில்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன (ஒரு பயத்தோடுதான்). என்னைப் போல் இன்னும் நிறையபேர் இருப்பார்கள். தரத்தை வேண்டுகிற, குறைகளை களைய முயற்சிக்கிற அம்பிகள் எங்கும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

வலுவான மின்கம்பங்கள் நின்றாலும் ராமானுஜர்கள் தேவை நமக்கு அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது, அல்லவா?

Tuesday, February 2, 2016

அந்தப் பறவை எந்த தேசம்?


பள்ளிக்கரணை சதுப்புநிலம் ஒரு குறு ஆச்சரியம் எனக்கு. சதுப்புநிலத்தை இரண்டாக பிரித்துக்கொண்டு ஓடும் பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலை. சாலையின் ஒருபக்கம் உள்ளூர் போட்ட குப்பை மலை. மறுபக்கம் வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம். சாலையால் சதுப்புநிலத்தின் மறுப்பக்கம் காப்பாற்றப் பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

சென்னை வந்ததிலிருந்து இவ்வழியாகத்தான் அலுவலகம் போய் வருகிறேன். ஆக்ஸிலேட்டரை மட்டுப்படுத்துமாறு பறவைக்கூட்டம் ஆர்ப்பரிக்கும். அதிகம் பார்த்தறியாத வெளிநாட்டுப் பறவைகள். பருவத்துக்கென ஆயிரம் மைல்கள் கடந்து வந்திருக்கின்றன. சீக்கிரம் போ இந்தக் கோடைக்குள் சென்னை சேரணும் என்ற திட்டமாக ஏதோவொரு குளிர்தேசத்திலிருந்து கூட்டமாய் வருகின்றன - போகின்றன.

தலைமுறைகளுக்கு தன் பயணக்குறிப்புகளை கடத்தி ஒரு மரபணு பதிவாக ஆகிறது இந்நிலம்!

ஒரு நல்ல சாயுங்காலத்தில் வீடு திரும்பும் போது காணக்கிடைத்தக் காட்சி - குறைந்தது 400 அல்லது அதற்குமேலாக வாட்டசாட்டடமான பறவைகள் நிரையாக சதுப்புநிலத்தின் மேல் நட்டுவைத்திருந்த டிரான்ஸ்பார்மர் கம்பியில் அமர்ந்திருந்தன. நல்ல கனமான மின் கம்பிதான் இருந்தாலும் அத்தனை பறவைகளும் ஒருசேர எழுந்தால் அதன் அதிர்வில் கம்பியே அறுந்துபோய்விடும் போலிருந்தது.

அந்த பறவைகளின் திரள், அதுகாட்டும் பிரம்மாண்டம், ஒருமித்தம் இயற்கையின் பேரியக்கமாக தோன்றியது அன்று. ஒரு பேராற்றலை தாங்கிக் கொண்டு அமைதியாக தவமிருப்பது போல பறவைகள் உட்கார்ந்திருக்கின்றன.

சாலையின் மறுப்பக்க குப்பைமலை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டேபோகிறது. மலை சரிந்து சரிந்து தூரமாக தெரிந்தது இப்போது சாலையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குப்பையில் சதுப்புநிலம் உறிஞ்சியது போக எஞ்சி நிற்கும் பிளாஸ்டிக் மட்டுமே மலையாக வளர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நகரும்-பிளாஸ்டிக்-மலையும் கூட இன்னொரு பிரம்மாண்டம்தான். பிளாஸ்டிக் குப்பை பெருக பெருக குளிர்தேசப் பறவைகள் வரத்து குறைந்து போய்கொண்டேயிருக்கிறது.

என்றோ எங்கோ எவரோ வீசிய சின்ன பாலிதீன் பை எவ்வளவோ தூரத்தில் இருந்து பெரும்பிரயாணம் செய்து வரும் பறவை நிற்கும் இடத்தை எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்கொண்டேயும் இருக்கிறது. பள்ளிக்கரணையை தென்சென்னையின் சிறுநீரகம் என்று சொல்கிறார்கள். தரைமட்டத்திற்கு கீழ் கடல்நீரை புகவிடாமல் ஒரு தடுப்பு அரணாக நிற்பதால். ஒரு நிலம் தன் மேற்பகுதியில் கோடி உயிர்களின் சரணலாயமாக இருக்கிறது; கீழே ஒரு ஊருக்கே அரணாகவும் இருக்கிறது.