Tuesday, June 1, 2010

தொடர்பு எல்லைக்கு அப்பால்...

நீங்கள் என்றாவது +919886814327 என்ற மொபைல் எண்ணை அழைத்திருக்கிறீர்களா? அழைத்ததும் நீங்கள் 99 சதவீதம் பதில் பெறுவீர்கள்.

இந்த மொபைலுக்கு என்னை அருளியவன் சரவணன். சரவணன் ஒரு எலக்ட்ரீஷியனாக எனக்கு அறிமுகமானான். ஐந்து வருடங்களுக்கு முன் பெங்களூர், சேஷாத்ரிபுரம், முதல் பிரதான வீதியிலுள்ள ஒரு மோட்டார் வீட்டுக்கு நான் குடியேறியபோது சரவணனைச் சந்தித்தேன். ஒருவர் மட்டும் வாழ அனுமதிக்கும் சிறு அறை அது. ட-போன்ற வடிவம் கொண்ட அந்த அறையில் ஒருவர் மட்டும் கால் நீட்டித் தூங்கலாம். விருந்தாளிகள் ட-வை அனுசரித்துப் படுத்துக்கொள்ள அறை அனுமதிக்கும்.

நீங்கள் அழைத்த அலைபேசியிலிருந்து காட்டுச் சிறுக்கி காட்டுச் சிறுக்கி பாடல், மிஷன் இம்பாஸிபிள் தீம் ம்யூஸிக் அல்லது அதட்டும் பெண்குரல் போன்ற எந்தவிதமான ரிங்டோன்களும் கேட்கச் வாய்ப்பிருக்காது.

அறையில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு எர்த்திங் கொடுக்க வேண்டியிருந்தது. இது தெரியாமல் கம்ப்யூட்டரை இயக்கி CPU-வால் ஒருமுறை தாக்கப்பட்டிருந்தேன். சரவணனை உன்னதராஜ் ஜிம் மாஸ்டர் அறிமுகப்படுத்தினார். ஜன்னலைத் திறந்தது போன்ற சிரிப்பைக் கொண்டிருப்பான் சரவணன். ஒல்லியான இறுகிய உடல்வாகு. அதிகம் போனால் அப்போது 24 வயது இருந்திருக்கலாம்.

எனக்கு எந்த செலவும் வைக்காமல் அவனே கம்பிகளைக் கொண்டுவந்து, மெயினை ஆப் செய்து எர்திங் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான்.

'மெயின் ஆப் பண்ணாமலே வேலை செய்வேங்க.'
'வேணாம்.. எதுக்கு ரிஸ்க்?'
'இதுக்கே இப்படீங்கறீங்களே.. நான் கரண்ட் இருக்கிற வயரையேப் பிடிப்பேன். என்னை ஒண்ணும் பண்ணாது.'

அவன் சொன்னால் எதையும் நம்பிக்கொள்ளலாம். சிலரிடம், பற்களில் கடித்து இழுக்கப்படும் வயரின் உள் கம்பியாக இலகுவாக இருந்துவிடுகிறோம். வேலை முடிந்தும் சரவணனோடு ஒரு நட்பு உருவாயிருந்தது.

அடுத்த முனையிலிருக்கும் நான், உங்களை கத்திக் கத்திப் பேசச் சொல்லலாம். சிலசமயம் எரிச்சலாகத் தொடர்பை(யே) துண்டித்துவிடலாமே என்று உங்களுக்கு யோசனை வரலாம். அது இயல்பே.

தனியறையில் எலிபோல வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அப்போது யாரோடு வேண்டுமானாலும் நட்பு, மப்பு பாராட்ட முடிந்தது.​சரவணனும் நானும் சிலமுறை அறையில் சரக்கடித்து ட-வாகியிருக்கிறோம். என்ன வற்புறுத்தினாலும் எனக்கு கோடைஸ் ரம்மே போதும் என்று பிடிவாதமாக இருப்பான். வயிறு எரியுமே என்று வருத்தமாக இருக்கும்.

'அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க.. காலையில் எழுந்ததும் ஒரு லிட்டர் தண்ணியை அப்படியே கடகட-ன்னு குடிச்சிட்டு கொஞ்ச நேரம் பேப்பரைப் புரட்டிக்கிட்டு இருந்தாப் போதும். சும்மாக் கலகலன்னு போயிடும். வயிறு ஃப்ரீ ஆயிடும்' என்பான்.

ஒருவனுக்கு வாழ்வில் இதற்கு மேல் உன்னதம் வேறு ஏதும் இருக்கிறதா என்ன?

என்னிடம் இருக்கும் இந்த மொபைலை என் மொபைல் என்று சொல்லமுடியாதவனாயிருக்கிறேன்.

அறைக்கு வரும்போதெல்லாம் ஏதாவது கொண்டுவருவான். அது அநேகமாக ஒரு ஜங்ஷன் பாக்ஸ், கேபிள் அல்லது சதுர செவ்வக வடிவிலான எலக்ட்ரிக் யூனிட்கள்.

'பாஸு இதை இங்க மேல வச்சிடறேன். அப்புறம் வந்து எடுத்துகிறேன்.' என்று உரிமையாக நடந்துகொள்வான்.

மாஸ்டர் ஒருமுறை என்னிடம்,
'அவனெதுக்கு இங்க வந்து இதெல்லாம் வைக்கிறான். வேணாம் ஜெகன். எதுவும் வம்பாயிடும்' என்றார். எனக்கு உதறலாக இருந்தது. உடனே சரவணச் சிரிப்பு நினைவுக்கு வந்து சமாதானம் சொல்லும்.

மிகச்சரியாக வாய்க்கு முன்னால் வைத்துப் பேசினால்தான் நான் இங்கு அலறுவது உங்களுக்குக் கேட்கும்.வாய்க்கும் காதுக்கும் மொபைல் மாறி மாறித் தாவுதைப் பார்த்தால் இது உண்மையிலேயே 'மொபைல்'தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளலாம்.

அப்போது என்னிடம் நோக்கியா 2600 மொபைல் இருந்தது. மோனோக்ரோம் திரை, பட்டாம்பூச்சி போன்ற எண்களும், எப்ஃஎம் வசதியும் கொண்டது. அன்று அறைக்கு சரவணன் ஒரு மொபைலோடு வந்தான். சாம்சங் என்று அறிமுகமான அது வண்ணத்திரைக் கொண்டிருந்தது.

'பாஸ்.. இதை வச்சிக்கிட்டு உங்க செல்லைத் தர்றீங்களா?'

புரியாமல் விழித்தேன்.

'இந்த செல்லுல ரேடியோ இல்லீங்க பாஸ். நான் இப்ப வேலைக்கு தூரமா போவேண்டியிருக்கா.. அதுதான் பாட்டுக் கேட்டுக்கிட்டே போலாம்னு.. கொஞ்ச நாள் தான்' என்றான்.

இலவசமாக ஒரு சிரிப்பும். செல் என்ன ஜீனே தரலாம். என் நோக்கியாவை சரவணிடம் தந்தேன். அப்படியே சார்ஜர்களும். அதற்கப்புறம் எப்போதாவது கண்களில் சிக்குவான். காதுகளில் ஹெட்போனின் வெண்ணிற வயர்கள் சுற்ற அவன் திரிவதைக் கண்டால் அசல் எலக்ட்ரீஷியன்தான் என நம்பலாம்.

இம்மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை வெயிலில் படிக்க முடிவதில்லை. குறுஞ்செய்திகள் பகல்-இரவு வித்யாசம் கிடையாது என்பது எனக்குத் தெரியும்.

அவன் கொடுத்த மொபைலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சார்ஜர் மட்டும் பிரச்சினை செய்து கொண்டிருந்தது. ஒருநாள் அறைக்கு வந்த மாஸ்டர் மொபைலைப் பார்த்துவிட்டு விசாரிக்க எல்லாவற்றையும் சொன்னேன்.

'நீங்க ஒரு கேனைங்க..... ஏன் உங்க மொபைலை கொடுத்தீங்க? ஸப்போஸ் இது திருட்டு மொபைலா இருந்தா என்னாகிறது??'

பண்புப்பெயரில் ஆரம்பித்து வினாக்களில் முடியுமாறு அமையும் வாக்கியங்கள் நிம்மதியைக் குலைத்து விடுகின்றன.

'ச்சேசே.. அப்படியெல்லாம் இருக்காதுங்க'

'என்னங்க இப்படி இருக்கீங்க.. டூப்ளிகேட் சார்ஜரைப் பார்த்துமா உங்களுக்குத் தெரியலே?'

அப்படியா? இருக்கலாம். வஸ்துகளைக் கொண்டு மனிதர்களை எடைபோடும் திறன் எனக்கில்லையோ? வயரின் உள்கம்பி போல யார் வேணாலும் பற்களில் கடித்து இழுத்துக் கொள்ளலாமோ?

இது Samsung T-100 மொபைல். எம்பி3, எஃப்எம் என்று எந்த இசையும் கிடையாது. Sam'sung'-ல் உள்ள singன் இறந்த காலம் இதற்கு சாட்சி.

மூன்றாவது ரவுண்டில் சரவணன் முன்பு சொன்னது:

'ஜெகன்.. அம்மாவுக்கு நான் இந்த வேலைக்கு போறதே பிடிக்காது'
'....'
'அப்பா ஈ.பி. லதான் வயர்மேனா இருந்தாரு..'
'....'
'ஒருநாள் டூட்டியில் கரண்ட் அடிச்சி செத்துப் போயிட்டாரு. ஆனா, எனக்கு கரண்ட் வேலைன்னா சின்ன வயசில இருந்தே ரொம்ப பிடிக்கும். கரண்ட் இருக்கிற கம்பியை கையிலயே பிடிப்பேன்.'
'....'
மின்சாரம் மனிதர்களவுக்கு கொடூரம் இல்லை போலிருக்கிறது. சிரிப்புகள் ஒளியும் ஒலியுமாக மின்சாரத் தன்மையோடு இருக்கின்றன. சிரித்த முகங்களாக நினைவுக்கு வருபவர்கள் எப்போதும் மறப்பதில்லை.

12 மணிநேரங்களுக்கு மேல் பேட்டரி சார்ஜ் இருப்பதில்லை. ஆனால் பாருங்கள்.. 24 மணிநேரமும் சார்ஜரில் போட்டுவைத்தாலும் அதுபாட்டுக்கு சார்ஜ் ஏறிக்கொண்டேயிருக்கும்.
நான்காண்டுகள் கழிந்துவிட்டன. இன்னும் சரவண மொபைல்தான் கைவசம். என்றேனும் எதிர்ப்பட்டு, பாஸ்​மொபைலைத் திருப்பிக் கொடுங்க என்று சரவணன் கேட்க நில-கால-டவர் சாத்தியம் உண்டுதான்.

திருமணம் நிச்சயமானதும் மனைவிக்கு வாங்கித் தந்த மொபைல் கேமரா வசதி கொண்டது. கூடவே அப்பாவுக்கும் ஒரு மொபைல் வாங்கினேன். என் மொபைலில் கேமரா இல்லியா என்றார் தந்தை.

எதிர்படுகிற மனிதர்கள் செல்களால் தங்கள் ஆளுமையை மெய்ப்பிக்கிறார்கள். வஸ்துக்களால் மனிதர்களை மதிப்பிடத் துவங்கிவிட்டேனோ என்று சந்தேகமாக இருக்கிறது. மெல்லிய மாடல்கள் இப்போது மறைந்து விட்டன. ஜியோமென்ட்ரி பாக்ஸ் அல்லது டிபன் பாக்ஸ் அளவுகளில் எடுத்துப் பேசப்படும் மொபைல்கள் உன்னதமானவை. ப்ளூடூத் கடித்தக் காதுகளாக ஹாண்ட்ஸ்-ப்ரீயாக பேசும் நபர்கள் திடுக்கிட வைக்கிறார்கள்.

இந்த மொபைலில் சில பட்டன்களை புல்லாங்குழல் துளைகள் போல தொடவேண்டும், சிலவற்றின் மேல் விரல்கள் குத்தாட்டம் போட வேண்டியிருக்கும்.

சமீபத்தில் பெங்களூர் வந்திருந்த அப்பாவிடம் புது மொபைல் இருந்தது. அதில் 3 மெகாபிக்ஸல் கேமாரா கூட உண்டு. நான் வாங்கித் தந்த மொபைல்?

'அது வொர்க் ஆகலடா. அதான் மாத்திட்டேன். நீ இன்னும் அதே மொபைல்தானா? வேணா இதை எடுத்துக்க'

வேண்டாம். பளுவை சுமந்து கொண்டிருப்பதை விட அதை பெற்றுக் கொள்ளும் கணமே வலியானது. அப்பாக்கள் மகன்களின் பரிசுகளை 3ஜி அவரசத்தில் கடாசுதல் இயல்பே. எதுவும் சுலபம்தான். ஒரு பொருளில் சிரிப்பைக் காணும் திறனும் பெற்றுவிட்டேன் போல. உயிர்ப்புள்ள சிரிப்பாக அதிரும் மொபைல் என்னைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா என்ன?

39 comments: