Sunday, October 3, 2010
கடவுளும் நானும்
நான் ஆத்திகவாதியா என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை தேட மட்டும் இதைப் படிக்க முயலாதீர்கள். ஆத்திகம்-நாத்திகம் என்ற பிரிவினை வாதங்களைக் கடந்து ஒரு மானிட கூட்டுநம்பிக்கையை பற்றி எழுதவே இங்கு முயல்கிறேன்.
கடவுளைப் பற்றி எழுதுவது சுய பரிசோதனை. இந்தியாவில் கடவுள் பற்றிய ப்ரக்ஞையற்று இருப்பது இயலாத காரியம். ஏதாவது ஒரு நிலையில் அல்லது வயதில் கடவுள் நம்மில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருப்பார். கடவுள் வசீகரமாயிருக்கிறார். மதம் களிப்பூட்டும் சடங்குகளை நிறுவுகிறது. மதச்சடங்குகளின் பின்புலம் அரசியல் படர்ந்தது. அதை நுணுக்கி அணுகும் போது கடவுளின் வசீகரம் குறைந்து விடுகிறது. மதம், சாதி, சடங்குகள், அதிகாரப் பின்னணிகள் தவிர்த்து தெரியும் கடவுள் எனக்கு உவப்பானது.
எப்போதும் கூடவே வரும் நினைவுகளில் ப்ரபஞ்ச தோற்றம் பற்றியதும் உண்டு. ப்ரபஞ்சம் - பால்வீதி மண்டலம் - சூரியக்குடும்பம் - கிரகங்கள் - பூமி - உயிர் - மனிதன் என்ற சங்கிலியின் ஒவ்வொரு படைப்பும் வித்யாசமான இருப்பைக் கொண்டிருக்கிறது. இவைகளின் இயக்கம் ஆச்சரியமூட்டுகிறது. ஏதாவது ஒரு தத்துவம் அல்லது விஞ்ஞானம் இதற்கு விடை தேடித்தர முயல்கிறது. கிடைத்த விடைகள் சமாதானம் தருவதாக அல்லது தற்காலிக ஆசுவாசமூட்டுவதாக மட்டுமே இருக்கிறது. கடவுளும் விஞ்ஞானமும் என மனம் மாறி மாறி தாவிக்கொண்டிருக்கிறது.
கெப்லர், நியூட்டன், லியனார்ட்ஸ் இயக்க சாத்தியகூறுகள் எந்த ஒரு கணத்திலும் மாறிவிடக்கூடும், திரிந்து விடக்கூடிய நிலையில் இருப்பதாக என் மனம் உணர்கிறது. ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் மட்டும் வேறுவிகிதத்தில் கட்புலனுக்கு தெரிவதன் அபத்தங்களை விவரமாக அலசுகிறது.
அறிவியல் என்பது என்ன?
தெளிவான ஒரு நிகழ்வை கால-இட வித்யாசமில்லாமல் செய்து காட்டுவதுதான். அறிவியல் ஒரு கருவி. ஆன்மீகம் ஒரு உணர்வு. உணர்வுக்கு பக்கமாக கருவியை நிறுத்தத் திணறுகிறேன். கண்களுக்கு தெரிகிற பொருட்களின் நீட்சி, நுண்ணோக்கியால் வேறு வடிவம் பெறுகிறது. அணு, மூலக்கூறு, இது சோடியம், அது ஹைட்ரஜன் என்று நமக்குத் தோன்றினாற் போல் பேரிட்டு திருப்தி பட்டுக் கொள்ள முடிகிறது.
இன்னும் கொஞ்சம் பெட்டரான நுண்ணோக்கி இருந்தால் அணுவுக்கு அடுத்து என்ன, எலக்ட்ரான் சுழற்சி எப்படி என்று அறிந்து கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பெட்ட்ட்டரான நுண்ணோக்கி இருந்தால் ப்ரபஞ்ச மனம் என்ன என்று கண்டுகொள்ளலாமோ..?
இன்னும் இரண்டாவது நிமிடத்தில் என் முன் இருக்கும் காப்பிக் கோப்பை கீழே கவிழுமா..? எந்திரன் படத்துக்கு ரஜினி எவ்வளவு ஃபீஸ் வாங்கியிருப்பார்..? பெர்முடா முக்கோண ரகசியம் என்ன? காலம் ஒரு அபத்தமா? ஒரு கருவுக்குள் எத்தனை வரிகள் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கும்..? நேசனுக்கு யார் கெமிஸ்ட்ரி புக் இரவல் கொடுத்தது? ஹேமா ஏன் அழுகாச்சி கவிதையா எழுதுகிறார்..? போட்டோக்களில் அசந்தர்ப்பமாக எட்டிப்பார்க்கும் பேய்கள் மர்மம்..? மனம் எப்படியிருக்கும்?ஆவி? யூரி கெல்லர்.. ஈஎஸ்பி.. ஸைக்கான்ஸ்... பாராநார்மல்.. பிரிகாக்னிட்டிவ்.. நோஸ்ட்ராடாமஸ், சிறுமி இல்கா, பலிக்கிற கனவுகள்.. ஏலியன்ஸ்.. பறக்கும் தட்டு... உஸ்ஸப்பாடா...!
டேனியல் டங்க்ளஸ் ஹ்யூம் பற்றி படித்ததுண்டா..? தன் அபூர்வ சக்தியினால் 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருந்தவர். தொடாமலேயே நாற்காலியை நகர்த்துவது, மேஜையைத் தூக்குவது என விஞ்ஞானத்துக்கு அன்டச்சபிள்-அபூர்வமாக விளங்கினார். ஒரு விஞ்ஞானக் குழுவே ஹ்யூமை சோதிக்க வந்தது. மேஜையைத் தூக்குப் பார்ப்போம் என்றது. ஹ்யூம், இருங்கப்பு நானே என்னைத் தூக்கிக் காட்டறேன் என்று அந்தரத்தில் மிதந்து காட்டினாராம். வி.குழு கடன்வாங்கி முடியைப் பிய்த்துக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்!
அப்புறம் இன்னும் சில குழப்பங்கள் இல்லது அபத்தங்கள் விஞ்ஞானத்தால் விளக்க முடியாமல் இருக்கிறது. பட்டியல் பெருசுங்க சார்.
ஞானம் - அறிவு - ப்ரக்ஞை - புலன் என்பது கூட ஒரு அடிப்படைத் தவறின் எச்சங்களோ என்று தோன்றுகிறது. இந்தப் பயபுள்ள என்னமா சிந்திக்குது; எலுமிச்சம் வாங்கி தலையில அரைக்கணும் என்று நீங்கள் நியாயமாக சிந்திக்கலாம்தான். இது எல்லாம் ஏற்கனவே பகவத் கீதை கண்டு சொன்னதுதான்.
கீதையின் சில எக்ஸர்ப்பட்டுகள் மட்டுமே அறிந்திருக்கிறேன். அதாவது நுணுக்கி நுணுக்கி நுனிப்புல் மேய்ந்.....! அதுவே ஏகப்பட்ட மாறுதல்களைத் தந்திருக்கிறது. க்ருஷ்ணா என்ற எண்ணம் என்னுள் அமைதியை நிறுவுகிறது.
We cannot approach the Absolute by our poor fund of knowledge, but the
Absolute becomes revealed out of His own mercy by His own appearance.
- A C Bhaktivedanta Swami Prabhupada (ISKCON founder)
நம் புலன்கள் காட்டுகிற எல்லா வடிவங்களும், அதன் மூலம் உதிக்கின்ற எண்ணங்களும் அபத்தமானது. நம் புலன்களால் அறிய முடிகிற உண்மைகள் கீழ்மையானவை. எப்போதும் மாறக்கூடியவை. நிரந்திரமில்லாதது. ஐம்புலன்களுக்கும் தாண்டிய ப்ரக்ஞையால் மட்டும் அணுக முடிகிற பொருளே உண்மையானது. நிரந்தரமானது. சுருக்கமாக, எல்லாம் மாயை.
படித்த அறிவியல், செய்து பார்த்த ஆய்வுகள், தர்க்கரீதியான வாதங்கள், தத்வார்த்தமான அலசல்கள் என எதிலும் கிடைக்காத பதில், ஒரு உண்மை கடவுள் என்ற சமாதானத்தில் வருகிறது. அறிவியலை ஒரு கருவியளவிலேயே பார்க்கமுடிகிறது. இதுவரை கிடைத்த ஆதார அறிவியலைக் கொண்டு, எல்லாவற்றுக்கும் அறிவியலிடம் பதில் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் பாவம். அறிவியல் ஒரு அழகிய ஒரேயொரு உண்மையை கண்டறிய முடியாமல் வேறுதளத்தில் கிடைக்கும் ஆதாரங்களையும் அது பெருக்கும் சாதனங்களையும் மையமாகக் கொண்டு இயங்குகிறது. சாதனங்களால் பெறும் செளகர்ய தளர்வால் அறிவியல் உயர்வாகத் தோன்றலாம்.
ஆனால், அறிவியலை ஒரு கருவியாகக் கொண்டு அதன்மூலம் ப்ரபஞ்ச முடிச்சை, ஆழ்ந்த உண்மையை, கடவுளை அறிய முயல்வதே நம் வாழ்வின் அர்த்தமாக இருக்க முடியும். சேஷாத்ரிபுரத்திலிருந்து ஐடிபிஎல்-லில் இருக்கும் அலுவலகத்துக்கு போக 1 மணி நேரம் ஆகிறது. அமைதியாக 37:33 நிமிடங்கள் ஒலிக்கிற வில்வஸ்திர ஸ்தோத்திரம் கேட்டுக்கொண்டே செல்கிறேன். வெளித்தோற்றத்தில்தான் நான் ஒரு ஸைபர்-ஏஜ் அடாவடி. அடித்தளத்தில் எளிமையானவன் - எனது தேடல்கள் முழுமையானதாக இருப்பதைவிட அமைதியானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
சிஈஆர்என் - என்ற ஆய்வுமையம் லார்ஜ் ஹாடுரன் கொலைடர் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய சோதனையை நடத்திக்கொண்டு வருகிறது. மிகவும் ஆர்வமூட்டும் விஞ்ஞானப் பரிசோதனை. எதற்காம்..?
1. மூலக்கூறுகள் எப்படி உருவாகின
2. புவியீர்ப்பு எப்படிச் சாத்தியமாயிற்று
3. அறிந்த பொருட்கள் போலவே அறியாத பொருட்கள் (dark matters, dark energy, fourth dimension) எப்படியிருக்கும்?
4. ஒரு சோதனையின் மூலம் ஒரு கருப்பொருளை உருவாக்க முடியுமா?
5. உலகம் எப்படி உருவானது?
உங்களைக் குழப்ப விரும்பவில்லை. சுருக்கமாக..
கிட்டத்தட்ட 15 வருடங்களாக உலக விஞ்ஞானிகள் கூடி நிறைய பொருட்செலவில் ஒரு பரிசோதனைக் கூடம் கட்டியிருக்கிறார்கள். அது ப்ரான்ஸ்-சுவிஸ் எல்லைப் பக்கமாக இருக்கிறது. இந்த சோதனை முடிவில் நமக்கு கடவுள் மூலக்கூறுகள் (God's paticles) கிடைக்கும் என்கிறார்கள். நானும் ஆர்வமாக கவனித்து வந்தேன். ப்ச்.. ஏதோவொரு தொழில்நுட்ப தகராறால் இதோ.. இப்ப.. இப்ப என்று பரிசோதனை நொண்டியடிக்கிறது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால் அறிவியலையேப் புரட்டிப்போடும் உண்மைகள் கிடைக்கலாம் என்கிறார்கள். ப்ரபஞ்சத்தில் நம் மண்டலம், நம் மண்டைஎண்ணிக்கை, பிற உயரினங்கள் என நாம் அறிந்தது வெறும் 4 சதவீதம்தான். மீதி 96% பொருட்களை, உண்மையை இந்த விஞ்ஞானப் பரிசோதனை பெற்றுத் தரும் என்கிறார்கள்.
அப்படி இந்த Large Hardon Collider புதிதாக ஒரு உண்மையை கண்டறிந்து சொன்னால், கடவுளை நான் மறுபரிசீலனை செய்யலாம். அதுவரைக்கும் ஹரே க்ருஷ்ணா.. ஹரே ராமாதான்!!
உங்களுக்கு 1 சொல்லிக்கிறேன்: கடவுளை நம்புவது மிகுந்த உழைப்பு வேண்டிய சங்கதியாக இருக்கிறது. நிறையத் தேடல்கள், விழிப்புணர்வு, மெஞ்ஞானம் என்று நிறைய மெனக்கெடல்கள் கொண்டது. இப்பவும் பெரியாரியல் படித்துக் கொண்டிருக்கும் ஓய்வுபெற்ற அப்பா, ஆத்திகமா நாத்திகமா என்று தெரியாது. அவர் ஒரு தேடல்வாதி என்று எண்ணிக் கொள்கிறேன்.ஆத்திகம் - ஒற்றையான ஒரு உண்மையை நோக்கிய பயணம். கடவுள் தேடல்வாதிகள் பெற்றுத் தருகிறார் - எப்பவும்.
- எழுதப் பணித்த பத்மநாபனுக்கு நன்றி! தாமதத்திற்கு வருந்துகிறேன் ஸார்!
Labels:
கடவுள்,
தொடர்பதிவு,
விஞ்ஞானம்
Subscribe to:
Post Comments (Atom)
25 comments:
வெல்கம் ஜெகன்...
உங்கள் நிலைவிளக்கம் நன்றாக இருந்தது.
படம் எனக்குப் புரியவில்லை.
ரொம்ப பிஸியோ...
அருகருகே இருந்தும் அருகிவிட்ட சந்திப்புக்கள்... :-(
இந்த கணம் உண்மை
அதுதான் இறை ..
என்னை பொறுத்த வரை மனதை காயப்படுத்தாமல் இருப்பது மதம்
மதிப்பது மதம்
நம்முள் உறைந்திருப்பது கடவுள்
அடக்கடவுளே உங்களைத் தேடிக் களைச்சுப்போனேன் ஜே.முதல்ல சுகம் கேக்கிறேன்.சுகம்தானே நீங்க !அப்புறமா பதிவு படிக்கிறேன்!
கடவுள் மறந்தாரோ !
கடவுள் பெயரில் தெளிவான குழப்பம்.எப்பிடி நீங்க குழப்பினா என்ன தெளிவாக்கினா என்ன திருந்தவா போறாங்க.
வெள்ளைக்கார நாட்டில அகதியா வந்திருந்துகொண்டு சாதி,ஊர்,பிடித்த கடவுள் என்கிற பெயரில் வீதிக்கு வீதி கோவில் கட்டுகிறார்கள்.
வெள்ளைகாரன் 1- 2 மாதம் பொறுமையிழந்து இவர்கள் அட்டகாசம் தாங்கமுடியாமல் விரட்டிக் கலைக்கிறான்.பிறகு அடுத்த சந்தியில் கோயில்.என்ன கூத்து இது !
நீங்க கடவுள் நான் கடவுள்.அன்பு இருக்கிற மனசெல்லாமே கடவுள்.கடவுள் என்பது ஒரு நல்வழிகாட்டி.அவ்ளோதான் ஜே !
இருங்க இருங்க...நேசனையும் என்னையும் சீண்டாம இருக்க முடில உங்களுக்கு.அப்போ நாங்க ஞாபகத்தில இருக்கோம் !
படம் வடிவா இருக்கு ஜே.
ஆனா என்னன்னு விளங்கேல்ல !
கடவுள் இருக்கிறாரா, ஆணா,பெண்ணா இந்தக் கேள்விகளை விடக் கடவுள் பெயர் சொல்லி அடிக்கும் கூத்து தாங்கமுடியாமல் போய்க் கொண்டிருக்கின்றது. சென்னையிலே பிள்ளையார் சிலைகளை வைத்து அடித்த லூட்டி, ஈழத் தமிழர்கள் டொராண்ட்டோவில் நூற்றுக் கணக்கான கோவில்கள் கட்டி அடிக்கும் கூத்து, இதெல்லாம் சினிமாக்காரர்கள் அடிப்பதைப் போலவே இருக்கின்றது.அதை விட அதிகமாகவும் இருக்கிறது. பகதர்களே அய்யோ கடவுள் பாவம் என்று சொல்ல வேண்டியுள்ள நிலை.
இந்த மாதிரி ஒரு பதிவிற்கு எத்தனை நாள் வேண்டுமென்றாலும் காத்து கிடக்கலாம் ஜெகன்...படித்தேன் ..திரும்ப படித்து கொண்டிருக்கிறேன் .. பதிவிலிருந்து மீண்டபின் மீண்டும் வருகிறேன்...
சேது சமுத்திரம் திட்டத்தில் தொட்ட பல கோடி மதிப்புள்ள இயந்திரங்கள் வீணாய் போனது. இதுபோல் பல விஷயங்களுக்கு விடை தெரியாத வரை நானும் ஓம் நமச்சிவாய தான்
வில்வஸ்த்திர ஸ்தோத்திரம் என்ன நண்பா ? (வில்வாஷ்டகமா ?)
விஜய்
// நான் ஆத்திகவாதியா என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை தேட மட்டும் இதைப் படிக்க முயலாதீர்கள் //
உங்கள் முன்வாக்கியத்தில் ஒரு நியாயம் தொக்கி நிற்கிறது ..இவனா அவனா என உடனடியாக பார்க்கும் நிலை இங்கு கூடுதல். பொலிபோட்டு கடவுளை தேடுவது, தேடியவாறு கிடைக்காவிட்டால் சாமியாவது பூதமாவது என இரைச்சலிடுவது என அகடு முகடாக கூட்டம் பிரிந்து நிற்கிறது.
//ஒரு மானிட கூட்டுநம்பிக்கையை // இந்த வார்த்தைச்சேர்ப்பை மிகவும் விரும்புகிறேன் . அத்வைத நிலைக்கு முன்னேற்பாடு செய்யும் நம்பிக்கை வார்த்தை. மானிடம் கூடுகிறது.. கூட்டாகவே ஒரு நம்பிக்கையும் எற்படுத்திக் கொள்கிறது...
இந்த மண், தேடியவர்கள் அதிகம் கரைந்த மண் என்பதே கடவுள் பிரக்ஞை க்கு காரணம்..
(ஐந்தாறு பின்னூட்டத்தில் முடிக்க பார்க்கிறேன் )
//ப்ரபஞ்சம் - பால்வீதி மண்டலம் - சூரியக்குடும்பம் - கிரகங்கள் - பூமி - உயிர் – மனிதன் // இந்த அதி ஆச்சர்ய வலிய சங்கிலிக்கு இயற்பியல் எனும் சொல் மிக மிக மெலிய சொல்.
அறிவியல்......மிக சமிபமாக ஸ்டிபன் ஹாக்கின்ஸின் the grand design புத்தகம் ரிப்பன் வெட்டி வெளியிடும் முன்னரே.. இனி பிரபஞ்சத்திற்கு கடவுள் தேவையில்லைன்னு சொல்லிட்டாரு என தமுக்கடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... அவரே சொன்னதுதான்..``
''எல்லாவற்றையும் நீருபணம் செய்து விடுவேன் ...அந்த மர்ம பிளாக் ஹோல்ஸ் பற்றியும் , அந்த கருப்பின் இருப்பையும் அதன் கொள்ளும் ஆற்றலையும் கண்டுபிடிக்காமல் வேறு என்ன எழுதினாலும் அது செல்லாது......
hare krishnaaaa........... !!!
please no 'rama'.
hi jagan. how are days?
நியுட்டன் ..இன்ன பிற அறிவியாளர்களின் கருத்துக்களை கண்ணாடி போல பாதுகாக்க வேண்டியுள்ளது எப்போது உடையுமோ, எப்போது நொறுங்குமோ , என பார்த்துக்கொண்டே இருக்க வைக்கிறது ... இதில் பெருவெடிப்புக்கொள்கையும் சேர்த்தி தான்.
ஐன்ஸ்டின்...... சார்பியல் தத்துவத்தை தாண்டி கடவுளை நெருங்கும் பிரபஞ்ச ஒருங்கிணைப்பு தத்துவம் அந்த காலத்தில் அவ்வளவாக பிடி படவில்லை.
நுண்ணோக்கியின் தரம் உயர்த்தி பிரபஞ்ச மனம் வரை விரிய நினக்கும் அழகை எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன்.
கீதையை இன்னமும் படிக்கவில்லை . அங்காடிகளில் ஒட்டியிருக்கும் `` எது நடந்ததோ `` சாரம்சம் நேர் மறையுணர்வில் வைத்திருக்கும்.
படிப்பதற்கான பக்குவம் வரவில்லை என்று காத்திருக்கிறேன் படிக்க, படிக்க பக்குவமும் வரலாம்
நீங்கள் குறிப்பிட்ட இஸ்கான் நிறுவனரின் மேற்கோள் ஒரு மன சிலிர்ப்பை எற்படுத்தியுள்ளது. நமது வறிய அறிவை வைத்துக்கொண்டு வற்றாஇருப்பினை உணர்வது, முடியாத செயல்..ஆனால் அந்த இருப்பு கருணையோடு நமதறிவை உயர்த்த பார்த்துக் கொண்டே இருக்கிறது.
இஸ்கான் பெயர் கண்டவுடன் எனது நினைவலைகள். கோவையில், பெங்களூர் இஸ்கானின் குறுபதிப்பாக ஜகன்னாதர் கோவில் உள்ளது . அங்கு சென்று 108 முறை ஹரே கிருஷ்ணா மந்திரம் சொல்லிவந்ததில் ஒரு திருப்தியும், பல முன்னேற்ற திருப்பங்கள் அடைவதாக எனது இல்லத்தரசி அடிக்கடி நம்பிக்கையை வெளிப்படுத்துவார்... நம்பிக்கை தானே வாழ்வின் ஆதாரம்.
எனக்கு கிருஷ்ணம் என்றாலே பேராற்றலின் நினவு தான் வ்ரும்...
//ஐம்புலன்களுக்கும் தாண்டிய ப்ரக்ஞையால் மட்டும் அணுக முடிகிற பொருளே உண்மையானது. நிரந்தரமானது.//
//இதுவரை கிடைத்த ஆதார அறிவியலைக் கொண்டு, எல்லாவற்றுக்கும் அறிவியலிடம் பதில் இருக்கிறது என்று நம்புகிறவர்கள் பாவம். //
//கடவுள் தேடல்வாதிகள் பெற்றுத் தருகிறார் - எப்பவும்.//
:)
அன்பு தமிழ்ப்பறவையான பரணி,
படம் கடவுள் மாதிரி.. பக்தர்கள் கண்ணுக்கு மட்டும்.. ஹிஹி..!
-
அன்பு பத்மா,
உங்களது பின்னூட்டம் அல்ல - மந்திரம்!
-
ஹேமாஜி,
நலம், நலமா? நம் மக்கள் இடம், காலம் உணர்வற்று கடவுள் பெயரால் மற்றவர்களை இம்சிப்பதை வெறுக்கிறேன். அமைதி தருவதற்குதான் இலக்கியம், கலை, அரசியல் மற்றும் கடவுள் எல்லாம். அமைதியின் எல்லைகளை உரசிப்பார்க்கும் எதுவும் புறக்கணிக்கத்தக்கதுதான். கடவுள் உட்பட..!!! (செம கன்ஃப்யூஸிங்.. இல்லே :)))
அன்பு தமிழன்,
ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் வழிபாட்டு முறைகளாக மாறிவிட்டிருப்பது உண்மை. மதத்தின் பின்புல அரசியல் அருவருப்பானது. போதகர்களும் மடங்களும் நடத்தும் மத அரசியலின் நீட்சி நிலங்களைக் கடந்தது. மதம் என்பதே ஒரு யுக்திதான் என்று படுகிறது.
அன்பு பத்மனாபன் சார்,
மிக்க நன்றி. மிகத் தாமதமான பதிவிற்கு மன்னியுங்கள். பிறகான தங்களின் பின்னூட்டங்கள் இருவருக்கான ஒருமித்த தளத்தைச் சுட்டுகிறது.
அறிவியலைத் தொட்டு கடவுளை அணுக முயன்றிருக்கிறேன். எனக்கு, மறுத்தும் வெறுத்தும் மீண்டும் அடைந்ததாக கடவுள் இருக்கிறார்.
நமக்கு கிடைக்கும் சில ஆச்சரியங்கள், அதிசயங்கள், விளக்க முடியாத சம்பவங்கள் மற்றும் அமானுட தரிசனங்கள் எல்லாம் ஏதோ ஒரு ப்ரபஞ்ச பழுதினால் பெற்ற சம்பவங்களாகத் தோன்றுகின்றன.
இந்த ப்ரபஞ்ச ஆழ் உண்மையை உணர்ந்தவனால் நீரின் மேல் நடக்க முடிகிறது. கண்ணுக்கு தெரியும் மானுடக் குறைகளைத் தொட்டு சரிசெய்ய முடிகிறது. ஆனால், இதெல்லாம் 2ம் தர வித்தைகளாகத் தோன்றுகிறது.
ஆத்மார்த்த ரீதியாக மெய்யான ப்ரபஞ்ச சூட்சுமத்தை உணர்ந்தவன் மெஞ்ஞானி ஆகிறான் - அவனால் அமைதியாய் இருக்க மட்டுமே முடிகிறது; ப்ரபஞ்சம் போல.
பயிற்சியின் மூலம் ப்ரபஞ்ச சமன்பாட்டைக் கண்டுகொண்டவன் - அதனை பரீட்சித்துப் பார்க்கிறான்; சிறுமையான தன் அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவ முயல்கிறான்.
தன்னையறிமால் யதேச்சையாக ப்ரபஞ்ச சூழலில் சிக்கி மீண்டவன் - அதன் மெய்ப்பொருள் அறியாது, சாதாரண வித்தைகளால் பிறரைப் பரவசப்படுத்துகிறான் (யூரி கெல்லர் வகையறாக்கள்)
அன்பு விஜய்,
வில்வாஷ்டகமேதான். எதுப்பற்றி பேசினாலும் உங்களிடம் அதற்கு இடம் இருக்கிறது. எல்லோரையும் வசீகரித்து விடுகிறீர்கள்!
-
அன்பு ஆதிரன்,
நலமா? நாட்கள் மேகங்கள் போல.
இடிக்கிற விஷயத்தில் எனக்கும் உடன்பாடில்லை.
வாழ்வின் அர்த்தம் என்ன? எனும் கேள்விக்கு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விடை. ஆலகாலமான முடிச்சுகளை நீக்கி சிக்கலில்லாமல் படைப்பு ரகசியத்தை உணர்வதற்கான தொடர் பயணம் இது...
லிங்காஷ்டகம் கேட்டுள்ளேன்..வில்வாஷ்டகம் தெரிந்து கொண்டேன் ..சில சொற்களுக்கு அர்த்தம் இந்த மூளை அறிவிற்கு எட்டி புரிந்துகொள்ளும் முன் மன அறிவு அனுபவிக்க ஆரம்பித்து விடும்...
கொலைடர் ஆய்வரங்கம் பற்றியும் அது ஆராயப்போகும் கேள்விகளும் பகிர்ந்தது சிறப்பு... அவனருளாலே அவன் தாழ் வணங்கி பதில் தேடட்டும்.....
ஆம் நண்பரே...இந்த தேடல் வலி மிக்கது தான் இரையோடு இறைதேடுவது ...
( மன்னிக்க உங்கள் பின்னூட்ட பதில்களையும் விடுவதாயில்லை....)
நண்பா
சோர்வெனும் Free Radicals விரட்டும் Anti - Oxidants உமது ஊக்கங்கள்
நன்றி நண்பா
விஜய்
எண்ணங்களின் ஆழம் எழுத்தின் எளிமையில் வெளிப்படுவது கடினம். நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். ரசித்துப் படித்தேன்.
ப்ரபஞ்ச அறிவுக்கும் (அதுவே கேட்ச் 22 என்பது என் கருத்து) நிம்மதிக்கும் தொடர்பு உண்டா என்று ஐயப்படுகிறேன். அறிவில்லாதவருக்கு நிம்மதி கிடையாதா?
வாழ்வின் ஆதார சுருதியாய் அன்பு அரசாள, மனமெல்லாம் இருள் நீங்கி ஒளி வெள்ளம் சூழ, வன்முறைகள் மறைந்து நன்முறைகள் மலர்ந்து அமைதியும் இன்பமும் எங்கும் நிறைந்திருக்க....இறைவனை வேண்டி.. இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள் ஜெகன் ஜி.
ரொம்ப நாளாகி விட்டது ஜகன்... இணயத்தில் எங்கு இருக்கிறீர்கள்? அங்காவது வந்து பார்க்கிறோம்..
தங்களின் இந்த வரிகள் மட்டும் போதும், மீண்டும் தொடர.
மாறா அன்பிற்கு மிக்க நன்றி பத்மநாபன்!
நண்பா நலமா ?
Post a Comment