Tuesday, March 31, 2015

​மைக் என்ற மந்திரக்​கோல்மகளுக்கு ப்ரிகேஜி கொஞ்சம் சீக்கிரமே தொடங்குவதாக பள்ளி அறிவித்துவிட்டது. இரண்டு வயது முடிந்து 2 மாதம் 24 நாட்கள் 7 மணி நேரம் மட்டுமே ஆகியிருக்கிறது மகளுக்கு! நாம் சொல்லும் அனைத்து வாக்கியங்களையும் அப்படியே உள்வாங்கி, அதன் முதன் அட்சரத்தை மட்டும் பேசும் அளவுக்கு நாவன்மை வந்துவிட்டது. 'அதற்குள் எப்படிய்யா ப்ரிகேஜி?' என்று யோசிப்பதற்குள், பள்ளியில் இருந்து தபால். 'ஓரியண்டேஷன் ஸெஸன் வாங்கோ' என்று கூவியது. அதிலும் ஒரு டிஸ்கி வேறு: குழந்தையைக் கூட்டிக்கொண்டு வரக்கூடாதாம்.. ஒன்லி பேரண்ட்ஸ் மாத்திரம்!

மாமியார் வசம் மகளையும் மகனையும் ஒப்படைத்துவிட்டு கிளம்பினோம். பச்சையம் சுருக்கும் சென்னை வெயிலில் பள்ளிக்கூடம் அடைந்தோம். ஏற்பாடெல்லாம் பிரமாதமாகவேயிருந்தது. மேடையிலிருந்து குத்துப்பாட்டு ரம்மியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. இதே பள்ளியின் பிரதான வளாகம் நகரின் வேறு பகுதியில் இருக்கிறது. இது புதிதாக அமைக்கப்பட்ட சுட்டி வளாகம். ப்ரிகேஜி டு யுகேஜி வரை மட்டும். அருமையான இரண்டு மாமரங்கள் மற்றும் இதர மரங்கள் சூழ்ந்த குளுகுளு வளாகம்.. பிள்ளைக்களுக்கேற்ப பெரிய திடல் அதில் விளையாட்டு அம்சங்களும் நிறையவுண்டு. ஜீன்ஸ் மற்றும் ரோஜாப்பூ வண்ண டாப்ஸ் சீருடையாக கொண்ட ஆசிரியைகள். பிள்ளைகளுக்கும் ரோஜாப்பூ வண்ண சீருடை என பிங்க் பிராந்தியமாக மினுங்கியது. ஸ்கூல் ஃபீஸ் உங்கள் யூகத்திற்கு விடப்படுகிறது.

மேடை களைகட்ட ஆரம்பித்தது. பள்ளியின் டீன், பிரின்ஸி, கோஆர்டினேட்டர் (இப்படி பல பதவிகள் தற்போதைய பள்ளிகளில் உண்டு) என ஒவ்வொருத்தரும் மைக்கைப் பிடித்து அதிகம் ஆங்கிலம் கொஞ்சம் தமிழ் என உரை முடித்தனர்.

நாம் தடுத்தும் நம் காதுகளில் சில காமடி வெடிகளை கொளுத்திப் போட்டு விடுகிறார்கள். ம்.. உங்களுக்கும் வைத்துக் கொள்ளவும்.. மகள் படிக்கும் பள்ளி.. பீஸ் வேறு கட்டியாகி விட்டது!

1. கார்ப்பரேட்டுகளில் வேலை செய்பவர்களை பொதுக் கூட்டங்களில் சுலபமாக கண்டு கொள்ள முடிகிறது. மைக் வைத்திருப்பவர் குட்மார்னிங் சொன்னதும் கூட்டத்திலிருந்து ரிப்பீட்டாக குட்மார்னிங் சொல்லுவார்கள் பாருங்கள்.. அவர்கள் எல்லாமே ஏதோவொரு கார்ப்பரேட்டாக இருப்பார்கள்!

2. கூட்டத்தில் சும்மா உட்கார்ந்து கொண்டே ஏதாவது காமடி நம்மால் செய்ய முடிகிறது எனலாம். யார் எது பேசி முடித்தாலும் கைத்தட்டல்தான். டீன் சொன்ன (ஊர் உலகமெல்லாம் மேய்ந்து வந்த) வாட்ஸ்ஏப் ஜோக்காகட்டும், பின் பேசியவர்களுக்காகட்டும் கேரண்டியாக கைத்தடல்கள்தான். அது போகட்டும் அதற்கப்புறம் வந்த பெரிய தொந்தி டாக்டர் ஒருவர் சீரியஸாக ஆரோக்கிய வாழ்வு, சமச்சீர் உணவு, குழந்தைகளுக்கு உகந்த உணவு என மருத்துவ தகவல்கள் சொல்லி முடித்தார். வாட்ஸ்ஏப் ஜோக்குக்கு தட்டிய மாதிரியே இதற்கும் கைத்தட்டல்கள்!

3. நிகழ்ச்சி வந்திருந்த சில பெற்றோர்களை மேடைக்கழைத்து பேசச்சொன்னார்கள். ஃபீட் பேக் போலிருக்கிறது. நிறைய பேர் பேச தயாரித்துக் கொண்டு வந்திருந்தார்கள். நல்ல நகைச்சுவையாக இருந்தது. ஒருவர் வணக்கம் சொல்லியதும் முதல் காரியமாக அவர் கஷ்டப்பட்டு பெற்ற பட்டங்களின் வரிசையை விளக்கினார். அக்கல்விமான் தினமும் பள்ளியொட்டிய சாலையில் நடை உலா போவார் போலிருக்கிறது. அவர் கண்களில் இப்பள்ளியின் பசுமை தென்பட்டு விட்டது போல.. அதை மெச்சும் பொருட்டாக அவர் இயம்பியது: நான் இப்பள்ளியை ஒட்டிய சாலையில் தான் தினமும் மாலையில் நடந்து வாக்கிங் செல்வது வழக்கம்...

4. மேடைப் பேச்சு ஒரு தனி இலாகா.. அதை அனைவரும் ரசிக்கும் படி செய்வதில் 50 சதவீதம் மட்டுமே பேச்சாளரிடம் இருக்கிறது. பேசும் பொருள், நேரம், மேடை, சுற்றுவெளி மற்றும் கூட்ட மனப்பான்மை இப்படி இதர காரணிகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே, ஒரு சிறந்த பேச்சு கிடைக்கப் பெறுகிறது. நம்மில் நிறைய பேருக்கு மேடை வறட்சியுண்டு. ம்..  மைக் எனக்கு வராதா என்ற ஏக்கத்துடனே நிறைய உன்னத கருத்துக்களும் சொற்பொழிவுகளும் நம் தொண்டைக்குழிக்குள்ளே புதைந்து கிடக்கின்றன போலும். மைக்கைப் பெற்ற மதர்களும் சரி பாதர்களும் சரி கிராண்ட் பாதர்களும் சரி.. மடைதிறந்து பாயும் நதியாகவே இருக்கிறார்கள்! மேடைப் பேச்சு பல தலைமுறைகளாக தொடரும் ஏக்கம் எனப் புரிகிறது.

5. கட்டிடங்கள் அல்லது ப்ராண்ட் வேல்யூ போன்ற அம்சங்களாலேயே பள்ளியின் தரம் நிர்ணயிக்கப் படுவது போல ஒரு மயக்கம் நிலவுகிறது. ஆசிரியர்களை மறந்து விடுகிறோம் போல. அரசு பள்ளி ஆசிரியர்கள் தரமுணர்த்த விருதுகள் உண்டு. தனியார் பள்ளிகளில் இது போல ஏதாவது உண்டா, தெரியவில்லை. மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பு தாண்டும் போதும் ஆசிரியர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். எனக்கு என் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் நினைவுக்கு வருவதுண்டு. அவருக்கும் என்னை நினைவில் கொள்ள வாய்ப்புண்டுதான் - நல்ல மாணவனாகத்தான்.

6. ​டெட்சுகோ குரோநாயகி-யின் (Tetsuko Kuroyanagi) டோட்டா சான் - ஜன்னலில் ஒரு சிறுமி என்று ஒரு ஜப்பானிய நாவல் உண்டு. அதில் பள்ளியே கைவிடப்பட்ட ரயில் பெட்டிகள்தான். ஆனால் மனதில் இன்னும் பயணித்துக் கொண்டேயிருக்கும் பள்ளி. நல்ல பள்ளிகள் அடையாளப்படுவது கட்டிடங்களால் அல்ல என்று தோன்றுகிறது.

No comments: