Tuesday, March 10, 2015

ஜிம் - சில குறிப்புகள்


மனித உடல்கள் நிலத்தொடர்பு கொண்டவை. காக்காஸியன் உடலமைப்பு, மங்கோலிய, ஆப்பிரிக்க அல்லது இந்திய உடலமைப்புகள் வெவ்வேறு விதமாக நிலத்தைக் கொண்டு பாகுபடுத்த முடிகிறது. ஆனால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் சார்ந்த நடைமுறைகள் காக்காஸியன் (அமெரிக்க அல்லது ஐரோப்பிய) அளவுகோல்களையே முன்வைக்கின்றன.

நெடுந்துயர்ந்த அல்லது நோஞ்சான உடலே ஆரோக்கியமானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கின்றன. உடல் பருமனைக் குறைக்க, ஜிம்முக்குப் போகமலேயே என்று பல சுதிகளில் மொத்தமாய் நம்மை குறிவைத்து பாய்ந்து கொண்டேயிருக்கிறது வணிக உலகம்.

ஸிக்ஸ் பேக், லீன் மஸில் கொண்ட உடலமைப்புகளே ஆரோக்கியமானவை என்று அதைசார்ந்த தொழில்கள் வலுவடைகின்றன. விதவிதமான வீட்டிலேயே பயன்படுத்தக் கூடிய உடற்பயிற்சிக் கருவிகளின் அபரிமிதத்தை பார்க்க முடிகிறது.

கட்டிட வேலை செய்யும் தொழிலாளர்கள் இயல்பாகவே அறுமடிப்பு வயிறு உடையவர்களாக இருக்கிறார்கள். அதை மட்டும் கொண்டு ஒருவரின் முழுமையான ஆரோக்கியத்தை கணித்திட முடியுமா? சாப்ட்வேர் தொழிலில் இருப்பவர்கள் ஸிக்ஸ் பேக்கை சம்பளத்தால் மூடி வைத்திருக்கிறார்கள். உடல் எடை குறைப்பு வியாபார உலகின் முதல் தேடலே இவர்கள்தான். அப்புறம் பெண்கள். அதிலும் இல்லத்தரசிகள் -  ட்ரட் மில், எலிப்பிடிகல் சைக்கிள் போன்றவற்றை அவசரமாக வாங்கி துணி காயப்போடப் பயன்படுத்துபவர்கள்.

எனக்கு சிறுவயதிலிருந்தே உடற்பயிற்சி மேல் உசிர் - என்றெல்லாம் சொல்ல இயலாது. தயிர்சாதம் (எருமைத்தயிர்) விரும்பி விரும்பி சாப்பிடுவதால் சிறுவயதிலிருந்தே நான் கொஞ்சம் பப்ளிதான். அம்மாக்களுக்கு மகன்கள் கொழுகொழுவென்று இருக்க வேண்டும். அதற்காக வறுத்தல் பொரித்தல் அவித்தல் என சமையல் கடவுள்களாக இருக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்னவோ கொழுக்மொழுக் பையன்களையே சேர்கிறது. கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங்கோ அல்லது பந்து வீசுவதோ ஏன் பர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று பிச்சைக் கூட எடுக்க விடமாட்டார்கள். அதிகம் போனால் டாஸ் போடுவது அல்லது அம்பயரிங் செய்வது இதுமாதிரி ஏதாவது கொடுப்பார்கள்.

ஜிம் ஏதுமில்லாத சிறுகிராமங்களில்தான் என் சிறுவயதும் தயிர்சாதங்களும் நகர்ந்தன. நகர்விட்டு கிராமத்திற்கு நாங்கள் குடியேறிய போது நான் இரண்டாம் வகுப்பு. உன்னோடது நீர் உடம்புடா.. சத்தே கிடையாதுங்கிறேன் என்பான் ஒருத்தன். அதென்னடா ஊதுகாமலை வந்தவனாட்டம் இருக்கு கன்னம் என்பான் இன்னொருத்தன். இளம்பிராயத்து நண்பர்களில் யாரும் சட்டைப் போட்டு திரிவதில் அவ்வளவு உடன்பாடு கிடையாது. எலும்புகளை எண்ணிவிடலாம்; நரம்புகள் புடைத்த வலுவான வேகமான கிராமத்துச் சிறுவர்கள். சுட்டெரிக்கும் வெயிலில் கூட சட்டையில்லாமல்தான் சுற்றுவார்கள். என் வீட்டிலோ படுக்கும்போதுகூட சட்டையோடுதான் கிடப்பேன். அணைக்கட்டின் சாய்வில் ஓடிவந்து ஏறி உச்சியடைவது, பனையேறி கிளி பிடிப்பது, தோட்டத்து டீஸல் என்ஜினை இயக்குவது மாட்டைப் பிடித்துக் கட்டுவது எல்லாம் எனக்கு வேடிக்கைப் பரிச்சயம் மட்டும்தான்.

அவ்வூரில், வீட்டுப் புறக்கடையிலேயே யாருக்கும் தெரியாமல் ஒரு ஜிம்மை நிறுவியிருந்தேன். பழைய அம்மி, விறகு தரிக்கப் பயன்பட்ட மரத்துண்டு, சைக்கிளில் குடங்களை சுமக்கப் பயன்படுத்தும் கயிறு (அதனுள் ஒரு கம்பி - pull ups செய்ய) இப்படியாக வீட்டிலிருந்த உபரிகளைக் கொண்டு அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. மாலை பள்ளிதிரும்பியதும் நேரே புறக்கடைதான். வேர்க்க விறுவிறுக்க என்று எழுத ஆசைதான்.. இருந்தாலும் பாலகன் அளவில் சிறப்பாகவே செய்தேன் என நம்புகிறேன். அம்மாவுக்கு நான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிந்தால் உடனே புளங்காகிதத்தின் உச்சியை எட்டிப்பிடித்து விடுவார்கள். மீண்டும் சமையல் கடவுள் அவதாரம்தான்.. பொரித்தல் அவித்தல் வறுத்தல் என அம்மி குளவிகளைத் தூக்கி களைத்து வரும் மகனுக்காக தயார் நிலையில் இருப்பார். உண்மையில் சிறப்பாக தேகப்பயிற்சி செய்தவர் அம்மாதான்.

உடலில் உறைந்துள்ள நிலத்தன்மை, மரபுத்தன்மை, உணவுக் கலாச்சாரம், தொழில்முறை மற்றும் உறவுகள் அடிப்படையிலேயே நமக்கான ஆரோக்கிய உடலமைப்பை நாம் தேர்ந்து கொள்ள வேண்டும் எனப்படுகிறது.

ஜிம் மெம்பர்ஷிப் எக்ஸ்பைரியாகப்போவுது.. அதனாலதான் கபாலத்தைத் தாண்டி இப்படிக் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன!

No comments: