Wednesday, September 2, 2015

காடு அ​டைதல்

அன்று பெளர்ணமி. அது யாத்ரிகர்கள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற சமயம். இருந்தும் மறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலின் சிறிய இடைவெளியினூடே மலை ஏற்றத்தை ஆரம்பித்தோம். பலதரப்பட்ட ஆளுமைகள் அடங்கிய அலுவலக நண்பர்கள் குழுவாக அது இருந்தது. அதிகம் பேர் மலையேறிமுடிக்கணும் என்ற பூரணத்துவத்துவையே முதன்மையாக கொண்டு ஏறியதாக தோன்றியது. வேறுசிலருக்கு ஆன்மீகம்-சிவனடைதல் போன்ற எதிர்பார்ப்புகள்.  நானோ இப்பயணத்தை என் உடல்திராணியை அளவிடும் ஒரு செயலாகவே எடுத்துக் கொண்டேன். ஆனால் எனக்கோ மலையின் மூர்க்க வசீகரம் என் உடல்திராணி அளவிடும் நோக்கைத்தை நொறுக்கிவிட்டு என்னை கண்டு களித்து முடி என்றது. காட்டின் ஒவ்வொரு சப்தமும் உள்ளுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டது போலிருந்தது.

நெடுந்துயர்ந்த மூங்கில் புதருள் மோதி அலறும் காற்றின் ஒலி அளவிடமுடியாததாக இருக்கிறது. எல்லா மலைகளும், முகிலுரசும் ஏழாம் மலையுமாக நிலக்காட்சிகள் இயல்பு வாழ்க்கையிலிருந்து நம்மை பிய்த்து பிய்த்து எடுக்கிறது.

மலைவிட்டு இறங்கும்போது இருட்டிவிட்டது. பெளர்ணமி வெளிச்சத்தையும் அனுமதிக்காத காட்டு மரங்கள். காடு கண்விழிப்பது எப்போதும் இரவில்தான் போல - தன் ஒவ்வொரு தசையையும் புரட்டிப் போட்டு திமிறி எழுகிறது இரவில். வலுவுள்ள உயிர்கள் அவர்களுக்கு மட்டுமே புலனாகும் வழிகளில் உலாவ தயாராகின்றன. காட்டின் பாதைகள் எப்போதும் கட்புலனால் அடைய முடிவதில்லை; அவை எல்லா புலன்களாலும் அல்லது ஆறாவது புலனால் அடையக்கூடியதாகவே இருக்கிறது. பாதையறிவது என்பது காட்டின் சமிக்ஞைகளை புரிந்துணரும் செயலாகவே உணர்கிறேன்.

பசித்த வேட்டை மிருகம் கூட காட்டின் சமிக்ஞை இல்லாவிட்டால் பக்கத்திலிருக்கும்  உணவு உயிரை திரும்பிக்கூடப் பார்க்காது. அந்த சமிக்ஞை ஒரு சில்வண்டு சப்தமாகவோ தூரத்து நரியின் ஊளையாகவோ அல்லது ஒரு சிலந்தி வலையில் இருந்து சரியும் மழைத்துளியாவோ இருக்கலாம்.  ஒரு வேட்டை முதல் முளைவிடும் தாவரம் வரை, தானே சுரக்கும் ஊற்று அதனனின்று ஓடை பிறகு ஓடை அருவியாதல் வரை அனைத்தும் காட்டின் இயக்கமாவே இருக்கிறது. இவையனைத்தின் ஒருமித்த தொகுப்பாகவே காட்டை உணர்கிறேன்.

காட்டிருட்டில் திரும்பும் போது வழிகாட்டியாக வேறொரு நபர் சேர்ந்து கொண்டார். அடிக்கடி வெள்ளியங்கிரி வருபவர். அவருடன் வந்த சிலர் இரவை இரண்டாம் மலையிலேயே கழிப்பதாகவும் தான் மட்டும் அடிவாரம் சென்று காலை திரும்புவதாக கூறினார்.  அவருடன் வந்தவர்களை நான் கவனித்திருந்தேன். சடை விழுந்த சிகை மற்றும் தாடியுடன் கூடிய காவி ஆசாமிகள். வயது அதிகம் போனால் நாற்பதுக்குள். விட்டேத்தியான எங்கோ வெறிக்கும் கூர் விழிகள். இரவு முழுதும் சிவபானம், கதை, பாட்டு மற்றும் நெருப்பைச் சுற்றி ஆட்டம் என போகுமாம். காட்டு விலங்கு, காற்று-மழை என எதற்கும் அஞ்சாது விடியும் வரை நடக்குமாம். அப்படியொரு இரவை தவிர்த்து விட்டு இறங்குகிறோமே என்ற விசனம் கூட எனக்கிருந்தது. ஏன் இவர்களை காடு அப்படி இழுத்துப் போட்டுக் கொண்டிக்கிறது என்று யோசித்தவாறே நடையைத் தொடர்ந்தேன்...

என்றோ நிமிர்ந்து நடக்க ஆரம்பித்த காட்டு-மனிதன் தனக்கான வெளியான காட்டை விட்டு முதலடி எடுத்து வைத்தான். உலகின் மொத்த தசைகளையும் திருப்பி போடுவதாக அது இருந்தது. அதற்கப்புறம் தனக்கான வெளியை அவனே கட்டமைத்துக் கொண்டான். பிறகு காட்டுக்கு அவன் திரும்பவே இல்லை - அல்லது திரும்ப முடியவில்லை. காடு குறுக்கே வந்தால் அதை சிதைத்து தனக்கான வெளியாகவே கட்டமைத்துக் கொள்ள ஆரம்பித்தான். கொஞ்சம் கொஞ்சமாக காடு அவனுக்கு அந்நியமாகியது. காடு ஒரு ஆழ் நினைவாக அவனுள் மீட்க முடியாத ஆழத்தில் புதைந்து விட்டது. ஆனால் ஏதோ ஒரு இரவு அல்லது கனவு அல்லது பறவையின் ஒலி காட்டை அவனுள் எழுப்பிவிடுகிறது. எழுந்து கொண்ட மனிதனால் உறங்கமுடிவதில்லை. அவன் நடக்க ஆரம்பிக்கிறான். தனக்கான வெளியைவிட்டு காட்டை நோக்கி முதலடி வைப்பவன் பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அவனை மீண்டும் காடு எடுத்துக் கொண்டு விடுகிறது. காட்டின் ஒரு தசையாக இன்னுமொரு சமிக்ஞை அவனாகிறான்.

இப்படி ஒரு சிந்தை குறுக்கே ஓடியது. இதற்கு முன்தான் சித்த வைத்தியம் பற்றி ஒரு இடுகை எழுதியிருந்தேன். அதையொட்டி ஏன் மலைகள் பொதுவாக சித்தர்களின் கூடாரமாகவே காட்டப் படுகிறது என்றொரு யோசனை. காட்டுச் செடிகள் மற்றும் காட்டு மூலிகைகள்தான் சித்த வைத்தியத்தின் மூலம். பறிக்கிற ஒவ்வொரு காட்டு தாவரமும் காடு-மனிதன் என்ற சங்கிலியமைப்பையே பூடகமாக உணரத்துவதாக இருந்திருக்குமோ? இந்த இணைப்பை,ஆதித்தொடர்பை அதன் சூட்சுமத்தை உணர்ந்தவனே சித்தனாகிறானோ? தனக்கான சரியான, ஆதியான மற்றும் மரபான வெளி காடுதான் என்று கண்டுணர்ந்தவனே காட்டை நோக்கி முதலடி எடுத்து வைக்கிறான். அவனே சித்தனாகிறான். அவனால் காட்டை தாண்டி வரமுடிவதில்லை.

இரவு ஒன்பது மணிபோல அடிவாரம் சேர்ந்துவிட்டோம்.. இருந்தும் காட்டின் சில்வண்டின் ரீங்காரம் இறுக்கமாவே கேட்டுக் கொண்டிருக்கிறது. மலையை காட்டைத் திரும்பிப் பார்த்தேன். பெளர்ணமி நிலவு மேலெழும்பிவிட்டது. எத்தனையோ கண்களால் காடு எங்கோ பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. விடைதெரியாத கேள்விக்கு பின்னான அமைதியாக அது இருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தேன் - நகரங்களை நோக்கி. காடு அங்கேயே இன்னும் இருக்கிறது.

நம் எல்லோருக்குள்ளும் ஒரு காடு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது. கூடவே சமிக்ஞையால் உணரப்படும் காட்டின் வழித்தடமும் நினைவில் எங்கோ ஒளிந்திருக்கலாம்.

No comments: