Monday, September 7, 2015

எமனுக்கு எமனும் ஏஞ்சலாவின் காப்பியும்


ஸ்காட்ச் பாட்டில் படம் போட்டு ஒரு வாட்ஸ்ஏப் செய்தி.. அதைத் தொடர்ந்தவாறே முந்தானை முடிச்சு தீபா 'அ' போட சொல்லித்தரும் படம் வருகிறது. பார்த்தால் ஆசிரியர் தின வாழ்த்தாம். ஸ்காட்ச் பாட்டில் டீச்சர்ஸ் பிராண்டு!!

ஆசிரியர் தினத்​தை​யொட்டி அப்படியே சில ஆசிரியர்கள் நினைவில் வந்து போனார்கள்...

அதிகம் நான் படித்த கிராம அரசு பள்ளி ஆசிரியர்கள். ஒரு ராணுவ ஒழுங்குடன் பள்ளிக்கூடத்தை நடத்துபவர்கள். பணிமூப்பு பெறும்வரைக்கும் தன் நடை உடை பாவனை என எதிலும் சிறு மாறுதலைக் கூட சமரசம் செய்து கொள்ளத் தெரியாதவர்கள்.

நானறிந்து ஒரு நடுநிலைப் பள்ளி ஆசான் - மிகுசிக்கனத்திற்கு ஒரு வாழ்வியல் உதாரணம் எனலாம். சைக்கிளில் கேரியர் வைத்துக் கொள்ளமாட்டார் - பிறர் உட்காரும் பாரத்தால் வண்டி கெட்டுவிடுமாம். கேரியர் இல்லாததால் தன் மதிய உணவு பாத்திரத்தை (சாப்பாட்டு கேரியர்) சைக்கிளின் - மைய இணைப்பு கம்பியில் ஒரு மஞ்சள் நிற நைலான் கயிறால் கட்டிக்கொண்டு வருவார். அந்த மஞ்சள் நிற கயிறும் அதை சாப்பாட்டு பாத்திரத்தை சுற்றியிருக்கும் விதமும் ஒரு நாளும் மாறியதில்லை. அவரது பள்ளி கடைசி நாள் வரை அதே மஞ்சள் நிற நைலான் கயிறுதான். கயிறின் ஒரு நூல் கூட பிரிந்து யாரும் பார்த்ததில்லை.

கிராமத்து பள்ளி ஆசிரியர்கள் அப்படிதான். வாழ்நாள் முழுக்க ஒரேவிதமான ஒழுங்கு - அதில் கொஞ்சம் தவறினாலும் தண்டனைதான். வகுப்பில் அவர் நுழையும் போது சாக்பீஸ்கள் வைத்திருக்கும் விதம், கரும்பலகையின் ஓரமூலையில் இருக்கும் தேதி வருகைப் பதிவு, மேசைக்கும் நாற்காலிக்குமான செமீ மிமீ இடைவெளி என அனைத்திலும் தீவிர ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள்.

அப்போதெல்லாம் ஆசிரிய மக்கள் வகுப்பறைக்கு வெளியேயும் ஆசிரியப் பணியை தொடர்ந்த காலம். நான் படித்த கிராமத்துப் பள்ளியில் தொலைக்காட்சி பார்ப்பதற்கு தடைவிதிக்கப் பட்டிருந்தது. கிராமத்தில் மொத்தம் இருந்தது இரண்டோ மூன்றோ டிவிக்கள்தான். அதிலேயேயும் கூட்டம் அதிமாகி விட்டால் வீட்டுக்காரர் அனுமதி மறுத்துவிடுவார். எப்படியிருந்தாலும் சிறுவர்களான எங்களுக்கு ஒளியும் ஒலியும், ஞாயிறு இரவுப்படமும் பார்க்காமல் இருக்க முடியாது. ஒருவழியாக இடம் பிடித்து உட்கார்ந்து கொள்வோம். படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் ஒரு வில்லன் வருவான் - டிவியில் அல்ல - அதற்கு வெளியே.ஆசிரியரால் பணிக்கப்பட்ட உளவாளி சிறுவன். அவன் பணி யார்யாரெல்லாம் டிவி பார்க்கிறார்கள் என்று பேர் குறித்துச் செல்வதுதான். அவனோ பேர் எழுதுகிறேன் பேர்வழி என கிட்டத்தட்ட முக்கால்படம் பார்த்துவிட்டுத்தான் செல்வான். டிவிக்கள் ஆதிக்கம் எல்லார் வீட்டினுள்ளும் நுழையும் வரை இந்த பேரெழுதும் படலம் தொடர்ந்தது அப்புறம் நின்று போனது.

வகுப்பைத் தாண்டியும் ஒரு ஆசிரியரின் கவனம் இருந்தது என்பதுதான் இதில் முக்கியம். ஆசிரியர் என்பது வெறும் பணி என்பதையும் மீறிய வாழ்க்கை முறையாக இருந்தது அப்போது. அதை தனது முழுமையான ஆளுமையாக கருதுவதால்தான் மாணவனிடமும் பள்ளியிடமும் அதீத ஈடுபாடு கொண்டிருந்தனர். அடித்தல் அடித்து துவைத்தல் போன்றவையெல்லாம் இது சார்ந்த வெளிப்பாடுகள்தான் என இப்போது புரிகிறது.

நான் படித்த ஒரு கிராமத்துப் பள்ளியில் பாடத்தைத் தவிர வேறு எது படித்தாலும் அடி உதைதான். அதிகம் போனால் செய்தித்தாளைப் புரட்டலாம். அந்தக் கிராமத்தில் அப்போது நானும் நண்பனும் மட்டும் ரகசியமாக காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒருமுறை ஆர்வமிகுதியில் நண்பன் இரண்டு காமிக்ஸ்களை நூல் அஞ்சலில் ஆர்டர் செய்து விட்டான் - எனக்கும் சேர்த்து. அந்த குக்கிராமத்திற்குள் முதன்முறையாக பழுப்பு நிற அட்டையால் மூடப்பட்டு இரண்டு காமிக்ஸ்கள் வருகை புரிந்தன. நண்பன் கவனமாக வீட்டு முகவரி எழுதியிருந்தும், அஞ்சல் நிலைய அதிகாரி சந்தேகத்தின் பேரில் பள்ளி தலைமையாசிரியருக்கு அதை சேர்ப்பித்துவிட்டார்.

கிராமத்தில் இணையான ரேங்கில் இருக்கும் தலைமையாசிரிருக்கும் அஞ்சல்அதிகாரிக்கும் இதுபோன்ற பரிவர்த்தனைகள் சாதாரணம். எப்படியாயினும் மாணவ ஒழுக்கமே முக்கியம் அவர்களுக்கு. தலைமையாசிரியர் பழுப்புநிற அட்டைகளைப் பிரித்தார். உள்ளே 'எமனுக்கு எமன்' என்ற தலைப்பிலான புத்தம்புதிய லயன் காமிக்ஸ் எனக்கும் நண்பனுக்குமாக சிவகாசியிலிருந்து வந்திருக்கிறது. முழுதையும் படித்துப் பார்க்கிறார். அது முழுக்க முழுக்க போர்ப் பின்னணி கொண்ட படக்கதை. அதில் பெண்களே கிடையாது - மொத்தமும் (ஆண்) ராணுவ வீரர்கள்தான். இப்படியொரு வீரமும் சாகசமும் கொண்ட ராணுவக் கதையென்பதால் நாங்கள் அடியிலிருந்து தப்பித்தோம் என்று நம்பியிருந்தோம். ஆனால் பாருங்கள் ராணுவம் எங்களிருவரையும் ஏமாற்றி விட்டது - ஒரேயொரு இடத்தில் ஒரு பெண்மணி ராணுவ வீரர்களுக்கு காப்பி பரிமாறுவார். காமிக்ஸின் அந்த சிறிய படத்தில் அப்பெண்ணின் படமும் அருகே ஒரு வசனமும் இருக்கும்: 'என் மனைவி ஏஞ்சலா உங்களுக்கு காப்பி பரிமாறுவார்' அவ்வளவுதான். அதற்கப்புறம் காப்பி குடித்த ராணுவ வீரர்கள் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு சுடப் போய்விடுவார்கள்.

தலைமையாசிரியர் எங்கள் இருவரையும் அவர் அலுவலகத்திற்கு அழைத்தார். போனோம். 'வாங்க எமனுக்கு எமன்களா' என அழைத்து புத்தகங்களை கொடுத்துவிட்டார். அப்பாடா என்றிருந்தது. இருந்தும் கைகளை நீட்டச் சொல்லி பிரம்பால் ஆளுக்கொரு அடி கொடுத்தார். 'எமன்களா! பாடப்புத்தகம் படிக்காம என்ன காமிக்ஸ் வேண்டி கிடக்குது..? இதில மனைவி ஏஞ்சலா காப்பி பரிமாறுவாராம் காப்பி..' அப்போதிலிருந்து காமிக்ஸின் ராணுவ தோட்டாக்களையும் மீறி ஏஞ்சலாவின் காப்பியே இன்னும் நினைவிலேயே நிற்கிறது.

காமிஸ் புத்தகங்களை வாங்கிக் கொண்டுபின் அதை முழுதும் படித்தபின் நண்பன் சொன்னான். 'நல்லவேளை! எமனுக்கு எமனை ஆர்டர் பண்ணினோம்.. இதுவே புரட்சிப் பெண் ஷீலாவா இருந்திருந்தா நம்ம கதி என்னாயிருக்கும்?'

அவன் சந்தேகம் சரிதான். புரட்சிப்பெண் ஷீலாவில் முழுக்க முழுக்க ஷீலா கையில் வாளுடன் வருவார். அவரின் வாளை விட மிகவும் சிறிய மார்க்கச்சையும் அரைக்கச்சையும் அணிந்து புரட்சிகரமாக போர் புரிவார். அந்த காமிக்ஸ் மட்டும் தலைமையாசிரியர் வசம் சிக்கியிருந்தால் அவர் எங்க​ளை அடிக்கிற அடியில் காமிக்ஸின் புரட்சிப்பெண் ஷீலா சேலைக்கு மாறியிருப்பார்.

புன்னகையுடன் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

No comments: