Tuesday, March 9, 2010

பதின்ம வயதில் பட்டவை


என் பதின்மங்களின் காலண்டர் 1992 ஜனவரியில் துவங்கி 1998 ஜனவரி வரை.

1992: ​​​வெண்பாவும் ஒரு ​பெண்பாவும்

எல்லா வகுப்புகளிலும் ​பெண்கள் முதல் வரிசைப் ​பெஞ்சுகளில் இருப்பதன் காரணம்... ​பெண்களுக்குக் கிட்டப்பார்​வையாக இருக்க முடியாது.. அவர்கள் குட்டப்பா​வைகளாக இருப்பதால் என நினைக்கிறேன். எட்டாம் வகுப்பில் ​பெண்கள் ​பெஞ்ச் வரிசை முடிந்த இடத்தில் என் ​பெஞ்ச் ஆரம்பிக்கும். என் முன்னிருந்த ​பெஞ்சில் சுசீலா. ​அவள் ஓரவிழிப் பார்​​வை தடவும் பனியில் எப்போதும் சில்லிட்டிருந்தது மனசு.

எட்டாம் வகுப்பில் த​லை​மை ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அலாதி. ஒருநாள் தமிழ் இலக்கண வகுப்பில் 'சோறு தின்னும் வாழ்​வே சுகம்' என்று கரும்பல​கையில் எழுதி, இ​ப்படி முடியுமாறு ஒரு ​வெண்பா எழுதுங்கள் என்றார். ​

ஏ​தோ தீர்மானித்தவன் ​போல இலக்கண இலக்கற்று இலக்கணப் புத்தகத்தின் ​வெண்பரப்பில் கிறுக்கினேன்.

​பேறு ​பெற நி​​னைத்துப் ​பெரும் ​பொய்​ ​பேசி
ஊறு பல உ​ரைத்து எங்கும் உண்​மை ம​றைத்து
நாறும் சாக்க​டை​யென வாழினும் - பிச்​சைச்
​சோறு தின்னும் வாழ்​​வே சுகம்.

என்று.

சுசீலா கிறுக்க​லைக் கவனித்து விட்டாள். ஆசிரியரிடம் படிச்சுக் காட்​டேன் என்பதாக சமிக்​ஞை ​செய்தாள். நா​னோ முகுதுப்பரப்பு​​மேல் கவனம் ​கொண்டு கம்​மென்று இருந்துவிட்​டேன். ​மென்மையாக தலையிலடித்துக் ​கொண்டாள். சுசீலாக்கள் இப்படித்தான் எளிதில் சித்திரமாகி விடுகிறார்கள்.

1993-94: சவுக்கு மரங்கள்

ஒன்பதும் பத்தும் படித்த காலம்.

Seekக்கு past tense, seeked என்று ​சொன்னதற்காக ​​மொத்த வகுப்பும் பிரம்படி பட்டது. முதல் அடி எனக்​கே எனக்கு.

9ம் வகுப்பிலிருந்து ராதா​வோடு ஒரு செல்லச் சி​னேகம் இயல்பாகியிருந்தது. அப்​போ​தெல்லாம் R. K. ​ஜெகநாதன் என்​றே எழுதி வந்​தேன். பத்தாம் வகுப்பு ரிஸல்ட் அன்று அ​னைவரும் தளும்பியிருந்​தோம். அப்பா என்​னை ​அ​ழைத்து வந்திருந்தார். ​பெண்க​ளைப் பார்த்து நானும் என் எண்க​ளைப் பார்த்து அப்பாவும் சம அளவில் துயர் ​கொண்டிருந்​தோம். நண்பர்கள் ​பேசிக்​கொண்டிருந்​தோம். சட்​டென்று என் முன் ஒரு வளைக்கரம் சாக்​லேட்​டை நீட்டியது. ராதா!

நண்பர்கள் நமுட்டாய் சிரித்தார்கள். நான் சாக்​லேட்​டைக் ​கைப்பற்றாமல் 'எனக்கு மட்டும்தானா? இவங்களுக்கு இல்லியா?' என்​றேன். 'உனக்கு மட்டும்தான் எடுத்தாந்​தேன்' என்று ​கையில் திணித்தாள்.

அப்பாவின் ​சைக்கிளில் வீடு திரும்பி​​னோம். காரியரில் ​தே​மே என்று உட்கார்ந்திருந்​தேன். என் எதிர்காலப் பாரத்​தையும் ​சேர்த்து அப்பா அப்​போது மிதித்துக் ​கொண்டிருப்பதாகப் பட்டது. பள்ளி காம்பவுண்ட் அரு​கே சவுக்கு மரங்கள் இ​டை​வெளியில் ராதா பார்த்துச் சிரித்து ​கைய​சைப்பது ​தெரிந்தது. ​​பயத்தில் மூட்டுக்கள் விலகிய சவுக்கு குச்சியிலை ​போல ​கையசைத்தேன்.

1995-97: அடிவாரத்தில் அ​லையும் கால்கள்

அருள்மிகு பழனியாண்டர் ​பாலி​டெக்னிக் ஃபார் ​மென்... என்பது ​பெண்கள் இல்லாத பாழ்​வெளியில் பால்​டெக்னிக்க​ளை கற்றுக்​கொள்வதும் ​பெற்றுக்​கொள்வதும். ஹாஸ்டல் வாசம் இனி​தே ராகிங்குடன் துவங்கியது. சீனியர் முதலில் என்னிடம் ​கேட்டக் ​கேள்வி: நக்கத் ​தெரியுமா?

சு​ரேசு.. முதலாமாண்டு அந்நியமாய் இருந்தான். படிப்பில் ​​கெட்டி. அவனூர் மானூர். பக்கத்து வீட்டுப் ​பெண் காதலால் சமயங்களில் ​சொந்த வீட்டில் உணவு மறுக்கப் பட்டான். ஹாஸ்டலில் என் உண​வை பங்கிட்டுக் ​கொள்வான். சாயுங்காலங்களில் பழனிம​லை அடிவாரத்துக்கு ​செல்வோம். மலை​யேறுவது கிடையாது. ​அடிவார பக்தைகள் கூட்டங்களில் சு​ரேசு ​செய்து காண்பித்த சாகசங்கள் எழுத்திலடங்காது. ஒருமு​றை நரிக்குறவப் ​பெண் எங்களை வள்ளுவர் தி​யேட்டரிலிருந்து அ​ரை கி​மீ வ​​ரை துரத்தினாள். சிக்கியிருந்தால் இந்​நேரம் நரிப்பல் விற்றுக் ​கொண்டிருந்திருப்​போம்.

​ம​லையடிவாரத்தில் அருள்மிகு பெண்கள் பாலி​டெக்னிக்கும் சின்னக்கலையம்புதூர் அருள்மிகு மகளிர் க​லைக் கல்லூரியும் மயில்களாய் நிரம்பியிருந்தன. கந்தன் கரு​ணையால் இனி​தே திருவிளையாடல்களும் நிகழ்ந்தன. புஷ்பா மகளிர் கலைக்கல்லூரியில் வரலாறு படித்தாள். பஸ் விட்டு பஸ் தாண்டுதல், ​​​பாட்டிக்கு சீட், நாய்க்கு பிஸ்கட், வாய்க்கு சிக​ரெட் என்று விதவிதமாய் முயற்சித்து ஒருவழியாய்.... பானிபட் ​போரில் ​தோற்றேன். புஷ்பா என்று சிக​ரெட்டில் ​எழுதி புகைத்ததோடு அ​ணைந்தது ஒரு வரலாற்றுக் காதல்.

1998: ​​கோ​வைக் கால காற்​றே..

​கோ​வையில் ​வே​லை. ​லேத், மில்லிங் மிஷின், கி​​ரைண்டிங் மிஷின், டிரிலிங் மிஷின்களைக் கூவாமல் விற்கும் உத்​யோகம். டாக்டர் நஞ்சப்பா ​ரோட்டுக்கு அரு​கே​யே வாட​கை வீட்டில் தங்கியிருந்​தேன். ஏற்கன​வே அதில் அறிவழகன் ஒருவர் வசித்து வந்தார். 5 ஸ்டார் ஓட்டலில் உத்யோகம். சுவாரஸியமான ஆள். காப்​மேயர், உதயமூர்த்தி ​போன்ற சுயமுன்​னேற்ற புத்தக வாசகர். தன்​பெய​ரை ஒரு டயரில் தினமும் 50-100 தட​வை எழுதுவார். ​கேட்டதற்கு பவர் வரும் என்றார். அவருக்கு மரபுசாரா எரிசக்தியில் நல்ல எதிர்காலம் இருக்கும் என யூகித்​தேன்.

நீள அகலங்க​ளை கணக்கில் ​கொண்டு.. இ​தோடு நிறுத்தப்படுகிறுது.

எழுதப் பணித்த மாப்ள 'சி​நேகிதன் அக்பரின்' அன்புக்கு நன்றி!

34 comments:

சங்கர் said...

அநியாயமா இப்படி பாதில நிறுத்திட்டீங்களே,

ஆமா, Seek க்கு Past tense என்ன?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்
ஜெகன்
வாழ்த்துக்கள்

thamizhparavai said...

super...

வினோத் கெளதம் said...

தல எல்லா 'பால்'லயும் சிக்ஸர் அடிச்சிங்கனா எந்த 'ஷாட் ' நல்ல 'ஷாட்'ன்னு எப்படி சொல்லுறது..
கலக்கிட்டிங்க..மனதுக்கு மிகவும் நெருக்கமான கட்டுரை..இன்னும் கொஞ்சம் எழுதிருக்கலாம்...

பத்மநாபன் said...

அருமை ... எங்களின் '' அலைகள் ஓய்வதில்லை '' காலத்தை ஞாபக படுத்திவிட்டீர்கள் .. அதேபோல் catch க்கு catched என்று சொல்லி கொட்டு வாங்கிய வெள்ளந்தியான காலம் .......... நினைவடுக்கில் வசந்த பதிவு ... நன்றியும் வாழ்த்தும் .

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டீர்கள் ஜெகா,

அந்த பசுமைமிக்க நினைவுகள் எப்போதும் நம்மைவிட்டு மாறாது. ஆமா சைட்டுல கலக்கிட்டீங்க.. கலக்கல் ஜெகா.

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ் உங்க கதையில என்னைப்பொருத்திப்பார்த்தாலும் பொருந்துது (வருடம் முதற்கொண்டு ) எல்லோருக்கும் அதே மாதிரியான்னு தெரியலை.

அருமை மாம்ஸ் வாழ்க்கை விளையாடியதை வார்த்தையில் விளையாடி இருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்து நடைக்கு நான் ரசிகன்னு நினைச்சா, இங்கே வந்த பின்னூட்டங்களை பார்த்த பிறகு நான் மட்டும் இல்லைன்னு தெரியுது.

ஆனா பாதியிலேயே என்ட் கார்ட் போட்டா எப்படி? அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

அழைப்பை ஏற்று தொடர்ந்ததற்கு நன்றி மாம்ஸ்.

நினைவலைகளை பகிர்ந்து. அருமையான வாசிப்பனுபவத்தை தந்ததற்கு நன்றி.

ஆமா, Seek க்கு Past tense என்ன? எனக்கும் அதே டவுட்தான் சங்கர்.

நேசமித்ரன் said...

மொழிக்காக முத்தங்கள் விதைக்க சுசிலாக்கள் ராதாக்கள் புஷ்பாக்கள் உலவி மேவும் கனவுகள்வரக் கடவது

பா’ சுகம்

Anonymous said...

//ஏற்கன​வே அதில் அறிவழகன் ஒருவர் வசித்து வந்தார்//

நீங்க கூட கொஞ்ச நாள் இருந்திருக்கீங்களே. அப்பக்கூட அவர் திருந்தலையா. :)
நல்ல வித்தியாசமா எழுதியிருக்கீங்க

adhiran said...

exelent nerration jegan. you gave a novel in a nutshell. let it grow as a novel.

ஷங்கி said...

யோவ்! புகுந்து விளையாடியிருக்கீரு!
கிட்டப்பாவையின் ஓர விழிப் பார்வையின் பனியா?!!
வெண்பா ”கன்”பா!
ஆனா ”பெண்பா”வா இருந்திருந்தா இன்னும் குஜாலா இருந்துருக்கும்! ஹிஹி!!

பனி விழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

ராதே என் ராதே
வா ராதே
வாராமல் ஆசை தீராதே

மலையோரம் மயிலு
விளையாடும் குயிலு
விளையாட்டைச் சொல்லித் தந்ததாரு?!!

மரபுசாரா எரிசக்தி?!! குசும்புய்யா உமக்கு!

தொடரை தொடர்ந்திருக்க வேண்டியதுதானே! இப்படி சுருக்குன்னு முடிச்சிட்டீரு!! பேட் பாய்!

பித்தனின் வாக்கு said...

அட பழனி ஆண்டவரா? நீங்க, எங்க அண்ணன் அங்கனதான் பி எஸ் சி கெமிஸ்ட்ரி படிச்சாப்புல. கொஞ்சம் பொய் உட்டிங்க பார்த்ததீங்களா? பங்குனி உத்திரத்தில கரகாட்டம் பார்த்தது, கூட்டத்தில குசால் பண்ணது எல்லாம் சொல்லவேயில்லை.
நல்ல நினைவுகள், நல்ல பதிவு. நான் பக்கத்துல்ல 32 கி மீ தாராபுரம்தான் சொந்த ஊர்.

இரும்புத்திரை said...

உங்க கூட டூ,த்ரீ,ஃபோர்

பாலா said...

அடடா அவ்ளோதானா? enna அண்ணே நீங்க ?
rompa suvaarasyam

Nathanjagk said...

சங்கர் - It's sought தல!

நன்றி தமிழ்பற​வை

வாங்க வினூ.. ஆதுரமா இருக்கு..! நன்றி!

அன்பு பத்மநாபன்..நல்லா பதின்ம நினைவுக​ளை catched பண்ணிட்டீங்க ​போல.. :)) நன்றி!

இனிய ஸ்டார்ஜன்.. மிக்க மகிழ்ச்சி

அன்பு மாப்ள அக்பர்.. பதின்ம நினைவுகளை நிதானமா ​கொஞ்சம் ​கொஞ்சமா பகிரு​வோம்.. பிகரு​வோம்! அதுக்குத்தா​னே பிளாக்!

இனிய ​நேசா... ​ரொம்ப மகிழ்ச்சி..
இது நதி ​மேல் நகரும் பற​வையின் நிழல் ​போல ஈரம் படாமல் கடக்கிறது.

அன்பு சின்னஅம்மிணி..
அவரும் திருந்த​லே.. நானும் திருந்த​லே..!

வாங்க ஆதிரன்.. ​நாவலா..? ​டேங்கப்பா... நன்றி மகி!

Nathanjagk said...

அன்பு சங்காண்ணன்,

மெட்டுக்குப் பாட்டுங்கிற மாதிரி, இடுகைக்கு இசையா? ​நீங்கள் ​தொடுத்த பாமாலை, நினைவுகளின் காமாலையா இருக்குங்ணா!

உங்களுடைய பதின்ம இடுகையை எதிர்பார்த்து என்னுள்ளே பாசக்காரப் பயலுக பாசறை - ​மே/பா ராசாக்காபாளையம் கிளை.

Nathanjagk said...

அன்பு பித்தன்..
நானும் தாராபுரம்தானுங்கோகோவ்.
பழனிமலையில பண்ணின அக்குறும்புகளைச்​சொல்றதா? ஸாரி.. ஐம் நாட் எ ஃபேன் ஆப் கேப்பக்களி..!

Nathanjagk said...

என்னங்க அரவிந்து..
இப்படி ​கோவிச்சுக்கிட்டீங்க?

தொடர்பதிவுக்கு கூப்பிடாததால் ​கோவமா? (நாமதான் யாரையுமே கூப்பிடறதில்லேயே (கூப்பிட்டா மட்டும் யாரு கண்டுக்கப் போறா?))

நீங்கதான் ஏற்கனவே ஒரு அழகிய​தொடரா உங்க பதின்ம நினைவுகளை எழுதியிருக்கீங்களே?

Nathanjagk said...

அன்பு பாலா,
மிக்க நன்றி!!

Ananya Mahadevan said...

//சுசீலாக்கள் இப்படித்தான் எளிதில் சித்திரமாகி விடுகிறார்கள்.//
//நான் பெண்களையும், அப்பா என் எண்களையும் பார்த்து துயர் கொண்டார்//

மிகவும் ரசித்தேன். அருமையான எழுத்து நடை.வாழ்த்துக்கள். :)

கலா said...

வெண்பாவும் ஒரு பெண்பாவும்\\\
பெண் பா சரியாகத்தான் இதற்கு சுசிலா
என்ற பெயரும்....
அப்பப்பா....ஓவியர் என்பதை ஒட்டுமொத்தமாய்
இடுகை சொல்கிறது ரவிவர்மரின் சொந்தமா?
“சித்திரங்களை” இவ்வளவு சிரத்தையுடன்
“ஜெக’’ சிப்பியால்தான் சித்தரிக்க முடியும்
நீங்கள் நடந்து கொண்டவைகளை நான் என்
கற்பனையில் பார்தேன் சிரிப்பையடக்க
முடியவில்ல...
மிக்க நன்றி உங்கள் சில பக்கங்களை எங்களுக்காகப்
புரட்டியதற்கு!!

Shanmugam Rajamanickam said...

அண்ணா நான் இப்பதான் பதின்ம வயதில் இருக்கேன்,
காதல் வந்து, காமம் தந்து ஒரே ரணகலமாகி இருக்கேன்.
சரியா இடுகை கூட எழுத முடியல.
என்னமோ தெரியல மத்த பிளாகர்ஸ் எழுத பதிவுகளை விட
நீங்க மொக்கையே போட்டாலும் உங்கள் பதிவுக்குத்தான் என் மனம் முக்கித்துவம் தங்கி படிக்கிறேன் என்கிறது.
சரி இந்த வயசுல இப்படித்தான் இருக்கும்.
நானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் மனசில் இருப்பதை டைப் அடிச்சி ஒரு பதிவ போட்டாத்தான் என் மனசுக்கு மகிழ்ச்சியும் தெளிவும் கிடைக்கும்.
சரிங்கண்ணா என் மனசு ஒரே நிலைல நிக்கமாட்டேங்குது.
வலைப்பதிவு தலைப்பு மாத்துறதும், ஃபுராபைல் போட்டோவும் திருப்தியே தரமாட்டேங்குது.
அதான் பொழம்பிட்டேன்.
ஓகே குட் நைட்.
எனக்கு ஏதாவது பதில் கமெண்ட் எழுதியிருக்கிங்கலானு மறுபடி வந்து பாக்குறேன்.

Shanmugam Rajamanickam said...

என் புழம்பளில் உங்கள் இடுகை பற்றி சொல்ல மறந்துட்டேன்.
சூப்பர்...:)

Starjan (ஸ்டார்ஜன்) said...

மாப்ள ஜெகா, உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். தொடர்ந்து எழுதி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

எனக்கு பிடித்த 10 பெண்கள்

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

விஜய் said...

வசீகரிக்கும் ருசிகர எழுத்து நடை உங்களது.

அதிகம் எழுத வேண்டுகிறேன்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கவிதன் said...

பதிவின் இறுதி வரி வரை ஒரு புன்னகை நாய்க்குட்டியாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது ஜெகநாதன் ...... மிகவும் ரசித்தேன் ... ! அருமை~~~

ஸ்ரீராம். said...

அழகாக எழுதி இருக்கிறீர்கள். 'எங்களுடன்' இணைந்தமைக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

மிக அழகாய் அற்புதமாய் பழைய நினைவுகள் சூப்பர்.

ஒரேகாலம்.

இரசிகை said...

naanum ippadiththaan vaguppu vakuppa yezhuthittu irukken........!

Nathanjagk said...

அன்பு அநன்யா...
பெண்கள் ஓவியமாகிறர்கள்.. காதலிகள் ஓபியமாகிறார்கள்..!! நன்றி!

*

அன்பிற்கினிய கலா,
மெத்த மகிழ்ச்சி! பாராட்டுக்கு நன்றிகள். ஜெகசிப்பி.... மொழி வி​ளையாடுதே! சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்.. பிளாக் எழுதுவது நல்லப்பழக்கம்.. ​ஸோ.. நீங்களும் எழுதுங்களேன்!

*

அன்பு சம்முவம்,
இதமா இருக்குய்யா நீங்க எழுதியிருக்கிறது!
இப்படி மனசுக்கு பக்கமா பேசற மாதிரி எழுதுங்க; சுத்தி நடக்கிறதை உங்க கணிப்பில விமர்சியுங்க.. நீங்கதான் எழுத்து ராஜா.. புரொபைல்லாவது போட்டோவாவது - எழுத்து சிநேகத்துக்கு உருவம் ​தேவையில்லப்பு! ஆல் தி ​பெஸ்ட் தம்பி!

Nathanjagk said...

நன்றி ஸ்டார்ஜன் மாம்ஸ்..
ஹும்.. எல்லார்க்கும் இவ்ளோ லேட்டா ரிப்ளை ​கொடுக்கிறேன். தப்பா எடுத்துக்காதீங்க தீவிர அதி தீவிர ரசிகப் பெருமக்களே!

Nathanjagk said...

அன்பு விஜய்,
மிக்க நன்றி..! எந்த பிளாக் என்றாலும் விஜய்யின் கமண்டுகளைப் படிக்காமல் விடுவதில்லை.
சிலசமயம் இடுகைகள் சிறப்புறுவது கமண்டுகளால்தான்.

*

கவிதன்
அதெல்லாம் சரி.. இன்னும் புதுப்பதிவு போடமலே இருக்கீங்களே? அடுத்தப் பதிவு ஸ்ரெயிட்டா ​வெள்ளித்திரைதான்னு முடிவு பண்ணிட்டீங்களோ :)) நன்றி நண்ப!

*

ஸ்ரீராம்,
அன்பு ஸ்ரீ நன்றி! எங்கள் ப்ளாக்கை அறிமுகப்படுத்திய கல்யாண்ஜி-க்கு நன்றிகள்! ஆனாலும் ரொம்பத்தான் காய்ச்சறீங்கப்பா அங்கே!

*

அன்பு(டன்) மலிக்கா
அன்பை டன் கணக்கில் வைத்திருக்கும் உங்களுக்கு நானும் நன்றியு-டன்!

*

அன்பு இரசிகை,

வகுப்பில் எழுதறதுதானே முறை :))

நானும் இதே 8ம் வகுப்பு சுசீலாவும் வகுப்பறையில் அமர்ந்திருந்த சாயங்காலம். சுசீலா எனக்கு முன் ​பெஞ்ச். புத்தகத்தின் வெண்பகுதியில் I என்று மட்டும் எழுதிக்காட்டினேன். அதைக் கவனித்தவள்​பெஞ்சில் விரலால் தந்தி அடிப்பவர் போல தட்டி மேற்கொண்டு என்ன என்று ​கேட்டாள். Love you என்று எழுதிக்காண்பித்தேன். சுசீலா கன்னங்களில் ரோஜாக்கள்!!
ஆனால் பாருங்கள்.. அது என் நண்பன் புத்தகம்... பார்த்த மறுகணம்... I Love you ​மேல் ​மைப்பூசி அழித்துவிட்டான் :))

ஒரு உண்மை: அவள் ​பெயர் உண்மையில் சுசீலா அல்ல. சித்திரமாவதே அவள் பெயர்!

மாதேவி said...

உங்கள் "குட்டப்பாவை" தோழிகள் ரசித்தேன்.

Nathanjagk said...

நன்றி மாதேவி!
கிட்டப்பார்வைக்கு எதுகையாக குட்டப்பாவை வந்துவிட்டது..!
மற்றபடி பெண்களின் ஓரவிழிப்பார்வைக்கு என்றுமே நான் விசிறி :)))