ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?
ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?
உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?
இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.
ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.
முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.
ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?
0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்குவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்செல்லமுடியும். டூர் கிளம்பும்போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறோம்..??
சொல்றேன்.
அநன்யா மஹாதேவன் நம்மிடம் பிடித்த பாடகர்கள் ஐவரை எழுதப்பணித்திருக்கிறார். அதுதான் நாம், நம் ஸ்ஸ்டைலில் கிர்ர்ரடித்துக் கொண்டிருக்கிறோம். போதும் வெளாட்டு; ஆளைக் காமி, நாங்க கிளம்பணும் என்பவர்களுக்காக...
எனக்குப் பிடித்த பாடகர்கள்:
1. கீதா தத்:
ஒரு பெங்காலி. இவரது அசாதாரண வாழ்க்கை முறையே என்னை ஈர்த்தது எனலாம். 1930ல் கிழக்கு வங்காளத்தில் பிறந்த கீதா ராய், பம்பாய்க்கு குடிபெயர்ந்து பின் எஸ்.டி.பர்மன் மூலம் இந்தி திரையிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பின்னர் புகழ்பெற்ற இயக்குனர்-நடிகர் குரு தத் படத்தில் (Baazi) பாடும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணமும் ஆனது.
கீதா ராய், கீதா தத் ஆனார்.
கீதா தத் பாடலை நீங்கள் முதலில் கேட்கும்போது அது உங்களைப் பெரிதும் கவரவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கீதாவின் குரல் கவர்ச்சி மிக்கதாக தோணாது. ஆனால், பாடலுடன் அந்தக் குரல் பயணிக்கும் விதம் நம்மை கொள்ளைக் கொள்ளும். நம் காதுகளுக்கு கீதாவின் பிளாக்-அன்ட்-ஒயிட் குரல் தொன்மையானதாகத் தோன்றும். அதில் ஒரு அமானுட வசீகரம் அக்குரலின் பயணத்தில் சிக்கும். Babuji dheere chalna என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு இப்பாடலில் ஏதாவது வித்யாசம் நிரடினால் உங்களுக்கு கீதாவைப் பிடிக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் Pyaasa படத்தில் வரும் Jane Kya Tune Kahi பாடலைக் கேளுங்கள்.
பொதுவாக 1950-களில் ஹிந்தி சினிமாவில் பிரபலாமான சிஜடி வகைப் படங்களின் Jazzy வகை பாடல்கள் (Ankhon Mein Tum Dil Mein Tum Ho ஒரு உதாரணம்), பஜன்கள், விரகதாபப் பாடல்கள் மற்றும் சோகமயப் பாடல்கள் (விசும்பி விசும்பி அழுதுகொண்டே பாடுவது) இவற்றுக்குப் பொருத்தமாக இருந்தது கீதாவின் குரல்.
லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகு கீதா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். லதா தேர்ந்த சாஸ்திரீய ஞானமும், பலதரப்பட்ட பயிற்சியும் கொண்டவர். சிறுவயதிலிருந்தே பாடகியாக இசைக்காகவே வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் எவ்வித இசைப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்த கீதா 2ம் இடத்துக்கு வந்ததும் நியாயமே. இருந்தும் லதா மங்கேஷ்கருக்கு கீதா மேல் ஒரு பயம் இருந்துகொண்டே இருந்தது.
கீதாவின் குரலின் இழுவிசை சாஸ்திரீய ஜாலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருந்தும் இசையமைப்பாளர்களால் சோகப்பாடல்கள் பாடுவதற்காக விதிக்கப் பட்ட குரலாக அது மாற்றப்பட்டது. Aayega aanewala பாடல் இவ்வகையே. சோகப்பாடல்கள் கீதாவை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டன எனலாம். சோகமயமாக அவரின் இயல்பு வாழ்க்கையும் மாறியது.
கீதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை - வஹீதா ரஹ்மானால். புகழ்பெற்ற ஹிந்தி நடிகை (செங்கல்பட்டுக்காரர்). வஹீதாவுக்கும் குரு தத்-க்கும் காதல் மலர்ந்தது. கீதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் குரு. குருவின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் வஹீதா. பாருங்கள்.. திரையில் வஹீதா வாயசைக்கும் பாடல்களை கீதாவே பின்னணியில் பாடவேண்டியிருந்தது. காகஸ் கீ பூல் இந்த பின்னணி நாடகத்திற்கு ஒரு உதாரணம்.
இரு பெண்களின் காதல்களுக்கிடையே ஊசலாடிய குருதத் பின் தற்கொலை செய்து கொண்டார். கீதா குடிக்கு அடிமையானார். மீளாப்பயணமாக அது அமைந்தது. பணச்சிக்கல்பொருட்டு ஒரு பெங்காலிப் படத்தில் கதாநாயகியாகக் கூட நடித்தார். எதுவும் குருதத் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. சிந்து பைரவி சிவக்குமார் மாதிரி மிதமிஞ்சிய குடிபோதையில்மேடையிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது சரிந்தும் விழுந்திருக்கிறார். தன்னை அழித்துக்கொள்ளும் முனைப்பு கொண்டவர் போல் குடிக்க ஆரம்பித்தார். ஈரல் பாதிக்கப்பட்டு, 1972 ஜூலை 20 அன்று கீதா தத் மறைந்தார்.
ஷாஜி எழுதியசொல்லில் அடங்காத இசை புத்தகம் கீதா தத்தை அறிமுகப்படுத்தியது. காதில் விழும் கீதாவின் குரல் கறுப்பு-வெள்ளைப் பின்னணியில் பழைய காலத்துத் தெரு, பூங்கா, மாதர்கள், மெளனமாக ஊறும் மங்கலான மாலைப் பொழுது என என்னை காலங் கடத்துகிறது.
2. மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்
எம். எஸ். விஸ்வநாதன் படைப்பாற்றல் மிக்க பாடகராக எனக்குத் தோன்றுகிறார். நல்ல பாடகரின் தரம் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் புதிதாக பாடி உருவாக்க வேண்டும். சமரசம் அற்ற தனித்த குரலாக இருக்க வேண்டும். எம்எஸ்வி அப்படித்தான். அவரின் பாடகர் அவதாரம் மிகத்தனித்துவமானது. பிரம்மாண்டமானது.
எனக்கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ) என்ற படப்பாடலில் எஸ். பி. பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடியிருப்பார். ஒரே வரிகளை பாடுவதில் எம்எஸ்விக்கும் பாலாவுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிக்கலாம். இயக்குநர் சரணின் முதல்படமான 'காதல் மன்னனில்' எம்எஸ்வி நடித்திருப்பார். அதில் இதேப் பாடலை அவர் ஒரு காட்சியில் பாடும் போது அசாதாரண மாற்றங்களோடு இருக்கும். ஏனென்றால் எம்எஸ்வி ஒரு படைப்பாளி. ஒரு மெட்டை உருவாக்கும் படைப்பூக்கம் அப்படியே பாடலைப் பாடுவதிலும் கொண்டுவருகிறார்.
பார் மகளே பார் (பார் மகளே பார்), ஜகமே மந்திரம்.. சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்)
யார் அந்த நிலவு (சாந்தி), நீ நினைத்தால் இந்நேரத்திலே (நிலவே நீ சாட்சி), சொல்லத்தான் நினைக்கிறேன் (சொல்லத்தான் நினைக்கிறேன்) , கண்டதைச் சொல்கிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள்) போன்ற பழைய பாடல்களில் அவரின் பாடு-வளமை வேறு யாராலும் தொடரமுடியாத ஒன்று.
டி.எம். செளந்தர்ராஜன் 'யார் அந்த நிலவு' பாடலை எம்எஸ்வி பாடிக்காட்டியபோது பயந்துவிட்டேன் என்றிருக்கிறார்... பி.பி.ஸ்ரீனிவாஸ் - அவர் பாடியதில் பத்து சதவீதத்தை மட்டும் தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது... பி. சுசீலா - எந்த ஒரு பாடகருமே எம்எஸ்வி பாடிக்காட்டிய அளவுக்கு அவருடைய மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை. எம்எஸ்வி பாடிக் காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறார்... வாணி ஜெயராம் - எம்எஸ்வி பாடும்போது வரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது... என்கிறது ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை.
ஆலால கண்டா (சங்கமம் - ஏ. ஆர். ரஹ்மான்) என் விருப்பப் பாடல்களில் ஒன்று. அதன் உச்ச ஸ்தாயி ஆலாபனைகளும் ஜதியும் அம்மெட்டை பிரம்மாண்டமாக ஆக்கிக் காட்டுக்கின்றன.
மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு (காதல் மன்னன் - பரத்வாஜ்), விடைகொடு எங்கள் நாடே கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ. ஆர். ரஹ்மான்) என அவரின் சமீபத்திய பாடல்களும் வேறொருவர் இசையமைத்த பாடல்களையும் தன் சொந்த படைப்பாற்றலால் வேறு பரிமாணத்தில் அளித்திருப்பார் எம்எஸ்வி.
எம். எஸ். வி முடிவில்லாத படைப்பாற்றல் மிக்க பாடகர்.
....
அநன்யா ஐம்பாடகர்களைக் குறிப்பிட வேண்டும் என்றிருக்கிறார். மேற்கத்திய இசையில், நம் மரபிசையில் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமைகள் நிறையபேர் உள்ளனர். ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பட்டியலாகத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் நிலையாக மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அல்லது பாடல் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நித்யஸ்ரீ-யின் செளக்யமா கண்ணே செளக்யமா-வை 4 மணிநேரங்கள் தொடர்ச்சியாகக் கேட்டதுண்டு. ஆனால் அவர் பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது.
இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))