Wednesday, January 22, 2014

காமிக்ஸ் இல்லாத தமிழ் இலக்கிய உலகம்..!


37வது சென்னை புத்தக கண்காட்சி.. ஒரு சனிக்கிழமை சென்று 20 புத்தகங்கள் போல அள்ளிவந்தேன். இலக்கியம், எலக்கியம், தீவிர இலக்கியம், பிக்ஷன், நான்-பிக்ஷன், நீயும் பிக்ஷன் என ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் போல.

ஆண்களைவிட பெண்கள், குழந்தைகள் அதிகம் வந்திருந்தது போலிருந்தது. எனக்கு இதுவே முதல் செ.பு.க விஜயம். மொத்தம் 777 கடைகள்... அதைவிடுங்கள்.. இத்தனை புத்தக சங்கமத்தில் ஒரேயொரு தமிழ் காமிக்ஸ் கடை மட்டுமே இருந்தது.. முத்து காமிக்ஸ். பால்யத்தை மீட்கும் செயலாக சில காமிக்ஸ்கள் வாங்கினேன். முன்னை விட அழகான வடிவமைப்பில், பெரிய அளவில் அச்சிடப்பட்ட படக்கதைகள். முத்து-லயன் காமிக்ஸுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.. இன்னும் 80களில் வந்த அதே ஹீரோக்கள் இன்றைய மறுபதிப்பிலும். அங்கங்கு கடைகளில் அமர் சித்திர கதா நூல்கள் இருந்தாலும் அவைகள் கதை மற்றும் தொழில்நுட்ப அளவில் ஈர்க்கவில்லை.

மேலும் இன்னும் நம் சித்திரக்கதை உலகம் வெளிநாட்டுகளிலிருந்துதான் சரக்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. நமக்கென தனி ஹீரோ, கதை சொல்லும் பாணி, ஓவியம் மற்றும் தொழில்நுட்பம் இல்லை எனலாம். அமர் சித்திர கதா இந்த அளவில் நன்கு செயல்பட்டு வருகிறது.. பிரதாப முதலியார் சரிதம், சீவக சிந்தாமணி போன்ற இலக்கிய வகைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.

தமிழ் காமிக் உலகம் மிகவும் பின்தள்ளியிருக்கிறதோ என தோன்றுகிறது.. சிறுவர்களிடம் இலக்கிய வாசிப்பை அறிமுகப்படுத்தும் மிக முக்கிய கருவியாக காமிக்ஸ் இருக்கின்றன. காமிக்ஸ்கள் சீரான கதியில் ஒரு வாசகனை தேர்ந்த இலக்கிய வாசிப்புக்கு நகர்த்துகிறது.

மார்வல் மற்றும் டிஸி காமிக்குளின் ஆதிக்கம் ஹாலிவுட்டில் மிக அதிகம். காமிக் ஹீரோக்களின் மிகச்சிறந்த இரசிகன் ஹாலிவுட் எனலாம்.சூப்பர் மேன் முதல் பார்ப் வயர் வரை.. தமிழில் பிதிக்கப்படும் காமிக்ஸ்கள் மிகச் சொற்பம். நம் பாடத்திட்டங்களிலும் படக்கதைகளுக்கு இடமில்லை. பத்திரிக்கைளிலோ அல்லது வாராந்திர இதழ்களிலோ மிகக் குறைந்த சதவீதத்தில் தான் - அதுவும் துணுக்குகளாக மட்டுமே - பிரசுரிக்கப் படுகின்றன. சித்திரக்கதைகள் என்ற உலகம் பற்றி அறியாமலேயே ஒரு தலைமுறை மெதுவாக தாய்மொழி இலக்கியத்தை வாசிக்கும் பழக்கத்தை இழக்கிறதோ?

சிறுவர்கள் ஹாலிவுட் படங்களிலும் கார்ட்டூன் சேனல்களில் மட்டுமே தங்கள் சாகஸ ஹீரோக்களை கண்டு ஆறுதலடைகிறார்கள் என தோன்றுகிறது.

4 comments:

மலரின் நினைவுகள் said...

ஸ்பைடர் மேனும், இரும்புக் கை மாயாவியும், ஜேம்ஸ் பான்டும் பல வருடங்களைக் கடந்தும் இன்னும் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறுவர்களின் ஆட்டம் என்றோ ஆரம்பித்து விட்டது... ஆட்டிசம் வளர்கிறது கொடுமை...

Nathanjagk said...

அன்பு மலர்வண்ணன்..
இரும்புக்கை மாயாவி, டெக்ஸ்வில்லர், 007, ப்ருனோ ப்ரேஸில், ஸ்பைடர் என சிறுவயது காமிக்ஸ் நினைவுகளை எப்போதும் நம்மைவிட்டு அகலாதவைகள்... மனித மனம் இயல்பாகவே ஓவியங்களிடம் அதீத ஈர்ப்பு கொண்டதாய் இருக்கிறது. ஓவியக்காட்சியாக மனதில் பதியும் எதுவும் எளிதில் மறப்பதில்லை.. வருகைக்கு நன்றி!

Nathanjagk said...

அன்பு தனபாலன்...
உண்மைதான்.. ஆட்டிஸத்தை நாம் வேறொரு பார்வையில் ஆராயவும் வேண்டியுள்ளது.. காமிக்ஸ் மூலமாக இளம்பிராயத்தினரிடம் இயல்பூக்கமுள்ள இலக்கிய வாசிப்பு ஏற்படுகிறது.. மொழிவளர்ச்சிக்கும் நவீன இலக்கியச் சிந்தனைகளும் காமிக்ஸ் ஒரு முக்கியமான அடித்தளமாகும் என்பது என் திணிபு. காமிக்ஸ் வாசிப்பின் அவசியத்தை உணர்ந்து கொண்டுதான், சமீபத்தில் சென்னைப் பல்கலைகழகம் அனைத்து தொழில் நுட்பக் கல்லூரிகளும் தத்தமது நூலகங்கசளில் கட்டாயம் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தனி வரிசை அமைத்திட உத்திரவிட்டுள்ளது. வரவேற்க தக்க முயற்சி! நன்றி!