Monday, January 27, 2014

ஒள்​ளே உடுகரு..!

பெங்களூரில் சேக்ஷாத்ரிபுரத்தின் முதல் பிரதான வீதியின் ஒரு சிறு அறையில் தனியனாக வாழ்ந்து வந்தேன். வீட்டுச் சொந்தக்காரர் கன்னடத்தினர். மேல்மாடியில் அவர்கள் குடியிருப்பு. எனது பிழையான கன்னடத்தை நான் கொடுக்கும் வாடகையின் பொருட்டுப் பொறுத்தருளி வந்தனர். வீட்டுக்காரம்மாளிடம் நல்ல பையன் என்ற பேர் கூட வாங்கியிருந்தேன்
ஒரு சமயம் சொந்தவூர் சென்று திரும்பினேன். இடைப்பட்ட நாளில் வீட்டுக்காரம்மாளின் கணவர் அகால மரணமடைந்திருந்தார். வயது அறுபதுக்கு மேலிருக்கும். நான் வாடகை கொடுக்கப் போகும் சாக்கில் துக்கம் விசாரித்து விட்டு வரலாம் என்றத் திட்டத்தோடு மாடிக்கு சென்றேன். வீட்டுக்காரம்மாள், என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டாள்.
நென் எஜமானரு செத்ததோகிதாரெ...’
என்று வாயில் சேலைத் தலைப்பைக் கதக்கிக் கொண்டு தேம்பினார். திருத்தமான பொட்டோடு இருந்த நெற்றியின் வெறுமையைப் பார்க்க எனக்கும் என்னவோ போலிருந்தது. அதுவரை அச்சுப்பிச்சு வார்த்தைகளை மட்டும் கொண்டு வளர்ந்து (வளர்த்து) வந்த என் கன்னடத்துக்கு ஒரு சோதனை எனலாம். கன்னடத்தில் துக்கம் விசாரிக்க வேண்டிய நிலைமை. நினைவிலிருந்த எல்லா கன்னட வார்த்தைகளிலிருந்து நல்லதாகப் பொறுக்கி, அழுது கொண்டிருந்த அம்மாளைத் தேற்றும் பொருட்டு நான் சொன்னது இது:
ப்ச்ச்.. பிடிறி.. ஒள்ளே உடுகரு செத்தோகிப் பிட்டிதாரே..!!’
வாயில் துணியைக் கதக்கி தேம்பிக் கொண்டிருந்தவர் அழுகை சட்டென்று நின்று போனது போலிருந்தது. ஒரு மாதிரி மர்மான புன்னகை குடிவந்தது போலிருந்தது அம்மாளின் முகம். அதற்கு மேலும் துக்கம் விசாரிக்க வேண்டாமென்று அமைதியாக வாடகையைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். இருந்தும் என் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய நண்பரிடம் நடந்ததைச் சொன்னார். வஞ்சகமில்லாமல் சிரித்துவிட்டு அவர் சொன்னது:
நீங்கள் துக்கம் விசாரித்து எல்லாம் சரிதான்.. ஆனால் நல்ல மனுஷன் என்பதற்கு பதிலாக...... நல்ல பையன் செத்துப் போயிட்டாரே-ன்னு சொல்லியிருக்கிறீர்கள்!’
உண்மையிலேயே எனக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.


9 comments:

Ananya Mahadevan said...

அந்த அம்மாளுக்கு ஒரு டைவர்ஷன்! நல்ல விஷயந்தான்!

ஸ்ரீராம். said...

ஹா....ஹா...ஹா... 'அகால' மரணம்? :))))

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்ல வேளை அவர்கள் கோபிக்கவில்லை...

வினோத் கெளதம் said...

romba naal kalithu oru pathivu..

Nathanjagk said...

அறுபது கூட அகாலம்தானே.. :) நன்றி ஶ்ரீராம்!

சுசி said...

அவரே பையன் என்றால் அந்த அம்மா இன்னும் யங் தானே, சந்தோஷப்பட்டிருப்பார்கள். :))

Nathanjagk said...

இப்படி. கூட இருக்குமோ? அந்த அம்மாவால் யாரிடமும் பகிர முடியாத ஒரு நகைச்சுவையாக இது இருக்கக்கூடுமோ :) நன்றி.

Raja said...

ஜெகன், இதை படித்தததும், பெங்களுர் - அல்சூரில், வீட்டு உரிமையாளரிடம், வீடு வாடகைக்கு கிடைக்குமா என்பதை "ஈ பாடிக்கி மனை சிகத்தா ?" என் று கேட்டது ஞாபகம் வருகிறது.... பின்னர் தெரிந்தது அதை "இல்லி பாடிகிக்கி மனை சிகத்தா ?" என் று கேட்க வேண்டும் என்று...

Nathanjagk said...

ஹாஹா.. வேற்று மொழி பயன்பாடு காமடியிலோதான் தொடங்குகிறது.