Tuesday, April 19, 2016
கிட்டுவின் வார்த்தை வங்கி
எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.
'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'
'ம், சொல்லுங்க'
'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'
'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'
'ச்சேசே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'
'ஓ!!'
'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'
'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'
'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'
ஆவ் என்று எனக்கு வந்தது.
பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.
அடுத்த வாரமே தேடிக்கொண்டுவந்து விசாரிக்கவும் செய்தார்.
'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'
'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'
அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..
'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'
அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.
அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராகவே இருந்தார்.
இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக வெந்துவிட்டதே போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.
'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'
அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து வேறு மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.
சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அஸைன்மெண்டுக்கும் ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.
அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.
மொத்தமாக தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தாவே தேவையில்லை என்றும்கூட தமிழ் சினிமா நினைத்திருக்கலாம்.
நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்களேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!
Monday, April 4, 2016
மூன்று தர்பூசணிகள்
அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லோரையும் போல என் பங்குக்கு ஒரு கைவைத்தியம் சொல்லி வைத்தேன். காலையில் நெல்லிச்சாறு குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று. வயிற்றுவலிக்காரர் தடக்கென்று நிமிர்ந்து கொண்டார்: 'ஏன் சாறு பிழிய வேண்டும்? அப்படியே கடித்துக் கடித்துத் தின்னவேண்டியதுதானே? தேவையில்லாத மின்விரயம்!' என்றார். அதுவும் சரிதான் - நெல்லியைக் கத்தியால் நறுக்குவது, மிக்ஸியில் அரைப்பது, வடிப்பது அப்புறம் அதன் தோலை உபரியாக்குவது போன்ற கார்பன் காலடிகளைத் (Carbon Footprint) தவிர்த்து விடலாம்தான். வயிற்றுவலியையும் மீறிய நண்பரின் தெய்வத்தன்மை அன்று புலப்பட்டது.
இன்னொருவர் இருக்கிறார். பாசமாக என்னை 'நீ என் நண்பேன்டா' என்று வாரிக்கொண்டாலும். அவர் என்னிலும் மூத்தவர். பணியிலும் இருபடிகள் மேலிருப்பவர் (இதுவே அவரின் தெய்வத்தன்மை எனக்கு உணர்த்த போதுமானதுதான்) அவரின் சிறப்புகளில் ஒன்று: வெறுங்காலில்தான் ஓடுவார் - சாதாரணமாக ஒரு முழு மராத்தான் அளவுக்கு - அதாவது 41 கிலோமீட்டர்கள். காலணிகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருமுறை காலில் உள்ள ஆணிகளை காட்டினார், வெற்று பாதங்களில் ஓடுவதால் ஏற்பட்டனவாம். திருவல்லிகேணியிலிருந்து பெருங்குடியிருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பறக்கும் ரயிலில் பாதச்சோடுகளோடு வருவார் போவார்.
இதன் காரணமாகவே அவரின் கார் பலமாதங்களாக அசையாமல் திருவல்லிகேணியைத் தாண்டாமல் சென்னை மாநகரின் தூய்மைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் பாருங்கள், அதை எப்போதாவது இயக்கும் வேளையில் அதன் மின்கலம் தீர்ந்துபோய் கார் அசைய மறுக்கும். இது அடிக்கடி நடப்பதால் 'ஏம்பா வீட்டிலேயே வச்சுக்கிற மாதிரி ஒரு ஜம்ப் ஸ்டார்ட் பாட்டரி கிடைக்குமா?' என்று கேட்டார். அடடே! காரை அசைக்காமல் வைத்திருப்பதற்கு கூலியாக தனியாக ஒரு மின்கலம் தேடுகிறாரே? இவர் தெய்வத்திண்ட தெய்வம் என்று அன்று புரிந்து கொண்டேன்.
தேவைகளைச் சுருக்குவது என்பது கவனம் கூடிய திட்டமிடப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. சுருக்கிக் கொள்வதின் முதல் அடி என்னவென்றால் உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டும். சரி நமக்கும் கொஞ்சமாவது தெய்வத்தன்மை அல்லது சிறுதெய்வத்தன்மை அதுவும் கூட இல்லாவிட்டால் ஒரு பூசாரித்தன்மையாவது வாய்க்கட்டுமே என்று குறைக்கும் அந்தஸ்துள்ள என் தேவைகளை நோட்டமிட்டேன். கார் பயன்பாடு கட்டுப்படுத்துவது.. ஆனால் தனியாக மின்கலம் வாங்கி மின்னேற்றும் சக்தி கிடையாததால் கார்-பகிர்வு முறையில் (car pooling) அலுவலகம் சென்று வருகிறேன். ஏஸி, மின்விசிறி, சோப்பு, பவுடர் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லீங்கோ என்று ஹீலர் பாஸ்கர் சொன்னதைக் கேட்டு அதையும் முயன்று பார்த்தேன். வீட்டில் என்னை ஒரு காட்டேரி அந்தஸ்துக்கு சுருக்கும் நிலை ஏற்பட்டதால் இந்த பூசாரித்தன்மை வாய்ப்பும் பறிபோனது!
இருந்தும் அவரவர் திறமைக்கேற்ப தன்னை ஒரு சாதாரண எளியனாக்கிக் கொள்ளும் முனைப்புகளைப் பார்த்து வியக்கிறேன். தெய்வத்தன்மையை விடுங்கள் உலகத்துக்கு நாமளிக்கும் கார்பன் சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளும் முனைப்பே இதில் முக்கியம்.
இன்னொரு அலுவலக நண்பர் - வாரக்கடைசியில் விவசாயம் செய்கிறவர். அதுவும் இயற்கைமுறை விவசாயம். வீக்என்ட் விவசாயி என்று சொல்லலாம். இதற்காக அவரும் அவர் நண்பர்களுமாக சென்னையிலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலுள்ள கிராமத்துத் தோட்டத்துக்கு காரில் பயணித்து, அங்கு சென்று தோட்டப்பணிகளை முடித்துவிட்டு திரும்பவும் 100 கிமீட்டர்களில் சென்னை திரும்புவர். சமீபத்தில் பயிரிட்ட தர்பூசணிகளும் முள்ளங்கிகளும் விளைந்து விட்டன. அவை முறையே இயற்கை-தர்பூசணி மற்றும் இயற்கை-முள்ளங்கிகள் என்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப் பட்டன. அதை வாங்குவதற்கான படிவங்களும் கூகிள் Docs மூலம் பிற நண்பர்களுக்கு வாட்ஸ்ஏப் குறுஞ்செய்தியாக வந்துசேர்ந்தது.
இன்னொரு நண்பர் மூன்று தர்பூசணிகளை கொள்முதல் செய்ய விரும்பினார். இந்த பரிவர்த்தனை அனைத்தும் இணைய வாயிலாகவே முடிந்து விட்டது. அட, உணவு விநியோக சங்கிலியில் கார்பன் காலடிகள் எப்படிக் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!
பிறகுதான் தெரிந்து கொண்டேன்: அந்தத் தர்ப்பூசணிகள் கிராமத்து தோட்டத்திலிருந்து முதலில் ஒரு டிரக்கில் சென்னை வந்து இறங்குகின்றன. பிறகு விவசாய-நண்பரின் காரில் 3 தர்பூசணிகள் மட்டும் அலுவலகம் புறப்பட்டுப் போயின. அப்புறமாக வாங்கிய நண்பரின் காரில் ஏறிக்கொண்டு விட்டன. மொத்தமாக தர்பூசணிகள் 150 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டிருக்கின்றன. அதே கிராமத்திலுள்ள வேறொரு விவசாயியின் (ஆயுட்கால விவசாயி) தோட்டத்து தர்பூசணிகள் எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கும்? இவையிரண்டில் எந்த தர்பூசணியின் கார்பன் காலடிகள் குறைவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.
தர்பூசணி சாப்பிடும் தேவையைக் குறைத்தாவது தெய்வ அல்லது பூசாரித்தன்மை பெற்றே விடுவது என்று முடிவு செய்துவிட்டேன்!
Tuesday, February 9, 2016
கூரை ஓவியம்
இங்கிலாந்தில் இருந்த ஒரு பேராரசிரியர், பணி முடித்து வீடு திரும்பும்போது சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் ஒன்றுவிடாமல் குடையால் தட்டிக் கொண்டே செல்வாராம். ஏதாவது ஒரு கம்பம் விடுபட்டுவிட்டால், திரும்பவும் வந்து தட்டிவிட்டுதான் வீடு செல்வராம். இது obsessive compulsive disorder எனும் மனப்பித்து. பெரிய மேதைக்குள்ளும் இப்படி ஒரு பித்து இருக்கத்தானே இருக்கும்!
விருந்துகளின் கரண்டி, முள்கரண்டி திருடுபவர்கள் உண்டு. Fight Club படம் பார்த்ததுண்டா? அதில் பிளவுபட்ட மனஆளுமைகள் (split personality) என்ற மனோவியாதியை சிறப்பாக கையாண்டிருப்பார்கள்.
இப்படி தனித்துவமான குணாதிசயம் கொண்ட மக்கள் நம் நினைவில் நிறுத்துவது ஒருவகையில் நம் மனநலத்துக்கு நல்லதுதான். பழனியில் பாலிடெக்னிக் படித்துக்கும் போது மூத்த மாணவர் ஒருவர். இயந்திரம் போன்ற உடலும் குரலும் கொண்டவர். மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்த எங்களை ரேக்கிங் என்ற பெயரில் புதுசு புதுசாக சோதிப்பார்.
முதல்முறை அவரிடம் நான் மாட்டிக்கொண்டது இப்படிதான். அறைக்கு வந்தார்.. எங்களைப் பார்த்து அலட்சியப் புன்னகை உதிர்த்துவிட்டு, இயந்திரக்குரலில் 'டே.. டூத்பேஸ்ட் இருக்கா?' என்றார். அப்பாடா வெறும் பற்பசையோடு சிக்கல் தீர்ந்தது என்று புதிதாக வாங்கிய கோல்கெட் பற்பசையை எடுத்து பவ்யமாக நீட்டினேன். பாவம், மூத்தவர் சாயுங்காலத்தில் பல்துலக்கும் ஒழுக்கங்கள் கொண்டவர் போல - என்ன சொந்தமாக வாங்கிக் கொள்ளத் தெரியவில்லையோ என்று எண்ணிக் கொண்டேன்.
பற்பசையைக் கையில் பெற்றுக் கொண்ட அவர் அடுத்து கேட்டது: 'டே.. தீப்பெட்டி இருக்கா?' பற்பசைக்கும் தீப்பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. அறை நண்பன், ஒரு தீப்பெட்டி எடுத்து நீட்டினான்.
'அண்ணா, கரண்ட் போயிடுச்சுன்னா, மெழுகுவர்த்தி ஏத்தறதுக்காக வச்சிருந்தேணுங்ணா' என்று பவ்யமாக நீட்டினான்.
ஹேஹே என்று சிரித்தவாறே,..
'டே அந்த டேபிளை எடுத்து கட்டில் மேலே போடுங்கடா' என்றார். இப்போது எங்களுக்கே கொஞ்சம் ஆர்வம் லேசாக தொற்றிக் கொண்டது போலிருந்தது. அண்ணன் ஏதோ வேடிக்கை செய்து காட்டப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு மேஜையை கட்டிலுக்கு ஏற்றினோம். கையில் பற்பசையும் தீப்பெட்டியுமாக இயந்திர மனிதர் மேஜையின் மீதேறினார். அறையின் மேற்கூரை இப்போது அவர் கைக்கெட்டும் தூரம். பற்பசையை பிதுக்கி கூரையில் நான்கைந்து பொட்டுகள் போல வைத்தார். நாங்கள் எல்லோரும் கீழிருந்து கூரையையேப் பார்த்துக் கொண்டிருந்தோம். அநேகமாக அனைவரது வாயும் பிளந்தபடி இருந்திருக்கும் என்று இப்போது கற்பனை செய்து கொள்கிறேன்.
பிறகு ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் ஒரு தீக்குச்சி என சொருகினார். தீக்குச்சியின் மருந்துப் பகுதி கீழ் நோக்கியிருந்தது.
இப்போது, மற்றொரு தீக்குச்சியைப் பற்றினார். தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த தீக்குச்சிகள் ஒவ்வொன்றாகப் பற்றவைத்தார். தீ மேல் நோக்கி எரிந்து ஒவ்வொரு பற்பசைப் பொட்டிலும் கரிப்படலமாய் படர்ந்தது.
கீழிலிருந்து பார்க்கும் போது கூரையில் ஓட்டை விழுந்தது போன்ற கரும்பொட்டுகளாக இருந்தன.
அண்ணனார் மேஜையிலிருந்து குதித்து இறங்கினார். நாங்கள் அவரையே ஒன்றும் புரியமால் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த விஞ்ஞான செய்முறைக்கு ஏதாவது விளக்கம் கொடுப்பாரோ என்று அனைவரும் அமைதி காத்தோம். ஆனால் அண்ணன் எதுவும் சொல்லாமல் அலங்கார விளக்குகள் அமைத்துமுடித்துவிட்டு பார்வையிடுபவர் போல மேற்கூரையை பார்த்துக் கொண்டார். திருப்திகரமாக முடிந்தது என்பது போன்ற புன்னகையுடன் எங்களைப் பார்த்தார். விளக்கம் ஏதும் கொடுக்காமல், பற்பசையையும் தீப்பெட்டியையும் மட்டும் கொடுத்துவிட்டு அண்ணன் அறையைவிட்டுச் சென்றார்.
நாங்கள் திருதிருவென்று கருகருவென்றிருந்த மேறகூரைப் பொட்டுக்களையேப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
திடீரென்று ஒரு இயந்திரக் குரல்.. அண்ணன்தான்.
'என்னங்கடா மேலேயேப் பார்த்துக்கிட்டிருக்கீங்க? பேஸ்ட் வேஸ்டா போச்சுன்னு வருத்தமா இருக்காடா?'
'........'
'பேசாம பேஸ்ட்டை மேல போயி எடுத்து பல்லு விளக்கிடுங்கடா...'
உபரியாக ஹேஹ்ஹேஹே என்ற அதிரும் இயந்திரச் சிரிப்பையும் உதிர்த்து விட்டுச் சென்றார். எல்லா அகல நீளங்களில் யோசித்தாலும் அந்த அண்ணனின் கூரை ஓவிய விந்தை இன்னும் பிடிபட மாட்டேங்கிறது.
Wednesday, February 3, 2016
நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்
மனைவி அடிக்கடி எனக்கு நினைவூட்டும் வாக்கியம். நடுவில் மின்கம்பம் எப்பவும் ஞாபகம் இருக்கட்டும்! அந்நியன் படம் பார்த்திருப்பீர்கள்தானே? அதில் அம்பியை அல்லேக்காக இரண்டு ஆட்டோக்களில் வந்து ஹைஜாக் செய்து அப்படியே கொண்டுபோய் ஒரு மின்கம்பத்தில் சாத்துவார்களே நினைவிருக்கிறதா? டொய்ங்ங்ங்-ன்னு ஒரு சத்தம் கூட கேட்கும். அப்புறம் சாக்கில் தொங்கப் போட்டு ரூல்ஸ் ராமானுத்தை பேட்பாய்ஸ் குமுறுகுமுறென்று குமுறுவார்கள். சாக்கிலிருந்து சன்னமாக தக்காளி சாஸ் வரும்வரைக்கும் குமுறுவார்கள்.
இந்த மொத்த ஸீனும் எனக்கு அப்பப்ப நினைவுக்கு வரவைப்பதற்கான மந்திரம்தான் - மனைவி சொல்லும் நடுவில் மின்கம்பம் ஞாபகம் இருக்கட்டும்.
சரி, எனக்கும் அம்பியாகிய ரூல்ஸ் ராமானுஜத்திற்கும் என்ன சம்பந்தம்? தயவுசெய்து படியுங்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்:
1: வீட்டு குடிநீர் தேவைக்காக தலைகீழ் சவ்வூடுபரவல் தானியங்கி வடிகட்டி வாங்கினேன். அதாவது ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் (RO Water Purifier) என்பதையே தமிழில் சொல்லுகிறேன் (இப்போது உங்களுக்கு கூட என்னை சாக்குக்குள் தொங்கப் போடலாம் என்று தோணும் - தப்பில்லை)
2: இந்தியாவிலேயே ஏன் இந்த ஆசியாவிலேயே நம்பர் ஒன் என்று சொல்லக் கூடிய பிராண்டாக பார்த்து வாங்கினேன். பதினாறாயிரம் ரூபாய் விலை கொடுத்து. அதுவும் நல்ல வெள்ளை நிறத்தில் மிக நேர்த்தியான வடிவமைப்பில் ஒரு குட்டி வெள்ளை பாண்டா கரடி மரத்தை கவ்வியிருப்பது போல சமையலறையின் சுவரில் பொருந்திக் கொண்டது.
3: சென்னை நிலத்தடி நீரை அதன்மூலம் பரிசுத்தமானதாக்கி குடும்பம் மொத்தமும் அருந்தி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம் சில வருடங்கள். நானும் ஆர்ஓ தண்ணீர் குடித்து நல்ல அம்பியாகவே இருந்து வந்தேன்.
4: ஆனால் பாருங்கள் திடீரென்று ஒருநாள் அது உங்களுக்கு உழைத்தது போதும் என்பது போல் எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் இயக்கத்தை நிறுத்திக் கொண்டுவிட்டது. எங்களுக்கெல்லாம் நீர் ஆதாரமாக இருந்த அந்த வெண்ணிறப் பெட்டி இப்படியானது எங்கள் அனைவருக்கும் பெரு வருத்தமே.
5: பெட்டியை பழுது நீக்கும் பொருட்டு கம்பெனியிடம் பேசினோம். அடுத்த நாளே ஒரு தேர்ந்த வல்லுநர் வீட்டுக்கு வந்தார். பாவம் வந்தவருக்கு குடிக்க நீர் கூட பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டியிலிருந்து பெறமுடியவில்லை. 30 ரூபாய் கொடுத்து வாங்கிய பாட்டில் நீரையே மொண்டு கொடுத்தோம். குடித்துமுடித்து வாயைத்துடைத்து விட்டு வல்லுநர் பெட்டியை ஆய்வு புரிந்தார்
5.1: அவரது ஆய்வறிக்கையைக் கேட்டபின் எங்களுக்கே இயக்கம் நின்று விட்டது போலிருந்தது - ஏனென்றால் ஆர்ஓ பெட்டியின் 80% பாகங்கள் பழுதுதாகி பயனற்றதாகிவிட்டதாம்.
5.2: இந்த கரடியை நீங்கள் காப்பாற்றுவதற்கு பதில் புதுசே வாங்கிக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்துவிட்டு கிளம்பினார் கம்பெனியின் வல்லுநர்.
6: ஆறு மனமே ஆறு என்று கூறிக்கொண்டாலும் எங்களுக்கு நீருக்கு தினமும் 100 ரூபாய் மாதிரி செலவாகிக்கொண்டிருந்தது - கூடவே நீர் கேன்களின் தரம் கேள்விக்குறியதாக இருந்தது. மனைவி ஒருசமயம் கேன் நீருக்குள் சமர்த்தாக நீந்திக் கொண்டிருந்த சில க்க்குட்டிப்புழுக்களை மொபைல் காமிராவில் படமாக்கினார். அவர் இந்த கோணத்தில் தொடர்ந்து செயல்பட்டிருந்தால் டிஸ்கவரி அல்லது நேட்ஜியோ போன்ற ஏதாவது சேனலில் பணியமர்த்தப்பட்டிருக்க கூடும்.
7: இங்கேதான்.. அம்பி அந்நியனாக எழுந்தேன் என்று தெரிந்து கொள்க..! ஏன் பாண்டா கரடி போன்ற ஆர்ஓ பெட்டி ஏன் பொசுக்கென்று நின்றுபோனது? ஏன் ஒரு சின்ன அலாரம் கூட அது கொடுக்கவில்லை? நாங்கள் பயன்படுத்திய விதம் தவறா அல்லது பெட்டி தயாரிக்கப்பட்ட விதம் தவறா? போன்ற பல பல கேள்விகள் என்னைச் சுற்றின.
8: அந்நியனாக ஆவதைவிட ரூல்ஸ் ராமானுஜமாக மாறுவதே உசிதமாகப் பட்டது எனக்கு (உசிதமணி.. உசிதமணீ) கம்பெனி பெற்ற தரச்சான்றிதழ்கள், குடிநீருக்கான அரசு நிர்ணயிக்கும் தரக்கட்டுப்பாட்டுகள், ஆர்ஓ பெட்டிக்கு கம்பெனி அளித்திருந்த உத்திரவாதம், பெட்டி இயங்கும்முறை, நான் வாங்கிய பெட்டி பழுதான விதம் இவைகளை அலசி காயப்போட்டு இஸ்திரியும் போட்டு ஒரு ஈமெயிலை கம்பெனிக்கு அனுப்பினேன்.
9: சில நாட்களிலேயே ஒரு மண்டல மேலாளர் தொடர்பு கொண்டார்.. நான் உங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதான் கோளாறு என்பதில் ராமானுஜமாக நின்றேன். நாட்கள் கழித்து வேறொரு மேலாளர் பேசினார்.. அதையே சொன்னேன்.. கூடவே கோளாறு உள்ள குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரத்தை பயன்படுத்துவதால் எழும் ஆபத்துகளையும் விளக்கினேன் அவருக்கு. அப்படியே அதை ஈமெயிலாக்கியும் அனுப்பினேன்.
10: இன்னும் சில நாட்களில் வேறொரு மேலாளர் பேசினார்.. அம்பி உங்களுக்கு இழப்பீடாக புது ஆர்ஓ பெட்டியே வழங்குகிறோம் என்றார். அதுவும் வந்தது புது பாண்டா கரடி போல சமையலறையில் அதே இடத்தில் ஒட்டிக் கொண்டது. பதினாறாயிரம் மிச்சப்பட்டது அப்புறம் நீர் கேனுக்குள் நெளியும் புழுக்களை படமெடுப்பதிலிருந்து விடுபட்டது போன்றவை மனைவிக்கு ஆறுதலாய் இருந்தாலும் - என்மேல் ஒரு பயம் வந்துவிட்டிருந்தது போல.
11: இதுபோன்று ஏதாவது தரக்குறைப்பாடுகள் சொன்னாலோ தென்பட்டாலோ உடனடியாக செயலூக்கம் பெற்றவனாகி ஈமெயில் புகார்களை சம்பந்தபட்டவர்களுக்கு அனுப்புகிறவனாகிவிட்டேன்.
12: இது அப்படியே தொடர்ந்தது - கடையில் வாங்கிய சப்பாத்தி மாவில் இருந்த மண்துகளுக்காக, வீடு பக்கத்தில் கழிவு கொட்டும் வீட்டுக்காரருக்காக, குப்பை எரித்துவிட்டுப் போகும் கார்ப்ரேக்ஷன் ஊழியருக்காக, கட்டணம் வசூலிக்கும் சாலையின் குழிகளுக்காக, குறித்த இடத்திற்கு வந்து கூட்டிச்செல்லாத வாடகைக் காருக்காக என ஈமெயில் அனுப்பிக் கொண்டேயிருந்தேன். பாருங்கள், ரூல்ஸ் ராமானுஜம் என்னுள் முழுதாக இறங்கிவிட்டிருந்தான் போலிருக்கிறது!
என்னைக் கட்டுப்படுத்தும் விதமாக மனைவி இந்த நடுவில் மின்கம்பம் இரண்டு ஆட்டோக்கள் சொன்னாலும் ஈமெயில்கள் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன (ஒரு பயத்தோடுதான்). என்னைப் போல் இன்னும் நிறையபேர் இருப்பார்கள். தரத்தை வேண்டுகிற, குறைகளை களைய முயற்சிக்கிற அம்பிகள் எங்கும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
வலுவான மின்கம்பங்கள் நின்றாலும் ராமானுஜர்கள் தேவை நமக்கு அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது, அல்லவா?
Tuesday, February 11, 2014
But Where's My Pumps?
வாரம் முழுதும் சாம்பல் நிற சீருடையில் திரிய விதிக்கப் பட்ட மெக்கானிக்கல் பிரிவு. பிராஜெக்ட் நண்பர்கள் என நாங்கள் நால்வர். கல்லூரியிலிருந்து அவ்வளவு தொலைவு பயணித்து பிராஜெக்ட் செய்த பெருமை பெற்ற குழு எங்களுடையது. யாருக்கும் ஹிந்தி தெரியாது.. தெரிந்திருந்தாலும் பிரயோசனப் பட்டிருக்கிறாது என்றே நினைக்கிறேன். கிரிலோஸ்கர்வாடியில் மேலதிகம் பேசப்பட்டதெல்லாம் மராத்தியும் பான்பீடாவும்தான்.
முன்னேற்பாடாக, நண்பனின் உறவினர் ஒருவர் சிபாரிசு செய்ய சம்மதத்திருந்தார். இருந்தும் சிபாரிசு முழுமையாக கிரிலோஸ்கரை வந்தடையாததால் எங்களை ஒரு சந்தேகத்தோடுதான் உள்ளனுமதித்தார்கள்.
வாடியின் வளாகத்துக்குள் ஓர் ஊரே அடைப்பட்டு இருந்தது. தொழிற்சாலை, குடியிருப்புகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, அங்காடி, நீச்சல்குளம், பூங்கா.. இப்படி! அங்கு அருமையாக பேணப்பட்டு வந்த பயணியர் விடுதி ஒன்றிருந்தது. அது தொழிற்சாலைக்கு வரும் விருந்தினர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற கிளைகளிலிருந்து வரும் அலுவலர்கள் போன்றோர் தங்குமிடமாக இருந்தது. கல்லூரி மாணவர்களாயிருந்த எங்களை எப்படி வகைப்படுத்துவது என்ற குழப்பம் கிரிலோஸ்கர் இருந்திருக்கும் போல. போகட்டும் என்று பயணியர் விடுதியில் தங்க அனுமதித்தார்கள்.
விடுதியில் ஒரு உணவகம் உண்டு. இழைத்து இழைத்து பராமரிக்கப்பட்ட உணவகம். உணவின் நுண்கூறுகளும் ஆரோக்கியத்தின் அனைத்து நுணுக்கங்களும் கடைத்தேறிய ஒரு மருத்துவரால் பரிந்துரைக்கப் பட்ட உணவுகள் மட்டுமே அங்கு பரிமாறப்பட்டன. காலையுணவென்றால் ரொட்டியும் வெண்ணையும் அல்லது ஆம்லெட், கூட சுடச்சுட தேநீர். மதியம் உணவு ரொட்டி, சாதம், பலவகை பயறுகள் அடங்கிய சாலட்.. இப்படி! கிரிலோஸ்கர்வாடி-பிராஜெக்ட்டுக்கு யோசனை கூறிய என்னை, இந்த ஒரே காரணத்திற்காக நண்பர்கள் மன்னித்தனர்.
உணவத்தில் சிலசமயங்களில் எங்களுடன் வேறு சிலரும் உணவருந்த வருவதுண்டு. அவர்கள் பெரும்பாலும் விற்பனைப் பிரதிநிதிகள் அல்லது உயர் அலுவலர்களாயிருப்பார்கள். அதிகம் போனால் ஒரு நாள் அல்லது கூட சிலநாட்கள் தங்கியிருப்பதுண்டு. நாங்களோ பலவாரங்களாகவே விடுதியின் காலை ரொட்டி முதல் இரவுச் சப்பாத்தி வரை உண்டு ஒரு நிரந்தர வாடிக்கையாளர் தொனியில் உலாவி வந்தோம்.
பிராஜெக்ட் என்ன செய்வது என்று இன்னும் ஒரு பிடி கிடைக்கவில்லை. காலையுணவு ஆனதும் பம்பு தொழிற்சாலையில் இடது வலது என்று வெளிநாட்டுப் பயணிகள் போல சுற்றிவருவோம். சிறிது நேரத்தில் பசிக்கவேறு ஆரம்பித்து விடும். பிறகென்ன.. நேராக உணவுவிடுதிதான். உணவகத்தில் வேலைப் பார்த்த பரிமாறுவோர், சமையல்காரர், காவல்காரர் என அனைவருக்கும் பழகிய முகங்களாயிருந்தோம். சைகையாலேயே இது ரொம்ப நல்லாயிருக்கு.. இன்னொரு ப்ளேட் வேணும் இதுதான் அந்த வீர மராத்தியர்களிடம் நாங்கள் அதிகம் மேற்கொண்ட சம்பாஷணை.
ஒரு இரவு நேரம். உண்டு முடித்திருந்தோம். உணவகத்தில் இருந்த விருந்தினர் புத்தகத்தை பொழுது போக்காக எடுத்துப் புரட்டிக்கொண்டிருந்தோம். தங்கிய பயணிகள் விடைபெற்றுச் செல்லும் போது விடுதியின் தரத்தைப் பற்றிய கருத்துக்களைப் பதிந்திருந்தார்கள். ரொட்டி அற்புதம், சாலட் பிரமாதம், சமையல்காரர் கில்லாடி, பரிமாறுவோரின் பாசம் என பலவாறான பாராட்டுகளாய் நிறைந்திருந்தது புத்தகம்.
அப்புத்தகத்தில்தான் வாழ்வின் உன்னதமான ஒரு தத்துவத்தை ஒருவர் எழுதி விட்டுச் சென்றிருந்தார். அவர் அநேகம் ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக இருந்திருக்கக் கூடும். பம்புகள் வாங்க வந்துவிட்டு அவை தயாரித்து ஒப்படைக்கும் வரை விடுதியில் தங்க நேர்ந்திருக்கக் கூடும். அவர் விருந்தினர் புத்தகத்தில் எழுதியிருந்தது இதுதான்:
'Food is good.. but where is My Pumps???'
அவர் ஒரு காரியப் புலியாகவும் இருந்திருக்கக் கூடும்! ஒரு வழியாக பிராஜெக்ட் முடித்து விட்டு ஊருக்குக் கிளம்பும் போதுதான் தெரிந்தது. நாங்கள் உண்ட காலைரொட்டி முதல் இரவு சப்பாத்தி வரைக்கும் ஒன்று விடாமல் குறித்து ஒரு பில்லை நீட்டினார்கள். அப்போதுதான் புரிந்தது அசல் காரியப் புலி யாரென்று!
டிஸ்கி:
இப்பதிவுக்கு தமிழில் தலைப்பிட முடியாததற்கு மிகவும் வருந்துகிறேன்!
Monday, February 8, 2010
காணாமல் போனவர்கள்
நகப்பூச்சுக்கு தக்க சுரிதாரைக் கண்டடைவதில் களைப்படைய மாட்டாள்
ஹெல்மட் அணியாமல் கூந்தல் விசிற பறந்த பொழுதில்
டிராபிக் போலீஸ் தண்டம் வசூலித்த அன்றே மாலையில் அப்பனிடம் கேட்டாள்:
டாட், கார் வாங்கிக் கொடு எதுக்கு திடீர்னு என்றவரிடம்
ஹெல்மட் போடப் பிடிக்கலப்பா என்றாள்
அவன்
காலேஜ் காலங்களில் சலூன்காரரிடம் ஒருவருட பாக்கி வைத்திருந்தான்.
பஸ்ஸில் உரசிய எந்தப்பெண்ணும் இதுவரைஅடித்ததில்லை.
வேலைக்கு சேர்ந்த முதல்நாளே பக்கத்து சீட்டுக்காரியிடம் ஐ லவ் யூசொன்னான்
எனக்கு 2 வயசு குழந்தையிருக்கு என்ற ரிப்ளையில் விநாடியில் சுதாரித்து
hot mama என்று சிரித்தான்.. அடுத்த 2 மாதங்களில் அவனிடம் 9000 கடன் கொடுத்திருந்தாள் hot mama
அவர்கள்
அட்டாட்ச்டு பாத்ரூம் டாய்லட் இருக்கிற வீடா பாக்கலாமே
?பாரு இந்த வீடு?
டாய்லட் அட்டாட்ச்டா இருந்தா நல்லாயிருக்கும்...
சரி இந்த வீடு??
ஆனா டாய்லட் அட்டாட்ச்டா...
அடிங்கொய்யால.. இதுக்கு மேல அட்டாச்ட்டு டாய்லட்டுன்னா pampers-தான்டி கட்டிக்கணும்
ஸ்டுப்ப்ப்பிட்.....
அஃது
விரல் மோதிரம் ->
கடித்துக் கொண்டிருந்த புது செருப்பு ->
தலையணை உறை மாற்றும் லாவகமாய்
மாறிக்கொண்டிருந்தது ->>
அடுத்தது
குழந்தை வெயிட்
3.49 கிலோ என்றான் அவன்.3.49 கிலோகிராம்-ஃபோர்ஸ் என்றாள் அவள்
நான் சொல்ற பேர்தான் பெஸ்ட்
காதுலயே நுழைய மாட்டேங்குது
உன் காது பத்தி யாரு கேட்டா
ஒண்ணு வுட்டா உனக்கு காது கேட்காதுடி
அவர்களின் அவன்
6
மாத குழந்தையாய் தோட்டைப் பிடித்து இழுத்ததில் ஒரு வாரத்திற்குஅவளின் காதில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது
விளம்பர இடைவேளையில் மறைந்துபோனடோராவின் மேலுள்ள கோபத்தில் டிவியைத் தள்ளிவிட்டு உடைத்தபோது
அவன் வயது 17மாதங்கள்
இப்போ...
அவள்.. நடந்தா ஒடம்புக்கு நல்லதுதானே பெட்ரோல் செலவும் மிச்சம் என்று விரைகிறாள்.
அவன்.. கடைசி ஸீட்டிலிருந்து எழுந்து வந்து இடங்கொடுக்கிறான் - குழந்தையோடு நிற்கும் தாய்க்கு.
Saturday, August 29, 2009
எலக்கியவாதியின் பழைய டைரி

பறவைக் கூடுகளின் எளிமையாய் நெய்யப்பட்டிக்கிறது இவனது ஆன்மா.
- யூமா. வாசுகி, உயிர்த்திருத்தல் சிறுகதையிலிருந்து..
அடுத்தடுத்துச் சொல்வதைவிட, இடைவெளிக்கு அப்புறம் சொல்லப்படுபவை நன்றாகத்தான் இருக்கின்றன. சொல்லை இடைவெளியும், இடைவெளியை சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமண்ணில் ஒதுக்கும்போது ஆறும் அழகு. கரையும் அழகு.
- வண்ணதாசன், உள்புறம் வழியும் துளிகள் சிறுகதையிலிருந்து..
பாஸ்கர், உன் மனைவியை நீ பார்க்க உனக்குச் சொல்லி கொடுப்பதன் அதிகப்பிரசங்கித்தனம் எனக்குத் தெரியாததல்ல. அதற்குக் கண் வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் பொழுதில்லை.
- லாசரா, எதிர்ப்பு சிறுகதையிலிருந்து..
விரியும் உதடுகள் வழிநடத்திச் செல்லும் முடிவில் - செல்லரித்த இலைகள் உதிர்ந்து புதுக்குருத்தென தேடிவருபவனுக்காகக் காத்திருப்பாள் புவனா.
- யூமா. வாசுகி, வான்நதி சிறுகதையிலிருந்து..
கவிதைகள் (ஜெகநாதன்!)
குளத்துள் எறியும்எல்லாக் கற்களிலும்
விரிஅலைகளாய் கரை ஒதுங்குகிறது
கல்லை எறிந்த
கவலை!
.... தாகங் தீர்த்த
பேராற்றின் செங்கரையை
நாணல் கடக்கிறது
சுவடுகளை மட்டும் விடுத்து
* * *
புத்தகங்கள்...விழி. பா. இதயவேந்தன்
சேஷையா ரவி- அறிவின் கரையை மீறி
சா. கந்தசாமி - 20ம் நூற்றாண்டின் சிறுகதைகள்
யுவான் ருல்போ - எரியும் சமவெளி
(.. கனவு காண்பதை நிறுத்து - அதுதான் என் பெயர்)
ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
நீல பத்மநாபன் - தலைமுறைகள்
கோடாவிற்காக காத்திருத்தல் - சாமுவேல் பெக்கட்
ஹால (XALA) - செம்பான் ஒஸ்மான்
நகரச்சுவர்கள் - எஸ். வைத்தீஸ்வரன்
வழித்துணைகள் - சுப்ரபாரதிமணியன்
ஆயிரங்கால் மண்டபம் - ஜெயமோகன்
கண்மணி குணசேகரன் - அஞ்சலை
ஆந்ரே ழீத், பிரைமோ லெவி, ஜேம்ஸ் ஜாய்ஸ்
பாதசாரி (மீனுக்குள் கடல்)
எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம்..............
* * *
மியூஸிக்...
... இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்றவர் யார் தோழி..
இன்பம் கனவில், துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி (பாக்யலட்சுமி)
Michael Bolton - Go the Distance
ABBA - The winter takes its all
LAS KETCHUP
Bombay Vikings
Ellie Cambell - Don't worry you come back
Kylie Minogue........
மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..
மறுநாள் எழுந்து பார்ப்போம்....
இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே.....
(அன்னை இல்லம் - சிவாஜி, தேவிகா)
* * *
தத்துவம்
Plants remains always small under a big tree
Women can smile as they do
But they can weep as the will
* * *
தாராபுரம் சென்றிருந்தபோது என் பழைய டைரி ஒன்று கிடைத்தது.
2003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் (அட்ரா சக்கை!) நிறைய கவிதைகள், படித்த புத்தகங்களிலிருந்து excerpts, இசை, படிக்கப் போற புத்தகங்களின் பட்டியல், மனதை கவர்ந்த சம்பவக்குறிப்புகள், கொஞ்சம் ஓவியங்கள் என பழைய கிறுக்கல்களில் தொகுப்பு!
Tuesday, August 18, 2009
மனதில் அலறும் பாடல்
அதாவது, ஒரு பாட்டோட மியூஜிக்கி மட்டும் ஞாபகத்து வந்து பாட்டு வரி நினைப்பில்லாம, நைட்டு பூரா தூங்காம தலையணையை கடிச்சுக்கிட்டு இருப்போம்ல...
அதாவது, இனி தாங்க முடியாதுடா சாமி, எவனுக்கு எஸ்எம்எஸ் போடலாம், யாருக்கு 'மிஸ்டு-கால்' போடலாம்னு மனசு கம்பத்தைத் தேடற நாய் கணக்கா திரியும்ல....
அதாவது.. ஓ! ஸாரி.. கோட்டா முடிஞ்சி போச்சில்ல? (இதுதான் நம்மகிட்ட இருக்கிற ப்ராப்ளம்-ங்ணா!) சரி, மேட்டருக்கு வாடா குவாட்டர் மண்டையான்னு கேக்காதவங்க கூட நான் டூ..! சஸ்பென்ஸ் போதும்.. சொல்லிறேன் (ரெகுலரா.. திருமதி செல்வம் சீரியல் பாக்கிறதோட எபெக்ட்!) பெங்களூரு-டு-ஈரோடு, பஸ்ல போகும்போது கிருஷ்ணகிரிக்கு இத்துணூண்டு முந்துனாப்ல ஒரு ஸ்டாப் போட்டுட்டு.. டிரைவர் மாமா இடுப்பை ஆட்டி ஆட்டி பேண்டை மேல இழுத்து உட்டுகிட்டு இறங்கி போயிடுவாரு. அது ஒரு ஓட்டல், இளநி கடை, பீடிக்கடை, டீக்கடை, சாக்கடை, போண்டா கடை எல்லாம் அடங்கிய மைதானம். நாமளும் இறங்கி மோப்பம் பிடிச்சிக்கிட்டே போனோம்னா ஒண்ணுக்கு அடிக்கிற இடம் வந்துரும் (ஒண்ணுக்கும் வந்துரும்ல!) ஓப்பன்ல சர்ன்னு அடிச்சிட்டு, சிர்ன்னு சிப்பைப் போட்டுட்டு (இல்ல தளதளன்னு வேட்டிய ஆட்டிக்கிட்டு) வந்துடலாம். லேடீஸ்க்கு கட்டண கழிப்பிட வசதி. வண்டி பத்து நிமிஷம் நிக்கும்.. டீ, காபி, டிபன் சாப்பிடவறங்க எல்லாரும் (மரியாதையா) இறங்குங்கன்னு ஒருத்தர் மப்புல இருக்கிற போலீஸ் மாதிரி ஒவ்வொரு வண்டியா தட்டி அலறிட்டிருப்பாரு.. நிறைய வண்டிகள் அந்த இடத்தில பார்க்கலாம். நல்ல ப்பிசினெஸ்ஸு! அம்மா சொன்னதால நான் வெளிய டீ, காப்பித்தண்ணி குடிக்கிறதில்லைன்னு உங்களுக்கே (!?) நல்லாத் தெரியும். அதனால, கம்முனு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வச்சுக்கிட்டு, நாம இறங்கி வந்த பஸ்ஸைஒரு கண்ணுலயும், வண்டியிலிருந்து இறங்கி வர்ற பசுகளை இன்னொரு கண்ணுலயும் (பராக்கு) பாத்துக்கிட்டு நிப்பேன். அப்போ மியுசிக்கி கடை புண்ணியத்துல காதுல விழுந்ததுதான்.. ஏக்சுவலா பொடனியில விழுந்ததுதான்.. இந்த பாட்டு... "ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டான், ராத்திரிக்கு ஆயிப்போச்சு சண்டை..." அப்படியே சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா மெட்டுல வாய்விட்டு பாடிப்பாருங்க தீஅதீ ரசிகர்களே!! சூப்பரா இல்லை? இந்த பாட்டு வரியோட ஒவ்வொரு வரியையும் உன்னிப்பா கவனிங்க. ஏகப்பட்ட விஷயம் சிக்கும்.. எக்குத்தப்பா சிந்திச்சு, நீங்க பின்நவீனத்துவத்தில போயி முட்டி நிக்கவோ, இல்லை டாஸ்மாக்ல ஓல்ட் மங்க் கேட்டு நிக்கவோ கூட நேரலாம்!! (அவ்வ்..) இந்த ரேஞ்சுக்கு பாட்டு எழுதுன அந்தப் புலவன் யாரு? அவன்(ர்)(ள்) எந்தளவுக்கு சமுதாயத்தை உத்து, உத்து கவனிச்சிருக்கான்(ர்)(ள்)? அதுவும் அந்த ஆண்குரல் நல்ல நாட்டுப்புறக் குரல். நல்ல ஏழு கட்டை, எட்டு கட்டையில அலறலா பாடியிருப்பாரு! சுருக்கமா, சொல்லணும்னா செம நாட்டுக்கட்டைக் குரல்! அந்தபொட்டல்ல இறங்கிய, இறங்காத ஒவ்வொரு பயணியும் இந்த 'ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டானுக்கு' காதை திருப்பியே ஆகணும்! சிலர் கேசட் கூட வாங்கியிருக்கலாம். அப்படியிருந்தா, அந்த பாட்டோட முழு வரிகளையும் தயவுசெஞ்சு டைப்பித் தாங்களேன்! தமிழ் இசையின், நாட்டுப்பாடல் மரபின், ஒரு நிலத்தின் இசையை, ஒரு முக்கியமான பதிவை நான் இழக்க விரும்பலே! ப்ளீஸ், தெரிஞ்சா சொல்லுங்க. பி.ந.கு: முக்கியமா, நம்ம 'காலடி'யின் 25 பதிவைக் கொண்டாடி சிறப்பிக்கும் விழாவுக்கு வரவேற்பு பாடலாக இந்த 'ஓல்ட் மங்க் குடி - பொண்டாட்டிய அடி' ஒலிப்பரப்பலாம்னு காலடியின் காரிய கமிட்டி, கரகாட்டக் குழுவுடன் டிஸ்கிஸ் பண்ணி வருகிறது.
Saturday, August 8, 2009
(கள்ளக்) காதல் கவிதை!
முன் குறிப்பு: சத்தம் போட்டு படிக்க வேண்டிய கவிதை
டண் டணக்கா - அவன்
ஜின் ஜினுக்கா - அவள்
டண் டணக்கா, டண் டணக்கா
ஜின் ஜினுக்கா, ஜின் ஜினுக்கா
டண் டணக்கா ஜின் ஜினுக்கா - காதல்!
ஜின் ஜினுக்கா, டண் டணக்கா, ஜின்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண்
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா - கல்யாணம்!!
இணைப்பு:
ரண் டணக்கா - இன்னொருவன்
ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ஜின் ஜினுக்கா, டண் டணக்கா,
டண் டணக்கா, ஜின் ஜினுக்கா, ரண் டணக்கா
ரண் டணக்கா, ஜின் ஜினுக்கா, டண் டணக்கா - கள்ளக்காதல்!!!
பின்குறிப்பு:
இனிமேல் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது என்று உறுதி கொடுக்கிறோம்.
நம்புங்கள் ப்ளீஸ்!
Wednesday, August 5, 2009
புதுசாய் வரயிருக்கும் வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்!

கண்ணாம்பா.காம்: ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, இடுகை எழுதும்போதே கீபோர்ட் கண்ணீரில் நனைத்துவிடுகிறாராம். பின்னூட்டம் பாத்து போடவும். இல்லையென்றால், உங்கள் கம்ப்யூட்டரே வெடித்து சிதறட்டும் என்று வைரஸ் சாபம் விட்டுவிடுவாராம்
மைனர் குஞ்சு: அஜால்குஜால் இடுகை எழுதும் போதே எக்ஸ்யூஸ்மீ, தப்பா நெனச்சுக்க படாது, யார் மனசயும் புண்படுத்தவில்லை என்று சொல்லி சொல்லியே மேட்டரை முடித்துவிடுபவராம். ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் உலாவுகிற மைனர்குஞ்சுகள் இந்த குழுவலைப்பதிவில் இருப்பார்களாம்.
பாண்டிமடம்: இது ஒரு முக்கியமான வலைப்பதிவு. அனேகமா வலைப்பதிவர் என்று ஆகிவிட்ட யாரும் இங்கே ஒரு விஸிட் அடித்தே ஆக வேண்டும்; யாரும் எஸ்ஸாக முடியாது என்று சவால் விடுகின்றனர்! போய்தான் பாப்போமே?
ஆபுவே: சீரியஸாகப் போய் கொண்டிருக்கும் அக்கப்போர் விவாதங்கள், கும்மியடி, குழாயடிச் சண்டைகளை முடித்து வைத்துத் தரப்படும் என்று சொல்லுகிறார்கள். நம் பதிவுலகத்து அவசியம் என்றே தோன்றுகிறது. ஆபுவே..? அதாங்க.. ஆணியே புடுங்க வேண்டாமாம்!
கவிப்பின்லாடன்: கவியரசு, கவிப்பேரரசு, வெறும் பேரரசு வரிசையில் தானும் வருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இவரது கவிதைகள் நெய்க்குண்டா, மாறிமாறிசொறி, மசநாய்கடி (ருவாண்டா நாட்டில் 7 மாதத்திற்கு ஒருமுறை பிரசுரம்) போன்ற இதழ்களில் வெளி வந்திருக்கிறதாம். சாம்பிளுக்கு ஒரு கவிதை.. வேணாம் பயந்துருவீங்க...
மூத்திரசந்து: வெளிப்படையான ஆக்கங்களுக்கு இங்கே நம்பி விஸிட் அடிக்கலாம். அர்ஜென்ட்டா ஒரு மொக்கை வேணுங்கிறவங்க எப்ப வேண்டுமானாலும் இங்கே போயி ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். இந்த வலைப்பதிவுல பின்னூட்டம் மட்டறுக்கப்படுகிறதாம். ஒன்லி முன்னூட்டம்தானாம்.
இதுமட்டுமில்லாம,
தர்மக்குத்து, எங்கோமணம் போன்ற திரட்டிகளும் புதுசாய் வெளிவரயிருப்பாதாய் நம்பத்தகுந்த முக்கோணங்கள் முனகுகின்றன.
தர்மக்குத்துவின் சிறப்பம்சம், அவர்களே ஸ்பெஷல் ஸ்குவாடு வைத்து ஓட்டுக்களாய் குத்து குத்தென்று குத்தித் தள்ளி விடுவார்களாம். உங்கள் வலைப்பதிவில் ஒரு விளம்பரம், ஸ்பெஷல் ஸ்குவாட் டீ செலவுக்கு பணம் இவை மட்டும் போதுமாம்.
எங்கோமணம், சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் காணும் முயற்சியாம். எப்படிப்பட்ட மொக்கைப் பதிவென்றாலும் தம்கட்டி படித்துவிடுவார்களாம் இதன் தேர்வுக்குழு உறுப்பினர்கள்.
பி.கு.:
1. காலடியின் தீவிர அதி தீவிர வாசகக்கண்மணிகளில் ஒருவரான சம்முவம் விரும்பிக் கேட்டதால இப்படியொரு வலைப்பதிவு. இது சம்முவத்துக்கே சமர்ப்பணம்!
2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு
Thursday, July 30, 2009
பச்சப்புள்ள - பார்ட் 3 அல்லது சிமிட்டாத கண்கள்
இவரு பேரு அன்பு!
ராசாத்தி மின்னாடி ஹார்ட்வேர்ஸ் ஏஜென்ஸிலே வேல பாத்துக்கிட்டு இருந்தப்ப நம்ம அன்பு, பக்கத்து எலக்ட்ரிகல் கடையில வேலை. ராசாத்தி வேலைக்கு வந்த மக்கா நாளே அன்புத் தலைவர் என்ட்ரி.
"அலோவ் ஈரோ, எப்படியிருக்கீங்க.. வாங்க டீ சாப்பிடலாம்... வேலையெல்லாம் எப்படி போகுது, ஏதும் பிரச்சினைன்னா சொல்லுங்க, வுட்டு லேப்பிரலாம்"
இப்பிடி அன்பு, அன்பு மயமாக மாறுனதுக்கு காரணம் ராசாத்திய டாவு கட்ட வர்றதுக்குதான்னு ஈரோவுக்கு லேட்டாதான் பிக்கப் ஆச்சு. சரி எப்படியோ வேலை ஒழுக்கமா நடந்தா செரி, 1200 ரூபாயிக்கு 8 விரல்லயும் பின்னிப் பெடலெடுக்கிற ஆளு ராசாத்தி.. அப்புறம் என்ன சொல்ல முடியும் ஈரோவால! பாப்பாத்தி இப்பத்தான் கீபோர்டில நெம்பரு அடிக்கிறதுக்கின்னே தனியா ஒரு பகுதி இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கு. பரவால்லே பிக்கப் ஆயிக்கும்!
அன்பு அடிக்கடி ஆபிஸுக்கு வர்றதும், ஈரோக்கிட்ட அப்பிடி இப்பிடி தெக்கால வடக்காலன்னு ஞாயம் பேசறதும், போறப்ப ராசாத்திட்ட 'வரட்டா' சொல்லிட்டு போறதுமா ரெண்டு மூணு வாரம் ஓடிருச்சு. ராசாத்திக்காக இவன் அக்கப்போர பொறுத்துக்க வேண்டியதுதான்னு கம்முனு இருந்துட்டாரு ஈரோ. இதில அப்பப்ப ஈரோக்கிட்ட, ராசாத்தி எங்கிட்ட முன்ன மாதிரி பேசறதில்ல.. எனக்கு அவ அப்பன தெரியும் ஆத்தாள தெரியும் வீடு தெரியும் ஊரு தெரியும் - சும்மா விட மாட்டேன்னு புலம்பல் வேற.
மனசுக்குள்ள த்தூமாதரிச்சே.. என்ன கருமாந்திர காதல்டா இவனுதுன்னு ஈரோவுக்கு தோணும்.
ராசாத்தி வெளியூரு, ஈரோவும் வெளியூரு.. அதனால ரெண்டு பேரும் எட்டு எட்டரைக்கெல்லாம் முனிஸிபாலிடிக்கு வந்து, மாடியில இருக்கிற கம்ப்யூட்டர் சென்டரை தொறந்து வேலய ஆரம்பிச்சுடுவாங்க. பாப்பாத்தி நெதானமாத்தான் வரும்.
ஒருநா, ஈரோ வர லேட்டாயிடுச்சு. ஈரோவுக்கு முன்னாடியே ராசாத்தி வந்திருக்கும் போல. மாடியில இருந்து அன்பு வேகமா இறங்கி போயிட்டிருந்தார். இவன் எங்கடா இந்நேரத்துக்குன்னு இங்கன்னு நெனச்சுக்கிட்டே ஈரோ மாடிக்குப் போனாரு. அங்க பியூன் காமடியன் நின்னுக்கிட்டிருந்தார். ஈரோவப் பாத்து கோபமா,
"ஈரோ, என்னப்பா இதெல்லாம்..? யாரவன்..??"
"யாரக் கேக்கறீங்க, அன்பையா?" "அவந்தான். ராசாத்தி தனியா இருக்கும் போது, மேலே வந்திருக்கான். என்னடா இது யாருமில்லாத நேரத்திலன்னு வந்து பாத்தா, அவன் ஏதோ பேசிக்கிட்டிருக்கான், ராசாத்தி அழுதுகிட்டு நிக்குது"
".... இல்லயே, ராசாத்திக்கு தெரிஞ்ச பையந்தானே அன்பு"
"இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல ஈரோ. நான் அவன புடுச்சி நல்லா சத்தம் போட்டு உட்டுட்டேன். இனிமே மாடிப்பக்கம் வர்ற வேலை வச்சுக்காதே. ஈரோட்ட பேசணும் அவரு இருக்கிறப்ப வான்னு சொல்லி விரட்டி உட்டுட்டேன்"
"அப்படியா??"
எச்சரித்துவிட்டு (முனிஸிபாலிடி பியூன்னா சும்மாவா?) அவர் கீழிறங்கிச் சென்றுவிட்டார். ஈரோவுக்கு குழப்பமாகி விட்டது. என்னடா இது ஏதும் பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டே கம்ப்யூட்டர் சென்டருக்குள்ள போனாரு.
ராசாத்தி அன்னிக்கு தாவணி கட்டியிருந்துச்சு. கருப்புத்தாவணி. செம்பருத்தி செடி கருப்பு இலையா நின்னா மாதிரி! மூணு கம்ப்யூட்டர் அறையில நடு சீட்டுல உக்காந்திக்கும் ராசாத்தி. ஒருக்கா ஈரோ ஒனக்கு முட்ட கண்ணுன சொன்னது ராசாத்தி, 'எங்க என் கண்ண சிமிட்டாம பாருங்க பாப்பம் முதல்ல கண்ண சிமிட்டினவங்க தோத்தாங்கன்னு' சொல்லிச்சு. ஈரோவால ஒரு நிமிசத்துக்கு மேல ராசாத்தி கண்ண சிமிட்டாம பாக்க முடியலே... ராசாத்தி கண்ண சிமிட்டாம பாத்துட்டே இருந்தது..!
ராசாத்தி தாவணி நுனில கண்ணத் தொடச்சுக்கிட்டு இருந்தது. ஈரோ உள்ள போனாரு,
"வாங்க"
"என்னாச்சு, டல்லா இருக்கே?" "இல்லியே"
"அன்பு வந்தாப்டியா?"
தலைய மட்டும் ஆட்டுச்சு ராசாத்தி.
மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது.
"எதாவது பிரச்சினையா?"
"அதெல்லாம் ஒண்ணிமில்லை"
சிமிட்டாத கண்கள் ஏனோ அப்போது தரை நோக்கியிருந்தன. அடர்த்தியாய் காதுகளை நிரப்பியது நிசப்தம். ஈரோ ராசாத்தி பக்கத்திலே போனாரு. ராசாத்தியின் தலை சாய்ந்த முதுகின் மிகுபரப்பில் வெயில் மஞ்சள் கண்கூசியது.
"எங்கிட்ட சொல்லேன்.."
"..."
"அன்பு கூட எதுவும் பிரச்சினையா"
"..."
"எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
தலையை நிமிரவேயில்லை. கீழே அலுவலகம் தொடங்கியிருந்தது. கமிஷனர் கார் வந்த சத்தம் கேட்டது.
"நாங்கேக்கிறது காதுல விழுதா இல்லியா?"
தலை நிமிரவேயில்லை.
"இங்க உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நான்தான் பாத்துக்கணும்."
"...."
"............ ஒரு அண்ணன் மாதிரியாவது நெனச்சு எங்கிட்ட சொல்லக்கூடாதா..?"
படக்கென்று தலையை நிமித்தி, சிமிட்டாத கண்களில் சரசரவென கண்ணீர் பொங்க, தாவணியை வாயில் கதக்கித் தேம்ப ஆரம்பித்தாள் ராசாத்தி.
(முற்றும்)
- பச்சப்புள்ள யாருன்னு கேக்க மாட்டீங்கதானே? அதே மாதிரியே ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!
Wednesday, July 29, 2009
பச்சப்புள்ள - பார்ட் 2 அல்லது பால்நுரை படலம்
Tuesday, July 28, 2009
பச்சப்புள்ள - பார்ட் 1

சென்டர் நிர்வாகிசொன்னது கரெக்டுதான் - பயங்கரமாத்தான் டைப் பண்றாங்க!!!
(தொடரும்...)
பின்குறிப்பு:
லென்த் ஓவராயிருக்குன்னு நம்ம தீஅதீ வாசகர்கள் வேட்டிய மடிச்சு கட்டுவதால் (அடிக்கவா இல்ல ஓடவான்னுதான் தெரீல) இந்த இடுகைய பிச்சுப் போடலாங்கிற முடிவுக்கு வந்திடுச்சு நம்ம காலடியின் காறி(த்துப்பி)ய கமிட்டி (கமிட்டி மெம்பர்கள் லிஸ்ட் - நாளை வெளியிடப்படும்!!!) . இதையும்ஓவர் லென்த் என்று ஃபீல் பண்ணுபவர்களுக்கு கீழ்கண்ட குறிப்புகள் உதவும்:
1. உங்க மானிட்டர் ஸ்க்ரீன் சைஸ் அட்லீஸ்ட் 10" ஆவாது இருக்கணும். செல்போன் ஸ்க்ரீனுக்கு இது செல்லாது, செல்லாது!
2. என்னதான் ஆபிஸில மானேஜர் கண்ணில மண்ணைத் தூவிட்டு ப்ளாக் படிக்கிறதுன்னாலும், விண்டோ சைஸை இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் பெரிசு பண்ணிக்கிட்டீங்கன்னா புண்ணியமா போவும்
3. இருந்தாலும் இன்னும் சுருக்கமா வேணும்னு கேக்கிறவங்க இந்த இடுகைய அப்படியே ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து அதை ஒரு பால் மாதிரி ஆக்கி பின் விரித்துப் படிக்கவும்!
Saturday, July 25, 2009
கருப்புச்சாமி காத்த ரகசியம்
சைக்கிளில் வரும் குமரிகள், டயர் காற்றடிக்க மகுடி அண்ணன் சைக்கிள் கடையில் நிற்க வேண்டிவரும். உதவி செய்வதாக காளி சிலசமயம் சைக்கிளுக்கு காற்றடித்துக் கொடுப்பான். அது என்ன பெரிய வேலை கம்ப்ரசர் அழுத்தித் தேக்கிய காற்றை பைப்பில் இழுத்து வர வேண்டும். அப்புறம் இரண்டு மவுத்துகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும். மவுத் என்றால், சைக்கிள் சக்கர மவுத்தும், ஏர் பைப்பின் மவுத்தும் மட்டுமே.
குமரிகள் கொள்ளை அழகாயிருப்பதுக்கு காளிதாஸை குறை சொல்ல முடியுமா?அப்படிதான் ஒருமுறை ஒரு பத்தாம்பு படிக்கும் வாலைக்குமரி மகுடி அண்ணன் சைக்கிள் கடை வாயிலில் நின்றாள்.
"ஏனுங், ஏர்.."
மகுடி அண்ணன் அப்போதுதான் ஒரு சைக்கிளுக்கு ஓவர்ஹால் செய்து கொண்டிருந்தார். சற்று தாமதமாகவே பக்கத்து ஒர்க் ஷாபிலிருந்து பாய்ந்து வந்தான் நம்ம காளி.
"இருங்கண்ணா, நான் பாத்துக்கிறேன்"
என்று சைக்கிளில் சாய்ந்து நிற்கும் கிளியைப் பார்த்து சிரித்தவாறே..சைக்கிளைப் பிடித்தவாறே ஒரு சிற்றிளம்பெண், அவளை அண்ணாந்து பார்த்தவாறே காற்றுபிடிக்கும் ஒரு பரபர இளைஞன். வானத்தில் ஆரஞ்சு சுளைகளை உறித்து வீசிக்கொண்டே இறங்கும் மாலைச்சூரியன். நினைத்துப்பாருங்கள்.. ஒரு கவிதை மாதிரி இல்லை? காளியும் இப்படி காற்றாக கசிந்து பறந்து கொண்டிருந்தான்.
"டுப்ப்ப்" என்ற வெடிச்சத்தம் கேட்டுக்கும் வரை. ஆமாம்.. கொள்ளவுக்கு மீறினால் எதுவும் வெடித்துத்தானே சிதறும்? டயர் வெடித்த அதிர்ச்சியில், சைக்கிளை காளியின் மேலேயே போட்டுவிட்டு கத்த ஆரம்பித்துவிட்டாள்.
"மரியாதயா டயரை நீங்கதான் மாத்திக்கொடுக்கோணும். இதுதான் காத்துப்பிடிக்கிற லட்சணமா?"
காளிதான் அசரமாட்டானே?
"ஏன்.. சத்தம் போடறே, நான் நல்லாத்தான் காத்து பிடிச்சேன், உன் டயரு லட்சணம் அப்படி"
அப்புறம் மகுடி வந்து சமாதானம் செய்து வேறு டயர் மாற்றித் தருவதாக பைசல் பண்ணிவைத்தார். இது காளி பற்றிய ஒரு சின்ன அறிமுகம்தான். இனி வரப்போவதுதான் மெயின் பீஸ்.
மெயின் பீஸ்: காட்சி-1
சாயந்திரம் ஏழு அல்ல எட்டு மணி வாக்கில் வீடு அடைவான் காளி. ஒர்க் ஷாப்பில் அனைத்து நண்பர்களும் காலையிலிருந்து மாலை வரை ஒன்றாய் கும்மியடித்திருந்தாலும்.. இரவு வீடு திரும்பியதும், சாப்பிட்டு முடித்துவிட்டு பக்கத்து வீட்டு நண்பர்களுடன் ஒரு இரவு உலா போவது வழக்கம்.
இந்த உலாவில் கருப்புச்சாமியும் கிருஷ்ணனும் உண்டு. கருப்புச்சாமி ஒரு கொத்தனார். கிருஷ்ணன் கார் டிரைவர். எல்லோரும் ஒரே ஸ்கூலில் ஒன்றாக படித்து, ஒரே தெருவில் வாழும் நண்பர்கள். அப்போதைக்கெல்லாம் அவர்களுக்கு வயது இருபதுதான் இருக்கும். கிருஷ்ணன் முதலில் காளி வீட்டுக்கு வருவான்.
"சாப்டியா, சரி வா போயி கருப்புசாமிய பாத்துட்டு வரலாம்"
எதுக்குடா இந்நேரம் வெளிய கிளம்பீட்டிங்க என்ற காளியின் அம்மா கேள்விக்கு கருப்புச்சாமிய பாக்கப் போறோம் என்றும், கருப்புச்சாமி அம்மா கேட்கும் இதே கேள்விக்கு காளியப் பாக்கப் போறோம் என்றும் ரெடிமேட் பதில்கள் வரும்.
"வீட்டுலேயே டீ, காப்பி, மிக்சர், சாப்பாடுன்னா நல்லாதான் கவனிக்கிறாங்க. சிகரெட் ஒண்ணு மட்டும் பத்த வச்சுக் கொடுத்தாங்கன்னா எதுக்கு வெளிய சுத்தப்போறோம்..?" என்று கிருஷ்ணன் அலுத்துக் கொள்வான்.
கருப்புச்சாமியும் சேர்ந்தவுடன் மூவர் அணி மேற்கிலுள்ள கடைப்பக்கமாக நகரும். கடைப்பக்கமுள்ள திண்டில் உட்கார்ந்து கொண்டு புகைப்பது வழக்கம். சிலசமயம், கருப்புச்சாமி ஒரு உந்துதலால் கேட்பான்,
"டே காளி, ஆயி போயிட்டு வரலாமா?"
"அதெல்லாம் வீட்டிலேயே போயிட்டு வரமாட்டீங்களாடா?" என்று குமுறுவான் கிருஷ்ணன்.
ஒரு நாள் கிருஷ்ணன்,
"காளி ரொம்ப பசியாயிருக்குடா, பக்கத்துல புரோட்டா போடறான். போயி சாப்பிடலாமா?" என்று கேட்டான்.
"சரி.. எனக்கு ஒரு கொத்துப் புரோட்டா" என்று தயாரானான் காளி. அன்றிலிருந்து இவர்கள் இருவரும் திண்டில் காத்திருப்பதும், கிருஷ்ணன் பழுப்புநிற காரில் வந்து இறங்குவதும், புரோட்டாக்களும் கொத்துப் புரோட்டாக்களும் தின்பதுமாய் கதை தொடர்ந்தது.
"கருப்பா, ஆயி" என்று காளியின் உந்துதலில் இருவரும் வேலையை முடித்துக் கொண்டு திரும்ப திண்டு நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். இரவு ஒன்பது மணி. சோடியம் வேப்பர் வெளிச்சங்கள் பொழுதை பழுப்பாக்கிக் கொண்டிருந்த சமயம். தூரத்தில் ஒரு கார் வந்துகொண்டிருந்தது.
Thursday, July 23, 2009
காளிதாஸ் ஒர்க் ஷாப்

காளிதாஸ் அப்பா அவன் பத்தாவது படிக்கும்போதே செத்துவிட்டிருந்தார். அண்ணன் மோகனுடன் சேர்ந்து அவனின் மோகன் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தான். அது ஒரு டூ வீலர் ஒர்க் ஷாப்.
வேலை போக மீதியிருக்கும் நேரங்களில் புகைத்தும் நண்பர்களோடு கதைத்தும் நாட்கள் பறக்கும். பின் சில வருடங்களில் புகைக்கும் நேரத்தில் மீந்ததே வேலை செய்யும் பொழுது எனக் கொள்ளலானான் காளி.
கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப் படத்தெரியாது. அடர்ந்து அழுக்கேறிய சுருள் முடி. பெண்கள் (வயது,தோல் வித்தியாசமெல்லாம் கிடையாது) எதிர்பட்டால் தலையின் பக்கவாட்டு கேசத்தை கைகளால் கோதி, முன்னுச்சியை உள்ளங்கையால் அழுத்திவிடுவான். இந்த எளிய ஒப்பனை, பெண்கள் அருகில் இருக்கிறார்கள் என்பதான குறிப்பாக காளியின் நண்பர்களுக்கு பயன்பட்டது.
"மாப்ள தல சைடு கோத ஆரம்பிச்சுட்டான்பா, எங்க பிகரு வருதுன்னு பாருங்கடா"
என்று தேட ஆரம்பிக்கலாம்.
காளியின் வாழ்க்கை டிவிஎஸ்50 போல எளிமையாக இருந்திருக்கலாம்தான். ஆனால் சாலை அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை. சிலசமயம் நம்மோடு வண்டியில் தொற்றிக் கொள்பவர்கள் செளகரியத்திற்கேற்பவும் உருள ஆரம்பித்துவிடுகிறது.
கடை பேரென்னவோ மோகன் ஒர்க் ஷாப்தான். இருந்தாலும் கடை எப்போதும் 5க்குமேல் காளியின் நண்பர்களாலும், கோல்ட் ப்ளேக் சிகரெட் புகையாலும் சூழ்ந்திருக்க, கடை விரைவில் காளிதாஸ் ஒர்க் ஷாப்பாகவே உணரபட்டது.
மோகன் தனியாக கடைதொடங்கியது இப்படிதான்:
"ஏண்டா? எப்ப பாரு சூர்யா பேக்கரி சந்துல நின்னு தம்மடிச்சுக்கிட்டே இருந்தா, கடைய யாரு பாத்துக்கிறது??"
மோகன், ஹான்ஸ் அல்லது கணேஷ் புகையிலையை வாயில் இடுக்கிக் கொண்டு பேசுவதால், ஒரு குழறலாகத்தான் வார்த்தைகள் வரும்.
காளி இதுக்கல்லாம் அசரமாட்டான்.
"மகுடி அண்ணன பாத்துக்க சொல்லிட்டுதான் போனேன். அஞ்சு நிமிசத்துல கடைய யாரு தூக்கிட்டு போப்போறா?" என்பான். மகுடி, பக்கத்து சைக்கிள் கடைக்காரர்.
".... குடிச்சுப் போட்டு கடைக்கு வரச்சொல்லுதா? இப்படியே பண்ணிட்டு இருந்தீனா ஒரு நாளைக்கு இல்லேன்னா ஒரு நா நல்லா மிதி வாங்கப்போற" "நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு இஸ்மாயில் கல்யாணத்தில தண்ணியப் போட்டு கடையிலேயே வாந்தி எடுத்து படுத்துக் கிடந்தயே?"
பிறகு, நீயே இந்தக் கடையைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு சில கி.மீக்கள் தள்ளி மோகன் தன் பழுது நிலையத்தை நிறுவ வேண்டியதாயிற்று!
காளிதாஸ் ஒர்க் ஷாப் உருவான கதை இதுதான்.
டிவிஎஸ், யமஹா, சுசூகி, பஜாஜ் என அனைத்து விதமான இருசக்கர வாகனங்களும் பழுது பார்த்து, குறித்த நேரத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளித் தரப்படும். பெண்கள் என்றால் வீடுவரை வந்து வண்டி டெலிவரி செய்யப்படும். சிலசமயம் கூலியாக வெறும் சிகரெட்டுகளோ அல்லது சரக்கோ, அல்லது பணத்துடன் சரக்குவரியும் சேர்த்து வசூலிக்கப்படும். வண்டி சரி செய்யப்பட்டபின் காளி ட்ரையல் பாத்துவிட்டுதான் கொடுப்பான். 50சிசி வண்டிகளுக்கு ட்ரையல் அவ்வளவாக சிரத்தை எடுக்க மாட்டான். 100சிசி என்றால் ட்ரையல் மணிக்கணக்காகும். சிலசமயம் தென்படும் பெண்களைப்பொறுத்தும் இது அமையும்.
இப்படித்தான் ஒரு சாயங்காலம், எதிர்மாடியிலுள்ள சபரி ஸ்டுடியோஸ், தன் புத்தம்புது யமஹா ஆர்எக்ஸ்ஜியை காளிதாஸ் கடையில் வந்து நிறுத்தினார்.
"தம்பி, ரியர் வியூ மிரரை கொஞ்சம் டைட் பண்ணிக் கொடுப்பா"
"சரிங்ணா. வேலையா இருக்கேன்.. இப்ப வண்டிய விட்டுட்டு போங்க, ரெடி பண்ணிட்டு, நானே கொணாந்து வண்டிய விடறேன்"
என்று சொல்லிவிட்டு, அப்படியே தம், டீக்கு காசும் வாங்கிக் கொண்டான். ரியர் வியூவை சரி செய்தான். புது வண்டியின் வாசம் காளியை வா என்றது. வண்டியை எடுத்து சைக்கிள்கடை மகுடி அண்ணனைப் பார்த்து,
"ஒரு ட்ரையல் பாத்துட்ட வந்துறேண்ணா"
என்று முறுக்கிக் கொண்டு கிளம்பினான்.
சரியாக 10 நிமிடங்கள் கழித்து வந்தான் காளி.. வண்டியை உருட்டிக் கொண்டு.
அப்போதுதான் நண்பர்கள் குழாமும் வந்து சேர்ந்திருந்தது.
"என்னடா காளி, எங்க போயிட்ட? ஏன் வண்டிய உருட்டிகிட்டு வர்ரே?"
அமைதியாக வண்டியை ஸ்டாண்டிட்டு விட்டு, ஒர்க் ஷாப்புக்குள் வந்து உட்கார்ந்தான்.
அப்போதுதான் வண்டியைப் பார்த்த நண்பன் பாபு,
"வண்டி ஆக்சிடண்ட் ஆயிருக்குடா" என்று அலறினான்.
முதலில் வண்டியைப் பார்த்த நண்பர்கள் அதன் நெளிவு சுழிவுகளைப் பார்த்த பின், தங்கள் நண்பனையும் நோக்கினார்கள். அங்கங்கே சிராய்ப்பு. கால்முட்டி பக்கம் பேண்ட் கிழிந்திருந்தது.
"காளி, என்னடா ஆச்சு"
"ட்ரையல் பாக்கலாம்னு போனேன். போலீஸ் ஸ்டேஷன் வளவுல வரும்போது, நல்லா ஒரு கட் போட்டேன்"
காளிதாஸ் வண்டியோட்டும் விதம் அப்படிதான். வளைவுகளை கண்டால் வேகம், அதிவேகம் கொள்வான். சாலை வளைவானாலும் வரி சேலை வளைவானாலும் சரி! சாலை வளைவுகளில் அவன் பிரயாணிக்கும் போது வண்டியை சாய்க்கும் கோணம் அவ்வளவு சுவாரசியமானது.
"கட் நீ எப்பயும் போடறதுதான??"
"இல்லடா மாமா.. வண்டி புதுசாயிருந்துச்சா, நல்ல பிக்கப் வேற, கொஞ்சம் வேகமா கட் போட்டேன். வண்டி ஃபுட் ரெஸ்ட் ரோட்ல பட்டு தூக்கி போட்ருச்சு"
வண்டியின் ஃபுட் ரெஸ்ட் சாலையில் உரசும் அளவுக்கு சாய்த்து என்றால் அது எப்படிப்பட்ட ட்ரையல் என்று நாமே யூகிக்க வேண்டியதுதான்.
வண்டியை சுற்றி என்னடா கூட்டம் என்று பார்க்க வந்த சபரி ஸ்டூடியோக்காரர்.. தன் புது வண்டியைப் பார்த்ததும் அப்படியே தலையில் கைவைத்து,
"ஐயோ" என்றார்.
கண்ணாடி சரி செய்ய வந்த வண்டி, முன்னாடியும் பின்னாடியும் செப்பனிட வேண்டியதாய் பரிதாபமாய் நின்றது.
"ஒண்ணும் பிரச்சனையில்லேங்ணா, நாளைக்கு வண்டிய புதுசு மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்துரேன்"
"புதுசு மாதிரியா?? வண்டியே புதுசுதாண்டா!!!"
என்று நொந்தவராய் அன்று நடந்தே வீட்டுக்கு போனார் ஸ்டூடியோக்காரர்.
காயங்களை ஆற்றவும், துக்கத்தைத் தேற்றவுமாக காளியை சூர்யா பேக்கரி பக்கமாக நகர்த்திச் சென்றனர் நண்பர்கள். டீயும் புகையுமாய் சம்பவத்தைப் பற்றி அலச ஆரம்பித்தனர். விபத்தான வண்டியை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும், முட்டி காயத்துக்கு டாக்டரிடம் போகலாமா இல்லை டாஸ்மாக்கே போதுமா என்று ஆலோசித்தனர்.
பேச்சு வளர்ந்து கொண்டும், சிகரெட்டுகள் தீர்ந்து கொண்டும் இருந்த ஒரு கணத்தில், காளி ஏதோ ஒரு புள்ளியை வெறித்தவனாய், திடீரென வாயில் சிகரெட்டைப் பற்றிக் கொண்டு தலையின் இரு பக்கவாட்டிலும் கோதி, முன்னுச்சி முடியை அழுத்தி விட்டான்.
இந்த ஒப்பனைக் குறிப்பின் அர்த்தம் உணர்ந்த நண்பன் பார்த்தி சொன்னான்,
"முட்டி உடைஞ்சு ரத்தம் கொட்டினாலும், காளிக்கு குட்டிய பாத்தா எல்லாம் பறந்து போயிருதுடா"





