Friday, April 8, 2016

எட்டாம் எண் செருப்பு


திருமணத்திற்கு முன் மனைவி 'எனக்கு தூசு என்றாலே ஒவ்வாது, டஸ்ட்-அலர்ஜி' என்று அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஆஹா, இவர் வீட்டில் ஒரு மயிரிழை அளவுக்கு ஒட்டடை தெரிந்தாலும் ​பொறுக்காது பாய்ந்து சுத்தம் செய்துவிடுபவர் போல என்று பெருமையாக எண்ணிக்கொள்வேன். தி.பின்தான் தெரிந்தது தூசு என்பது அல்ல அதை சுத்தம் செய்வதுதான் அம்மணியாருக்கு அலர்ஜி என்று. தன் உடலைச் சுற்றி சிலந்தி வலைப் பின்னியிருந்தாலும் அதை தன் சொந்தக் கைகளால் அகற்றமாட்டார் - டஸ்ட் அலர்ஜி!

இதற்கு நேரெதிராக, ஊரில் பெற்றோர்கள் என்ன பண்டிகை வரும் எப்படி வீட்டிற்கு வெள்ளையடிக்கலாம் என்ற கணக்கிலேயே காலண்டரையும் வீட்டின் சுவர்களையும் தடவிக் கொண்டிருப்பார்கள். காலண்டர்கள் இளைக்க இளைக்க வீட்டின் சுவர்கள் சுண்ணாம்புப் பூச்சால் ஒவ்வொரு வருடமும் வளர்ந்து கொண்டே வருகின்றன. ஒருவேளை தங்களின் பலத்தை ஒவ்வொரு வருடமும் சோதித்துக் கொள்ளும் பண்பாக வெள்ளையடித்தல் இருக்குமோ என்னவோ.

சுத்தம் என்பது என்ன?

அழுக்கை அகற்றுதல் - வாழத் தகுதியாக இருப்பிடத்தை பேணிக் கொண்டேயிருத்தல். இப்போது வீட்டில் இருப்பதைவிட இண்டர்நெட்டில் இருப்பதுதான் அதிகமாக இருக்கிறது. அங்கும் ஏகப்பட்ட தூசு, குப்பை அப்புறம் தே.இ. ஆணிகள். இன்பாக்ஸில் தேவையில்லாத மின்னஞ்சல்கள் (ஸ்பேம்) ஒட்டடைக் கட்டிக் கொண்டேயிருக்கின்றன. ஏன் இந்த மெயில் தினம்தினம் நமக்கு வருகிறது என்று யோசித்து முடிப்பதற்குள் அடுத்த மெயிலும் வந்துவிடுகிறது. இணைய வேகம்! பொறுப்பாக சென்று இது எனக்கு வேண்டாம் என்று சந்தாவிலக்கம் (unsubscribe) செய்தாலும் அதிலும் ஏதாவது செக்மார்க் வைத்து திரும்பவும் இன்பாக்ஸூக்குள் வந்துவிடுகிறார்கள். இதில் திரும்ப திரும்ப நம் கவனத்தை குவித்து நமக்கு தேவையேப்படாத பொருளை விற்றும் விடுகிறார்கள்.

அப்படி சமீபத்தில் வாங்கிய சப்பாத்து காலணி (shoes) ஒன்று காலைக் கடிக்கிறது. காலை மட்டுமல்ல காசையும். இதில் முதலில் வந்த அளவு பெரிதாக இருந்ததால் திருப்பி அனுப்பி - ஒரு அளவு குறைவாக எட்டு அளவில் வேறு ஜோடி வாங்கினேன். இரண்டே நாளில் அதன் விலையை 200 ரூபாய் கூட்டிவிட்டார்கள். எட்டாம் எண் அளவில் பாதம் வைத்திருப்பதற்கான தண்டனை போலிருக்கிறது!

யாரோ ஒருவருக்கு அல்லது நிறுவனத்துக்கு இத்தனை பலம் இருக்கிறது - தினமும் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப, அதில் உங்கள் கவனத்தைக் கோரும் விதமாக வடிவமைக்க, அயராமல் உங்களைத் தொடர அப்புறம் உங்களை ஒரு பொருள் வாங்க வைக்க என ஒரு பெரும் திட்டமிட்ட அணுகுமுறை இதில் ஒளிந்து இருக்கிறது.

தேர்தல் நெருங்க நெருங்க, இதையேதான் நாம் பிற ஊடகங்களிடமிருந்தும் பெறுகிறோம். தொடர்ச்சியாக நீங்கள் படிக்கும் பத்திரிக்கை அல்லது தொலைக்காட்சி அல்லது வலைத்தளம் எதுவென்று சொல்லுங்கள் - நீங்கள் யாருக்கு ஓட்டுப் போடப் போகிறீர்கள் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்கு ஊடகதந்திரங்களால் சூழப்பட்டுக்கிடக்கிறோம்.  வாக்களிக்கப் போவதற்கு முன் சில ஒட்டடை வேலைகள் நம் உள்மனதுக்குள்ளும் செய்து கொள்ள வேண்டியிருக்குமோ என்று இந்த தேர்தல் அவசரம் சொல்கிறது.

எட்டாம் எண் செருப்பு சில தினங்களுக்கு காலை உறுத்தும் - பொறுத்துக் கொள்ளலாம் அப்புறம் பழகிவிடும். ஐந்தாண்டுகளும் உறுத்துகிறமாதிரி நம்மை ஏதும் 'ஆர்டர்' செய்ய வைத்துவிடுவார்களோ என்று ஊடகங்கள் மேல் பயமாகவேயிருக்கிறது.

No comments: