Monday, April 4, 2016

மூன்று தர்பூசணிகள்

தேவைகள் குறையுமளவுக்குத் தெய்வத்தன்மை பெறுகிறோம். யார் சாக்ரடீஸ் சொல்லியதா? மறந்துவிட்டது.

அலுவலக நண்பர்களில் பலர் இப்படித் தெய்வத்தன்மை பெற்றவர்களாய் தெரிகிறார்கள். மதிய உணவு வேளையின் போது நண்பர் ஒருவர் கொஞ்சம் வயிறு சரியில்லை என்று முறையிட்டார். எல்லோரையும் ​போல என் பங்குக்கு ஒரு கைவைத்தியம் சொல்லி​ வைத்​தேன். காலையில் நெல்லிச்சாறு குடித்தால் வயிறு சுத்தமாகும் என்று. வயிற்றுவலிக்காரர் தடக்கென்று நிமிர்ந்து கொண்டார்: 'ஏன் சாறு பிழிய வேண்டும்? அப்படியே கடித்துக் கடித்துத் தின்னவேண்டியதுதானே? தேவையில்லாத மின்விரயம்!' என்றார். அதுவும் சரிதான் - நெல்லியைக் கத்தியால் நறுக்குவது, மிக்ஸியில் அரைப்பது, வடிப்பது அப்புறம் அதன் தோலை உபரியாக்குவது போன்ற கார்பன் காலடிகளைத் (Carbon Footprint) தவிர்த்து விடலாம்தான். வயிற்றுவலியையும் மீறிய நண்பரின் தெய்வத்தன்மை அன்று புலப்பட்டது.

இன்னொருவர் இருக்கிறார். பாசமாக என்னை 'நீ என் நண்பேன்டா' என்று வாரிக்கொண்டாலும். அவர் என்னிலும் மூத்தவர். பணியிலும் இருபடிகள் மேலிருப்பவர் (இதுவே அவரின் தெய்வத்தன்மை எனக்கு உணர்த்த போதுமானதுதான்) அவரின் சிறப்புகளில் ஒன்று: வெறுங்காலில்தான் ஓடுவார் - சாதாரணமாக ஒரு முழு மராத்தான் அளவுக்கு - அதாவது 41 கிலோமீட்டர்கள். காலணிகள் மேல் என்ன கோபம் என்று தெரியவில்லை. ஒருமுறை காலில் உள்ள ஆணிகளை காட்டினார், வெற்று பாதங்களில் ஓடுவதால் ஏற்பட்டனவாம். திருவல்லிகேணியிலிருந்து பெருங்குடியிருக்கும் அலுவலகத்திற்கு தினமும் பறக்கும் ரயிலில் பாதச்சோடுகளோடு வருவார் போவார்.

இதன் காரணமாகவே அவரின் கார் பலமாதங்களாக அசையாமல் திருவல்லிகேணியைத் தாண்டாமல் சென்னை மாநகரின் தூய்மைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் பாருங்கள், அதை எப்போதாவது இயக்கும் வேளையில் அதன் மின்கலம் தீர்ந்துபோய் கார் அசைய மறுக்கும். இது அடிக்கடி நடப்பதால் 'ஏம்பா வீட்டிலேயே வச்சுக்கிற மாதிரி ஒரு ஜம்ப் ஸ்டார்ட் பாட்டரி கிடைக்குமா?' என்று கேட்டார். அடடே! காரை அசைக்காமல் வைத்திருப்பதற்கு கூலியாக தனியாக ஒரு மின்கலம் தேடுகிறாரே? இவர் தெய்வத்திண்ட தெய்வம் என்று அன்று புரிந்து கொண்டேன்.

தேவைகளைச் சுருக்குவது என்பது கவனம் கூடிய திட்டமிடப்பட வேண்டிய செயலாக இருக்கிறது. சுருக்கிக் கொள்வதின் முதல் அடி என்னவென்றால் உங்களுக்கு அந்த அதிகாரம் இருக்க வேண்டும். சரி நமக்கும் கொஞ்சமாவது தெய்வத்தன்மை அல்லது சிறுதெய்வத்தன்மை அதுவும் கூட இல்லாவிட்டால் ஒரு பூசாரித்தன்மையாவது வாய்க்கட்டுமே என்று குறைக்கும் அந்தஸ்துள்ள என் தேவைகளை நோட்டமிட்டேன். கார் பயன்பாடு கட்டுப்படுத்துவது.. ஆனால் தனியாக மின்கலம் வாங்கி மின்னேற்றும் சக்தி கிடையாததால் கார்-பகிர்வு முறையில் (car pooling) அலுவலகம் சென்று வருகிறேன். ஏஸி, மின்விசிறி, சோப்பு, பவுடர் இதெல்லாம் நமக்கு தேவையே இல்லீங்கோ என்று ஹீலர் பாஸ்கர் சொன்னதைக் கேட்டு அதையும் முயன்று பார்த்தேன். வீட்டில் என்னை ஒரு காட்டேரி அந்தஸ்துக்கு சுருக்கும் நிலை ஏற்பட்டதால் இந்த பூசாரித்தன்மை வாய்ப்பும் பறிபோனது!

இருந்தும் அவரவர் திறமைக்கேற்ப தன்னை ஒரு சாதாரண எளியனாக்கிக் கொள்ளும் முனைப்புகளைப் பார்த்து வியக்கிறேன். தெய்வத்தன்மையை விடுங்கள் உலகத்துக்கு நாமளிக்கும் கார்பன் சதவீதத்தைக் குறைத்துக் கொள்ளும் முனைப்பே இதில் முக்கியம்.

இன்னொரு அலுவலக நண்பர் - வாரக்கடைசியில் விவசாயம் செய்கிறவர். அதுவும் இயற்கைமுறை விவசாயம். வீக்என்ட் விவசாயி என்று சொல்லலாம். இதற்காக அவரும் அவர் நண்பர்களுமாக சென்னையிலிருந்து சுமார் 100கிமீ தொலைவிலுள்ள கிராமத்துத் தோட்டத்துக்கு காரில் பயணித்து, அங்கு சென்று தோட்டப்பணிகளை முடித்துவிட்டு திரும்பவும் 100 கிமீட்டர்களில் சென்னை திரும்புவர். சமீபத்தில் பயிரிட்ட தர்பூசணிகளும் முள்ளங்கிகளும் விளைந்து விட்டன. அவை முறையே இயற்கை-தர்பூசணி மற்றும் இயற்கை-முள்ளங்கிகள் என்று பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப் பட்டன. அதை வாங்குவதற்கான படிவங்களும் கூகிள் Docs மூலம்  பிற நண்பர்களுக்கு வாட்ஸ்ஏப் குறுஞ்செய்தியாக வந்துசேர்ந்தது.
இன்னொரு நண்பர் மூன்று தர்பூசணிகளை கொள்முதல் செய்ய விரும்பினார். இந்த பரிவர்த்தனை அனைத்தும் இணைய வாயிலாகவே முடிந்து விட்டது. அட, உணவு விநியோக சங்கிலியில் கார்பன் காலடிகள் எப்படிக் குறைக்கப்பட்டுவிடுகின்றன என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்!

பிறகுதான் தெரிந்து கொண்டேன்: அந்தத் தர்ப்பூசணிகள் கிராமத்து தோட்டத்திலிருந்து முதலில் ஒரு டிரக்கில் சென்னை வந்து இறங்குகின்றன. பிறகு விவசாய-நண்பரின் காரில் 3 தர்பூசணிகள் மட்டும் அலுவலகம் புறப்பட்டுப் போயின. அப்புறமாக வாங்கிய நண்பரின் காரில் ஏறிக்கொண்டு விட்டன. மொத்தமாக தர்பூசணிகள் 150 கிலோமீட்டர்கள் பயணித்துவிட்டிருக்கின்றன. அதே கிராமத்திலுள்ள வேறொரு விவசாயியின் (ஆயுட்கால விவசாயி) தோட்டத்து தர்பூசணிகள் எவ்வளவு கிலோமீட்டர்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கும்? இவையிரண்டில் எந்த தர்பூசணியின் கார்பன் காலடிகள் குறைவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

தர்பூசணி சாப்பிடும் தேவையைக் குறைத்தாவது தெய்வ அல்லது பூசாரித்தன்மை பெற்றே விடுவது என்று முடிவு செய்துவிட்டேன்!

No comments: