Monday, June 15, 2009

ரோசாமகன் ஆரம்பித்த பிளாக்

அவசரமாக ஒரு ப்ளாக்.. அதுவும் தமிழில் ஆரம்பித்து தமிழ் கூறும் சைபர் உலகத்திற்கு தன்னை தெளிவுபடுத்திக் கொள்ள​வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது ரோசாமகனுக்கு.

இதில் இரண்டு சிக்கல்கள்: தமிழை க்யூவெர்ட்டி விசைபலகை கொண்டு எழுத வேண்டும். இரண்டாவது எழுதிய இடுகைகளை படிப்பதற்கு ஆட்கள் வேண்டும்.
தமிழில் டைப் அடிப்பது கொஞ்சம் பிடிபட்டு விட்டது எனலாம். ப்ளாக்கிற்கான ரசிக சிகாமணிகளைச் சேர்ப்பது, ஹிட் ரேட் எகிற வைப்பது இதெல்லாம்தான் ரோசாவுக்கு​ மவுஸ் பந்தை முழுங்கியது போலாயிற்று.

கிடைக்குதேன்னு கண்ட கண்ட வலைமனைகளும், கண்டதது கொண்டு சேர்த்தவைகளுமாய் இப்படி இவனை கண்ணுக்குத் தெரியாத வலையில் சிக்க வைத்துவிட்டன.

"ஒண்ணும் தெரியாத ஓணாண் பயலுங்க எல்லாம் வெப்ஸைட்டே வச்சிருக்கானுங்க.. ​தமிழ் எழுத்தாளன்னா கட்டாயம் வெப்ஸைட்டு போட்டே ஆகணும்கிறதுதான் இப்ப டிரெண்ட். நாம வாழ்ந்தோங்கிறதுக்கு அடையாளமே கூகிள் போட்டா நம்ம பேருல ஒரு என்ட்ரியாவது வரணுங்கிறதுதான்.. நாம செத்தாலும் நம்ம ஸைட்டு சாகாதுடா.."

இப்படி இக்பால் உசுப்பி விட்டது, ஆன்டிக்யூட்டி (ரோசா இதை ஆண்டிக்குட்டி என்றுதான் சொல்வான்) விஸ்கி மேல் அடித்து சத்தியம் ​செய்ய ​வைத்துவிட்டது.

"ச்சீர்ஸ்.. ஆரம்பிக்கப் போற வலமனைக்காக..."


அன்று வயிற்றில் விழுந்த நெருப்புத் திரவத்தோடு தன் இருப்பை இடுகையிட்டுக் காட்டும் திட்டத்தையும் சேர்த்தே மிடறிட்டான் ரோசாமகன். இக்பால்​போதை தெளிந்த கையோடு கோரமங்களாவிலுள்ள தன் அறைக்குத் திரும்பி அப்படியே ஸான்டா கிளாராவுக்கும் (அமெரிக்கா) ப்ராஜெக்ட்டுக்காக போய்விட்டான். இனி இக்பாலுக்கு இமிக்ரேஷன் இம்சையே பெரிதாயிருக்கும்.. யா அல்லாஹ்! இடுகையாவது குடுவையாவது.. இவனோட பங்கையும் நாமே ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான் என்று திரும்ப ஒரு முறை தனியாக ஆண்டிக்குட்டி ​மேல் அடித்து சத்தியம்.. இல்லை இந்தமுறை சங்கல்பம் செய்து கொண்டான்.

எப்படியாயினும்
ரோசாவின் கலை ஞானத்தையோ, இலக்கிய அறிவையோ குறைத்து மதிப்பிடலாகாது. கல்லூரிக் காலங்களிலிருந்தே யாரும் பார்த்தறியாத படித்தறியாத படங்கள், புத்தகங்கள் என்றிருப்பான்.
அசாதாரண ஞாபகமறதி காரணமாக படித்தது எல்லாம் மறந்துவிடுவதாய் இருக்கிறது, எனவே யாரும் படிக்காத விஷயத்தை பேசினால் தப்பு கண்டுபிடிக்க நாதி இருக்காது என்ற ஞானத்தைக் கண்டுணர்ந்தவனாக ஐரோப்பிய, அமெரிக்க, ருஷ்ய, லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஈழ, மேல, கீழ என நண்பர்கள் மிரண்டு ஒதுங்கும் தத்துவங்களையும் கதைகளையும் (தமிழ் மொழிபெயர்ப்பில் படித்திருந்தாலும் அதை ஆங்கிலத்தில் ஒப்பிக்கும் கலை அவனுக்கு அசாதாரணமாக இருந்தது (ரிவர்ஸ் இன்ஜினியரிங்))

உள்ளூர்
தமிழ் எழுத்தாளர்கள் (ஆண்) தங்கள் மனைவியின், காதலியின், கள்ளக்காதலியின் தாலி, மோதிரம், பாத்திரம் போன்றவற்றை அடகு வைத்து பெயர்த்து கொண்டு வந்த சிறுகதைகள், குறுநாவல், கவிதை, நாவல் (கட்டுரையை ஏனோ தவிர்த்தே வந்தான்) வகையறாக்களையும், பெண் எழுத்தாளர்கள் தங்கள் கவிதை எழுத தெரியாத ஆண் நண்பர்களின் பேராதரவு, ​பெண்ணுரிமை அமைப்புகளின் ​போராதரவுடன் தங்களின் புகைப்படத்தோடு அச்சிட்டுக் கொண்டு வந்த இலக்கியங்களும் அவை காட்டிய உலகும், பேசிய வார்த்தைகளும் ரோசாவை தனிப்படுத்திக் காட்ட உதவின எனலாம்.

"புருஷனோட கால் ​சென்டர்ல எத்தி ஒதச்சிட்டு அவளோட காதலனோட ​மாரை நிமிர்த்திக்கிட்டு வீட்ட விட்டு போறா மாப்ள.. cock old ஆயிடுச்சுன்னா, cuckold பண்றது சகஜம் தானே அப்படின்னு போகுது கதை.."


"...படம்னா இது இல்லடா மச்சி.. நீ மார்க் ப்யூன்டே எடுத்த A Shredded Heart in the Dustbin படம் பார்த்திருக்கணும்... நாயைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டு ஹீரோயின்.. ஸாரி மெயின் கேரக்டர் அழும்​போது.. ஒரு பிஜிம் வரும்பாரு.."

'ஈசலின் இறகில் இரவின் வாசம்

ஒளிக்கற்றை முடிச்சுகளில் உலரும் மழைக்காற்று
கிளறும் கனவுகளின் பாசிப்படிவில்
ஒளிந்திருக்கும் முலைகளின் அலமாரி..'
போன்ற கவிதைகள் கூட எழுதித்தள்ளினான். இதுவே இலக்கிய உலகில் நுழைய உதவும் ஆகச் சிறந்த துருப்புச்சீட்டு என நம்பினான். ஆனால் நூலகத்தில் இருக்கும், இருந்துகொண்டே இருக்கும் மற்றும் வந்து கொண்டேயிருக்கும் கவிதை நூல்களின் எண்ணிக்கை கவிஞர்கள் மற்றும் கவிதாயினிகளின் (மற்றும் திருநங்கை கவிஞர்கள்) எண்ணிக்கையை விட குறைவாய் இருப்பதை பார்த்து, ஜனத்தொகை அதிகமில்லாத கலை துறையை (அது கட்டுரை எழுதுவதே என எண்ணினான்) ​தேர்ந்தெடுத்து இலக்கியவாதி ஆவதென உறுதி பூண்டான்.
ம்ஹும்.. அதற்குள் கல்லூரி வாழ்க்கை முடிந்துவிட்டதால் கலை வாழ்க்கைத் தடைபட்டு கம்ப்யூட்டர் வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது.

கல்லூரிக் காலத்தில், இலக்கியங்களை படிப்பதோடு மட்டும் தன் பணி நிறைந்துவிடுவதில்லை எனத் திடமாக நம்பியதால், அந்த படைப்பாளிகளை, படைப்பை படித்த படபடப்பு அடங்குவதற்குள் நேரிலேயே சென்று பார்த்து விடுவதை ஒரு ஆர்வமுடன் செய்து வந்தான். ரொம்ப தூரத்தில் (ரோமக்கரியான்வலசு, உக்கிபோடுபட்டி, கே.ஒத்தனூர்) இருக்கும் படைப்பாளிகள் எனில் எளிமையாய் அவர்களின் படைப்பின் சைஸை மிஞ்சாத அளவிற்கு கடிதம் எழுதி தன் சொந்த செலவில் அனுப்பி வைப்பான். சிலசமயங்களில் அந்த கடிதம் தந்த அதிர்வலைகளின் வேகம் தாளாமல் படைப்பாளிகளே ரோசாவைத் தேடி வந்து அதிர்ச்சி தந்ததுண்டு. அப்புறம் ஓல்ட்மங்க், பேக்பைப்பர் போன்றோர் துணையால் அது இன்ப அதிர்ச்சியாய் மாறலாகும். அச்சமயங்களில் ரோசா வேலை​வெட்டியில்லாததால் சரக்கு வகைகள் அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை.

மதி மங்கும் மதி மயங்கும் வேளைகளில் தனக்கும் படைப்பாளிக்கும் இடைவெளி வெகுவாக குறைந்து விடுவதையும், மெதுவாக - அனேகமாக ​ரெண்டாவது ஹாஃப் பாட்டில் ஆர்டர் செய்யும் போது - படைப்பாளியின் தளத்தை தான் எய்து விட்டதாகவும் - பாட்டிலை முடிக்கும் போது - படைப்பாளியையே மிஞ்சிவிட்டதாகவும் உணர்வான் ரோசா.
குடிநண்பராகி விடும் இலக்கியவாதிகளின் படைப்புகளை அதற்கு அப்புறம் ​ரோசாமகன் சீண்டுவதே இல்லை.


ஒருசமயம்
தானே சிறுபத்திரிக்கை ஆரம்பித்தால் என்ன என்றும் எண்ணியதுண்டு. அனேகமாக அது 7 அல்லது 9 மாதங்களுக்கு ஒருமுறை பரிமளிக்கும் இதழாக வந்திருக்க கூடும். தாது, நிழல், பரிச்சயம், காடு.. ​போன்ற பெயர்களை கூட தேர்வு செய்திருந்தான்.
சரி இப்போதைய பிரச்சினைக்கு வருவோம்...

ஷர்மா ரோசாவுடன் ஒன்றாக பணிபுரிபவன். இருவரும் புகை நண்பர்கள். ஒருநாள் ஒன்றாக ஸ்மோக்கிங் ஸோன் செல்லும் போது ஷர்மா கழிப்பிடம் சென்று வருவதாக சொல்லிச் சென்றான்.
திரும்பி வந்ததும் ரோசா கேட்டான்,


"இன்னைக்கே ரெண்டு தடவ டாய்லட் போயிட்டு வந்திட்ட போல"

சிகரெட்டை பற்ற வைத்தபடி ஷர்மா சொன்னான்,

"யோகி ஒருதரம் போவான், போகி ரெண்டு தடவ போவான், ரோகி எத்தன தடவ வேணாலும் போவான்."


இது
ஒரு ஹிந்தி பழமொழி. இதை ஹிந்தியில் அப்படியே சொல்லிவிட்டு ஆங்கிலத்திம் மொழிபெயர்த்தான்.
ரோசாமகனுக்கு இது ஒரு தத்துவம் போல பதிந்துவிட்டது. இப்படி ஒவ்வொருவனும் ஏதாவதொரு வகையில் அவனை உசுப்பி விடுவதாகப்பட்டது. ஹிந்தி கற்பிக்கும் இந்த தத்துவம் போல தமிழிலும் கட்டாயம் இருக்கும். அதை கண்டறிந்து விடுவது என இணையத்தில் தேடலானான்.

அப்படி கண்டறிந்ததுதான். குருபிரசாத்தின் வலைமனை - www.guruprasad-writer.com - குருபிரசாத் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரிதும்​போற்றப்படுகிற, தூற்றப்படுகிற ஆளுமை. குருபிரசாத்தின் பெயரை கூகிளிட்டுப் பார்த்தால் அனேகமாக 3,60,189 பக்கங்கள் கிடைக்கும். இணையத்திலும் பெரிய ஆளுமைதான் என்று எண்ணி அந்த இணையதளத்தை தினமும் படிக்க ஆரம்பித்தான்.
குருவின் சிறுகதை, நாவல், கவிதை, உரை, கட்டுரை, கட்டாத உரை, பயணக்கட்டுரை, பணக்கட்டுரை என எல்லாவற்றையும் ரசித்து மகிழ்ந்தான். இணையாக​ வேறு இலக்கிய ஆளுமைகளின் வலைப்பக்கங்களையும்​ தேடி அதை தன் ஃபேவரிட்டில்​சேமித்துக் கொண்டான்.

தமிழ் நவீன இலக்கியத்தின் இன்னொரு முக்கிய ஆளுமை சந்திரபுத்தர். ​மேற்கு தொடரச்சி மலையில் வாழும் நிர்வாண பெண் சாமியார்கள் பற்றிய அவரது நாவல் நீல ஓடை நித்திரை வாசகர்களை விட விமர்சகர்களால் அதிகம் படி படியென்று படிக்கப்பட்டும் கிழி கிழியென்று கிழிக்கப்பட்டும் மிகப்பெரிய பிரபலத்தை அடைந்திருந்தது.
கஞ்சாக்கவி என்று இலக்கிய நண்பர்களால் அழைக்கப்படும் தாழைக்கூத்தன் இந்த நாவலின் பின்ணனியை ஆராயும் பொருட்டும், நிர்வாண சாமியாரிணிகளின் பின்புலத்தை ஆய்வு செய்யும்​பொருட்டும் மேற்கு தொடர்ச்சி மலைக்கே​சென்று ஒரு மாத காலம் காடு மேடெல்லாம் சுற்றியலைந்தாராம்.

ஆனால்
தாழைக்கூத்தனால் எந்த நிர்வாணத்தையும் காணமுடியாமல் கடைசியில் ஒரு குரங்கால் கடிப்பட்டு நிவாரணம் பெறும் பொருட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.​
அதே மருத்துமனை கட்டிலில் ஒருக்களித்துப் படுத்தவாறே (குரங்கு கடித்த இடம் அப்படி) 90 பக்கங்களுக்கு அவர் எழுதிய மந்திப்பொய்யன் என்ற கவிதை சந்திரபுத்தரை கடுமையாக விமர்சித்திருந்தது. குருத்தோலை குறியன், குவாட்டர் பாட்டிலை புணர்ந்தவன் என்றெல்லாம் எழுதியது சந்திரபுத்தரை ஒரு வலைமனை​ஆரம்பிக்க தூண்டுதலாய் இருந்தது என்கிறது உலாத்தல் என்ற இலக்கிய மாத இதழ்.
குருபிரசாத்திற்கு ஆகாதவர் இந்த சந்திரபுத்தர்.. எனவே தாழைக்கூத்தனை குரு தன் வலைமனையில் சும்மா புகழ்ந்து தள்ளிவிட்டார். இதைக் கேட்ட தாழைக்கூத்தன் என்னை புணர்ந்து தள்ளிவிட்டாய் என்று ஒரு கவிதை எழுதியிருந்தார்.

ரோசாமகன்
இப்போது குருபிரசாத்தின் வலைமனையின் ரசிகனாகி விட்டான். இதை அவருக்கு அறிவிக்கும் பொருட்டு கடிதங்களும் அனுப்பினான். முறையே அவை குருபிரசாத்தின் நன்றி உரையோடு அவரது வலைப்பக்கத்தில் தினமும் பிரசுரமாகிவிடும்.
தன் தமிழ் எழுத்தை இணையத்தில் கண்டது ரோசாமகனுக்கு பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
ஒருமுறை குருபிரசாத் ஆப்பிரிக்க காங்கோ நாட்டு இலக்கியவாதி டுமிதுல் சுயம்போ பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டு, அவரது நாவல் ஒலிபெருகும் வெளி-யை அறிமுகப்படுத்தியிருந்தார். அதை படித்து விட்டு உடனே அந்த நாவலை வாங்கி இரவோடு இரவாக வாசித்துவிட்டு ஒரு விமர்சனத்தையும் எழுதி அனுப்பினான். இதுவே அவன் செய்த பெரிய தவறு. விமர்சனத்தோடு ஏனைய ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்களை இணையத்தில் தேடி அடிக்குறிப்புகள் எழுதி சுமார் 8 பக்கங்கள் அனுப்பியிருந்தான். ஆப்பிரிக்க கலாச்சாரம் எப்படி தமிழக குலவைச் சத்தோடு இணைகிறது, அந்நாட்டு நாட்டியம் எப்படி கும்மியோடு ஒத்திசைகிறது, ஈக்காசி (அமர தமிழ் எழுத்தாளர்) எழுத்து எப்படி டுமிதுல் எழுத்தோடு சமரசமாகிறது என்றெல்லாம் பிழிந்திருந்தான்.
ஏனோ குருபிரசாத்திற்கு ஈக்காசியை அவர்​செத்ததிலிருந்து பிடிக்காமல்​போய் விட்டிருந்தது.
இது​தெரியாமல் ரோசாமகன் ஈக்காசியை​மேற்கோள் காட்டியிருப்பது குருபிரசாத்திற்கு​வெறி வெறியாய் வந்துவிட்டிருந்தது அவர் எழுதிய பின்னூட்டத்தில் தெரிந்தது. பீக்காட்டில் உழலும் பன்றி ஈக்காசி என தலைப்பிட்டு பின்னூட்டம் வெளியாகியிருந்தது.
மலேசியாவில் குருபிரசாத் அவரது எழுதப்பட வேண்டிய நாவலுக்கான விபரக்குறிப்பு வேண்டி பார், கிளப் மற்றும் மஸாஜ் கிளப்புகளில் அலைந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட சிந்தனா ஊக்கங்களுக்கு நேரெதிராக ஈக்காசியின் எழுத்து இருக்கிறது எனவும் தன் வலை ரசிகர்கள் யாரும் ஈக்காசியின் எழுத்தை பொருட்படுத்த வேண்டாமெனவும் அதிரடி செய்திருந்தார்.

நேபாள நாட்டை சேர்ந்த ஒரு அழகியை இருவரும் ஒரே ராத்திரியில் பகிர்ந்து​கொண்டதில், தன்னிடமிருந்து புத்த மாபோதம் என்ற அற்புத சிறுகதை​விளைந்ததையும் ஈக்காசியால் நாய்மசுரு நாத்தம் என்ற கேவல கவிதை மட்டும் எழுத முடிந்தது என்றும் ஈக்காசியின் இலக்கியத்தை பிரேத பரிசோதனை செய்திருந்தார் குரு.

ரோசாமகன் திரும்பவும் ஒருமுறை ஈக்காசியின் எழுத்தை படிக்க வேண்டியது அவசியமாயிற்று. கைவசம் யாதொரு பிரதியும் இல்லாத காரணத்தால் திரும்பவும் இணையத்தில்​தேடல்.

சந்திரபுத்தனின் இணையதளமான www.chandrabuddha.com - ல் ஈக்காசியை பற்றி ஒரு இரங்கல் கட்டுரை இருந்தது. இரங்கல் கட்டுரைக்களுக்கென்று தனித்தொகுப்பே இருந்தது. இருந்தாலும் இறந்தவர்களுக்கு மட்டுமே இரங்கல் கடிதம் எழுதுவது என்பதில் மிக கண்டிப்பாக இருப்பவர் சந்திரபுத்தன்.

அதில்
அபத்தை நோக்கி பயணிக்கும் பறவையின் குரல் என்ற தலைப்பில் ஈக்காசி தமிழின் மிக முக்கிய எழுத்தாளர் என்றும் இதனாலேயே தன் கடைசி காலத்தில் மூல வியாதியால் பாதிக்கப்பட்டு இறந்தார் என்றும் இரங்கியிருந்தார். இந்த குறிப்புகளை எல்லாம் ஒருவாறாக கோர்த்து குருபிரசாத்திற்கு பதில் எழுதினான்.
சந்திரபுத்தன் எழுத்தை பார்த்தாலே குருவிற்கு காலரா டயாரியா எல்லாம் வந்துவிடும். இந்த நிலையில்​ரோசாமகனின் கடிதத்தில் ஈக்காசி​யைப் பற்றி சந்திரபுத்தனின் இணைய விவரத்தை குறிப்பிட்டிருந்தது குருவிற்கு எய்ட்ஸ் நோய் வந்தது போலவே ஆகிவிட்டது. குருபிரசாத் தமிழ் இலக்கியத்திற்காக சாமியாடி அருள் வாக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
சந்திரபுத்தன் நாக்கு மற்றும் .... அழுகிச் சாவான் என்றும் சந்திரபுத்தனின் இணையதளம் வைரஸால் பீடிக்கப்பட்டு அதை படிப்பவர்களின் மூளையிலும் அது குடியேறும் என்றும் பதிலூட்டமிருந்தார்.

பின்னர் குருபிரசாத்தின் மற்ற ரசிகர்கள் அவர் இந்த மாதிரி தத்துபித்து கடிதங்களுக்கு அவர் பதில் எழுதக்கூடாது என்று சமாதானம் சொல்லி ஒரு வழியாக சாமியை மலையேற்ற ​வேண்டியதாயிற்று.
ரோசாமகனுக்கு பித்து பிடித்தது போலாயிற்று. தான் மட்டும் என்றில்லாமல் தேவையில்லாமல் ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளன் பேரில் செத்துப்போன ஆசாமியையும், சம்பந்தமேயில்லாத சந்திரபுத்தனையும் இழுத்து வந்து இந்த சண்டையில் நுழைத்து விட்டோமோ என வேதனையுற்றான்.
திரும்பவும் ஈக்காசியின் புனையும் இரவுகள் என்ற சிறுகதை தொகுப்பை வாசித்தான். ஒரு தெளிவுற்றவனாக திரும்ப குருபிரசாத்திற்கு ஒரு மெயில் அனுப்பினான். முடிக்கும் போது ஈக்காசி ஒரு விந்து, நீங்கள் ஒரு மூத்திரம் என்று எழுதினான்.

இந்த முறை அது குருவின் வலைமனையில் பிரசுரமாகவில்லை.

ஆயினும்
தூவானம் கணக்காக குருவின் ரசிகர்கள் இன்னும் ரோசாமகனின் கடிதத்தை போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சந்திரபுத்தனின் வலைமனையில் குருவை போட்டு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். ஈக்காசி சாகும்வரைக்கும் வலைமனை வைக்க வக்கில்லாமல் செத்துப் போயிருந்தார். ஆக அந்த மட்டும் தப்பித்தோம் என்று நினைத்தான் ரோசாமகன். ஆப்பிரிக்க தேசத்தில் இருந்து இதுவரைக்கும் எந்த எதிர்வினையும் வராதது சிறுது ஆறுதலாகவும் இருந்தது.
சந்திரபுத்தனுக்கு அவன் ஒரு கடிதம் எழுதினான். ஈக்காசியை குரு மானங்கப்படுத்துகிறான் என்று.


அதற்கு சந்திரபுத்தன் "நீங்கள் ஷுவை டெலிபோன் போல பயன்படுத்திவிட்டீர்கள். இன்னும் 2 வருடங்கள் நீங்கள் ஹாரி சிம்மர், ப்யூரி ஸெலோன்ஸ்கி மற்றும் அபிராம சிந்தாமணி எல்லாம் ஒரு தவம் போல படிக்கவும்." என்று தனியாக ஒரு மெயில் அனுப்பினார்.

ரோசாமகன் பைத்தியம் பிடித்தவன் போலானான். ஒரு​வேளை குருபிரசாத்தின் சாபம் பலித்து விட்டதோ. வைரஸ் ஏதும் நம்மை தாக்கிவிட்டதோ என்று பயந்தான்.

வெள்ளிக்கிழமை
ராத்திரி. ஒரு பாட்டில் ஸிம்ர்ன்ஆப் மற்றும் சிக்கன் கடாய் உடன் சிந்திக்கலானான். சனிக்கிழமை விடியும் போது ஒரு முடிவுக்கு வந்தவனாய் இக்பாலுக்கு ஒரு மெயில் தட்டிவிட்டான்.
இக்பாலின் மறுமொழி இப்படி இருந்தது:
"அன்பு பூமகன், இப்பதான் நீ ஒரு முழுமையான கலைஞனாக பரிணமிக்கிறாய். இந்த இலக்கிய சாக்கடைகளோட ப்ரக்ஞையில நீ ஓங்கி உன்னோட ஒண்ணுக்கை அடிச்சிருக்கிற. பதிவு மிக முக்கியமானது. இனி நீ தைரியமா உன்னோட வலைப்பூவை ஆரம்பிக்கலாம். நான் இங்க பிராஜெக்ட்ல கொஞ்சம் பிஸி. நீ எழுது நான் பாத்துக்கிறேன்." அன்பாக, இக்பால் ஸான்டா கிளாரா

சரியென்று, ஒரு வலைப்பூவை ஆரம்பித்தான்.
ரோசாமகன்
ஆரம்பித்த பிளாக் இதோ: www.rosamagan.blogspace.com

முதல்
இடுகையாக அவன் எழுதியிருந்த குடை அவிழும் பொழுது என்ற கவிதையை வெளியிட்டான். இக்பாலுக்கு செய்தி அனுப்பினான். பின்னர், தமிழ் இலக்கியத்தின் சாபம் என்ற பெயரில் குருவையும், சந்திரபுத்தனையும் விமர்சித்து எழுதினான்.

முன்னெப்போதும் படிக்கவே பிடிக்காத கட்டுரை வடிவம், எழுதும்போது சுலபமாக வசப்படுவதை வியந்தான்.

2 comments:

கோவி.கண்ணன் said...

//இதில் இரண்டு சிக்கல்கள்: தமிழை க்யூவெர்ட்டி விசைபலகை கொண்டு எழுத வேண்டும். இரண்டாவது எழுதிய இடுகைகளை படிப்பதற்கு ஆட்கள் வேண்டும்.//

ரொம்ப குசும்பு தான் உங்களுக்கு !
:)

வருக வருக !

Nathanjagk said...

கண்ணன்.. உங்க வலைபதிவை படிக்கிறவங்களுக்கு இடுகையை படிக்க ஆட்கள் பிடிப்பது ​ரொம்ப சுலபம். புதிய பயனர்களுக்கு நீங்கள் வழங்கிய அறிவுரைகள் நன்றாயிருக்கிறது.