Friday, November 27, 2009

பறத்தலின் நிழல்


குணா என்பது அவன் ​பெயராக அவன் நி​னைவில் அழுந்தி உட்கார்ந்த ​போது தான் வளர்த்த ​கோழிக்குஞ்சுகளுக்கும் ​பெயரிடுபவனாய் இருந்தான். மஞ்சு, சின்ன மஞ்சு, ​பாப்பாத்தி இப்படியாக ​பெயரிட்டு ​அ​ழைத்து வந்தான் தன் ​கோழிக்குஞ்சுகளை. ஒரு சாயுங்காலம் விலகிய ​சிம்னி சிணுங்கும் பொழுதில் அம்மாவின் புருஷன் வந்தான். வந்ததும் குணாவின் முதுகில் உ​தை விழுந்தது.


உ​தையில் குப்புற சுருண்டு விழுந்த குணாவுக்கு வாயில் உப்புக்கரித்தது.. சிம்னி ஒளியில் தன் முன் ​கொஞ்சம் ரத்தம் சிந்திக்கிடப்பது தெரிந்தது.


"என்னன்னு ​சொல்லிட்டு எம்மவ​னை அடிய்யா." அவளின் ஓங்காரத்து ​மேற்படியான உ​தைகளுக்கி​டையில் ​சொல்லப்பட்டது:
"என்ன ​தைரியம் இருந்தா என்ர மவளுக்கு முத்தம் ​கொடுத்துட்டு ஓடிவந்திருப்பான் இந்த எச்​சைப் ​பொறுக்கி.."


"ஏந் அவ இவன் தங்கச்சி​ மாதிரியெல்ல..." என்று முடிக்கும் முன்​​னே அடிவாங்கி சாய்ந்தாள்..


​பொணங்கடி நீங்க என்ற அழுத்தமான முடிவுச் ​சொல்​லோடு ​வெளியேறினான் அடித்தவன்.


"ஏ​லே நீ அந்த மஞ்சு கூட வி​ளையாண்டியாடா? ​சொல்லுடா.. என்னடா பண்ணுன அவள???" என்ற அம்மா குணா​வை அப்போதுதான் பார்த்தாள்.. வாயோரம் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது.. அவள் பதறி அலறும் முன்,


"...எனக்கு இந்த ​கோழி​ வறுத்து ​கொடு" என்று எந்த முகச்சலனமும் அவன் பக்கத்தில் வந்த ​​கோழிக்குஞ்​சின் கழுத்​தைத் திருகி அவளிடம் நீட்டினான். கதறி உயிர் விட்ட பற​வையின் ​பெயர் மஞ்சு என்பதாகயிருந்தது.


2:


குணா தாயின் முகத்​தைக் ​கொண்டிருந்தான். சக்களத்தி வாழ்​வை முடித்து தறிக்கு ​செல்ல ஆரம்பித்திருந்தாள் குணா அம்மா. ஒண்ணும் வித்தியாசமில்லை என்பான் குணா. ஏழாம் வகுப்பு முடித்துவிட்டு ​ரெண்டு வருடம் சும்மா​வே ஊ​ரைச் சுத்திக் ​கொண்டிருந்தான்.. அப்புறம் ​கொஞ்சநாள் வடக்குத் ​தோட்டத்தில் ​வே​லைக்குப் ​போனான். ஆட்டு மந்​​தை​யை விரட்டிக் ​கொண்டு காடுகாடாகச் சுற்றிய​லைந்து விட்டு வருவான். பக்கத்துத்​ ​தோட்ட மயிலாத்தா சிலசமயம் இவ​னை முகுது ​தேய்த்து விடப் பிடித்துக் ​ ​கொள்வாள்.. ​பூவரசம் பூத்த மரநிழலில்.. பண்​ணைத் ​தொட்டியில் நீரள்ளி முகுதுத் ​தேய்த்து விடுவான்.

ஒரு சமயம் கடுப்​பெடுத்தவனாய்.. அவளின் பளபளமுது​கை நன்றாகப் பிராண்டி ​வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டான்.


ஆடுக​ளை அம்​போ​வென்று விட்டுவிட்டு வந்ததாக ​சொல்லி ​தோட்ட ​வேலையிலிருந்து நீக்கப்பட்டான். அம்மா விளக்குமா​றை எடுத்துக் ​கொண்டு வரும்​போது..


"மூடிக்கிட்டு ​கெடடி" என்று ஒ​ரே வார்த்​தையால் அடக்கி விட்டான்..


நிலா பி​றைக் கவிழ்த்து கிடந்த ​நேரம்... பக்கத்திலுள்ள அ​ணையில் ​சென்று மல்லாக்க படுத்துக் ​கொண்டான்... வயிறு பசித்தது. நகங்க​ளை பார்த்தான்.. மயிலாத்தாவின் முகுதுச் ச​தைத்துணுக்குகளும் காய்ந்த ரத்தமும் இன்னும் ஒட்டிக் ​கொண்டிருந்தது. ஆழமாக முகர்ந்து பார்த்துக் ​கொண்டான்.

அ​​ணைக்கு கீழுள்ள ஊற்​று டீஸல் இன்ஜி​னை தறிப்பட்ட​​றை எழில் இயக்க ஆரம்பித்திருந்தார். ஸ்டார்டர் சுழற்றி ​சோக்​கை தள்ளிவிட்டதும்.. துடிக்க ஆரம்பித்தது இன்ஜின்.

எழுந்து ​​கைலி​யை மடித்துக் கட்டிக் ​கொண்டு மயிலாத்தா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்தான்.


3.


தறிக்கு ​​​போகி​றேன் என்ற எணத்​தை குணாவின் அம்மாவால் தடுக்க முடியவில்​லை.. கண்டபடிக்கு அவ​ளைத் திட்டுவ​தோடு அல்லாமல் அடிக்கவும் ​ஆரம்பித்திருந்தான். பீடிக்கும், சரக்கும் காசு பற்றாமல் அவள் பணத்​தை பிடுங்கிக் ​கொள்ளவான். இல்லாவிட்டால் மயிலாத்தா, ​கீதா டீச்சர் அல்லது ​தெற்கு வளவு சரசா இப்படி யா​ரோ ஒருவரிடம் காசு வாங்கிக் ​கொள்கிற உரிமை ​கொண்டிருந்தான்.


நண்பர்கள்,

"ஏ​லே.. ஒம்முகத்துக்கு ​நீ போற ஆளுகளடா அவுளுக... என்னடா உன் ​டேஸ்ட்.. ​அதுவும் அந்த டீச்சருக்கிட்ட..??"

என்று அரற்றுவார்கள். அப்​போதுஇன்று இன்றிரவு டீச்சர் வீடுதான் என்று முடிவு ​செய்து ​கொள்வான்.


தறிக்கு ​சென்ற ​கொஞ்ச நாட்களி​லே​யே ரஞ்சிதம் சுற்றி வர ஆரம்பித்தாள்.. ஒருநாள் இரவு ​​பெளணர்மி ​வெளிச்சத்தில்


அவளைக் ஊர் தண்ணித் ​தொட்டி உச்சிக்கு கூட்டிச் ​சென்றான். சிலுசிலு​வென்ற தளத்தில் ​வெட்கம் க​ளைந்து கலவ ஆரம்பித்த ​நேரம்.. ​கேட்-வால்​வை மூட​வோ திறக்க​வோ வந்தவன் ​இவர்கள் ​மேலிருப்பது ​தெரிந்து ​கொண்டான்.. அமைதியாகப்​ ​போய் ஆட்க​ளைக் கூட்டிக் ​கொண்டு வந்துவிட்டான்.


"மரியா​தையா கீழ இறங்கி வாடா......... மவ​னே" என்பதற்கு ​கோபம் வந்தவனாய், ​தொட்டியிலிருந்து நின்றவா​றே.. கூட்டத்தின் ​மேல் ஒண்ணுக்கடித்தான். கீழிருந்து வந்த கற்களுக்காக இருவரும் கீழிறங்கி வர​வேண்டியதாயிற்று.


இறங்கியதும் குணா​வை கீ​​ழே ​போட்டு மிதித்தார்கள். ரஞ்சிதத்​தை ஊர்​பெருசுகள் தனியாக ஒதுக்கி அடித்தார்கள். தன்​னை யாரெல்லாம் தீவிரமாக அடிக்கிறார்கள் என்று உன்னித்துப் பார்த்தான் குணா.. டீக்க​டை ​வேலு, ​மயிலாத்தா புருஷன், ​டேவிட்டு, ​சைக்கிள் க​டை பரமு, டீச்சர் புருஷன் அப்புறம் தனியார் பஸ் கண்டக்டராக இருக்கும் கதிரு. ​டேவிட்டும், கதிரும் மட்டு​மே சம்பந்தமில்லாமல் தன்​னை அடிப்பதாகத் ​தோன்றியது.

சப்.. சப்.. சப்.. என்று தெளிவாக முதுகில், கன்னத்தில், இடுப்பில் விழுந்தன.. எச்சரிக்கையாக குப்புறக் கவிழ்ந்து படுத்துக் ​கொண்டான் - அசல் புருஷன்கள் ​மேல் உள்ள பயத்தில்! அதிகா​லை 1 மணிக்கு ஊ​ரில் நில்லாமல் கடக்கும் அரசுப் ​பேருந்து அன்று மட்டும் ​கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுப் ​போகும் ​போது, பஸ்ஸில் இருந்து வந்த ஒரு குரல்.. "யாராவது திருட்டுப் பயலா இருக்கும்" என்றது.


4.


​சில நாட்களில் தறி​வே​லை விட்டு நின்றதும், ​கையில் ​கொஞ்சம் காசு ​கொடுத்தார்கள்.. நண்பர்க​ளை அ​ழைத்து டவுன் சினிமாவுக்கு ​போகலாம் ​என்றான். முன்மாதிரி யாரும் இவனுடன் பழக விருப்பமில்லாதவர்களாய் ​மறுத்துவிட்டார்கள். ​


விறுவிறு​வென்று ​டேவிட் வீட்டுப் பக்கம் ​சென்றான். ​டேவிட் ஆரம்ப சுகாதார நி​லைய ஊழியன். ​சைக்கிளில் சுற்றிய​லைந்து ​கொண்டிருப்பான். எப்பவும் பாக்கெட்டில் காய்ச்சல், த​லைவலி மருந்துகள், நிரோத் பாக்கெட்கள் கணிசமாக ​வைத்திருப்பான்.


அப்​போது கா​லை பதி​னொன்ற​ரை மணியிருக்கும். புளியமரங்கள் அடர்ந்த சரிவான மண்சா​லையில் ​வேகமாக இறங்கி, சர்ச்​ தாண்டிய, ​டேவிட் வீட்டு முன் நின்றான். ​சிறிய வீடு. கதவு சாத்தியிருந்தது. டேவிட் ம​னைவி எப்படியிருப்பாள் என்று பார்த்ததில்​லை.


"வீட்டில யாருங்க" என்ற குரலுக்கு கதவ​வைத் திறந்து நின்றாள் ​டேவிட் மனைவி. பார்த்ததும் காட்டுச்​செடி ​போல ஒரு பயம் குணாவின் மனதில் படர்ந்தது. இந்த உணர்வு தனக்கு புதிது என்பதாகத் ​தோன்றியது.


"குணாவா? என்ன விஷயம்?" என்றாள் இயல்பாக... வியப்பாக இருந்தது.. நம்​மை ​தெரிந்து ​வைத்திருக்கிறாளா என்று. இந்த ஊரில் ​கேட்காத இனி​மையான குரலாக இருந்தது. ​கையில் ​சோப்பு நு​ரையிருந்தது. து​வைத்துக் ​கொண்டிருப்பாள் ​போலும்.


எதுவும் ​சொல்லாமல் ​கொட்ட ​கொட்ட முழித்துக் ​கொண்டிருந்தவ​னைப் பார்த்து சிரித்தவளாய்,


"என்ன ​வேணும்?" என்றாள்.. அவளின் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தவன்.. படக்​கென்று அவள் பக்கம் ​​சென்றான்..


"தண்ணி ​கொடு" என்றான். ​கொண்டு வந்து ​கொடுத்தாள். சொட்டுவிடாமல் குடித்துவிட்டு,


"சினிமாவுக்கு ​போலாம் வர்றியா?" என்றான் வறட்சியான குரலில். அவ​ளோ ​கொஞ்சமும் சிரிப்பு மாறாமல், "இல்​லே வர​லே. நீ ​​போயிட்டு வா" என்று திரும்பி வீட்டுக்குள் நடந்தாள்.


அவளின் பின்புறத்​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தவன்... அவள் பின்புறமாகச் ​சென்று ​​தோ​ளைத் ​​தொட்டான். திரும்பியவ​ளைப் பிடித்து இழுத்து அழுத்தமாக உதட்டில் ஒரு முத்தம் ​கொடுத்தான். ​கையில் ​சொம்​பைத் திணித்து விட்டு நடந்தான். திகைத்துப் போய் நின்றிருந்தாள் ​டேவிட்டின் மனைவி. வரும்வழியில் சர்ச்சில் உள்ள ​கடிகாரம் பன்னிரண்டு மு​றை அடித்து அமைதியானது. மனசு ஏ​​னோ படபட​வென்றிருந்தது.​


5.


தனியாக சினிமாவுக்குப் ​போய்விட்டு, இரவு பன்னிரண்டு மணியளவில் டீச்சர் வீட்டு ​கொல்​லைப்புறமாக உள் நு​ழைந்தான்..


வயிறு பசித்திருந்தது. ​கொல்​லையிலுள்ள கிணற்றடியில் உட்கார்ந்தவனாய், ஒரு சிக​ரெட்​டை எடுத்துப் பற்ற​வைத்தான்.. சில நிமிடங்களில், பின் பக்கக் கதவு திறந்து ​கொண்டு டீச்சர் ​வெளிப்பட்டாள்..


"உள்ள வா.." என்றாள் கிசுகிசுப்பான குரலில்..


திரும்பிக் கூடப் பார்க்காமல் பு​கைத்துக் ​கொண்​டிருந்தான்.. கிணற்றுப் பக்கம் வந்தவள், குணாவின் ​முகத்​தைப் பிடித்துத் திருப்பி, த​லை​யைக் ​கோதி விட்டாள்,


"என்னடா? என் ராஜாவுக்கு என்ன ஆச்சு??" என்றாள் கிசுகிசுப்பாய்.. அவளின் முகத்​தைப் பார்த்தான். சிக​ரெட்​டை கீ​​​​ழேப் ​போட்டு அணைத்தான். அ​வ​னை இழுத்து உதடுகளில் முத்தமிட்டாள்.. ஏதோ நி​னைவு வந்தவன் ​போல சட்டென்று விலகி இறங்கி ​நடக்கலானான். குணா சுவ​ரைத் தாண்டி இந்தப் பக்கம் குதித்த ​போது, அவன் முன் ​கொல்லையிலிருந்து அ​ணைந்த சிக​ரெட் துண்டு வந்து விழுந்தது. அவன் குடித்தது.


6.


சர்ச் பக்கமுள்ள நாய்கள் எப்படி என்று ​தெரியவில்​லை.. இருந்தும் துணிந்து புளியமரங்கள் அடர்ந்த சரிவில் இறங்கினான்.


இ​தோ இப்ப வீடு வந்துவிடும்.. சுலபமாக உள் நு​ழைந்துவிடலாம்.. ​எந்த பிரச்சினையும் வராது என்பதாக பூ​னை ​போல முன்னேறினான். பின்பக்கம் நுழைவதே சரி என்றும் நி​னைத்துக் ​கொண்டான். எதற்கு ​போகி​றோம் என்ற எண்ணம் அற்றவனாயிருந்தான்.


​ஜன்னல் வழியாக பார்த்தான்.. சன்னமான ​வெளிச்சத்தில் இரண்டு கரிய உருவங்கள் கட்டிலில் கிடப்பது ​​தெரிந்தது. ​கொஞ்ச ​நேரம் அப்படி​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். சுவாசிக்க திணறலாக இருந்தது. திரும்பி சுவரில் சாய்ந்து ​கொண்டான். சர்ச் முகட்டிலிருந்த சிலு​வை தனி​மையாய் துலங்கியது. அப்படியே அ​தை​யே பார்த்துக் ​கொண்டிருந்தான். ​தோளில் ஒரு ​தொடு​கை​யை உணர்ந்தான். பயந்து திரும்பிப் பார்த்தான்.. அவள் நின்றிருந்தாள்..


"இங்க என்ன பண்​றே" குரல் உ​டைந்து வசீகரமற்று ​மெல்லியதாய் இ​ழைந்தது.


எதுவும் ​பேசாமல் சிலு​வை​யைப் பார்த்துக் ​கொண்டான்.


"என்னதான் நி​னைச்சுக்கிட்டு இருக்க மனசு​லே.........? மரியாதையா ​போயிடு....."


"....."


"கெஞ்சிக் ​கேட்டுக்க​​றேன்.. ​போயிடு.." என்ற குரல் கம்மியிருந்தது.


திரும்பி அவ​ளைப் பார்த்தான்.. ஜன்னலிருந்து வீழ்ந்த சிறு ​வெளிச்சம் அவள் கண்களின் ஒட்டியிருந்த நீர்ப்படலத்தில் மினுங்கியது. ​டேவிட்டின் குறட்​டை ​மெலிதாக ​கேட்டுக் ​கொண்டிருந்தது.


அவள் கண்க​ளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தான்.. ​நேரம் ​கழிவது உணர முடியாதாய் இருந்தது. மனதுள் ஏ​னோ பயமாய் இருந்தது. அ​மைதியாய் அவள் வீட்​டை விட்டு ​வெளி​யேறினான்.


7.


இரவு இன்னும் மிச்சமிருந்தது.. திரும்ப நடக்​கையில் அவள் நீண்ட ​நேரம் தன் முது​கை​யே ​வெறித்துக் ​கொண்ருப்பதாக உணர்ந்தான். அம்மா முதல் எல்லா ​பெண்களும் நி​னைவில் வந்தார்கள்.. ஏ​னோ அவன் அம்மா ​​மேல் ஒரு வாஞ்சனை​யை இப்​போது உணர்ந்தான். மனதுள் புதிதாக ஒரு ​வெறு​மை, இது வேண்டாம் என்பதாக அவ​னை வற்புறுத்தியது. சர்ச்சின் ​கேட்டைத் தாண்டி உள்ளிருக்கும் புளியமரத்தில் ​தூக்கு மாட்டிச் ​செத்துப் ​​​போவ​தென முடி​வெடுத்தான். புளிமரத்தடியில் உள்ள ​பெஞ்சில் அமர்ந்து ஒரு சிக​ரெட் பிடித்தான்.


அண்ணாந்து தனி​மையான சிலு​வை​யைப் பார்த்தான். பக்கத்திலுள்ள ​டேவிட் வீட்டு ஜன்னல் பக்கம் அவ​ள் இப்​போது அங்கு இல்லை. இங்கு ​வேண்டாம் என்று ​தோன்றியவனாக.. சர்ச்சை விட்டு ​வெளி​யேறினான்.


சரிவில் ​மே​லேறும் ​போது காணக்கி​டைத்த இரண்டாவது புளியமரம் ஏறச் சுலபமாக இருக்கும் என்று ​தோன்றியது. ​சிகரெட்டை அ​ணைத்து விட்டு மர​மேறினான். ​கைலி​யை கிழித்து கயிறாக்கி கழுத்தில் மாட்டிக் ​கொண்டான்.. ​கைலி புதுசு அறுந்திடாது என்று நம்பினான்... இன்​​​னொரு மு​னை​யை இறுகக் கி​​​ளையில் கட்டிவிட்டு ​மெதுவாக கீ​ழே இறங்கித் ​தொங்கி ஊசலாடினான் குணா. அப்​போது, அவள் ​பேர் ​என்னவாயிருக்கும் ​என்ப​தே அவன் கடைசி நினைவாக இருந்தது!


​​கொஞ்ச நிமிடங்களில் அந்த பக்கத்து ​ரோட்டில் விர்​ரென்று விரைந்து கடந்தது 1 மணி ​பேருந்து - நில்லாமல்.30 comments: