Friday, February 19, 2010

பதிவர் தர்மம்மாட்டுவண்டியின் பருண்மையில் நெகிழ்ந்த மண்தடம் போல மனம் அப்பாவின் கையெழுத்தைப் பற்றிக் கொண்டு நினைவுகளைப் புரட்டிப் ​போடுகிறது.

த.நா.மி.வா (தமிழ் நாடு மின்சார வாரியம்) ஊழியருக்கு அதிகப்படியான அழகான கையெழுத்து அப்பாவுக்கு. தநாமிவா என்பதின் இருப்பு எங்கள் வீட்டில் ஒரு திடப்​பொருள் ​போல உணரமுடிந்திருக்கிறது. இப்போதும் தநாமிவா என்று காதில்விழுவது என்னை அழைப்பது போலவே ஒலிக்கிறது.

அப்பா இப்போது ஓய்வு பெற்றுவிட்டார். மின்பாதை வரைபடங்கள், அலுவல் குறிப்புகள், நழுவல் குறிப்புகள்(லீவ் ​லெட்டர்) எழுதுவதற்காக மை அவர் பேனாவிலிருந்து ஆவியாகிவிட்டது.

முன்பு பொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்களுக்கு வருடம் தவறாமல் நண்பர்கள், உறவினர்கள் என குறைந்தது 50 வாழ்த்து அட்டைகளாவது எழுதி அனுப்பிவிடுவார். வாழ்த்து அட்டைப் பரிமாற்றம் காதலர்களுக்கு மட்டும் ​போதும் என்று அச்சுக்கடவுள் நி​னைத்துவிட்டார் போல. இப்போது பொங்கல், புத்தாண்டு, தீபாவளி வாழ்த்து அட்டைகள் பார்க்க கிடைப்பதில்லை. செல்போன்களால் வாழ்த்து அட்டைகள் தங்கள் தொடர்பு எல்லைகளை இழந்துவிட்டன. செல்போன் குறுஞ்செய்திகளாக வாழ்த்துகள் பைனரி வடிவத்தில் ஸ்டாம்ப் ​ஒட்டப்படாமலேயே கிடைக்கிற இந்நிலையில் அப்பா கொஞ்சம் ​கையறு நிலையில்தான் இருக்கிறார். தற்சமயம் கிடைக்கிற ​பேப்பர்கள், பத்திரிக்கையில் அரிதாக கிடைக்கிற சில வெண் தீவுப்பரப்புகள், அழைப்பிதழ்களின் பின்னட்டைகள், கோவில் கணக்கு, தகவல் கோரும் விண்ணப்பங்கள் என்று கையெழுத்தைப் பதியம் செய்ய​வேண்டியதாயிருந்தது.

நான் பெங்களூர் வந்ததிலிருந்து எனக்கு பார்வர்ட்டாக அனுப்புகிற கடிதங்களின் உறையில் மீண்டும் அப்பா எனக்குக் கிடைக்கிறார். குறைந்தது இரு வர்ண எழுத்துக்களைப் பார்க்க முடிகிறது அதில். ​​பெறுநர், அனுப்புநர் முகவரியும் அதற்கு இடையில் சாய்த்து விழுகிற இரட்டைக் கோடுகளையும். இவற்றைத் தவிர வரையவோ எழுதவோ சாத்தியமற்ற கடித உறைகளை அப்பா ஒருகணம் நொந்திருக்கக் கூடும். ஆடிய பாதம் எழுதிய விரல்கள்!

திருமண, காது குத்து, திரட்டி விழாக்களின் ​மொய் ​நோட்டுக்களில் அப்பா நிரம்பியிருக்கிறார். நிரம்பிக் ​கொண்டிருக்கிறார். ​முடிவுறா மொய்க்கணக்குகள் ​கைங்கர்யத்தில் உறவின் விழுதுகள் எல்லையற்று நீண்டு​கொண்டேயிருக்கின்றன. வந்த அடையாளத்தையும் பந்த அடையாளத்தையும் ​ரூ.51, ரூ.101.. என மெய்ப்பிக்கும் ​பொருட்டில் மொய் நோட்டுகள் ஒரு வங்கிக்கணக்கின் அனுசரணையோடு இருக்கின்றன.
அப்பா திருமண விழாக்களில் உணவுக்குக் கூட ​செல்லாமல் மெய் வருத்தி மொய் எழுதிக் ​கொண்டிருப்பது அநேக தடவைகள் பார்த்ததுண்டு. செய்நேர்த்தி கூடிய வைபவமாக மொய் எழுதிக்​கொண்டிருக்கும் சமயங்களில் அப்பா எனக்கு ​வேறு நபராகத் ​தோன்றுவார். ​வேகமாகப் பதியப்படும் எழுத்துகள் உறவுச்சங்கிலியின் நிழற்படம் போலவும் தோன்றுகிறது. ​​
அப்பாவின் ​கையெழுத்து
அழகுதான். எத்தனை வேகமாக எழுதினாலும் அதன் சீர் குலைவதில்லை.
மொய் மொய்ச்சீர் ஆவது இப்படித்தானோ?

​விழா மண்டபத்துக்கு வரும் கடைசிச் சொந்தம் வரைக்கும் காத்திருந்து மொய் எழுதும்பணி கால உத்தேசமற்றதுதான்.
அப்படியொரு கூட்டம் தளும்பி வழிந்து தீர்ந்த பொழுதில் அப்பா எழுதி முடித்த ​மொய்ப்பணத்தை எண்ணிக் ​கொண்டிருந்தார். பக்கத்தில் நோட்டுகளை எண்ணிக் ​கொண்டிருந்த சுந்தரம் மாமா அப்பாவிடம்,
"
மாமா, பணம் குறைவா இருக்கும் ​போலிருக்குதே" என்கிறார்.
​நோட்டுகளை எண்ணிக்​கொண்டே அப்பா
,

"மொய்ப்பணம் குறைவா இருந்தா பிரச்சினையில்ல சுந்தரு. கைக்காசைக் கூட ​போட்டுக் கணக்கைக் கொடுத்திடலாம். அதிகமாத்தான் இருக்கக் கூடாது" என்று பதிலுரைத்தார். அப்போது அப்பாவும் அழகாகத் தெரிந்தார்.

37 comments: