Wednesday, October 21, 2009

என்றும் சிநேகிதிகள்..!

15 அக்டோபர் 2009. வியாழக் கிழமை. 5:15க்கு பெங்களூரிலிருந்து கிளம்புகிற எர்ணாகுளம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸைப் பிடிக்கின்ற உத்தேசத்தில் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அடைந்தேன். பேக்-கேட் வழியாக வேக வேகமாய் பிளாட்பார்ம் 5ல் ட்ரெயினைத் தேடி நடந்தேன்.

வழியெங்கும் பூத்தூவி இறைத்தாற் போன்று சேரள நாட்டிளம் பெண்கள். ஜீன்ஸ், டீஸ், ஷார்ட் குர்தா ஸ்னீக்கர்ஸ் கால்கள் என்று அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட்டாக ஜொலித்தார்கள். செம கூட்டம் வேறு. தீபாவளி சமயம் ஆயிற்றே!

நிதானமாக 6:30க்கு வந்தது ட்ரெயின். S11லில் இருக்கை - ஐ! ஜன்னல்!!

எனக்கு எதிர் சீட்டில் ஒரு பெண்.. சிவப்பு.. நீளமான மூக்கு. யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தாள் - ஐ! தமிழ்!!

பக்கத்து இருக்கைகளில் யாரும் இல்லை.

அமைதியாக காதில் ஸ்பீக்கரை மாட்டிக்​கொண்டு ஜன்னல் பக்கமாக முதுகைச் சாய்த்து காலை நீட்டிக்​கொண்டாள். அதற்கு முன் என் சீட்டில் கால் வைத்து இளைப்பாறிக் கொண்டிருந்தாள்.

குட்..! இந்த பாயிண்ட்ல இருந்து நம்ம வேலையை ஆரம்பிச்சிர வேண்டியதுதான் என்று, மெலிதாய் சிரிப்புக் கூட்டி,

"இட்ஸ் ஓ.கே. நீங்க இப்படி திரும்பி என் சீட்டிலேயே கால் வச்சுக்கோங்க. நோ ப்ராப்ளம்" என்றேன் துய்ய தமிழில்!

அவளும், "பரவாயில்லே. நான் இப்படியே உக்காந்துக்கறேன்" என்றாள்.

சரியென்று தலையாட்டிவிட்டு தேமேஎன்று உட்கார்ந்து விட்டோமென்றால்.. ஈரோடு போகிறவரைக்கும் போர் பொடனியில் அடிக்கும்.. (அப்புறம் நாம் பதிவர் வேறு, சும்மா வரலாமா?) விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டே,

"இல்ல.. நீங்க இங்க காலை நீட்டிக்கிட்டீங்கன்னா, நான் அங்க காலை நீட்டிக்குவேன்" என்று ஆரம்பித்தேன்.

ஓ பரஸ்பர கால் நீட்டலா என்ற மாதிரியான சிரிப்புடன், என்னைப் பார்த்தவாறு திரும்பி என் பக்கம் காலை நீட்டிக் கொண்டாள். ஐயாவும்!
இன்னும் காதிலிருந்து ஹெட்போனைக் கழட்டவில்லை. அதையும் பாத்துடுவோம் என்றவாறே..

"ட்ரெயின் ரொம்ப லேட்.." என்றேன் மிக மெதுவான குரலில்..

வேலை செய்யுது.. ஹெட்போன் அகற்றப்பட்டு விட்டது. அசால்ட்டான குரலில்,

"ப்ச்.. ஆமா, ஒன் அண்ட் ஹாப் அவர் லேட்" என்றாள்..

அப்புறம் அப்படியே பேச்சு வளர்ந்தது.. ஆட்களும் வர ஆரம்பித்து விட்டார்கள். சுற்றிலும் தமிழ் குரல்களாய் அந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் ஒலித்தது ரொம்ப ஆச்சரியம்.

எதிர் சீட்டுப் பெண்ணிடம், அவள் கம்பெனி, தங்கியிருக்கும் ஹாஸ்டல், ​பாஸ்டைம், தீபாவளி ஷாப்பிங், க்ளோபல் க்ரைஸஸ் (இந்தமாதிரி உலகமகா டாப்பிக் எல்லாம் ஜாஸ்தி பெண்களிடம் பேசக்கூடாது.. அப்புறம் செயினைப் பிடிச்சு இழுத்துருவாங்க; நான் அவளை பேசவிட்டுவிட்டு, உன்னிப்பா கேட்டுக்கிட்டு வந்தேன்) ஆபிஸ், பெங்களுர் ட்ராபிக் என்று ஜோராகப் போய்க் கொண்டிருந்தது.

பக்கத்தில் ஒரு சுவாரஸியமான தம்பதியினர்.. குண்டாய் கண்ணாடி போட்ட கணவர், ஒல்லியாய் படபடப்பாய் மனைவி, கணவரின் கண்ணாடியை விட கொஞ்சம் தடிமனாய் கண்ணாடி அணிந்த அவர்கள் பையன் - 7 வயது இருக்கும். மனைவி சளசளவென்று ஒரே பேச்சு.. குஷியான பேச்சு.. அனைவரிடமும் சுலுவாய் பழகிவிடுவார் போலிருந்தது.

கணவனிடம்,
"பாலா.. ப்ப்ப்ப்ளீஸ்மா.. ஐ-பாடை நான் கொஞ்ச நேரம் வச்சுக்கிறேனே... நான் என்னோட ஃ​போல்டரை மட்டுந்தான் கேப்பேன்.. ப்ப்ப்ளீஸ்ஸ் பாலா.." என்பார்.

ஐ-பாடில் பாட்டுக் கேக்கும்போது அவரின் முகத்தைப் பார்த்தாலே அது என்ன பாட்டு என்று நமக்கு​தெரிந்து விடும்.. அப்படி முகத்திலேயே ஒரு கதகளி தெரிக்கும்.. ஒருசமயம்..

"பாலா.. அந்திமழை பொழிகிறது.." என்று அட்சரம்பிசகாமல் பாடிக் காட்டிவிட்டு "இது எஸ்பிபி தானே?" என்றார்..

கணவன் பதில் சொல்லும் முன், அவரின் பக்கத்து சீட்டுக்காரர்...

"ஆமாம்.. எஸ்பிபி பாட்டு, இளையராஜா மியூசிக்கு" என்று உற்சாகமானார்..

இந்த சமயத்தில் இன்னும் இரண்டு வாலைக்குமரிகள் எங்கள் (எப்படி ​சொந்தம் கொண்டாகிறேன்??) கம்பார்ட்மெண்டில் நுழைந்தார்கள்..! அமைதியாய் உட்கார்ந்து கொண்டார்கள்.. நானும் என் எதிர் சீட்டுத் தோழியும் (!?) அளவளாவுதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள்.

ஒருவள் கருப்பு (ஓகே மாநிறம்), நல்ல உயரம், நேர்த்தியான உடல்வாகு. இன்னொருவள் நல்ல சிவப்பு - Must be a North Indian.

ஏதோ ஒரு இடைச்செருகலில் அவர்கள் பேச்சிலேயும் உள்நுழைந்து விட்டோம்.. அப்புறம் நம் தம்பதியினர் எங்கள் ஜன்னல் சீட்டை வாங்கிக் கொண்டு உணவருந்த ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் இந்தப்பக்கம் தள்ளப்பட்டேன். எதிரில் பழகிய தோழி.. பழகும் தோழிகள் இருவர். ட்ரெயின் பங்காருப்பேட் தாண்டி ஜோலார்பேட் விரைந்து கொண்டிருந்தது (அப்புறம் சேலம்.. then ஈரோடு)

எல்லாம் சாப்ட்வேர் கோஷ்டிகள்தான்.. அவர்களின் ஸ்கூல் கதை, சீரியல்கள், சினிமா, ம்யூசிக் என்று சகல தரப்புகளுக்கும் நம் வசம் மேட்டர் இருக்க வேண்டும்.. இல்லாவிட்டால்.. விளக்கை அமுத்திவிட்டு படுக்கப் போய்விடுவார்கள்.

உதாரணத்துக்கு, டிவி சீரியல் ரொம்ப போர் என்று யாரவது ஆரம்பிப்பார்கள்.. நாமும் உடனே பூம்பூம் மாடுமாதிரி தலையாட்டிவிடக் கூடாது,

"ஆமாங்க.. ஆனா பாருங்க... சன்டிவியில ஒரு சீரியல் வருது.. கொஞ்சம் வித்யாசமா.." என்று மண்டையை சொரிய ஆரம்பிக்கணும் (சீரியல் பேர் நல்லா தெரிஞ்சிருந்தாலும்..)

உடனே தோழிகளிடம் ஒரு இன்வால்வ்மெண்ட் தெறிக்கும்...

"எத்தனை மணின்னு சொல்லுங்க" என்பார்கள்

"8 மணி" என்று சொன்னதும்,

மூவரில் யாராவது ஒருத்தி (மூவருக்குமே பேர் தெரிந்திருந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்..!!)

"ஆங்... திருமதி. செல்வம்" என்று உடைப்பாள்

இந்த இடத்தில் நாம் கொஞ்சம் சிரித்த முகத்தோடு இப்படி பேசலாம்..

"வெல்டன்.. கரெக்ட்..! திருமதி. செல்வம்தான்.. "

"ஓகே அதுல என்ன வித்தியாசம்?"

"எல்லா தமிழ் சீரியலிலும்.. ​பெண்களைதான் முக்கியமான கேரக்டரா, நல்லவங்களா காட்டுவாங்க.. இந்த ஒரு சீரியலில் மட்டும் ஒரு ஆம்பளைய நல்லவனா காட்டுறாங்க" என்று ஒரே போடாய் போட்டுத்தள்ள ​வேண்டியதுதான்.

அப்புறம் சிலசமயம் கவன ஈர்ப்புத் தீர்மானம் எல்லாம் கொண்டுவர ​வேண்டியிருக்கும். உதாரணமா விருதுகளைப் பத்திப் பேசிக்கிட்டு இருப்பாங்க,
"எப்படி இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறாங்க?" நாம்,
"பெப்சி உமா கூட டாக்டர் பட்டம் வாங்கியிருக்காங்க!" என்று ஈர்க்க வேண்டியதுதான்!

பெப்சி உமாவா?? டாக்டர் பட்டமா? என்று ஆச்சரியமாய் திரும்பி உட்கார்வார்கள்.

இப்படியே சேலம் நெருங்கும்வரை போய்க்கொண்டிருந்தது. சேலத்திற்கு அரைமணி நேரம் முன்பு வந்து எனக்கு வைத்தார் ஆப்பு - டிடி!
என்னோட 57வது சீட்டில் இன்னொருவரை வந்து உட்கார வைத்து விட்டு அவர்பாட்டுக்கு போய்விட்டார். டிடி-யைப் பிடித்து என்ன ஏது என்று விசாரித்தால்... 57 அவருடையது என்கிறார்.


டிடி திரும்பவும் சார்ட்டைத் தூக்கிக் கொண்டு வந்தார். என் கண்முன்னாடியே என் பிஎன்ஆர் எண்ணைத் துழாவினார்..

"இந்த நம்பர் இல்லியேப்பா..!" என்றார்.

(நாம் இந்த மாதிரி தருணங்களில்தான் ரொம்ப நிதானமா, இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்று பதட்டப்படாமல், முகத்தில் புன்னகையை நழுவவிடாமல் நடந்துக்கணும்.. உள்ளுக்குள்ளே ஜெகனுக்கு மாரியாத்தா சாமியே வந்திருச்சு.. இருந்தாலும் வெளிய முகத்தில டிஸ்கோதான் போடணும்! இதுதாம்பா லாஜிக்கு!)

எனக்குப் பகீரென்றது... நான் ஒருமுறை பரிசோதித்தேன்.. சிக்கிவிட்டது.. தனியாக கட்டம் கட்டி என் பெயர் இருந்தது (புதுசா இருக்கே?).
டிடிக்கு அப்புறம்தான் தெரிந்தது.. நல்ல முழி!

"அடடடடடடா.. உங்களை பி2க்கு, ஏஸி கோச்சுக்கு அப்கிரேட் பண்ணியிருக்காங்க" என்றார்.

"பரவாயில்ல சார்.. சேலம் வந்திருச்சு.. நான் ஈரோட்டில இறங்கப்போறேன்.. இங்கியே இருந்துக்கிறேனே??" என்றேன்.

தோழிகள் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

"இல்லீங்க! இதுக்கு ஆள் இருக்காங்க.. நீங்க அங்க போயி படுத்துக்கோங்க.. இன்னும் ஈரோடு வர டைம் இருக்கு" என்றார்.

ஐ-பாட் அம்மா,

"ஹே... ஐயாவுக்கு ஏஸிக்கு பிரமோஷன் கிடைச்சிருக்கு.. ட்ரீட் கேளுங்கப்பா..!" என்று குதூகலித்தார்... எனக்கோ வருத்வருத்தமாய் இருந்தது..

இவர்களை விட்டு பிரிகிறோமே என்று (யெஸ் பாஸ், யாரிடமும் எப்போதும் ஒரு இன்வால்வ்மெண்ட்டோடு பழகுங்கள்; பெண்கள் தேடுவதும், எதிர்பார்ப்பதும் அதுதான்)

மெதுவாய் பேக்கை எடுத்துக் கொண்டு பி2க்கு கிளம்பினேன்.. அப்போது ​ஒரு தோழி சொன்னாள்,

"ஈரோடு வர்றதுக்குள்ள, ஏஸி கோச்சுக்கு போய் சேந்துடுங்க"

மனசு விட்டு சிரித்து விட்டு, அனைவரிடமும் டாடா பைபை சொல்லிவிட்டு கிளம்பினேன்.

4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது.

38 comments:

Anonymous said...

//4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது. //

ரயில் சினேகங்கள் இப்படித்தான். நல்ல இடுகை.

ஷங்கி said...

தம்பீ இதுலயிருந்தும் ஈரோட்டிலிருந்தும் இங்க வர இத்தனை நாளாகியிருக்கு?! சூப்பர்! அப்புறம் தீபாவளில்லாம் எப்பிடி?! வீட்டம்மா கூட வரலையா?!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"ஈரோடு வர்றதுக்குள்ள, ஏஸி கோச்சுக்கு போய் சேந்துடுங்க"//

இருக்கர லக்கேஜ் எல்லாம் தேடி எடுத்து, கடைசியில் கழட்டிவிட்ட செருப்ப தேடி எடுக்கறதுக்குள்ள ஈரோடு வந்திரும். அப்புறம் என்ன தல.., கரெக்ட் பண்ணிட்டு இறங்க வேண்டியதுதானே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//Must be a North Indian.//

கோயமுத்தூரில் அந்த வம்சாவளியினர் நிறையப் பேர் இருக்காங்க பாஸ்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"ட்ரெயின் ரொம்ப லேட்.." //

ஏற்காடு எக்ஸ்பிரஸில் இப்படியெல்லாம் சொல்லி கடலை துவக்க முடியாது

☀நான் ஆதவன்☀ said...

கலக்கலான பயணக் குறிப்பு.

அப்புறம் எதிர்த்தாப்புல இருந்த தோழியும் பதிவர் தானாம். அவங்க பதிவையும் படிச்சோம்னா நீங்க பண்ணின சேட்டையெல்லாம் தெரிஞ்சுடும் :)

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

//"இல்லீங்க! இதுக்கு ஆள் இருக்காங்க.. நீங்க அங்க போயி படுத்துக்கோங்க..\\

ஐயையோ வடை போச்சே

சென்ஷி said...

கூட பக்கத்துல உக்கார்ந்து உங்க கடலையை வேடிக்கைப் பாத்துட்டு வந்தா மாதிரி ஒரு ஃபீல் வர வைச்சுட்டீங்க. கடைசியில ஏசி கோச்சுக்கு நீங்க போயிருக்க வேணாமோங்கற அளவுக்கு கொஞ்சம் ஓவராவே உள்ளே வந்துட்டேன் :-)


கலக்கல் குறிப்புகள் தல..! எனக்கு ரொம்ப பிடிச்சுருக்குது.

இதையெல்லாம் மொக்கைங்க லிஸ்ட்ல சேர்க்காதீங்க. மொக்கைங்க கோச்சுக்கப் போகுது ;)

சென்ஷி said...

//4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது. //

ம்ம்.. முதல்ல பேர் கேக்கத் தோணும். அப்புறம் போன் நம்பர் வாங்கத் தோணும். அப்புறம் பேசத் தோணும். அப்புறம் மறுபடி நேர்ல பாக்கத்தோணும். அப்புறம் அப்புறம் அப்புறம் ஒரு நல்ல ஃபிரண்ட் ஷிப் கண்டிப்பா அவங்களுக்கு உங்க மூலமா கிடைச்சுருக்கும். பேரு கேட்டு வச்சிருக்கலாமில்ல :-)

சென்ஷி said...

/"எல்லா தமிழ் சீரியலிலும்.. ​பெண்களைதான் முக்கியமான கேரக்டரா, நல்லவங்களா காட்டுவாங்க.. இந்த ஒரு சீரியலில் மட்டும் ஒரு ஆம்பளைய நல்லவனா காட்டுறாங்க" என்று ஒரே போடாய் போட்டுத்தள்ள ​வேண்டியதுதான்.//

நோட் பண்ணிக்கிட்டேன்! :-)

சென்ஷி said...

/ ஷங்கி said...

தம்பீ இதுலயிருந்தும் ஈரோட்டிலிருந்தும் இங்க வர இத்தனை நாளாகியிருக்கு?! சூப்பர்! அப்புறம் தீபாவளில்லாம் எப்பிடி?! வீட்டம்மா கூட வரலையா?!//

பெரியண்ணே.. உங்க பதிவு எங்க? போர்ட்ரெய்ட், மோட்டுவளை சிந்தனை, மஞ்சளழகி எதைப்பத்தியும் குறிப்பு எழுதி அனுப்ப மாட்டேங்கறீங்க?!

வினோத் கெளதம் said...

நல்ல கலகலப்பான பயணக்குறிப்பு தான்..
என்ஜாய் பண்ணி இருக்கீங்க..ஆனா சரி இல்லமா போச்சு..:))

அமுதா கிருஷ்ணா said...

நல்ல பயணம் ஏசியால் போச்சா...வேணும் வேணும்..

நேசமித்ரன் said...

கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு போல இருக்கே
ரொம்ப நல்ல இருந்துச்சு தலைவரே

பீர் | Peer said...

//ஓ பரஸ்பர கால் நீட்டலா//

இங்க நிக்கிறீங்க ஜகா...

(பாக்கெட் நோட்ல நிறைய குறிப்பு எழுதிக்கிட்டேன்)

ஹேமா said...

//நாம் இந்த மாதிரி தருணங்களில்தான் ரொம்ப நிதானமா, இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்று பதட்டப்படாமல், முகத்தில் புன்னகையை நழுவவிடாமல் நடந்துக்கணும்.. உள்ளுக்குள்ளே ஜெகனுக்கு மாரியாத்தா சாமியே வந்திருச்சு.. இருந்தாலும் வெளிய முகத்தில டிஸ்கோதான் போடணும்! இதுதாம்பா லாஜிக்கு!)//

எப்பிடிதான் உங்களை நீங்களே கலாய்ச்சு அப்புறம் சாமளிச்சுக்கிறீங்களோ !
அதுவும் ஒரு கலைதான்

Jawahar said...

ஜெகன், பரஸ்பர நீட்டலில் ஆரம்பிச்சபோதே எனக்கு சம்சயம். பேரைச் சொல்லிக்க முடியாத மாதிரி ஏதும் பண்ணிடல்லையே?

http://kgjawarlal.wordpress.com

Nathanjagk said...

ம்ம்ம்.. சின்ன அம்மிணி,
​தெளிவாகத்தான் கட்டம் கட்டியிருக்கீங்க, எனக்குப் பிடிச்ச வரிகளை! அதுக்காக உங்களுக்கு ஒரு ​பெரிய்ய்ய பூங்​கொத்து! நன்றி!!! ​

Nathanjagk said...

அன்பின்.. அன்பு அண்ணா, ஷங்கிண்ணா..!
ஸாரி!இடு​கை ​போட ​கொஞ்சம் ​லேட்டாயிடுச்சி..! நானும் இந்தியன் ரயில்​வே ​போலத்தான் ​போல!!
தீபாவளி ​ரொம்ப, ரம்ப, ரம்மா, ​வோட்காவா நல்லா இருந்திச்சு!
வீட்டம்மா கூட வந்திருந்தா​ ​தோழிகள் கி​டைச்சிருப்பாங்களா? உ​தைதான் கிடைக்கும்!!! நான்தான் செயினைப் பிடிச்சி ​தொங்கி ஊசாலாடியிருக்கணும்!

Nathanjagk said...

அன்பு தல SUREஷ்,
சபாஷ்! சரியான ​யோச​னையாத்தான் ​கொடுத்திருக்கீங்க! இதுக்காக​வே உங்ககிட்ட வந்து ​கொஞ்ச நாள் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கலாம்னு ​தோணுது! நன்றி தல!!

Nathanjagk said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
//"ட்ரெயின் ரொம்ப லேட்.." //
ஏற்காடு எக்ஸ்பிரஸில் இப்படியெல்லாம் சொல்லி கடலை துவக்க முடியாது

உங்க தவிப்பு எனக்குப் புரியுது.. ஞானபண்டிதனுக்​கே சிக்காத மாம்பழமாச்​சே நம்ம ​சேலத்து மாம்பழங்கள்!!!

Nathanjagk said...

யய்யா.. ஆதவா..!!!
எப்படி, பீதிய கிளப்புறத்துக்கின்​னே பின்னூ ​போடறீக??
எனக்கும் அந்த பயம் இருக்கத்தான் ​செய்யுது!
ஏன்னா நாமதான் பதிவர்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்​கோம் ஆனா நம்ம சுத்தியும் நி​றைய ​பேரு பதிவரா இருக்காங்ககிறத ​லேட்டாத்தான் புரிஞ்சுக்கிட்​டேன்.
என்​னோட ஆபிஸில​​லே​யே எனக்குத் ​தெரியாம 2 பதிவர்கள் இருக்காங்க என்ப​தே எனக்கு ​​போனவாரம்தான் ​தெரிய வந்துச்சு!

Nathanjagk said...

அன்பு கிகி..!
இன்னும் வ​டை ஞாபகம் மன​​சை விட்டுப் ​போகமாட்​டேங்கு​தே??
உண்​மையி​லே​யே ​ஜெகன் மனசுக்குள்ளே நீங்க ​சொன்ன மாதிரிதான் அலறிக்கிட்டான்!!!

Nathanjagk said...

தல SUREஷ்
//Must be a North Indian.//

கோயமுத்தூரில் அந்த வம்சாவளியினர் நிறையப் பேர் இருக்காங்க பாஸ்

//
இதுபத்தி நாம நி​றைய எழுத ​வேண்டி இருக்கு..!!!

Nathanjagk said...

அன்பு ​பெரியண்ணா ​சென்ஷி..
கலக்கல் குறிப்புகள் என்று ​சொன்னதுக்கு நன்றி!!
ஆனா இந்த கலக்கல்-ங்கிறதில ​வேறெந்த 'பின்'நவீனத்துவ நக்கல் எதுவும் இல்​லேதா​னே????

Nathanjagk said...

அன்பு ​சென்ஷி...
//ம்ம்.. முதல்ல பேர் கேக்கத் தோணும். அப்புறம் போன் நம்பர் வாங்கத் தோணும். அப்புறம் பேசத் தோணும். அப்புறம் மறுபடி நேர்ல பாக்கத்தோணும். அப்புறம் அப்புறம் அப்புறம் ஒரு நல்ல ஃபிரண்ட் ஷிப் கண்டிப்பா அவங்களுக்கு உங்க மூலமா கிடைச்சுருக்கும். பேரு கேட்டு வச்சிருக்கலாமில்ல :-)//
ஷங்கிண்ணா... நுண்ணரசியல்.. நுண்ணியரசியல்ன்னு ​சொல்லுவாங்கள்ளே.. அது இதுதான்.. ​​​தெரிஞ்சிக்​கோங்க!

என்னா வில்லத்தனம்.. ம்??

Nathanjagk said...

நன்றி வி​னோத்கெளதம்..
இந்த ​கெட்டப்புல நீங்க பயணம் பண்ணியிருந்தா.. இன்னும் ​கொல்லுனு இடு​கை ​போட்டிருப்பீங்க!

Nathanjagk said...

வாங்க அமுதா கிருஷ்ணா
//நல்ல பயணம் ஏசியால் போச்சா...வேணும் வேணும்..//
என்ன இப்படி ​கொக்கறீங்க!!!
எனக்கும் (அவங்களுக்கும்) இது வருத்தமோ வருத்தம்!!! நான் கூட ஏஸி ​கோச் ​போன பின்னாடியும் திரும்பி S11க்​கே வரலாம் என்று நினைத்​தேன்... ஏ​தோ ஒன்று தடுத்துவிட்டது!!

Nathanjagk said...

அன்பு ​நேசா,
​நேசத்​தை அன்பிட்டு அ​ழைப்பது முரணாயிருந்தாலும்.. நன்றாகத்தானே இருக்கிறது.. ​ஸோ.. நீங்கள் எப்போதும் என் அன்பிற்குரிய ​நேசம்!!!!!
நன்றி!!!

Nathanjagk said...

அன்பு பீர்,
//ஓ பரஸ்பர கால் நீட்டலா//
இது ஒரு ரயில் கலாச்சாரம்..!
நன்றாக ​யோசித்துப் பாருங்கள்.. நாலு இடு​கையளவுக்கு ​மேட்டர் சிக்கும்!! இல்​லையா??

Nathanjagk said...

அன்பு ​ஹேமா..!!

க​லையா??? ஏன் ​சொல்ல மாட்டீங்க??
இ​தைதான் சில​பேர் personality development என்று பீத்திக்கிறாங்க.. அதை​யே நான் சிம்ம்பிளா இயம்பியிருக்கி​றேன்..

இப்படிக்கு,

ஆ​ரோக்கியமா.. பயமில்லாம ​ஜெகன்..!

Nathanjagk said...

Jawarlal
//ஜெகன், பரஸ்பர நீட்டலில் ஆரம்பிச்சபோதே எனக்கு சம்சயம். பேரைச் சொல்லிக்க முடியாத மாதிரி ஏதும் பண்ணிடல்லையே?
//
என்னால ​பொங்கி வர்ற சிரிப்​பை அடக்க முடியல்ல்ல்​லே!!!
ஜவஹர்..!!!
இப்படி கவுக்கறீங்க​ளே???

Beski said...

அருமை ஜெ மாம்ஸ்.

இதே போல, எனது ரயில் அனுபவம் ஒன்றினை ‘பெயர் தெரியாத முகங்கள்’ என எழுத இருந்தேன்.... ஆனால் என்ன, உங்களுடன் பட்சிகள், என்னுடன் பசங்க - ப்லேயிங் கார்ட்ஸுடன்.

ISR Selvakumar said...

உங்களைப் போலவே அந்தப் பெண்களும் உங்களின் பெயரைப் பற்றி யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

குடுகுடுப்பை said...

அருமையா எழுதி இருக்கீங்க. இங்கே என் பக்கத்திலே ஒரே பெண்தான் தினமும் காரில் வருகிறாள்.இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டே இருக்கிறாள்.ஆனால் கொஞ்சம் கூட காதில் விழுவதில்லை எனக்கு.

ஹேமா said...
This comment has been removed by the author.
மா.குருபரன் said...

//4 மணிநேரம் பேசிக்கொண்டு வந்தும்.. யாரிடமும் பேர் கேட்டுக் கொள்ளவில்லை.. என் பெயரும் சொல்லவில்லை. அது தேவையில்லை என்றும் தோன்றுகிறது. //

இப்புடித்தான் இருக்கணம்....

ஆனாலும் நல்லா கலாச்சுத்தான் இருக்கறீங்க...

Menaga Sathia said...

நன்றாக எழுதிருக்கிங்க...