Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Tuesday, April 19, 2016
கிட்டுவின் வார்த்தை வங்கி
எனக்கு ஒரு கிராமத்து மாமா இருந்தார். கிட்டு என்று அழைப்பார்கள். ஒரு பத்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்து சொந்தம் என சொல்லலாம். ஒருசமயம் பள்ளி விடுமுறையில் அங்கு போகும்போது வித்தியாசமான வேலை ஒன்று கொடுத்தார். மிக இனிமையாக, தந்திரமாக பேசி எப்படியோ என்னை சம்மதிக்கவும் வைத்துவிட்டார்.
'ஏம்பா, நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும். நீ நல்லாப் படிக்கிற பையன்கிறதாலதான் உங்கிட்ட இதைச் சொல்றேன்...'
'ம், சொல்லுங்க'
'ஒரு ரூல்டு நோட் எடுத்துக்கோ. அதில அ - போட்டுட்டு அதுக்கு கீழ அ-வில் தொடங்குகிற 50 வார்த்தைகள்... ஆ போட்டுட்டு அதில ஒரு 50.. இப்படியே உயிரெழுத்து முடிச்சிட்டு அப்புறம் உயிர் மெய்யெழுத்துக்கும் எழுதிடு'
'எல்லா உயிர்மெய்யெழுத்துமா?'
'ச்சேசே.. எல்லாம் வேண்டாம்பா. க, ச, த, ந, ப, ம, ர, வ இது மட்டும் போதும் ஏதாவது கதைப்புத்தகம், நாவல், நியூஸ் பேப்பர் இதிலிருந்து ஒவ்வொரு வார்த்தையா எடுத்து எழுதினா ஈஸியா ஒரு வாரத்தில முடிச்சிடலாம்'
'ஓ!!'
'ஆமா.. க-ன்னா, அப்படியே கா, கி, கு, கெ இப்படி ஒவ்வொரு வரிசையிலும் ஒரு 50 வார்த்தைகள் இருந்தா போதும்'
'ஆமா, எதுக்கு இதெல்லாம்?'
'நான் சினிமால வசன கர்த்தா ஆகறதுக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஒரு வாய்ப்பு கூட கிடைச்சிருக்கு. என்ன படம்னு உனக்கு அப்புறமா சொல்றேன். நீ எழுதித் தரறது எனக்கு ஒரு வார்த்தை வங்கி மாதிரி பயன்படும். ஏதாவது சீனுக்கு வசனம் எழுதும் போது கி-யில் இல்ல சி-யில் ஆரம்பிக்கிற வார்த்தை வேணுங்கிறப்ப இதை எடுத்து பார்த்துப் பயன்படுத்திப்பேன். மறக்காம எழுதி முடிச்சிடு. என்ன?'
ஆவ் என்று எனக்கு வந்தது.
பிறகு 80 பக்க நோட்டும் பேனாவுமாக சுற்றும் போது, அந்த ஊர் பையன்கள் சிலர் என்னைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது. ம்! கிட்டு இப்படி பல பேரை ஏற்கனவே பணிக்கு அமர்த்தி தன் வார்த்தை வங்கியைப் பலப்படுத்திக் கொண்டிருப்பது புரிந்தது.
அடுத்த வாரமே தேடிக்கொண்டுவந்து விசாரிக்கவும் செய்தார்.
'கு-வரைக்கும் வந்துவிட்டேன். இன்னும் ஒரு வாரம் வேணும்'
'குட் குட் வெரிகுட்! நிறைய புக்கெல்லாம் ரெபர் பண்ணு. வேணும்னா நம்ம ஊர் லைப்ரரியில் புக்ஸ் எடுத்துக்கோ. கிட்டு சொன்னார்னு சொல்லு'
அப்படியே கண்களை ஆகாயத்துக்கு செலுத்தி, விரலைச் சொடுக்கி யோசிப்பார்..
'கு, கூ, கெ அதுக்கப்புறம் சு, சூ, செ.. ரைட்! முடிச்சிடலாம் முடிச்சிடலாம்'
அப்போது அவர் கண்களில் குத்திப் பார்த்த இட்லி இன்னும் இரண்டு நிமிடத்தில் வெந்துவிடும் போன்ற நம்பிக்கைச் சுடரும்.
அப்படியே மேலும் சில விதிகளையும் விளக்கிச் சொன்னார் கிட்டு. அதாவது பெயர்சொல், வினையெச்சம், பெயரெச்சம் போன்றவற்றை தவிர்த்து விட வேண்டுமாம். ஆனால் ஒவ்வொரு எழுதுக்கும் 50 வார்த்தைகள் என்பதில் கறாராகவே இருந்தார்.
இப்படி தினமும் எதிர்படும் போதெல்லாம் நச்சியதில் ஒருவழியாக முடித்து அடுத்த வாரத்தில் கொடுத்தேன். சாயுங்காலத்தில் மங்கலான தெருவிளக்கின் கீழ் அதை ஆர்வமாக வாங்கிக் கொண்டு பக்கம் பக்கமாக புரட்டினார்.
முகத்தில் இட்லி சரியாக வெந்துவிட்டதே போன்ற திருப்தி படர்ந்த மாதிரி இருந்தது.
'வெரிகுட் நல்லா செஞ்சிட்டே. எனக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தை தேவைப்படுது - அதாவது ஜ, ஷ, ஸ இப்படி ஆரம்பிக்கிற வார்த்தைகள். அப்புறம்.. விடுபட்டுபோன சில உயிர்மெய்களிலும் சிலதுகளையும் நீ கவர் செய்யலாம். உதாரமணா கோ, கெள, தோ, தெள இந்தமாதிரி...'
அந்த ஊருக்கு போவதையே விட்டுவிடலாமா அல்லது தமிழிலிருந்து வேறு மொழிக்கு மாறிவிடலாமா என்றிருந்தது.
சரி - நம் கண்ணெதிரே ஒரு வசனகர்த்தா உருவாகி, நாம் தயாரித்துக் கொடுத்த வார்த்தை வங்கியை பிரித்துப் பார்த்து, அதிலிருந்து ஒரு வசனத்தை உருவாக்கி, அதை திரையில் ஒரு நடிகரோ நடிகையோ பேசிக் கேட்கும் போது நமக்கும் ஒரு பெருமைதானே என்று அடுத்த அஸைன்மெண்டுக்கும் ஒத்துக்கொண்டேன். அவரிடம் இப்படி அஸைன்மெண்ட் வாங்கிய பல சிறுவர்களின் நான்தான் முதன்மை என்று பாராட்டுப் பத்திரம் வேறு.
அதற்கப்புறம் அவர் என்னிடம் எது பேசினாலும், இவர் பேசுகின்ற இந்த வாக்கியத்தை நான் எழுதிக் கொடுத்த வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்துக் கொண்டு பேசுகிறாரோ என்று படும். கிட்டு சில காலங்களுக்கு பிறகு என்னிடம் வார்த்தை வங்கி தயாரிக்கப் பணிப்பதில்லை. வேறு யாரிடமும் கேட்டதில்லை. சில பல 80 பக்க நோட்டு வார்த்தை வங்கிகளோடு வசனம் எழுத அமர்கிற நபரைப் பார்த்து தமிழ் சினிமா பயந்து மறுத்திருக்கக் கூடும்.
மொத்தமாக தமிழ் வார்த்தைகளை மட்டும் பயன்படுத்துகிற வசனகரத்தாவே தேவையில்லை என்றும்கூட தமிழ் சினிமா நினைத்திருக்கலாம்.
நான் எழுதிக் கொடுத்த கிட்டுவின் முதல் வார்த்தை வங்கி என்னவாயிற்று என்று அதற்கப்புறம் கேட்டதில்லை. எனக்கும் ஒரு விசனம்தான். பாருங்களேன், தமிழ் பேசும் சினிமா நாயகர்களுக்கோ நாயகிகளுக்கோ என் வார்த்தை வங்கியிலிருந்து தயாரித்து வரும் வசனத்தை பேசும் பாக்கியம் இல்லாமலேயே போய்விட்டது!
Wednesday, October 14, 2015
புலி எனும் மிகையதார்த்த சினிமா
சிம்புதேவன் அருமையான கார்ட்டூனிஸ்ட். ஆனந்தவிகடனில் வந்த அவரது புலிகேசி சித்திரங்கள் மூலம் அறிவேன். தமிழ்-கார்ட்டூன் எல்லைகளை விரித்துச் செல்லும் வன்மை கொண்டவர்கள் பட்டியலில் சிம்புதேவன் பெயரை நிச்சயம் பதிவு செய்யலாம். கிமுவில் சோமு போன்ற காமிக் (Comic)முயற்சிகள் அவரை தனித்து காட்டுகின்றன. இது போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கியத்தில் மிக குறைவாகவே இருக்கின்றன. இதை நான் எப்போதும் சொல்வதுண்டு: சிறுவர்களுக்கான இலக்கிய திறவுகோல் காமிக்ஸ் வசமே இருக்கிறது. ஒரு மொழியின் சித்திரக்கதைகள் குறைந்து போகுமென்றால் அத்தலைமுறையிலிருந்து தாய்மொழி இலக்கிய வாசிப்பு என்ற கதவு அடைக்கப்பட்டு விட்டது என்றே அர்த்தமாகிறது. இவ்வகையில் தமிழில் வரும் காமிக் முயற்சிகள் மற்றும் அதன் இலக்கிய சாத்தியங்கள் கவனத்தில் இருத்த வேண்டியவையாகின்றன.
ஓவியனின் சினிமா எப்போதும் பிற-சாதாரண வணிக சினிமாக்களிலிருந்து தனித்து நிற்கும். சத்யஜித் ரே-யிலிருந்து ஷங்கர் வரை உதாரணம் சொல்லலாம். ஒரு விஷுவல் தேடல் கொண்டதாக ஓவியன் கான்வாஸின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் எடுத்துக் கொள்ளும் கவனமாக திரைக்காட்சிகள் நிறைந்திருக்கும். இதை சிம்புதேவனும் நிரூபிக்கிறார். இவர் காமிக்ஸ் சாத்தியங்கள் கொண்ட ஓவியன் என்பதால் இதை எழுதுகிறேன். ஹாலிவுட்டின் ஏறக்குறைய அனைத்து சூப்பர் ஹீரோக்களும் காமிக்ஸில் இருந்து வந்தவர்களே. டிஸி (DC) மற்றும் மார்வல் (Marvel) காமிக்ஸ்கள் தாரை வார்த்த பாத்திரங்கள்தான் ஹாலிவுட்டின் பெரும்பான்மையான படங்களில் காண்கிறோம். இது தவிர பான்டஸி (Fantasy - கற்பனாவாதம் / மிகையதார்த்தம்) மற்றும் அனிமேஷன் கதைகளுக்கான மூலங்களும் காமிக்குகளே! சித்திரக்கதைகளுக்கு அதீத வரவேற்பு மேற்கு நாடுகளில் எப்போதும் உண்டு. சிறுவர்களுக்காக படைக்கப்பட்ட காமிக்ஸ் பாத்திரங்கள்தான் இப்போதும் அனைவரும் விரும்பிப் பார்க்கும் ஹாலிவுட் படங்களின் கதாநாயகர்கள். சிம்புத்தேவனின் கிமுவில்-சோமு சித்திரக்கதை கூட இது போன்ற திரையுலக விரிதல் சாத்தியம் கொண்ட ஆக்கம்தான். ஆனால் தமிழ் சினிமாவானது, தமிழ் காமிக்ஸ் உலகம் போன்றே புதுமுயற்சிகளுக்கான முனைப்புகள் இன்றி சூம்பிப்போய் கிடக்கிறது.
இன்னமும் சூப்பர்-ஹீரோ அல்லது மாயாஜால கதைகள் என்றால் நமக்கு அது ஹாலிவுட் படங்கள்தான். நம்மூரில் சூப்பர்-ஹீரோ வரக்கூடாது; வரவும்முடியாது - நாம் நிறைய மின்கம்பிகள் கட்டி, ஏராளமாய் சாக்கடைகள் திறந்து வைத்திருக்கிறோம். பறந்து செல்லும் சூப்பர்களுக்கு இவ்விடம் சாத்தியப்படாது.மாயாஜாலம் என்றால் விட்டலாச்சார்யா வகையறாக்கள், அதைவிட்டால் அம்மன்களின் கிராபிக்ஸ் (பி, சி சென்டர்களில் வசூல் அள்ளும் - வேறென்ன வேணும்?) இதுபோன்ற நாமே அறியாமல் வகுத்துவிட்டிருக்கும் சில குறுகிய மனப்பான்மையால்தான் நம் கற்பனைசாத்தியங்கள் சூம்பிபோய் விட்டிருக்கின்றன. கிரிஷ், ரா1, வேலாயுதம், எந்திரன் மற்றும் முகமூடி போன்று சில அபூர்வங்கள் மட்டுமே இந்திய சினிமா வசமுண்டு. முற்றிலும் அரசு அலுவலக குமாஸ்தா ரீதியில் நவீன படைப்பாளிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புது வகை கதைசொல்லல் அல்லது ஓவியர்களுடன் இணைந்து கிராபிக்ஸ்-நாவல் போன்ற அம்சங்கள் தமிழில் குறைவு - அல்லது இல்லை என்று கூட சொல்லலாம்.
பான்டஸியில் நம் மரபு சார்ந்த கதைகளையும் கதைக்களங்களையும் இழந்து விட்டு தலைமுறைகளாக மேற்கத்திய கதைகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் வீடியோ கேம் போன்ற தளங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் ஆதிக்கத்திற்கு இதுவே காரணமாக இருக்கமுடியும். தொலைக்காட்சி கார்ட்டூன்களைப் பார்த்து வளரும் சிறுவர்கள் பிறகு அதன் தாக்கத்தில் வெளிவரும் ஹாலிவுட் படங்களையே விரும்ப முடியும். இது இவ்வாறாகவே புரோகிராம் செய்யபட்டு விடுகிறது. அதன்பிறகு அவர்களுக்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே அளவுகோல். இதனாலேயே தாய்மொழி - தாய்நாட்டு படங்களை அந்த அளவுகோலால் சுலபமாக நிராகரித்து விடுகிறார்கள். சூப்பர்ஸ்டார் என்ற நிழலிருந்தும் கோச்சடையான் போன்ற படங்களின் தோல்விக்கு இதுவே காரணமாய் இருக்க முடியும். தொழில் நுட்ப மற்றும் அபரிமித முதலீட்டில் வெளிவரும் மேற்கத்திய படங்களின் உச்சத்தை எட்ட முடியாததால் நம்மொழிப் படங்கள் இன்னமும் அ.மா.அரைத்துக் கொள்ள வேண்டியதாகிறது.
இந்த அவலம் நீடிக்கின்ற தமிழ் சினிமாவில் சிம்புத்தேவனின் திரைப்படைப்புகள் சிறது ஆசுவாசத்தை அளிக்கின்றன. இம்சை அரசனிலிருந்து புலி வரை படைப்புகளில் மிகையதார்த்தம் மற்றும் மாயாவாதம் தொடர்வதை தேர்ந்த சினிமா விமரிசகர்கள் யாரும் மறுக்கமாட்டார்கள். புலி போன்ற சிறுவர்-பான்டஸி படத்தில் நடித்த விஜயின் துணிச்சலும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. இருந்தும் சிம்புத்தேவன் தனது இயல்பான மண்வாசனை கொண்ட கதைக்களத்திலின்று கழன்று ஹாலிவுட் தாக்கத்தில் புலி கதையை வடித்திருப்பதன் காரணம் வணிக ரீதியான அழுத்ததமாக இருக்குமோ? இருந்தும் துவளாத சுவாரஸ்யமாய் திரைக்கதையின் போக்கு இருக்கிறது. வான்-ஹெல்ஸிங்கில் (Van Helsing) வரும் டிராகுலா, பான்ஸ் லேபிரின்த் (Pan's Labyrinth) - தவளை மற்றும் ஒற்றைக் கண், மெலிஃபிஷியன்ட் (Maleficent) இன்னும் ஸிலீப்பிங் ப்யூட்டி Sleeping Beauty போன்ற படங்களின் தாக்கம் தெரிகிறது. இதன் காரணமாகவே நமக்கு ஹாலிவுட் அளவுகோல் நம்மையறிமால் வந்துவிடுகிறது. அசல் நம் மண்வாசனை கொண்ட கதையாக இருக்கும் போது கிராபிக்ஸ் ஒப்பீடு இரண்டாம் பட்சமாக போயிருக்க கூடும். கதையவில் புலி கம்பீரமாக இருந்தாலும் காட்சியமைப்பில் அது குன்றிவிட்டது.
சிம்புத்தேவன் படத்தில் வழக்கமாக ஒரு விமர்சன அரசியல் நையாண்டி வரும். இம்சை அரசனில் கோக் கம்பெனிகளை விமர்சித்திருப்பார். அறைஎண்.. கடவுள் படத்தில் ஸாப்ட்வேரில் வேலை செய்பவர்களை. முரட்டுசிங்கத்தில் புதையல் தேடும் போது வரும் குறிப்புகளில். இதில் சிலது கதைப்போக்குடன் ஒவ்வாமல் போவதை கவனித்திருக்கிறேன். அது திரைக்கதையின் வலுவை குறைக்கும் விதமான நையாண்டியாக மாறிவிடுகிறது. அதுபோன்றே புலியிலும் ஒரு இடத்தில் ஆல்பா-பீட்டா-காமா (நியூட்டன், ஐன்ஸ்டீன்) எல்லாம் வருகிறார்கள். இது கதை மீதான நம்பகத்ததன்மை நீர்த்துப் போக செய்துவிடுகிறது. இனி வருவது அனைத்தும் நையாண்டிவகை சினிமாதான் என்ற எண்ணத்துக்கு உந்தப்பட்டவர்களாகிறோம். இவை தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.
முக்கியமாக பான்டஸி கதை என்பதே ஒவ்வொரு காட்சியிலும் முற்றிலும் மாறுபட்ட கற்பனையை பார்ப்பவர்களின் பிரமிப்பு குறையாமல் நகர்த்திச் செல்வதுதான். இது ஒரு அரைமயக்க ரசனை அனுபவத்தை பார்வையாளனுக்கு கொடுத்து அவர்களின் பால்யத்தை மீட்கும் கவனமான வேலை. அதில் அர்த்தமற்ற நையாண்டி இடைசெருகல்கள் பார்வையாளளின் மயக்கத்தை குலைத்து அவனை ஒரு விமர்சகனான நிமிர்ந்து கொள்ள செய்து விடும். அப்படி விலகியவன் கதையை விமர்சிக்கவே செய்வான்.
கதையோட்டத்திலுள்ள சில தர்க்கரீதியான குறைகளை தவிர்த்து அணுகினால், சிம்புத்தேவனின் புலி தமிழ் சினிமாவில் உள்ள பான்டஸிக்காக வெறுமையை நிரப்பும் முயற்சியாக கொள்ளலாம். இது போன்ற ஆக்கங்கள் திரையுலகிலும் அதனினும் முதன்மையாய் தமிழ் இலக்கியத்திலும் அதிகம் வரவேண்டும். அதுவே வரும் தலைமுறைகளுக்கான தாய்மொழி இலக்கியத்திற்கான வழித்தடம்.
Saturday, July 11, 2009
என்னடா பாண்டி என்ன பண்ணபோற?
நாங்கெல்லாம் சென்னை தொலைக்காட்சில ஞாயித்து கிழமை போடற படத்து பேர கேக்கறதுக்காக, எதிரொலில அந்த அக்கா படிக்கிற அத்தன கடிதங்களயும், அதுக்கு அந்த மாமா சொல்ற பதிலுகளயும் (?) கவனமா, கேவலமா கேட்டுக்கிட்டு ஒக்காந்திருப்போம்.சில டைம் மாமா படத்து பேரச் சொல்லாமலியே விசுக்குனு எந்திரிச்சு போயிருவாரு.. சின்னப்பசங்க, நாங்கெல்லாம் பயங்கர கடுப்பாயிருவோம். டிவியை அப்படியே எட்டி அப்பலாமான்னு தோணும்.. ம்ம்.. ஓசி டிவி பாக்கறதுக்கு வூட்டுக்குள்ள நம்மள விடறதே சாஸ்தி.. அதில இந்த லொள்ளு வேறயா?
இப்ப பாருங்க... ஒரு நாளைக்கு 8 படம் பாக்கலாம் - கேபிள் டிவில. எதிரொலியாவது எங்கூட்டு எலியாவது..
ம்ம்.. சொல்லியாவுது.
ம்ம்.. சொல்லியாவுது.
போனவாரந்தான் நம்மூட்டு பெரிய பொட்டிக்கு சின்ன பொட்டி (செட்டாப்) வச்சாங்க.200 சேனல் வருதாம்ல.. எங்வூட்டுக்காரம்மா ஒரு தமிழ் சேனல் உடாது.. வூட்ல நியூஸ் கேக்கிற ஒரே ஆளு அம்மிணிதான்.
நான் ஒருவாட்டி சன்ல நியூஸ் கேட்டுட்டு அப்படியே கைதவறுதலா ஜெயா டிவி அமுத்திப் போட்டேன்.. அங்கியும் நியூஸ்.. அம்முட்டுதான். இது ரண்டயும் கேட்டுட்டு எவனாவது வெளங்கியிருக்கானா? நீங்களே சொல்லுங்.
இன்னிக்கு சாயங்கலாம் ஒரு அஞ்சு மணிக்காட்டம் அம்மிணிட்ட ஒருவா டீத்தண்ணி குடிக்கலாமின்னுட்டு ஒக்காந்திருந்தேன். நம்முதுதான் நோண்டு கையாச்சே.. ரிமோட்ட எடுத்து (அட டிவி ரிமோட்டுங்)
'அது என்னடா 200 சேனலு, ஒரு ஓட்டு ஓட்டித்தான் பாப்பம்' ன்னு திருப்பிக்கிட்டிருந்தேன். ஒக்காளிங்க.. என்னம்மா பெத்து குட்டிங்களா பெருத்திருக்குங்க ஒவ்வொரு சேனலும்.. எல்லாம் நாம கொடுக்கிற இடந்தா..
அப்படியே ஜெயா மேக்ஸ் பக்கம் போனேன்.. ஒரு பாட்டு போட்டிருந்தான். அதில எப்பயும் பாட்டுதேன்னு அம்மிணி சொன்னுச்சு. அட திருவாத்தாங்களா.. ஒரு சினிமா இப்பிடியும் பார்ட் பார்ட்டா வித்து திங்கறாங்களே.
ம்ம்.. சொல்லியாவுது.
அப்ப பாருங்க ஒரு பாட்டு வந்திச்சு.பாட்டுல ஒரு திருட்டுப்பய.. நல்ல இளவட்டம்.. அசல் திருட்டு முழிங்க பயலுக்கு.. திருடறான்.. கொண்டு போயி எங்கியோ ஒளிக்கிறான்.. அப்புறமா ஜெயிலுக்கு போறான்..இது அம்புட்டும் பாட்லய ஓடுது.. நம்ம டயிரக்டருங்க எல்லாம் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரியில்ல.. என்னமா யோசிக்குதுங்க!
பாட்டு நல்லா இருக்கேன்னு சவுண்டு சாஸ்தியா வச்சேன்.
அட நம்ம இளயராசா பாடியிருக்காப்ல..பாட்டும் நல்லாதே இருக்கு.. பாட்டு வரி என்னனு உத்து கேட்டேன்
"அச்சடிச்ச காச அவன் புடிச்சு வச்சாண்டா
அட நம்ம இளயராசா பாடியிருக்காப்ல..பாட்டும் நல்லாதே இருக்கு.. பாட்டு வரி என்னனு உத்து கேட்டேன்
"அச்சடிச்ச காச அவன் புடிச்சு வச்சாண்டா
அவன் புடிச்சு வச்ச காச நான் அடிச்சுப் போட்டேண்டா"
நல்லாத்தேன் இருக்கு!
அம்மிணி காப்பி கொண்டு வந்துச்சு. என்னடா இவன் டீதான கேட்டான், அம்மிணி காப்பி கொண்டு வருதேன்னு கேக்கறீங்களா? இதெல்லாம் நீங்க வேணா கேக்கலாம். நா அந்த மாதிரி பன்னாட்டு எல்லாம் பண்ண சான்சே இல்லீங்.
காபிய மூடிட்டு குடிக்காம
"அம்ணி, இந்த பாட்டு சோரா இருக்குல்ல"
"இதா...? ம்"
"இது என்ன படம்னு தெரியுதா அம்ணி?"
மின்ன மாதிரி பளிச்சுன்னு படத்தோட பேரெல்லாம் பாட்டு மேல போடறதில்ல.. பாக்கிறவங்களுக்குதா மண்ட காஞ்சு போகுது. அம்மிணி எதுவும் யோசிக்காம வெடுக்குனு சொல்லிச்சு..
"என்னடா பாண்டி என்ன பண்ண போற"
"ங்கொக்கமக்கா, இப்படியொரு படமா.. எளயராசா பாடியிருக்காப்ல. நல்லாயிருக்குல்ல"
"ஆமாமா"
"இவனாரு? ஆடு திருடன கொரவனாட்டம்? ஈரோவா?"
"ஆமா.."
"ஆரு புடிச்சது இப்படி ஒரு ஈரோவ"
"இது எளயராசாவே எடுத்த படம்ல, அவரே பிடிச்சிருப்பாரு"
"அட எளயராசா படமா?"
"ஆமாங்கிறேன்ல"
"ம்ம்.. என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.. நல்லாத்தேன் இருக்கு பேரு"
"ஆமாஆமா, நீ மொதல்ல காலி டம்பளர கொடு"
காபி டம்ளரை கொடுத்துப் போட்டு நாமதான் இப்படி இளிச்சவாயனாட்டம் எதுவும் தெரியாம இருக்கோம், அம்மிணி பரவால்லே நல்லா சூதானமாத்தா இருக்குன்னு பெருமயா நெனச்சுக்கிட்டேன்.
காபி டம்ளரை கொடுத்துப் போட்டு நாமதான் இப்படி இளிச்சவாயனாட்டம் எதுவும் தெரியாம இருக்கோம், அம்மிணி பரவால்லே நல்லா சூதானமாத்தா இருக்குன்னு பெருமயா நெனச்சுக்கிட்டேன்.
திரும்ப ஒருமுறை சொல்லிக்கிட்டேன்
"என்னடா பாண்டி என்ன பண்ணப் போற.."
"நீ என்ன சரியான லூஸா?" - அம்மிணிதான்
"....... எலே யாரப்பாத்து என்ன கேக்குற?"
"ஆமா பின்ன.. என்னத்த சொன்னாலும் அப்பிடியே நம்பிக்கிறதா?"
"என்ன புள்ள சொல்ற?"
"ஆங்.. எனக்கு மட்டும் பேரு தெரியவா போவுது.. சொம்மா ஏதொ ஒரு பாட்டு வரிய அடிச்சிவிட்டேன், அத போயி நம்பறதா"
"அப்ப எளயராசா படம்னியே?"
"சும்மனாச்சிக்கு"
"...... கடசில நம்மளயே கேனயனாக்கிட்ட, ஆங்?"
"ஆமா இவுரு பெரிய சீமக்கருவாடு"
ம்ம்.. சொல்லியாவுது!
- ஏனுங் நீங்களாவது சொல்லுங், படத்து பேரு என்னனு.
Sunday, July 5, 2009
சாங் ஆப் ஸ்பாரோஸ்

ஒரு சாமானியனைப் பற்றிய ஒரு ஈரானிய படம்.
நீங்கள் நெருப்புக்கோழியை நேரில் பார்த்திருக்கிறீர்களா? நான் நம்மூர் கோழிகளை நெருப்பில் வாட்டுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதுவல்ல இது. ஆங்கிலத்தில் ostrich என்றழைக்கப்படும் நெருப்புக்கோழிகள் அளவில் பெரியவை. பறக்கத் தெரியாது. தினமும் மூன்று முட்டைகளாவதுவைக்கும். அம்முட்டைகளை உடைப்பது எப்படியென்று இப்படத்தில் கரீம் என்பவர் சொல்லித்தருவார். சொல்ல மறந்த நெ.கோ. விஷயம் - அவைவேகமாக ஓடும் - எவ்வளவுவேகம்? நம்மை விட, கரீமை விட, அவரின் குடும்பச்சுமை, பொறுப்பு என எதைப் பற்றியும் கவலையே படாமல் வேகமா ஓடும்.
ஒரு ஈரானிய கிராமத்து வாசி கரீம். நீங்கள் அரைடவுசர்பையன்தான் என்றாலும் வெகு எளிமையாய் உங்களை வசீகரித்து அருகில் வர வைத்துக் கொள்ளும் ஒரு அடர்மீசைவெகுளி முகம் கரீமுடையது. ஏமாற்றங்களை சமாளிக்கதெரியாத, நகரத்து பரபரப்புகளை வலிதில் ஏற்று திகையும் ஒரு முகம்.நேர்மையும் குடும்பச்சுமையும் சுருங்கிய கண்கள். அப்புறம் ஒரு பறவை மூக்கு. கரீமோடுதான் மொத்த கதையும் பயணிக்கிறது. ஆகவே நம்மூர் ஸ்டைலில் அவர்தான் ஹீரோ எனக் கொள்வோமே? ஆனால் நமக்கு அவ்வளவு பழகாத 40+ வயது ஹீரோ, கிராமத்து ஆசாமி, டூயட்களும் கிடையாது - வேண்டுமானால் அவரே பாடிக்கொள்வார். ஹீரோவுக்கு
படம் முழுக்க 2 சட்டைகள்தாம். அப்புறம் நம்மூர் ஹீரோக்கள் அவ்வளவாக ஜீரணிக்க முடியாத இஸ்லாமிய வாழ்க்கைமுறை வேறு.
படம் முழுக்க 2 சட்டைகள்தாம். அப்புறம் நம்மூர் ஹீரோக்கள் அவ்வளவாக ஜீரணிக்க முடியாத இஸ்லாமிய வாழ்க்கைமுறை வேறு.
எப்படியாயினும் படத்தின் ஆரம்பத்திலேயே நம் கைகளை வாஞ்சனையுடன் பற்றிக் கொண்டுவிடுகிற வசீகர அப்பாவி கரீம். எல்லாவித வேறுபாடுகளையும் தூக்கிக் கடாசிவிடுகிறார் தன் வெகுளிச் சிரிப்பில்.
ஈரான் மண், நெருப்புக்கோழிப் பண்ணை, டெஹ்ரான் நகரம், கரீமின் மகன் ஹுசேனின் மீன்கள் என எதுவும் நம்மை வித்யாசமாக உணரவிடுவதில்லை. ஹுசேன் ஒரு துறுதுறு.. இல்லை குறும்புக்காரச் சிறுவன். ஆனால் பெரிய கனவுகள் அவன் கருவிழியில் எப்போதும் துழாவிய படியே இருக்கிறான். பக்கத்துத்தோட்டத்து கிணற்றில் அவன் தங்கமீன்களைப் பிடித்து விட்டு வளர்க்கிறான். பெருக்குகிறான். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, இன்னும் பெரிய அளவிலாக அந்த கிணற்றுள். ஹுசேனோடு அவனது நண்பர்களும் இந்த மீன் வளர்ப்பில் ஆர்வமாயிருக்கிறார்கள். மீன்கள் வெறும் உயிர்கள் அல்ல; எண்கள் - பணத்தைப் பெருக்கும் எண்கள். ஹுசேன் கரீமிடம் அடிக்கடி சொல்லி வருகிறான்.
"இந்த மீன்களைக் கொண்டு நான் பணக்காரனாகி விடுவேன். லட்சாதிபதி ஆகிவிடுவேன்"
ஈரான் மண், நெருப்புக்கோழிப் பண்ணை, டெஹ்ரான் நகரம், கரீமின் மகன் ஹுசேனின் மீன்கள் என எதுவும் நம்மை வித்யாசமாக உணரவிடுவதில்லை. ஹுசேன் ஒரு துறுதுறு.. இல்லை குறும்புக்காரச் சிறுவன். ஆனால் பெரிய கனவுகள் அவன் கருவிழியில் எப்போதும் துழாவிய படியே இருக்கிறான். பக்கத்துத்தோட்டத்து கிணற்றில் அவன் தங்கமீன்களைப் பிடித்து விட்டு வளர்க்கிறான். பெருக்குகிறான். ஒன்று இரண்டாக, இரண்டு நான்காக, இன்னும் பெரிய அளவிலாக அந்த கிணற்றுள். ஹுசேனோடு அவனது நண்பர்களும் இந்த மீன் வளர்ப்பில் ஆர்வமாயிருக்கிறார்கள். மீன்கள் வெறும் உயிர்கள் அல்ல; எண்கள் - பணத்தைப் பெருக்கும் எண்கள். ஹுசேன் கரீமிடம் அடிக்கடி சொல்லி வருகிறான்.
"இந்த மீன்களைக் கொண்டு நான் பணக்காரனாகி விடுவேன். லட்சாதிபதி ஆகிவிடுவேன்"
10 வயது சிறுவன் பணக்காரன் கனவில் இருப்பது அந்த (குடும்ப) சூழ்நிலையின் மெளனமாய் கவிந்திருக்கிற வறுமையைச் சுட்டி காட்டுகிறது. கரீமின் மூத்த மகள் ஹனியா. காதில் கேளுதவி கருவியோடு இயங்குபவள். ஒருமுறை ஹுசைனின் லூட்டியால் அது பழுதாகிவிடுகிறது. அதன் விலையோ கரீமுக்குப் பெரியது. கோபத்துடன் ஹுசைனை வினவுகிறார்,
"இதோட விலை என்ன தெரியுமா?"
"ஒரு லட்சம் மீன்கள்"
மிரண்ட கண்களுடன் உரைக்கிறான் ஹுசைன்.
கரீமின் மனைவி நர்கீஸ், கடைசி மகள், அவரின் வீடு, முற்றத்தில் போட்டுவைத்திருக்கும் தட்டுமுட்டு சாமான்கள், தங்கமீன்கள் பெருகும் கிணறு, நீர் மொண்டு வருகிற வீட்டுக்கிணறு, கரீமின் சிவப்பு வண்ண பைக், நெருப்புக் கோழி பிடிப்பது, நீல வண்ணம் அடிக்கப்பட்ட கதவு, சாம்பல் களறியாக காணும் வயல்வெளிகள் என படம் முழுதும் புகைப்பட நேர்த்தி கொண்ட காட்சிகள்.
தனி மனிதனின் இயல்பு, அது வெளிப்படும் சந்தர்ப்பத்தை பொறுத்து அசாத்தியத் தன்மை வாய்ந்தவையாகி விடுகின்றன. தேர்ந்த இயக்குநரின்நுண்ணறிவு இதை கவனித்து உணர்ந்து அதை காட்சிப்படுத்தும் போது இந்த அசாத்தியம் ஒரு இலக்கியப் பதிவாகிறது.
இதற்கு உதாரணம் கரீம் நகரத்துக்குச் சென்று டூவிலர் டாக்ஸியாக செயல்பட்டு பணம் ஈட்டி, புதியதாக ஒரு ஆன்டனா வாங்கி வந்து வீட்டுக் கூரையில் மாட்டுகிறார். மாட்டிவிட்டு அப்படியே கூரையில் இருந்தபடியே பக்கத்து வீட்டுக் கூரைகளைநோட்டமிடுகிறார். ஊஹும்.. ஒன்று கூட கரீமின் புது ஆன்டனா சைஸ், கம்பிகள் எண்ணிக்கை பக்கம் கூட வர ஆகாது. அப்படியே ஒரு பெருமிதம் மின்னுகிறது கரீமின் கண்களில். உதட்டில் ஒரு அசட்டு சிரிப்பு வேறு.
இது ஒரு எளிய காட்சிதான். ஆனால் இந்த எளிமைக்கு உன்னதம் சேர்ப்பது இயக்குநரின் கைவண்ணம். எப்படியென்றால்., இந்த சம்பவத்துக்கு முன் ஒரு காட்சி, அதில் கரீம் கூரையில் இருந்து பழைய சிறிய ஆன்டனாவை சரி செய்து கொண்டிருப்பார். கீழே ஹுசேன் டிவியை பார்த்தபடி இடது வலது எனக் கத்திக்கொண்டிருப்பான். இது போன்ற சிறுசிறு அலைகள் ஒதுக்கிய நுரைதான் சிலசமயம் பெருங்கடலை விட அழகாக தெரிகின்றன!
நெருப்புக்கோழி பண்ணையிலிருந்து ஓடிவிடுவது, அதை துரத்திச் செல்வது, கரீம் அதைப்பிடிக்க நெ.கோ. போலவேடமணிந்து செல்வது, புதரில் படபடக்கும் இறகுகள், கடையில் காணும் நெ.கோ. முட்டை, கோழியில்லாமல் பண்ணை வேலையிழந்து வீடு திரும்பும் போது நிறைய பண்டங்களும் ஒரு முட்டையும் கொண்டுவருதல் என படம் முழுக்க நெ.கோ. இழப்பு வறுமையின் குறியீடாக உணர்த்தப்பட்டிருக்கிறது.
ஹனியாவின் காது இயந்திரம் பழுதடைவிலிருந்து ஒரு துர்கனவு ஆரம்பமாகிவிடுவது போலிருக்கிறது. அதை சரிசெய்யும் பொருட்டு தன் பைக்கில் நகரமான டெஹ்ரான் செல்கிறார். டாக்டர் அதன் விலை மிக அதிகம் என்கிறார். வரவழைக்க மூன்று மாதம் வேறு ஆகும்.
ஹனியாவோ தன் தேர்வுகளை எதிர்நோக்கியிருக்கிறாள்.
ஹனியாவோ தன் தேர்வுகளை எதிர்நோக்கியிருக்கிறாள்.
இந்த சமயத்தில்தான் கரீமுக்கு நெ.கோ. பண்ணை வேலை போய்விடுகிறது.டெஹ்ரானிலேயே தன் பைக்கை வாடகைக்கு ஆள்களை (சிலசமயம் சரக்கு) ஏற்றிச் சென்று சம்பாதிக்கிறார். இது ஒரு கணிசமான தொகையாவும் படுகிறது கரீமுக்கு. மனைவியிடம் கனவுகளை விவரிக்கிறார். புதிதாக வீட்டுக்குப் பொருட்களை வாங்கி வருகிறார்.
கிராமத்திலிருந்து நகரத்து சென்று சம்பாதித்து வருபவர்கள் பாக்கெட்டில் பணம் மட்டும் இருக்காது. நிறைய நம்பிக்கை.. புதிதாக கற்றுக்கொண்ட நகர சாமார்த்தியங்களின் பெருமை எல்லாமும் ஒரு கலவையாக இருக்கும். இது ஒரு நுட்பமான விஷயம். இதை சரியான விகிதத்தில் நடிப்பில் கொண்டு வந்திருப்பார் கரீம்.
இதைவிட நான் ஆச்சரியப்பட்டு ரசித்த விஷயம்: கிராமத்து மனிதர்களையும் நகரத்து மனிதர்களையும் வெகு இயல்பாக வேறுபடுத்திக் காட்டியிருப்பது. கிராமத்து மனிதர்கள் பேசுவது பழகுவதில் நிதானத்தையும், டெஹ்ரான் நகரத்து மனிதர்கள் வேகமாக செயல்படுவதிலும், அவர்களின் சுயநலத்தன்மையையும் உன்னிப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மஜீத்.
இரு அலங்கார விளக்குகளுடன் வாடகைக்கு வருகிறார் ஒரு நகர ஆசாமி. சேர வேண்டிய இடத்தில் விட்டதும், அந்த ஆசாமி விளக்குகளை கரீமிடம் கொடுத்து மூன்றாவது மாடியில் வைக்கச் சொல்கிறார்.
"பரவால்லே, பரவால்லேபோப்பா, பைசா சேத்துக் கொடுக்கிறேன்.. சீக்கிரமா போ"
"இல்ல நான் போவணும்"
"போலாம் போலாம்.. சீக்கிரம் கொண்டு போ இதை"
"..."
"ஆச்சா.? சரி இந்த பாக்ஸையும்.. அட போப்பா.. உன் வண்டிய யாரும் தூக்கிட்டு போக மாட்டாங்க. நான் பாத்துப்பேன்"
"..."
"அடடா சட்டை கிழிஞ்சுடுச்சா.. கவலப்படாதே நான் உனக்கு வேறு நல்ல சட்டை தரேன்"
"அடடா சட்டை கிழிஞ்சுடுச்சா.. கவலப்படாதே நான் உனக்கு வேறு நல்ல சட்டை தரேன்"
கிழிந்த சட்டைக்கு பதிலாக வேறு சட்டையும் சுமைக்கூலி சம்பளமும் கிடைக்கிறது.
கரீம் மிகவும் நல்லவர், நேர்மையானவர் என்று வரிந்து கட்டி சொல்லும்படிக்கு சில காட்சிகளை அமைத்திருப்பார் இயக்குநர். அவைகளில் சிலது சாதாரண கலை வெளிப்பாடு கொண்டவை. டிராபிக்கில் பிச்சை கேட்ட சிறுமிக்கு சில்லறை முறிக்க முடியாமல் டிராபிக்கில் அடித்துச் செல்லப்படுவது.. அதே நேரத்தில் வீடு திரும்பும் வழியில் சாலையோரத்தில் குளிர்பானம் விற்றுக் கொண்டிருக்கும் மகளையும் மகனையும் அடிப்பது என சாமானிய மனிதனின் நுண்ணுணர்வுகள் நிறைய உண்டு.
மனைவி அவசரப்பட்டு விற்ற நீல வண்ணம் பூசிய கதவை அவரின் உறவினர் வீட்டிலிருந்து தனியாளாக முதுகில் சுமந்து, சாம்பல் வயல் வெளியே வருவது நம்முள் பாரத்தை ஏற்றும் காட்சி. வீட்டு தட்டுமுட்டு சாமான்களில் சிக்கி பரிதாபமாய் காலை உடைத்துக்கொண்டு படுத்துக்கிடக்கும் காட்சி இத்தனை உழைப்பும் வீணோ என்று கேட்கிறது. எப்போது கரீம் மீண்டும் எழுந்து நடப்பார் என பதைக்க வைத்துவிடுகிறது.
கரீம் காலில் கட்டுடன் டாக்டரை பார்க்க ஹுசேனுடன் நகரம் செல்கிறார். ஹுசேன் குடிக்க ஏதாவது வாங்கிவரலாம் என்று பக்கத்துக் கடைக்குச் செல்கிறான். கரீம் தனியாக உட்கார்ந்திருக்கிறார். கையிலிருக்கும் காசுக்கு ஒரே ஒரு ஜுஸ் பாக்கெட் மட்டும் வாங்க முடிகிறது ஹுசேனால்.கரீமிடம் அதைக் கொடுத்து குடியுங்கள் என்கிறான். உனக்கு எங்கே என்கிறார் கரீம். நான் குடித்துவிட்டேன் நீ குடி என்கிறான் ஹுசேன். சரியென்று இரண்டு மிடறு குடித்துவிட்டு,
"பரவால்லடா.. இந்தா நீ ரெண்டு வாய் குடி"
என்று மகன் கையில் திணிக்கிறார் கால் உடைந்த கரீம்.திகைத்து பின் அதை வாங்கிக் குடிக்கிறான் ஹுசேன்.
காலொடிந்ததால் வீட்டிலிருக்கும் அனைவரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம். ஹுசேன்டிரக்கில் ரோஸ் செடிகளை இறக்கி ஏற்றும் வேலை. கைகளில் காய்த்துக்கிடப்பதைப் பார்த்து கண்ணீர் விடுகிறார் கரீம். மகள் ஹனியா தன் காது இயந்திரம் இப்போ சரியாகவேலை செய்கிறது என்கிறாள் கரீமிடம்.
"எப்படி அதுதான் கெட்டு போச்சே?"
"இல்ல பேட்டரி மட்டும் மாத்துனேன். இப்ப நல்லாக் கேக்குது"
தான் பேசுவது மகளுக்கு கருவி மூலம் கேட்பது பற்றி சந்தோஷமாகிறார். இதைச்சொல்லிவிட்டு மகள் திரும்புகிறாள். அப்போது பக்கத்திலிருந்த மாத்திரை கீழே விழுந்து விடுகிறது. அதை எடுக்க மகளை அழைக்கிறாள்.
"ஹனியா ஹனியா"
மகள் திரும்பவில்லை. தோளைத் தட்டிக்கூப்பிட்டதும் திரும்புகிறாள். உதட்டசைவில் மட்டும் ஒலியை உணர முடிகிறது ஹனியாவால்.காது இயந்திரம் வேலை செய்கிறது என்பது பொய். தன் பொருட்டு மகள் பொய் சொல்கிறாள் என்று மேலும் வேதனையடைகிறார் கரீம்.
பின்னொரு சமயம், டிரக்கில் நகரத்திலிருந்து திரும்புகிறார்கள். கரீம், ஹுசேன், அவனது நண்பர்கள், அவர்களது முதலாளி. வண்டி நிறைய பூந்தொட்டிகள். அதற்கு அடியில் ஹுசேனின் தங்கமீன்கள்.. நூற்றுக்கணக்கில். நண்பர்கள் அனைவரும் பூந்தொட்டிகளை இறக்கிவைக்க செல்கிறார்கள்.
ஹுசேன் திரும்பி வந்து பார்க்கும்போது மீன்தொட்டி - அது ஒரு பிளாஸ்டிக் - ஓட்டை விழுந்து நீரெல்லாம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. பையன்கள் அனைவரும் போர்க்கால நடவடிக்கைபோல் அவசர அவசரமாக மேலுள்ள அத்தனை பூந்தொட்டிகளையும் தூக்கி கடாசிவிட்டு மீன் தொட்டியைவெளியே எடுக்கிறார்கள். கரீம் பையன்கள் பூந்தொட்டிகளை உடைப்பதைப் பார்த்து அதிர்ந்து டிரக்கை விட்டு வெளியே வருகிறார். பையன்களைப் பார்த்து கத்துகிறார். ஏன் இந்த கிறுக்குத்தனம் என்று. பையன்கள் எதையும் கவனித்த மாதிரி தெரியவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் மீன்களை எப்படியாவது காப்பாற்றுவது. மீன்கள் வெறும் மீன்களல்ல. தங்க மீன்கள். அத்தனையும் அவர்களின் பணக்கனவுகள். பரிதாபம் பையன்களால் மீன்களைக் காப்பாற்ற முடியவில்லை. தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக தொட்டியைத் தூக்கிச் செல்லும் போது கைதவறி தொட்டி கீழே விழுந்து மீன்கள் சிதறுகின்றன. எவ்வளவு போராடியும் மீன்களுக்கு நீர் கொண்டு வரமுடியவில்லை. மீன்கள் தரையில் கிடந்து துள்ளுகின்றன. கடைசியில் பையன்கள், கண்மீன்கள் நீரில் அமிழ தரையில் துள்ளும் தங்கமீன்களை பக்கத்து சாக்கடையில் விடுகிறார்கள். ஒரேயொரு மீனை மட்டும் பாலிதீன் பாக்கெட் நீரில் போட்டு எடுத்துக் கொள்கிறான் ஹுசேன். அவன் திரும்ப அதைப் பெருக்க வேண்டும். அதே பக்கத்து வீட்டுக் கிணற்றில். ஒன்றிலிருந்து இரண்டாக.. இரண்டிலிருந்து நான்காக.. பின்
நூறாகவும்..
நூறாகவும்..
சிறுவயதில் அளவுக்கு மீறிய உழைப்பு அது திரும்பவும் பூஜ்யத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பது எத்தனைக் கொடுமை? இந்த இழப்பினூடே சோகம் ததும்பிய முகங்களாக டிரக்கில் பயணிக்கிறார்கள் சிறுவர்கள். அப்போது அவர்களோடு சேர்ந்து கொள்ளும் கரீம் அவர்களின் சோக முகங்களைப் பார்க்கிறார். பக்கத்திலிருக்கும் ஒரு சிறுவனுக்கு கை விரலில் காயம் பட்ட ரத்தம் கசிகிறது. தன் கைக்குட்டையை கிழித்து அதற்கு கட்டுப் போடுகிறார். பையனைப் பார்த்து ஒரு எளிய சிரிப்பு சிரிக்கிறார். பிறகு நம்பிக்கை ததும்பும் ஒரு பாடலைப் பாடுகிறார். பையன்கள் கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகைப் பூக்கிறார்கள். தன் நம்பிக்கை, இழப்பிலிருந்து மீளெழுதல், உழைப்பின் வெற்றி இவையனைத்தையும் ஒரு பயணத்தினூடே அடுத்த தலைறைக்குக் கொண்டு சேர்த்துவிட்டாற் போன்ற உணர்வுடன் தொடர்கிறது டிரக் பயணம்.
என்னைப் பொறுத்தவரை படம் இந்த புள்ளியிலேயே முற்றுப்பெற்று விட்டது. ஆனால் படம் இன்னும் இருக்கிறது.
படத்தின் இசையைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். கரீம் பாடும் சில பாடல்கள், பின்புலமாய் மசூதி தொழுகை ஒலி, ரய் பாடல்கள், டெஹ்ரானின் நகரத்து நெரிசல் இப்படியாக படம் முழுவதும் பயணிக்கிறது இசை. கரீம் கதவை முதுகில் சுமந்து வரும் காட்சி, நெ.கோ. தேடிச் செல்லும் காட்சி போன்றவற்றில் ப்ரத்யேக ஈரானிய இசை வடிவங்களாய் நிறைகின்றன.
திரைக்கதை நெருக்கமான கோர்வையாய் சீரான வேகத்தில் செல்லும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. சுமையான காட்சிகளுக்கிடையேயும் சுவாரஸியமான காட்சிகள் வந்து போவதால் அலுப்பு தட்டாமல் படம் பார்க்கமுடிகிறது. ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளும் உரையாடல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கரீம் அளவுக்கு இணையாக நடித்தவர் என்றால் அது அவரது பையன் ஹுசேன்தான்.
வறண்ட நிலங்கள், கிராமிய வீடுகள், கரீம் பைக்கில் பயணிக்கும் தூரங்கள், டெஹ்ரானின் நெரிசல் என காமிரா வெளிச்சச் செறிவோடு படமாக்கியிருக்கிறது. மீன்களை பையன்கள் சிதறவிடும் காட்சி ஒரு ஒளிக்கவிதை.
உரையாடல்களின் சிக்கனத்தன்மை ஒளிபதிவின் வேலை சிலசமயம் இரண்டாக்கிவிடும். முன்னேற்பாடான திட்டம் இருந்தால் மட்டுமே இம்மாதிரியான கூட்டணி சாத்தியமாகும். மொழிபெயர்ப்பில் படித்த சப்டைட்டில் வசனங்கள்தான் என்றாலும் வார்த்தைச் சிக்கனமும், தெளிவும், நகைச்சுவையும் உரையாடலின் நேர்த்தியைப் பறைசாற்றுகின்றன.
திரும்ப கதைக்கே வருவோம்
ஓடிப்போன நெருப்புக்கோழி திரும்ப பண்ணைக்கே வந்துவிடுகிறது. கரீமுக்கு வேலையும் கிடைத்து விட்டது என்கிறார் நண்பர். எல்லாத் துயரும் ஒரு கணம் வடிந்தாற் போன்ற எண்ணம் கரீமுக்கு. அப்போது தன் மாவுக்கட்டுப் போட்ட காலில் தன் குழந்தைகள் வரைந்த ஓவியத்தைப் பார்க்கிறார். தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தின் சங்கேதக் குறிப்பாக அதை உணர்கிறார். கால் மாவுக்கட்டில் வரையப்பட்டிருக்கும் மரத்தைக் கொண்ட நிலவெளியை தன் வண்டியின் மூலம் சிரமப்பட்டு அடைகிறார். அங்கே நூற்றுக்கணக்கில் குஞ்சுகளாய் நெருப்புக்கோழிகள். அலையென
விரிகிறது கரீமின் புன்னகை அந்த மலைவெளியில்.
அடைகாப்பதின் ரகசியத்தையும் பொறுமையின் அவசியத்தையும் உணர்த்தும் ஒரு காட்சியாக நிறைகிறது படம்.
விரிகிறது கரீமின் புன்னகை அந்த மலைவெளியில்.
அடைகாப்பதின் ரகசியத்தையும் பொறுமையின் அவசியத்தையும் உணர்த்தும் ஒரு காட்சியாக நிறைகிறது படம்.
Subscribe to:
Posts (Atom)

