Wednesday, August 12, 2009

தலைமுறையாய் தொடரும் கனவு


சேந்தன் திரும்பவும் ஒருமுறை தன் வீட்டைத் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.உறுதியான நடையாய் வெடுவெடுவென நடக்க ஆரம்பித்தான். தேசிக ஆச்சாரியார் வீடு வந்துவிட்டது.​பொழுது சாயத்​தொடங்கியிருந்தது. அங்கங்கே வீட்டில் தீபங்கள் சிறிய நாணத்துடன் சிணங்கி சுடர் விட ஆரம்பித்து விட்டன.
"பட்டாபி.. பட்டாபி.."

வெளி முற்றத்தில் நின்று குரல் கொடுத்தான். சாளரம் வழியே இரு ஜோடி கண்கள் எட்டி பார்த்துவிட்டு மறைந்தன. பட்டாபி வெளியே வந்தான். அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டான்.
"சேந்தா.. முடிவு செய்து விட்டாயா?"
சேந்தன் ஏதும் பேசாமல் தலையை மட்டும் அசைத்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான். பட்டாபி அவனைப் பின்​தொடரலானான். மெல்லியதாக வானம் தூற ஆரம்பித்திருந்தது.
2

கி.பி. 1890. திருச்சிராப்பள்ளி. காவேரிப் படுகைக்கு முன்பாக இருந்த கூடாரம் செவ்வொளியாய் நின்றது. உள்ளே இரு ஆங்கிலக் குரல்கள்.

"இன்னும் ஒன்று அதே போன்று வேண்டுமாம்"

"தானப்பன் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்"

"தானப்பன்.. இன்னும் ஒன்று நீ முன்பு கொடுத்தது போன்றே வேண்டும்"

"..... மன்னிக்க வேண்டும் துரை"

"ஏன்?"
"அவ்வளவுதான் துரை. வேறு எதுவும் இல்லை. அத்தனையும் எடுத்துக் கொடுத்தாயிற்று. இது காவிரியம்மன் மேல் சத்தியம்"
"இல்லை தானப்பன். இது பெரிய இடத்திலிருந்து வந்த வேண்டுகோள். நாம் செய்தே ஆக​வேண்டும்"

"ஆனால் துரை.... எங்கு தேடினாலும் கிடைக்காது துரை"

"நீ இப்படி சொல்லக்கூடாது. இதைப் பற்றி நன்கு அறிந்தவன் நீ. வேறு எங்கு இருந்தாலும் தேடி கொண்டு வர​வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் கப்பல் லண்டன் புறப்படுகிறது. அதற்குள் வேண்டும். உன்னால் முடியும். இப்போது நீ போகலாம்"

பணிந்து விலகியது உருவம். வெளியில் காவேரி ஆறு சலசலத்துக் கொண்டிருந்தது. ஆற்றில் விழுந்த கூடார செவ்வொளி தூரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

3

மழை வலுக்கத் தொடங்கி விட்டது. உபரியாக மின்னலும் இடியும் கூட சேர்ந்து கொண்டுவிட்டன.

கோயில் வந்துவிட்டிருந்தது. மின்னல் வெட்டில் கருங்கோபுரமாய் பெரியதாய் சிரித்தது ரங்கன் கோயில். ஆளரவமற்ற கோயில். கருவறையில் ரங்கநாதர் அகல் விளக்கு வெளிச்சத்தில் சாய்ந்திந்தார். கருவறை பக்கமாய் ராமானுஜ ஆச்சாரியார் அமர்ந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்து அமைதியாக சிரித்தார். தலை ஈரம் துடைப்பவர்களாய் வடக்கு மடப்பள்ளி பக்கமாய் ஒதுங்கி விட்டார்கள்.

"பட்டாபி.. குருக்களுக்கு தெரியாமல் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டு வா" பட்டாபி அவ்வாறே செய்தான். இருவரும் கோயிலின் வடக்கு மூலை இருள் நோக்கி சிறு வெளிச்சப் புள்ளியாய் நகரலாயினர்.

4

வையாபுரி திரும்ப ஒருமுறை வாசல் வரை வந்துவிட்டு வீட்டுக்குள் திரும்பி நடந்தார்.

"ஏனுங்க.."

என்ன என்பதாய் மனைவி செங்கமலத்தை நோக்கினார்

"உள்ள வந்து கொஞ்சம் உக்காருங்களேன். அவன் வந்துடுவான்"

எதுவும் பேசாதவராய் நாற்காலியில் அமர்ந்தார் வையாபுரி. சுவரில் மாட்டப்பட்டிருந்த தன் மூதாதையர்களின் ஓவியங்களையும், புகைப்படங்களையும் உற்று நோக்க ஆரம்பித்தார். தாத்தா, முப்பாட்டானார், அவரது சகோதரர், அவர்களின் பாட்டனார்.. என்று குடும்பத்தில் இருந்து எந்த சுவடும் இல்லாமல் திடீரென்று காணாமல் போய்விட்டவர்கள். யாருக்கும் பிடிபடாத மர்மம் வெவ்வேறு சட்டங்களில் தொங்கிக் கொண்டு இருப்பது போல் இருந்தது வையாபுரிக்கு.

"நேற்று கூட என்னிடம் கனாவைப் பத்தி சொன்னான்"

"என்னங்க?"

"அடிக்கடி வர்ற கனவு. கனவில காணாமல் போன அவன் தாத்தா பேசியதா சொன்னான். அதுதான் பயமாயிருக்கு"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது. சேந்தனுக்கு ஒரு கல்யாணம் ஆயிடுச்சுன்னா எல்லாம் சரியாயிடும்"

"பருவம் பதினாறுதானே என்று யோசித்தேன்..."

"நீங்க கவலைப்படாதீங்க. . மழை விட்டதும் வீடு வந்து சேருவான் பாருங்கள்"

காணாமல் போனவர்கள் சட்டங்களில் வழியே இவர்களை பார்ப்பது போலிருந்து.

5

கோயில் வடமூலையில் இருந்த மடப்பள்ளிக்கு பின்புறமாக விரிந்திருந்த விகாரத்தில் வெளிச்சப்புள்ளி நகர்ந்து கொண்டிருந்தது. தூண்கள் அடர்ந்த மண்டபம்.. எந்த சப்தம் எண்ணிலடங்கா முறை எதிரொலிக்கும் வெளி. பட்டாபி பயந்தான்.

குறிப்பிட்ட தூண் வந்ததும் மடியில் இருந்த ஓலைச்சுவடியை எடுத்து, "பட்டாபி, விளக்கைக் கொண்டு வா..." என்றான் சேந்தன்வெளிச்சத்தில் கொஞ்ச நேரம் ஓலையை உறுத்துவிட்டு, "இங்கிருந்து தெற்காக இரண்டாவது தூண்" என்று நகர்ந்தான் சேந்தன். தூணுக்கு அடியில் அமர்ந்து வெளிச்சத்தில் தரையை உற்று நோக்கியவனாய், அதன் தளத்திலிருந்த கல்லை தட்ட ஆரம்பித்தான். வித்தியாசமான ஒலி கிளம்பி பன்மடங்காய் எதிரொலித்தது.

பரவசமாய் "இந்த கல்தான். இதை பெயர்த்தோமானால் போதும்" என்று இருவருமாய் கல்லை பெயர்க்கலாயினர். சிறிது நேரத்தில் தளத்திலிருந்து கல் அழகாக அகன்று விட்டது. நான்கு சதுரடியில் ஒரு துளை தென்பட்டது. பட்டாபி ஆச்சரியத்தில் ஆவென்றான்.

6

யார் இந்த கனமழை நேரத்தில் இப்படி கதவைத் தட்டுவது என்று குழப்பமாய் வந்து பார்த்தார். குதிரை​சாரட் வண்டியைக் கண்டதும் புரிந்து விட்டது தேசிக ஆச்சாரியாருக்கு. வந்திருப்பது தானப்பர்(ன்) என்று.

"வாரும். வண்டியில் வந்து உக்காரும்"

"இந்த நேரத்தில்..." என்று யோசித்தார் ஆச்சாரியர்.

"அவசரம். கோயில் வரை போய்விட்டு வருவோம்"

ஆச்சாரியர் உட்கார்ந்ததும் மழையை ஊருடுவிக் கொண்டு சாரட் விரையலாயிற்று.

7

"போதும் சேந்தா. பயமாயிருக்கிறது. கிளம்பிவிடலாம்"

"பயப்படாதே. உள்ளே இறங்கிப் பார்த்துவிடலாம். விளக்கை எடு"

பட்டாபி பயத்துடன் விளக்கை எடுத்தான். துளையின் உள்ளே படிகள் இல்லாமல் ஒரு ஆள் நுழைவதற்கான அகலம் கொண்டிருந்தது. சேந்தன் முதலில் உள்ளே இறங்கினான். பின்பு பட்டாபியும். ஒரு ஆள் நிற்கும் அளவிற்கான உயரம் கொண்ட சுரங்கம். வெளிச்சம் போனவரைக்கும் சுரங்கம் நீண்டிருந்தது. அசதியான வாசமும் குளிர்ப்பும் நிறைந்திருந்தது. பத்தடி நடந்திருப்பார்கள்.

பட்டாபி,"சேந்தா, பயமாயிருக்கிறது, மேலே ஏறிவிடலாம்" என்றான்.சேந்தன் மறுமொழி கொடுக்காமல் மேலும் முன்னேறினான்.​கொஞ்ச தூரத்தில் ஒரு சிலை தெரிவது போலிருந்தது.. சிற்பமா.. தூணா? மசமச வெளிச்சத்தில் சரியாகத் தெரியவில்லை. சுரங்கம் இன்னும் நீண்டு கொண்டே போகும் போலிருந்தது.

"சரி வா. போகலாம். நாளை வந்து வெளிச்சத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று திரும்பி நடந்தார்கள். இரண்டடி நடந்திருப்பார்கள்.

"சேந்தா........"

குளிர்ச்சியாய் நெஞ்சைக் கிழிக்கும் குரல் ஒன்று பின்புறத்திலிருந்து கேட்டது. சேந்தன் உந்துதலில் சட்டென்று திரும்பிப் பார்த்தான். பயத்தில் பட்டாபி அகல் விளக்கை எறிந்து விட்டு தெறித்து ஓடினான்... இருளில் எதுவும் தெரியவில்லை. "பட்டாபி ஓடாதே நில்லு.." பட்டாபி மேல் துவாரத்தின் வழி ஏற முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"பட்டாபி" சத்தமாக கூப்பிட்டான் சேந்தன். மேலே பாதி ஏறிவிட்ட பட்டாபி அலறினான்,

"மாட்டேன்.. திரும்பிப் பார்த்தா சிலையாயிடுவோம்ன்னு அப்பா சொன்னாரு" பட்டாபி அவன் அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லியிருப்பான் போல என்று கோபம் வந்தது. சேந்தன் திரும்ப யத்தனித்தான். கால்கள் நகர்த்த முடியவில்லை. குனிந்து கால்களைப் பார்த்தான். கால்கள் இறுகி தரையில் ஊன்ற ஆரம்பித்திருந்தன. உடம்பு முழுவதும் ஒரு குளிர்ச்சி பரவுவதை உணர்ந்தான் சேந்தன்.

8

ஆகஸ்ட் 2009, ஒரு நண்பகல். லண்டன். ரஸ்ஸல் ஸ்கொயரில் உள்ள பிரிட்டிஷ் மியூஸியம். காலரி எண் 33க்குள் நுழைந்த மெய்ஸி வரிசையாய் நிறுத்தப்பட்டிருந்த சிற்பங்கள் பக்கம் ஈர்க்கப்பட்டவளாய் அந்தப்பக்கம் போனாள். எல்லாம் ஒரே அளவில், ஒரே அமைப்பில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தாக உணர்ந்தாள். எத்தனை சிலைகள் என்று எண்ணிக் கொண்டே வந்தவள். மொத்தம் ஒன்பது சிலைகள்.

எல்லா சிலைகளையும் விட ஒன்பதாவது சிலை மிகவும் இளமையாக இருப்பதாகப் பட்டது மெய்ஸிக்கு.


19 comments:

சென்ஷி said...

:))

அசத்தல் தலைவா! உறுத்தாத மொழியமைப்பு. மர்மமா என்ன ஆகுமோன்னு கடைசி வரைக்கும் லைட்டா யோசிக்க வைச்சுட்டீங்க..

//யாருக்கும் பிடிபடாத மர்மம் வெவ்வேறு சட்டங்களில் தொங்கிக் கொண்டு இருப்பது போல் இருந்தது //

நல்ல வாக்கிய அமைப்பு! இன்னும் கொஞ்சம் விரிவாய் தொடர்ந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்குது.

Raju said...

அண்ணே கொன்னுட்டண்ணே.
கொஞ்ச நேரத்துக்கு ஏதோ ராஜேஷ்குமார் நாவல் படிக்கிறாப்லயே இருந்துச்சு.
அட, மெய்யாலுமே..!

Jawahar said...

பிரமாதம்.

http://kgjawarlal.wordpress.com

சிநேகிதன் அக்பர் said...

ஓவிய‌ம் மிக‌ அருமை.

உங்க‌ளுக்குள்ளே இருக்கும் எழுத்தாள‌ன் மெல்லமாக‌ இப்போதுதான் வெளிவ‌ருகிறான்.

பீர் | Peer said...

சேந்தன், பட்டாபி, அங்கவஸ்திரம், திருச்சிராப்பள்ளி, காவேரிப்படுகை....

சுஜாதா கூட நடந்து போன மாதிரி இருந்துச்சு...

Admin said...

நிறையவே எழுத்தாற்றல் இருக்கிறது வாழ்த்துக்கள்...

Nathanjagk said...

அன்பு பெரியண்ணன் சென்ஷி, ​ரொம்ப நன்றி! இந்த தோள் தட்டல் என்னை உற்சாகப்படுத்துகிறது. நீளம் அதிகம் என்பதால் நிறைய எடிட் ​செய்து விட்டேன்.

Nathanjagk said...

அன்பு மதுரை சிங்கம் / புலி / கரடி / டைனோசர், ​ரொம்ப நன்றி டக்ளஸ்!!உள்குத்து எதுவும் இல்லியே???

Nathanjagk said...

அன்பு ஜவஹர்.. இதுதான் நம்ம கிட்ட இருக்கிற ப்ராப்ளம்.. ஒரே ஆர்டரா​மொக்கையா எழுத வர மாட்டேங்குது! அடுத்தது காமடி பீஸ்தான் கவலையே படாதீங்க!

Nathanjagk said...

மாப்ள அக்பர்.. ஓவியம் நம்ம காலடியின் ஆஸ்தான் ஓவியர் வரைஞ்சது.
//உங்க‌ளுக்குள்ளே இருக்கும் எழுத்தாள‌ன் மெல்லமாக‌ இப்போதுதான் வெளிவ‌ருகிறான்//
பீதிய கெளப்பறீகளே?

Nathanjagk said...

அன்பு பீர், உங்கள் தோழமை ஊக்கப்படுத்துகிறது. மென்மையான ​கைகுலுக்கலை உணர்கிறேன்! நன்றி நண்பரே!

Nathanjagk said...

ப்ரிய சந்ரு, பாராட்டுக்கு நன்றி! தக்க வைத்துக் கொள்ள முயல்வேன்!!

பா.ராஜாராம் said...

ஜெகா என்ன சொல்லட்டும்..முற்றிலும் வேறு ஜெகன்!beutiful variety!...இளைப்பாற வந்தால் போடா வெண்ணை என்கிறீர்கள்..மிரட்டல் மக்கா...இந்த முகமும் அழகு ஜெகன்.ஜெக ஜாலனையா நீர்.அன்பு நிறைய ஜெகன்...

ஷங்கி said...

தம்பீபீ!!!, இல்ல, இல்ல தலைவாவா! எப்படி இப்படீல்லாம்?!, நான்லாம் வலைப்பூவை மூடி வைச்சிட்டு மோட்டுவளையை மட்டும் பாக்க வேண்டியதாம்போல! அருமைய்யா!! சம்முவம் பாணில முத எழுத்த மாத்திப் படிச்சிராதப்பூ!!!

Beski said...

மாம்ஸ்,
கலக்குறீயளே.

ஆரம்பத்துல சரியா புரியாத மாதிரி இருந்தது... திரும்பவும் வாசிக்கவேண்டிவருமோன்னு நெனச்சேன். பரவால்ல, அவசியமில்லாமல் போனது. நல்லாருக்கு.

Nathanjagk said...

சங்காண்ணா..!! நான் எப்பவும் தம்பிதான்.. நீங்க ​மோட்டுவளைய பாக்க ஆரம்பிச்சீங்கன்னா, அடுத்து ஒரு பயங்கரமான இடுகை வரபோவுதுன்னு அர்த்தம்..! நாங்கெல்லாம் உங்க ​ரெகுலர்ஸ் ஆச்சே? இது கூட தெரியாதா என்ன?

Nathanjagk said...

மாப்ள ஏனாஓனா... இடுகை சிக்குனு இருக்கணும்னு (நம்ம தீஅதீ ரசிக கண்மணிகளுக்கு சிரமம் ​கொடுக்க கூடாதுன்னு) தீட்டி தீட்டி எழுதியதில் ​கொஞ்சம் கதை சிறுத்துப் போச்சு. வாழ்த்துக்கு நன்றிகள்!! அப்புறம் காலடியின் வெள்ளிவிழாவுக்கு (25வது பதிவு..) அலங்கார மேடை, சீரியல் லைட், கரகாட்ட புக்கிங்னு ஏகப்பட்ட வேலைகள இழுத்துப் போட்டுக்கிட்டு ஒத்த ஆளா (!!?) சமாளிக்க ​வேண்டியிருக்கு!!!!

பீர் | Peer said...

//அலங்கார மேடை, சீரியல் லைட், கரகாட்ட புக்கிங்னு ஏகப்பட்ட வேலைகள இழுத்துப் போட்டுக்கிட்டு ஒத்த ஆளா (!!?) சமாளிக்க ​வேண்டியிருக்கு!!!!//

ஜெகா, அசத்தல்... சான்ஸே இல்ல...

நேசமித்ரன் said...

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோபுர அமைப்பு வேறெங்கும் காணக் கிடைக்காதது நிலா மற்றும் சூரிய உதயங்களில் வெளிச்சம் தீண்டாத நெளியிருள் வெளி ஒரு அற்புதம் .எப்போதாவதுதான் காணக் கிடைக்கிறது ஜெகனுடைய இந்த முகத்தைப் போல

கொனார்க்கின் சக்கரம் போல ஒலி ஏற ஏற வேறு வேறு பொழுதுகளை சொல்லி செல்கிறது தன் வழியே

பிரம்மிக்க வைக்கிறது