Monday, August 31, 2009

பேச்சிலர் பார்ட்டி!!

பார்ட்டி-1:சாம்பல் தட்டு

பாஸ்கிக்கு கல்யாணம். கிருஷ்ணகிரியில். வழக்கம் போல ரூம்.. மாப்பிள்ளையின் தம்பியின் கவனிப்பு, பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள்.. இரவு முழுவதும் பேச்சு.. என்று சுகமாய் கழிந்தது. அப்புறம் ஒவ்வொருத்தனும்.. கன ஜோராக ஏத்தல், இழுத்தல், பினாத்தல், பேத்தல், அனத்தல் என்று போதையின் ஒவ்வொரு படிநிலையிலும் நின்று கதவைத் தட்ட ஆரம்பித்தோம்.

நான் ஹாப் பாட்டில் ஸிக்னேச்சர் + மிக்சர் + பரோட்டா என்று என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன். அமைதியாக தூங்கி எழுந்து காலையில் கல்யாணத்துக்கு கூட(!?) போனோம். பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷிடம்,

"நல்லவேளை நைட் சரக்கடிச்சிட்டு யாரும் ஹாப்-பாயில் போடலே" என்றேன்.
அதுக்கு பிரகாஷ் சொன்னான்..

"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!"
பார்ட்டி-2: கர்த்தரின் தீர்ப்பு

காலேஜ் ஜுனியர் ஸ்டாலினுக்கு கல்யாணம்! ஊட்டியில இருக்கிற ஒரு கிறித்துவ சபையில்.

காலையில் சர்ச்சில் தம்பதியினர் ஆஜர். சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், பந்துக்கள் அனைவரும் திரண்டிருக்க.. சர்ச் பாதிரியார்.. சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார். சர்ச்சின் கடைசி வரிசையில் ஸ்டாலினின் தோழர்கள். எல்லோரும் விழி பிதுங்கும் அளவுக்கு டைட். அதில் ஒருவன்.. உட்கார முடியாமல் கண்கள் சொருக சரிய ஆரம்பித்திருக்கிறான். மப்பு வாசனை வேறு கர்த்தர் வரைக்கும் போயிருக்கிறது. பொறுமையிழந்த பாதிரியார்.. மைக்கில் சொன்னது:

"அந்த சிறுவர்களைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுங்கள்"

பார்ட்டி-3: ஒரு 'சந்தோஷ' சம்பவம்!

மும்பைக்கு வேலையாக சென்ற ஜே செந்தில், நண்பன் சந்தோஷை பார்த்திருக்கிறான். வாடா மாப்ளே.. நல்ல பப்புக்கு போவோம் என்று அழைத்திருக்கிறான். சந்தோஷ் கூடவே அவனின்​மும்பை நண்பனையும் அழைத்தான். அந்த மும்பைக்காரன்தான் ஸ்பான்சராம். ஒரு ரவுண்ட் முடிந்ததும். ஸ்பான்ஸரர் டிஸ்கொதேக்கு சென்று ஆ(ட்)ட ஆரம்பித்து விட்டாராம். சந்தோஷ் சொன்னானாம்..

"செந்திலு, நாமளும் போயி டான்ஸ் ஆடிட்டு வரலாம்டா"

"என்னடா இது புதுசா? நாம எப்ப ஆடியிருக்கோம்?"

"நீ வேற.. ஸ்பான்ஸர் பண்றவனுக்கு டான்ஸ் ஆடலேன்னா கோபம் வந்துரும்... அப்புறம் ரெண்டாவது ரவுண்ட் கிடைக்காது.. இப்ப நாம போயி ஆடுனாதான் சைட்டிஷ்ஷே ஆர்டர் பண்ணுவான்"

"அடப்பாவி"

"விடறா.. நமக்கு அடிக்கிறதில ஆசை.. அவனுக்கு ஆடறதில்ல ஆசை"

பார்ட்டி-4: கல்யாணப் பரிசு!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது. நண்பர்களுக்குப் பத்திரிக்கை கொடுக்க சென்னை சென்றிருந்தேன். நண்பர்கள் எங்களுக்கு இப்பவே ஒரு பேச்சிலர் 'ஓப்பனிங்' பார்ட்டி.. அப்புறம் மாரேஜ் முந்தின ராத்திரி தனியா ஒரு 'பினிஷிங்' பார்ட்டி என்று கேட்டிருந்தார்கள்.

சரியென்று.. அங்கே 10 நண்பர்களுக்கு ஓப்பனிங் ஆயிற்று. ஒவ்வொருத்தனும் கொலை மப்பு..! வேலுவும் பாண்டியும் தனியா ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணிக்​கொண்டிருந்தார்கள்.அப்புறம் வேலு என்னிடம் சொன்னான்.

"மச்சி, கல்யாணத்து உனக்கு டிவியைக் கிப்டா கொழுத்திரலாம்னு இழுக்கம்டா"

எனக்கு தனியாக ஒரு கட்டிங் சாப்பிட்ட மாதிரி இருந்தாலும், பவ்யமாக,

"அதெல்லாம் எதுக்குடா, நீங்க வந்தாலே போதும்டா"

பாண்டி குறுக்கிட்டு, "சேசே.. என்ன ஜெகனு அப்படி சொழ்ழிட்டே? டிவிதான் வாங்கப் போழோம்.. என்ன பிழாண்டு வேழும்னு மட்டும் சொல்லு? எழ்ஜி...? சாம்சங்..?"

வேலு, "பாண்டியா, அதெல்லாம் நழ்ழ பிழாண்டா நாம பாழ்த்து வாங்கிக்கலாம்... " என்று, என்னிடம் திரும்பி,

"மச்சி, நீ வேற யார்கிட்டயும் டிவி கிப்ட் வாங்கிடாதே.. இப்பவே சொழ்ழிரு.. பசங்க அழ்ரெடி டிவி வாழ்ங்கித் த(ர)ழதா இருக்குன்னு"

நண்பர்களை வியந்தவாறே ஊர் திரும்பிவிட்டேன். ஈரோட்டில் கல்யாணம்.. நண்பர்களும் வந்திருந்தார்கள். இரண்டு அறை புக் செய்திருந்தேன்.. பத்தாது என்று மூன்றாவதாக ஒரு அறையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்... சரக்குக்கு மட்டும் பத்தாயிரம் அன்றைய இரவிலேயே செலவாகியிருந்தது. பக்கத்திலிருந்த அம்மணி பாத்து வியப்பது தெரிந்தது.. நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

காலையில் முகூர்த்தம் எல்லாம் முடிந்து, சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்கள் நண்பர் பெருமக்கள்! டிவியை சென்னையிலிருந்தே பேக் பண்ணி எடுத்துட்டு வராங்களா, இல்லை இங்க ஈரோட்டில வாங்கிட்டு வராங்களான்னு ஒரே பரபரப்பா இருந்தது.

முதலில் அஞ்சு பேரு வந்து கைகுலுக்கினாங்க! போட்டோ எடுத்துக்கிட்டாங்க! வீடியோவுக்கும் அசையாம நின்னு போஸ் கொடுத்திட்டு, கிளம்பறோம்டா மச்சின்னு கெளம்பிட்டாங்க.. சரி அடுத்த செட் பசங்களாவது பெருசா எதாச்சும் தூக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா.. அவிங்களும் அதே கைகுலுக்கல், போஸ், டாடா பைபை!!! கடைசியா ஒரு குரூப் வந்தது.. அவங்க கையிலயும் ஒண்ணையும் காணோம்... ஒரு சின்ன கிப்ட் பாக்ஸ்.. ​கவர்.. கர்ச்சீப் எதுவும் இல்லை.. bursting the bubbleன்னா என்ன்னு அப்பதான் புரிஞ்சுது!
வாய்விட்டே கேட்டுட்டேன் செந்தில்ராஜிடம்,

"டே கோழி! ஏதோ டிவி கொடுக்கப் போறதா பசங்க சொன்னாங்க?"

அதுக்கு கூலா அவன் சொன்னது.. இப்ப கூட எந்த கிப்டைப் பாத்தாலும் ஞாபகத்து வந்து நிக்குது!!

"மச்சி, தங்கியிருந்த லாட்ஜ்ல கூட ஒரு டிவி பாத்தோம்.. நல்லாதான் இருந்தது! பசங்க இதையே எடுத்திட்டுப் போயி ஜெகனுக்கு கொடுத்திடலாம்னு சொன்னாங்க.. பட், அந்த லாட்ஜ்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. சரி வரட்டுமா?"

இப்படி என் கல்யாணத்து சிறப்பா மங்களம் பாடுனது இந்த நண்பர்கள்தான்!

பார்ட்டி-5 - நம்ம ஊர்ல பார்ட்டி!!

சந்தோஷ் அப்ப எனக்கு சின்சியரான சிஷ்யன்.. அவன் ஊர் தர்மபுரி பக்கம் இருந்த பெரியாம்பட்டி! ஒருநாள் கிளாஸ் ரூமிலேயே வயிற்று வலியால் சுருண்டான். ஊர் திருவிழா என்று கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டானாம்.

ரொம்ப நாள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது, நண்பன் கைலாஷ், சந்தோஷ் ஊர் திருவிழா எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியது இப்படி:

"மச்சி,சந்தோஷ் ஊர்ல பெரிய்ய்ய திருவிழாவும்.. மொத்த ஊரும் திரண்டு வந்து, ஒரு ஃபுல்லு, ஒரு ஹாப்பு, ஒரு குவாட்டரு அப்புறம் ஒரு கட்டிங்ன்னு வாங்கி அவங்க ஊர் கிணற்றில் ஊத்திட்டாங்களாம்.. ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தரும்.. மொண்டு மொண்டு குடிக்கிறாங்களாம்.. எல்லார்த்துக்கும் செம மப்பாம்... சந்தோஷ் மட்டும் பாட்டில்ல மிச்சம் இருக்கிற ஒரே ஒரு சொட்டு சரக்கை அப்படியே ராவா ஊத்திட்டானாம்... அதுதான் பயங்கர மப்பாகி.. வயிறே வலிக்க ஆரம்பிச்சிருச்சாம்..!"
* * *

31 comments: