Thursday, July 16, 2009

சிலோன் டெய்லர்ஸ்

சீரியஸான இடுகையையோ, இலங்கைத் தமிழர் பற்றிய கட்டுரையையோ அல்ல. தாராபுரம் நகரத்தின் சர்ச் வீதி. அதில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் தையலகத்தின் பெயரே சிலோன் டெய்லர்ஸ். என் தாய்மாமா தெண்டபாணியின் கடை. சிலோன் - இலங்கை அல்லது ஸ்ரீலங்காவின் இன்னொரு பெயர்.

அம்மா வழி தாத்தா சிலோனுக்கு சென்று செட்டிலாகிவிட்டிருந்தார். தாத்தாவுக்கு எட்டு குழந்தைகள். சுமார் 50 வருஷங்களுக்கு முன்பாகவே சிலோனிலிருந்து திரும்பி தாராபுரத்தில் செட்டிலாகிவிட்டார்கள். அம்மா சிலோனிலுள்ள இரத்தினபுரி என்ற ஊரின் நினைவை இன்னும் சேமித்து வைத்திருப்பவள். அந்த ஊர், அவர்கள் வீடு, தேயிலை தோட்டம், மலை பழங்கள், பள்ளிக்கூடம், விளையாட்டு என ஞாபகங்களை எனக்கும் தருவாள்.

"நான் மூணாவது படிக்கும் போது, பள்ளிக்கூடம் லீவு விடணும்கிறதுக்காக ​சோணா வாத்தியாரு செத்துப் போயிட்டாருன்னு சொல்லிட்டு திரிவேன்"

"மங்கூஸ் பழம், லாவோஸ் பழம்.. ஒவ்வொண்ணும் எப்படி ருசியாயிருக்கும் தெரியுமா?"

இப்படி சிலோனிலிருந்து வந்த பெரிய குடும்பமாதலால் அவர்களை குறிக்க ஒரு இடப்பெயர் குழூவுக்குறியாகவும், காரணப்பெயராகவும் திரியலாயிற்று எனலாம்.

சிலோன்காரர்கள் என்றழைக்கப்பட்டலாயினர். தாய்மாமன்கள் மூன்று பேர். ​அவர்களைக் குறிப்பிடும் போது சிலோன்னு என்றும் அழைப்பதுண்டு.

"சிலோன் வீட்டுக்கு தெம்பறமா இருக்கு.." என்று வீட்டு அடையாளங்களும்

"சிலோன் சுப்பிரமணி" என்று பெயர்களையும் குறிப்பிடலாயிற்று. இப்படி தன்னோடு ஒட்டிக்​கொண்ட பெயரே தன் தொழிலையும் பெருக்கும் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை - தான் தொடங்கிய தையலகத்திற்கு

"சிலோன் டெய்லர்ஸ்" என்று பெயரிட்டார் மூன்றாவது மாமா தெண்டபாணி. அது அவரது சொந்த கட்டிடம். கீழ்பகுதியில் அவரது தையல் கடை. மேல்பகுதியில் கார்த்திக் ஸ்டுடியோ பிடித்திருந்தது.

மாமாவின் ஆளுமை விசேஷமானது. 5 தையல் இயந்திரங்கள் கொண்ட கடையில் அவரது பணி, எப்போதும் நின்று​கொண்டே துணிகளைக் கத்தரித்து கொடுப்பதுதான். கழுத்தில் அளவு டேப்பும், கையில் கத்தரிக்கோலுமாகவே கடையில் எப்போதும் காணப்படுவார்.

மாமன்காரன் தையல்காரனாயிருந்து விட்டால், மாப்பிள்ளைகளுக்கு துணிக்கடைப் பக்கம் போக வேண்டியிருக்காது.

தீபாவளி, பொங்கல், ஆடி 18 என விசேஷம் ஒன்று தவறாமல் அத்தனை பேருக்கும் புதுத்துணி நிச்சயம். எனக்கும் துணிகள் பெறுவது அவர் கைகளில்தான் - நீண்ட காலமாய்.

மீதமான துணிகளை ஒட்டித் தைக்கும் வேலையெல்லாம் கிடையாது. புதுத்துணி அசல் புதுத்துணிதான். விசேஷம் என்றால் அம்மாயின் வீடு களை கட்டிவிடும். மாமா வீட்டு வாரிசுகள், பெரியம்மா, சித்தி வீட்டு வாரிசுகள் என ஒரே அளவில் 6 அல்லது 7 சிறுவர் கூட்டம் ஆர்ப்பாட்டம் போடும். அத்தனை பேருக்கும் புதுத்துணி மாமாதான்.

வருடம்தோறும் இடுப்பளவு, மார்பளவு, உயரம், அகலம் என என் வளர்ச்சிகளை நோட்டுப் புத்தகத்தில் ஆவணப்படுத்தியவராயிருந்தார். என் தலையளவையும் சேர்த்திருந்தால் அது ஒரு அட்டகாசமான மருத்துவ குறிப்பாகவும் மாறியிருக்கக் கூடும். கிட்டத்தட்ட 16, 17 வயது வரை மாமா கடையில் தைக்கப்பட்ட துணிகளே அணிந்தது வாழ்ந்தேன்.

மாமா மகனுக்கும் எனக்கும் ஒருநாள் ஏதோ சண்டை வந்துவிட்டது. நிறைய சண்டை போட்டிருப்பதால் எதற்கு என்று மறந்து போயிற்று. அன்றிலிருந்து இனி கடைப்பக்கம் வந்தன்னா கேளு என்றுவிட்டு, அந்தப்பக்கம் ​போவதையே தவிர்த்துவிட்டேன். நான் பெரிய வைராக்கியக்காரன் வேறு.
என்ன பண்ணித் தொலைய?

வேறுகடை ஏறி துணி தைத்துக் கொள்ளத் தோன்றவில்லை. ​

வைராக்கியத்தின் பேரில் கடையை பகைக்கலாம், துணிகளை பகைக்க முடியாதல்லவா?

அதற்கப்புறம் எப்பவும் ரெடிமேட் ஆடைகள் தான். பிட்டு துணி எடுக்கத் ​தேவையில்லை; சட்டையைத் தூக்கி இடுப்பளவு காட்டத் தேவையில்லை; முக்கியமாக துணிதைத்து வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை.

மாமாவும் பார்ப்பார். எதுவும் சொல்லமாட்டார். 'இவன் நாம என்ன சொல்லி எப்ப கேட்டிருக்கான். என்னவோ பண்ணட்டும்' என்று நினைத்திருப்பாரோ என்னவோ!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது.

துணி எடுக்கக் கடைக்குப் போனோம். மாமாவும் கூட வந்திருந்தார்.
நான் வழக்கம் போல ரெடிமேட்தானே எடுக்கப் போறோம் என்று, அந்தப் பக்கமாய் ஒதுங்கினேன்.

மாமா என்னைக் கூப்பிட்டு,

"செகண்ட் ப்ளோருக்கு போலாம். போயி உனக்கு துணி பாக்கலாம்" என்றார்

"அங்க எதுக்கு? நான் தனியா எடுத்துக்கறேனே"

"அதுக்கில்லடா. தாய்மாமன்கிறதுக்கு நான் உனக்கு துணி எடுக்கணும். இது சம்பிரதாயம்"

"ஓ. அப்படியா?"

மாமா எப்போதும்​போல் பிட்டு துணிகளையே வாங்கினார். அந்தத் துணி எனக்கு ஆடை தந்து என் வைராக்கியத்தை அம்மணமாக்கிவிடும் என்று தோன்றியது.

துணிக்கு காசு கொடுத்துவிட்டு சொன்னார் என் பால்ய காலத்து கிருஷண பரமாத்மா:

"சாயந்திரம் கடைக்கு வந்திரு"

சூரியன் மங்கும் வேளையில், கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து துணி தைத்துக் கொள்வதற்காக​போனேன் சர்ச் வீதியின் கிழக்கு முகமாய் நிற்கும் சிலோன் டெய்லர்ஸ்க்கு.

மாமாவே அளவெடுத்தார்...

அதே சட்டை தூக்கு - இடுப்பளவு, மார்பளவு, கை, கால் உயரங்கள்.

"பேண்ட் இந்த இறக்கம் போதுமா?.. எத்தன பாக்கெட்?.. சட்டை லூஸ் எவ்வளவு?"

என​ரெடிமேட் ஆடைகள் கேட்கத் தெரியாத கேள்விகள்.

அளவுகளைக் குறிக்கத் தொடங்கினார் ஒரு பழைய கனத்த நோட்டுப் புத்தகத்தில்:

P 32; 18; s- 42- 20; L-32; 24....
வேறு யாருக்கும் புரியாத குறிப்புகள்!
அதே குறப்புப் பக்கத்தில் சற்று மேலே காணக்கிடைத்தது இது:
ஜெகன்:
P 26; 16; s-40 - 20; L-30...
என்று ஒரு கணத்தில் தேங்கி விட்ட எனது பழைய அளவுக் குறிப்புகள்.
எனக்கே எனக்காக ஒதுக்கப்பட்ட அளவுக்குறிப்பு பக்கம்.

எந்த நம்பிக்கையில் சேமிக்கப்பட்டன என் அளவுகள், 10 வருடங்களாக..??

சிலோன் டெய்லரின் அளவுக்குறிப்புகள் புரியவில்லைதாம். ஆனால், வேறு என்னவோ புரிந்தாற் போல் இருந்தது. வைராக்கியம் நிர்வாணமாகி எங்கோ காணாமல் போய்விட்டிருந்தது.

சாயுங்காலத்தின் சாம்பல் வர்ணம் கடைக்குள் வரத் துவங்கியது.


முக்கிய செய்தி:

அண்ணன் சங்கா எனக்கு Interesting Blog' அவார்ட் வழங்கியுள்ளார். அண்ணாருக்கு நம் காலடியின் தீவிர மற்றும் அதி தீவிர வாசகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்!

சென்ஷி-யிடம் இருந்து சங்காண்ணா இதே விருது பெற்றிருக்கிறார்.. அண்ணனுக்கு காலடியின் வாழ்த்துக்கள்!

ஒரு தொடர் அன்பு பாராட்டுதலாக இந்த மழை இங்கும் வந்திருக்கிறது! காலடி பெருமையாக மழையில் நனைகிறது!

குறிப்பு:

அவார்ட் எல்லாம் கொடுத்திருக்கதால, ஒரு இடுகையாவது வால சுருட்டிகிட்டு போடணுங்கிறதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு எழுதுன இடுகை. இனி அடுத்த இடுகையில இருந்து மாமூல் (!?) வேலைக்கு திரும்பிர வேண்டியதுதான்.

15 comments:

geethappriyan said...

மாமாவின் ஆளுமை விசேஷமானது. 5 தையல் இயந்திரங்கள் கொண்ட கடையில் அவரது பணி, எப்போதும் நின்று​கொண்டே துணிகளைக் கத்தரித்து கொடுப்பதுதான். கழுத்தில் அளவு டேப்பும், கையில் கத்தரிக்கோலுமாகவே கடையில் எப்போதும் காணப்படுவார்.

மாமன்காரன் தையல்காரனாயிருந்து விட்டால், மாப்பிள்ளைகளுக்கு துணிக்கடைப் பக்கம் போக வேண்டியிருக்காது.
என் மாமாவும் இதே போன்ற ஒரு அற்புதமான டெய்லர்.
மதுரையில் நியூ ஸ்டைல் டெய்லர் என்றொரு கடை வைத்துள்ளார்.
நானும் பள்ளி ஆண்டு விடுமுறையில் அங்கு வேலை பார்த்துள்ளேன்.
நல்ல மலரும் நினைவுகள்..
எனக்கு போட்டுக் கொள்ள உடைகளுக்கு மட்டும் பஞ்சமே வந்ததில்லை.
இப்போ கூட போனே செய்தால் உனக்கு அஞ்சு சட்டை தச்சிருக்கேன் என்பார்..
மாமா அதெல்லாம் வேணாம் ..
என்றதற்கு ஒரு காட்டன் பிளேசர் தைத்து தந்தார் பாருங்கள்..
அற்புதம்க..
நண்பர் ஜெகன் நல்ல பதிவு பாராட்டுக்கள்.

சென்ஷி said...

//அம்மா சிலோனிலுள்ள இரத்தினபுரி என்ற ஊரின் நினைவை இன்னும் சேமித்து வைத்திருப்பவள். அந்த ஊர், அவர்கள் வீடு, தேயிலை தோட்டம், மலை பழங்கள், பள்ளிக்கூடம், விளையாட்டு என ஞாபகங்களை எனக்கும் தருவாள்.//

/சாயுங்காலத்தின் சாம்பல் வர்ணம் கடைக்குள் வரத் துவங்கியது.//

அசத்தல் வாக்கியக்கோர்வைகள்!


ஜெகன்.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. உணர்வுகளை வார்த்தைகள்ல ஏத்தும்போது பலசமயங்கள்ல படிக்குறவங்களுக்கு அந்த உணர்வை ஏறுறதுக்கு முன்னயே செத்துடுது. இதுல எங்களையும் கைப்பிடிச்சு கூப்பிட்டு போற அம்சம்.. ப்ச்.. கலக்குற வாத்யாரே!

சென்ஷி said...

இந்த விருதை 6 பேருக்கு பகிரணும் தலைவா!.. அவங்களுக்கும் விருது சேரணும் :)

ஷங்கி said...

போகிற போக்கில வாசகன இழுத்துப் போட்டுட்டுப் போறீங்க! சொல்லாடல்கள் ரொம்ப அற்புதம். இந்த மாதிரி அனுபவங்கள நிறையப் போடுங்க. இது உங்களுடைய போர்ட்ரெய்ட் 1

நன்றி & வாழ்த்துகள்!

Nathanjagk said...

அன்பு கார்த்திகேயன், தாய்மாமனை ​தையல்காரனாய் ​பெற்ற அதிர்ஷ்டசாலியா, நீங்களும்!!! வாழ்த்துக்கு நன்றி!!!

அன்பு ​சென்ஷி,
//படிக்குறவங்களுக்கு அந்த உணர்வை ஏறுறதுக்கு முன்னயே செத்துடுது//
இந்த அனுபவத்தை ​பெறணும்னா குறைஞ்சது 1000 பக்கங்களையாவது எழுதி தள்ளியிருக்கணும். இதில் உங்கள் படைப்பு ஆளுமையை ​தெளிவாக்கிட்டீங்க! நானும் அப்படிதான் நான் முதன்முதல்ல எழுதிய சிறுகதை 'அமீரும் மந்திரக்கயிறும்'. நாலாம் வகுப்பு படிக்கும் போது, மலிவான 40 பக்க ​நோட்டில் எழுதி, யாருக்கும் பகிராமல் வைத்திருந்தது.. அதற்கப்புறம் ​கையெழுத்துப் பத்திரிக்கை ஆரம்பிப்பேன் என்றெல்லாம் அடம் பண்ணி 'MarcoPolo' என்ற பெயரில் ஆங்கிலத்தில் எழுதி, சித்திரங்களும் தீட்டி, பின் தூக்கியெறிந்தது 9-ம் வகுப்பு படிக்கும் ​போது! என் இத்தனைக் உள்ளிடை எண்ணங்களையும், தேர்ந்த குயவன் சிறு நூலில் சக்கரத்திலிருந்து லாவகமாய் எடுக்கும் பானையைப் ​போல் ​வெளிக்கொண்டு வந்துவிட்டீர்கள்!
(அவார்ட்) கடமையை நினைவூட்டியதற்கு நன்றி! (இதே அவார்ட்டை SUREஷ் அவர்களும் என் வலைப்பதிவைத் ​தேர்ந்தெடுத்திருக்கிறார்) நான் அவார்ட் ​கொடுக்க நினைக்கும் நண்பர்கள் ஏற்கனவே அவார்ட் வாங்கிவிட்டார்கள்.. நன்கு ​யோசித்து ​செய்ய​வேண்டும் என்று நினைக்கிறேன்- ஆனால் நாள் கடத்தமாட்டேன்!

அன்பு அண்ணா. அவார்ட் தந்த மன்னா..!!
//..இந்த மாதிரி அனுபவங்கள நிறையப் போடுங்க..//
ஐ கிசுக்கு... இனிமே இந்த மாதிரி சீரியஸ் கதையெல்லாம் போடறாப்ல இல்லீங்... சரி ஒரு ஜோக் (SMSல அம்மிணிக்கு வந்தது..)
பேஷண்ட்: டாக்டர் தலை ரொம்ப வலிக்குது. பொறுக்க​முடியல.
டாக்டர்: தலைவலிக்கும் ​போது எதுக்குப் பொறுக்கப் போறீங்க!!! ​பேசாம ​ரெஸ்ட் எடுக்கலாமல்ல!!!!
- இது மாதிரிதான் நாமளும் பேசாம ​மொக்கயப் ​போடலாமில்ல...!!! ​சொம்மா தேவையில்லாம சீரியஸா சிந்திச்சுக்கிட்டு!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல பதிவு

நல்லாத் தான் கிளப்புறீங்கய்யா பீதியை

ஷங்கி said...

எப்பா ”பொறுக்கிற” ஜோக்கு தாங்க முடியல! இதுக்கு அம்மிணி வேற கூட்டா?! சாமி, நீங்க மொக்கைய நல்லாப் போடுங்க சாமி! நான் அம்பேல்!!!

ஷங்கி said...

தம்பி, ரெண்டு என்ன இருவது அவார்டு கூட வாங்குவாரு! யாரு அவரு தம்பில்ல!!!

நேசமித்ரன் said...

அருமையான பதிவு
எத்தகைய சொல்லாடல்கள்
கதை சொல்லிக்கொண்டே சுண்டு விரல் பிடித்துk கொண்டு
இளம் மாலையில் பராக்கு பார்த்து கொண்டு ஒரு ரவுண்டு
போகிறாற் போல் துவங்கி

என்ன இன்னும் சின்னபுள்ளயா நானு எல்லாம் எங்களுக்குத் தெர்ரியும் என்பதாக மத்திமம் எய்தி

ச்சே வக்காளி பெரிய மனுஷன் பெரிய மனுசந்தான்யா நமக்குத்தான் புத்தி கெட்டுப்போச்சு என்பதாக முடியும்

அருமையான பதிவு இது \

நினைவுகளை மீல்த்திருப்பி பார்க்க வைத்த
வாசகனின் அணுக்கத்தை தன் போக்கில் துவக்கத்திலேயே பெற்று விடுகிற
இத்தகைய படைப்புகள் காணக் கிடைப்பதில்லை ஜெகன்

வாழ்த்துக்கள்
உங்களின்
அங்கதம் மிளிரும் படைப்புகளுக்கு நான் ரசிகன்

இந்த படைப்புக்கு நான் நேயமிகு வாசகன்
இது நீண்ட நாள் நெஞ்சில் நிற்கும்
திருக்கழுக்குன்றத்து பாறைகளில் மீதமிருக்கும் கழுகுகளின் அலகுத்தடம் போல ...

நேசமித்ரன் said...

மீள்த் திருப்பு என்பதாக இருக்க வேண்டும் என் பின்னூட்டத்தில் மன்னிக்கவும்

சிநேகிதன் அக்பர் said...

நெகிழ வைக்கும் பதிவு.

விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

உங்களுக்கே உரித்தான,(இதில்,மிக மெலிதான)
நகைச்சுவையுடன் அழைத்து போய்,கடைசி நாலைந்து,வரிகளில்
மனதை மயிலிறகு கொண்டு வருடுகிறீர்கள் ஜெகன்.
"அன்பு என்பது வார்த்தை அல்ல,அது ஒரு செயல்"என
உணர்த்துகிற மனிதர்கள் அபூர்வம்!உணரும் தருணம்
மிக உன்னதம்!!..எப்பவும் போலான அன்பும்
வாழ்த்துக்களும்.

Anonymous said...

Interesting Blog' அவார்ட்ஐ பெற்ற அண்ணன் ஜெகநாதனுக்கு, காலடியின் தீவிர மற்றும் அதி தீவிர வாசகன் சண்முகனின் மனமார்ந்த வாழ்த்துகள்!

Admin said...

நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்...

Nathanjagk said...

அன்புக்கவி​நேசமித்ரன், பாராட்டுக்கு தலை வணங்குகிறேன்! இங்கும் அங்கும் ஒரே காற்று நம்மைத் தழுவிச் செல்லுவது போன்று உணர்கிறேன் இப்போது. நன்றி!

அன்பு அக்பர், ஊக்கமூட்டும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி!

Starjan(ஸ்டார்ஜன்) மிக்க நன்றி தல!

பா.ராஜாராம் உங்கள் வாழ்த்துகள் மிக வசீகரிக்கின்றன - உதிய மரத்து வாசனை போல்.

அன்பு சண்முகம் சேலம், அன்புக்கும் பாராட்டுக்கும் ​ரொம்ப நன்றி!

அன்பு சந்ரு, நன்றி! ​தொடர்ந்து வாருங்கள் நண்பரே!!