Thursday, July 23, 2009

காளிதாஸ் ஒர்க் ஷாப்


காளிதாஸ் அப்பா அவன் பத்தாவது படிக்கும்போதே செத்துவிட்டிருந்தார். அண்ணன் மோகனுடன் சேர்ந்து அவனின் மோகன் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தான். அது ஒரு டூ வீலர் ஒர்க் ஷாப்.

வேலை போக மீதியிருக்கும் நேரங்களில் புகைத்தும் நண்பர்களோடு கதைத்தும் நாட்கள் பறக்கும். பின் சில வருடங்களில் புகைக்கும் நேரத்தில் மீந்ததே வேலை செய்யும் பொழுது எனக் கொள்ளலானான் காளி.

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப் படத்தெரியாது. அடர்ந்து அழுக்கேறிய சுருள் முடி. பெண்கள் (வயது,தோல் வித்தியாசமெல்லாம் கிடையாது) எதிர்பட்டால் தலையின் பக்கவாட்டு கேசத்தை கைகளால் கோதி, முன்னுச்சியை உள்ளங்கையால் அழுத்திவிடுவான். இந்த எளிய ஒப்பனை, பெண்கள் அருகில் இருக்கிறார்கள் என்பதான குறிப்பாக காளியின் நண்பர்களுக்கு பயன்பட்டது.

"மாப்ள தல சைடு கோத ஆரம்பிச்சுட்டான்பா, எங்க பிகரு வருதுன்னு பாருங்கடா"

என்று தேட ஆரம்பிக்கலாம்.

காளியின் வாழ்க்கை டிவிஎஸ்50 போல எளிமையாக இருந்திருக்கலாம்தான். ஆனால் சாலை அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை. சிலசமயம் நம்மோடு வண்டியில் தொற்றிக் கொள்பவர்கள் செளகரியத்திற்கேற்பவும் உருள ஆரம்பித்துவிடுகிறது.

கடை பேரென்னவோ மோகன் ஒர்க் ஷாப்தான். இருந்தாலும் கடை எப்போதும் 5க்குமேல் காளியின் நண்பர்களாலும், கோல்ட் ப்ளேக் சிகரெட் புகையாலும் சூழ்ந்திருக்க, கடை விரைவில் காளிதாஸ் ஒர்க் ஷாப்பாகவே உணரபட்டது.

மோகன் தனியாக கடைதொடங்கியது இப்படிதான்:

"ஏண்டா? எப்ப பாரு சூர்யா பேக்கரி சந்துல நின்னு தம்மடிச்சுக்கிட்டே இருந்தா, கடைய யாரு பாத்துக்கிறது??"

மோகன், ஹான்ஸ் அல்லது கணேஷ் புகையிலையை வாயில் இடுக்கிக் கொண்டு பேசுவதால், ஒரு குழறலாகத்தான் வார்த்தைகள் வரும்.

காளி இதுக்கல்லாம் அசரமாட்டான்.

"மகுடி அண்ணன பாத்துக்க சொல்லிட்டுதான் போனேன். அஞ்சு நிமிசத்துல கடைய யாரு தூக்கிட்டு ​போப்போறா?" என்பான். மகுடி, பக்கத்து சைக்கிள் கடைக்காரர்.

".... குடிச்சுப் போட்டு கடைக்கு வரச்சொல்லுதா? இப்படியே பண்ணிட்டு இருந்தீனா ஒரு நாளைக்கு இல்லேன்னா ஒரு நா நல்லா மிதி வாங்கப்போற"
"நீ மட்டும் என்னவாம்? அன்னைக்கு இஸ்மாயில் கல்யாணத்தில தண்ணியப் போட்டு கடையிலேயே வாந்தி எடுத்து படுத்துக் கிடந்தயே?"

பிறகு, நீயே இந்தக் கடையைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டு சில கி.மீக்கள் தள்ளி மோகன் தன் பழுது நிலையத்தை நிறுவ வேண்டியதாயிற்று!

காளிதாஸ் ஒர்க் ஷாப் உருவான கதை இதுதான்.

டிவிஎஸ், யமஹா, சுசூகி, பஜாஜ் என அனைத்து விதமான இருசக்கர வாகனங்களும் பழுது பார்த்து, குறித்த நேரத்திலிருந்து ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளித் தரப்படும். பெண்கள் என்றால் வீடுவரை வந்து வண்டி டெலிவரி செய்யப்படும். சிலசமயம் கூலியாக வெறும் சிகரெட்டுகளோ அல்லது சரக்கோ, அல்லது பணத்துடன் சரக்குவரியும் சேர்த்து வசூலிக்கப்படும். வண்டி சரி செய்யப்பட்டபின் காளி ட்ரையல் பாத்துவிட்டுதான் கொடுப்பான். 50சிசி வண்டிகளுக்கு ட்ரையல் அவ்வளவாக சிரத்தை எடுக்க மாட்டான். 100சிசி என்றால் ட்ரையல் மணிக்கணக்காகும். சிலசமயம் தென்படும் பெண்களைப்பொறுத்தும் இது அமையும்.

இப்படித்தான் ஒரு சாயங்காலம், எதிர்மாடியிலுள்ள சபரி ஸ்டுடியோஸ், தன் புத்தம்புது யமஹா ஆர்எக்ஸ்ஜியை காளிதாஸ் கடையில் வந்து நிறுத்தினார்.

"தம்பி, ரியர் வியூ மிரரை கொஞ்சம் டைட் பண்ணிக் கொடுப்பா"

"சரிங்ணா. வேலையா இருக்கேன்.. இப்ப வண்டிய விட்டுட்டு போங்க, ரெடி பண்ணிட்டு, நானே கொணாந்து வண்டிய விடறேன்"

என்று சொல்லிவிட்டு, அப்படியே தம், டீக்கு காசும் வாங்கிக் கொண்டான். ரியர் வியூவை சரி செய்தான். புது வண்டியின் வாசம் காளியை வா என்றது. வண்டியை எடுத்து சைக்கிள்கடை மகுடி அண்ணனைப் பார்த்து,

"ஒரு ட்ரையல் பாத்துட்ட வந்துறேண்ணா"

என்று முறுக்கிக் கொண்டு கிளம்பினான்.

சரியாக 10 நிமிடங்கள் கழித்து வந்தான் காளி.. வண்டியை உருட்டிக் கொண்டு.
அப்போதுதான் நண்பர்கள் குழாமும் வந்து சேர்ந்திருந்தது.

"என்னடா காளி, எங்க போயிட்ட? ஏன் வண்டிய உருட்டிகிட்டு வர்ரே?"

அமைதியாக வண்டியை ஸ்டாண்டிட்டு விட்டு, ஒர்க் ஷாப்புக்குள் வந்து உட்கார்ந்தான்.

அப்போதுதான் வண்டியைப் பார்த்த நண்பன் பாபு,

"வண்டி ஆக்சிடண்ட் ஆயிருக்குடா" என்று அலறினான்.

முதலில் வண்டியைப் பார்த்த நண்பர்கள் அதன் நெளிவு சுழிவுகளைப் பார்த்த பின், தங்கள் நண்பனையும் நோக்கினார்கள். அங்கங்கே சிராய்ப்பு. கால்முட்டி பக்கம் பேண்ட் கிழிந்திருந்தது.

"காளி, என்னடா ஆச்சு"

"ட்ரையல் பாக்கலாம்னு போனேன். போலீஸ் ஸ்டேஷன் வளவுல வரும்போது, நல்லா ஒரு கட் போட்டேன்"

காளிதாஸ் வண்டியோட்டும் விதம் அப்படிதான். வளைவுகளை கண்டால் வேகம், அதிவேகம் கொள்வான். சாலை வளைவானாலும் வரி சேலை வளைவானாலும் சரி! சாலை வளைவுகளில் அவன் பிரயாணிக்கும் போது வண்டியை சாய்க்கும் கோணம் அவ்வளவு சுவாரசியமானது.

"கட் நீ எப்பயும் போடறதுதான??"

"இல்லடா மாமா.. வண்டி புதுசாயிருந்துச்சா, நல்ல பிக்கப் வேற, கொஞ்சம் வேகமா கட் போட்டேன். வண்டி ஃபுட் ரெஸ்ட் ரோட்ல பட்டு தூக்கி போட்ருச்சு"

வண்டியின் ஃபுட் ரெஸ்ட் சாலையில் உரசும் அளவுக்கு சாய்த்து என்றால் அது எப்படிப்பட்ட ட்ரையல் என்று நாமே யூகிக்க வேண்டியதுதான்.

வண்டியை சுற்றி என்னடா கூட்டம் என்று பார்க்க வந்த சபரி ஸ்டூடியோக்காரர்.. தன் புது வண்டியைப் பார்த்ததும் அப்படியே தலையில் கைவைத்து,

"ஐயோ" என்றார்.

கண்ணாடி சரி செய்ய வந்த வண்டி, முன்னாடியும் பின்னாடியும் செப்பனிட வேண்டியதாய் பரிதாபமாய் நின்றது.

"ஒண்ணும் பிரச்சனையில்லேங்ணா, நாளைக்கு வண்டிய புதுசு மாதிரி ரெடி பண்ணிக் கொடுத்துரேன்"

"புதுசு மாதிரியா?? வண்டியே புதுசுதாண்டா!!!"

என்று நொந்தவராய் அன்று நடந்தே வீட்டுக்கு போனார் ஸ்டூடியோக்காரர்.
காயங்களை ஆற்றவும், துக்கத்தைத் தேற்றவுமாக காளியை சூர்யா பேக்கரி பக்கமாக நகர்த்திச் சென்றனர் நண்பர்கள். டீயும் புகையுமாய் சம்பவத்தைப் பற்றி அலச ஆரம்பித்தனர். விபத்தான வண்டியை சரி செய்ய எவ்வளவு செலவு ஆகும், முட்டி காயத்துக்கு டாக்டரிடம் போகலாமா இல்லை டாஸ்மாக்கே போதுமா என்று ஆலோசித்தனர்.

பேச்சு வளர்ந்து கொண்டும், சிகரெட்டுகள் தீர்ந்து கொண்டும் இருந்த ஒரு கணத்தில், காளி ஏதோ ஒரு புள்ளியை வெறித்தவனாய், திடீரென வாயில் சிகரெட்டைப் பற்றிக் கொண்டு தலையின் இரு பக்கவாட்டிலும் கோதி, முன்னுச்சி முடியை அழுத்தி விட்டான்.

இந்த ஒப்பனைக் குறிப்பின் அர்த்தம் உணர்ந்த நண்பன் பார்த்தி சொன்னான்,

"முட்டி உடைஞ்சு ரத்தம் கொட்டினாலும், காளிக்கு குட்டிய பாத்தா எல்லாம் பறந்து போயிருதுடா"

10 comments: