Thursday, July 30, 2009

பச்சப்புள்ள - பார்ட் 3 அல்லது சிமிட்டாத கண்கள்

ஆனா பாருங்க.. இந்த செகண்ட் ஹீரோ மொள்ள மொள்ளமா காமடியனாகி, வில்லனாகி கடைசிலே காணாமலே போயிடுறாரு.
இவரு பேரு அன்பு!

ராசாத்தி மின்னாடி ஹார்ட்வேர்ஸ் ஏஜென்ஸிலே வேல பாத்துக்கிட்டு இருந்தப்ப நம்ம அன்பு, பக்கத்து எலக்ட்ரிகல் கடையில வேலை. ராசாத்தி வேலைக்கு வந்த மக்கா நாளே அன்புத் தலைவர் என்ட்ரி.

"அலோவ் ஈரோ, எப்படியிருக்கீங்க.. வாங்க டீ சாப்பிடலாம்... ​வேலையெல்லாம் எப்படி போகுது, ஏதும் பிரச்சினைன்னா சொல்லுங்க, வுட்டு லேப்பிரலாம்"
இப்பிடி அன்பு, அன்பு மயமாக மாறுனதுக்கு காரணம் ராசாத்திய டாவு கட்ட வர்றதுக்குதான்னு ஈரோவுக்கு லேட்டாதான் பிக்கப் ஆச்சு.
சரி எப்படியோ வேலை ஒழுக்கமா நடந்தா செரி, 1200 ரூபாயிக்கு 8 விரல்லயும் பின்னிப் பெடலெடுக்கிற ஆளு ராசாத்தி.. அப்புறம் என்ன சொல்ல முடியும் ஈரோவால!
பாப்பாத்தி இப்பத்தான் கீபோர்டில நெம்பரு அடிக்கிறதுக்கின்னே தனியா ஒரு பகுதி இருக்குன்னு கண்டுபிடிச்சிருக்கு. பரவால்லே பிக்கப் ஆயிக்கும்!
அன்பு அடிக்கடி ஆபிஸுக்கு வர்றதும், ஈரோக்கிட்ட அப்பிடி இப்பிடி தெக்கால வடக்காலன்னு ஞாயம் பேசறதும், போறப்ப ராசாத்திட்ட 'வரட்டா' சொல்லிட்டு போறதுமா ரெண்டு மூணு வாரம் ஓடிருச்சு. ராசாத்திக்காக இவன் அக்கப்போர பொறுத்துக்க வேண்டியதுதான்னு கம்முனு இருந்துட்டாரு ஈரோ. இதில அப்பப்ப ஈரோக்கிட்ட, ராசாத்தி எங்கிட்ட முன்ன மாதிரி பேசறதில்ல.. எனக்கு அவ அப்பன தெரியும் ஆத்தாள தெரியும் வீடு தெரியும் ஊரு தெரியும் - சும்மா விட மாட்டேன்னு புலம்பல் வேற.
மனசுக்குள்ள த்தூமாதரிச்சே.. என்ன கருமாந்திர காதல்டா இவனுதுன்னு ஈரோவுக்கு தோணும்.
ராசாத்தி வெளியூரு, ஈரோவும் வெளியூரு.. அதனால ரெண்டு பேரும் எட்டு எட்டரைக்கெல்லாம் முனிஸிபாலிடிக்கு வந்து, மாடியில இருக்கிற கம்ப்யூட்டர் சென்டரை தொறந்து வேலய ஆரம்பிச்சுடுவாங்க. பாப்பாத்தி நெதானமாத்தான் வரும்.
ஒருநா, ஈரோ வர லேட்டாயிடுச்சு. ஈரோவுக்கு முன்னாடியே ராசாத்தி வந்திருக்கும் போல. மாடியில இருந்து அன்பு வேகமா இறங்கி போயிட்டிருந்தார். இவன் எங்கடா இந்நேரத்துக்குன்னு இங்கன்னு நெனச்சுக்கிட்டே ஈரோ மாடிக்குப் போனாரு. அங்க பியூன் காமடியன் நின்னுக்கிட்டிருந்தார். ஈரோவப் பாத்து கோபமா,
"ஈரோ, என்னப்பா இதெல்லாம்..? யாரவன்..??"
"யாரக் கேக்கறீங்க, அன்பையா?"
"அவந்தான். ராசாத்தி தனியா இருக்கும் போது, மேலே வந்திருக்கான். என்னடா இது யாருமில்லாத நேரத்திலன்னு வந்து பாத்தா, அவன் ஏதோ பேசிக்கிட்டிருக்கான், ராசாத்தி அழுதுகிட்டு நிக்குது"
".... இல்லயே, ராசாத்திக்கு தெரிஞ்ச பையந்தானே அன்பு"
"இதெல்லாம் ஒண்ணும் சரியில்ல ஈரோ. நான் அவன புடுச்சி நல்லா சத்தம் போட்டு உட்டுட்டேன். இனிமே மாடிப்பக்கம் வர்ற வேலை வச்சுக்காதே. ஈரோட்ட பேசணும் அவரு இருக்கிறப்ப வான்னு சொல்லி விரட்டி உட்டுட்டேன்"
"அப்படியா??"
எச்சரித்துவிட்டு (முனிஸிபாலிடி பியூன்னா சும்மாவா?) அவர் கீழிறங்கிச் ​சென்றுவிட்டார். ஈரோவுக்கு குழப்பமாகி விட்டது. என்னடா இது ஏதும் பிரச்சினை ஆயிடுமோன்னு பயந்துக்கிட்டே கம்ப்யூட்டர் சென்டருக்குள்ள போனாரு.
ராசாத்தி அன்னிக்கு தாவணி கட்டியிருந்துச்சு. கருப்புத்தாவணி. செம்பருத்தி செடி கருப்பு இலையா நின்னா மாதிரி! மூணு கம்ப்யூட்டர் அறையில நடு சீட்டுல உக்காந்திக்கும் ராசாத்தி. ஒருக்கா ஈரோ ஒனக்கு முட்ட கண்ணுன சொன்னது ராசாத்தி, 'எங்க என் கண்ண சிமிட்டாம பாருங்க பாப்பம் முதல்ல கண்ண சிமிட்டினவங்க தோத்தாங்கன்னு' சொல்லிச்சு. ​ஈரோவால ஒரு நிமிசத்துக்கு மேல ராசாத்தி கண்ண சிமிட்டாம பாக்க முடியலே... ராசாத்தி கண்ண சிமிட்டாம பாத்துட்டே இருந்தது..!
ராசாத்தி தாவணி நுனில கண்ணத் தொடச்சுக்கிட்டு இருந்தது. ஈரோ உள்ள ​போனாரு,
"வாங்க"
"என்னாச்சு, டல்லா இருக்கே?"
"இல்லியே"
"அன்பு வந்தாப்டியா?"
தலைய மட்டும் ஆட்டுச்சு ராசாத்தி.
மாடி சன்னல் வழியே பளிச்சென்று காலை வெயிலின் கையொன்றாய் வெளிச்சம் நீண்டது. கீழே மரங்களின் ஒன்றில் அமர்ந்த குருவி சன்னல் வழி பார்த்தது. அட நீங்களா என்று உடல் குலுக்கிவிட்டு பறந்துவிட்டது. வெளியே சாலையின் சப்தங்கள் இந்நாள் எந்நாளும் போல்தான் என்று சொல்லின. விருட்சத்தை விட்டு விடுதலையாகியும் பச்சையத்தை விடமுடியாத ஒரு
இலைச்சிறகு சன்னல் வழி வந்து விழுந்தது - எப்போதுமில்லாதது.
"எதாவது பிரச்சினையா?"
"அதெல்லாம் ஒண்ணிமில்லை"
சிமிட்டாத கண்கள் ஏனோ அப்போது தரை நோக்கியிருந்தன. அடர்த்தியாய் காதுகளை நிரப்பியது நிசப்தம். ஈரோ ராசாத்தி பக்கத்திலே போனாரு. ராசாத்தியின் தலை சாய்ந்த முதுகின் மிகுபரப்பில் வெயில் மஞ்சள் கண்கூசியது.
"எங்கிட்ட சொல்லேன்.."
"..."
"அன்பு கூட எதுவும் பிரச்சினையா"
"..."
"எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லக் கூடாதா?"
தலையை நிமிரவேயில்லை. கீழே அலுவலகம் தொடங்கியிருந்தது. கமிஷனர் கார் வந்த சத்தம் கேட்டது.
"நாங்கேக்கிறது காதுல விழுதா இல்லியா?"
தலை நிமிரவேயில்லை.
"இங்க உனக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னா நான்தான் பாத்துக்கணும்."
"...."
"............ ஒரு அண்ணன் மாதிரியாவது நெனச்சு எங்கிட்ட சொல்லக்கூடாதா..?"
படக்கென்று தலையை நிமித்தி, சிமிட்டாத கண்களில் சரசரவென கண்ணீர் ​பொங்க, தாவணியை வாயில் கதக்கித் தேம்ப ஆரம்பித்தாள் ராசாத்தி.
(முற்றும்)
- பச்சப்புள்ள யாருன்னு கேக்க மாட்டீங்கதானே? அதே மாதிரியே ஈரோ யாருன்னு எங்கிட்ட கேக்காதீங்க!

21 comments: