Saturday, July 11, 2009

பின்னூட்டமே ஒரு இடுகையாய்..

இது ஒரு பின்னூட்டம். எந்த இடுகைக்கு..?
இந்த இடுகைக்கு:கிலுகிலுப்பை-II (கதிர்வேலு ஐயா)நீங்கள் இந்த இடுகையை படித்துவிட்டு வந்து இதை படியுங்கள் என்றெல்லாம் காமடி பண்ணமாட்டேன். ஸ்ட்ரெயிட்டா நீங்கள் இதை படிக்க துவங்கலாம்.

ஆனால் ஒரு முன்குறிப்பு:
மேற்கண்ட இடுகையிட்ட முரளிகுமாருக்கு முதலில் ஒரு பின்னூட்டம் போட்டேன். என் பின்னூட்டங்களெல்லாம் கொஞ்சம் அனுமார் வால் சைஸுக்கு (என்னதான் எடிட் செய்தாலும்) போய்விடுவது உண்டு. கோவி.கண்ணன், சங்கா, SUREஷ், நந்தா, நேசமித்ரன்,டோமி, தங்கமணி பிரபு, ஸ்டார்ஜன், ஈரோடு நாகராஜ் இவங்களுக்கெல்லாம்​தெரியும்னு நினைக்கிறேன்.
என்ன பண்றது? நீங்க என்னைய படிக்காம வேறு யாரு படிப்பாங்க?
(அப்படிங்கிற அசட்டு தைரியம் தான்)

முரளிக்கு நாம கொஞ்சம் புதுசுல.. அதான் அவரோட இடுகை சைஸுக்கு பாதியளவுல ஒரு பின்னூட்டம் போட்டேன். இப்படியே இருக்கிறவன் சுவத்தில பெயிண்ட் அடிச்சிக்கிட்டு இருந்தா உன்​சுவத்தில யாரு ஒண்ணுக்கடிக்கிறது-ன்னு நீங்களெல்லாம் என்னை அன்பாக கடிந்து கொள்வது... என்னது அப்படியெல்லாம் எதுவுமில்லயா.. ??? பரவாஉண்டு - மனசைத் தேத்திக்கிறேன்.

முரளிக்கு நான் போட்ட இடுகையில.. ஸாரி.. பின்னூட்டத்தில ஒரு புத்தகத்தை படிங்கோங்னு நூல்அறிமுகமெல்லாம் கொடுத்து பெரிய ரகளையே பண்ணியிருந்தேன்னு நினைக்கிறேன். இருந்தாலும் முரளி மறுமொழியில அன்பா அந்த புத்தகத்தை பத்தி சொல்லப்பா-ன்னு கேட்டிருக்கிறார்.
மறுமொழி-பின்னூட்டம் அந்த வலைமனையிலேயே போடறது தானே மரபு, சம்பிரதாயம். நானும் அப்படியே நினைச்சு புத்தக அறிமுகம்​பற்றி மறுமொழி அமுத்த ஆரம்பித்தேன்.

புத்தகத்தை மடியில வச்சிக்கிட்டு கம்ப்யூட்டரில் தட்டுனேன் (மடியில வச்சு அமுத்தற கணிணி இப்ப கைவசம் இல்ல). அது தான் நீங்க கீழே பாக்குறது, படிக்கப் போறது.. எழுதி முடிச்சிப் பாக்கும்போது தான் தெரியுது விபரீதத்தின் விஸ்வரூபம் (ச்சும்மா ரைமிங்காக)!
அதாவது சைஸ் கொஞ்சம் பெருசா போய்விட்டது. எனவே, இங்கே ஒரு பின்னூட்டம் இடுகையாகிறது (அல்லது ஆகிவிட்டது)
இதோ அந்த பின்னூட்ட இடுகை:

//.. புத்தகம் பற்றிய விவரங்கள் குறித்து அனுப்புகிறேன்//

புத்தகத்திலிருந்து...

(இது ஒரு ஜப்பானிய பள்ளி பற்றிய நாவல்)

புதிய பள்ளியின் கேட்டைப் பார்த்ததுமே, டோட்டா-சான் நின்றுவிட்டாள். அவள்​போய்க் கொண்டிருந்த பழைய பள்ளியின் கேட்,​பெரிய
எழுத்துகளில் பள்ளியின் பெயர் எழுதப்பட்ட அழகிய தூண்களில் இருந்தது. ஆனால் இந்தப் புதிய பள்ளியின் கேட், இளந்தளிர்களும், இலைகளும் உடைய சிறிய கம்பத்தில் இருந்தது.

"இந்த​கேட் வளர்ந்து கொண்டேயிருக்கும்"

டோட்டா-சான் சொன்னாள்.
"ஒருவேளை இது டெலிபோன் கம்பங்களை விடவும், உயரமாக வளர்ந்து கொண்டே போகும்..."

அந்த இரண்டு 'கேட் கம்பங்களும்' உண்மையில் வேர்களுடன் கூடிய மரங்கள்தான். அவள் அதனருகில் போனதும், தனது தலையை ஒரு
பக்கமாய்ச் சாய்த்து பள்ளியின்​பெயரைப் படிக்க ஆரம்பித்தாள்... ஏனென்றால் காற்றில் பள்ளியின் பெயர்ப் பலகை சிறிது வளைந்து படபடத்தது.

"டோ..மோ.. யி.. ஹா.. கு.. ன்"

டோட்டா-சான் அம்மாவிடம் 'டோமோயி' என்றால் என்ன எனக் கேட்கப்போன நேரத்தில், அவள் ஏதோ ஒன்றின் தெளிவற்ற காட்சியினால்
பீடிக்கப்பட்டாள். அவள் தான் நிச்சயம் கனவுதான் காணவேண்டும் என நினைக்கும்படி அந்தக் காட்சி செய்துவிட்டது.

அவள் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். புதர்கள் வழியே இன்னும் நன்றாக பார்ப்பதற்காக உற்று நோக்கினாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

"அம்மா, இது உண்மையிலேயே ரயில்தானே? அதோ, ஸ்கூல் மைதானத்தில்..!"

அந்தப் பள்ளி, தனது வகுப்பறைக்காக, ஆறு கைவிடப்பட்ட ரெயில்வே கார்களை உபயோகித்தது. ஒரு​வேளை கனவில் கண்ட ஒன்றாய்தான், அது டோட்டா-சானுக்குத் தெரிந்தது.

ஹய்யா, ரயிலில் ஒரு ஸ்கூல்!

(பக்-8)

டோமோயின் கல்வி முறையில் சில பெற்றோர்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். டோட்டா-சானின் அம்மா, அப்பாவைப் போல் தாங்கள் சரியான பள்ளியைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளைச் சேர்த்திருக்கிறோம் என வியப்புடன் பெருமை கொள்ளும் பெற்றோர்களும் உண்டு. திரு.
கோபயாஷியின் (தலைமையாசிரியர்) கல்விமுறை மேம்போக்கானது, ஆழமற்றது, சந்தேகத்திற்குரியது என அவர்கள் பார்த்தவைகளை வைத்து நினைத்த சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை டோமாயில் இருந்து விலக்கி வேறு ஏதாவது பள்ளியில் சேர்த்துவிட முயன்றனர்.

ஆனால் அம்மாணவர்கள் யாரும் டோமாயியை விட்டுச் செல்ல விரும்பவில்லை. எனவே அழுதனர். அதிர்ஷ்டவசமாக டோட்டா-சானின் வகுப்பிலிருந்து யாரும் வேறு பள்ளிக்குச் செல்லவில்லை. ஆனால் டோட்டா-சானைவிட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்த ஒரு பையன் அப்பள்ளியை விட்டுச் செல்ல நேர்ந்தபோது தன் மனக்கசப்பை வெளியிட தலைமையாசிரியரின் முதுகில் புளிமூட்டை ஏறிக்கொண்டு கண்களில்
கண்ணீர் வழிய கைகால்களை உதைத்து அடம் பிடித்தான். அவன் சென்று மறையும்வரை கால்கள் தள்ளாடி ஒன்றோடொன்று பின்னிக் கொள்ள பள்ளியைப் பிரிய மனமின்றிச் சென்றான். தலைமையாசிரியர் கண்கள் சிவக்க அழுதேவிட்டார். அவன் போனதால், அவர் திரும்பத் திரும்ப, நெடுநேரம் பள்ளியைச் சுற்றி அலைந்து கொண்டே இருந்தார்.
(பக்-106)

டோமாயில் உள்ள குழந்தைகள் மற்றவர்களின் சுவர்களிலோ, சாலையிலோ எழுதுவது கிடையாது. ஏனெனில் அவர்களுக்குப் பள்ளியிலேயே தரையில் கிறுக்குவதற்கான வாய்ப்பு போதிய அளவில் உண்டு.

இசைவகுப்பின்​போது கூட்ட அறையில் தலைமையாசிரியர், சாக்-பீஸ்களை எல்லாக் குழந்தைகளுக்கும் விநியோகிப்பார். அவர்கள் தரையில் எங்கு ​வேண்டுமானாலும், அவர்கள் விருப்பப்படி உட்கார்ந்து கொள்ளலாம், அல்லது படுத்துக் கொள்ளலாம். அவர்கள் அமர்ந்து கொண்டு அல்லது படுத்துக் கொண்டு கையில் சாக்-பீஸுடன் காத்திருப்பார்கள். எல்லோரும் தயாரானதும் தலைமையாசிரியர் பியானோ வாசிக்க ஆரம்பிப்பார். அவர் வாசிக்கும்போது அந்த இசைக் குறிப்புகளை மாணவர்கள் தரையில் எழுத வேண்டும்.(...)

இது தமிழ் மொழிப்பெயர்ப்பில் வந்த நூல் பற்றிய குறிப்புகள்:
ISBN - 81-237-1919-1
Title in Japanese: Totto-chan, the Little Girl at the Window
தமிழில்:டோட்டா-சான், ஜன்னலில் ஒரு சிறுமி
மூல ஆசிரியர்:டெட்சுகோ குரோயாநாகி (Tetsuko Kuroyanagi)
தமிழாக்கம்: நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா
முதற்பதிப்பு: 1996
விலை: ரூ 34.00
வெளியீடு: இயக்குநர்,
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, ஏ-5 கிரீன் பார்க், புது தில்லி - 110 016

18 comments: